சுமார் ஐந்து ஆறு மாதங்களாய் நாம் தெரிவித்து கொண்டு வந்தபடிக்கு ‘திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் சென்னைக்குச் செல்லுகிறோம்.

பார்ப்பனரல்லாதார் நன்மையையும் சுயமரியாதையையும் முன்னிட்டு ‘திராவிடன்’ பத்திரிகையையும் ஏற்று நடத்த வேண்டும் என்று நம்மை பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சில முக்கிய தலைவர்களுக்கும் தோன்றிற்று. இதன் பயனாக நாம் மகா ஜனங்களையும் அபிப்பிராயம் கேட்டதில் அவர்களும் பெரும்பான்மையோர்கள் அந்தப்படியே கட்டளை இட்டார்கள் . அன்றியும் பல பிரபுக்களும் வேண்டிய சகாயம் செய்வதாக வாக்களித்து ஏற்றுக் கொள்ளும்படியாகவே வற்புறுத்தினார்கள் . எனவே சென்னைக்கு செல்லுகின்றோம்.

periyar 540இதைப் பற்றி இந்த சமயத்தில் இரண்டொரு வார்த்தைகள் தெரியப்படுத்த வேண்டியது அவசியமெனக் கருதி வெளியிடுகிறோம். முதலாவது ஏற்கனவே தமிழ் நாட்டில் 2, 3 தமிழ் தினசரிகள் இருக்கும்போது ‘திராவிடன்’ என்கிற தினசரி பத்திரிகை ஒன்று நமக்கு வேண்டுமா? தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகளையும் ஆதரிப்பார்களா? என்பது முக்கியமானது.

தமிழ் நாட்டில் எத்தனையோ தினசரி பத்திரிகைகள் இருந்தாலும் மற்ற சமூகத்தாருக்கு இருப்பது போல பார்ப்பனரல்லாதாராகிய 3 1/2 கோடி மக்களின் நலத்தையே பிரதானமாய் கருதி உழைக்கும் தினசரி பத்திரிகை நமக்கு ‘திராவிடனை’ விட வேறு இல்லை என்றே சொல்லவேண்டி இருக்கிறது. அதாவது பார்ப்பனர்களால் நடத்தப்படும் இரண்டு தினசரிகள் கண்டிப்பாய் பார்ப்பன நன்மைக்காகவே, பார்ப்பனர்கள் நன்மைக்கான கொள்கைகளுடனேயே நடைபெற்று வருகிறதுமல்லாமல் அதுவே தமிழ் நாட்டுமக்களின் அபிப்பிராயமென்று ஜனங்கள் ஏமாறும்படி நடத்தப்படுகின்றன என்பதும் யாவரும் அறிந்ததே. பார்ப்பனரல்லாதாரால் நடத்தப்படும் ஒரு தினசரியும் பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்தில் கருத்தும் கவலையும் இருப்பதாக கண்டாலும் பார்ப்பனக் கொடுமைகளைத் தாராளமாய் கண்டிப்பதானாலும் அதன் அரசியல் கொள்கை பார்ப்பனரல்லாதாரை ஒரு நாளும் தலையெடுக்க ஒட்டாததாகவும் பார்ப்பனர்களிடமிருந்து தப்ப முடியாததாகவுமே இருக்கிறது.

இந்த விஷயத்தில் பார்ப்பன பத்திரிகைகளுக்கும் மற்றும் அநேக பார்ப்பனரல்லாத வாரப் பத்திரிகைகளுக்கும் ஒரு சிறிதும் வித்தியாசமில்லை. தவிர தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகள் இருக்கும்போது இதையும் ஆதரிப்பார்களா என்றால் ஆதரித்துதான் ஆக வேண்டும். ஒரு சமயம் ஆதரிக்காவிட்டாலும் தமிழ் மக்களுக்கு இதை ஆதரிக்கும் புத்தி வரும்வரை எவ்வளவு கஷ்ட நஷ்டங்கள் ஏற்பட்டாலும் நடத்திதான் தீர வேண்டிய நிலையிலிருக்கிறோம். இல்லாதவரை தமிழ் மக்கள் மீளுவதற்கு வேறு மார்க்கம் இல்லை என்றே சொல்லுவோம்.

ஆனால் இது கஷ்டமான வேலை என்பது நமக்கு நன்றாய் தெரிகிறது.

ஒரு வேலையும் செய்யாமல் “வருக, வருக, மகாத்மா வருக, மகாத்மாவுக்கு ஜே!” என்று சொல்லிவிட்டு மகாத்மாவின் பார்ப்பன பிரசாரத்தையும் போட்டு விட்டு சும்மா இருந்தாலே ஓட்டு கிடைத்து விடும், பத்திரிகையும் தாராளமாய் செலவாகும், மேடைகளிலும் பேச இடமும் கிடைக்கும். அதோடு மகாத்மா பேட்டியுடன் ‘யங் இந்தியா’விலும் ‘நவஜீவனி’லும் கூட இடமும் கிடைத்து விடும். இது மிகவும் சுலபமான வேலைதான். இவைகளில் நமது மக்களுக்கு என்ன பலன் உண்டாகும் என்பதுதான் நமது கேள்வி. ஆகையினாலேதான் இது சமயம் சற்று நஷ்டமாயிருந்தாலும் பலனுள்ள வேலையை செய்ய வேண்டியிருக்கிறது.

கொள்கைகள்

 “திராவிடன்” கொள்கைகள் “குடி அரசு”க் கொள்கைப்படியே தானிருக்கும். ‘குடி அரசி’ன் கொள்கைகள் யாவரும் அறிந்திருப்பார்களென்றே நினைக்கிறோம். அதாவது: பார்ப்பனரல்லாதாரை அழுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்த பார்ப்பனர்களுக்கு நமது நாட்டில் ஆயுதங்களாக இருக்கும் அரசியல் புரட்டையும் மதப் புரட்டையும் அடியோடு அழிப்பதுடன், பார்ப்பனீயத்தை ஒழித்து மக்களுக்கு சுயமரியாதை உண்டாகும்படி செய்வது என்பது தான். இதற்குத் ‘திராவிடன்’ சொந்தக்காரர்கள் சம்மதிக்காதபோது நாம் விலகி விடுவோம் என்பது உறுதி. இது சமயம் இந்தக் கொள்கையை ஒப்புக்கொள்ளவோ ஆதரிக்கவோ நமது நாட்டில் ஒரு குட்டித் தலைவராவது இல்லை. ஒரு குட்டிப் பத்திரிகையாவது இல்லை. ஆனாலும் நாம் அதற்காக பயப்படவில்லை. ஏனெனில் இக்காரியங்கள் நடைபெறாமல் போனால் நமது பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மாத்திரமல்லாமல் இந்தியாவுக்கே சுயமரியாதையும் விடுதலையும் ஒருக்காலும் ஏற்படப் போவதில்லை என்பதே நமது முடிவு. பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தாரும் அவர்களது பத்திரிகைகளாகிய ‘ஜஸ்டிஸ்’ ‘திராவிடன்’ பத்திரிகைகளுங் கூட இக் கொள்கைகளைப் பொறுத்தவரையில் நம்மிடம் சிறிது அபிப்பிராய பேதம் கொண்டிருப்பதும் நமக்குத் தெரியும்.

நம்மிடம் ‘திராவிடன்’ ஒப்புவிக்கப்பட்டால் இக்கொள்கைகளுடன் தான் அது நடத்தப்பெறும் என்பதாக அவர்களுக்கும் இப்போதே சொல்லி விடுகிறோம். அரை நூற்றாண்டாக அநேக இந்திய மேதாவிகளால் உண்டாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் அரசியலை, குற்றம் சொல்வதும் ஆயிரக்கணக்கான வருஷங்களாய் ரிஷிகளாலும், முனிவர்களாலும், கடவுள் அவதாரங்களாலும் உண்டாக்கப்பட்டதாய்ச் சொல்லப்படும் - மகாத்மா காந்தியாலும் கூட சொல்லப்படும் - மத இயலைக் குற்றம் சொல்வதும் இரத்தத்திலும், நரம்புகளிலும், எலும்புகளிலும், சதையிலும் ஊறிக் கலந்து இருக்கும் இவ்விஷயங்களைக் குற்றம் சொல்லி மக்களை திருப்புவது என்பது ஒருக்காலும் சுலபமான காரியமென்று சொல்ல முடியாது. அன்றியும் தற்போது எல்லாத் துறைகளின் ஆதிக்கத்திலும் அதிகாரத்திலும் இருக்கும் பார்ப்பனீயத்தை ஒழிப்பது என்பது இவற்றையெல்லாம் விட அதிகமான கஷ்டமென்பதும் நாம் சொல்லாமலே விளங்கும். இதற்கு ஆதாரமாக மகாத்மா காந்தியினாலேயே ‘பார்ப்பனீயமில்லாதவர்’ என்று மதிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் ஒருசமயம் சொன்ன வார்த்தைகளைக் குறிப்பிடுகிறோம்.

“பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அநேக பெரியவர்களாலும், சித்தர்களாலும், சமணர்களாலும், புத்தர்களாலும் எவ்வளவோ பாடுபட்டாய் விட்டது. மற்றும் மகமதிய அரசாங்கத்தாராலும் எவ்வளவோ பாடுபட்டு பார்த்தாய் விட்டது. இதனால் இவ்வளவு பேரும் தோற்றார்களேயொழிய ஒருவரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் ஒருவனுடைய முயற்சி எம்மாத்திரம்?” என்று சொல்லி பரிகாசம் செய்தார்.

இந்த வார்த்தைகள் வாஸ்தவமாக இருந்தாலும் இருக்கலாம். அது போலவே நமது முயற்சியும் வெற்றி பெறாமல் தோல்வியும் உறலாம். ஆனாலும் ஒன்று மாத்திரம் சொல்லுவோம். என்னவெனில் இம்முயற்சிகள் வெற்றி பெறாமல் நமது நாட்டுக்கும் சமூகத்துக்கும் விடுதலை இல்லை என்பதை மாத்திரம் மறுபடியும் உறுதியாய்ச் சொல்லுகிறோம். எனவே நமக்குச் சரி என்றுபட்ட வழியில் உழைக்க வேண்டியது நமது கடமையேயல்லாமல் வெற்றி, தோல்வி என்பவைகளைப் பற்றி முடிவு செய்து கொள்ள வேண்டியது நமது கடமையல்ல.

தற்சமயம் திராவிடனுக்கு பத்திராதிபராயிருக்கும் ஸ்ரீ கண்ணப்பர் இதே கொள்கைகளை உடையவர் என்பதே நமது அபிப்ராயம். அவர் பல வருஷங்களாக எவ்வளவோ கஷ்டங்களுக்கிடையில் நமது சமூக முன்னேற்றத்தையே பிரதானமாகக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்திருக்கிறார். இனியும் அவரேதான் பத்திரிகை விஷயத்தில் நமது முக்கிய துணைவராயிருந்து நம்மை நடத்துவிக்கப் போகிறார். ஆதலால் அவரது தொடர்பு பத்திரிகையின் பிரதான ஸ்தானத்தில் இருந்து கொண்டுதானிருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நாம் ‘திராவிடனு’க்குப் போவதால் ‘குடி அரசு’ என்ன ஆகுமோ என்பதைப் பற்றி அநேகருக்கு பெருங் கவலை ஏற்பட்டிருக்கிறது. ‘திராவிடனை’ விட ‘குடி அரசையே’ நாம் பிரதானமாகக் கருதுகிறோம் என்பதை நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ளுகிறோம். அதைப் பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

கோயமுத்தூர் மகாநாட்டுத் தீர்மானத்தின் பலனாய் நமது இயக்கத்திற்கு சற்று ஆட்டம் கொடுத்து விட்டதுடன் இது விஷயத்தில் மக்களுக்கு சிறிது ஊக்கமும் குறைந்து இருக்கிறது என்பதும் நமக்கு நன்றாய் தெரிகிறது. நல்ல சமயத்தை கோயமுத்தூர் தீர்மானங்கள் பாழ்படுத்தி விட்டது என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான். அப்பொழுதே நமது இயக்கத்தில் உண்மையான அன்புள்ளவர்களெல்லாம் இந்த விஷயத்தை தீர்க்கத்தரிசிகள் போலவே எடுத்துச் சொன்னார்கள் . சொல்லியும் சிலருடைய சுயநலமும், அவர்களிடத்தில் நமக்கு ஏற்பட்ட பரிதாபமும், நமது பலக் குறைவும் அதுசமயம் நம்மை சும்மா இருக்கச் செய்து விட்டது.

மூன்று மாதத்தில் எவ்வளவோ காரியத்தை சாதித்து விடுவதாக வீரப்பிரதாபம் பேசியவர்கள் இன்று இருக்குமிடம் தெரியாமல் இருந்து வருகிறார்கள் . இவர்கள் எந்த ஊர்களுக்குப் போனார்கள்? எத்தனை மெம்பர்களைக் காங்கிரசுக்கு சேர்த்தார்கள்? காங்கிரசில் எந்தவிதமான ஆதிக்கத்தை பெற்றார்கள்? அல்லது யாருடைய ஆதிக்கத்தை குறைத்தார்கள்? என்பதாகப் பார்த்தால் ஒன்றுமே காணோம். தானாக காங்கிரசில் ஒருவன் சேர வேண்டுமென்று வந்தாலும் அவனைச் சேர்க்க மாட்டேன் என்று சொல்லுகிறவர்களின் அயோக்கியத்தனத்தைக்கூட ஏன் என்று கேட்பதற்கு யோக்கியதை இல்லாத நிலையில் இந்த வீரர்கள் இருக்கிறார்கள் .

கோவைத் தீர்மானத்திற்கு அனுகூலமாயிருந்தவர்களில் முக்கியஸ்தரான பனக்கால் ராஜாவின் மேல்விலாசமே இப்பொழுது தெரிய முடியவில்லை. ஸ்ரீமான் ராமசாமி முதலியார் அவர்கள் பம்பாயில் போய் அங்குள்ளவர்களையும் கெடுத்துவிட்டு வந்து சேர்ந்தாரேயல்லாமல் வேறொன்றும் செய்ததாய் காணவில்லை. ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்கள் டெல்லிக்குப் போய் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ஸ்ரீமான் கலியாண சுந்திர முதலியாரவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே இப்போது ஞாபகமில்லை. ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்கள் சங்கதியோ நாம் சொல்லித் தெரிந்துகொள்ள வேண்டிய நிலையில் ஒருவரும் இல்லை.

அன்றியும் இதன் பலனாக “பார்ப்பனரல்லாதாருக்கு இப்பொழுது தான் புத்தி வந்தது. காங்கிரசின் பெருமையை ஜஸ்டிஸ் கக்ஷிக்காரர்கள் இப்பொழுது தான் உணர்ந்தார்கள்” என்று நமது எதிரிகளான பார்ப்பனர்கள் சொல்லிக் கொள்ளவும் நமது பாமர மக்கள் மறுபடியும் ஏமாந்து போய் பார்ப்பனர்கள் சூழ்ச்சிக்கு ஆளாகவும் நேர்ந்தது.

அல்லாமலும் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அவர்களுக்கு காங்கிரசின் பேரால் செலவு செய்ய இன்னமும் கொஞ்சம் நம்முடைய பணம் போய்ச் சேரவும் தாராளமாய் இடமேற்பட்டதேயல்லாமல் மற்றபடி வேறு என்ன காரியம் நடந்தது? என்ன பலன் ஏற்பட்டது? என்பதை யோசித்தால் விளங்காமல் போகாது. இவற்றை எதற்காக இதுசமயம் எழுதுகிறோமென்றால் மறுபடியும் நமது மக்களை “மதுரை மகாநாட்டிற்கு”திருப்பிக் கொண்டு போக வேண்டியவர்களாக இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தவும் அதற்காக எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கிறது என்பதை யோசிக்கச் செய்யவுமே அல்லாமல் வேறில்லை.

எனவே நமது நாட்டிலுள்ள பார்ப்பனரல்லாத பிரமுகர்கள் இவ் விஷயங்களை நன்றாய் கவனிப்பதோடு மற்றொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது ‘திராவிடனும்’ ‘குடி அரசும்’ பார்ப்பனர்கள் கையில் இருக்கும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிடிங்கி பார்ப்பனரல்லாத ஜமீன்தார்களும், மிராஸ்தார்களும், வியாபாரிகளும், லேவாதேவிக்காரருமான பணக்காரர்களுக்கும் ஆங்கிலம் படித்த வக்கீல்களுக்கும் கொடுப்பதற்காக நடத்தப்படுகிறது என்று நினைப்பார்களானால், அவர்கள் கண்டிப்பாய் ஏமாந்து போவார்கள் . ஏனெனில் அரசியல் விஷயத் தில் பார்ப்பன ஆதிக்கத்தை விட, பணக்கார ஆதிக்கத்தைவிட, வக்கீல் ஆதிக்கத்தை விட வெள்ளைக்கார ஆதிக்கமே ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏழைகளுக்கும் குடியானவர்களுக்கும் யோக்கியர்களுக்கும் அதிகமான கெடுதி இல்லாதது என்பதே நமது அபிப்பிராயம். வெள்ளைக்கார ஆதிக்கம் ஒழிவதாயிருந்தால் நேரே அது ஏழை மக்களான தொழிலாளர்கள் கைக்கு வருவதுதான் நன்மையேயல்லாமல் ஏழை மக்களுக்கு பார்ப்பனர்களும், பணக்காரர்களும், வக்கீல்களும் தர்மகர்த்தாக்களாகவும், தரகர்களாகவும் இருக்கக்கூடாது என்றே சொல்லுவோம். இந்த கொள்கையின் பேரில்தான் பணக்காரர்கள் இப்பத்திரிகைக்கு உதவி செய்ய வேண்டும் என்பதாகவும் இப்போதே வெளிப்படையாய் சொல்லி விடுகிறோம்.

அது போலவே மத இயலில் நமக்கு உதவி செய்பவர்களும் இந்து மதம் என்பதான பார்ப்பன மதத்துடன் போர் புரிந்து வெற்றி ஏற்படுமானால் “சைவ சமயத்திற்கு அனுகூலமாகும்” என்றோ “வைணவ சமயத்திற்கு அனுகூலமாகு” மென்றோ “கிறிஸ்தவ மதத்துக்கு அனுகூலம் ஆகும்” என்றோ “மகமதிய மதத்திற்கு அனுகூலமாகு” மென்றோ, “மாத்துவ மதத்திற்கு அனுகூலமாகு” மென்றோ ஒவ்வொருவரும் தன் தன் சுய மத நலத்திற்கு என்று நினைத்துக் கொண்டார்களானால் அவர்களும் ஏமாற்றமடைவார்கள் என்பதையும் இப்போதே சொல்லிவிடுகிறோம். பார்ப்பன மதம் ஒழிந்தால் உண்மையான சமரசமும், சன்மார்க்கமும் உடையதான மதம் ஏற்பட வேண்டும். எல்லா மக்களுக்கும் சுயமரியாதை அளிக்கத்தக்கதாய் இருக்க வேண்டும். அது எதுவானாலும் நாம் கவலைப்படமாட்டோம் என்பதையும் தெரிவித்து விடுகிறோம்.

கடைசியாக சில கனவான்களை நாம் கேட்டுக் கொள்ளுவது என்னவென்றால் இம்முயற்சியில் நமக்கு உதவி செய்யாவிட்டாலும் நம்மை ஏமாற்றாமலாவது இருக்கும்படி வேண்டிக் கொள்ளுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 11.09.1927)

Pin It