ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரி சென்ற இடங்களிலெல்லாம் கலவரம் ஏற்பட்டதாகவும் சில விடங்களில் கூட்டத்தில் செருப்புகள் வந்து விழுந்ததாகவும் பத்திரிகைகளில் காணப்படுகின்றன. மந்திரிகளின் விஜயத்திலும் பார்ப்பனர்களின் கூலிகள் சிலருக்கு அடி விழுந்ததாகவும் காணப்படுகின்றன. இம்மாதிரியான காரியங்கள் மிகுதியும் வெறுக்கத்தக்கதென்றும் நாம் அழுத்தமாகச் சொல்ல வேண்டியிருப்பதற்கு வருந்துகிறோம்.

periyar 450இதற்கு முன்னும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் முதலியோருடைய படங்களை கிழித்து மிதித்து எறிந்ததற்கும் சில கூட்டங்களில் செருப்புகள் பறந்ததற்கும் நாம் மிகுதியும் வருத்தப்பட்டு கண்டித்து எழுதியிருந்தோம். மறுபடியும் அம்மாதிரியான காரியங்கள் நடைபெற்றதாக தெரிவதற்கு நாம் மிகுதியும் வருத்தமடைகின்றோம். “தமிழ்நாடு” பத்திரிகையில் இச்சம்பவங்கள் சுயமரியாதை சங்கத்தைச் சேர்ந்ததாக பிறர் நினைக்கும்படி காணப்படுகின்றதானாலும் நாம் அதை சிறிதும் நம்புவதில்லை. ஏனெனில் அது காட்டிக் கொடுத்து கூலி பெறுவதிலோ அபாண்டத்தை சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளை ஆவதிலோ பார்ப்பனர்களை விட ஒருபடி முன்னிற்பது. ஆதலால் அதை நாம் ஆதாரமாய் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒரு சமயம் அப்படி ஏதாவது உண்மையில் நடந்திருக்குமானால் அது யாரால் நடந்திருந்தாலும் அதற்காக நாம் மிகுதியும் வெட்கப்பட வேண்டியவர்களாவோம். ஏனெனில், இத்தொழில் பார்ப்பனக் கூலிகளுக்கே உரியது. சுயமரியாதை உடையவர்களானால் இம்மாதிரி காரியங்களை மிகவும் வெறுக்க வேண்டும். பேசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். கூட்டத்திற்கு வேண்டிய சவுகரியம் செய்து கொடுக்க வேண்டும். அவர்கள் பேசியதற்கு சமாதானம் மறுநாள் கூட்டம் போட்டு சொல்ல வேண்டும். அப்படிக்கில்லாமல் கூட்டத்தைக் கலைப்பது யோக்கியமானதாகாது. கூட்டத்தில் செருப்பெடுத்து எறிவது மிகுதியும், அயோக்கியத்தனமான செய்கையாகும்.

சென்னையில் ஒரு கடற்கரை கூட்டத்தில் பார்ப்பனர்கள் முதல் முதலாக ஒரு செருப்பை எடுத்து எறிந்துவிட்டு பிறகு அவர்கள் வெளியில் கூட்டம் போடுவதற்கே தகுதியற்றவர்களானதும் அவர்கள் போடும் கூட்டங்களில் பல தடவை செருப்புகள் வந்து விழுந்ததும் தேசீய வீரர்கள் ஓடி ஒளிந்ததும் தெருக்களில் ஒவ்வொருவரும் விரட்டப்பட்டதும் நாம் அறிந்த விஷயமாகும். அப்படியிருக்க மற்றவர்களும் அந்த மாதிரி செய்ய முற்படுவது அறிவீனமான காரியமென்றே சொல்லுவோம்.

ஸ்ரீ சத்தியமூர்த்தி சாஸ்திரி தனது சமூக நன்மையை கருதி அவர்கள் தொண்டாற்றி வருகின்றார். கூடுமானவரை அவரை ஒரு சமூகத் தொண்டர் என்றே சொல்ல வேண்டும். அதன் மூலம் ஏதாவது சுயநலம் கிடைத்தால் அதை அனுபவிக்கிறார். எந்த சமயத்திலும் தனது பார்ப்பன சமூகத்தை காட்டிக் கொடுத்து ஒரு வார்த்தையாவது பேசினவரல்ல. அம்மாதிரி சமூகத் தொண்டர்களை நாம் போற்ற வேண்டும். அவருடைய தனிப்பட்ட சொந்த விஷயங்கள் பல இருக்கலாம். அவற்றை அவர் நமக்கு தலைவராகவோ, உபதேசிப்பவராகவோ வரும்போது நாம் பேசிக் கொள்ளலாம். கூட்டத்தில் அவரை மறித்தது சரியல்லவென்றே சொல்லுவோம். இம் மாதிரிக் காரியம் நமது கூட்டங்களிலும் செய்ய அவர்களாலும் முடியக் கூடியதுதானேயல்லாமல் ஒருவருக்கே சொந்தமல்ல என்றே சொல்லுவோம்.

யாவருக்கும் பேச்சு சுதந்திரம் கொடுக்க வேண்டும். திருச்சியில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் காரியம் பார்ப்பனர்களுக்குள்ளாகவே ஸ்ரீமான்கள் சாஸ்திரி, டாக்டர் ராஜன் கூட்டத்தாருக்கும், ஸ்ரீமான் சேதுரத்னமய்யர் கூட்டத்தாருக்குமே நடந்ததாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து சேதி வந்தாலும் இது யாருக்குமே கூடாது என்று சொல்லுகின்றோம்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 22.04.1928)

Pin It