ஸ்ரீவரதராஜுலு ஏப்ரல் 27 தேதி ‘தமிழ் நாடு’ பத்திரிகையில் எழுதியிருப்பதாவது :-

“ஜஸ்டிஸ் கக்ஷியார் செய்து வரும் தொல்லையால் தென்னாட்டு மக்கள் நோயுற்றிருக்கின்றார்கள்”....... ஜஸ்டிஸ் கட்சியின் ராஜீய நயவஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீவரதராஜுலு 12 வருஷங்களாக பாடுபட்டு வருகிறார்.”

‘நாயக்கர் பிரசாரம் இப்போது போலவே நடைபெறுமானால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடமே தெரியாமல் போகும்.’

‘தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கக்ஷி ஒரு பெரிய முட்டுக்கட்டையாக இருக்கிறது......’

‘கேவலம் ஒரு சட்ட மெம்பர் பதவிக்காக தேசத்துரோகம் செய்தது ஒழுங்கா?’

‘பிராமணர்களை தேசீயக் கூட்டத்திலிருந்து விலக்கிவிட நாம் ஒரு நாளும் சம்மதிக்க முடியாது...’

என்பதும் மற்றும் இது போன்றதுகளும் எழுதி ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுகிறார்.

periyar unweiling bharathidasan photoஇவைகள் முழுவதும் வெறும் மிரட்டல்கள் என்று எல்லோரும் நினைப்பார்கள் என்பது ஸ்ரீ வரதராஜுவுலுக்கே தெரிந்திருந்தாலும் பார்ப்பனர்களை ஏமாற்றுவதற்காகவும், தான் இப்போது பார்ப்பனர்கள் கட்சிக்கே முழுதும் வந்து விட்டதாக பார்ப்பனர்கள் நினைக்க வேண்டும் என்றும் நினைக்கும் பேதமையானது இதையெல்லாம் எழுதச் செய்கின்றது. ஒரு ஒற்றை மனிதனின் வயிற்றுப் பிழைப்பு என்னவெல்லாம் செய்யத் துணிவு கொடுக்கின்றது என்பதை எடுத்துக் காட்டவே இவைகளை நாம் எழுதுகிறோம்.

ஜஸ்டிஸ் கட்சியாரால் தமிழ் மக்களுக்கு என்ன நோவு வந்திருக்கின்றது என்பதை முதலில் காட்டி பிறகு அக்கட்சியில் வந்த நோவுக்கு அக் கட்சியைக் காட்டிக் கொடுப்பாரானால் அது ஆண்மையும் யோக்கியமும் பொருந்தின காரியமாயிருக்கும். ஜஸ்டிஸ் கட்சி என்பதாக ஒரு இயக்கம் தமிழ் நாட்டில் இல்லாதிருந்திருக்குமானால் தமிழ் மக்களின் யோக்கியதை இது சமயம் என்னமாயிருக்கும் என்பதை யோசித்தால் ஒரு அறிவிலிக்கும் ஜஸ்டிஸ் கட்சியால் தமிழ் மக்களுக்கு நோய் உண்டாயிற்றா அல்லது ஸ்ரீவரதராஜுலு போன்றார் பார்ப்பன வால்களாயிருந்து கொண்டு பார்ப்பன ஆதிக்கத்திற்கு உள் உளவாயிருப்பதால் தமிழ் மக்களுக்கு சுயமரியாதை இல்லாததான நோய் உண்டாகிக் கொண்டு வந்திருந்ததா என்பது விளங்காமல் போகாது.

‘12 வருஷகாலமாக ஜஸ்டிஸ் கட்சியின் ‘நய வஞ்சகத்தை உடைத்தெறிய ஸ்ரீநாயுடு வேலை செய்தது’ என்பது வாஸ்தவமே. ஆனால் அது நாட்டின் நலத்திற்காகவா தனது சுயநலத்துக்காகவா என்பதை அறிய பொது ஜனங்களுக்கே விட்டு விடுகின்றோம். ஆனால் இவர் ஜஸ்டிஸ் கட்சியை வைது அதற்காக பார்ப்பனரிடம் கூலி வாங்கிக் கொண்டதல்லாமல் ஜஸ்டிஸ் கட்சியின் மீது ஒட்டிய ஒரு சிறு தூசியையாவது அசைக்க முடிந்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும் அக்கட்சி ஒன்று இல்லாதிருந்தால் ஸ்ரீவரதராஜுலுவை பூதக்கண்ணாடி கொண்டாவது காண முடியுமா என்று கேட்கின்றோம்.

“நாயக்கர் பிரசாரம் இப்படியே இருந்தால் அடுத்த தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி இருந்த இடம் தெரியாமல் போய்விடு”மாம். போன தேர்தலில் ஸ்ரீவரதராஜுலுவும் அவர்கள் தலைவர்களும் சேர்ந்தே ஒரு கை பார்த்தார்கள். தமிழ் நாட்டில் இந்த ஒன்றரை வருஷமாய் ஜஸ்டிஸ் கட்சியை எவ்வளவு தூரம் இருந்த இடம் தெரியாமல் செய்து விட இவர்களால் முடிந்தது என்பதையும் பொது ஜனங்களே யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம். ஸ்ரீ வரதராஜுலு போன்றவர்கள் இருந்த இடம் தெரிய காங்கிரசில் சிலர் ராஜீனாமா கொடுத்து விட்டு ஜஸ்டிஸ் கட்சிக்கு விண்ணப்பம் போட நேர்ந்ததும் அதை அவர்கள் தள்ளும்படி செய்ததும் பொது ஜனங்களுக்குத் தெரியுமா தெரியாதா என்று கேட்கின்றோம். தவிர நாயக்கர் பிரசாரத்தைக் கண்டு பயந்து ஜஸ்டிஸ் கட்சியை மிரட்டுவது எவ்வளவு இழி தன்மை என்பதையும் யோசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

“தேசீய முற்போக்குக்கு ஜஸ்டிஸ் கட்சி முட்டுக்கட்டையாயிருக்கின்றது” என்று சொல்வது. தேசீயம் என்றால் என்ன? அதற்காக யார் எந்த விதமான பிரசாரம் செய்கிறார்கள்? அதனால் ஏற்பட்ட பலன் என்ன? என்பதைப் பற்றி ‘குடி அரசு’ சுமார் ஒரு நூறு இருநூறு தடவை ஸ்ரீ வரதராஜுலு போன்ற வயிற்றுப் பிழைப்பு தேசீய வீரர்களை கேட்டிருக்கும். ஆனால் நாளிது வரை ஸ்ரீ வரதராஜுலுவாவது மற்றும் எந்தப் பார்ப்பனராவது தேசீயத்திற்கு வியாக்யானம் சொன்னவர்கள் அல்ல. அப்படியிருக்க ஜஸ்டிஸ் கட்சி தேசீயத்திற்கு முட்டுக்கட்டை என்பது ஏமாற்றுப் பிரசாரமா அல்லவா? என்று கேட்கின்றோம்.

“ஒரு சட்ட மெம்பர் பதவிக்கு தேசத்துரோகம் செய்தது” என்பது. இதைப் பற்றி இதே மாதிரி பார்ப்பனர்களும் ஸ்ரீவரதராஜுலுவும் இதற்கு முன்னால் போட்ட கூப்பாட்டிற்கு நீண்ட பதில் எழுதியிருக்கிறோம். அதற்கு சமாதானம் சொல்லாமல் மறுபடியும் அதை எழுதுவது பொது ஜனங்கள் பைத்தியக்காரர்கள் என்கின்ற எண்ணமே ஒழிய வேறு என்ன என்று கேட்கின்றோம்.

ஸ்ரீகிருஷ்ணன் நாயர் சட்ட மெம்பர் பதவி ஒப்புக் கொண்டதில் தேசத் துரோகம் என்ன என்றும் திரு. சர் சிவசாமி, சர்.சி.பி. சர். கிருஷ்ணசாமி,  சர். ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீவெங்கட்டறாம சாஸ்திரி ஆகியவர்கள் ஒப்புக் கொண்டதில் உள்ள தேச பக்தி என்ன என்றும் எடுத்துக்காட்ட விரும்புகிறோம். அப்படிக்கில்லாமல் தேசத்துரோகம் என்று எழுதுவது வயிற்றுப் பிழைப்புக்காகச் செய்யும் இனத் துரோகமேயல்லாமல் வேறு என்ன என்று கேட்கின்றோம்.

“பிராமணர்களை விலக்க முடியாது” என்பது ஸ்ரீவரதராஜுலுவைப் பார்ப்பனர்கள் சேர்க்காவிட்டாலும், ஸ்ரீவரதராஜுலுவின் ஆயுள் வரை வரதராஜுலு பார்ப்பனர்களை விட முடியாது என்பது பார்ப்பனர்கள் உள்பட எல்லோருக்கும் தெரிந்த விஷயமே. ஆதலால் அதில் ஒன்றும் அதிசயமில்லை என்றே சொல்லுவோம்.

எனவே ஸ்ரீ வரதராஜுலுவின் இவ்வாக்கியங்களிலிருந்து அவர் எவ்வளவு தூரம் தனது சமூகத்தாரின் கேட்டுக்குத் தயாராயிருக்கிறார் என்பது முதலியவைகளை விளக்கவே இதை எழுதுகிறோமேயல்லாமல் மற்றபடி இவரது இம்மாதிரி பிரசாரத்தில் ஏதாவது விளைந்து விடுமோ என்கின்ற பயத்தினால் நாம் இதற்கு சமாதானம் எழுதவரவில்லை என்பதையும் தெரிவிக்கின்றோம்.

(குடி அரசு - கட்டுரை - 29.04.1928)

Pin It