கொஞ்ச காலமாக நம் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் மக்கள் தங்களது சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீய அடிமைத் தன்மையில் இருந்து விடுபட வேண்டும் என்கிற உணர்ச்சி பெறுகிற காரணத்தால் இப்பார்ப்பனர்கள் இவ்வுணர்ச்சியை அடக்கி ஒழிக்க பல வழிகளிலும் முயற்சித்து வருவது பொது விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்தி வரும் யாவரும் அறிந்ததே. அதாவது 10 வருஷங்களுக்கு முன்னால் டாக்டர் நாயர் பெருமானும், தியாகராய பெருமானும் அரசியல் துறையிலும், காங்கிரஸ் இயக்கத்திலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும், அக்கால அரசியல் காங்கிரஸ் கான்பரன்சுகளில் தலைமை வகித்தல், அமிதவாதமான சொற்பொழிவு நிகழ்த்துதல், கமிட்டியில் சாட்சி சொல்லுதல், தேசீய அபிப்பிராயம் சொல்லுதல், இரகசிய போலீசாரின் கண்காணிப்புக்கு ஆளாகுதல் முதலிய காரியங்களில் தற்காலம் மிக பெரிய தேசபக்தர், தேசத் தொண்டர், தேசீய வீரர், தேசீயத் தலைவர் என்று சொல்லப்படுவார்கள் எவர்க்கும் இளைத்தவர்கள் அல்லாதாராயிருந்து வந்ததும் யாவரும் அறிந்ததே.

இப்பொழுதாவது பார்ப்பனரல்லாதார் “தேசபக்தர்” ஆவதென்றால் வெகுசுலபமான காரியம். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு விரோதம் என்று படும்படியாய் பார்ப்பனரல்லாதார் கட்சியென்று ஒன்றிருப்பதால் அக்கட்சியை வைவதற்கென்றோ, அதற்கு விரோதமாய் பிரசராம் செய்வதற்கென்றோ ஒரு பூனைக் குட்டியோ, நாய்க்குட்டியோ வந்தாலும் நமது பார்ப்பனர்கள் அதற்கும் ஜே! போட்டு, மாலை இட்டு, வண்டியில் வைத்து இழுத்து, பத்திரிகைகளின் மூலம் தலைவர் தலைவர் என்கிற பட்டமும் சூட்டி வயிற்றுப் பிழைப்புக்கும் கூட ஆதரவு தேடிக் கொடுப்பதும், தினக்கூலி, மாதக்கூலி கொடுப்பதுமான சவுகரியம் இருப்பதால் யார் வேண்டுமானாலும் தேசபக்தரும் தலைவரும் ஆகிவிடலாம். இப்படிப் போல் இல்லாமல் பார்ப்பனரல்லாதார்களை முற்போகவொட்டாமல் தடுத்து சூழ்ச்சி செய்து அடக்கி ஆளும் வஞ்சக காலத்தில் தேசத் தலைவராகவும், தேசபக்தர்களாகவும் ஒரு பார்ப்பனரல்லாதார் விளங்கி இருந்தனரென்றால் அவர்கள் எவ்வளவு தீவிர தேச பக்தியும் தைரியமும் உடையவர்களாயிருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களே இப்பார்ப்பனர்களின் உபத்திரவத்தையும் சூழ்ச்சியையும் கொடுமையையும் வஞ்சகத்தையும் பொறுக்க மாட்டாமல் தேசத்தைவிட சுயமரியாதையே பெரிதென்றெண்ணி, பார்ப்பனர் ஆதிக்கம் பார்ப்பனர் கூட்டுறவு முதலிய பார்ப்பன சம்பந்தமுள்ள அரசியலை உதறித் தள்ளி விட்டு வந்து தனியாக பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்கும், முன்னேற்றத்திற்கும், சமத்துவத்திற்கும் ஆக ஒரு இயக்கத்தை ஆரம்பித்ததும், அதை ஒழிக்க பார்ப்பனர்கள் செய்த பிரயத்தனங்களும், அதற்காக பார்ப்பனரல்லாதாரை கை ஆயுதமாக உபயோகித்துக் கொண்டதும் அனுபவப்பூர்வமாயும் பிரத்தியக்ஷ பூர்வமாயும் யாரும் அறிந்ததே.

periyar05அது போலவே இப்போதும் இப்பார்ப்பனர் சூழ்ச்சியில் சிக்கி முன் அனுபவப்பட்டவர்களைக் கண்டும் புத்தி வராமல் தாங்கள் அவர்களைவிட அனுபவசாலிகள், புத்திசாலிகள், கெட்டிக்காரர்கள் என்பதாகவோ, அலட்சிய புத்தியாலோ பார்ப்பன மாய்கையில் ஏமாந்தோ சிலர் சிக்கி விழுந்து பார்ப்பனரல்லாதார் இயக்கத்தையும் கெடுத்து மக்களையும் சுயநலக்கார நயவஞ்சகர்கள் வசம் காட்டிக் கொடுத்து புதிதாக பார்ப்பன அனுபவம் பெற்று அவர்களின் யோக்கியதை தெரிந்து டாக்டர் நாயர் பெருமான், தியாகராயர் போன்று விலகி முன்னிலும் அதிகமாய் அவ்வியக்கத்தை பரவச் செய்து வருகிறார்கள் என்பதும் யாவரும் அறிந்ததே. ஆனால் நமது பார்ப்பனர்களுக்கு தாங்கள் முன் சொல்லப்பட்டவர் இயக்கங்களை ஒழிக்க பிரயத்தனப்பட்ட காலத்தில் சவுகரியமேற்பட்டது போல் இப்போது சவுகரியமேற்படவில்லை. ஏனெனில் பாமர ஜனங்கள் கண் விழித்துக் கொள்ளத்தக்க நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தவிர பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை திட்டவும், அழிக்கவும் முன் ஆள்கள் கிடைத்த மாதிரி பார்ப்பனரல்லாதாரில் மரியாதையும் யோக்கியதையும் பாமர ஜனங்கள் நம்பத்தகுந்த நிலைமையும் உடைய ஏமாந்த சோனகிரிகளாக யாரும் கிடைக்கவில்லை. ஒவ்வொருவராக நழுவியும் விட்டார்கள், நழுவிக் கொண்டேயும் வருகிறார்கள். ஆதலால் வெறும் வயிற்றுச் சோற்று ஆசாமியும், தினக்கூலி மணிக்கூலி ஆசாமிகளும் தவிர வேறு யாரும் கிடைப்பதுமில்லை. இதனால் பார்ப்பனர்கள் பாடு இந்தக் காரியத்திற்கு ஆள் கிடையாது, வெகு திண்டாட்டமாய்ப் போய்விட்டதால் இப்போது அவர்கள் புதிய தந்திரம் ஒன்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது வெள்ளைக்காரர்கள் தயவை எதிர்பார்ப்பது சட்ட இலாக்காவிலும் நீதி இலாக்காவிலுமே தங்கள் இனத்தவர்கள் இப்போது ஆதிக்கம் பெற்றிருப்பதால் அதைக்கொண்டு சட்டத்தின் பேரால் இவ்வியக்கத்தை ஒழிக்க முயற்சித்து வருகிறார்கள்.

எப்படியெனில் பம்பாய் மாகாண பார்ப்பனரல்லாதார் மந்திரி ஸ்ரீமான் யாகவர் இங்கு வந்த காலத்தில் அவர் மீது சர்க்கார் சட்ட மெம்பர் ஸ்ரீமான் சர்.சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் நடவடிக்கை எடுத்துக் கொண்டு அவரை இம்மாகாணத்தை விட்டு ஏன் வெளியேற்றியிருக்கக் கூடாது? என்று ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அய்யர் அவர்கள் சொன்னதும், அதற்கு பிறகு ஸ்ரீமான்கள் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பேரிலும் ஆரியா அவர்கள் பேரிலும் சட்டமெம்பரும் அட்வகேட் ஜெனரலும் கவர்ன்மெண்டும் நடவடிக்கை எடுத்துக் கொள்ளும்படி ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அவர்கள் சர்க்காரைக் கெஞ்சினதும், சென்றவாரம் திருவண்ணாமலையில் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் ஸ்ரீமான் நாயக்கர் முதலியவர்கள் பேரில் சர்க்கார் 153 - ஹ பிரிவுப்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், சர்க்கார் எடுத்துக் கொள்ளாவிட்டால் சுயராஜ்யக் கட்சியராவது எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சொன்னதும், ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தஞ்சைக்கு கதர் பிரசாரத்தின் பேரால் இவ்வாரம் போயிருந்த காலத்தில் “தமிழ்நாடு” பேரில் நடவடிக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் பேசினதும், சர்க்கார் ஆதிக்கத்தில் உள்ள பார்ப்பன பெரிய அதிகாரிகள் சிலர் இவர்கள் வேண்டுகோளுக்கு அனுகூலமாய் ஆதாரங்கள் தேடிக் கொண்டும் ஏற்படுத்திக் கொண்டு இருப்பதும் ஆகியவைகளே இதற்கு போதுமான ஆதாரங்கள்.

ஒத்துழையாமைக்காரரும் அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுபவர்களுமான பார்ப்பனர்களே இம்மாதிரி ஆசை கொள்ளுவார்களேயானால் மற்ற பார்ப்பனர்கள் எவ்வித ஆசை கொள்ள மாட்டார்கள் என்பதை வாசகர்களே யோசித்துக் கொள்ளட்டும். நமக்கு பல மொட்டைக் கடிதங்கள் கேவலமாகவும், வண்டத்தனமாகவும், மிரட்டுதலாகவும் எழுதி வருவதையும் பார்க்கும்போது அப்பார்ப்பனர்களின் ஆசையும் ஆத்திரமும் நன்றாய் விளங்குகிறது.

இதோடு கூட நாம் பிரசாரங்களுக்கு வெளியூர்களுக்குப் போகிற இடங்களில் எல்லாம் பார்ப்பனர்கள், மேல்கண்ட பார்ப்பனர்கள் ஆசைப்படுவதுபோல் நடவடிக்கை எடுத்துக் கொள்ளத்தக்க மாதிரியும் வேறு பல அதாவது திருவண்ணாமலை, மதுரை முதலிய இடங்களில் பார்ப்பனர்கள் மேல் மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டுகளில் முடிவு பெறாமலிருக்கும் பிராதுகளை எதிர்க்க ஆதாரமாகவும் சில ஆதாரங்களை ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள். அவை யாதெனில், வேலூருக்குப் போயிருந்தபோது, “நாயக்கர் கோயிலுக்கும் ஆதித் திராவிடர்களை கூட்டிக்கொண்டு போகப் போகிறார். எல்லோரும் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்” என்று துண்டுப் பிரசுரம் வழங்கப்பட்டதும், நாகையில் “நாயக்கர் ஆதி திராவிடர்களை கோவிலுக்குள் கூட்டிப் போகப் போகிறார்” என்று மேஜிஸ்ட்ரேட்டுக்கு அறிவித்து பந்தோபஸ்துக்கு ஆள்களைக் கேட்டு கூட்டிப் போனதும், கோவிலை அனாவசியமாய் பூட்டி வைத்து ஜனங்களுக்குள் ஒரு தப்பபிப்பிராயத்தை உண்டு பண்ணுவதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். சர்க்காருக்கு தப்பபிப்பிராயங்கள் உண்டு பண்ணுவதைப் பற்றி நமக்கு கவலையில்லை. ஆனாலும் இதிலிருந்து இவர்கள் எண்ணத்தையும், ஆசையையும் பொது ஜனங்களே உணர வேண்டும்.

தவிர, திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலுக்கு சுவாமி தரிசனத்திற்கு சென்ற ஸ்ரீமான் கண்ணப்பர் முதலியவர்களைத் தடுத்து சுவாமி தரிசனம் செய்ய வொட்டாமல் கதவைப் பூட்டிக்கொண்டதாக ஸ்ரீமான் கண்ணப்பர் டிரஸ்டி பேரிலும், கோவில் மேனேஜர் பேரிலும், குருக்கள் பேரிலும் திருவண்ணாமலை மேஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் பிராது கொடுத்திருக்கிறார். சரியோ தப்போ கோர்ட்டார் கிரமமாய் விசாரித்து நீதி செலுத்த விட்டுவிட வேண்டியது எல்லோருடைய கடமையுமாகும். அப்படிக்கில்லாமல் இந்தப் பிராதை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் கட்சி சண்டையாக எடுத்துக்கொண்டு பார்ப்பனர்கள் பெரிதும் இதில் கவலை வைத்து எவ்வளவோ காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது. முதலாவது அங்கிருந்து ஒரு பார்ப்பனரல்லாதார் மேஜிஸ்ட்ரேட் திடீரென்று விசாரணைக்கு இரண்டொருநாள் முன்பதாக மாற்றப்பட்டு ஒரு பார்ப்பன மேஜிஸ்ட்ரேட்டை அங்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தானாக ஏற்பட்டதாகச் சொன்னாலும் சொல்லலாம். ஆனாலும், இந்த குறிப்பிட்ட பிராதை சர்க்காரும் ஒரு முக்கியமானதாகவும் ஜனங்களுக்குள் உணர்ச்சி உண்டாக்கக் கூடியதாகவும் உள்ள பிராது என்பதாக மதித்து கோர்ட்டுக்கு பந்தோபஸ்து முதலியவைகளை அனுப்பியிருக்கும்போது இம்மாதிரி உணர்ச்சியுள்ள கேள்வி விசாரணைக்கு தகுந்தமாதிரி பார்ப்பனரல்லாத மேஜிஸ்ட்ரேட் மாற்றப்பட்டு அதற்கு பதிலாய் ஒரு பார்ப்பன மேஜிஸ்ட்ரேட்டை போடுவதென்றால் எப்படி ஜனங்கள் சந்தேகப்படாமலிருக்க முடியும்?

தவிரவும் அந்த கேசுக்கு வக்கீலாய் வந்த ஸ்ரீமான் சத்தியமூர்த்தி, “இந்த இடத்தில் உள்ள மேஜிஸ்ட்ரேட்டுகளும் கோவாப்ரேட்டிவ் அதிகாரிகளும் அக்கிரமங்கள் செய்கிறார்கள்” என்றும் பொதுக்கூட்டத்திலும் சொன்னார் என்றால் ³ மேஜிஸ்ட்ரேட் மாறுதலுக்கும் ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் சொன்னதற்கும் சம்பந்தமிருக்க வேண்டும் என்று நினைக்க ஹேது இருக்கிறதா? இல்லையா? தவிர இந்த வழக்கிற்கு ஸ்ரீமான் சத்தியமூர்த்தி வக்கீலாய் வரக் காரணமென்ன? இதிலிருந்தே இந்தக் கேசை பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் என்கிற கட்சிப் பிரச்சினையாய்ப் பார்ப்பனர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதும், இதிலிருக்கும் இசகு பிசகுகளை கவனித்து இருவரையும் பிடித்து ஏதாவது ராஜி செய்துவிட்டுப் போகலாம் என்கிற சமாதான உணர்ச்சியில்லாமல் ஒரு கட்சிக்கு வக்காலத்து போட்டு தனது எதிர் கட்சிக்காரரை 153 பிரிவுப்படி நடவடிக்கை நடத்தவேண்டுமென்று உபந்நியாசம் செய்துவிட்டு அந்த பிராது வாங்கின மாஜிஸ்ட்ரேட்டையும் பார்ப்பனரல்லாதார் என்பதற்காக வைவதும் என்றால் இப்பார்ப்பனர்கள் எவ்வளவு தூரம் நம் சமூகத்தின் மீது யுத்தத்திற்குத் தயாராயிருக்கிறார்கள் என்பதை வாசகர்களே யோசித்துப் பார்க்க வேண்டியது தான்.

கேஸ் சரியா? தப்பா? என்பதை பற்றியும் நாம் ஒன்றும் சொல்ல வரவில்லை. ஆனாலும், பிராது கொடுத்திருக்கும் ஸ்ரீமான் கண்ணப்பர் பணக்காரரல்ல. இந்த பிராது பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் முறையில் நடத்துவதாயிருந்தால் கண்ணப்பர் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாது என்றே சொல்லுவோம். பல வாய்தாக்கள் ஏற்படலாம். ஒவ்வொரு வாய்தாவுக்கும் 30, 40 செலவாகலாம். இது தவிர ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்களைப் போலவே கட்சி உணர்ச்சியுடன் கேசை நடத்தக்கூடிய வக்கீல் ஒருவர் ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்களுக்கும் வேண்டும். அம்மாதிரி யாராவது ஒருவர் தயாராக முன்வர வேண்டும். இல்லாதவரை வக்கீலுக்கு பீசு என்று தடவை ஒன்றுக்கு 100 ரூபாயாவது வேண்டிவரும். ஆக சுயமரியாதையை உத்தேசித்து சாதாரண வழக்கமான உரிமைக்குப் போராட எண்ணிய ஸ்ரீமான் கண்ணப்பருக்கு இம்மாதிரி நெருக்கடியான சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர் என்ன செய்யக் கூடும்? கோர்ட்களில் சத்திய தீர்ப்பு பெற்று விடக்கூடும் என்று சொல்ல நாம் தயாராயில்லா விட்டாலும் இந்தப் பிராது கட்சி யுத்தமாக மாறிவிட்டதே என்கிற காரணத்திற்காக பயந்துகொண்டு திரும்ப வாங்கிக் கொள்வதோ அல்லது எதிரியை கெஞ்சிக் கொள்வதோவான காரியங்கள் ஏற்படுவதானால் நம் சமூகத்திற்கே இதைவிட வேறு அவமானமும் சுயமரியாதை அற்ற தன்மையும் இல்லை என்றே சொல்வதோடு “பிள்ளை வரத்திற்குப் போய் புருடனைப் பறிகொடுத்த” பழமொழிக்கே ஒப்பாகும். ஆதலால் இதுசமயம் பார்ப்பனரல்லாத பொதுமக்கள் பார்ப்பனர்களைப் போலவே இவ்வழக்கை பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் கட்சி வழக்கு என்பதாகக் கொண்டு ஒவ்வொரு பார்ப்பனரல்லாத வக்கீல்களும் தங்களால் கூடிய வக்கீல் உதவி செய்ய முன்வருவதுடன் மற்ற பார்ப்பனரல்லாத மக்களும் தங்களால் கூடிய பண உதவியும் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறோம்.

பார்ப்பனர்களுக்கோ பணத்திற்குக் குறைவில்லை. “ஒரு நல்ல கொழுத்த ஆடு அவர்களுக்கு கிடைத்திருக்கிறது”. அதாவது இந்த திருவண்ணாமலை வழக்கில் ஒரு நாட்டுக் கோட்டை செட்டியார் கனவானும் எதிரியாய் இருப்பதால் நன்றாய் பணத்தைச் செலவு செய்யக்கூடும். ஜாதி அபிமான சலுகையையும் பணம் கொடுக்கத்தக்க செல்வவானையும் அடைந்திருக்கிறார்கள். ஆதலால் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் நமது மக்கள் கேசு என்னவாயிற்று என்று பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. அது என்ன ஆனாலும் நமக்கு கவலை இல்லை. விரோதமாகும் என்பதாகவே நினைத்துக் கொண்டு தைரியமாக நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து நமது சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டியதுதான். அனுகூலமானால் அதிர்ஷ்டம் என்று சந்தோஷப்படலாம். ஆனாலும், பணமில்லாமல் வக்கீல் இல்லாமல், பொது மக்கள் ஆதரவில்லாமல், நமது சமூகத்திற்கு சுயமரியாதை இல்லாததால் கேசு கெட்டுப்போய் விட்டது என்று பலர் நம்மைப் பரிகாசம் சொல்வதிற்கில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொது மக்கள் ஞாபகத்துக்கு கொண்டு வருகிறோம்.

இவ்வழக்கு கோர்ட்டில் வழக்காடுந் தன்மையையும் நியாயம் கிடைக்கும் என்கிற நம்பிக்கையையும் பிரதானமாய் கருதாமல் நமது சமூகத்தின் சுயமரியாதையை உத்தேசித்து ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் ரூ. 50 உதவித் தொகையாக கொடுத்திருக்கிறார். இனியும் இதற்கு யாராவது பணம் அனுப்புகிறவர்கள் சென்னை பவழக்காரத் தெரு, 6 - 99 ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை அவர்கள் பேருக்கு அனுப்ப வேண்டியது. இந்த தொகையை ஸ்ரீமான் கண்ணப்பர் அவர்கள் இந்தக் கேசைப் பொறுத்த வரையில் செலவு செய்து கொள்ளலாம். மற்றபடி மீதி இருந்தால் இதுபோன்ற காரியங்களுக்காவது “திராவிடன்” பத்திரிகையின் உதவிக்காவது உபயோகித்துக் கொள்ளலாம். நெருக்கடியான சமயத்தை வேடிக்கையாய் கருதாமல் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் சக்திக்கும் இஷ்டத்திற்கும் தகுந்தபடி ஏதாவது அனுப்பிக் கொடுக்க வேண்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 13.03.1927)

Pin It