தேர்தல்களைப் பற்றி அடிக்கடி நாம் எழுதி வந்திருக்கிறோம். அதாவது தேசத்தின் பெயரையும் காங்கிரசின் பேரையும் சொல்லிக்கொண்டு பார்ப்பனர்கள் பதவி பெறுவதற்காகவும், அவர்களுக்கு கிடைக்காது என்று தோன்றும் சமயங்களில் உண்மை சூத்திரர்களான, அவர்கள் அடிமைகளுக்காவது கிடைக்கும்படி பார்க்கவுமே இதுவரை வேஷம் போட்டுக்கொண்டு வந்தார்கள், இப்போதும் போடுகிறார்கள், இனியும் போடப்போகிறார்கள்.

periyar 440இதைப்பற்றி சுமார், 5, 6 வருஷ காலமாகவே நாங்கள் வாதாடி வரு கிறோம். நாம் காங்கிரசிலிருந்த காலத்திலும் ஒவ்வொரு சமயத்திலும் காங்கிரசின் பேரால் யாரும் தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்றும் சொல்லி ஒவ்வொரு தீர்மானத்தையும் எதிர்த்து அனேகமாக வெற்றி பெற்றுக்கொண்டே வந்தோம். கடைசியாக ஸ்ரீமான்கள் வரதராஜுலு நாயுடும், கல்யாணசுந்தர முதலியாரும் பார்ப்பனர்களுக்கு உடந்தையாகி காஞ்சீபுரம் மகாநாட்டில் இதை நிறைவேற்ற அனுமதித்து விட்டார்கள். அந்த சமயத்தில் கூட நமக்கு அதை எதிர்த்துப் பேச சவுகரியம் கொடுக்காமல் நாம் தண்ணீர் சாப்பிடுவதற்குள் இந்த தீர்மானத்தை பிரேரேபித்து ஆமோதித்து முடித்து விட்டார்கள் என்றும், நாம் தண்ணீர் சாப்பிட்டு திரும்பி பார்த்ததும் நம்மை எல்லோரும் பார்த்து ஏமாந்து போய் விட்டாயே என்று சிரித்தார்கள் என்றும், அப்போதே “குடி அரசில்” எழுதி இருக்கிறோம். அது முதல் காங்கிரசின் பேரால் தேர்தலுக்கு நிற்பது என்பதும், அதுவும் பார்ப்பனர்களுக்கு வேண்டியவர்களைத்தான் நிறுத்துவது என்பதும், வழக்கமாய் வந்து கொண்டே இருக்கிறது. அதற்கு முன்னால் கூட காங்கிரசின் பேரால் பார்ப்பனர்கள் தேர்தல் நடத்துவதை நாம் ஆங்காங்கு போய் கண்டித்தும் வந்திருக்கிறோம். நமக்கு விரோதமாக பார்ப்பனரல்லாத பத்திரிகைகளும் கூட நம்மை கண்டித்து காங்கிரசுக்காரருக்கே ஓட்டு கொடுக்கவேண்டும் என்று எழுதி வந்தன. இந்த கொடுமைகளே நம்மை வகுப்புவாரி தத்துவத்தை இன்னும் அதிகமாக வலியுறுத்தவும் செய்தன. அதற்கும் விரோதமாக அனேக பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும் கூட எழுதியும் வந்தன. இவ்வளவும் இந்த 2, 3 ´ திய ‘குடி அரசி’னால் வெளியாகி பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும், தலைவர்களும் உண்மையுணர்ந்து இப்போதுதான் காங்கிரசுக்கு விரோதமாகக்கூட தேர்தல் பிரசாரம் செய்யவும் காங்கிரசுக்கு விரோதமாய் வெற்றி பெற்றவர்களை ஆதரிக்கவும் முன் வரக்கூடிய நிலைமை வந்திருப்பதோடு காங்கிரசுக்கும் காங்கிரசுக்காரர் என்போர்கள் செலவு செய்யும் பணத்திற்கும் விரோதமாய் பொது ஜனங்கள் ஓட்டு செய்யவும் முன் வந்து விட்டார்கள். இது ஒரு பெரிய கண் விழிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

அதோடு கூட தொழிலாளர்கள் அரசியல் கட்சிகளில் சேரக்கூடாது, தொழிலாளர்களுக்கென்று தனிக்கட்சி இருக்க வேண்டும், தொழிலாளர்கள் தங்கள் தொழிலாளர் கட்சியின் பேராலேயே தேர்தலில் நிற்கத் தகுந்த யோக்கியதை அடையவேண்டும், அரசியல்காரர்களை நம்பக்கூடாது, அவர்கள் அயோக்கியர்கள், முதலாளிகளுக்கு திருட்டுத்தனமாய் உதவி செய்து தங்கள் சுயநலம் பெறுவதற்காக தொழிலாளர்களை ஏமாற்றுகிறவர்கள் என்றும் இந்த 4, 5 வருஷமாய் நாம் சொல்லிக் கொண்டும் எழுதிக்கொண்டும் வருவது யாவருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக ஒரு காலத்தில் நாம் காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயிருக்கும் போது கோயமுத்தூரில் ஒரு தொழிலாளர் கூட்டத்தில் இம்மாதிரி பேசினதற்காக நம்முடைய வழிப் பயணச் செலவை அதாவது காங்கிரஸ் சம்மந்தமாய் நாம் சுற்றுப் பிரயாணம் செய்த பிரயாணச் செலவை ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்காரும் வரதராஜுலு நாயுடுவும் ஒரு கமிட்டி மீட்டிங்கில் சொன்னார்கள். அப்போதும் நாம் இதையே தான் சொன்னோம்.

இன்றைய தினம்தான் அது தொழிலாளருக்கும் மற்றும் தொழிலாள நண்பர்களுக்கும் நிஜமான நாளாயிற்று இப்போது எங்கு பார்த்தாலும் வரிசையாக காங்கிரசு அபேக்ஷகர்கள் என்போர்கள் தோல்வி அடைந்து வருவதும், காங்கிரஸ் அபேக்ஷகர்கள் அல்லாதவர்கள் மற்ற எந்த கட்சியாரானாலும் ஒரு கட்சியிலும் சேராதவர்களானாலும் வெற்றி பெறுவதும் பத்திரிகைகளில் பார்த்து வருகிறோம். இந்நிலைமை நமது நாட்டில் ஏற்பட்டிருப்பதற்கு உண்மையாளர்கள் சந்தோஷப்படாமல் இருக்கவே முடியாது. நாட்டில் கொஞ்சமாவது கண் விழிப்பு ஏற்பட்டிருக்கிறதென்பதை யாவரும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த விழிப்பை பாழாக்காமல் மக்களை மேலும் மேலும் கண் விழிக்கச் செய்தால் நாட்டையும், மக்களையும் வஞ்சகர்கள், அயோக்கியர்கள், சுயநலக்காரர்கள் கையிலிருந்து தப்புவித்த பலனை அடையலாம் என்பது நமது ஆசை.

உண்மையிலேயே சென்னைத் தொழிலாளர் சார்பாக வெற்றி பெற்ற ஸ்ரீமான் செல்வபதி செட்டியார் தேர்தலின் மூலம் நமக்கு புதிய ஊக்கம் உண்டாகிறது. நாம் செல்வபதி செட்டியார் வெற்றி பெறமாட்டார் என்றும் வீணாக தொழிலாளர்களுக்கு முதல் முதல் தோல்வி உண்டாகக்கூடாது என்றும் கருதி ஸ்ரீ செல்வபதி செட்டியாருக்கும் ஸ்ரீமான் கல்யாணசுந்தர முதலியாருக்கும் பின்வாங்கிக்கொள்ளும்படி கடிதம் எழுதினோம். ஏனென்றால் நாம் சென்னைக்கு சென்ற வாரம் போயிருந்த பொழுது தொழிலாளர் தேர்தலைப்பற்றித் தான் சில கனவான்களையும் அதில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்தவர்களையும் விசாரித்தோம். அவ்விசாரணையில் தொழிலாளர் பிரதிநிதி வெற்றி பெற முடியாதென்றும் எதிராளிகளால் ஓட்டர்களுக்கு தாராளமாய் பணம் வினியோகிக்கப்படுகிறதென்றும் இது வரையில் ஆயிரக்கணக்காய் சிலவாகிவிட்டதென்றும், இனியும் செய்யக் காத்திருக்கிறார்கள் என்றும் தெரிந்தோம். அதிலிருந்து நமக்கு நம்பிக்கை இல்லாததால் இம் மாதிரி யோசனை சொன்னோம். அப்படி இருந்தும் இன்றையதினம் தொழிலாளருக்கு வெற்றி என்று பார்த்ததும் நாம் எவ்வளவு தூரம் மகிழ்ச்சி அடைந்திருப்போம் என்பது யோசிப்பவர்களுக்கு விளங்கும்.

ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் வெற்றியில் மகிழ்ச்சி கொள்ளத்தக்க புதிய விஷயம் ஒன்றும் இல்லை. ஸ்ரீமான் ‘டூடல்’ முதலியார் இதற்காக எவ்வளவோ தூரம் பார்ப்பனரல்லாதாரை பொம்மை போட்டு வைதும் வீணாய் போய் விட்டதே என்று பரிதாபப்படாமல் இருக்க முடியாது. மற்றபடி ஜனாப் அமீத்கான் தோல்வியிலும் அதிசயத்தக்க விஷயம் ஒன்றுமில்லை. மற்ற தேர்தல்களும் சூதாடுவது போலவே இரண்டில் ஒன்று என்பதாக முடிந்திருக்கின்றன. எனினும் “காங்கிரஸ்”, “தேசீயம்”என்பவைகளின் புரட்டு வெளியாய் வருகிறது என்பதைத் தவிர வேறு விசேஷமில்லை. ஸ்ரீமான் செல்வபதி செட்டியார் முதலியவர்கள் வெற்றியினால் கார்ப்பொரேஷனுக்கு பிரமாதமான தன்மை வந்துவிடும் என்பதாகவும் நாம் மகிழ்ச்சியடையவில்லை. நாட்டிற்கு உண்மையான நன்மையாய் தொழிலாளர் நன்மைக்காக அவர்களது ஆதிக்கம் வளர அஸ்திவாரக்கல் பிரம்பூர் தேர்தலில் போடப்பட்டிருக்கிறது என்பதைப் பொறுத்தவரை மகிழ்ச்சி அடைகிறோம். அய்யோ பாவம் அய்யங்கார்களே! அவர்களது கோஷ்டியார்களே!! தினமும் அமாவாசை இருட்டு ஏற்படாது. தினமும் திருட்டு கிடையாது. “பலநாள் திருடன் ஒருநாள் அகப்பட்டுப் போவான்” என்பது உங்கள் விஷயத்தில் மாத்திரம் ஏன் பலிக்காமல் போகும் என்று எண்ணி ஏமாறுகிறார்கள் என்று உங்களுக்கும் சாமாதானம் சொல்லி விட்டு, சென்னை தவிர வெளியிடங்களில் உள்ள உங்களைப் பின்பற்றுகிறவர்களையும் இனியாவது யோக்கியமாய் நடந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி இதை முடிக்கிறோம்.

(குடி அரசு - கட்டுரை - 14.08.1927)

Pin It