டாக்டர் தரவாட் மாதவன் நாயர் என்ற முழுப் பெயர் கொண்ட டாக்டர் டி.எம். நாயர் தென்னகத்தின் புகழ்பூத்த இந்திய அரசியல்வாதி. சென்னை மாகாணத்தில் திராவிட இயக்கத்தின் முன்னோடி தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தை (நீதிக்கட்சி) சர்.பிட்டி. தியாக ராய செட்டியார், டாக்டர் சி. நடேச முதலியார் ஆகியோருடன் இணைந்து தோற்று வித்தவர். அச்சங்கத்திற்கான விதிகளை யும் கொள்கை நெறிகளையும் வடித்துத் தந்தவர். மிகத் திறமையும் அறிவாற்ற லும் அஞ்சாமையும் நிறைந்த ஒப்பற்ற தலைவர் டாக்டர் டி.எம். நாயர்.
அந்த நாள்களில் பிராமணரல்லாத மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் ஆகியோரின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காக வும், இன்னல்களையும் இழப்புகளை யும் ஏற்று செயல்பட்ட மாபெரும் தலைவர் என்று அந்த மக்களால் மிகவும் போற்றப்பட்டவர் டாக்டர் டி.எம். நாயர். அதேநேரத்தில் அவரை எதிர்த்து அரசியல் செய்வோரால் பெரிதும் தூற்றப்பட்டவரும் ஆவார்.
டாக்டர் தரவாட் மாதவன் நாயர் (டி.எம். நாயர்) அவர்கள் 1868ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 15ஆம் நாள் சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய கேரளம்) சங்கரன் நாயர், காமினி அம்மாள் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
இவருடைய தந்தையார் கள்ளிக்கோட்டையில் புகழ்பெற்ற வழக்கறிஞர் மாவட்ட ‘முன்சீப்’ ஆகவும் சிறப்பாகப் பணிபுரிந்தவர். தாயார் பாலக்காட்டைச் சேர்ந்த செல்வர் குடும்பத்தைச் சார்ந்தவர். இவரது தமையன் ‘பார் அட்-லா’ பட்டம் பெற்றவர். துணை மாவட்ட ஆட்சியராய்ப் பணியிலிருந்த போதே இறந்து விட்டார். அவரது சகோதரி அம்மாளு அம்மாள் மலை யாளத்திலும், வடமொழியிலும் சிறந்த புலமை பெற்றவர்.
பாலக்காட்டில் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாதவன் நாயர் கல்வி பயின்றார். கல்வி பயில்வதில் மிகுந்த நாட்டமும் ஆர்வமும் கொண்டிருந்தார். கல்வியிலும் விளையாட்டுப் போட்டிகளிலும் முதன்மையான வராக விளங்கினார். மூன்றாண்டுகள் படிக்க வேண்டிய மெட்ரிகுலேசன் படிப்பினை இரண்டு ஆண்டுகளில் முடித்துத் தேர்வு பெற்றார். இதற்குப்பின் சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவியலை விருப்பப் பாடமாகக் கொண்டு எப்.ஏ. (Felow of Arts) இரண்டு ஆண்டுகள் பயின்று பல்கலைக்கழகத்திலேயே முதன்மை மாணவ ராகத் தேர்ச்சி பெற்றார். ‘அறிவியல் ஆய்வுக்குத் தகுதியான மாணவர்’ எனப் பேராசிரியர் வில்சோனியம் அவர் களால் அக்காலத்தில் போற்றப்பட்டார். கல்வி பயிலுங்காலத்திலேயே அவர் தன் ஆளுமைப் பண்பின் திறத்தால் மாணவர் தலைவராகவும் சிறந்து விளங் கினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் சிறிது காலம் பயின்ற நாயர் மருத்து வக் கல்வியைச் சென்னையில் தொடர வில்லை. 1889ஆம் ஆண்டு எடின்பர்க்கு சென்று அங்கு 1894ஆம் ஆண்டு எம்.பி.சி.எம். (M.B.C.M.) என்ற மருத்துவ இளநிலைப் பட்டம் பெற்றார். பின் இங்கிலாந்தில் ‘சூசெக்ஸ்’ (Sussex) மருத்துவமனையில் பயிற்சி மருத்துவ ராகப் பணிபுரிந்தார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தில், 1896இல் முதுநிலைப் பட்டம் - எம்.டி. (M.D.) பெற்றார். இப்பட்டம் பெற்றிட செம்மொழி ஒன்றினை உடன் படித்திட வேண்டும் என்பது பல்கலைக்கழக விதியாகும். எனவே நாயர் எம்.டி. பட்டத்தினைப் பெற்றிட தன் சகோதரியின் மூலம் அஞ்சல்வழி சம்ஸ்கிருத மொழி யைப் பயின்றார். மேலும் கிரேக்க மொழியும் கற்றுத் தேர்ந்தார். காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் ஓராண்டு சிறப்புப் பயிற்சி பெற பாரிஸ் சென்றார்.
கல்வி பயின்ற காலத்தில் எடின்பர்க் பல்கலைக் கழக மாணவர் அவையில் செயலாளராகவும், பல் கலைக்கழக ‘மாணவன்’ என்ற இதழின் ஆசிரியர் களில் ஒருவராகவும் எடின்பர்க் இந்தியர் சங்கத்தின் செயலாளராகவும் பின்னர் அதன் தலைவராகவும் பல பொறுப்புகளிலிருந்து சிறப்புடன் பணியாற்றி வந்துள் ளார் அவர். பிரிட்டிஷ் மருத்துவச் சங்கம், இராயல் ஆசியச் சங்கம், தேசிய லிபரல் கிளப், இராயல் சொசைட் டிஸ் கிளப் போன்ற பல அமைப்புகளில் உறுப்பினராக இருந்தார். தாயகம் திரும்பும் முன் இலண்டனில் அவர் வசித்த காலத்தில் அங்கிருந்த இந்தியர் சங்கத்தில் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் ‘தாதாபாய் நௌரோஜி’ அச்சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார். இத்தகு சமூக, அரசியல் அமைப்பு களில் தொடர்பு கொண்டிருந்ததால் நாயரின் அறிவாற்ற லும், ஆளுமைத் திறனும், தலைமைப் பண்புகளும் சிறப்புடன் வளர்ந்து வரலாயின. மேலும் அவர் அரசியல் அறிஞர்களின் வரலாறுகளையும் அரசியல் அமைப்புகளின் வரலாறுகளையும் பொருளாதார நூல் களையும் இலக்கியங்களையும் இடையறாது பயின் றார். அதனால் அவரது அரசியல், சமூகப் பொருளாதாரப் பார்வைகளும் விரிவடைந்தன.
அக்காலத்தில் பிரிட்டிஷ் பாராளுமன்றத்துக்கு தாதா பாய் நௌரோஜி பிரிட்டிஷ் தொகுதி ஒன்றில் வேட் பாளராக நின்றார். அவர் வெற்றி பெறுவதற்கு, மருத்து வக் கல்லூரி மாணவராயிருந்த டாக்டர் நாயர் பெருந் தொண்டாற்றினார். அந்நாளில், தாதாபாய் நௌரோஜி, டாக்டர் நாயருக்குக் கூறிய அறிவுரை, “இந்தியாவில் உள்ள வெள்ளையர் ஏகாதிபத்தியம் உன் கோரிக்கை களை ஏற்க மறுக்குமேயானால், இங்கிலாந்துக் குடி யாட்சியிடம் முறையிடு. அதன் உதவியை நாடு” என்பதாகும்.
அவர் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் மேல்நாட்டுக் கலை, கலாச்சார, பண்பாட்டுச் சூழலில் வளர்ந்த போதிலும் பிறந்த மண்ணின் பெருமையை மறந் தாரில்லை. இந்திய மக்களை சுதேசிகள் என்று வெள்ளை யரில் சிலர் ஏளனமாகக் குறிப்பிட்டு வந்துள்ளனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட எண்ணிய டாக்டர் டி.எம். நாயர் அதற்காக காலம் நோக்கிக் காத்திருந்தார். இங்கிலாந்தில் ஆங்கிலேயர்கள் கூடியிருந்த கூட்டத்தில் அவர் கலந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெற்றார். அக்கூட்டத்தில் அவர் ஒருவரே இந்தியர். அக்கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் பேசும் பொழுது இந்தியராகிய தம்மைத் தவிர அங்கு கூடியுள்ள அனைவரும் சுதேசி களாகவே இருப்பதாகக் குறிப்பிட்டார். இவ்விதம் ஆணவ மிக்க ஆங்கிலேயரை இடித்துரைத்தார்.
டாக்டர் டி.எம். நாயர் தாய்மொழிப் பற்று மிக்கவராக இருந்தார். ஆகவே ‘கேரள பத்திரிகா’ என்ற இதழை வரவழைத்துப் படித்து வந்தார். அந்த இதழில் டாக்டர் டி.எம். நாயர் தன் தாய்மொழியான மலையாளத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
1897ஆம் ஆண்டு சென்னை வந்த டாக்டர் டி.எம். நாயர், சென்னையில் மருத்துவத் தொழிலைத் தொடங் கினார். ஏழை, எளிய மக்கள் பயன் பெற்றனர். காது, மூக்கு, தொண்டை மருத்துவத்தில் நிகரற்றுத் திகழ்ந் தார். ஒவ்வொரு நாளும் காலை 8 மணிமுதல் பகல் 1 மணிவரை நோயுடைய மக்களுக்கு மருத்துவம் பார்ப்பார். அதன்பின் படிக்கவும் எழுதவும் செய்வார். பொது நிகழ்ச்சி களிலும் பங்கேற்பார். அவர் தான் படிப்பதற்கென தன் இல்லத்தில் ஒரு நூலகம் அமைத்திருந்தார். அந்த நூலகத்தில் மருத்துவம், சுகாதாரம், அரசியல், பொருளியல் எனப் பல்துறை சார்ந்த நூல்கள் இருந்தன. “ஆண்டி செப்டிக்” (Antiseptic) என்ற மருத்துவ இதழுக்கு, அவர் ஆசிரியராக இருந்து 16 ஆண்டுகள் தொடர்ந்து வெளி யிட்டு வந்துள்ளார். சென்னை மாநிலத்திலிருந்து வெளி வந்த ஒரே மருத்துவ இதழ் ஆண்டிசெப்டிக். இந்த மருத்தவ இதழினை வெளியிட்டவர் டாக்டர் யூ. இராமாராவ். இவர் சிறிது காலம் சென்னை மேலவைத் தலைவராகவும் இருந்துள்ளார். டாக்டர் டி.எம். நாயர் சென்னை பிராட்வேயிலிருந்து வந்து கொண்டிருந்த ‘மெட்ராஸ் ஸ்டேண்டர்டு’ (Madras Standard) என்ற ஆங்கில தினசரியின் ஆசிரியராகவும் இருந்து சிறப்பான அரசியல் விளக்கக் கட்டுரைகள் எழுதி வந்துள்ளார்.
மருத்துவத் துறையில் சிறந்த பணியாற்றிய டாக்டர் டி.எம். நாயரை பம்பாயில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டிற்கு அரசே தன்னுடைய பிரதிநிதியாக அனுப்பி வைத்தது. சென்னை மருத்துவக் கழகத்தின் துணைத் தலைவராகவும் விளங்கினார், டாக்டர் டி.எம். நாயர்.
காங்கிரஸ் இயக்கப் பணிகளில்
இந்திய மக்களிடையே ஒற்றுமை ஓங்கிடவும், விடு தலை வேட்கையை உருவாக்கிடவும் தொடங்கப்பட்ட இந்தியத் தேசியக் காங்கிரசில் 1897இல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார், டாக்டர் நாயர். காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்த நாயர் மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டார். காங்கிரஸ் கூட்டங்களிலும் மாநாடு களிலும் தவறாது பங்கேற்றார். காங்கிரஸ் செயற்குழுக் கூட்டங்களில் பல ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கூறி காங்கிரசை வழிநடத்தும் ஆற்றல் மிக்கத் தலை வராகத் திகழ்ந்தார்.
காங்கிரசின் வளர்ச்சியில் நாயரின் பேச்சும் எழுத் தும் பெரும் பங்காற்றின. எனினும் அன்னிபெசண்ட் அம்மையார் எழுதிய ‘இந்தியா விடுதலைக்குப் போராடி யது எப்படி?’ என்ற நூலில் டாக்டர் நாயர் காங்கிரசில் பணியாற்றியதைப் பற்றி இரண்டே இடங்களில் குறிப் பிடுகிறார், 1898இல் சென்னையில் நடைபெற்ற 14 ஆவது காங்கிரஸ் மாநாட்டிலும் அதற்கு அடுத்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற 15ஆவது காங்கிரஸ் மாநாட்டி லும் ‘இந்தியாவின் மருத்துவர்களின் நிலை’ (Status of Indian Officeres in Medical Service) எனும் தீர்மானத்தின் மீது பேசினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
1905ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் சுதேசி இயக்கம் குறித்து விரிவாகப் பேசி னார். 1703, 1705, 1707ஆம் ஆண்டுகளில் அயர்லாந்து நாட்டினர் அந்நியப் பொருள்களைப் பகிஷ்கரித்து, தம் நாட்டு உற்பத்தியைப் பெருக்கினர் என்றும், அதே போன்று அமெரிக்கக் குடியேற்ற நாடுகளும் பிரிட்டிஷ் பொருள்களை விலக்கி தம் நாட்டு உற்பத்தியைப் பெருக்கினர் என்றும் கூறி, மக்களிடையே சுதேசி உணர்வைத் தூண்டினார் டாக்டர் நாயர்.
வங்காளத்தில் பாரிசால் என்ற இடத்தில் காவல் துறையினர் கூட்டத்தைக் கலைப்பதற்கு கொடும் வன் முறையைக் கையாண்டனர். அதை எதிர்த்து நடை பெற்ற சென்னைக் கூட்டத்தில் பேசிய நாயர், “போலீசார் எந்த ஆயுதத்தையும் பயன்படுத்திக் கூட்டத்தைக் கலைக்கவில்லை” என்று அரசு கூறுகின்றது; ஆனால் அங்கு எனது நண்பர் சௌத்திரி தலையில் படுகாய முற்றார். அது எவ்வாறு ஏற்பட்டது? நிச்சயமாக “வந்தே மாதரம்-என்று கோஷமிட்டதால் காயம் ஏற்பட்டிருக் காது” என்றார், (கூட்டத்தில் சிரிப்பு) 1907இல் வட ஆற்க்காடு மாவட்டம், சித்தூரில் நடைபெற்ற மாநாட்டில் தலைமை வகித்தார்.
1908ஆம் ஆண்டு ஆங்கில அரசு டாக்டர் நாயர் அவர்களை இந்தியத் தொழிலாளர் ஆணைய உறுப்பின ராக நியமித்தது. நாயர் இந்தியத் தொழிலாளரின் அவல நிலையைப் பட்டியல் போட்டுத் தனது கண்ட னத்தைப் பதிவு செய்தார். தொழிலாளர் வேலை நேரத் தைக் குறைத்திடப் பரிந்துரைத்தார்.
சென்னை மாநகரவையில்
சென்னை மாநகரில் சிறப்புமிக்க மருத்துவராகத் திகழ்ந்த டாக்டர் நாயர், பொது நலனிலும் அக்கறை கொண்டவராய் விளங்கினார். மக்கள் பணியில் ஈடுபாடு கொண்ட நாயர் திருவல்லிக்கேணி தொகுதியின் பிரதி நிதியாக 1904 முதல் 1916 வரை பன்னிரண்டு ஆண்டு கள் சிறப்புறப் பணியாற்றினார்.
சென்னையில் திருவல்லிக்கேணி தண்டையார் பேட்டைத் தொகுதிகளில் மாநகராட்சிப் பணிகள் குறித்து நாயர் சொற்பொழிவு புரியும் பொழுது, அப்பகுதிகளில் உள்ள குறைகளை அறிந்து கொள்வார். மறுநாள் அக்குறைகளைப் போக்குவதற்கு, மாநகராட்சி ஆற்ற வேண்டிய பணிகள் குறித்த தீர்மானங்களை அவை யில் கொண்டு வருவார். இது அவரது வாடிக்கையான செயலாகும். மாநகராட்சியின் செயல்பாடுகள் குறித்து நிகழும் வாதங்களில் நாயரின் கருத்துரைகள், இடித் துரைகள், நெறியுரைகள் தவறாமல் இடம்பெறும்.
மோலின் (Molyne) என்ற ஆங்கிலேயர் நகராட்சித் தலைவராக இருந்தபோது, நகரசபை விநியோகிக்கும் குடிநீர் பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்பொழுது வழங்கப்பட்ட குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக இருந்தி ருக்கவில்லை. டாக்டர் நாயர் பேசும்போது, “நகர மக்களுக்கு வழங்கப்படும் நீர் குடிநீர் இல்லை; மோலின் மிக்சர்” என்று கிண்டலோடு குறிப்பிட்டார்.
அதற்கு மோலின் பதில் கூறும்போது பெருமளவு நீர் வடிகட்டப்பட்டதென்றும் சிறு அளவு வடிகட்டாத நீர் அத்துடன் கலக்கப்படுகிறது என்றும், முழுவதும் வடிகட் டாத நீரைவிட இது சிறந்ததாகும் என்றார்.
உடனே நாயர், “வடிகட்டிய நீருடன் சிறிதளவு வடி கட்டாத நீரைச் சேர்த்தால் நோய்க் கிருமிகள் அதிகமாக வளரும் என்பதைச் சாதாரண மக்களும் அறிவார்களே; நீங்கள் அறியாதது விந்தையே” என்று குறிப்பிட்டார்.
அவரது பேச்சுத் திறனும், செயற்றிறனும் மக்களை அவர்பால் ஈர்த்தன. சென்னை நகருக்குப் புதிய கழிவு நீர் திட்டத்தின் தேவையை உணர்த்தியவர் நாயர். தண்டையார்பேட்டை கழிவுநீர்த் திட்டம் இவரது முயற்சி யால் நிறைவேற்றப்பட்டது.
நகர சுகாதாரத் துறையுடன் இணைந்திருந்த நகர துப்புரவுத் துறையைத் தனித்துறையாகப் பிரித்து அத்துறை சிறப்பாக இயங்க வழிவகுத்தவர். சென்னை நகரில் சாலைகள் 40 அடிக்குக் குறைவாக இருக்கக் கூடாது என்று திட்டமிட்டுச் செயல்படுத்தியவர். சென்னை நகரின் மேன்மைக்காக அளப்பரிய செயல்கள் புரிந்த வர் நாயர் என்பதால், ‘இந்தியா’ இதழில், “இப்படிப் பட்ட அறிஞர்கள் தான் மாநகராட்சி மக்கள் பணியில் இருக்க வேண்டும்” என்று பாரதியார் பாராட்டி எழுதி யுள்ளார்.
1906ஆம் ஆண்டில் சென்னை மாநகராட்சி, ஒருவரை சட்டசபைக்க உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டும், பாரதியார் நாயரே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற தன் விருப்பத்தை 4.8.1906 அன்று இந்தியா இதழில் எழுதியிருந்தார். மீண்டும் 13.8.1906 இல் பாரதியார், மாநகராட்சியின் சார்பாக டாக்டர் நாயரே, உறுதியாக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று தாம் நம்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். ஆனால் நடந்ததோ வேறாகும்.
16.8.1906 வாக்காளர்கள் 32 பேர்கள் நகரமன்றில் கூடினர். வேட்பாளர்கள் நால்வர் - டாக்டர் நாயர், சர்.பிட்டி தியாகராயர், சர்.வி.சி. தேசிகாச்சாரி, சிவஞான முதலியார் ஆகியோர். வாக்கெடுப்பு தொடங்கியது. டாக்டர் நாயரும், சிவஞான முதலியாரும் தலா 10 வாக்குகள் பெற்றனர். தியாகராயர் 5 வாக்குகளும், தேசிகாச்சாரி 6 வாக்குகளும் பெற்றனர். எவருக்கும் பெரும்பான்மை கிட்டவில்லை என்ற அவைத்தலைவர் அறிவித்ததும், தியாகராயர் தான் விலகிக் கொள்வ தாகப் பெருந்தன்மையுடன் கூறினார். மீண்டும் வாக்கெடுப்பு நடந்தது.
டாக்டர் டி.எம். நாயர் 14 வாக்குகளும், பி.எம். சிவஞான முதலியார் 11 வாக்குகளும், சர்.வி.சி. தேசிகாச் சாரியார் 7 வாக்குகளும் பெற்றனர்.
அவைத் தலைவர் : “தேசிகாசாரியரே, இப்போது விலகிக் கொள்கிறீரா?”
தேசிகாசாரியார் : “நான் விலகிக் கொள்ளமாட்டேன்.”
டாக்டர் டி.எம். நாயர் : “நான் விலகிக் கொள் கிறேன், ஐயா.”
மற்ற உறுப்பினர்கள், நாயர் விலகக்கூடாதென்று முழக்கமிட்டனர். தேசிகாசாரியாரின் நன்மைக்காகத் தான் விலகுவதாகக் கூறினார் நாயர். அதன்பின் நடைபெற்ற வாக்கெடுப்பில் தேசிகாசாரியார் 18 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார்.
“மிகவும் தகுதி பெற்றவரும் அதிக வாக்குகள் பெற்றவருமான டாக்டர் நாயர் விலகிக்கொண்டமை மிகுந்த வருத்தமுண்டாக்குகிறது,,, பொது நலனின் பொருட்டு சொந்த ஆசைகளை அடக்கிக் கொள்ள முடியாத மனிதர்கள் உயர்ந்த ஸ்தானங்களிலிருக்க யோக்கிய தை உடையவர்கள் அல்ல” என்று பாரதியார் இந்தியா இதழில் எழுதியிருந்தார்.
டாக்டர் நாயர் பொதுவாக மாநிலத்திலுள்ள நக ராட்சிகள், மாவட்டக் கழக ஆட்சிகள் (District Boards) ஆகியவற்றை ஊன்றிக் கவனித்து வந்தார். 1910இல் பாலக்காடு நகரசபை கலைக்கப்பட்டதை எதிர்த்துக் கிளர்ச்சி செய்து நகர சபையை மீண்டும் செயல்படச் செய்தார். அப்பொழுது நடைபெற்ற கூட்டத்தில், இரகசியக் காவலதிகாரி ஒருவர் குறிப்புகள் எடுத்துக் கொண்டி ருந்தார். “மீண்டும் நகரவை செயல்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேறும் போது, “இத்தீர்மானம் காவலதிகாரி ஒருவரைத் தவிர மற்ற அனைவராலும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது” என்றார்.
இவ்வாறு சிறப்பாகப் பணியாற்றிவந்த நாயருக்கும் சர். பிட்டி தியாகராயருக்குமிடையே மனக்கசப்பு ஏற்படக் காரணமாயிற்று, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருக்குளம். அக்காலத்தில் அந்தத் திருக்குளம் பாழடைந்து போய், கொசு பெருகவும், நோய் பரவவும் காரணமாயிற்று. ஆதலின் அக்குளத்தினை மண் நிரப்பி மூடிவிட்டு ஆங்கே ஒரு பூங்கா ஒன்றினை உருவாக்கி னால் மக்கள் அதனால் பயன்பெறுவர் எனவொரு தீர்மானம் கொண்டுவந்தார் நாயர். அத்தீர்மானத்தை வன்மையாகக் கண்டித்துத் தோற்கடிக்கச் செய்தார் சர். பிட்டி தியாகராயர். அதன் காரணமாக இருவரின் நட்பில் தொய்வு ஏற்பட்டது.
1914இல் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் திருக்குளத்துக்கு 1908ஆம் ஆண்டில் தீர்மானித்தபடி வரி இல்லாமல் தண்ணீர் விட வேண்டும் என்று நகர வையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நாயர் இத் தீர்மானத்தைக் கடுமையாக எதிர்த்தார். “பார்த்தசாரதி கோயில் குளம் பொதுக்குளமன்று; இக்கோயில் குளத் துக்கு வரியின்றி தண்ணீர்விட்டால் மற்ற கோயில் குளங்களுக்கும் வரியின்றி தண்ணீர் வழங்க வேண்டி வரும். இதனால் நகரவைக்கு வருமான இழப்பு நேரிடும். பல ஆயிரம் ரூபாய் வருமானமுள்ள இந்தக் கோயில், நகரவைக்கு வரி செலுத்தித் தண்ணீர் பெறுவதே நேர் மையாகும்” என்று நாயர் கடுமையாக எதிர்த்தார்.
நாயரின் இப்பேச்சினால் திருவல்லிக்கேணிவாழ் மக்களில் ஒரு சாரார் நாயர் மீது அதிருப்தி கொண்டனர். நாயர் நகரவையிலிருந்து விலகவேண்டும் என்று பேசியும் எழுதியும் வரலாயினர். இதனால் வேதனை யடைந்த நாயர் ‘மதராஸ் ஸ்டாண்டர்டு’ இதழில், நகரவையில் நேர்மையாகவும் நியாயமாகவும் செயல் பட இனி இடமில்லை என்பதால், தான் பதவியி லிருந்து விலகிவிட்டதாகத் தெரிவித்தார். சிலரின் பேச்சால், நடவடிக்கையால் நாயர் பதவி விலகியது, பலருக்கு வருத்தம் தந்தது. அவரது எதிரிகளுங்கூட வருத்தமுற்றனர். பலரும் இராஜினாமாவைத் திரும்பப் பெற வற்புறுத்தினர். நாயர் தன் முடிவை மாற்றவிய லாது என்று கூறிவிட்டார். நாயரின் நேர்மையான தன்னலமற்ற நகரவைத் தொண்டு இத்தகைய வருந் தத்தக்க நிகழ்ச்சியுடன் முடிவுற்றது.
அதன்பிறகு சில காலம் பொதுப் பணியிலிருந்து விலகியிருந்த நாயர், 1914 ஏப்ரல் மாதம் முதலாவது உலகப் போரின்போது, எஸ்.எஸ். சென்னை என்ற மருத்துவ உதவிக் கப்பலில் சிறிது காலம் மதிப்புறு மருத்துவராகப் பணிபுரிந்தார். இப்போர்க்களப் பணியைப் பாராட்டி நாயருக்கு ‘கெய்சர்-1-இந்து தங்கப்பதக்கம்’ (Kaiser-1-Hind. Gold Medal) அவர் மறைவிற்குப்பின் வழங்கப்பட்டது.
சென்னை மேல் சபையில்
சென்னை மாநகராட்சியின் பிரதிநிதியாக, 1906 இல் சட்டமன்ற மேலவை உறுப்பினராக டாக்டர் டி.எம். நாயர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் 1912இல் தேர்தலில் வென்று சட்டமன்ற மேலவை உறுப்பினரா னார். இம்மன்றத்தில் சிறப்பாகப் பணியாற்றி முத்திரைப் பதித்தார்.
கல்வி, சுகாதாரம், மருத்துவம், தொழிலாளர் நலன், தன்னாட்சி போன்ற தலைப்புகளில் அறிவார்ந்த கருத்து களை நாயர் முன்மொழிவார்.
1909ஆம் ஆண்டு மிண்டோ-மார்லி சீர்திருத்தப் படி ஆளுநர் மேலவைத் தலைவராவார். ஆங்கிலமே ஆட்சி மொழி. 1912களில், மன்ற உறுப்பினர் சேலம் வழக்கறிஞர் பி.வி. நரசிம்ம ஐயர், தலைவரைப் பார்த்துக் கேட்டார். “சட்டமன்றத்தில் தமிழில் பேச உரிமை உண்டா? தமிழில் பேசலாமா?” என்று, சட்ட மன்றச் செயலர், “விதிகளைப் பார்த்துத்தான் பதில் கூறமுடியும்”என்று கூறிவிட்டு, சட்டப் புத்தகத்தில் விதிகளைத் தேடினார். நரசிம்ம ஐயர் நின்றுகொண்டே இருக்க, செயலர் விதிகளைத் தேடிக்கொண்டே இருக்க, காலம் கடந்து கொண்டிருந்தது. நாயர், தலைவரைப் பார்த்து, “தலைவர் அவர்களே, சேலம் நண்பர் தமிழில் பேசிக்கொண்டிருக்கட்டும். செயலர் விதிகளைத் தேடிக் கொண்டே இருக்கட்டும். நாம் மன்றத்தை உணவு இடைவேளைக்காக ஒத்திவைப்போம். அதற்குள் செயலர் விதிகளைத் தேடி எடுப்பார்” என்றார். மன்றம் சிரிப் பலைகளோடு ஒத்திவைக்கப்பட்டது.
உணவிற்குப்பின் பிரச்சனையும் எளிதில் தீர்ந்து விட்டது.
1914இல் சென்னை மருத்துவப் பதிவு சட்ட மசோதா (Madras Medical Registration Act) நாயரின் பெருமுயற்சியால் சட்டமாக்கப்பட்டது.
கல்வித் துறையிலும் நாயர் கவனம் செலுத்தி வந்தார். 1915இல் சென்னைப் பல்கலைக்கழக செனட் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். செனட் சபைக் கூட்டம் ஒன்றில் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் ஒரு மொழிநூல் ஆசிரியரைப் பற்றி ஒன்றும் குறிப்பிடப்பட வில்லையே என்றும், அம்மொழி நூலாசிரியர் ஒரு சொற்பொழிவும் ஆற்றவில்லையா என்றும் அவர் செய்த ஆய்வுதான் என்னவென்றும் கேட்டார். ஒரு உறுப்பினர் அதற்கு பதிலளித்தவர், அவரின் ஆய்வினை சாமானியரால் விளங்கிக் கொள்ள இயலாது என்றும், அவ்வாய்வு எளிய ஆங்கிலத்தில் எழுதப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார். உடனே டாக்டர் நாயர், “எளிய ஆங்கிலத்தில் விளக்க முடியாத ஓராய்வு நடை பெறுகின்றது என்றால் அவ்வாய்வு பொய்யாகவும், அல்லது அவ்வாய்வாளர் ஏமாற்றுக்காரராகவும்தான் இருக்கமுடியும்” என்றார். இவ்விதம் பொய்மைக்குத் துணைபோகாதவராகவும், கல்வி வளர்ச்சியில் ஆர்வம் கொண்டவராகவும் நாயர் விளங்கினார்.
இத்தகைய அறிவாற்றல் ஆளுமைத் திறனுடன் பணியாற்றிவந்த நாயருக்கு, மேல் சாதிய ஆணவ ஆதிக்கப் போக்கை நன்கு உணரக்கூடிய வாய்ப்பு 1916இல் கிட்டியது. அந்நிகழ்ச்சியைப் பற்றி உரைப் பதற்குமுன் அவர் சார்ந்திருந்த காங்கிரசில் அமைந் திருந்த குழுக்கள் பற்றி அறிதல் அவசியமாகிறது.
சென்னை மாநிலக் காங்கிரசில் மூன்று குழுக்கள் இயங்கி வந்தன. டாக்டர் நாயர் சென்னை வேப்பேரி யில் ‘லேடி நப்பியா வில்லா’ என்ற வீட்டில் வாழ்ந்து வந்தார். அதனால் அவர் தலைமையில் இயங்கிய அரசியலுக்கு ‘எழும்பூர் அரசியல் (காங்கிரஸ்)’ என்று பெயர். இது பிராமணரல்லாதார் முற்போக்கினை வலி யுறுத்தும் அரசியலாக அமைந்திருந்தது. இதற்கு எதிராக இயங்கி வந்தது “மைலாப்பூர் அரசியல் (காங்கிரஸ்).” இது பிராமண ஆதிக்கம் நிரம்பிய அரசியலாக அமைந் திருந்தது. மூன்றாவது அன்னிபெசன்டின் “அடையாறு அரசியல்”. இதுவும் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தது தான், என்றாலும் மைலாப்பூர் அரசியலோடு இணைந்து எழும்பூர் அரசியலை மிகக் கடுமையாக எதிர்த்து வந்தது. இதுதான் பின்னர் பிராமணர், பிராமணரல் லாதார் அரசியலாக உருவெடுத்தது.
1916ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ((Imperial Legislative of India) நாயர் தோல்வி அடைந்தார். நாயரைக் கடைசிவரை ஆதரிப்பதாக உறுதி சொன்ன வர்கள் தேர்தலின் போது திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பி.எஸ். சீனிவாச சாஸ்திரி என்பவரை முன்மொழிந்து தேர்ந் தெடுத்தனர். அதற்கு முழுமுதற்காரணம் காங்கிரசுக் கட்சியில் இருந்த சாதி வெறியர்களே - “மைலாப்பூர் காங்கிரஸ் அரசியலும்”, “அடையாறு அரசியலும்” எனக் குற்றம் சுமத்தினார். இதனால் காங்கிரசுக் கட்சி யிலிருந்து அவர் விலகினார்.
டாக்டர் டி.எம். நாயரும் சர்.பி. தியாகராயரும் காங்கிரசுக் கட்சியில் இருந்தபோது பார்ப்பனரல்லாத மக்களுக்காகப் பாடுபட்டனர். அவர்களின் மனப்போக் கை நன்கு அறிந்த டாக்டர் சி. நடேசனார், அவர்களை அணுகித் தாம் நிறுவிய திராவிடச் சங்கத்தின் நோக்கம் மற்றும் கொள்கைகளை விளக்கி அவர்களின் ஆதரவைப் பெற்றார். அவர்களும் காங்கிரசுக் கட்சியை விட்டு விலகி, 1916ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் “தென் னிந்திய நல உரிமைச் சங்கம்” என்னும் நீதிக்கட்சி யைத் தொடங்கினர்.
நீதிக்கட்சியை உருவாக்கியதில் நடேச முதலியாரும் தியாகராயச் செட்டியாரும் கூட்டாளிகளாக இருந்திருப் பினும் கட்சியின் அமைப்பிற்கும், விதிகளுக்கும் கொள் கைகளுக்கும் பெரும்பான்மையும் நாயரே பொறுப் பாவார். நீதிக்கட்சியை வடிவமைத்ததில் உள்ளூர்த் தாக்கங்களைவிட மேற்கத்திய அரசியல் மதிப்பீடுகளின் தாக்கமே அவரிடம் மிகுதியும் செல்வாக்குச் செலுத்தின. நீதிக்கட்சி கொள்கையில், பிரிட்டிஷ் சனநாயகவாதிகளின் மரபும் பிரெஞ்சுத் தீவிரவாதிகளின் மரபும் மணம் பரப்புவதைக் காணலாம்.
நாயர் இங்கிலாந்தில் இருந்த காலத்தில் கிளாட்ஸ்டன் என்ற ஆங்கிலேய அரசியல் அறிஞரின் லிபரலிசக் கோட்பாடுகளால் கவரப்பட்டவர். பிரெஞ்சு நாட்டின் புரட்சியாளர் ஜியார்ஜியஸ் கிளமென்சோவின் (Georges Clemenceau 1841-1929) ‘ரேடிகல் ரிபப்ளிகன் கட்சியின்’ (Radical Republican Party) தாக்கம் நாயருக்கு இருந்தது. அக்கட்சியின் விதிமுறைகளைப் பின்பற்றியே தன் இயக்கத்தைக் கட்டமைத்தார்.
அதனால்தான் கட்சியின் பெயர் South Indian Liberal Federation என வைக்கப்படலாயிற்று. இதன் தமிழாக்கம் ‘தென்னிந்தியர் விடுதலைக் கழகம்’ என்றி ருந்திருக்க வேண்டும். ஆனால் ‘தென்னிந்திய நல உரிமைச் சங்கம்’ என்றே வழங்கப்பட்டு வருகிறது.
தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் தொடங்கு வதென்று முடிவு செய்யப்பட்ட முதல் கூட்டத்திலேயே கட்சிக்கான முதல் பணியாகப் பத்திரிகை தொடங்குவ தெனத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி நடத்திய தமிழ் இதழ் ‘திராவிடன்’. தெலுங்கு ஏடு ‘ஆந்திரப்பிரகாசிகா’ இவ்ஏடுகளுக்கு, முறையே பக்தவத்சலம் பிள்ளையும், பார்த்தசாரதி நாயுடுவும் ஆசிரியர்களாயிருந்தனர்.
26.2.1917இல் தொடங்கப்பட்ட ஆங்கில ஏடான ‘ஜஸ்டிஸ்’க்கு நாயரே ஆசிரியராக இருந்தார். இந்த ஏட்டிற்கான பெயரை நாயர் பிரெஞ்சு நாட்டு ஜியார் ஜியஸ் கிளமென்சோ (Georges Clemenceau 1841- 1929) 1880 முதல் நடத்திய ‘லா ஜஸ்டிஸ்’ (La Justice) என்ற ஏட்டின் பெயரைத் தழுவி அமைத்திருந்தார்.
1881இல் இந்துச் சட்டத்திற்கான தனது பணியில் ஜே.எச். நெல்சன் என்ற ஆங்கிலேயர் பிராமணர், பிராமணரல்லாதார் என்ற பகுப்புசார்ந்த சொற்களைப் பயன்படுத்தியது முதல் 1916ஆம் ஆண்டுவரை பலரும் அச்சொல்லை ஆங்காங்குப் பயன்படுத்தி வந்தனர் என்றாலும் பிரெஞ்சு நாட்டு ராடிக்கல் ரிபப்ளிகன் பார்ட்டி பயன்படுத்திய பிரபுக்கள் அல்லாதார் என்ற சொல்லின் தாக்கமும் சேர்ந்து தான் நாயரிடம் பிராமணரல்லாதார் என்ற அடையாளமாக உறுதிபெற்றது.
1917ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ஆம் நாள் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் முதல் மாநாட்டில் டி.எம். நாயர் அவர்களைப் பற்றி தியாகராயர் தனது தலைமை உரையில்,
“அவர் காட்டிய வழியிலேயே நாம் இப்போது களத்தில் நிற்கிறோம். நாம் நம்முடைய முன்னேற்றப் பாதையில் சென்று ஆற்ற வேண்டிய கடமைகளுக்கும் அவரே தலைவராய் இருந்து வழிகாட்ட வேண்டும்” என்றார்.
நாயர் நீதிக்கட்சியில் எந்தப் பதவியையும் ஏற்றுக் கொள்ளாமல் 24 செயற்குழு உறுப்பினர்களில் ஒருவ ராகத் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வழி நடத்தினார். நீதி (Justice) என்ற ஆங்கில இதழின் ஆசிரியர் பொறுப்பை மட்டும் அவர் ஏற்றுக்கொண்டார்.
“நீதிக்கட்சியின் நோக்கம் பார்ப்பனரல்லாத மக்களைப் பல வகைகளிலும் மேம்பாடுறச் செய்வதே அல்லாமல், பார்ப்பனர்களை வீழ்த்த வேண்டும் என்ப தல்ல. எங்களுக்குச் சமூக நீதி வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்குரிய அரசியல் உரிமை வேண்டும். பிரிட்டிஷ் அரசு அதற்கு ஏற்றபடி சலுகைகளைப் பெருக்கித் தரவேண்டும். நீதிக்கட்சி இந்தியாவிற்குத் தன்னாட்சி உரிமை கோருகிறது. அதேநேரத்தில் பிற் படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும் பாதுகாப்பும் அளிக்கக் கூடியதாக அந்தத் தன்னாட்சி இருக்க வேண்டும். அதுவே எங்கள் குறிக்கோள். இந்தக் குறிக்கோளை இங்கு விளக்கி வருவது போன்றே இங்கிலாந்திலும் கூட்டம் போட்டும், எழுதியும் வருவதற்காகத்தான் நான் ஆண்டுதோறும் தவறாமல் இங்கிலாந்து சென்று வருகிறேன்” என்று கூறினார் டாக்டர் நாயர்.
டாக்டர் நாயர் நீதிக்கட்சிக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் பேராதரவைத் திரட்டித் தந்ததில் நிகரற்றவராக விளங்கினார்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் ஏரிக்கரை மைதானத்தில் 1917ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி நாயரை அழைத்து வந்து பெருவாரியான மக்கள் திரண்ட மாநாடு ஒன்றை சென்னை நகர ஆதிதிரா விடர் அமைப்புகள் நடத்தின. இக்கூட்டம் ஸ்பர்டாங்க் சாலைக் கூட்டம் (The Spur Tank Meeting) என்று அழைக் கப்படுகிறது. பெரும் மக்கள்திரள் என்ற முறையிலும் நாயரின் ஆவேசமான உரை என்ற விதத்திலும் இக் கூட்டம் நீதிக்கட்சி வளர்ச்சியிலும் திராவிட இயக்க வரலாற்றிலும் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
முதலில் எழும்பூர் ஏரி மைதானத்தில் இம்மாநாடு நடத்துவதற்கு மைதானத்தில் விளையாட வரும் உயர் வகுப்பினர் தடை ஏற்படுத்தினர். அப்போது அத்தடை யை நீக்கி மாநாடு நடப்பதற்கு டி.எம். நாயர் உதவினார்.
மாநாட்டில் பேசிய டி.எம். நாயர் பஞ்சமர்கள் இது போன்று அடக்கப்படுவார்களானால் அதை மீறுவதற் கான வழி வன்முறையற்றதாகவே இருக்குமென்று எதிர்பார்க்க முடியாது என்றார். மேலும் நாயர், அம் மக்களை விழித்தெழுந்திடுமாறு வேண்டுகோள் விடுத் தார். அங்ஙனம் எழுந்து நிற்காவிடின் என்றென்றுமாக வீழ்ந்துபோவோம் என்றும் எச்சரித்தார்.
டி.எம். நாயர் அவர்களின் உரை, வரலாற்றுச் சிறப்புமிக்க உரை எனப் பலராலும் புகழ்ந்து பாராட்டப் பட்டது. இந்தக் கூட்டத்தில் பார்ப்பன இளைஞர்கள் சிலர் கலந்துகொண்டு தகராறு செய்தனர். அதன் பின்னர் அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாகப் பாரதியார் தனது கட்டுரையில்,
“சென்னைப் பட்டினத்தில் நாயர் சாதிக் கூட்ட மொன்றில் பறையரைவிட்டு இரண்டு, மூன்று பார்ப்பனர்களை அடிக்கும்படி தூண்டியதாகப் பத்திரிகை களில் வாசித்தோம். இராஜாங்க விஷயமான அபிப்ராய பேதமிருந்து இதை சாதி பேதச் சண்டையுடன் முடிச்சுப் போட்டு அடிதடி வரை கொண்டு வருவோர் இந்த தேசத்தில் இந்து தர்மத்தின் சக்தியை அறியாதவர்கள்” என்றும்,
என்னடா இது இந்து தர்மத்தின் பகிரங்க விரோதிகள் பறையரைக் கொண்டு பிராமணரை அடிக்கும்படி செய்யும் வரை சென்னைப் பட்டணத்து இந்துக்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா?
அடே, பார்ப்பானைத் தவிர மற்ற சாதியாரெல் லாம் பறையனை அவமதிப்பாகத்தான் நடத்துகின்றனர். அவர்கள் எல்லோரையும் அடிக்கப் பறையரால் முடியுமா? என்று எழுதியிருந்தார். மேலும் நீதிக்கட்சியின் ஒப்பற்ற தலைவர் டி.எம். நாயரை “இந்து மத விரோதி” என அடையாளப்படுத்தினார்.
“சாதிகள் இல்லையடி பாப்பா குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொலல் பாவம்
நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்”
என எழுதிய கவி பாரதி சாதியக் கலவரத்தைத் தூண்டும் வகையில் எழுதியிருப்பது காலக் கொடுமையாகும். நடுநிலை தவறிவிட்டார் பாரதி என்றே எண்ணத் தோன்றுகிறது.
இந்நிலையில் 1917ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 20ஆம் நாள், இந்திய அமைச்சர் மாண்டேகு “இந்திய அரசியல் சீரமைப்பு” குறித்த ஆணையை வெளியிட் டார். இந்த ஆணையின் நோக்கம் இந்தியருக்குப் ‘பொறுப் பாட்சி’ தருவதாக இருந்தது. இவ்வாணை வெளியிட்ட பின், இந்தியத் தலைவர்களின் கருத்தறிய மாண்டேகு இந்தியா வந்தார். 17.12.1917இல் மாண்டேகும் இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டும் சென்னை வந்தனர். அவர்களது வருகையையடுத்து தென்னிந்திய நலச் சங்கம், சர். பிட்டி. தியாகராயர் தலைமையில், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் முதலியோருடன் ஒரு குழுவாகச் சென்று, “பார்ப்பனரல்லாதார்க்குத் தனி வாக்குரிமையுடன் கூடிய அரசியல் சீரமைப்பு தேவை” என விண்ணப்பம் செய்தனர்.
8.7.1918இல் மாண்டேகு செம்ஸ்போர்டு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில் நீதிக்கட்சியின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. மாறாக வகுப்புவாரி உரிமை வழங்க உரிய ஆய்வு நடத்திட ‘சவுத்பரோ’வின் தலை மையில் (South Borough) வாக்குரிமைக் குழு (Franchise Committee) அமைக்கப்பட்டது. இக்குழுவில் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கைக்கு எதிரான கருத்துக் கொண்ட வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியும், சுரேந்திர பானர் ஜியும் உறுப்பினராக அமர்த்தப்பட்டனர்.
சமூக நீதிக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவம் மாண்ட்-போர்டு அறிக்கையினால் அடைய இயலாது என்ற நிலையில் நீதிக்கட்சி வாக்குரிமைக் குழுவினை நிராகரித்தது.
மாண்டேகு-செம்ஸ்போர்டு அறிக்கை என்பதனை டாக்டர் நாயர், ‘மாண்ட்-போர்டு’ அறிக்கை என்று சொல்லாக்கம் செய்து எழுதியும் பேசியும் வந்தார். பின் அனைவரும் அவ்வாறே எழுதியும் பேசியும் வந்தனர்.
சமூக நீதிக்கெதிரான நிலையே வாக்குரிமைக் குழு எடுக்கும் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி எனத் தெளிவானதால், தாதாபாய் நௌரோஜி இங்கி லாந்தில் அளித்த அறிவுரையின்படி டாக்டர் நாயர் இங்கிலாந்து செல்வதென முடிவெடுத்தார். 31.3.1918 இல் நீதிக்கட்சியின் தஞ்சை மாநாட்டில் டாக்டர் நாயர் தலைமையில் ஒரு குழுவை இங்கிலாந்து அனுப்புவ தெனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் டாக்டர் நாயருக்கு மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதி கிடைத்தது.
19.6.1918இல் இங்கிலாந்து அடைந்த டாக்டர் நாயர் ‘லிவர்ப்பூர்’ நகரை அடைந்தார். நோய்க்குச் சிகிச்சைப் பெற அனுமதி பெற்றுவந்த டாக்டர் நாயர், இங்கிலாந்தில் இருக்கும்வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற தடை விதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிறிதும் மனந்தளராமல் தனது இங்கிலாந்து நாட்டு நண்பர்களிடம் தான் வந்த நோக்கத்தை எடுத்துக் கூறினார்.
அவரது நண்பர்கள் ‘லார்டு லே மிங்டன்’, ‘லார்டு செல்போன்’ இருவரும் டாக்டர் நாயருக்கு விதித்தத் தடை அநீதியானது என்றும், அதனை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசி னார்கள். லார்டு சைடன்காம், டாக்டர் நாயரின் தன்னல மற்ற சேவையைப் பாராட்டினார். பாட்டாளி மக்களின் குறைகளையும், அவர்களின் உரிமைக்கான போராட் டங்களையும், எடுத்துரைக்கவல்ல ஒரே இந்தியர் டாக்டர் நாயர் என்றும் கூறி, அவருக்கு விதிக்கப்பட்ட வாய்ப்பூட்டினை நீக்குவதோடு அவரை நாடாளுமன்றத் தில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார். அதன் பின்னர் நாயருக்கு விதிக்கப்பட்ட தடை விலக்கப்பட்டது.
டாக்டர் நாயர் 1918 அக்டோபர் 2ஆம் நாள் இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றினார். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இல்லாத அரசியல் சீர்திருத்தம் தோல்வியையே தழுவும் என் றார். 1909இல் இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டதைப் போலவே பிராமணரல்லாதாருக்கும் வகுப்புவாரி இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் பேசினார். மேலும் இந்தியாவில் மதத்தின் பேராலும், சாதியின் பேராலும் நடைபெறும் கொடுமைகளைப் பற்றியும் பேசினார்.
இதன்பின் நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங் களில் பிராமணரல்லாதாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கோரிக்கை விவாதங்களில் இடம்பெற்றது. பிரிட்டிஷ் இதழ்களில் நீதிக்கட்சியின் கொள்கை முழக்கங்கள் இடம்பெற்றன. பிரிட்டிஷ் மக்களின் கவனத்தையும் அவை கவர்ந்தன.
இவ்வாறு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஆதர வையும், மக்களின் ஆதரவையும் பெற்றுக்கொண்டு, 1919 சனவரி 7இல் டாக்டர் நாயர் வெற்றிப் பெரு மிதத்துடன் சென்னை வந்தடைந்த பிறகு ‘சவுத்பரோ குழு’ அறிக்கையை வெளியிட்டது. அதில் பிராமணரல் லாதாருக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவ உரிமை வழங்கப்படவில்லை.
ஆதலால், நீதிக்கட்சி மீண்டும் டாக்டர் நாயர் தலைமையில் ஒரு குழுவை இங்கிலாந்துக்கு அனுப்பத் தீர்மானித்தது. டாக்டர் நாயர் நீரிழிவு நோயினால் மிகவும் நலிவுற்றிருந்தார். தன் நலிவுற்ற உடல் நிலையைப் பற்றிச் சிந்தியாது, பிராமணரல்லாதாரின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, 1919 மே 6ஆம் தேதி மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணமா னார். சூன் 19ஆம் தேதி இங்கிலாந்தை அடைந்தார். இங்கிலாந்தில் அவர் உடல்நிலை கவலைக்கிடமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் லார்டு செல்போர்ன் அவர் களிடம் சூலை 18ஆம் தேதி நாயரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால் டாக்டர் நாயர் சூலை 17ஆம் தேதி காலை 5 மணி அளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் ‘கோல்டன் கிரீன்’ என்ற இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச்சென்று இந்திய முறைப்படி எரியூட்டப்பட்டது. இறுதிப் பயணத்தில் நீதிக் கட்சித் தலைவர்களும் அவரது ஐரோப்பிய நண்பர் களும் கலந்துகொண்டனர். அப்போது இங்கிலாந்தில் இருந்த மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் எவரும் பங்கேற்கவில்லை. டாக்டர் நாயரின் இணைபிரியா நண்பர் என்று அறியப்பட ‘இந்து’ கஸ்தூரி ரங்க ஐயங்கார் கூட கலந்து கொள்ளவில்லை.
“போராட்டத்தைத் தொடங்கி அப்போராட்டக் களத் திலேயே உயிரைத் துறந்தார்”. காலம் தந்த மகத்தான தலைவன். அவர் நினைவைப் போற்றி அவர் கொண்ட கொள்கைகளை ஏற்று அவர் வழி நடப்போம். வாழ்க அவர் புகழ்!
17.7.2017 அன்று டாக்டர் நாயர் நினைவு நாள்.