சென்ற வாரம் சென்னையில் ஏமாற்றுந் திருவிழா என்பதாகப் பெயரிட்டு, தலையங்க மெழுதியிருந்தோம். இவ்வாரம் அத்திருவிழா முடிந்து விட்டதால் அதைப்பற்றி சில வார்த்தைகள் கூறுவோம்.

periyar karunanidhi veeramaniநாம் சென்ற வாரம் கூறியபடியே காங்கிரஸ் என்பது பாமர மக்களை படித்த கூட்டத்தார் ஏமாற்றுவதற்கென்று ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனம் என்றும், அதிலும் அப்படித்த கூட்டத்தார் என்பதில் முக்கியமானவர்கள் நமது தென்னாட்டுப் பார்ப்பனர்களே என்றும் அவர்கள் இஷ்டப்படியெல்லாம் ஏறக்குறைய காங்கிரஸ் ஆரம்பமான காலம் முதற் கொண்டு ஆட்டப்பட்டு வந்திருக்கின்றது என்றும், காங்கிரஸ் என்பதாக ஒன்று நமது நாட்டில் ஏற்பட்ட பிறகே, மக்களின் ஒற்றுமை குலையவும், ஒழுக்கங்கெடவும், ஏழை மக்களுக்குப் பலவழிகளிலும் கஷ்டம் ஏற்படவுமான காரியங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருகின்ற தென்றும் எழுதி வந்திருக்கின்றோம்.

நிற்க, இவ்வருஷம் சென்னையில் நடந்த காங்கிரசானது, காங்கிரசையும், பார்ப்பனர்களையும் பற்றி நாம் இவ்வளவு காலம் எழுதி வந்ததையும், பேசி வந்தததையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் மெய்ப்பித்து விட்டது என்றே சொல்லுவோம்.

இக்காங்கிரசில் நிறைவேற்றி இருக்கும் தீர்மானங்கள் முக்கியமானது என்று சொல்லத்தக்கது என்பவைகள் நான்கே என்று சொல்லலாம்.அதாவது ஒன்று, ராயல் கமிஷன் பகிஷ்காரம். இரண்டு நமது நாடு வெள்ளைக்காரர்கள் சம்மந்தமில்லாமல் பூரண சுதந்திரம் அடைய வேண்டும் என்பது, மூன்றா வது பிரிட்டிஷ் சாமான்களை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்பது. நான்காவது இந்து முஸ்லீம் ஒற்றுமை ஆகியவைகளாம். இவற்றில் முதல் இரண்டு தீர்மானங்களின் புரட்டுக்களைப் பற்றியும், திராவிடன் பத்திரிகையில் வரிசையாக காணப்பட்ட இரண்டு தலையங்கங்களையும் காங்கிரஸ் தீர்மானங்கள் என்னும் தலைப்பில் இதில் பிரசுரித்திருக்கின்றோம். ஆதலால் நேயர்கள் தயவு செய்து அவற்றைக் கவனமாய் படித்துப் பார்க்கும் படி வேண்டுகின்றோம். மற்ற இரண்டு தீர்மானங்களைப் பற்றிய புரட்டுகளை அடுத்த வாரம் வெளியிடுவோம்.

தமிழ்நாட்டில் உள்ள அநேகப் பத்திரிகைகளில் ‘திராவிடன்’, ‘குடி அரசு’ என்கின்ற இரண்டு பத்திரிகைகள் நீங்கலாக, அநேகமாய் மற்ற பத்திரிகைகள் எல்லாம் ஒரே மாதிரியாகக் காங்கிரசைப் புகழ்ந்தும், தீர்மா னங்களைப் பாராட்டியும் எழுதி வந்திருக்கின்றனவே அல்லாமல், ஒன்றா வது உண்மையை வெளியிடவில்லை என்பதைத் தைரியமாய்ச் சொல்லு வோம். ஏனிப்படிச் சொல்லுகிறோமென்றால் அநேக பத்திரிகைகள் உண்மையை அறிந்திருந்தும், வேண்டுமென்றே மறைத்து வைத்து தங்கள் தங்கள் சுய நலத்தையே பிரதானமாகக் கொண்டு பார்ப்பனர்களைப் பின் பற்றுகின்றன என்கிற முடிவினாலேயே எழுதுகின்றோம்.

தவிர, எவ்வளவு தான் தமிழ்நாட்டுப் பத்திராதிபர்கள் உண்மை களை மறைத்து மறைத்துப் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் எழுதி வந்தி ருந்தாலும், இவ்வருஷம் நடந்த காங்கிரசின் மூலமாகத் தமிழ் நாட்டின் எல்லா பக்கங்களிலிருந்தும் சென்னைக்கு வந்திருந்த பிரதிநிதிகளில் அனேகர் உண்மையை உணர்ந்து கொண்டார்கள் என்றே சொல்லுவோம்.

எல்லா பத்திரிகைகளையும் தங்கள் வசப்படுத்திக் கொண்டு விட் டோம் என்கின்ற தைரியத்தாலோ, அல்லது நமக்கு விரோதமாய் எந்தப் பத்திரிக்கைகாரனும் எழுதிவிட்டுப் பிழைத்திருக்க முடியாது என்கின்ற ஆணவத் தினாலோ தலைகால் தெரியாமல் ஆடினதினால் உண்மை வெளி யாக நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது.

காங்கிரசில் நிறைவேற்றப்பட்டதாய் சொல்லப்பட்ட மேற்படி தீர்மா னங்களில் ஒன்றாவது யோக்கியமாய் நிறைவேற்றப்படவில்லை என்றும், எல்லாம் தீர்மானமாக்கப்பட்டதாகக் குறித்துக் கொள்ளப்பட்ட தென்றும், ஆnக்ஷபணைகளையும், ஆnக்ஷபிப்பவர்களையும் சூழ்ச்சியினாலும், தந்திரத்தினாலும், ஒழுக்கமற்ற நடவடிக்கையினாலும் நிராகரித்தும், மறைத்து விட்டார்கள் என்றும் தெரிந்து விட்டது.

இவ்வருஷத்திய காங்கிரஸ் டெலிகேட்டுகள் எல்லாம் கணக்குப் பார்த்தால் 100-க்கு 76 பேர்கள் சென்னை மாகாணத்துக்காரர்களேயாவார்கள். பஞ்சாப்புக்கும், பர்மாவுக்கும் மற்ற மாகாணங்களுக்குமாக சென்னைப் பார்ப்பனர்களே நியமனம் செய்யப்பட்டார்கள். எந்தெந்த மாகாணங்க ளிலிருந்து பிரதிநிதிகள் வரவில்லையோ அவற்றிற்கெல்லாம் அநேகமாய் சென்னைக்காரர்களே பர்த்தி செய்யப்பட்டார்கள். அவ்வளவு தூரம் பர்த்தி செய்ய எப்படி சவுகரியம் கிடைத்ததென்றால் பிரதிநிதிக் கட்டணம் ஒரே ரூபா யாகப் போய்விட்டதாலும் ஒருவர் ஒரு ரூபாய் கொடுத்து பிரதிநிதியாகப் பதிவு செய்து கொண்டு டிக்கட் பெற்றுவிட்டால் அதை 10 அல்லது 15 ரூபாய்க்கு விற்க சௌகரியமிருந்ததாலும் ஏறக்குறைய எல்லா ஸ்தாப னங்களையும் பூர்த்தி செய்ய சௌகரியமேற்பட்டது. இதனால் காங்கிரஸ் பிரதிநிதிகள் என்பவர்கள் ஒரு ரூபாய்க்கு வாங்கின டிக்கட்டை 10 ரூபாய்க்கு விற்கலாம் என்கின்ற யோகசாலிகளாகவே இருக்கவும் இந்த டிக்கட்டை வாங்கிக் கொண்டு உள்ளே போனவர்கள் பேசாமல் வேடிக்கை பார்த்து விட்டும் வந்ததல்லாமல் தீர்மானங்களைப்பற்றி யாதொரு காரியமும் செய்ய யோக்கியதை அற்றவர்களாகவுமே போய்விட்டார்கள்.

தவிர, காங்கிரசில் தீர்மானிக்க என்று அநேகர் அநேக தீர்மானங்கள் அனுப்பியிருந்தார்கள். அத்தீர்மானங்களை வெளியில் கொண்டுவராமல் இருப்பதற்காக எவ்வளவு தூரம் அக்கிரமங்கள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து தங்களுக்கு வேண்டாத தீர்மானங்களையெல்லாம் அடியோடு மறைத்து விட்டார்கள்.

ஸ்ரீமான் R.K. ஷண்முகம் செட்டியார் அவர்கள் ஒரு தீர்மானம் அனுப்பியிருந்தார். அது காங்கிரசின் லக்ஷியத்தில் மக்கள் சமத்துவமும் ஒன்றாய் இருக்க வேண்டும் என்கிற தத்துவம் கொண்டது. அதை எத்தனையோ பேர் எத்தனையோ கஷ்டப்பட்டுப் பார்த்தும் வெளிக்குக் கொண்டுவரவே முடியவே இல்லை. தீர்மானம் அனுப்பிய ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் இந்திய சட்டசபை மெம்பர். காங்கிரஸ் கக்ஷிக்கு கொறடா என்று சொல்லும் முக்கிய பதவி பெற்றவர். அவர் வடநாட்டுத் தலைவர்களையெல்லாம் நன்றாய் அறிந்தவர். இவ்வளவும் அல்லாமல் பார்ப்பனர் அல்லாதார்களுக்கு விரோதமாக பார்ப்பனர்களுடன் கூடிக் கொண்டு ஊர் ஊராய்த் திரிந்து, பார்ப்பனர்களுக்கு அனுகூலமாய் ஓட்டு வாங்கிக் கொடுத்தவர் தமிழ் நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்கு காரியதரிசியாய் இருந்தவர்.

இவ்வளவு யோக்கியதை உள்ளவர் எவ்வளவோ முக்கியமான தீர் மானம் அனுப்பி அது வெளியில் வரவில்லையானால் வேறு யாரால் என்ன காரியம் நடத்த முடியும்? ஸ்ரீ ஷண்முகம் செட்டியார் இத்தீர்மானத்தை வெளிக்குக் கொண்டுவர டாக்டர் அன்சாரியிடமும் ஸ்ரீமான் கோஸ்வாமி யிடமும் மற்றும் பல தலைவர்களிடமும் சிபார்சு பிடித்தும் பார்த்தார். மற்றும் பலர் சிபார்சு செய்தும் பார்த்தார்கள். ஒரு பலனும் ஏற்படாமல் நரி தின்ற கோழி கூவ முடியுமா என்பது போல் மறைந்து விட்டது.

மற்ற தீர்மானங்கள் ஒழுங்கு முறைகளைக் கூட கவனியாமல் நிறை வேற்றப்பட்டிருக்கின்றன. எனவே இந்த காங்கிரசு யாருடைய காங்கிரசு என்பதில் இனியும் அறிவாளிகளுக்கு சந்தேகமிருக்க நியாயமிருக்காது.

தவிர நிர்மாண திட்டங்களைப் பற்றியாவது மற்றும் வேறு அவசியமான காரியங்களைப் பற்றியாவது ஒரு வார்த்தைகூடப் பந்தலில் நிகழவே நேரமில்லை!

உபசரணைத் தலைவர் உபன்யாசத்திலும் வகுப்பு வேற்றுமை, பிராமணர் - பிராமணரல்லாதார் பிரச்சனை என்பவைகளைப் பற்றி பேசினவர்கள் அதை ஒழிக்கும் விஷயத்தில் கடுகளவு முயற்சியும் எடுத்துக் கொள்ளவேயில்லை. காங்கிரஸ் என்பதை வருணாசிரம மகாநாடு என்பது போலவே நினைத்து எல்லா இடங்களிலும் உள்ள காங்கிரஸ் ஸ்தாபனங் களையும் அக்கிரமமான வழிகளில் தங்கள் அடிமையாக்கி எல்லா ஊர்க ளிலும் உள்ள பார்ப்பனர்களையே பிரதிநிதிகளாக்கி அவர்களையே கொட்ட கைக்குள் நிரப்பி தங்கள் காரியங்களைச் சாதித்துக் கொண்டார்கள் என்பதை மறைக்க முடியாது.

பார்ப்பனரல்லாதார்களில் காங்கிரசுக்குப் போன முக்கியஸ்தர்கள் யார் என்றோ, அல்லது அங்கு யாருக்கு செல்வாக்கு இருந்தது என்றோ பார்ப்போமானால் ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டி யார், வரதராஜுலு நாயுடு, குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை முதலிய வெகு சிலரே என்றே சொல்லவேண்டும். அதுவும் காங்கிரசுக்கு வேண்டிய கூட்டம் வந்துவிட்டது என்கின்ற எண்ணம் பார்ப்பனர்களுக்கு ஏற்பட்டவுடன் ஸ்ரீமான்கள் வரதராஜுலுவையும், குப்புசாமி முதலியார், அண்ணாமலைப் பிள்ளை போன்றவர்களையும் கொஞ்சம் கூட லக்ஷியம் செய்யவே இல்லை. அவர்கள் பந்தலுக்கு வெளியில் கூட்டம் போட்டு இந்த பார்ப்பனத் தலைவர்களை மானங்கெடப் பேசிக் கொண்டே இருந்தார்கள். வட நாட்டிலிருந்து வந்தவர்களுக்குத் தமிழ் தெரியாது என்கின்ற தைரியத் தால் இதைப்பற்றி பார்ப்பனர்கள் ஒரு சிறிதுகூட கவலை செலுத்தவே இல்லை.

ஆகவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வைத்துக் கொண்டு தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் கட்சிக்கு விரோதமாக எவ்வளவு தூரம் வேலை செய்ய முடியுமோ அவ்வளவு தூரம் வேலை செய்யவே போகின் றார்கள். அதற்கு அனுகூலமாக இக்காங்கிரசின் பலனாய் பதினாயிரக் கணக்கான ரூபாய் மீதியாகும் என்பதாகச் சொல்லிக்கொள்ளப் படுகின்றது.

இந்தப் பணங்களை வழக்கம்போல் பல காலிகளுக்குக் கொடுத்து எவ்வளவு தூரம் நம்மீது அவர்களை உசுப்படுத்திவிட முடியுமோ அவ்வளவு தூரம் உசுப்படுத்திவிட்டு பெருத்த ஆர்ப்பாட்டம் செய்யப்போகிறார்கள் என்பது மாத்திரம் உறுதி. அதற்குச் சாக்காக சொல்லிக் கொள்ள ராயல் கமிஷன் பஹிஷ்காரப் பிரசாரம் என்பதாக ஒன்றைத் தீர்மானித்துக் கொண்டாய் விட்டது.

இதையெல்லாம் விட பார்ப்பனர்களுக்கு மற்றொரு சவுகரியமும் என்னவென்றால் பார்ப்பனர்களின் கால் பெருவிரலடியில் கிடக்கின்றது என்று சொல்லத்தக்கதான தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும் அதன் நிர்வாகக் கமிட்டியுமே ஆகும்.

நிர்வாகக் கமிட்டியைப்பற்றி நாம் சொல்லவே வேண்டியதில்லை. உதைத்த காலுக்கு முத்தம் கொடுக்கும் பெருந்தன்மை வாய்ந்த ஸ்ரீமான்கள் கந்தசாமி செட்டியார், ஜார்ஜ் ஜோசப், வரதராஜுலு போன்ற மணிகள் பார்ப்பனர்கள் இஷ்டம் போல் நடக்க வேண்டுமென்கின்ற அவசியத்தோடு பார்ப்பனரல்லாதார் கட்சியை வைவதன் மூலமாகவே பெருமை பெற வேண்டும், வாழ வேண்டும் என்கின்ற தத்துவத்தை அடிப்படையாய் கொண்டவர்கள். அது மாத்திரமல்லாமல் தாங்கள் ஒதுங்குவதற்கு இதைத்தவிர வேறு இடமில்லை என்றும் முடிவு செய்துகொண்டும் இருக்கின்றவர்கள். ஆகவே காங்கிரசும் காங்கிரசில் மிஞ்சிய பணமும் காங்கிரசில் சேர்ந்த கனவான்களும் பார்ப்பனரல்லாதார்களின் கக்ஷிக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் சுயமரியாதைக்கும் எமன்களாகத் தோன்றியிருக்கின்றது என்று சொல்லி இதை முடிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என்று சொல்லு வோம்.

(குடி அரசு - தலையங்கம் - 01.01.1928)

Pin It