ஜஸ்டிஸ் கட்சியார் விருதுநகரில் தங்கள் வேலைத் திட்டமாய் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவை சமதர்மத் திட்டங்கள் என்றும், பொதுவுடைமைத் திட்டங்கள் என்றும் இவை ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒத்துக் கொள்ளாதென்றும் அக்கட்சி அதை ஜீரணம் செய்ய முடியாதென்றும் எழுதினார்.

மறுபடியும் அதே மூச்சில் அவர் ராஜ பக்தியோடு கூடிய பொது உடமைத் திட்டம் என்றும் எழுதி விட்டார்.

periyar manஇவை எப்படியோ அர்த்தமில்லாமல் தேர்தல் வெறியால் உளருவதாகக் காணப்பட்டாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தத் தீர்மானங்கள் எல்லாம் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்று எழுதி இருக்கின்றன.

இவைகளின் கருத்தெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பொது மக்கள் கேவலமாய் நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை எவரும் அறிவார்கள்.

தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தல் அவசியத்துக்காக எதையும் சொல்லலாம் என்கின்ற நியாயத்தின் மீது ஏதோ உளறிக் கொட்டினார் என்பது நமக்கு நன்றாயத் தெரியும். இனி அவர் கொஞ்ச நாளைக்கு ஒன்றும் பேச மாட்டார். சமயம் வரும்போதுதான் வந்து மறுபடியும் தலைகாட்டுவார். ஆகையால் இப்போது நாம் என்ன எழுதினாலும் அதற்கு அவரிடமிருந்து பதில் எதிர்பார்க்க முடியாது. ஆதலால் அவருக்கு பதில் எழுத நாம் முற்படவில்லை.

ஆனால் அவர் விருதுநகர் தீர்மானத்தை சமதர்மப் பொதுவுடைமைத் தீர்மானம் என்று குறிப்பிட்டதைப் பொருத்த வரையிலும் ஒரு விஷயம் வெளிப்படுத்த வேண்டி இருக்கிறது. அதாவது சுயமரியாதைக்காரர்கள் பொதுவுடைமைக் கொள்கைகளைக் கொண்டுவந்து ஜஸ்டிஸ் கட்சியின் மூலம் புகுத்துகிறார்கள் என்று சர்க்காருக்கு சாடி சொல்லுவதற்கு ஆகவே அவர் இதில் பாடுபட்டு இருக்கிறார் என்பது ஒரு புறமும் மற்றொரு புறம் பொது ஜனங்கள் அதை ஒரு சமயம் தீவிரக் கொள்கை என்று கருதி அதை எங்கு மதித்து விடுவார்களோ என்கின்ற பயமும் பொறாமையும் இரண்டும் சேர்ந்தே அவைகளை "ராஜபக்தி கொண்ட பொதுவுடைமைத் தீர்மானங்கள்" என்றும் சொல்ல வேண்டியவரானார் என்பதை மாத்திரம் வெளிப்படுத்தி விட்டு மற்றதைப்பற்றி அவசியம் நேரிடும்போது எழுதுவோம்.

மற்றபடி இத்தீர்மானங்கள் கராச்சித் தீர்மானங்களில் இருந்து திருடியது என்று பார்ப்பனப் பத்திரிகைகள் எழுதியதற்கு சமாதானம் சொல்ல ஆசைப்படுகின்றோம்.

அதாவது காங்கிரசிலிருந்து திருடியதாகவே வைத்துக் கொண்டாலும் அவர்கள் அப்படிச் சொல்லுவதிலிருந்து ஜஸ்டிஸ்காரர்கள் தீர்மானங்கள் காங்கிரஸ்காரர்கள் தீர்மானங்களுக்கு சமமாக இருக்கிறதே ஒழிய குறைவானது அல்லவே என்றும் அல்லது காங்கிரஸ் தீர்மானங்களை ஜஸ்டிஸ்காரர்களும் ஒப்புக் கொண்டார்கள் என்றாவது அர்த்தம் படும்படி இருக்கிறதா இல்லையா என்றும் கேட்கின்றோம்.

நிற்க இத்தீர்மானங்கள் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவைகளா அல்லது கராச்சி தீர்மானங்கள் பல சுயமரியாதைத் தீர்மானங்களில் இருந்து திருடியவைகளா என்பதை கராச்சி காங்கிரசுக்கு முன் நடந்த ஈரோடு சுயமரியாதை மாகாண மகாநாட்டுத் தீர்மானங் களையும் பல ஜில்லா சுயமரியாதை மகாநாட்டுத் தீர்மானங்களையும் கவனித்துப் பார்க்கும்படி வேண்டுகிறோம்.

கராச்சி காங்கிரசில் சென்னைக் காங்கிரசையும் சென்னைப் பத்திரிக்கைகாரர்களையும் காங்கிரஸ் செக்ரட்டரி ஜவகர்லால் அவர்கள் நன்றாகக் கண்டித்து "சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் வேலை சரியாய் நடக்கவில்லை" என்று வருஷாந்திர ரிப்போர்ட்டில் எழுதி வைத்ததின் காரணமாய் "சுயமரியாதைக்காரர்கள் அதி தீவிர தீர்மானங்கள் செய்து கொண்டு வேலை செய்து வருகிறதால் காங்கிரஸ்காரர்கள் அம்மாதிரி தீர்மானங்கள் போடாவிட்டால் தென்னாட்டில் ஒரு காரியமும் நடக்காது" என்று சுயமரியாதைக்காரர்கள் உபன்யாசங்களையும் தீர்மானங்களையும் எடுத்துக்காட்டி அதிலிருந்த வாசகங்களை தீர்மானங்களாகப் போட்டார்களா இல்லையா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.

மற்றும் காங்கிரசை சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு பதில் சொல்லும் முறையில் சதுரங்கம் போல் நடத்தி வருவது எல்லா அறிவாளிகளும் அறிந்ததென்றும் சொல்லுவோம்.

இவ்வளவும் செய்துவிட்டு கராச்சியில் சமூகத் துறையில் சுயமரியாதை இயக்கத்துக்கும் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கும் எதிராக மிக்க மோசமும் பிற்போக்கும் கொண்ட தீர்மானம் ஒன்றும் போட்டுக் கொள்ளப்பட்டதைப் பற்றி அப்போதே "பிராமணா உன் வாக்குப் பலித்தது" என்கின்ற தலைப்பிலும் "கராச்சி தீர்மானங்கள்" என்ற தலைப்பிலும் குடிஅரசில் எழுதி இருக்கிறோம்.

அப்போது எடுத்துப் போட்டு எழுதிய கராச்சி தீர்மானத்தையே இப்பொழுதும் இதன் கீழ் எடுத்துப் போடுகிறோம். அதாவது :

கராச்சித் தீர்மானங்களின் சமதர்ம யோக்கியதை

1. The article in the constitution relating to Fundamental Rights"," shall include a guarantee to the communities concerned of protection of their culture"," languages"," scripts"," education"," profession"," practice"," religion and religious endowments.

2. Personal laws shall be protected by specific provision to be embodied in the Constitution.

1. சுயராஜ்ய அரசாங்கத்தில் ஒவ்வொரு வகுப்பாருடையவும் அவர்களது கலைகள், நாகரீகங்கள், பாஷை, கல்வி, தொழில், பழக்க வழக்கம், மதம், மத தர்ம சொத்துக்கள், ஸ்தாபனங்கள் முதலியவைகளைக் காப்பாற்றுதலாகியவைகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதாக உறுதி கூறி, உத்திரவாதமளிக்கப்படும்.

2. ஒவ்வொரு சமூக தனிப்பட்ட உரிமைகளையும் பற்றிய சட்டங்களும் காப்பாற்றப்படும்படியான திட்டத்தையும் சேர்க்கப்படும்.

இந்தத் தீர்மானங்கள் போட்ட பிறகு பார்ப்பனர்களின் எந்தவித சுயராஜ்யத்திலாவது வேறு எந்தத் துறையிலாவது கடுகளவு முற்போக்கோ சுயமரியாதையோ ஏற்பட இடமிருக்கிறதா என்று கேட்கிறோம்.

ஆகவே கராச்சித் தீர்மானங்கள் சமதர்மத் திட்டங்கள் கொண்டதா? பார்ப்பன தர்மத் திட்டங்கள் கொண்டதா என்பதையும் அதையா விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு திருடி காப்பி அடித்திருக்கிறது? என்பதையும் உணர்ந்து பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகிறோம்.

கராச்சி தீர்மானத்தின் தத்துவமெல்லாம்: இந்தியாவுக்கு சுயராஜ்ஜியம் கிடைத்தால் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில் எவ்வகையிலும் சிறிதுகூட கை வைக்கப்பட மாட்டாது என்ற கருத்தடங்கிய ஒரு பந்தோபஸ்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இத் தீர்மானம் போட்ட பிறகே ஜனங்கள் எங்கு இதைக் கண்டு ஆத்திரப்பட்டு விடுவார்களோ என சந்தேகப்பட்டு அவர்களை ஏமாற்ற சுயமரியாதைக்காரர்கள் தீர்மானங்களை முதலில் போட்டுக் கொண்டு கடசியில் அவைகள் எல்லாம் பயனற்றுப் போகும்படி இந்த தீர்மானமும் போட்டுக் கொண்டதாகும். இதைப் பற்றி நன்றாய் அப்பொழுதே எழுதி இருக்கிறோம். ஆகவே சிறிதுகூட பயமோ வெட்கமோ இல்லாமல் கராச்சித் தீர்மானத்தின் பெருமையைப் பற்றி பேசுவதும் அதிலிருந்து திருடினதாக எழுதுவதும் மிகவும் கேவலமான செய்கை என்றுதான் சொல்லுவோம்.

(குடி அரசு துணைத் தலையங்கம் 14.04.1935)

***

1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது

குடி அரசு ஆபீசு உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட "பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம்" என்னும் புத்தகங்கள் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு 1550 புத்தகங்கள் போலீசாரால் கைப்பற்றி இரசீது கொடுக்கப்பட்டது.

இனி அப்புத்தகம் குடிஅரசு பதிப்பகத்திலோ, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்திலோ கிடைக்காது.

(குடி அரசு அறிவிப்பு 14.04.1935)