நமது சுயமரியாதை இயக்கமானது தமிழ் நாட்டில் எவ்வளவு பரவ வேண்டுமோ அவ்வளவு பரவி விட்டதாகக் கொள்வதற்கில்லை.

ஆனால் அது ஒரு விதத்தில் மக்கள் கவனத்தை பெரிதும் இழுத்துக் கொண்டும், சம்மதத்தைப் பெற்றுக் கொண்டும் வருகின்றது என்பதில் நமக்கு எள்ளளவு ஐயமும் இல்லை. ஆனால் இவ்வளவோடயே நாம் திருப்தி அடைந்து விட முடியாது. மந்திரிகள் ஆதரித்ததினாலும், சட்ட மெம்பர் முதலிய அறிஞர்கள் நற்சாக்ஷிப் பத்திரம் வழங்குவதினாலும் நமக்கு எந்த வித இலாபமும் ஏற்பட்டுவிடாது. அவர்களும் இதை ஏற்றுக் கொள்ளுகின்றார்கள் என்கின்ற அளவில் திருப்தி அடையலாமே ஒழிய வேறொன்றும் இல்லை.

periyar 351தவிர நமது இயக்கம் நம் நாட்டில் எவ்வளவு பரவி இருக்கின்றது என்று நினைக்கின்றோமா, அதைவிட அதிகம் பரவி இருப்பதாகவே நமது எதிரிகள் பயந்து கிலிபிடித்து நடுக்கமுற்று வருகின்றார்கள் என்பது மாத்திரம் நமக்கு நன்றாய் விளங்குகிறது.

தவிர நமது இயக்கத்தை பரப்பும் விஷயமாய் நாம் இன்னமும் அதிகமான வேலை செய்ய வேண்டியிருக்கின்றது. நமது மாகாணத்திலேயே ஆந்திர நாட்டிலும் மலையாள நாட்டிலும் கர்நாடக நாட்டிலும் உள்ள மக்களில் அநேகருக்கு இப்படி ஒரு இயக்கம் தோன்றி இருக்கும் சங்கதியே சரியாகத் தெரியாது என்பதே நமது அபிப்பிராயம். இப்படி இருக்கும்போது வெளிமாகாணங்களைப் பற்றி கேட்க வேண்டுமா?

எனவே கூடிய சீக்கிரத்தில் இவ்வியக்கத்தை இன்னமும் சரியான ஒழுங்குமுறையில் அமைக்க வேண்டியது நமக்கு மிகுதியும் அவசரமாயிருக்கின்றது. ஏனெனில் அடுத்தாப்போல் சமீபத்தில் நமது நாட்டுக்கு வரப் போகும் அரசியல் விசாரணைக் குழுவினரான ‘சைமன் கமிஷன்’ வருவதற்கு முன்பாகவே நாம் ஒவ்வொரு ஊரிலும் சங்கங்கள் நிறுவி அங்கத்தினர்களை சேர்க்க வேண்டும். தமிழ் நாட்டில் ஒரு ஐம்பதினாயிரம் அங்கத்தினர்களையாவது சேர்த்து நமது நாட்டிலுள்ள எல்லா சங்கங்களையும் விட இதுவே அதிக ஜனப் பிரதிநிதித்துவம் கொண்டது என்பதை உணர்த்திவிட வேண்டும். அன்றியும் இச்சங்கந்தான் பொதுமக்களின் சரியான பிரதிநிதித்துவம் பொருந்தியது என்பதை மெய்ப்பித்துவிட வேண்டும்.

வரப்போகும் கமீஷனிலோ சீர்திருத்தத்திலோ மக்களின் சுயமரியாதைக்கேற்ற திட்டங்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அதிகாரமும் பதவியும் சம்பளமும் உள்ள உத்தியோகங்களை எவ்வளவுக் கெவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு குறைக்க முயல வேண்டும். குறைக்க முயலாவிட்டாலும் இனியும் அதிகமாகப் பெருகி ஏழைகளை துன்புறுத்தி, பொது மக்கள் ஒற்றுமையைக் குறைத்து கக்ஷி பிரதிகக்ஷிகள் ஏற்படுத்திக் கொடுமையான ஆட்சி முறை நடைபெறச் செய்யும் தன்மையையாவது நிறுத்த வேண்டும். எனவே ஜில்லாக்கள், தாலூக்காக்கள், கிராமங்கள் தோறும் நம் சங்கங்களை நிறுவவும், அங்கத்தினர்களைச் சேர்க்கவும், ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒவ்வொரு சுயமரியாதை தொண்டரை நியமிக்க வேண்டியது இது சமயம் மிகவும் அவசியமாயிருக்கின்றது. ஆகையினால் இதை உத்தேசித்து இப்போது திருச்சி ஜில்லாவுக்கு திரு. இராவணதாஸையும், தஞ்சை ஜில்லாவுக்கு திரு. காளியப்ப தேவரையும், கோவை ஜில்லாவுக்கு திரு. ஹ.சு. சிவானந்த முதலியாரையும் நியமிக்க உத்தேசித்து அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

மற்ற ஜில்லாக்களுக்கும் ஒவ்வொரு தொண்டரை சிபார்சு செய்யும்படி ஆங்காங்கு உள்ள பிரமுகர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் பதில் வந்த உடன் நியமனம் செய்யப்படுவார்கள். இச் சுயமரியாதை சங்கத்தின் சார்பாக சட்டசபை, ஜில்லா போர்டு, தாலூக்கா போர்டு, முனிசிபாலிடி முதலியவற்றின் தேர்தல்களுக்கு அபேக்ஷகர்களை நிறுத்தவோ அல்லது நமது சுயமரியாதைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மாத்திரம் தேர்தல்களில் உதவி செய்யவோ கூடியதான நிலைமையை நாம் அடுத்த சட்டசபை தேர்தல்களுக்குள் அடைந்தாக வேண்டும். அப்படிக்கில்லையானால் இப்போதைய நிலைமையில் சுலபத்தில் மக்கள் சுயமரியாதைத் தன்மையை அடைய முடியாதென்பதாகவே காணப்படுகின்றது.

நமது சுயமரியாதை திட்டத்திற்கு அரசாங்க சட்டங்கள் எவ்வளவோ இடையூறாக இருந்து வருகிறது.

உதாரணமாக அரசியல் தன்மையில் பறையர், சக்கிலிகள் என்று சொல்லப்படுவதான குற்றமற்ற பெயர்களை மாற்றிக் கொண்டு ஆதி திராவிடர்கள் என்கின்ற பெயரை வைத்துக் கொள்ள ஏற்றுக் கொண்ட சர்க்கார், தாசிமகன், அடிமை என்கின்ற தத்துவம் கொண்ட சூத்திரன் என்கின்ற பெயரை மாற்ற சட்டம் இடம் கொடுக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள். சட்டத்தைத் திருத்த மதம் இடம் கொடுக்கவில்லை என்று ஜனப் பிரதிநிதிகள் என்போர்கள் சொல்லி விட்டார்கள். இந்நிலையில் சுயமரியாதை உணர்ச்சியுள்ள கனவான்கள் சட்டசபையில் இருந்தால் சூத்திரன் என்ற பெயரை மாற்ற சட்டமும் மதமும் குறுக்கிடுமா என்று கேட்கின்றோம்.

தவிர, பார்ப்பனப் புரோகிதம் இல்லாமல் செய்யப்படும் கல்யாணங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்பதாக சட்டத்தில் இருக்கின்றது. இந்து லாப்படி பார்ப்பனனும் பார்ப்பனச் சடங்கும் இல்லாமல் ஒரு கல்யாணம் நடந்தால் அது சட்டப்படி நடந்த கல்யாணமாகக் கருத முடியாத நிலையில் சட்டம் செய்யப்பட்டிருக்கின்றது.

சொத்துக்கள் பங்கு வீதத்திலும், ஆண், பெண் தன்மையிலும், தகப்பன் மகள் முறையிலும் சட்டத்தில் பல ஊழல்கள் இருக்கின்றன.

மற்றும் அநேக விஷயங்களில் சுயமரியாதைக்கு விரோதமாக எவ்வளவோ கொடுமைகள் சட்டத்தில் இருக்கின்றன. இவைகளை எல்லாம் சட்டசபைகள் மூலம் மாற்றினாலன்றி நமது லட்சியம் நிறைவேற்றுவதற்கு மார்க்கமில்லை என்றே சொல்லுவோம். சட்டத்தினால் தடைகளை வைத்துக் கொண்டு விபரமில்லாமல் வெள்ளைக்காரர் மீதும் பொது ஜனங்கள் மீதும் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் ஒரு பலனும் இல்லை.

ஆகையால் நாம் நமது இலட்சியத்தை அடைய வேண்டுமானால், வைதீகர்கள் வசமும், வைதீகத்தின் அடிமைகள் வசமும் அதிகாரங்களை ஒரு நாளும் விட்டுவைத்தல் கூடவே கூடாது என்பதே நமது அபிப்பிராயம்.

ஜஸ்டிஸ் கக்ஷி என்பதான தென்இந்திய நல உரிமைச் சங்கம் பெரும்பாலும் சுயமரியாதை இலட்சியத்தை ஒப்புக் கொள்ளுகின்றதானாலும் அதிலுள்ள சிலர் அதிகாரத்தையும் உத்யோகத்தையும் பொருத்த வரையில் மாத்திரம் பார்ப்பனீயத்தை ஒழிக்க சம்மதிக்கிறார்களேயொழிய நித்திய வாழ்க்கையில் பார்ப்பனர் காலில் விழுவதையோ பார்ப்பனர் கால் கழுவின தண்ணீரை சாப்பிட்டு தலையில் தெளித்துக் கொள்வதையோ நீக்கிவிட அநேகர் சம்மதிப்பதில்லை.

உதாரணமாக ஒரு பார்ப்பனன் சட்டசபை மெம்பராகவோ தாலூக்கா போர்ட் மெம்பராகவோ வருவதாயிருந்தால் மாத்திரம் பார்ப்பனீயம் கூடாது என்று சொல்லி பார்ப்பன ஆக்ஷியை வைய வருகிறானேயல்லாமல், அதே பார்ப்பனன் இவருக்கு குருவாகவோ மோக்ஷத்திற்கு வழிகாட்டியாகவோ கடவுளை அறிமுகப்படுத்துபவனாகவோ வருவதையும் அப் பார்ப்பனன் காலில் விழுவதையும் ஆnக்ஷபிக்க ஒரு சிறிதும் சம்மதிப்பதே இல்லை. எனவே, சுயமரியாதையின் தத்துவத்தை ஜஸ்டிஸ் கட்சியார் என்கின்ற தென் இந்திய நலவுரிமைக் கட்சியார் உணர்ந்திருக்கின்றார்கள் என்று சொல்லி விட முடியாது. ஆதலால் நமது லக்ஷியத்திற்கு அக்கக்ஷியையே முழுவதும் நம்பி விட்டு விடுவதற்கில்லாத நிலையில் இருக்கின்றோம். ஆதலால் நமக்கென்று தனிக் கட்சி ஒன்று சட்டசபையில் அதாவது நமது சுயமரியாதைக்கு இடையூறாக இருக்கும் சட்டத் தடையை ஒழிப்பதற்காவது அவசியம் வேண்டியிருக்கின்றது.

இவ்விஷயத்தில் அலட்சியமாய் இருந்துவிட்டு எவ்வளவுதான் பிரசாரம் செய்தாலும், எவ்வளவு தான் தியாகமும் கஷ்டமும் நஷ்டமும் அடையத் தயாராயிருந்தாலும் ஒரு பலனையும் அடைந்து விட முடியாது. ஆதலால் இப்போதே ஆங்காங்குள்ள சுயமரியாதை வீரர்கள் ஆங்காங்கு சங்கங்கள் கண்டு அங்கத்தினர்கள் சேர்க்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் வேண்டிக் கொள்ளுகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 27.05.1928)

Pin It