தமிழக முதலமைச்சராக அண்ணா பதவியேற்ற பிறகு, காரைக்குடியில் ‘இந்து மதாபிமான சங்கத்தின்’ பொன் விழாவுக்கு பேச அழைக்கப்பட்டபோது - அதில் இவ்வாறு பேசினார்:

‘அண்ணாதுரை மதத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க முடியாது’ என்று குறிப்பிட்டார்கள்.

சில வேளைகளில் மதத்திற்கு மனிதன் அப்பாற்பட்டவராக இருக்கிறானா என்பதைவிட, மனிதனுக்கு அப்பாற்பட்டு மதம் இருக்கிறது என்பதுதான் இன்று இருக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாகும்.

மனதிற்கு அப்பாற்பட்டு, மனித உணர்ச்சிகளை மதியாமல், மனித குலத்திற்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல், மனித குலத்திலே தோன்றுகின்ற வேற்றுமைகளைக் களையாமல், மனிதர்களின் மனதிலே தோன்றுகின்ற மாசுகளைத் துடைக்காமல் இருக்குமானால், மனிதனுக்கு மாண்பு அளிக்காமல் ஒரு மதம் இருக்குமானால், அப்படிப்பட்ட மதத்தை மனித குலத்திற்கு அப்பாற்பட்ட மதம் என்று நாம் சொல்லலாம்.

அப்படி சில மதங்கள் காபாலிக மதத்தைப் போன்றவைகள் தமிழகத்திலே இருந்து வந்தன என்பதையும் இந்தியாவில் இருந்து வந்தன என்பதையும் வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.

மதம் என்று சொல்கின்ற நேரத்தில் மக்களுக்கு, ஒரு ஒழுக்க முறையை ஒரு குறிக்கோளை, ஒரு லட்சியத்தை, ஒரு வாழ்வு முறையை அது அமைத்துத் தருவதென்றால் நான் முழுக்க முழுக்க மதவாதி.

மதம் என்பது மக்களைச் சாதிகளாகவும் குலங்களாகவும் கோத்திரங்களாகவும் பிளவுபடுத்தி ஒருவருக்கொருவர் தாழ்வு, குறைவு ஒருவருக்கொருவர் பார்க்கக் கூடாது. தீண்டுவது கூடாது, ஒருவருக்கொருவர் கலந்து உரையாடக் கூடாது என்பதுதான் மதம் என்றால் என்னைவிட மதத்திற்கு விரோதியாக யாரும் இருக்க முடியாது.

அழுக்கேறிய கருத்துகள்

நான் கண்டு இருக்கின்றேன். நம்முடைய இந்த தன வணிக நாட்டிலே தான், தாங்கள் படுத்துக் கொள்வதற்குப் படுக்கை மட்டும் இல்லாமல் விருந்தாளிகளுக்கென்று தனியாகப் படுக்கைகளை ஒதுக்குப்புறத்தில் தொலைவாக வைத்திருப்பார்கள். நாலுபேர் விருந்தாளிகள் வருகிறார்கள் என்றால் அவைகளை எடுத்து விரித்து வந்தவர்களை இருக்கச் செய்வார்கள். அது ரொம்ப நாளைக்கு முன்னாலே பரணில் போடப்பட்டதாக இருந்ததால் தைத்தபோது வெல்வட்டிலே தைத்திருக்கலாம். அது ஒரு வருடம் முதன்முதலாகப் பயன்படுத்தியபோது மிகுந்த மிருதுத்தன்மையாக இருந்திருக்கலாம். ஆனால் பல காலமாக விருந்தாளிகள் வராமல் அந்தப் படுக்கை உயரத்தில் இருந்து இருக்குமானால், அதை எடுத்துப் போடுகின்ற நேரத்தில், விரித்துப் பார்க்கின்ற பொழுது அதில் பூச்சிப் பொட்டுக்கள் இருந்திருக்கலாம்; தேள் பூச்சிகள் நடமாடலாம்; ஒரு பக்கத்து ஆடை நைந்து போய் இருக்கலாம்; இன்னொரு பக்கத்தில் வேறு விதமான கறைகள் எல்லாம் சேர்ந்து விட்டிருக்கலாம். ஆகவே உதற வேண்டும், துடைக்க வேண்டும், பழுது பார்க்க வேண்டும். அப்பொழுதுதான், எந்த நோக்கத்தோடு அந்தப் படுக்கைகள் தயாரிக்கப்பட்டனவோ, விருந்தினர்களின் வசதிக்கென்று அதற்கு ஏற்ற விதத்தில் அதன் பயன் கிடைக்கும்.

ஒரு சாதாரண படுக்கை பல மாதங்கள் பயன்படுத்தாமல் வைக்கப்பட்டிருந்தால் இத்தனை தேவைகளும் இருக்கிறது என்றால், நம்முடைய மதம் நம்முடைய தத்துவங்கள், நம்முடைய நடைமுறைகள், கொள்கைகள், ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே ஏற்பட்டவை என்றால் இடையில் எவ்வளவு அழுக்கேறி இருக்கும்?

பச்சைக் கொடியும் - பச்சைப் பாம்பும்

அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தொடக்க விழாவில் அண்ணா பேசியது. 29.11.1949 - ‘மாலை மணி’ இதழிலிருந்து.

தமிழ் எழுத்துக்கள் எழுதப்பட்டது எல்லாம் தமிழ் என்று நான் ஒப்புக் கொள்வதில்லை. பச்சைக் கொடியும் பச்சைப் பாம்பும் பார்வைக்கு ஒன்று போலத் தோன்றும். ஜாதியோ, சாதியோ தமிழிலே கிடையாது என்று தமிழறிஞர்கள் கூறும் போதெல்லாம் நான் பூரித்துப் போவேன். இதுபோலவே திதி,சிரார்த்தம், திவசம், அமாவாசை, கிருத்திகை இவையெல்லாம் தமிழிலில்லை. சீமான் என்றாலும் தமிழென்று ஒப்புக் கொள்ளுவதில்லை. இலட்சுமி என்ற பெயர் தமிழ் எழுத்துக்களால் ஆக்கப்பட்ட சொல் என்பதற்காக அதை ஒப்புக் கொள்ள முடியுமா? இலட்சுமியை ஒப்புக் கொண்டால் அதோடு ஒட்டிக் கொண்டுள்ள கற்பனை உருவத்தின் மேல் கட்டப்பட்ட கதைகளையும், கதைகளிலே மறைந்துள்ள மதத்தையும், அந்த மதத்திலே மண்டியுள்ள மௌடீக எண்ணங்களையும் நாம் ஒப்புக் கொள்ள முடியுமா? அதனால் தான் தமிழ் நெஞ்சம், தமிழ் எண்ணம் வேண்டுகின்றேன். இடையிலே முளைத்த களைகளைக் களைந்துவிட வேண்டுமென்கிறேன். நானும் என்னைச் சார்ந்தவர்களும் இந்தப் பணியில்தான் ஈடுபட்டுள்ளோம்.

களை எடுக்கிற ஆர்வத்தில் எங்கே பயிரைப் பாழாக்கி விடுவோமோ என்று கழனியைச் சேர்ந்தவர்கள் அஞ்சுகிறார்கள். அவர்களின் கண்ணியமான அச்சத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன். பொறுப்புணர்ச்சியோடு அவர்களுக்கு உறுதி கூறுகிறேன். பயிரை அழிக்க மாட்டோம். அவசரத்தில் கைகால் பட்டு பயிர் அமிழ்ந்து போகுமே தவிர அழிந்து விடாது!

நன்றி : ‘இளந்தமிழன்’ செப். 2009

Pin It