உலகம் முழுவதும் பல்வேறு மொழிகள், இனங்கள் பரவலாகக் காணப்படுகின்றன. அவைகளில் பல இனங்களுக்கு அவர்களது மொழிப் பயன்பாடு வழமையற்று வழக்கொழிந்து போய் விட்டது. மலைவாழ் மக்கள் பேசும் பலமொழிகளுக்கு ஒலி வடிவம் உள்ளதேயொழிய எழுத்து வடிவம் இல்லை. மனித உழைப்பின், உறவாடலின், உரையாடலின் விளைபொருளே மொழி. ஒவ்வொரு மொழியும் வடிவம் பெறுவது, கட்டமைப்பைப் பெறுவதும் அதன் பயன்பாட்டைப் பொறுத்தேயாகும். ஒரு மொழி வாழ்வதும், வளர்வதும் அதைப் பேசும் மனிதர்களுக்கு புதிய, புதிய செய்திகள், விஞ்ஞானம், கண்டுபிடிப்புகள், படைப்புகள் அம்மொழியில் உருவாக்கப்படுவதைப் பொறுத்தே உள்ளது.

 நமது தாய்மொழி தமிழ். தமிழ்மொழி மிக தொன்மையான மூத்த மொழி. தமிழ் மொழியில் இலக்கண, இலக்கியங்கள், காவியங்கள் ஏராளமாகப் படைக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் அறியப்பட்ட செம்மொழியாக உள்ளது தமிழ். வடமொழியான சமஸ்கிருதம் நீண்டகாலமாக பரவலாக்கப்பட்டதின் விளைவாக தமிழ் தன்னைத் தற்காத்துக் கொள்ள கடுமையான போராட்டத்தைச் சந்தித்துள்ளது. வடக்கின் அதிகார மொழியாக, சமஸ்கிருதம் தொடுத்த வேதகாலத் தாக்குதல் தன்னைத் தாக்குப்பிடிக்க தமிழும், தமிழர்களும் நீண்ட காலப் போராட்ட வரலாறு கொண்டிருக்கின்றனர். வடமொழி இலக்கியங்கள் பல தமிழில் படைக்கப்பட்டுள்ளன.

 வெள்ளைக்கார வியாபாரிகளின் வருகையையொட்டி அதிகாரத்தில் வெள்ளை அரசாங்கம் தனது ஆட்சியை நடத்த ஆங்கிலத்தை பரவலாக்கியது. ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமல்லாமல், ஆங்கிலக் கல்வி முறை பரவலாக இந்தியாவில் ஒரு அடிமை வர்க்கத்தை உருவாக்கியது. வெள்ளை நோக்கிய ஒரு ஈர்ப்பையும், வெள்ளைக்காரர் பேசும் ஆங்கிலத்தை நோக்கி ஓர் மாயையும் உருவாகியது. வடமொழியிலிருந்து தற்காத்துக் கொள்ளப் போராடிய தமிழ், ஆங்கிலத்தின் தாக்கத்திலிருந்தும் தற்காத்துக் கொள்ளப் போராடியது. ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் அறிவாளிகளாக, தீர்மானகரமான பாத்திரம் வகிப்பவர்களாக மாறினர். வெள்ளைக்காரர்களுடன் ஒட்டி உறவாடுவது நாகரீகமாகக் கருதப்பட்டது.

 வெள்ளை அரசுக்கு எதிரான போராட்டங்கள் தமிழகம் மட்டுமன்றி அவர்களது ஆட்சிப் பரப்பு முழுவதும் பரவலாகத் தொடங்கின. 19--ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலங்கள் இந்தியா முழுவதும் போராட்ட ஒருங்கிணைப்பை உருவாக்கியது. பேரரசுக் கனவை செயலாக்கிய இசுலாமிய மன்னர்களும், ஏனையவர்களும், வெள்ளை அரசின் ஒற்றை ஆட்சிக்கு வழிவகுத்துக் கொடுத்தன. தனது ஆட்சியை எங்கெங்கு விரிவாக்கினார்களோ அங்கெல்லாம் உருவாகிய அந்நிய எதிர்ப்பு சுதேசி உணர்வை, அதனடிப்படையிலான ஒருங்கிணைப்பை உருவாக்கியது. அன்று ஆங்கிலம் கோலோச்சியது. ஆங்கிலத்தை எதிர் கொள்ள, பலமொழி பேசுகிற இனங்களின் ஓர்மையை ஒருங்கிணைக்க இந்து மத அடையாளத்தையும், இந்தியையும் பயன்படுத்த முனைந்தனர். வெள்ளையன் ஆட்சிக் காலத்திலேயே பல்வேறு பகுதிகளில் ஆட்சி உரிமை பெற்றிருந்த காலக்கட்டத்தில் இந்தியை ஒரே மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்க முயன்றனர். வங்காள மொழியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வைக்கும் முனைப்பும் இருந்தது. ஆனால் அன்றையச் சூழலில் இந்தி முன்னிலைப்படுத்தப்பட்டது.

 மெட்ராஸ் பிரசிடென்சியில் முதலமைச்சராக இருந்த இராஜாஜி 1938 இல் இந்தியை கட்டாயமாகத் திணித்தார். எதிர்ப்புப் போராட்டம் வலுத்தது. கட்டாய இந்தித் திணிப்புச் சட்டம் பின்வாங்கப்பட்டது. பிறகு 1948 இல் மறுபடியும், 1965 ஆம் ஆண்டு பக்தவச்சலம் முதல்வராக இருந்தபோது மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. மாணவர்களின் கடுமையான போராட்ட எதிர்ப்பைச் சந்தித்தது. இந்தி மொழித் திணிப்பு பின்வாங்கப்பட்டது. தமிழகம் ஏற்றுக் கொள்ளும் வரை ஆங்கிலம் தொடர்பு மொழியாக இருக்கும் என இந்திய அரசு வாக்குறுதியளித்தது. தமிழ் வழிக் கல்வியை பாதுகாப்பதற்காக, இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டம் இந்தியைத் தவிர்த்து, ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வதில் போய் முடிந்தது. தமிழ்வழிக் கல்வி இரண்டாம் இடத்திற்கும், இகழ்ச்சிக்குரியதாகவும், ஆங்கிலம் ஈர்ப்பு மையமாகவும் மாறியது. ஆங்கில வழிக் கல்வி ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு மட்டுமே இருந்தது மாறி தமிழ்வழிக் கல்வி ஒரு பிரிவுப் பாடமாக தலைகீழாக மாறியது. காலப்போக்கில் ஆங்கில வழி மழலையர் பள்ளிகள், மெட்ரிக் பாடப்பிரிவு, மத்திய அரசு பாடத் திட்டம் எனும் பெயரில் ஆங்கிலம் ஒரு மொழி என்பதைத் தாண்டி ஆங்கிலம் என்பதே அறிவுக்கு வழி எனும் போக்கு உருவாக்கப்பட்டது.

 தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டத்திற்கு, சமச்சீர் கல்வி முறைக்கு, தமிழ் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமைக்கு, தமிழில் பெயர்ப்பலகை, அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்துப் போடுவது போன்றவைகள் அமுலாவதற்கு தமிழகத்திலேயே சட்டம் போடுவது எனும் நிலைதான் தற்போதைய நிலை. திரைப்படத்திற்கு தமிழ்ப் பெயரை தலைப்பாக வைத்தால் வரிச்சலுகை, நிதி உதவி, ஆலயங்களில் தமிழிலும் வழிபட உரிமை, தமிழக உயர் நீதிமன்றக் கிளைகளில் தமிழி¢¢ல் வாதாட, தீர்ப்பு எழுத இன்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.   ‘‘ எதிர்காலத் தலைமுறைக்கு தகவல்களைத் தெரிவிக்கும் ஆவணங்களை ஆங்கிலத்தில் எழுதுவது முறையல்ல’’ என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் தமிழகத்தில் அறிவித்துள்ளார். இவைகளுக்கெல்லாம் எதிராக தமிழகத்திலேயே நீதிமன்றத்தில் எதிர் வழக்குப் போடும் நிலையில் ஆங்கில மோகம் தலைவிரித்தாடுகிறது. 1947 வெள்ளையர் ஆட்சி போன பிறகும், ஆங்கிலத்தை நோக்கிய அடிமை மோகம் நகரம் தொடங்கி கிராமம் வரை ஊடகங்கள் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியப் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பதில் சொல்ல மட்டுமே உரிமை என்பது கேடான நிலை.

 வேதகால வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக, ஆங்கிலேயர் கால ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக, இந்திய மயமாக்கத்திற்கான இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக, போராடிய தமிழ் இன்று ஆங்கிலமயமாக்கத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாக உலகமயமாக்கம் எனும் தாராளமயச் செயல்பாடுகள் ஆங்கிலத்தை பரவலாக்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் கணிணிப்  (நீஷீனீஜீutமீக்ஷீ)  பயன்பாடு ஆங்கில மொழியே பயன்பாட்டுக்குரியது எனும் சூழலை உருவாக்கியுள்ளது. கணிணி வழியாக மின் அணுச் செய்திகள் (E.mail ), வலைப்பூ  (blogspot), வலைத் தளம் ( website ) போன்ற உலகு தழுவிய தொலைத் தொடர்புக் கண்டுபிடிப்புகள் ஆங்கிலத்தையே முதன்மைப்படுத்தியுள்ளன. கைத் தொலைபேசி  ( cell ) வளர்ச்சியின் விளைவு குறுந்தகவல் (message ) அனுப்புவது எனும் முறை ஆங்கிலத்திலேயே உள்ளதால் கடந்த காலங்களில் தமிழில் கடிதம் எழுதிய பழக்கம், வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பண்பு கைவிடப்பட்டு மனிதத் தொடர்புகள் ஆங்கில மொழித் தொடர்புகளாக மாற்றமடைந்துள்ளன. தமிழகத்தில் தமிழின் நிலை அவல நிலையாக உள்ளது.   ‘மெல்லத் தமிழ் இனிச் சாகும் ’ எனும் நிலை தான் இன்றைய நிலை.

 தமிழகத்தில் வேலை கிடைக்காமல் வெளி மாநிலங்களுக்கு, வெளி நாடுகளுக்கு வேலை தேடிப் போகும் கூட்டம் தனது சொந்த மொழியிழந்து தஞ்சமடையும் நாடுகளின், இந்திய மாநிலங்களின் மொழியை எழுதப் படிக்கும் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய நெருக்கடியான நிலை உள்ளது.

 மறுபுறம் விஞ்ஞானம் அதே கைத் தொலைபேசியில் தமிழில் பெயர்களை, குறுந்தகவல்களை பதிவு செய்யும் வாய்ப்பும் வந்துள்ளது. கணிணியில் தமிழிலேயே பதிவு செய்யும் வாய்ப்பு கொண்ட மென்பொருள் (Software)  வசதிகள் வந்துள்ளது. ‘யூனிகோட்’ (UNICODE) எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துக்களிலேயே தட்டச்சு செய்து தமிழில் மாற்றும் முறை வந்துள்ளது. அதாவது தமிழை ஆங்கில வழியில் எழுதுவது, படிப்பது. மென்பொருள், கணிணி ஆய்வாளர்கள், பொறியாளர்கள் தமிழ் தட்டச்சுப் பலகை கண்டு பிடித்துள்ளனர். இவைகள் எல்லாம் பரவலாக்கப்பட வேண்டும் என்றால் அரசின் நிதி உதவி, அதிகாரம் இல்லாமல் சாத்தியமில்லை.

    உலகமயமாக்கச் சூழலில் ஒவ்வொரு இனத்தின் விளைபொருளான அவர்களது தாய்மொழியை மறக்கடிக்கச் செய்யும் போக்கை தன்னுள்ளே கொண்டுள்ளது. அதே உலகமயமாக்கச் சூழல் பறிக்கும் அடையாளங்களைப் பாதுகாக்க வேண்டியது மக்களின் கடமையாகும். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளை தமிழில் கொண்டு வருவது, வாசிப்பது, பழக்கப்படுத்துவது செய்யப்பட வேண்டும். மொழி, பண்பாடு, கலை, இலக்கிய வளர்ச்சி ‘தமிழ் மொழி வாழ்க’ எனும் முழக்கத்தால் மட்டும் வராது. தமிழில் ஏனைய மொழிகளின் இலக்கியங்கள், ஆங்கிலத்தில் வரும் புதிய கண்டுபிடிப்புகள், மற்றும் ஏனைய நாடுகளின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், கலை, இலக்கியம்,  தமிழில் கொண்டு வரப்படுவதன் மூலமே சாத்தியப்படும். இல்லையேல் தமிழில் பேசலாம், எழுதப் படிக்கத் தெரியாது எனும் மொரிசியஸ் நாட்டுத் தமிழர்கள் நிலை தான் வந்து சேரும். தாய்மொழியில் கற்பதன் மூலம் தாய்மொழியைக் காப்போம்!

Pin It