periyar gemini ganesanகாங்கிரஸ் காரியக் கமிட்டியில் தற்போது செய்திருக்கும் பகிஷ்கார யோசனை மிகவும் புத்திசாலித்தன முள்ளதாகவும், வேடிக்கையானதாகவும் இருக்கிறது. ரயில், போஸ்டாபீஸ், தந்தி முதலியவைகளையும் பகிஷ்காரம் செய்ய வேண்டுமாம். ஆனால் எந்த காங்கிரஸ்காரராவது இவைகளை நடைமுறையில் செய்து காட்ட முடியுமா? என்று கேட்கிறோம். இந்தப் பகிஷ்கார வியாக்கியானம் வெகு வேடிக்கையானது! ரயிலைப் பகிஷ்காரஞ் செய்வதென்றால் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு வண்டிகளில் ஏறாமல் மூன்றாவது வகுப்பில்தான் ஏற வேண்டுமாம்! தபால் பகிஷ்காரம் என்றால் கவர் எழுதாமல் கார்டுகளிலேயே எழுத வேண்டுமாம். தந்தியைப் பகிஷ்கரிப்பது என்றால் கூடுமானவரையில் வார்த்தைகளைச் சுருக்கித் தந்தி கொடுக்க வேண்டுமாம்! இதுதான் இந்த பகிஷ்காரங்களுக்குக் காங்கிரஸ்காரர்கள் செய்யும் அருமையான அர்த்த புஷ்டியுள்ள விருத்தியுரை.

இந்த வியாக்கியானம் கூறவும் இந்தப் பகிஷ்காரப் பிரசாரஞ் செய்யவும் வேண்டிய அவசியமே இல்லை. பொருளாதார நெருக்கடியுள்ள தற்காலத்தில் இப்படித்தான் நடந்து தீருகின்றது. ஏழை மக்கள் ரயிலில் முதலாவது, இரண்டாவது வண்டிகளை எப்பொழுதும் திரும்பிப் பார்த்தேயிருக்க மாட்டார்கள். அவர்கள் எழுதும் கடிதங்களும் குறைவு. அதிலும் கார்டு 9 பைசாவும், கவர் 1 அணா 3 பைசாவும் ஆனவுடன் நிச்சயமாகக் கார்டில்தான் எழுதுவார்கள். தந்திக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். ஆகையால் இந்தப் பகிஷ்காரத்தைப் பற்றிப் பிரயோசனமில்லை.

உண்மையிலேயே பகிஷ்காரம் பண்ண வேண்டுமானால், வெள்ளைக்கார அரசாங்கத்திற்குச் சொந்தமானதையெல்லாம் நாம் உபயோகிக்கக் கூடாது என்று இருக்க வேண்டுமேயானால், முதலில் நாம் இந்த நாட்டிலேயே இருக்கக் கூடாது. ஏன்? இந்த நாட்டை இப்பொழுது வெள்ளைக்கார அரசாங்கந்தானே ஆண்டு கொண்டிருக்கின்றது. ஆகவே அவர்களுடைய ஆட்சிக்குள் அடங்கிய நாட்டில் இருப்பது “பாவம்” அல்லவா? ஆகையால் எல்லோரும் சமுத்திரத்தில் குடியேற வேண்டும்; வெள்ளைக்காரர் ஆளும் பூமியைப் பகிஷ்காரம் பண்ண வேண்டும் என்று தீர்மானஞ் செய்வார்களானால் இன்னும் மெச்சத்தக்கதாக இருக்கும் என்று யோசனை கூறுகிறோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 10.01.1932)

Pin It