ஆசாரத் திருத்த மகாநாடு

இதற்கு ஸ்ரீமான் கே. நடராஜன் அக்கிராசனாதிபதி - இவர் வாயால் வெகு வேகமாகப் பேசிவிட்டு காரியத்தில் ஒன்றும் செய்யக் கூடாது என்பதையே கருத்தில் வைத்துத் தலைமை உபன்யாசம் செய்தார். இம்மகா நாட்டுக்கு காரியதரிசி ஸ்ரீ கந்தசாமி செட்டியார். இவர் ஜஸ்டிஸ் கட்சியையும் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கத்தையும் சேர்ந்தவர்கள் ஆசாரத் திருத்த மகாநாட்டுக்குப் பிரதிநிதிகளாக வரக்கூடாது என்றும், மீறி வந்தால் அவர்களுக்குப் பிரதிநிதிச் சீட்டு கொடுக்க முடியாது என்றும் காரிய தரிசி ஹோதாவில் எழுதிவிட்டார். அக்கடிதம் சமீபத்தில் பிரசுரமாகும்.

periyar karunanidhi veeramani 2மகாநாட்டுக்குச் சென்ற ஸ்ரீமான் ஆரியா அவர்களை பார்ப்பனர்கள் அவமானப்படுத்தினார்கள் - இதை கண்டிக்க அக்கிராசனாதிபதிக்கு சக்தியோ சௌகரியமோ சம்மதமோ இல்லாமல் போனதோடு தந்திரமாக சமா தானம் சொல்ல முன்வந்தார்.

சமஸ்தானப் பிரஜைகள் மகாநாடு

இதற்கு ஸ்ரீ. சீனிவாசய்யங்கார் தலைவர். ஸ்ரீமான். சத்தியமூர்த்தி உபசரணைத் தலைவர். இவர்கள் தீர்மானம் எழுதி ஓட்டு எண்ணாமலே நிறைவேறி விட்டதாக தீர்மானம் செய்தவர்கள் - ஒரு மாதத்திற்குமுன் ஒரு மகாநாடு கூடி இருக்க இப்போது மேற்படி இரண்டு பேர் சேர்ந்து மகாநாடாக்கித் தீர்மானம் செய்ததாக பேர் செய்துவிட்டார்கள் - இதனால், சுதேச சமஸ்தானங்களிலும் பணம் கொள்ளை அடிக்கலாம், தங்கள் இனத்தாருக்கு உத்தியோகம் சம்பாதித்துக் கொடுக்கலாம் என்பதுதான் மகாநாட்டின் முக்கிய நோக்கம் என்று சொல்ல வேண்டும்.

பத்திராதிபர்கள் மகாநாடு

இது ஸ்ரீமான் வரதராஜுலு பத்திரிகை விற்க வாடகைக்கு வாங்கிய ஒரு கை அகல இடத்தில் திடீரென்று கூட்டப்பட்டது. இதில் என்ன நடந்தது, எத்தனை பேருக்கு அங்கு இடமிருந்தது, யார் யார் வந்தார்கள் என்பவைகளைப் பற்றி பேசாமல் இருப்பதே எல்லோருக்கும் நன்மையாகும், இல்லாவிட்டால் ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, சீனிவாச அய்யங்கார் மகாநாடுகளுக்கு யோக்கியதை வந்துவிடும்.

இதுபோல இன்னும் எத்தனையோ மகாநாடுகள் ஒவ்வொன்றும் கேட்கக் கேட்க அற்புதமாகத்தான் இருக்கும். இவர்களையெல்லாம் குற்றம் சொல்ல நாம் இவைகளை எழுத முன்வரவில்லை; நமது நிலையை விளக்கவே எழுதினோம்.

ஜஸ்டிஸ் கக்ஷி

வடநாட்டில் இருந்து வந்த முக்கிய தலைவர்கள் என்போர்கள் எல்லோரும் கக்ஷித் தலைவர் பனகால் ராஜா அவர்களைப் பார்த்து பேசினார்கள். பேசினதின் முக்கிய தத்துவம் என்னமாய் இருக்கலாம் என்றால், பஹிஷ்கார வியாபாரத்தில் நீங்களும் ஒரு கூட்டாகச் சேர்ந்து கொள்ளுங்கள். வருகிற லாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கின்றோம் என்றுதான் சொல்லி இருப்பார்கள். இதைவிட வேறு பேசத் தகுந்த காரியம் எதுவுமிருப்பதாக நாம் நினைக்கவில்லை. இதை நம்பி பனகால் ராஜாவும் காங்கிரசுக்கு போய் இருந்தார்; கொட்டகையில் இருந்த ஜனங்கள் இவரைப் பார்த்து செய்த ஆராவாரம் அந்த கொட்டகையில் ஸ்ரீ காந்தி முதல் யாருக்கும் செய்யவில்லை என்று அநேகர் சொன்னார்கள். இதைப் பார்த்த ராஜா சாயபுக்கு காங்கிரசில் சேர்ந்தால் தேவலாம் என்று தோன்றுவதில் அதிசயமில்லை.

காங்கிரஸ் வரவேற்புத் தலைவர்

வரவேற்புத் தலைவரை, வடநாட்டு தலைவர்களில் யாருக்குமே யாரும் அறிமுகப்படுத்தி வைக்கவில்லையாம். இதில் ஒன்றும் அதிசயமிருப்பதாக நினைக்க இடமில்லை.

காங்கிரஸ் சாப்பாடு

வேளை ஒன்றுக்கு எட்டணா, பத்து அணா என்பதாக வாங்கிக் கொண்டு நாலணா பெறக் கூடிய சாப்பாடு கூடப் போடவில்லை என்று எல்லோரும் புகார் சொன்னார்கள்.

பத்திராதிபர்களுக்கு சௌகரியம்

 ‘இந்து,’ ‘சுதேசமித்திரன்’ இரண்டு போக மற்றவர்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையென்றும் அவர்களுக்கு போதிய சௌகரியம் செய்யவில்லை என்றுமே புகார்.

தீர்மானங்களைப் பற்றி பேசியவர்கள்

பிரிட்டிஷ் சாமான்களை பஹீஷ்கரிக்க வேண்டும் என்கின்ற தீர்மானத்தைப் பற்றி பேசியவர்களில் முக்கியமானவர் ஒரு பத்திரிகைக்கு பிரிட்டிஷ் சாமான்களுக்கு விளம்பரம் சம்பாதித்துக் கொடுக்கும் கனவானாம் - ஆகவே தீர்மானங்களுக்கு எவ்வளவு தூரம் எதிரிகள் மதிப்பு கொடுப்பார்கள் என்பது இதிலிருந்தே விளங்கும்.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.01.1928)

Pin It