கோவையில் அடுத்த வாரம் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாட்டைப்பற்றி இதுவரை குடி அரசு 4, 5 தலையங்கம் எழுதி ஆகிவிட்டது. மாயவரம் மகாநாடு நடந்தது முதல் விசேஷமாய் கோவை மகாநாட்டைப் பற்றியே எங்கும் பேச்சாய் இருக்கிறது. இம்மகாநாட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு புது உணர்ச்சி ஏற்படக்கூடும் என்பது நமது அபிப்பி ராயம். ஆன போதிலும் இம் மகாநாடு சம்பந்தமாய் தலைவர்கள் என்போ ருக்கு பெருத்த பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் பொது மக்களின் கவனத்தை இம்மகாநாடு பெரிதும் இழுத்துக் கொண்டிருப்பதுடன் இம்மகாநாட்டின் முடிவை பார்ப்பன ரல்லாதார் மாத்திரம் அல்லாமல் பார்ப்பனரும் சர்க்காரும் வெகு ஆவலாய் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மகாநாட்டில் ஒரு கட்டுப்பாடானதும் எல்லோரையும் கட்டுப்படுத்தக் கூடியதுமான ஒரு திட்டத்தை ஏற்படுத்த முடிய வில்லையானால் பிறகு பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக இயலிலும் முன்னேறும் காலம் சமீபத்தில் இல்லையென்றே தீர்மானித்துவிட வேண்டியதுதான்.

periyar 600பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்கள் என்போர் இவ்விஷயமாய் இனி புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டியதோ திருத்தப்பாடு அடைய வேண்டி யதோ அல்லது இனி ஒருவர் மனதை திருப்பக் கூடியதோ ஒன்று இருப்பதாக நாம் நினைப்பதற்கில்லை. ஏனெனில் இவ்வியக்கம் ஏற்பட்டு பத்து வருஷத் திற்கு மேலாகியும் இதன் குண தோஷங்களை இயக்கத்தில் கலந்திருந்தும், இயக்கத்திற்கு வெளியில் இருந்து கொண்டு எதிர்த்து நின்றும், சிலர் உள்ளிருந்து வெளிவந்தும் மறுபடியும் உட்புகுந்தும், வெளியிலிருந்து எதிர்த்தவர்கள் இப்போது உட்புகுந்து ஆதரித்தும், உள்ளிருந்து ஆதரித்தவர் இப்போது வெளியேறி எதிர்த்தும் ஆகிய பலவித அனுபவங்களை அனேகமாய்ப் பெற்றாகிவிட்டது. மேற்கண்ட இவ்வித நடவடிக்கைகளின் தன்மைகளையும் இவ்வித நடவடிக்கைகளின் காரண காரியங்களையும் யாவரும் தெரிந்து கொண்டும் ஆகிவிட்டது. அதோடு கூட கொள்கைகள் எவ்வளவு தூரம் ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதும் அவரவர் சவுகரியங்கள் எவ்வளவு தூரம் இவ்வித காரியங்களுக்குக் காரணமாய் இருந்தது - இருக்கிறது - இருக்கப் போகிறது என்பதும் ஏறக்குறைய எல்லோ ருக்கும் தெரியக்கூடியதாகிவிட்டது.

ஆகையால் இனி வேண்டியதெல்லாம் அவரவர் இஷ்டமும் சகிப்புத் தன்மையுமேயல்லாமல் மற்றபடி வேறு பெரிய மாறுதல்கள் எதுவும் தேவை யிருப்பதாக நமக்குத் தெரியவில்லை. எனவே, மகாநாட்டிற்கு வருவோர் களின் கடமையெல்லாம் எவ்வெவ் விஷயங்களில் கொள்கை மாறுபாடில் லையோ அவ்வவ்விஷயங்களில் தாராளமாய் மிகுதி வைத்துக் கொள்ளாமல் ஒன்றுபட ஒத்துப்போக வேண்டும் என்பதும், கொள்கை மாறுதலும், நம்பிக்கையின்மையும், ஏற்பட்ட விஷயங்களில் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதுதான். இந்த இரண்டு குணமும் மகா நாட்டிற்கு வரும் கனவான்களிடம் குடிகொண்டிருக்கும் பட்சத்தில் மகா நாட்டில் அபிப்பிராயபேதம் என்பதையே காணமுடியாது. ஒரு கூட்ட மென்றாலே பலதிறப்பட்ட அபிப்பிராயமுடையவர்களைக் கொண்டதாகத்தா னிருக்கும். கண்ணியமான கூட்டமென்பது பலதிறப்பட்ட அபிப்பிராயமுடை யவர்கள் வந்தாலும் அவரவர்கள் அபிப்பிராயத்தை மதித்து நமது அபிப் பிராயம் ஒருவருக்குப் பிடிக்காவிட்டால் அவரை எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறோமோ அதுபோலத்தான் பிறர் அபிப்பிராயம் நமக்குப் பிடிக்காவிட்டால் நாமும் நடந்துகொள்ள வேண்டும். அன்றியும் ஒருவர் அபிப்பிராயத்தில் நமக்கு சந்தேகம் தோன்றுமானால் அதாவது “இது அவரின் கண்ணியமான அபிப்ராயமல்ல. தங்களது சுயநலத்திற்கான அபிப்பிராயம்” என்பதாக யாரிடமாவது நமக்கு சந்தேகம் தோன்றுமானால் அவற்றையும் மரியாதையுடன் பொறுத்துக்கொண்டு சந்தேகத்தின் பிரயோ சனத்தை அவருக்கே கொடுத்து கண்ணியப்படுத்த வேண்டுமேயல்லாமல் அதை நாம் எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் “உங்களுக்குத் தோன்றியதை சொல்லுங்கள்” என்பதாக நாமாக அழைத்து ஒருவர் வந்திருக் கும் போது அவர் சொல்லுவதைப் பொறுமையுடன் கேழ்க்க வேண்டியது தான். மற்றபடி ஒருவர் அவராக வந்து நமக்குச் சொல்லும்போது அதைத் தட்டி நமது மனதில் தோன்றியதைச் சொல்ல நமக்கு உரிமை வைத்துக் கொள்வதில் குற்றமில்லை.

நாமாக வருந்தி அழைத்து குற்றம் சொல்லுவதானது பெருந்தன்மை யான புத்தியாகாது. இதைப்பற்றி ஏன் இவ்வளவு தூரம் எழுதுகிறோமென்றால் நமக்கு வந்துள்ள கடிதங்களும் நிரூபங்களும் பெரிதும் இம்மாதிரி பொறுமையற்ற தன்மை உடையதுகளாகவே இருக்கிறது. அன்றியும் இவ்வார “நவசக்தி” தலையங்க முடிவில்,“கோவை மகாநாட்டிற்கு போதருமாறு ஜஸ்டிஸ் கட்சியிற் சேர்ந்த பல பார்ப்பனரல்லாத தலைவர்கள் அழைக்கப் படுவார்கள் என்று நாம் அறிகிறோம். ஒருவேளை அவர்களும் மேடை மீது வாதப் போரில் தலையிட நேரலாம். அது போழ்து அமைதி, பெருந்தகைமை முதலியன பாதுகாக்கப் பட வேண்டுமென்று நாம் சொல்லவேண்டுவ தில்லை. அழைக்கப்படுவோர் மரியாதையாக நடத்தப்படுவாரென எதிர்பார்க்கிறோம்”என்பதாக எழுதியிருக்கிறது. இவ்விஷயங்களைப் பார்த்தாலும் நமது எதிரிகள் பலர் இம் மகாநாட்டில் எப்படியாவது கலவரமுண்டாக்கி நமது கட்டைக் கலைக்கக் காத்திருப்பது அதிசயமல்லவானதினாலுமே இவ்வளவு தூரம் எழுதுகிறோம்.

நிற்க, இவ்வார ‘நவசக்தி’ தலையங்கத்தில் கோவை மகாநாட்டைப் பற்றி எழுதியிருப்பதில் நம்மைப்பற்றி சில வார்த்தைகள் பொரித்திருக்கிறது. அவற்றை மாத்திரம் இங்கு எடுத்து எழுதி நமது கருத்தை வெளியிடுவோம். நவசக்தி எழுதியிருப்பது போலவே நாமும் வாதப்போருக்கு ஆக இதை எழுதவில்லை என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நவ சக்தியில் காணும் செய்தியாவது:-

1. ஸ்ரீமான் நாயக்கரும் அவர் உள்ளிட்டாரும் ஜஸ்ட்டிஸ் கக்ஷி காங்கிர சுடன் ஒன்றலாகாது என்று தம் மதம் நிறுவியே தீர்வர். “ ஸ்ரீமான் நாயக்கரும் அவர் கூட்டத்தாரும் விட்டுக்கொடுத்தாலன்றி ஜஸ்ட்டிஸ் கக்ஷித் தலைவர் களின் கருத்து நிறைவேறல் அரிது” என்றும்,

2. “ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் அரசியல் கூறு காங்கிரசோடு ஒன்றிவிடின் ஸ்ரீமான் நாயக்கர் தனது சமூக சீர்திருத்தத் தொண்டை இன்னும் பதின் மடங்கு ஊக்கமாக நிகழ்த்தலாம்” என்றும்,

3. “ஜஸ்ட்டிஸ் கக்ஷியில் தனிப்பட்ட அரசியல் ஜீவநாடி ஓடினாலன்றி சமூகச் சீர்திருத்தத் தொண்டை திறம்பட ஆற்ற இயலாது. அதற்கு இடமும் நேராது என்று நாயக்கர் சொல்லுகிறார். இக்கூற்றில் ஒரு வித உண்மையுண்டு என்பதை நாம் மறுக்கவில்லை” என்றும்,

4. “ஜஸ்ட்டிஸ் கக்ஷியார் அரசியல் கூறு தேசிய வளர்ச்சிக்குத் தடையா யிருப்பது ஈண்டு பெரிதும் கவனிக்கப்பாலது” என்றும்,5. “ஆதலால் நாயக்கர் விட்டுக்கொடுக்கும் பேரறத்தைக் கடை பிடித்தல் வேண்டுமென்று நாம் கூறுகிறோம்” என்றும் எழுதியிருக் கிறது.

நவசக்தி 22-6-27 தேதி தலையங்கத்தில் இவற்றையே முக்கியமாய்க் கருதி இவற்றிற்கு நமது கருத்தை வெளியிட கடமைப்பட்டுள்ளோம்.

1. நாம் நமது அபிப்பிராயத்தை வலியுறுத்தப் போவதில்லை. விஷயத்தை விளக்கிவிட்டு அவரவர்கள் மனச்சாட்சியின்படி நடக்கவிட்டு விடுவோமே அல்லாமல் ஒரு சிறிதும் கட்டாயப்படுத்தவோ ஓட்டு சேகரிக் கவோ மாட்டோம் என்பதை உறுதி கூறுகிறோம். விட்டுக் கொடுத் தலைப் பற்றி மற்றொரு இடத்திலும் வருவதால் கடைசியாக எழுதுவோம்.

2. இரண்டாவது விஷயத்திற்கு நவசக்தியின் மூன்றாவது விஷயமே பதில் சொல்லிவிட்டபடியால் நாம் அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது சொல்லுவோம். பார்ப்பனப் பிரசாரம் நமது நாட்டில் பலப் பட்டிருப்பதற்குக் காரணம் இது சமயம் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாக இருக்கும் அரசியல் ஜீவநாடியின் வலுவா அல்லவா? அது போலவே ஜஸ்டிஸ் கட்சிக்கும் ஒரு சிறிதாவது தனி அரசியல் ஜீவநாடி இல்லாதிருக்கு மானால் இது சமயம் நமது நிலை என்னவாயிருக்கும் என்பதை மனதில் கையை வைத்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஜஸ்டிஸ் கட்சிக்கு தனி அரசியல் கொள்கை இல்லாதிருக்குமானால் ஜனாப் மகமது உஸ்மான் நிர்வாக சபை மெம்பராயிருக்க முடியுமா? ஜனாப் மகமது உஸ்மானும் ஸ்ரீமான் மார்ஷபேங்கும் நிர்வாக சபையின் மெம்பரா இல்லாதிருக்குமானால் ஸ்ரீமான்கள் கல்யாணசுந்திர முதலியாரும், வரதராஜுலு நாயுடுகாரும், ராமசாமி நாயக்கரும் ஜெயிலுக்கு வெளியில் இருந்து கொண்டு தொழிலாளர் பிரசாரமோ தேசீயப் பிரசாரமோ சமூகச் சீர்திருத்தப் பிரசாரமோ செய்ய முடியுமா என்று பந்தயம் கட்டி கேழ்க்கிறோம். இந்த ரகசியம் அனேகருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் ஸ்ரீமான்கள் முதலியாருக்கும் நாயுடுவுக்கும் நாயக்கருக்கும் தெரியாமல் இருக்க நியாயம் இல்லை. எந்தப் பிரசாரத்தையாவது அடக்க பார்ப்பன அரசியல் திட்டத்திற்கு சக்தி இல்லையென்று யாராவது சொல்ல முடியுமா? இந்த இரகசியங்களை அறிந்தேதான் நவசக்தி “நாயக்கர் சொல்வதில் ஒருவித உண்மையுண்டு” என்பதாக தானே ஒப்புக் கொண்டிருப்பதால் இதைப்பற்றி நாம் அதிகம் வளர்த்தவில்லை.4-வது விஷயம் “ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கூறு தேசிய வளர்ச் சிக்கும் இடையூறு” என்பது. இந்த இடத்தில்தான் நாம் நவசக்தியிடமும் மற்றும் பலரிடத்திலும் பலமான அபிப்பிராய பேதம் கொள்வதாயிருக்கிறது.

நவசக்தியைப் போலவே பாமர மக்களில் அனேகர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப்பற்றி நாம் பலமுறை எழுதியிருக்கிறோம். இதுவரை யாரும் அதுகளுக்கு சமாதானம் எழுதவே இல்லை. ஜஸ்டிஸ் கட்சி அரசியல் கூறு என்னவென்பது தெரிந்தால் இந்தப் பிரச்சினை பிறக்கவே இடமிருக்காது.

“தேசிய” அரசியல் கூறால் தேசம் கஷ்டப்படுவதும் இன்றைய தேசிய சபை நாடு சிரிப்பதும் அறியாதார் யார்? இதை எல்லோரையும் விட நவசக்தி அதிகம் அறிந்திருக்கிறது என்பதே நமது அபிப்ராயம். ஏனெனில் நவசக்தி யின் கண்டனங்களை நாம் கவனித்து வாசித்து வந்திருக்கிறோம். எனினும் கீழே சில விஷயங்களைப் பாமர மக்களுக்காக எழுதுகிறோம்.

தேசியக் கொள்கைகளுக்கு நமது நாட்டில் செல்வாக்கு ஏற்பட்டது சமூக சீர்திருத்தக் கொள்கைகளான மகாத்மாவின் நிர்மாணத் திட்டமும், நாணயமான தேசிய திட்டமாகிய ஒத்துழையாமையும் காங்கிரசில் இருக்கிறது என்றதினாலல்லாமல் வேறு காரணம் உண்டா? ஸ்ரீமான்கள் முதலியாரும் நாயுடுவும் இன்னும் சிலரும் மதிக்கும் காங்கிரசில் இத்திட்டங்கள் இருக் கிறதா? இருக்க வைக்க முடியுமா? மகாத்மாவுக்கு மேல் இனி யாராவது முயற்சிக்க முடியுமா? முடியுமானால் அப்போது அதில் நாம் போய் சேர்ந்து தொண்டாற்ற முடியாதா? காங்கிரசு முன்னால் ஒத்துழைப்பாயிருந்தது என்பதையும் ஒப்புக்கொண்டு பழயபடி இப்போதும் ஒத்துழைப்புக்கு வந்து விட்டது என்பதையும் ஒப்புக்கொண்ட ஒருவர் ஜஸ்டிஸ் கட்சியின் அரசியல் கூறு தேசிய வளர்ச்சிக்கு இடையூறாய் இருக்கிறதென்று சொல்லுவதானால் நாம் அதற்கு என்ன பதில் சொல்ல முடியும். தேசியத் திட்டத்தில் முதலாவதாக ஒத்துழையாமை நிறுத்தப்பட்டு விட்டது. பிறகு மதுவிலக்கு நிறுத்தப்பட்டது. பிறகு தீண்டாமை நிறுத்தப்பட்டது. இப்போது கதரும் நீக்கப்பட மகாத்மாவின் சம்மதம் பெற்றாகிவிட்டது. ஒத்துழைப்புத் திட்டங்களையும் ஒப்புக்கொண்டு சட்டசபைக்குப் போய் இரட்டையாட்சிக்கும் ஆசி கூறி ஆக்கமளித்து வருவதையும் காங்கிரஸ் ஒப்புக்கொண்டாகிவிட்டது. இனி என்ன செய்வது பாக்கியிருக்கிறது என்பது நமக்கு விளங்கவில்லை. ஜஸ்டிஸ் கட்சியோ மகாத்மாவின் நிர்மாணத் திட்டத்தை ஒப்புக்கொண்டாய் விட்டது. அரசிய லில் “முட்டுக்கட்டையைக்” கைக் கொண்டிருக்கிறது. இப்படியிருக்க எந்த விதத்தில் ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தில் அரசியல் கூறு காங்கிரசுக்கு பிற்பட்டதாயிருக்கிறதென்பது நமக்கு விளங்கவில்லை. ஒரு சமயம் “நாளைய தினம் மாறிவிடுமோ என்னமோ” என்று பயப்படுவதானாலோ யார் மாறாதவர்களா யிருந்தார்கள்? எந்த அரசியல் சமூகஇயல் இயக்கங்களின் திட்டம் மாறாததாயிருந்தது? எந்தத் தலைவர் மாறாதவராயிருக்கிறார்? ஸ்ரீமான் பண்டித மாளவியா மேடை மீது ஏறிக்கொண்டு தீண்டாதவர் களுக்காக கண்ணீர்விட்டு மக்களை ஏமாற்றுகிறார். தனது குடும்பத்தில் தன் மகனுக்கு பெண் கொடுத்த சம்பந்தி ஒருவர் வேறு வகையில் ஒரு பார்ப்பானுக்குப் பெண் கொடுத்ததற்காகவும் மற்றொருவனைப் பார்ப்பான் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்காகவும் அவரை ஜாதியை விட்டுத் தள்ளி விட்டதோடு தனது மருமகளின் தாயார் சாகக்கிடக்கும் போது மருமகள் எவ்வளவு கெஞ்சி அழுதும் தனது தாயாரைப் பார்க்க அனுப்பிக் கொடுக்காத புண்ணிய ஆத்துமா, இன்றைய தினம் தென்னாட்டில் வந்து காசிப் பார்ப்பனப் பள்ளிக்கூடத்திற்கு பணம் பறிக்க பிராமண- பிராமணரல்லாதார் - ஒற்றுமைப் பிரசாரம் செய்கிறார்.

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக 21 நாள் பட்டினி இருந்த மகாத்மா காந்தி “இந்து முஸ்லீம் கலவரம் இப்படி இருக்கும் போது எனக்கு ஓய்வு வேறு வேண்டுமா” என்று சொன்ன மகாத்மா காந்தி இன்றைய தினம் “அவரவர்கள் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்கள் கையா லானதைப் பாருங்கள்” என்று சொல்லி விட்டு ஓய்விலிருக்கிறார். இப்படியே இனியும் பல உதாரணங்கள் கூறலாம். எனவே “எந்த இயக்கத்தை நம்புவது? யார் பேச்சையும் நடவடிக்கையும் நம்புவது? யார் அபிப்பிராயம் மாற்றிக் கொள்ள முடியாதது? என்று சொல்லுவது” என்பதை யோசித்துப் பார்த்தால் இம்மாதிரி சந்தேகத்திற்கு இடமிருக்காது. “மணமுண்டானால் வழி உண்டு” என்கிற சமாதானம்தான் சொல்லி ஆக வேண்டும். இனி “நாயக்கர் விட்டுக் கொடுக்கும் பேரறத்தை கைக்கொள்ள வேண்டும்” என்று சொல்வதற்கு நாம் பதில் சொல்லி ஆக வேண்டும். இது விஷயத்தில் விட்டுக்கொடுப்பது என்பதின் கருத்து கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான். கொள்கைகளை மாற்றிக்கொள்ளுவது என்பது மதத்தை விட்டு மாறு என்று கட்டாயப்படுத்துவதற் கொப்பானது. ஒரு மகமதியனை நீ விக்கிரகத்தை வைத்து வணங்கு என்று சொல்லுவது எப்படி அநியாயமோ அது போல் ஒருவனை காங்கிரசில் சேரு என்று சொல்லுவது என்பது நமது அபிப் பிராயம். இன்னம் யோசித்துப் பார்த்தால் அதைவிட கடினமானக் கட்டளை என்று கூட சொல்லலாம்- விக்கிரகத்தை வணங்குவது பாவம் என்பது ஒரு மகமதியருடைய நம்பிக்கையே ஒழிய அது பிரத்தியட்சமல்ல. ஆனால், காங்கிரசு தேசத்திற்கு கெடுதி யானது என்பது பிரத்தியட்ச பிராமணத்தால் ஏற்பட்ட அனுபவ முடிவு. அதை மாற்றிக் கொள்வது என்பது உண்மை யுள்ளவனுக்கு சாத்தியப்படக் கூடியது அல்ல என்பது நமது அபிப்பிராயம். உண்மையில் பலன் தரத்தக்க மகாத்மாவின் அரசியல் திட்டங்களைப் பாழாக்கினதும், அதில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலோரின் கண்ணியத்தை கொள்ளை கொண்டதும், இந்த விதமான விட்டுக் கொடுக்கும் தன்மையும் இதை அநுசரித்த “ஒற்றுமை”ப் பிசாசும்தானே அல்லாமல் வேறல்ல. மகாத்மா காந்தி தனது கொள்கையில் இருந்து ஒரு சிறிதும் விட்டுக் கொடுக்காமலிருந்தவரை தேசத்தின் நிலை கொள்கையின், தத்துவத்தின் தன்மை, தேசிய அனுகூலம், அரசாங்கத்தின் மனம் எப்படியிருந்தது? விட்டுக் கொடுத்து ஒற்றுமைப் பிசாசுக்கு ஆளாகி ராஜி ஒப்பந்தத்தில் இறங்கிய பின் தேச நிலை முதலியதுகள் என்ன ஆச்சுது? உண்மையானதும் உறுதியானதுமான கொள்கைகளை எப்படி ஆனாலும் சரிபடுத்திக் கொள்ளக்கூடிய மகாத்மா போன்றவர்கள் விட்டுக் கொடுத்தே இக்கெதி ஆனால் இனி சாதாரண மனிதன் விட்டுக் கொடுத்தால் அதன் கதி என்ன ஆகும் என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது.

யோக்கியமாய் பேசுவோமானால் “விட்டுக்கொடுத்தாலொழிய காரியம் நடவாது” என்கிற நிலை வரும்போது சுத்தமான கர்மவீரன் அந்தக் காரியத்தில் இருந்து விலகி விடுவது அறமாகுமே அல்லாமல் விட்டுக் கொடுத்து கருமத்தை ஆற்றலாம் என்பது தோல்வியை ஒப்புக்கொண்டதே ஆகும். ( தன் தன் சொந்தக் காரியங்களுக்கு, இவ்வளவு கடினமான தத்துவம் பொருந்தாதெனினும் அதன் இரகசியமும் இதுதான். இதில் விட்டுக் கொடுப்பதால் தன் காரியம் தான் கெட்டுப் போகலாமே அல்லாமல் வேறல்ல.) முடிவாக ஒரு வார்த்தை “என்னையே எண்ணி இப்பெரும்பழி ஏற்றேன்” என்று இராவணன் சொன்னது போல் காங்கிரசை எதிர்ப்பது என்கிற கொள்கையை நாம் முடிவு காட்டிய காலத்தில் நமக்கு உதவியாக யாரையும் நாம் எதிர்பார்த்து இத்தொண்டில் இறங்கவில்லை. ( இதைப் பார்த்தவுடன் சிலருக்காவது “இராவணனைப் போல் இவனும் அழிந்து போவான்”என்று சொல்லத் தோன்றும். இராவணன் தனது கொள்கையிலாவது தனது பலக் குறைவாலாவது அழிந்து போகவே இல்லை. எதிரிகளின் சூக்ஷியாலும் இராவணனது வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதிரி களுடன் சேர்ந்து கொண்டு காட்டிக் கொடுத்ததினாலும் அவர் அபஜய மடைய நேரிட்டது எனலாம். எனினும் அவரது புகழும் சாமார்த்தியமும் நீதியும் இனியும் அடியோடு மறைந்து போகவில்லை. அக்கதையின் இரகசியம் வேறு. அதுவும் மக்களுக்குப் பகுத்தறிவு ஏற்படும் காலத்தில் தானாகவே பிரகாசிக்கும். அதற்கு காலம் வரும். )

ஜஸ்டிஸ் கட்சி கொள்கையே முழுதும் நமது கொள்கையல்ல. பரஸ்பர சகாய எதிர்ப்பார்ப்பதே தவிர வேறில்லை. ஜஸ்டிஸ் கட்சியும் ஒரு காலத்திலும் காங்கிரசின் உண்மையான கொள்கைகளை எதிர்க்க வேயில்லை. “அரசியல் விஷயத்தில் காங்கிரஸ் செய்கிற புரட்டுகளை நாங்களும் செய்து எங்கள் வீதாச்சாரம் அந்தப் பலனை அடைவோம்” என்று சொல்லி வருகிறதே தவிர வேறில்லை. ஆதலால் நாம் காங்கிரசைப் பற்றி கொண்ட கொள்கைக்கு ஜஸ்டிஸ் கட்சியின் உதவி எப்போதும் நமக்கில்லை. இதனால் மற்றவர்களை நாம் கட்டாயப் படுத்தவில்லை - கட்டாயப்படுத்தப் போவதுமில்லை. ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் யோக்கியதையும் நமக்குத் தெரியும். அவர்களின் இலட்சியமும் நமக்குத் தெரியும். ஆனால், அவர்கள் பார்ப்பன அரசியல்வாதிகளின் கங்காணிகளைவிட ஆயிரம் மடங்கு யோக்கியர்கள் என்பதும் பார்ப்பன அரசியல்வாதிகளால் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு பலன் உண்டோ அதுபோலவே பார்ப்பனரல்லாத அரசியல்வாதிகள் எண்ணம் நிறைவேறு வதிலும் கொஞ்சம் குறைவாகவாவது ஏற்படும் என்கிறது மாத்திரம் நமக் குண்டு. எனவே, எல்லோரும் மகாநாட்டிற்கு வரவேண்டும் என்றும் ஒருவருக் கொருவர் கண்ணியமான அவரவர்கள் அபிப்பிராயங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்றும் ஒத்து வருகிறதைப் பொருத்த வரையில் கண்ணியமாய் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மகாநாட்டில் பரஸ்பர சகிப்புத் தன்மையும் மரியாதையும் இருக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 26.06.1927)

Pin It