1947 ஆகஸ்ட் 14-ல் பாகிஸ்தானுக்கும், ஆகஸ்ட் 15-ல் இந்தியாவுக்கும் விடுதலை தந்து வெளியேறினர் வெள்ளையர். யானையின் கவளத்தில் புதைக்கப்பட்ட ஊசிபோல் 50 ஆண்டுகள் பின்னும் அந்த நெருடலின் வேதனையில் இருநாடுகளும் புரண்டு கொண்டுள்ளன. இந்தியா பல நூறு மன்னர்களின் நாடுகளின் தொகுதி. ஒவ்வொன்றும் எல்லை வகுத்துப் பிரிந்து கிடந்தன. எனினும் எல்லை கடந்த இந்தியத்துவம் அவர்களைப் பிணைத்தது.

வட.க்கே காசி சென்றவனின் புண்ணியம், தெற்கே ராமேஸ்வரத்தில் கடலாடினாலே நிறைவு பெறும் என்றனர். எத்தனையோ நாடுகள், மன்னர்கள் இவனின் புனிதப் பயணத்தை எவரும் தடுத்ததில்லை. காலடியில் புறப்பட்ட சங்கரன் கையிலை வரை வலம் வந்து வாதிடுகிறான். அவரும் தடுக்கவில்லை.

அமர்நாத்தில் பனி, லிங்கம் வடிக்கிறது போய் தரிசி என்று ஒரு முஸ்லிம் வழிகாட்டுகிறான். ரங்கநாதரின் மேல் பிரேமையுடன் பக்தி கொண்டு துலுக்கச்சி நாச்சி சீரங்கத்தின் பிராரத்தில் காத்து நிற்கிறாள். காடு போன ஐயப்பனுக்கு வாபர் தோழனாகிறான். ரங்கனாதர் கோவில் பூசை மணி ஏன் தாமதமாக ஒலித்தது என்று இஸ்லாமியத் திப்பு சினக்கிறார். உன் மதம் உனக்கு... என் மதம் எனக்கு இதில் என்ன மோதல் என்கிறது குர்ஆன். நான் இந்து வல்ல முஸ்லிம் அல்ல என்கிறது கபீரின் சூபி மதம். தீன் இலாஹி என பேதம் மறுத்த பொது மதம் காண்கிறார் அக்பர். சீரடி சாய்பாபா முஸ்லிமா தெரியாது.

மன்னர்களின் எல்லைகளைக் கடந்து மக்களைப் பிணைத்தது இந்தியத்துவம். கோவில்கள் அன்னதாதா, வான இறைவனின் களஞ்சியமாகவும் ஆபத்து வந்தபோதெல்லாம் மக்களைக்கான புகலிடமாகவும் திகழ்ந்தன. கோவிலை விடப் பெரியதாக உயர்ந்ததாக மாளிகை கட்டுவது பாவம் என மன்னர்களும் தயங்கினர். விலை மதிப்பற்ற செல்வங்களைக் கோவிலில் குவித்து மகிழ்ந்தனர் மன்னர்கள். எங்கு நோக்கினும் உயர்ந்த கோவில் கோபுரங்கள், ஆனால் எங்கேயும் மன்னர்கள் வாழ்ந்த மாளிகைகளைக் காணவில்லை. கஜினி சோமனாதபுரத்தைக் கொள்ளையிட்டான் என்றால், பலநூறு இந்து மன்னர்கள் செல்வத்திற்காக இந்துக் கோவில்களை கொள்ளையிட்ட வரலாறுகளில் ஒன்று பரசுராமபாகுவின் சிருங்கேரிக் கொள்ளை.

கொள்ளையர்கள் மதம் மறந்து தங்கள் தெய்வங்களைக் கொள்ளையிடுகின்றனர். மன்னர்களுக்குள் பகையுண்டு. போருண்டு. ஆனால் மக்களோ ராமன் ஆண்டாலென்ன என்று சுகமாகவே வாழ்ந்தனர். இஸ்லாமிய மன்னர்களிடம் இந்துக்களும், இந்து மன்னர்களிடம் இஸ்லாமியர்களும், விசுவாசத்துடன் சேவை செய்தனர். பீர்பாலும், பூர்ணய்யாவும் மாறிமாறி வேறுவேறு பெயர்களில் காலந் தோறும் வாழ்ந்தனர்.

இத்தகைய மதம் கடந்த மக்களின் உறவை வரலாற்றின் நெடுகிலும் காண முடியும். மக்களை மதத்தால் பிரித்து ஆட்சியைக் காத்துக் கொண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் துவக்கம், வேலூர் புரட்சியின் தோல்வியில் துவங்குகிறது. மதத்தால் வேறுபட்ட போதும், இந்தியத்துவத்தால் ஒன்றுபட்ட மக்களை ஆள்வதும், சுரண்டுவதும், இனி நடவாது என்று முடிவு செய்த வெள்ளையர் கட்டிய தடைச் சுவர்தான் இந்து முஸ்லிம் பேதம். மதத்தால் நிறத்தால், மொழியால் பண்பாட்டால் வேறுபட்ட அன்னியர் தூவிய நச்சுவிதை இன்று விச விருட்சமாக நம்மை வதைத்துக் கொண்டுள்ளது. இரு நூறு ஆண்டுகளுக்கு பின் வேலூர் கோட்டையின் கற்சுவரும் இந்து ரத்தமும், இஸ்லாமிய ரத்தமும் கலந்த அந்த மண்ணும், இந்துவின் இறுதி மூச்சுக் காற்றும், இஸ்லாமியனின் கடைசிச் சுவாசமும் கலந்த அகழியின் தண்ணீரும் அந்த ஒற்றுமைக் காவியத்தை ஒலித்துக் கொண்டுள்ளன
.
1806 ஜுலை 10 இரவு 2மணி, தமது பொது எதிரியான பிரிட்டிஷாரை எதிர்த்து இந்து சிப்பாய்களும், இஸ்லாமிய வீரர்களும் சினந்து எழுந்தனர். திப்புவிடமிருந்தும், ஆர்க்காடு நவாப்பிடமிருந்தும் வஞ்சத்தால் வெள்ளையர் பிடுங்கிய அரியணையில் மீண்டும் திப்புவின் பிள்ளைகளை அமர்த்துவோம் என்ற லட்சியத்துடனேயே அவர்கள் போரிடத் துவங்கினர். இந்துக்கள் பாலின் மீதும், இஸ்லாமியர்கள் வாளின் மீதும் சபதம் ஏற்றனர். ‘நாமோ பலர் அவர்களோ சிலர்’ என்ற நம்பிக்கை கோஷம் கோட்டை முழுதும் எதிரொலித்தது. 3000 வெள்ளையர்கள் 30,000 இந்திய வீரர்களை அதிகாரம் செய்தனர். 30கோடி இந்திய மக்ளை அடிமை செய்தனர். இந்துக்களும், முஸ்லிம்களும் போற்றி வணங்கிய மதம் கடந்த புனிதர்கள் பக்கிர்கள். அடிமைப்பட்ட மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினர். திப்புவின் வீரமரணம் பற்றியும் மீர்சாதிக்கின் துரோகம் பற்றியும் அவர்கள் பாடிச்சென்ற நாட்டுப்பாடல்கள் நாட்டுணர்வூட்டின. திப்பு வெல்வது போலவும்; வெள்ளையர்கள் தோற்று ஓடுவது போலவும், அவர்கள் நடத்திக் காட்டிய பொம்மலாட்டம் மக்களைக் கொதித்தெழச் செய்தது. காவி உடையும், ஜடாமுடியும் தரித்த அவர்கள் நந்தி துர்க்கம் துவங்கி, பாளையங்கோட்டை வரை புரட்சி விதைகளைத் தூவிச் சென்றனர்.

வெள்ளையர் புகுத்திய சீருடையும் தொப்பியும், தோற்ற மாற்ற உத்திரவும், அவர்களுக்கே எதிரானது. ஒட்டகத்தின் கழுத்தை முறித்த கடைசி வைக்கோலானது அது. தாடி, மீசை கூடாது என்றது இஸ்லாமியர்களைச் சினம் கொள்ளச் செய்தது. நாமத்தை அழி, கடுக்கனைச் சுழற்று என்றது இந்துக்களைக் கோபம் கொள்ளச் செய்தது. தொப்பியில் மாட்டுத் தோல் முத்திரை என்றதை இருவரும் ஏற்கவில்லை. இவை எல்லாம் கிறிஸ்தவராக மதமாற்றம் செய்வதன் முன்னோடி என இருவரும் கருதினர். தொப்பியைத் தூக்கி எறிந்த இந்துவுக்கும் முஸ்லிம் வீரனுக்கும் வெள்ளையர் தந்த 600 கசையடிகள் சிவன் மீது விழுந்த பிரம்படி போல ஒட்டுமொத்த இந்தியர்களையும் தாக்கியது. கோட்டையைப் பிடித்த வெள்ளையர் ஜலகண்டேஸ்வரர் கோவிலை ஆராதனையற்ற ஆயுதக் கிடங்காக மாற்றினர். இந்துக்கள் மனதுக்குள் நொந்தனர்.

வீரம் செறிந்த திப்புவின் வீரர்கள் திப்புவின் வீழ்ச்சியின் பின் ஆயிரக்கணக்கில் வெள்ளையர் சேனையில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். நீண்ட அனுபவம் கொண்ட வீரர்கள் கூட அவில்தார். சுயேதார், ஜமேதார் பதவிக்கு மேல் போக முடியவில்லை. வெள்ளைச் சிப்பாயின் சம்பளத்தில் பத்தில் ஒருபங்கு வாங்கிக் கொண்டு உழைத்தார்கள். நேற்று கப்பலில் இருந்து இறங்கி வந்த வெள்ளைப் பையன் கூட நம்மை அதிகாரம் செய்கிறான். இழிவு செய்கிறான் என்று குமைந்து கொண்டிருந்தனர் இந்திய வீரர்கள் கோபமும், வெறுப்பும் சிறுபொறியை எதிர்பார்த்த குண்டு போல் வெடிக்கக் காத்துக் கிடந்தது.

திப்புவின் வீழ்ச்சிக்குப்பின் மைசூரில் திப்புவின் வாரிசுகள் இருப்பது ஆபத்து என்று கருதிய ஆங்கிலேயர் அவர்களைக் கண்ணுக் கெட்டாத தூரத்தில் குடியமர்த்த முடிவு செய்தனர். திப்புவின் பிள்ளைகள், உறவினர் என 3000 பேர் வேலூர் கோட்டையில் குடியேற்றப்பட்டனர். கோட்டைக்குள் அரண்மனைக் காவலில் திப்புவின் பிள்ளைகள் வைக்கப்பட்டனர். அவர்களுக்குச் சிறப்புக் காவலராக கர்னல் மாரியோடர் நியமிக்கப்பட்டிருந்தான். எனினும் திப்புவின் பிள்ளைகள் பதே ஹைதரும், மொய்உத்தீனும், மொய்னுதீனும் மன்னருடனும், பாளையக்காரர்களுடனும் எப்போது எப்படித் தாக்கலாம் என்று சதி செய்தபடியே இருந்தனர்.

இரவில் துவங்கிய கலவரத்தில் முன்னின்றவன் அலிகுரி என்ற இந்து என்று விசாரணை மன்றத்தில் குற்றம் சாட்டினர். மாறாக ஜுலை 4 அன்று நடத்தத் திட்டமிட்டிருந்த கலவரம் தள்ளிப் போகக் காரணமானவன் முஸ்தபா பெய்க் என்ற முஸ்லிம் வீரன், லெப்டினான்ட் கர்னல் போர்ப்ஸிடம் ரகசியத் திட்டத்தைக் காட்டிக் கொடுத்தவன் அவனே. மீர்ஜாபரின் வாரிசுகள் காலம்தோறும் தொடர்கின்றனர். மூலவாசலில் மேஜர் ஆம்ஸ்ட்ராங்கைச் சுட்டுக் கொன்றவன் அலிகுரியே என்று ஆவணக் குறிப்பு சொல்கிறது. ராம்சிங் என்ற ராஜபுத்திர வீரனே அரண்மனைக் காவலர்களை கிளர்ச்சி செய்யத் தூண்டினான் என்று மாரியோட் விசாரணையில் சொன்னான். முத்து நாய்க்கர், ஜகனாத நாய்க்கர், முத்துலிங்கம் போன்ற இந்து சிப்பாய்களே கொத்தளத்திலிருந்த வெள்ளைச் சிப்பாய்களைக் கொன்றனர் என்று விசாரணையில் கூறப்பட்டது. இரண்டு மணிக்குத் துவங்கிய கலவரம் 8 மணிக்குள் நிறைவு பெற்றது. பெரும்பாலான வெள்ளை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். சிலர் இருட்டின் போர்வையில் தப்பி ஓடினர். சிலர் குளியல் அறைகளில் ஒளிந்து கொண்டு பயந்து செத்துக் கொண்டிருந்தனர். விடியும் முன் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, திப்புவின் புலிக் கொடி ஏற்றப்பட்டது. அரண்மனை வாயிலில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு இனிப்பும், பானங்களும், வெற்றிலையும் இந்து முஸ்லிம் பேதமின்றி அனைவருக்கும் தந்து உற்சாகமூட்டினர்.

ஜுலை 10 இரவு 2 மணிக்குத் துவங்கி 8மணிக்குள் கோட்டை இந்தியர் வசமானது. காலைச் சூரியன் கோட்டை உச்சியில திப்புவின் புலிக் கொடியைக் கண்டது. லட்சிய வீரர்கள் கேட்பாரற்றுத் திறந்து கிடந்த வெள்ளையரின் விடுதலையும், பாதுகாப்பின்றிக் கிடந்த கஜானாவையும் கண்டு திசை மாறினர். சுயஆட்சி, சுயமரியாதை லட்சியங்களைத் துறந்து கொள்ளையராகினர். ஆர்க்காட்டில் இருந்து படையுடன் கில்லஸ்பீ கோட்டைக்குள் நுழைந்ததைக் கூட வீரர்கள் கண்டு கொள்ளவில்லை. பீரங்கிப் படையுடன் வந்த யங்கும், கெனடியும் கோட்டை வாயிலைச் சிதறடித்தனர். அடுத்த இரண்டு மணிநேரத்தில் வேலூர் கோட்டை இந்தியச் சிப்பாய்களின் ரத்தத்தில் தோய்ந்தது. பிடிபட்ட வீரர்களை கோட்டை மதில் அருகே நிறுத்தி வைத்துச் சுட்டுக் குவித்தனர். கோட்டையில் பறந்த திப்புவின் புலிக்கொடி இறக்கப்பட்டது. கட்டுப்பாடற்றுப் போன வீரர்களை எதிர்த்துப் பேசிட மீண்டும் திரட்டும் தலைமை இல்லை. திப்புவின் வாரிசுகள் அரண்மனையை விட்டு வெளியே வந்து இந்திய வீரர்களைத் தலைமை ஏற்று வழி நடத்தத் தயங்கினர். வரலாறு தடம் மாறிப் போனது. ஆங்கிலேயர் கணக்குப்படி 800 பேர் இறந்தனர். ஆனால் எண்ணிக்கை 3000த்தை எட்டியிருக்கும்.

அரண்மனையில் இருந்த திப்புவின் வாரிசுகளையும் கொல்லத் துணிந்தது ஆங்கிலப் படை. மாரியோம் தலையீட்டால் இளவரசர்கள் தப்பினர். ஒழுங்கும், கட்டுப் பாடற்ற பெரும்படை தோற்கும், இவை கொண்ட சிறுபடை வெல்லும் என்ற ராணுவப் பாடமானது வேலூர்.

எதையும் பதிவு செய்து ஆய்வு செய்து பாடம் கற்கும் மேற்கத்திய அணுகுமுறை வேலூர் கலவரத்தை நுணுகி ஆய்வு செய்தது. பிரிட்டிஷ் படையின் பலவீனம், இந்தியர் எழுச்சியின் காரணம், எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் செய்யவேண்டும் எனப்பட்டியலிட்டனர். இந்தியர் உணர்வில் ஊறிய மத உணர்வுகளில் தலையிடுவது ஆட்சிக்கே ஆபத்தாகும் என்பதை உணர்ந்தனர். மாற்றல்கள் தள்ளிப் போடப்பட்டன. மதம் மாற்றம் கிறிஸ்துவ மிஷனரிகளால் இந்தியர் எதிரியாவர் என்பதால் மிஷனரிகளின் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. சில மிஷனரிகளை வெளியேற்றவும் துணிந்தனர்.

திப்புவின் வாரிசுகள் தென் இந்தியாவில் இருப்பது கூட ஆபத்து என கல்கத்தாவுக்குக் குடியேற்றினர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டன. மானியங்கள் குறைக்கப்பட்டன. திப்புவின் குடும்பம் சிதறடிக்கப்பட்டு, சுவடின்றிப் போனது.

இந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியர் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டு நிற்கும் வரைத் தமது ஏகாதிபத்தியக் கனவுகள் ஈடேறாது என்பதைத் தெளிவாக உணர்ந்தனர். இந்து மதத் தீவிரவாதிகளின் பிரிவினைக் குரலாக இந்து மகாசபையும், இஸ்லாமிய மதவாதப்படையாக முஸ்லிம் லீக்கும் லண்டனில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் பிரசவிக்கப்பட்டது. முடிவற்ற இந்து முஸ்லிம் பகைமை, வித்துக்கள் விதைக்கப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான் என இந்தியர்கள் பிரித்துப் போடப்பட்டனர். பிரித்தாளும் வெள்ளையர் சூழ்ச்சி வெற்றி பெற்றது. அன்று தூவப்பட்ட விஷவித்து இன்று நச்சுக்கரமாக நாடெங்கும் வளர்ந்து பெற்ற விடுதலைக்கே சவால் விட்டுக் கொண்டுள்ளது.

இந்துக்களும், இஸ்லாமியரும் தோளோடு தோள் நின்று இந்திய விடுதலைக்குத் தம் இன்னுயிரை உரமாக்கி, செந்நீரை வார்த்த நினைவை இருநூறு ஆண்டுகள் பின் நினைவு கூர்கிறோம். திப்புவின் வாரிசுகளின் சமாதிகளிடையே, அழகுற அமைந்துள்ள பூர்ணய்யாவின் மகனது சமாதி நம்மை ஒற்றுமையுடன் வாழ வேண்டுகிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் இந்தியத்தாயின் பிள்ளைகளே என்று அவர்கள் மரணத்தின் பிடியிலும் முழங்கிய ஒற்றுமைக் குரலை வேலூர் கோட்டையின் கற்சுவர்கள் எதிரொலிக்கின்றன. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. நம்மில் ஒற்றுமை நீங்கிடல் அனைவர்க்கும் தாழ்வே என்று அன்று சிந்திய ரத்தம் தோய்ந்த வேலூர் மண், பெற்ற விடுதலை காக்கும் இரண்டாம் விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்துங்கள், டாலர் கனவுகளுக்கு சுதந்திரத்தை பலியிட்டு விடாதீர்கள் என அறைகூவல் விடுகிறது. வேலூர் புரட்சித் தியாகிகளின் வீர முழக்கம் நம் காதுகளை எட்டுமா?