சமச்சீர் கல்வி இந்தாண்டு நடைமுறைக்கு வருமா? வராதா? சமச்சீர் கல்விக்கான பாடப்புத்தகங்கள் தரமானவையா தரமற்றவையா என்ற கேள்வி தமிழக மக்கள் முன்னாள் முக்கிய விவாதமாக உள்ளது. இந்நிலையில் மாணவர்கள் புத்தகம் எப்போது வரும் என்ற ஏக்கத்தில் இருக்கின்றனர். புத்தகங்கள் எப்போது வரும்சார்? என்ற கேள்விக்கு ஆசிரியர்களால் தெளிவாக பதில் பேச முடியவில்லை. குறிப்பாக பத்தாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை சந்திக்க உள்ளதால் பெற்றோர்களும் மிகுந்த கலக்கத்தில் உள்ளனர். சமச்சீர் கல்வி என்ற கரு நீண்ட போராட்டத்தின் பின்னணியில் உருவானது. கடந்த திமுக அரசு கடும் போராட்ட நிர்ப்பந்தத்தால் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தியது கல்வியாளர் ச.முத்துக்குமரன் கொடுத்துள்ள பரிந்துரைகளில், பொதுப்பாடத்திட்டம் பொதுத்தேர்வு ஆகிய இரண்டு பரிந்துரைகளை மட்டுமே நடைமுறைப்படுத்தியது. இதுவே சமச்சீர் கல்வி என்ற புது இலக்கணத்தை தந்தனர். தமிழகத்தில் பாகுபாடற்ற கல்வியை கொண்டு வந்துவிடும், எல்லோருக்கும் வாய்ப்பு கிட்டிவிடும், என்று பொய்யுரைத்தனர்.
ஆனால் தமிழகத்தின் கல்வியாளர்கள் மாணவர்கள், எல்லோரும் ஓர்குரலில் முழுமையான சமச்சீர் கல்வி வேண்டும். சமச்சீர் கல்விக்கான இதர பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் சமச்சீர் கல்வி பற்றி பேசமுடியாது என விமர்சித்தனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவது. மழலையர் பள்ளிகளை அரசு நடத்திடுவது. நான்கு வாரியங்களும் கலைக்கப்பட்டு அதிகாரமுள்ள பொதுவாரியத்தை உருவாக்குவது. ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பிடுவது. தனியார் பள்ளிகளின் வியாபாரத்தை கட்டுப்படுத்துவது உட்பட பல்வேறு முக்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் சமச்சீர் கல்வி என்கிற வார்த்தைக்கு உயிரூட்ட முடியும். இது சமச்சீர்க்கல்வி ஆகாது. இருப்பினும் சமச்சீர்கல்வியின் முதல்படியாக பொதுப்பாடத்திட்டமே இருக்கமுடியுமென அனைத்துதரப்பினராலும் வரவேற்கப்பட்டன. தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளி முதலாளிகளின் கல்வி வியாபாரம் கெட்டுவிடும் என்பதால் ஒரு தரப்பினர் மட்டும் சமச்சீர் கல்வியை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். 1 மற்றும் 6 வகுப்புகளுக்கு கடந்தாண்டே நடைமுறைப்படுத்தி தேர்வையும் எழுதிவிட்ட நிலையில் எந்த ஆய்வை நிகழ்ச்சி எந்தப் பாடங்களும் தரமற்றவை என்ற முடிவுக்கு வந்தனர் எனத் தெரியவில்லை.
தமிழகத்தில் பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று அதிமுக அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. இந்நிலையில் மக்கள் நலனை முன்வைத்து அரசின் செயல்படுகள் இருக்கும் என நினைத்தவர்களுக்கு முதல் அதிர்ச்சியாக சமச்சீர் கல்வி ரத்து என அவசர அவசரமாக அறிவித்ததற்கு காரணம் எனன வென்றே மக்களுக்கு புரியவில்லை. மக்கள் நலன் சார்ந்த ஒரு அரசாக இருந்தால் சமச்சீர் கல்வியில் உள்ள குறைபாடுகளைக் களைந்து மேம்படுத்திட முழுமையான சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்த முயற்சிக்க வேண்டும். இதற்கு மாறாக அரசு பாடபுத்தகங்கள் தரமில்லை என்று நடப்பு கல்வியாண்டு முதல் சமச்சீர்கல்வி ரத்து என முடிவெடுத்து அரசு அதற்காக அவசரமாக சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து வழக்கின் மீதான உயர்நீதிமன்றம் சட்டத்திருத்தத்திற்கு இடைக்காலத் தடைவிதித்ததோடு நடப்புகல்வியாண்டில் நடைமுறைப்படுத்திட உத்தரவிட்டது. இதனை தமிழக மக்களும் ஜனநாயக எண்ணம் கொண்டடோரும் வரவேற்றனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைமுறைப்படுத்த விருப்பமில்லா அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. உச்சநீதிமன்றம் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களை நடைமுறைப்படுத்திட வேண்டுமெனவும். மற்ற பாடப்புத்தகங்களை ஆய்வு செய்திட 9 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்து ஜூலை 6க்குள் பாடப்புத்தகம் குறித்த ஆய்வை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. இப்போது குழுவும் அமைக்கப்பட்டு விட்டது. அரசு தலைமை செயலாளர் தலைமையில் தேசிய கல்வி ஆராய்ச்சி குழுவிலிருந்து இருவர், தமிழகத்தில் கல்வியாளர்கள் அரசு பிரதிநிதிகள் இருவர், பள்ளிக் கல்வி இயக்குனர், கல்வித்துறைச் செயலர் உட்பட ஒன்பது பேர் கொண்ட கமிட்டியில் தமிழக சமச்சீர் கல்வியை எதிர்த்து போராடிய, வழக்குத் தொடுத்த தனியார் பள்ளி முதலாளிகளை கல்வியாளர்கள் என்ற பெயரில் இக்குழுவில் அரசு திணித்திருப்பதன் நோக்கமென்ன என்பது தமிழக மக்களுக்கு புரியாமலா போய்விடும். இதிலிருந்து அரசு யார் நலனை பாதுகாக்க முன்நிற்கிறது என்பது தெளிவாக புரிகிறது. 9 பேர் கொண்ட கமிட்டி 2வது வகுப்பு முதல் 10 வகுப்பு வரை உள்ள 38 பாட புத்தகங்களை இரண்டுவார காலத்தில் ஆய்வு செய்திட முடியுமா?என்பது கேள்விக்குறிதான்
பாடநூல்கள் தரமானதா? தரமற்றதா?
உண்மையில் இப்பாடத்திட்டம் மற்றும் பாடநூல்கள் எந்த வகையில் தரமுள்ளவை. அல்லது தரமற்றவை என்பதைப்பற்றி அரசின் கமிட்டி ஆய்வு செய்கிறது. ஒரு சமச்சீர் கல்வி அமலாக வேண்டுமென இயங்கிக்கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகளும் இப்பாடப்புத்தகத்தை ஆய்வு செய்து வருகின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரூர், புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஜூன் 17,18 தேதிகளில் 65 ஆசிரியர்களின் பங்கேற்போடு இந்த பாடப்புத்தகங்களை ஆய்வு செய்தனர. மேலும் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். இம்மூன்று ஆய்வுகளையும் கல்வியாளர்கள் பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மாணவர் அமைப்பின் பிரதிநிதிகள் ஒன்று கூடி இறுதிப்படுத்தி ஒரு முடிவுக்கு வந்துவிட்டனர். இந்த ஆய்வில் பழைய பாடப்புத்தகங்களை விட பொதுப்பாடத்திட்ட பாடநூல்கள் மிகத்தரமானவை என முடிவுக்கு வந்துள்ளனர். தரமில்லை என்பது அரசின் வறட்டு வாதமே தவிர மெட்ரிக்பாடப்புத்தகங்களைவிட மிகச் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவன பாடநூலுக்கு நிகரான தரத்தில் புதிய பாடப்புத்தகங்கள் உள்ளன இதில் கேள்விகள், வடிவமைப்புமுறை, ஆகியவை பழைய முறையைக் காட்டிலும் மேம்பட்டதாக உள்ளது.
புதிய பாடநூல்களில் மதிப்பீட்டு முறைகள் புதிய முறையிலும் அறிவியல் அணுகுமுறையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. கேள்விகள் சிந்தித்து விடையளிப்பததாகத்தான் உள்ளது. மெட்ரிக்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை தரம் என்ற பெயரில் பாடச்சுமையை ஏற்றிவைத்திருந்தனர். வயதுக்குமீறிய பாடத்திணிப்பு தரம் ஆகாது. இதனை தரம் என்ற வரையறைக்குள் கொண்டுவர இயலாது . ஆறாம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை எந்த விதத்திலும் மெட்ரிக் பாடத்திட்டத்திற்கு சிறிதும் குறைந்தது இல்லை. புதிய பாடத்திட்டம் தரம் குறைந்துள்ளது என்று அரசு வைக்கும் வாதம் என்னவென்றே புரியவில்லை அரசின் தரம் என்ற வரையறை தான் என்ன? கல்வியாளர் ச. முத்துக்குமரன் அறிக்கையில் உலக தரத்திற்கு இணையாக பாடத்திட்டங்கள் இருக்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார். ஆனால் திடீரென உலகத்தரத்திற்கு பாடத்திட்டங்களை உயர்த்துவது சாத்தியமாகாது. படிப்படியாக முன்னேற்றப்பட வேண்டுமென்பதே அவரது வாதமுமாகும். ஆகவே பழைய பாடநூல்களை விட பல மடங்கு புதிய பாடநூல்கள் சிறந்தவை என்பதுவே உண்மை. அப்புறம் ஏன் அரசு தமிழக மாணவர்களை இப்படி குழப்புகிறது? கடந்த தி. மு. க அரசின் கல்வித்துறையில் எந்த கட்டமைப்பிலும்,எந்த மட்டத்திலும் ஜனநாயகத்தன்மை என்பது கிடையாது.
கல்வி அதிகாரிகள் யாரும் சுயேட்சையாக இயங்கமுடியவில்லை. அனைத்து மட்டத்திலும் அரசியல் தலையீடு மற்றும் திணிப்பு என்பது இருந்தது இன்னும் கொஞ்சம் அதிகமாக சென்று பாடப்புத்தகங்கள் வரை வந்துவிட்டது. இவ்வளவு குழப்பத்திற்கும் திமுக அரசின் அரசியல் திணிப்பே காரணம் என்று பலர் கருதுகின்றார்கள். ஒன்று முதல் 10 ம் வகுப்பு வரை உள்ள தமிழ்ப்பாட புத்தகங்களில் வரும் செம்மொழி மாநாட்டு பாடல் வரிகள் சங்ககால இலக்கியங்களின் திரட்டு என்பதுதான் உண்மை ஆகும். இது மு. கருணாநிதி எழுதிய பாடலாக சித்தரிக்கப்பட்டுள்ளது மிகப்பெரும் மோசடி இப்பாடலில் வரும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பாடல்வரி கணியன் பூங்குன்றனாரின் வரி என்பதும் சங்க இலக்கியத்திலிருந்து இப்பாடல் கையாளப்பட்டு எழுதப்பட்டுள்ளது என்பதும் எல்லோரும் அறிந்ததே.
மேலும் 10 ம்வகுப்பு ஒருபாடம் முழுக்க முழுக்க கருணாநிதியின் சுய புராணம் பாடுகிறது. மேலும் 6 ம் வகுப்பு ஆங்கில பாடப்புத்தகம் சென்னை சங்கமத்தில் தப்பாட்டம் பார்த்திருக்கீர்களா என்ற கேள்வியோடு துவங்குகிறது பாடம். ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகம் புவியியல் பாடப்பகுதியில் சூரியன் உதயமாவது கலைஞர் டி. வியில் வரும் லோகோ போன்று உள்ளது. அதேபாடத்தில் இந்திய வரைபடத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது அதில் கேரளம், தமிழ்நாடு இரண்டு மாநிலத்தையும் சிவப்பு,கருப்பாக காட்டுகிறது படம். இப்பாடப்புத்தகத்தில் திமுக அரசின் பக்குவமற்றநடவடிக்கைகளாளேயே சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர். இது போன்ற அரசியல் திணிப்பு நடவடிக்கைகளை மட்டுமே கணக்கில் கொண்டு புத்தகங்கள் சரியல்ல, தரமல்ல என்ற முடிவுக்குச் சென்றால் அது முட்டாள் தனமாக முடிவாக அமையும். இது போன்ற பிழைகளை கருத்துக்களை நீக்கிவிட்டு தேவையான மாற்றங்களோடு மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு நியமித்த வல்லுனர்கள் குழு நடுநிலைமையோடு ஆய்வு செய்து சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்திடும் வகையில் அரசின் செயல்பாடு அமையவேண்டும். மேலும் அடுத்தாண்டு செழுமைப்படுத்திட முடியும். முழுமையான சமச்சீர் கல்வியை நோக்கி பயணித்தால் இந்த சமூகத்துக்கும் அரசுக்கும் நல்லது.