periyar 391திருவாளர் ராவ்பகதூர் கிருஷ்ணமாச்சாரியார் எம். எல். ஏ. இந்திய சட்டசபைக்கு நமது பிரதிநிதியாக அனுப்பப்பட்டவர். அவர் சமூக சட்டம் செய்ய சட்ட சபைக்கு அதிகாரம் இருக்க கூடாதென்றும் மத விஷயங்களில் எந்தச் சீர்திருத்தவாதியும் பிரவேசிக்கக் கூடாதென்றும், கல்யாண வயதைப் பற்றி சாஸ்திரங்களில் என்ன கூறியிருக்கிறதோ அதற்கு சிறிது கூட மாற்றம் செய்யச் சீர்திருத்தவாதிகளையாவது சர்க்காரையாவது சட்டசபைகளையாவது அனுமதிக்கக் கூடாது என்றும் பேசி அதற்காக கட்டுப்பாடான பிரசாரம் செய்ய வேண்டுமென்றும் தன்னால் கூடிய வரை தான் சட்ட சபையில் பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.

சுயராஜ்யம் கிடைத்தப் பிறகு சமூக சட்டம் செய்து கொள்ளலாம் என்று மக்களை ஏமாற்றி அரசியல் குழியில் விழுகும்படி செய்யும் பார்ப்பன தேசீயவாதிகளும் அவர்களது பத்திரிகைகளும் இதற்கு யாதொரு பதிலும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டேயிருக்கின்றன.

நாம் இந்தப் பித்தலாட்டங்களை எடுத்துக் காட்டினால் அது தேசத் துரோகம் என்பதாகவும் சுய ராஜ்யத்திற்கு முட்டுக் கட்டையாகவும் போய் விட்டதாகக் கூக்குரல் போட்டு விஷமப் பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆகவே எப்படியாவது சட்டசபை முதலிய ஸ்தானங்களுக்கு அரசியல் கட்சிகளையும் அபிப்பிராயங்களையும் எதிர்பார்க்காமல் உண்மையான சீர்திருத்தத்திற்கு போதிய உணர்ச்சியுள்ள மக்களாகப் போகும்படி பார்த்துக் கொள்ள வேண்டியதாகும்.

அதை விட்டு விட்டு அரசியல் கொள்கைகள் என்பதைக் கவனித்துக் கொண்டு எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பார்ப்பனர்களை நமது பிரதிநிதிகளாக அனுமதித் தோமானால் விதவைகள் கற்பம் உதிரக் கட்டியாகி திடீரென்று மறைந்து விடுவதுபோல் நமக்குத் தெரியாமலேயே அவர்கள் பார்ப்பனீயப் பிரதிநிதியாகவேதான் ஆகிவிடுவார்கள். அதில் சிறிதும் சந்தேகம் கொள்ளுவது அறியாமையேயாகும்.

(குடி அரசு - செய்திவிளக்கக் குறிப்பு - 26.10.1930)

Pin It