தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளாக ஏப்பிரல்-மே மாதங்களில் மருத்துவப் படிப் பில் சேருவதற்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (சூநநவ-நீட்) தொடர் பாக தீவிரமான விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்ட தமிழக மாணவர் களுக்கு வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்தது. நீட் வேண்டாம் என்று எதிர்த்து வந்த தமிழர்களை, நீட் தேர்வு மய்யங்களைத் தமிழ்நாட்டிலேயே இருக்குமாறு செய் என்ற கோருகின்ற நிலைக்கு வஞ்சகமாகத் தள்ளியது நரேந்திர மோடியின் ஆட்சி.

இந்த ஆண்டு மே 6 அன்று நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்திய அளவில் 13,26,725 பேர் இத்தேர்வை எழுதினர். கடந்த ஆண்டைவிட 1,89,835 பேர் கூடுதலாக விண்ணப்பித்திருந்தனர். 136 நகரங்களில் 2,255 மய்யங்களில் நீட் தேர்வு நடந்தது. தமிழ் நாட்டில் நீட் தேர்வு எழுத, 1,07,288 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இது கடந்த ஆண்டைவிட 25,206 அதிகமாகும். பத்து நகரங்களில் 170 தேர்வு மய்யங்கள் அமைக்கப்பட்டன.

இந்திய அளவில் கூடுதலான மாணவர்கள் விண்ணப் பித்திருந்தபோதிலும் தமிழ்நாடு தவிர பிற மாநிலங் களின் மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே நீட் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் 5,500க்கு மேற்பட்ட தமிழ்நாட்டு மாணவர் களுக்குக் கேரளம், கர்நாடகம், ஆந்திரம், இராஜஸ்தான், மகாராட்டிரம், சிக்கிம் முதலான வெளிமாநிலங்களில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கப்பட்டன. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்ட மாணவர்களே இப்பட்டியலில் அதிக எண் ணிக்கையில் இருந்தனர்.

நீட் தேர்வுக்கு ஒரு கிழமைக்கு முன்புதான் பிற மாநிலங்களில் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்ற செய்தியை அறிந்து மாணவர்களும் அவர்களின் பெற்றோரும் அதிர்ச்சியடைந்தனர். நீட் தேர்வை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.சி.) பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் பிற மாநிலங்களில் தேர்வு மய்யம் ஒதுக்கியிருப்பது ஏன்? என்று கேட்டனர். சி.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகள் முறையாக பதில் சொல்லவில்லை. எத்தனை மாணவர் கள் எந்தெந்த மாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுதச் செல்கின்றனர் என்ற விவரத்தை சி.பி.எஸ்.சி. தெரிவிக்க வில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குறை கூறினார். முன்னதாகவே. தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் குறித்து தமிழ்நாட்டு அரசு சி.பி.எஸ்.சி.யிடம் கேட்டுப் பெற்றி ருக்க வேண்டும். இப்போதுள்ள தமிழ்நாட்டு அரசுக்கு இதைக் கேட்டுப் பெறுவதற்குக்கூட துணிவும் வலிமை யும் இல்லை என்றுதான் எண்ண வேண்டியுள்ளது.

தேர்வு மய்யங்களை இணையம்தான் ஒதுக்கீடு செய்கிறது என்று சி.பி.எஸ்.சி. உயர் அலுவலர்கள் நாகூசாமல் கூறினர். மற்ற எல்லா மாநில மாணவர் களுக்கும் அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மய்யங் களை ஒதுக்கீடு செய்யும் இணையம். தமிழர்களுக்கு வஞ்சகம் செய்ய வேண்டும் என்று செயல்படும் மோடி அரசைப் போலவே. தமிழக மாணவர்களுக்கு மற்ற மாநிலங்களில் தேர்வு மய்யங்களை ஒதுக்கீடு செய்ததா?

நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பல நாள்களுக்குப் பிறகுதான் தேர்வு மய்யம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் பத்து விழுக்காடு அளவுக் குத்தான் கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்; ஆனால் முப்பது விழுக்காடு அளவில் கூடுதலாக விண்ணப்பங்கள் வந்ததால், எல்லோருக்கும் தமிழ்நாட்டில் தேர்வு மய்யம் ஒதுக்க முடியவில்லை என்று சி.பி.எஸ்.சி. நிருவாகம் கூறியது. தமிழ்நாட்டில் 580 பொறியியல் கல்லூரிகள் அதேபோல் கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் பல இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான கட்டமைப்பு வசதிகள் உள்ளன. சி.பி.எஸ்.சி. நிருவாகத்துக்கு இந்த இருப்பு நிலை தெரியும். ஆயினும் வேண்டுமென்றே மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக மாணவர் களைப் பிற மாநிலங்களுக்கு விரட்டியது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழக மாணவர் களுக்குத் தமிழ்நாட்டிலேயே தேர்வு மய்யம் ஒதுக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.சி. உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது.

3.5.2018 அன்று உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்து, சி.பி.எஸ்.சி. பிற மாநிலங்களில் ஒதுக்கிய தேர்வு மய்யங்களி லேயே தமிழக மாணவர்கள் தேர்வு எழுதவேண்டும்; அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டிலேயே தேர்வு மய் யங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்பு வசதிகள், இன்றுள்ள இணையதள வசதி ஆகியவற்றைக் கொண்டு ஒரே நாளில் தமிழகத்திலேயே தேர்வு மய்யங்களை ஏற் படுத்திக் கொடுத்திருக்க முடியும். தமிழர் நலனுக்கு எதிரான எண்ணங்கொண்ட சி.பி.எஸ்.சி. அதிகாரிகள் இறுதி வரையில் இதைச் செய்ய மறுத்துவிட்டனர்.

பிற மாநிலங்களில் நீட் தேர்வு எழுத தமிழக மாணவர்கள் செல்ல நேரிட்டதற்குத் தமிழ்நாட்டு அரசின் பொறுப்பற்றத்தனமும் காரணம் என்று கடும் கண்டனங்கள் எழுந்தன. அதனால் பிற மாநிலங்களுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் அவருடன் செல்பவருக் கும் தொடர் வண்டியில் இரண்டாம் வகுப்புக் கட்டணத் துக்குரிய தொகையும் கைச்செலவுக்காக உருபா ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழநிசாமி அறிவித் தார். தென்மாவட்டங்களிலிருந்து கேரளத்துக்குச் செல்வ தற்காகப் பேருந்துகள் அரசால் ஏற்பாடு செய்யப்பட்டன.

வேறுவழியில்லாமல், பெற்றோர்கள் தங்கள் பிள் ளைகளுடன் பெருத்த மனஉளைச்சலுடன் பிற மாநிலங் களுக்குச் சென்றனர். புதிய இடம், புரியாத மொழி, தங்கும் இடம் தேடுவது, தேர்வு மய்ய இடத்தை உரிய நேரத்தில் சென்றடைவது என்று பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் இலக்காயினர். திருத்துறைப்பூண்டி அருகில் பெருகவாழ்ந்தான் ஊரில் நூலகராகப் பணி யாற்றிவந்த கிருட்டிணசாமி என்பவர் கேரளத்தில் உள்ள எர்ணாகுளத்தில் தன் மகன் தேர்வு எழுதுவதற் காக உடன் சென்றார். தன் மகனைத் தேர்வுக்கூடத்தில் விட்டுவிட்டு, விடுதிக்குத் திரும்பியவர் மனஉளைச்ச லால் மாரடைப்பால் மாண்டார்.

மருத்துவப் படிப்பில் தகுதி, திறமையை நிலை நாட்டுவதற்காக நடத்தப்படுவதாகச் சொல்லப்படும் நீட் தேர்வை நடத்துவதற்கு சி.பி.எஸ்.சி.க்கு தகுதியும் திறமையும் இல்லை. தமிழ்நாட்டு அரசின் கல்வித் துறை ஆண்டுதோறும் பத்து இலட்சம் மாணவர்கள் எழுதும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வையும் ஒன்பது இலட்சம் மாணவர்கள் எழுதும் பன்னிரண் டாம் வகுப்பு பொதுத் தேர்வையும் சீரிய முறையில் நடத்துகிறது. சி.பி.எஸ்.சி. இதே அளவில் எண்ணிக்கை கொண்ட மாணவர்களுக்குப் பொதுத் தேர்வை நடத்துகிறது. இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு கணக்கு வினாத்தாளும், 12ஆம் வகுப்பு பொருளியல் வினாத் தாளும் தேர்வுக்கு முன்பே வெளியாயின. சி.பி.எஸ்.சி. உயர் அதிகாரிகளுக்கு இந்த வினாத்தாள்கள் மின் அஞ்சல் மூலம் தேர்வுக்கு முன்பே அனுப்பப்பட்டன. கணக்கு பாடத்திற்கு மறுதேர்வு வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. பொருளியல் பாடத்துக்கு இந்தியா முழுவதும் மறுதேர்வு நடத்தப்பட்டது. வினாத்தாள்கள் கசிவுக்குக் காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மதுரையில் ஒரு தேர்வு மய்யத்தில் 120 மாண வர்களுக்குத் தமிழில் வினாத்தாள் தருவதற்குப் பதிலாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் வினாத்தாள் தரப்பட்டது. மாணவர்கள் செய்வதறியாது திகைத்தனர். மூன்று மணிநேரத்திற்குப் பிறகு தமிழில் வினாத்தாள் தரப்பட்டது. தவிப்பான அந்த மனநிலையில் மாணவர் களால் தேர்வைச் செம்மையாக எழுத முடியுமா? தேர்வு மய்ய அதிகாரிகள் நரித்தனமாக, தாங்கள் எந்தவகையான மனஉளைச்சலுக்கும் ஆளாகவில்லை என்று அம்மாணவர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டனர்.

தமிழில் தரப்பட்ட வினாத்தாளின் தகுதி-திறமை எப்படி இருந்தது என்று பார்ப்போம். மொழிபெயர்ப்பு மற்றும் பிழைகளுடன் 49 வினாக்கள் இருந்தன. எடுத்துக்காட்டாக, செங்குத்து என்பதற்கு நேர்குத்து, சிறுத்தையின் என்பதற்கு சீத்தாவின் (இராமன் மனைவி சீத்தாவா?), சிறுநீர் நாளம் என்பதற்கு யூரேட்டர், இயல்பு மாற்றம் என்பதற்கு இயல் மாற்றம், தாவரங்கள் என்பதற்கு பிளாண்டே, புழுப்பு என்பதற்கு பழப்பு, இறுதி நிலை என்பதற்கு கடைநிலை என்று வினாக் களில் இடம்பெற்றுள்ளது. இத்தவறுகள் குறித்து நீட் தேர்வை நடத்திய அதிகாரிகளிடம் கேட்டபோது, இது பற்றி எந்தக் கருத்தையும் கூறமுடியாது என்றனர்.

நீட் தேர்வு எழுதிய 1,07,288 தமிழ்நாட்டு மாணவர் களில் 24,720 மாணவர்கள் தமிழ்மொழியில் தேர்வு எழுதினார்கள். நீட் தேர்வின் தமிழ் வினாத்தாளில் 49 பிழையான வினாக்களுக்கு இவர்களால் சரியான விடையை எழுதியிருக்க முடியாது. அதனால் அவர்கள் மதிப்பெண் குறையும். ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண் வீதம் 49 வினாக்களுக்கு 196 மதிப்பெண் தமிழ்வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதுகுறித்து சி.பி.எஸ்.சி. பதில் கூறாமல் இருப்பதும், தமிழக அரசு வாய்மூடிக் கிடப்பதும் கண்டிக்கத்தக்க தாகும்.

ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்கிற ஆர்.எஸ்.எஸ். கொள்கையைச் செயல்படுத்துவதே நரேந்திர மோடி ஆட்சியின் தலையாய நோக்கமாகும். இந்தியா பல தேசிய இனங்களின் கூட்டமைப்பு என்கிற நிலையைத் தகர்ப்பதற்காக மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து நடுவண் அரசில் குவிக்கும் நடவடிக்கைகளை மோடி ஆட்சி முடுக்கிவிட்டுள்ளது. இத்தகைய நடவடிக் கைகளில் ஒன்றுதான் நீட் தேர்வு கட்டாயம் என்றாக்கிய தாகும்.

மன்மோகன் சிங் ஆட்சியில் 2012ஆம் ஆண்டில் நீட் தேர்வு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதில் மாநிலங் கள் விரும்பினால் விலக்கு பெறலாம் என்ற விதி இடம் பெற்றிருந்தது. நீட் தேர்வு ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு 2013 சூலையில் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது என்று தீர்ப்பளித்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்தபின் இந்தத் தீர்ப்பின்மீது சீராய்வு விண்ணப்பம் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்டது. 2013இல் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருந்த நீதிபதி அனில் தவே நீட் தேர்வு வேண்டும் என்று மாறுபட்ட தீர்ப்பை எழுதினார். அந்த அனில்தவே தலைமையில் அமைக்கப் பட்ட அய்ந்து நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு சீராய்வு கோரிக்கையை விசாரித்தது. 11.4.2016 அன்று அளித்த தீர்ப்பில் 2013இல் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நீட் தேர்வு வேண்டாம் என்று வழங்கிய தீர்ப்பைத் திரும்பப் பெறுவதாகவும், வழக்கை மீண்டும் முதலிலிருந்து விசாரிக்கப் போவ தாகவும் கூறியது.

இந்நிலையில்தான் மோடி அரசு நீட் தேர்வை 2016ஆம் ஆண்டே நடத்த வேண்டும் என்று உச்சநீதி மன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது. நீட் தேர்வு குறித்த வழக்கை முறையாக விசாரிக்கப் போவதாகக் கூறிய 17 நாள்களுக்குள்ளாகவே, மோடி ஆட்சியின் விருப் பத்தை நிறைவேற்றும் வகையில் 28.4.2016 அன்று 2016ஆம் ஆண்டு முதலே நீட் தேர்வு நடத்தலாம் என்று கூறியது. உச்சநீதிமன்றத்தில் முதன்மையான வழக்குகளை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் அமர்வு களில் நடுவண் அரசின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தீர்ப்பு வழங்கக்கூடிய நீதிபதிகளையே தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா நியமிப்பதாக உச்சநீதிமன்றத்தின் செல்ல மேசுவரர் உள்ளிட்ட மூத்த நீதிபதிகள் நால்வர் 2018 சனவரியில் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்ததை இவ்விடத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும்.

திடீரென நீட் தேர்வு மூலம்தான் மருத்துவப் படிப்பில் சேர்க்கை இருக்க வேண்டும் என்ற அறிவிப்புக்குத் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. வேறு சில மாநி லங்களும் எதிர்த்தன. 2016ஆம் ஆண்டிற்கு மட்டும் விரும்புகின்ற மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் படும் என்கிற அவசரச் சட்டத்தை நடுவண் அரசு பிறப்பித்தது. 2016இல் நீட் தேர்வு நடந்தது. ஆயினும் தமிழ்நாட்டில் 2007 முதல் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் தரவரிசைப்படி ஒற்றைச்சாளர முறையில் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கின்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. ஆனால் நடுவண் அரசு அவசரச் சட்டத்துக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற்ற போது, நீட் தேர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் நிலையில், வஞ்சகமாக 2017ஆம் ஆண்டு முதல் எல்லா மாநிலங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் நீட் மூலமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று சட்டம் இயற்றியது.

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ் நாட்டில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்தன. நீட் தேர்வு முறை சமூகநீதிக்கு எதிரானது; மாநிலத்தின் கல்வி உரிமை யைப் பறிப்பது என்று அரசியல் கட்சி களும் சமூக அமைப்புகளும் கண்டித்தன. நீட் தேர்வு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டும் நடத்தப்படு வதால், இந்தியில் படிக்கின்ற மாணவர் களுக்கு ஆக்கம் சேர்ப்பதாகவும், இந்தி அல்லாத பிற தாய்மொழிகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்குப் பெருந்தடை யானதாகவும் இருப்பதாகக் குற்றச்சாட்டு கள் எழுந்தன. அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி, ஒரியா உள்ளிட்ட பத்து மொழிகளில் 2017 நீட் தேர்வில் வினாத்தாள் வழங்கப்படும் என்று நடுவண் அரசு அறிவித்தது.

2017இல் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாளில் ஒவ்வொரு மொழியிலும் வெவ்வேறு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. ஒரே மாதிரியான வினாக்கள் இருப்பது என்பதே ஒரே தேர்வின் அடிப்படை என்ப தைக்கூட நீட் தேர்வு நடத்திய சி.பி.எஸ்.சி. பின்பற்ற வில்லை. சி.பி.எஸ்.சி. எந்த அளவுக்குப் பொறுப்பற்ற தன்மையில் செயல்படுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 2018 முதல் நீட் தேர்வின் அனைத்து மொழிகளின் வினாத்தாள்களிலும் ஒரே மாதிரியான வினாக்கள் இடம்பெற வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சி.பி.எஸ்.சி.க்கு ஆணையிட்டது. 2018இல் தமிழ் வினாத்தாளில் 49 தவறுகள் இருப்பது குறித்து இக்கட்டுரையில் முன்பே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்வி வணிகமயமாவதைத் தடுக்கவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒளிவு மறைவு அற்ற மாணவர் சேர்க்கை நடைபெறுவதை உறுதி செய்யவும், மாணவர்கள் பல தேர்வுகளை எழுத வேண்டியிருக்கும் நிலையை மாற்றவும், தகுதியான மாணவர்கள் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரு வதை உறுதி செய்யவும் நீட் தேர்வு முறையைக் கொண்டு வருவதாக நடுவண் அரசு கூறியது. இந்தக் குளறு படிகள் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே நடைபெறுகின்றன. இக்கல்லூரிகளுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்தாமல், மாநிலங்களின் அரசுக் கல்லூரி களுக்கும் சேர்த்து நீட் முறையைக் கொண்டு வந்தி ருப்பது, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டதாகும்.

2016ஆம் ஆண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்ட போதிலும் தனியார் மருத்துக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களில் உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்கிற நெறிமுறையை நடுவண் அரசின் சுகாதாரத் துறை வகுக்கவில்லை. அதனால் இந்த மருத்துவக் கல்லூரிகள் மருத்துவப் படிப்பு இடங்களை ஏலத்தில் விற்றுக் கொள்ளை இலாபம் ஈட்டின. 10.2.2017 அன்று நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங் களுக்கு 2017-18ஆம் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை ஒற்றைச் சாளர முறையில் பொதுக் கலந்தாய்வு மூலம் மாநில அரசுகளே நடத்த வேண்டும் என்று கூறியது. ஆனால் கடந்த ஆண்டில் நீட் தேர்வின் தரவரிசைப் பட்டியலின்படி இல்லாமல், ஆண்டுக்கட் டணம் ரூ.15 இலட்சம் முதல் 20 இலட்சம் என்கிற அடிப்படையில்தான் மாணவர்கள் இக்கல்லூரி களில் சேர்ந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை யாகும். எதற்காக நீட் தேர்வு முறை கொண்டு வரப் பட்டதோ அதன் நோக்கம் அடியோடு தோற்றுவிட்டது.

1.2.2017 அன்று தமிழகச் சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நடுவண் அரசுக்கு அனுப்பப்பட்டது. அ.தி.மு.க. அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைத்து விடும் என்று கூறிக்கொண்டிருந்தது. மாநிலப் பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் தமிழக அரசின் உறுதி மொழியை நம்பி ஏமாந்தனர். இறுதியில் விலக்கு கிடைக்காததால் நீட் தேர்வு எழுதும் நிலைக்குத் தள்ளப் பட்டனர். மாநிலப் பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மருத்துவப் படிப்பில் சேரு வதற்குத் தேவையான மதிப்பெண்களைப் பெற்றிருந்த போதிலும், நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவப் படிப்பில் சேர முடியாத கொடுமை நேர்ந்தது. அரியலூரைச் சேர்ந்த-தாழ்த்தப்பட்ட வகுப்பினரான அனிதா 1176 மதிப்பெண்ணும் 196.5 கட் ஆப் மதிப்பெண்ணும் பெற்றிருந்தும் மருத்துவப் படிப்பில் சேர முடியாத மனஉளைச்சலால் 1.9.17 அன்று தற்கொலை செய்து கொண்டார். அனிதாவைப் போலவே, பன்னிரண்டாம் வகுப்பில் உரிய மதிப்பெண் பெற்றும் நீட் எனும் நெடுஞ்சுவரைத் தாண்ட முடி யாமல் 500க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட வகுப்பு மாணவர்களின் மருத்துவக் கனவு நொறுங்கியது.

அதன்பின் தமிழக அரசு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ள வில்லை. ஏழரைக் கோடித் தமிழர்களின் சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய சட்டத்தை நடுவண் அரசு கால்தூசாகவும் மதிக்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இது தமிழ் இனத்தையே இழிவுபடுத்தும் செயலாகும்.

நீட் தேர்வுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 70,000 பேருக்கு 412 மய்யங்களில் இலவச நீட் பயிற்சி அளிக்கும் திட்டத்தை 2017 நவம்பரில் தமிழக முதலமைச்சர் ஆடம்பரமாகத் தொடங்கி வைத்தார். ஆனால் 2018 சனவரி வரையில் 100 பயிற்சி மய்யங்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல் இறுதியில் 2018 ஏப்பிரல் 5 முதல் மே 4 வரை 9 இடங்களில் 2000 மாணவர்களுக்குத் தங்கும் வசதியுடன் பயிற்சி அளிக்கப்பட்டது. நீட் தேர்வு நடத்த மே 6 அன்று மாலை கல்வி அமைச்சர் செங்கோட் டையன், தமிழக அரசு அளித்த பயிறிசியால் போதிய பயன் ஏற்படவில்லை என்று கூறினார். இந்த ஆண்டும் ஆண்டிற்கு ஒரு இலட்சம் கட்டணம் செலுத்தி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் தனியார் பயிற்சி மய்யங்களில் படித்த பணக்கார வீட்டுப் பிள்ளைகளே மருத்துவப் படிப்பின் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றுவார்கள்.

2018ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு மட்டு மின்றி, இந்திய மருத்துவம் என்று அழைக்கப்படும் சித்த மருத்துவம், ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி ஆகிய படிப்புகளின் இடங்களும் நீட் தேர்வு மூலமே நிரப்பப்பட வேண்டும் என்று நடுவண் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சித்த மருத்துவம் தமிழ் மருத்துவ முறையாகும். ஆனால் தமிழே தெரியாதவர்கள் சித்த மருத்துவப் படிப்பில் சேரப் போகிறார்கள். பொறியியல் படிப்புக்கும் நீட் எழுத வேண்டும் என்று நடுவண் அரசு முடிவு எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி நரேந்திர மோடிக்கு அடிபணிந்து கிடப்பதன் மூலம் பதவியைத் தக்க வைப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது. கல்வியிலும் பிற துறைகளிலும் மாநில உரிமைகள் பறிக்கப்படுதை வாயை மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நீட் நிரந்தரமாகிவிட்டது என்ற எண்ணத்தை விட்டொழித்து, சமூகநீதிக்கும் மாநில உரிமைக்கும் எதிரான நீட் தேர்வை விரட்டியடிக்கும் வரையில் ஓயாது தமிழர்கள் ஓரணியில் திரண்டு போராட வேண்டும்.

Pin It