தேசீயத்திற்கு விரோதமாக சுயமரியாதைப் பிரசாரம் நடப்பதாகவும், ஆதலால் “ரத்தம் சிந்தியாவது, தேசபக்தர்கள் புற்றீசல்களைப் போல் உயிர் துறந்தாவது, சுயமரியாதைப் பிரசாரத்தை ஒடுக்கி விட வேண்டும்” என்றும், “அதற்காக பல ஆயிரம் ரூபாய்கள் காங்கிரஸ் நிதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றது” என்றும் ‘தமிழ்நாடு’ பத்திரிகை எழுதி இருக்கின்றது. மற்றபடி பார்ப்பனப் பத்திரிகைகளோ ஒன்று சேர்ந்து இவ்விஷயத்தில் எதிர் பிரசாரம் செய்ய ஸ்ரீ வரதராஜுலுக்கே வக்காலத்து கொடுத்துவிட்டு, யாவருக்கும் தெரியாமல் அடுத்த தேர்தலில் பார்ப்பனரல்லாதார் கக்ஷியைத் தோற்கடிக்க இரகசியமாக ஜஸ்டிஸ் கக்ஷியைப் பற்றியும், மந்திரிகளைப் பற்றியும், சட்டமெம்பரைப் பற்றியும் குறைகூறி விஷமப் பிரசாரம் செய்து கொண்டிருக்கின்றன.

kamarajar and periyarபார்ப்பனர்கள் இஷ்டப்படியும், அவர்களது கூலிகளின் ஆசைப்படியும் அடுத்த தேர்தலிலும் ஜஸ்டிஸ் கக்ஷி தோல்வியடைந்து மந்திரி பதவி வகிப்பதற்கு தகுதியில்லாமல் போய் விட்டாலுங்கூட, உண்மையிலேயே நாம் ஒரு சிறிதும் கவலைப்பட மாட்டோம். ஏனெனில் அக்கக்ஷியானது ஆறு வருஷ காலம் மந்திரிப் பதவி ஏற்று அதிகாரத்தில் இருந்த காலத்தில் எவ்வளவு நன்மை அடைய முடிந்ததோ, அதைவிட பலமடங்கு அதிகமாகவே அக்கட்சி வேலையின் பயனாக பார்ப்பனரல்லாத சமூகம் நன்மையையும் விழிப்பையும், சுயமரியாதை உணர்ச்சியையும் அடைந்திருக்கின்றது என்றே தைரியமாய்ச் சொல்லுவோம். அது போலவே இனியும் ஒரு மூன்று வருஷ காலத்திற்காவது அக்கக்ஷி மந்திரி முதலிய அதிகார பதவியில் இல்லாமல் இப்போது இருப்பதுபோல் மந்திரிகளையும், சர்க்காரையும் ஆட்டிக் கொண்டு இருக்கும் நிலைமையில் இருக்குமானால், பார்ப்பனரல்லாதாருக்குள் இன்னும் அதிகமான உணர்ச்சி ஏற்படும் என்பதே நமது துணிபு.

உதாரணமாக, திரு.ஏ.ராமசாமி முதலியார் அவர்களுக்கு சட்டசபை ஸ்தானம் கிடைக்கக்கூடாது என்று கருதி திரு. சீனிவாசய்யங்கார் பந்தயங்கூறி தனது கூலிகளை விட்டு எவ்வளவோ விஷமப் பிரசாரங்களும், சூழ்ச்சிகளும் செய்து தங்கள் கருத்துப்படியே திரு. முதலியாரை தோற்கடித்து தாங்கள் வெற்றி பெற்று விட்டார்கள். ஆயினும் அத்தோல்வியின் பயனாக திரு. முதலியார் சட்டசபையிலிருந்து எவ்வளவு தூரம் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் நன்மைக்கு உழைக்கக் கூடுமோ, அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமாக உழைத்து நன்மை செய்ய முடிந்தது.

உதாரணமாக 1200 பிரதி மாத்திரம் வெளியாகிக் கொண்டு தூங்கிக் கிடந்த ‘ஜஸ்டிஸ்’ பத்திரிகையை 4000 பிரதிக்கு மேலாக வெளியாக்கி தமிழ்நாட்டையே ஆட்டி வைக்க முடிந்தது; பார்ப்பனரல்லாத வாலிபர்களையெல்லாம் தட்டி எழுப்ப முடிந்தது. பார்ப்பனக் கொடுமையை வெளி மாகாணத்திற்கெல்லாம் வெளிப்படுத்த முடிந்தது. பார்ப்பனர்களின் அரசியல் புரட்டுகளையும் அரசாங்கம் பார்ப்பனர்களுக்கு அடிமைபட்டுக் கிடந்ததையும் பார்ப்பனர்கள் தேசீயத்தின் பேரால் அரசாங்கத்திற்கு உளவாய் இருக்கிறதையும் வெளியாக்க முடிந்தது. பார்ப்பனரல்லா பாமர மக்களும் பார்ப்பனர்களுடையவும் அவர்களது கூலிகளுடையவும் வயிற்றுப் பிழைப்புத் தேசீயத்தின் யோக்கியதையை உணர முடிந்தது! மற்றும் எவ்வளவோ நன்மைகளும் ஏற்பட்டிருக்கின்றன. அது போலவே திரு. பனக்கால் அரசருக்கும் மந்திரி பதவி இல்லாததால் எவ்வளவு நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் பற்றியும் நாம் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.

முதலாவதாக, பனக்கால் அரசர், மந்திரி ஆகாத காரணத்தினாலேயே பார்ப்பனர்களின் தேசீயத்தையும், காங்கிரஸ் கொள்கையையும், சுயராஜ்ஜியக் கட்சியின் யோக்கியதையையும், அவர்களது முட்டுக்கட்டையின் தத்துவத்தையும் வெளியாக்க முடிந்ததுடன் ஜஸ்டிஸ் கட்க்ஷியாகிய பார்ப்பனரல்லாதார் கக்ஷியை ஒழிப்பதுதான் காங்கிரஸ் கொள்கை என்பதை காங்கிரஸ்காரர்களின் வாயாலேயே ஒப்புக் கொள்ளச் செய்ததையும், பொது ஜனங்கள் உணர முடிந்ததுடன் காங்கிரஸ் என்பதே பார்ப்பனர் பிழைப்புக்கு ஏற்பட்ட சாதனங்களில் ஒன்று என்பதையும் மக்கள் உணர முடிந்தது. தவிரவும் பனகால் அரசர் சட்டசபை அங்கத்தினர் பதவிகூட அடைய முடியாமல் போயிருந்திருக்குமானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் இனியும் சற்று முன்னேற்றம் அடைந்திருக்கக் கூடும் என்று கூடச் சொல்லுவோம். இதை இப்போது மாத்திரம் சொல்ல வரவில்லை. சென்ற தேர்தலின் போதே நாம் எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதாவது “பனக்கால் அரசர் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதில், பார்ப்பனர்கள் பனக்கால் அரசர் சட்டசபை அங்கத்தினராகக் கூடாது என்று எவ்வளவோ முயற்சிகள் செய்து பார்த்தும் பலிக்காமல் தோல்வி அடைந்தார்கள் என்கின்ற ஒரு விஷயத்திற்காக மாத்திரம் நாம் மகிழ்ச்சியடைகின்றோமே யல்லாமல் மற்றபடி பனக்கால் அரசரின் தோல்வியே நமக்கு நல்ல பலனை அளிக்கும்” என்று பேசியும் எழுதியும் இருக்கிறோம்.

அது போலவே வரப்போகும் தேர்தலிலும் திரு. ராமசாமி முதலியாரும், பனக்கால் அரசரும் தோல்வியடைவார்களானால் அது பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு எவ்வளவோ வெற்றியளிக்குமே தவிர எவ்விதத்திலும் இடையூறு செய்து விடாது என்று சொல்லுவோம். இது “சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று சொல்லும் தத்துவத்தில் சொல்லுவதல்ல என்றும், உண்மையாகவும் அனுபவத்தைக் கொண்டுமே தான் சொல்லுகின்றோம் என்றும் முன்னமேயே நாம் சொன்னது என்றும் வாசகர்கள் உணர்வார்களாக.

நிற்க, தேசீயம் என்பது என்ன என்பது பற்றியும், சிலர் கூப்பாடு போடுவது போல சுயமரியாதைப் பிரசாரத்தால் அந்த தேசீயம் எப்படி தடைப்படுத்தப்படுகின்றது என்பது பற்றியும் சற்று ஆராய்வோம். தேசீயம் என்கின்ற பதத்திற்கு என்ன பொருள் என்பதை முதலில் ஆராய்வோம்.

முதல் முதலில் ஆங்கிலத்தில் இருந்துதான் இந்த வார்த்தையை நமது மக்கள் பேசத் தெரிந்து கொண்டார்கள். அதாவது ஆங்கிலத்தில் நேஷன், நேஷனல், நேஷனலிசம் என்கின்ற பதங்களின் பொருள்களே தான் தேசம், தேசத்திற்குரியது, தேசீயம் என்கின்ற பதங்களாகும். அதாவது ஒரு குறிப்பிட்ட தேச சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்த விஷயங்களையே தான் பெரிதும் குறிப்பிடுகின்ற முறையில் அவ்வார்த்தை ஏற்படுத்தப்பட்டதே ஒழிய வேறில்லை. அந்த முறையில் இந்திய தேசீயம் என்பது இந்திய சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்ததாகும். இப்பொழுது அரசியல் உலகில் பெரும்பாலும் பிரஸ்தாபிக்கப்படும் தேசீயம் என்கின்ற பதத்தில் தேச சமூகத்தின் சுயமரியாதையைப் பொருத்ததோ, நன்மையைப் பொருத்ததோவான கருத்துக்கள் ஏதாவது பொதிந்து கிடக்கின்றனவா என்று பார்த்தால் தேசீயம் என்கின்ற பதம் உண்மையான பொருளில் உபயோகப் படுத்தப்படுகின்றதா என்பது நன்கு விளங்கும்.

தவிர, தமிழ் நாட்டைப் பொருத்தவரை யாராவது தேசீயம் என்பதை எடுத்துக் கொண்டால் தமிழ் மக்களுடைய சுயமரியாதையைப் பற்றியோ நன்மையைப் பற்றியோ ஏதாவது கவலை எடுத்துக் கொள்ளத்தக்க குறிப்பு அதில் இருக்கின்றதா என்பதும் மிகுதியும் கவனிக்கத்தக்கதாகும். எனவே இவ்விரண்டும் அதாவது இந்திய மக்கள் சமூகத்தைப் பற்றியும், தமிழ் மக்களின் சமூகத்தைப் பற்றியும், சுயமரியாதையைப் பற்றியும், சீர்திருத்தத்தைப் பற்றியும் ஒரு சிறிது கவலையும் இல்லாது தேசீயம் என்கின்ற வெறும் வார்த்தையை மாத்திரம் பாமர மக்கள் ஏமாறும் மாதிரி உச்சரித்துக் கொண்டு சிலரின் உத்தியோகத்திற்கும், சிலரின் வயிற்றுப் பிழைப்புக்கும் உபயோகித்துக் கொண்டு, உண்மையான தேசீயமாகிய சுயமரியாதையைப் பற்றிக் கவலை எடுத்துக் கொண்டிருக்கும் இயக்கங்களையும் குறை கூறிக்கொண்டு “சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டியது தேசீயத்தின் கடமை” என்று சொல்வதில் எவ்வளவு தேசீயத் துரோகம் இருக்கின்றது என்பதை பொது மக்களையே யோசித்துப் பார்க்கும்படி வேண்டுகின்றோம்.

பொதுவாக ஒரு சிறு கூட்டத்தார் பிழைக்கவே அவர்களது சுலநலத்திற்காகவே தேசீயம் என்கின்ற வார்த்தையை உண்டாக்கிக் கொண்டிருப்பதாக சொல்வதில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பது இங்கு கவனிக்க வேண்டும். தேசீயம் என்கின்ற வார்த்தையோ, தேசீயம் என்கின்ற இயக்கமோ நமது நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்றைக்கு சுமார் 40 வருஷங்களுக்கு மேலாகின்றது. இந்த இயக்கம் ஏற்பட்ட பிறகுதான் இதன் பயனாக நமது அரசியல் உத்தியோகங்கள் ஏராளமாக உண்டாக்கப்பட்டதும், அதை நம் நாட்டுப் பார்ப்பனராகிய ஒரு கூட்டத்தாரே ஏக போகமாய் அனுபவிப்பதுமான நிலைமை ஏற்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

தேசீய இயக்கம் (காங்கிரசு) ஏற்படுவதற்கு முன் நிர்வாக சபை மெம்பர்கள் (மந்திரிகள்) இருவர்களும் ஐகோர்ட்டு ஜட்ஜிகள் ஐவருமாக இருந்தார்கள். தேசீய இயக்கத்தின் (காங்கிரசின்) பயனாக இப்பொழுது நிர்வாக சபை மெம்பர்கள் (மந்திரிகள்) எழுவரும் ஐகோர்ட் ஜட்ஜுகள் பதி நால்வரும் இருக்கின்றார்கள். இது போலவே கிராமத் தலையாரி வரையிலும் உத்தியோகங்கள் பெருகிக் கொண்டே வந்திருப்பதுடன் அவ்வுத்தியோகங்களுக்கு சம்பளங்களும் ஏராளமாய் பெருகிக் கொண்டே வந்து தேசீய இயக்கம் ஏற்படுவதற்கு முன் இந்தியா முழுமைக்கும் 40 அல்லது 50 கோடி ரூபாய்க்குள் இருந்த சர்க்கார் வரியானது தேசீயம் ஏற்பட்டதின் பயனாகவும் அதனால் உண்டான உத்தியோகங்களின் பயனாகவும் அவைகளுக்கு உயர்ந்த சம்பளங்களின் பயனாகவும் இன்றைய தினம் 150 கோடியாக வரி உயர்ந்து ஏழை இந்தியக் குடியானவர்கள் தலையிலும், வியாபாரிகள் தலையிலும் மற்றும் பொது ஜனங்கள் தலையிலும் பளுவு ஏற்பட்டிருக்கின்றது. இதை நாளிது வரை எந்த ‘தேசீயவாதி’யாவது ‘தேசீய நிபுண’ராவது மறுத்தார்களா? என்று கேட்கின்றோம்.

இம்மாதிரி வரிப்பளுவு 40 கோடியில் இருந்து 150 கோடி ஆனதின் பயனாக இந்த “தேசீயத் தலைவர்”களுக்காவது மற்றும் அவர்கள் காலை நக்கிப் பிழைக்கும் வயிற்றுச் சோற்று “தேசீய வீரர்”களுக்காவது ஒரு புதுக் கோட்டை அம்மன் காசு பெறுமான நஷ்டமுண்டா என்று கேட்கின்றோம்.

இந்த பார்ப்பனத் தேசீயத்தின் பலனாகவும், அவர்களது கூலி தேசீயத்தின் பலனாகவும் ஏற்பட்ட உத்தியோகங்களில் அதன் செலவின் பளு முழுவதையும் பொறுக்கும் பார்ப்பனரல்லாதாரில் யாராவது சிலர் தங்கள் வகுப்பாருக்கும் சில உத்தியோகங்கள் ஏன் கொடுக்கப்படக் கூடாது என்று கேட்டால், அது பெரிய தேசத்துரோகம் என்று சொல்லப்பட்டு வருகின்றது. இது பார்ப்பனர்களால் மாத்திரமல்லாமல், அவர்களது கூலிகளாகிய பார்ப்பனரல்லாதார்களில் சிலராலும் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த அறிவிலிகள் - இனத்துரோகிகள் - தேசீயம் என்பதின் பொருள் தெரியாமல் உளறுகிறார்கள் என்றருத்தமா, அல்லது தெரிந்தும் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டி இப்படிச் சொல்லுகின்றார்களா? என்பதை பொது மக்களே யோசித்துக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகிறோம்.

நமது நாட்டின், நமது சமூகத்தின், சுயமரியாதைக்கு நிரந்தர விரோதிகளாய் இருக்கும் பார்ப்பனர்களுக்கும் அவர்களை நத்தி தன் இனத்தைக் காட்டிக் கொடுத்து வாழும் சுயநலக்காரருக்கும் எப்படியாவது சுயமரியாதை உணர்ச்சி என்னும் தேசீயத்தில் கவலை இருக்க முடியுமா என்று கேட்கின்றோம்.

பார்ப்பனர்கள் “இத்தனையாம் தேதியில் உங்கள் தகப்பனாருக்கு திதி வருகின்றது தயாராயிருங்கள்” என்று சொல்வதில் நமது பெற்றோர்களைப் பற்றி எவ்வளவு தூரம் அவர்களுக்கு கவலை இருக்க முடியுமோ, ரயில்வேக் காரன் “இன்ன மாதம் இன்ன தேதியில் சிதம்பரத்தில் ஆருத்திரா தரிசனம் வருகின்றது; எல்லோரும் போய்ப் பார்த்து மோக்ஷமடையுங்கள்” என்று ரயில்வே கைய்டிலும் பணம் கொடுத்து வேறு பத்திரிகையிலும் விளம்பரப் படுத்துவதில் நாம் மோக்ஷமடைவதில் அவனுக்கு எவ்வளவு நம்பிக்கையும் கவலையும் இருக்குமோ அவ்வளவு கவலைதான் இந்தப் பார்ப்பனர்களுக் கும் அவர்களது கூலிகளுக்கும் நமது தேசீயத்தைப் பற்றி பிரசாரம் செய்வதிலும் பத்திரிகைகளில் எழுதுவதிலும் இருக்கும் என்று நாம் நினைப்பதில் ஏதாவது கடுகளவாவது பிசகு உண்டா என்று கேட்கின்றோம்.

எனவே சிலரின் சுய நன்மைக்கும் வயிற்றுப் பிழைப்புக்கும் ஏற்படுத்திக் கொண்ட ‘தேசீயத்திற்கு’ இனியும் எத்தனை காலம் நமது மக்கள் ஏமாறுவது என்பது இப்போது முக்கியமாய் யோசிக்கத்தக்க விஷயமாகும். நமக்கு கடுகளவாவது சுயமரியாதை உணர்ச்சி வந்து இருக்கின்றது என்று நாம் சொல்லிக் கொள்ள விரும்பினால் நமது தேசத்தை விட்டு - குறைந்தது நமது தமிழ்நாட்டை விட்டாவது - தேசீயப் புரட்டை ஒழிக்க முற்பட்டோமா? என்பதை ஒவ்வொருவரும் தம்தம் நெஞ்சில் கையை வைத்துப் பார்க்க வேண்டுமாய் விரும்புகிறோம்.

பொதுவாக நமது நாட்டு மக்களின் உண்மையான தேசீயத்திற்கு அதாவது சுயமரியாதைக்கு எமனாய் இருப்பது, இந்தப் போலி - நாட்டைக் காட்டிக் கொடுத்து வரும் - கூட்டத்தாரின் உத்தியோகக் கற்பனையும் இனத்தை காட்டிக் கொடுத்து வாழும் ஒரு சிலரின் தேசீய வேஷமுமேயாகும் என்று கோபுரத்தின் மீதிருந்தும் கூவுவோம். இந்த போலி சுயநல வயிற்றுப் பிழைப்பு தேசீயத்தை வெட்டி வீழ்த்தினாலல்லது மக்கள் சுயமரியாதை அடைந்து ஏழைகள் வாழ முடியும் என்பது ஒருக்காலும் முடியாத காரியம் என்றே சொல்லுவோம்.

‘மோக்ஷமும்’ ‘பக்தியும்’ ‘மதமும்’ எப்படி ஒரு சமூகத்தைப் பிரித்து சின்னாபின்னப்படுத்தி நிரந்தர முட்டாள்களாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மனிதத் தன்மை அற்றவர்களாகவும் செய்து விடுகின்றதோ, அது போலவே இந்த ‘தேசீயமும்’ நாட்டையும் மக்களையும் பிரித்து ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்து ஏழைகளையும் குடியானவர்களையும் வதைத்து மீளாத் தரித்திரத்தில் ஆழ்த்தி மனச்சாக்ஷியை இழந்து சுயமரியாதையற்று வாழச் செய்கின்றது. எனவே நமது சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய கொள்கைகளில் இந்த போலி தேசீயத்தை வெளியாக்கி வயிற்றுப் பிழைப்பு தேசீயவாதிகளை ஒழிப்பதும் ஒரு முக்கிய கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்பதை உண்மைச் சுயமரியாதை வீரர்களுக்கும் தொண்டர்களுக்கும் அறிவுறுத்துகின்றோம்.

(குடி அரசு - தலையங்கம் - 06.05.1928)

Pin It