கியூபர் அய்வர் - அரசியல் கைதிகளாக அமெரிக்கக் கொடுஞ்சிறையில் வாடும் அய்ந்து கியூபர்கள் 1998 செப்டெம்பரில் அமெரிக்க உளவுப் படை எப்.பி.அய்யால் (FBI) கைது செய்யப் பட்டவர்கள். அமெரிக்காவுக்கு எதிராக உளவு, கொலைச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப் பட்டவர்கள். முறையற்ற தடுத்து வைத்தலுக்கும், கொடுஞ்சிறைக்கும் உள்ளான இவர்களுக்கு ஆதரவாய் மனித உரிமை ஆர்வலர்களின் குரல் இன்று உலகெங்கும் ஓங்கி ஒலிக்கிறது.
தமிழர் எழுவர் - இந்தியக் கொடுஞ்சிறையில் வாழும் ஏழு தமிழ் அரசியல் கைதிகள். இராசீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள். தடா சட்டத்தின் கீழ் நீதிக்குப் புறம்பாகத் தண்டிக்கப்பட்டவர்கள். 19 ஆண்டுகளாக நீதி வேண்டி நிற்பவர்கள். கியூப அய்வரைப் போலவே தமிழர் எழுவரும் மனித உரிமை ஆதரவுக் குரலுக்குத் தகுதியானவர்கள்.
கியூபர் அய்வர் மீதான வழக்கு:
அமெரிக்காவில் உள்ள மியாமிப் பகுதி கியூபாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதக் குழுக்கள் நிறைந்த பகுதி. 1959இல் கியூபப் புரட்சி வெற்றி பெற்றது. அமெரிக்கக் கைக்கூலி அரசு தோற்கடிக்கப்பட்டது. கியூபாவிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டக் கூலிப் படைக்கு அமெரிக்க உளவுப் படைகளான எப்.பி.அய்.யும், சி.அய்.ஏ.வும் மியாமிப் பகுதியில் அடைக்கலம் தந்தன் தொடர்ந்து பயிற்சியும் அளித்தன. பின்னர் அப்படையினரைக் கொண்டு 1961 ஏப்ரல் 17இல் கியூபா மீது பன்றிகள் வளைகுடா ஊடாக அமெரிக்கா பெரும் தாக்குதல் ஒன்றையும் தொடுத்தது. மூன்று நாள் கடுஞ்சமர் இறுதியில் கியூபாவே வெற்றிபெற்றது. மீண்டும் ஒருமுறை அமெரிக்கக் கூலிப்படை கியூபா மண்ணிலிருந்து விரட்டி அடிக்கப்பட்டது. அதன் பிறகு அமெரிக்காவால் கியூபா மீது எந்தவொரு தாக்குதலையும் நேரடியாக நடத்த முடியவில்லை. வழக்கம்போல அது குறுக்கு வழியைத் தேர்ந்தெடுத்தது. 'ஒமேகா 7' (OMEGA 7), 'ஆல்பா 66' (Alpha 66), 'மீட்புக்கான சகோதரர்கள்' (Brothers to the Rescue) போன்ற பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கியது. அவற்றைக் கொண்டு கியூபாவின் மீது பயங்கரவாத நடவடிக்கைகளை இன்றுவரை அது மேற்கொண்டு வருகிறது.
இக்குழுக்களின் பயங்கரவாத நடவடிக்கைகளால் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கியூபா மக்கள் பலியாகியுள்ளனர். 2002, 2003ஆம் ஆண்டுகளில் வெனிசுலாவில் சாவேசுக்கு எதிராக நடந்த கலவரங்களை நடத்தியவர்களும் இவர்களே.
இப்பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக் கைகளைக் கண்காணிக்கக் கியூபா அரசால் மியாமிப் பகுதிக்கு அனுப்பப்பட்டவர்களே அந்தோனியோ குரேரோ, செராடோ கெமன்டேசு , இரமோ லாபினினோ, பெர்னாண்டோ கோன்சலேசு, இரேனே கோன்சலேசு ஆகிய அய்ந்து கியூபர்களும் ஆவர். இவர்களின் இடைவிடாத கண்காணிப்பால் 170ஆவதுக்கும் மேற்பட்ட பயங்கரவாத நடவடிக்கைகள் முறியடிக் கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காலத்தில் அவர்கள் பாதுகாப்பிற்குக் கூட எந்த ஆயுதங் களையும் வைத்திருக்கவில்லை என்பது குறிப் பிடத்தக்கது.
ஆனால், 1998 செப்டெம்பரில் ஆயுதங்களேதும் வைத்திராத அவர்கள் மீது அமெரிக்க உளவு, கொலைச் சதிக் குற்றங்களைச் சுமத்தியது. எப்.பி.அய். அவர்களைக் கைது செய்து கொடுஞ்சிறையில் அடைத்தது. முதல் அய்ந்து மாதங்கள் அய்வரும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் இருவருக்கு ஒரு கொட்டடி வழங்கப்பட்டது. எஞ்சிய ஒருவர் தனிமைச் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.
வழக்கு விசாரணை மியாமிப் பகுதியிலேயே நடந்தது. இப்பகுதி சனநாயகம் சிறிதுமற்ற பகுதி. வேறு இடத்துக்கு விசாரணையை மாற்றக் கோரி விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை அமெரிக்க அரசு புறக்கணித்தது.
மூன்று ஆண்டு விசாரணைக்குப் பின் 2001இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அய்வருக்கும் சிறையிலேயே செத்தொழியத்தக்க கொடுந் தண்டனைகள் வழங்கப்பட்டன.
அந்தோனியோ குரேரோவிற்கு வாழ்நாள் தண்டனையுடன் 10 ஆண்டுகள்
செராடோ கெமன்டேசுவிற்கு இரண்டு வாழ்நாள் தண்டனையுடன் 15 ஆண்டுகள் இரமோ லாபினினோவிற்கு வாழ்நாள் தண்டனையுடன் 18 ஆண்டுகள்.
பெர்னாண்டோ கோன்சுலேசுவிற்கு 19 ஆண்டுகள்
இரேனே கொன்சலேசுவிற்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையாக மியாபிப் நீதிமன்றம் அறிவித்தது.
தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடுகள் செய்யப்பட்டன. 2005இல் மூவர் நீதிபதிகள் குழு மியாபிப்பில் நடைபெற்ற விசாரணையை நிரா கரித்தது. மியாபிப் விசாரணை நடத்த உகந்த பகுதியல்ல என அறிவித்தது. மறு விசாரணைக்கு ஆணையிட்டது. மறு விசாரணை அய்வருக்கு விடுதலையைப் பெற்றுத் தரவில்லை. தண்டனையிலும் பெரும் மாற்றம் நிகழவில்லை. மாறாக கீழ்க்கண்டவாறு சிறு சிறு குறைப்புகளே அளிக்கப்பட்டன:
அந்தோனியோ குரேரோ - 21 ஆண்டுகள் 10 மாதம், செராடோ கெமன்டேசு - 2 வாழ்நாள் 15 ஆண்டுகள், இரமோ லாபினினோ - 30 ஆண்டுகள், பெர்னாண்டோ கோன்சலேசு - 17 ஆண்டுகள் 9 மாதம், இரேனெ கோன்சுலேசு - 15 ஆண்டுகள்.
எந்த வகையிலும் உயிருடன் வெளியே வர வழியில்லை.
இவர்களின் விசாரணை அறிக்கை 119 தொகுதிகளைக் கொண்டிருந்தது. மொத்தம் 20,000 பக்கங்கள்.
இவ்வளவு பெரிய அறிக்கையில் ஒரு பக்கத்தில் கூட அய்வர் மீதான குற்றத்தை மெய்ப்பிக்கக் கூடிய சான்றுகள் எதுவும் இல்லை. இருந்தவை அனைத்தும் அமெரிக்கா உளவுப் படைகளால் கட்டமைக்கப்பட்டக் கட்டுக் கதைகளே.
தமிழர் எழுவர் மீதான வழக்கு
நம் தமிழர் எழுவரும் கியூபர் அய்வருக்கும் ஏழு ஆண்டுகள் முன்பாக 1991ஆம் ஆண்டிலேயே சிறையுற்றவர்கள். இராசீவ் கொலை வழக்கில் கொலைக்கு உடந்தையாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தண்டிக்கப்பட்டவர்கள். எழுவரில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தூக்குக் கயிற்றின் நிழலுக்குக் கீழே கொடுஞ்சிறையில் தனிக் கொட்டடியில் தவிப்பவர்கள். நளினி, ஜெயக்குமார், இராபர்ட் பயஸ், இரவிச்சந்திரன் ஆகிய நால்வரும் வாழ்நாள் சிறைத் தண்டனையில் வாடுபவர்கள். கியூபர் அய்வரைப் போலவே வெளி உலகைக் காணும் வாய்ப்பு அற்றவர்கள்.
இராசீவ் கொலை வழக்கில் சதிக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மொத்தம் 41 பேர். அவர்களில் மூவர் பிரபாகரன், பொட்டு அம்மன், அகிலா பிடிபடவில்லை. இன்று இவர்கள் மூவரும் கொல்லப்பட்டு விட்டதாகச் சொல்லப்படுகிறது. சிவராசன், தனு, சுபா உள்ளிட்ட பன்னிருவர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொண்டு இறந்துவிட்டனர். எஞ்சிய இருபத்தாறு பேர்தான் கைதானவர்கள். அவர்களில் நளினி ஒருவருக்குத்தான் இராசீவ் கொலை பற்றி முன்கூட்டியேத் தெரியும். அதுவும் கொலை நடைபெறுவதற்குச் சில நிமிடங்கள் முன்னர்தான் தெரியும். இதை நீதிபதி தாமஸ் அவர்களே தம் தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“நளினியின் சகோதரர் எ-20 (பாக்கிய நாதன்) அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலத்தில் ஓர் உண்மையை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது தனு இராசீவ்காந்தியைக் கொல்லப் போகிறார் என்பதை உண்மையில் சிறிபெரும்புதூரில்தான் உணர்ந்தேன் என்று எ-1 (நளினி) 23.05.1991இலேயே பாக்கிய நாதனிடம் கமுக்கமாய்த் தெரிவித்தாராம்”
மற்ற 25 பேருக்கும் கொலைச் சதி பற்றி தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை. புலிகள் இயக்கத்துக்குத் தமிழகத்தில் பலர், பல உதவிகளைச் செய்துள்ளனர். அப்படிப் போன்ற உதவிகளையே இவர்களும் செய்திருக்கக் கூடும் என நீதிபதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.
நளினி சதியை அறிந்தும் வெளியி டாததற்குக் காரணங்களாக நீதிபதி தாமஸ்:
“அவர் மெல்லினத்தைச் சேர்ந்தவர் என்பதையும், சிவராசன் வகையறாவின் சிலந்தி வலையிலிருந்து தப்ப வழியற்ற அவரது இயலாமையையும்…” குறிப்பிடுகிறார்.
“சிவராசனும் சாந்தனும் தங்கள் பக்கம் நிற்காதவர்களை எப்படி ஒழித்துக் கட்டினார்கள் என்பது நளினிக்குத் தெரியும். பத்மனாபா நிகழ்வு அவருக்கு ஒரு பாடமாக இருந்திருக்கும்” எனவும் அவர் குறிப்பிடுகிறார். நீதிபதிகளின் கூற்றுப்படி இவர்கள் இராசீவ் கொலைச் சதியில் ஈடுபட்டவர்கள் அல்லர். தமிழ் ஈழ விடுதலையின்பால் ஈர்க்கப்பட்ட ஆதரவா ளர்களே.
இவ்வழக்கில் மிகவும் முரண்பா டான ஒன்று - தடாச் சட்டம் பற்றிய நீதிபதிகளின் கூற்றும், பின்னர் அவர்கள் வழங்கிய தீர்ப்பும் ஆகும். 26 பேரும் தடாச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள். வாக்குமூலங்கள் தடா சட்டத்தின்படியே காவல் நிலையங்களில் பல்வகைக் கொடுவதைகளின் கீழ் பெறப்பட்டவை.
இராசீவ் கொலை பயங்கரவாத நடவடிக்கை இல்லை, இவ்வழக்கிற்குத் தடாச் சட்டம் பொருந்தாது என நீதிபதிகளே அறிவிக்கிறார்கள். தடா சட்டத்தின் கீழ் சென்னை உயர்நீதிமன்றம் இருபத்தாறு பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்கியது தவறு என்றும் ஏற்றுக் கொள்கிறார்கள். இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மறுவிசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால் மாறாக அவர்கள் அதே தடா சட்டத்தின் படி நடந்த விசாரணையையும், காவல்துறை கறந்த வாக்குமூலங்களையும் கொண்டு நால்வருக்குத் தூக்குத் தண்டனையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி 19 பேரை விடுதலை செய்கிறார்கள். நீதிமன்றத் தீர்ப்பின் பெரிய முரண் இது. இந்தியாவின் மாபெரும் தலைவர் ஆன்மா நிறைவடைய வழங்கிய தீர்ப்பு அது. நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனை தேவையில்லை என்ற நீதிபதி தாமசின் கருத்தை மற்ற நீதிபதிகள் ஏற்காததும் பின்னர் சோனியா காந்தியின் 'கருணை'யில் நளினியின் தூக்கு வாழ்நாள் தண்டனையாகக் குறைந்ததும் தனிக்கதை.
பேரறிவாளன் 19 வயதில் சிறை சென்றவர். தனுவிற்குப் பேட்டரி வாங்கியதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு. பேட்டரி எங்கேயும் கிடைக்காத அரிதான பொருள்! அந்த அரிதான பொருளை அவர் கமுக்கமாக வாங்கிக் கொடுத்து விட்டார். அதற்காகத்தான் அவருக்குத் தூக்குத் தண்டனை. ஆயுதமே வைத்திருக்காத கியூபர் அய்வருக்கு வழங்கப்பட்ட கொடுந்தண்டனை போலதான் இதுவும்.
பேரறிவாளனும், நளினியும் சிறைக்குள் வாடி வதங்கி விடவில்லை. சிறைக்குள் இருந்து கொண்டே பட்ட மேற்படிப்பை முடித்துள்ளனர். வேலூர் சிறையின் கல்வியமைச்சரே பேரறி வாளன்தாம். சிறை அதிகாரிகளே அவரை அப்படித்தான் அழைக்கின்றார்கள். சிறைக் கைதிகளின் அறிவுக் கண்ணைத் திறந்து அவர்களை மாண்புள்ள மனிதர்களாய் மாற்றிவரும் பேரறி வாளனைத்தான் கொல்லத் துடிக்கிறது இந்தக் கொலைகார அரசு. சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நெய்வேலி - தினமணி சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றவர் முருகன். நல்ல எழுத்தாளராய் மலர்வதற்கான படைப்பாற்றல் கொண்டவர். சாத்தன் சிறந்த கவிஞராய் உருவாகியுள்ளார். அவரின் சில கவிதைத் தொகுப்புகள் கன்னடத்தில் மொழிபெயர்க் கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாடு நடத்தும் அரசு அவரை விடுதலை செய்ய மறுக்கிறது.
செயக்குமார், நளினி ஆகியோரின் முன் விடுதலைக் கோரிக்கையை ஆய்ந்த அறிவுரைக் கழகம் சிறையில் அவர்களின் நன்நடத்தைக்குச் சான்றளிக்கின்றனர். ஆனால் அதன் அடிப்படையில் கூட விடுதலைக்குப் பரிந்துரைக்கவில்லை. மாறாக அவர்கள் செய்த குற்றத்தைப் பற்றி பேசியது. அவர்கள் செய்தது கொடுங்குற்றம் என்றும், ஈழத்தில் போர் நடக்கும் சூழலில் விடுதலை செய்ய முடியாது என்றும் கருத்தறிவித்தது. சிறை திருந்துவதற்கு. திருந்தியவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதுதான் நல்லரசுக்கான அடையாளம். அன்றைய மணிமேகலை போல் சிறைக் கோட்டத்தையே அறக் கோட்டமாய் மாற்றிவரும் மனிதருள் மாணிக்கங்களை கொட்டடிக்குள்ளேயே புதைத்து விட சதி செய்கின்றன சதிகார அரசுகள். எழுவரின் கொடுஞ்சிறைக்குக் காரணமாய் அமைந்திருப்பது தமிழருக்கு எதிரான பகை அரசியலே.
பிரிக்கப்பட்ட குடும்பங்கள்
சிறை குற்றம் செய்தவர்களை மட்டும் தண்டிப்பது இல்லை. அவர்களின் குடும்பங்களையும் சேர்த்தே தண்டிக்கிறது. 1991 முதல் தமிழர் எழுவரின் குடும்பங்களும், 1998 முதல் கியூபர் அய்வரின் குடும்பங்களும் தங்கள் பாசத்திற்கு உரியோரைப் பிரிந்து தவித்து வருகின்றன. அக்குடும்பங்களின் துன்ப துயரங்களை எழுதி மாளாது. அமெரிக்காவில் சிறைக் கைதிகளை உறவினர்கள் பார்க்க மாதம் ஒருமுறை இசைவு வழங்கப்படுகிறது. ஆனால் மெய் நடப்பில் கியூபர் அய்வர் குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ஒருமுறை தான் இவ்விசைவு தரப்படுகிறது.
இரேனே கோன்சலேசின் துனைவி ஆல்கா சாலனுவேவும், அந்தோனியோ குரேரோவின் துணைவி அத்திரியானா பேரேசும் தம் துணைவர்களைச் சந்திப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்குமான விசாக்களைத் தொடர்ந்து மறுத்து வருகிறது அமெரிக்கா அரசு. அவர்களுக்கு விசா வழங்க வேண்டி உலகெங்கும் பெரும் போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப் படுகின்றன. அதில் உலக மன்னிப்பு சபை, அமெரிக்க திருச்சபைகள், உலக மனித உரிமை அமைப்புகள், அய்ரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் எனப் பலர் பங்கேற்று வருகின்றனர்.
இரேனெ கோன்சலேசு கைது செய்யப்படும் பொழுது அவரது இளைய மகள் கைக் குழந்தை. நளினிக்கு மகள் பிறந்ததே சிறையில்தான். இரேனெ மகளுக்கு இன்று அகவை 12. தந்தையைக் காண விரும்பும் அச்சிறுமிக்கு விசாவை மறுக்கிறது அமெரிக்க கொடுங்கோல் அரசு. அதேபோல நளினியின் மகளுக்கு ஈவிரக்கமற்ற இந்திய அரசு தொடர்ந்து விசா மறுத்து வருகிறது. பேரறிவாளன் சிறை புகுந்த பொழுது அவரின் அகவை 19. இன்று அவருக்கோ அகவை 38. இந்தப் பத்தொன்பது ஆண்டுகளாகத் தங்கள் அன்பு மகனைச் சிறைக் கொட்டடிக்குப் பறி கொடுத்துவிட்டு அவரை மீட்டெடுக்க ஊண், உணவின்றி இரவு பகல் தூக்கமின்றிப் போராடி வருகின்றனர் அவரின் பாசம் நிறைந்த தாய் அற்புதம் அம்மாவும், நேசமிக்க தந்தை குயில்தாசன் அவர்களும்.
கியூபர் அய்வரின் விடுதலைக்காய் இன்று உலகமே ஒன்று திரண்டு குரல் கொடுக்கிறது. அய்.நா. சபை, உலக மனித உரிமை அமைப்புகள், உலகத் திருச்சபைகள் எனப் பல அமைப்புகள் அய்வரின் பின்னால் திரண்டு நிற்கின்றன. நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் அவர்களுக்காய்க் கைகோர்த்து நிற்கின்றனர். இது கியூப மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி. கியூப மக்கள் தங்கள் மண்ணின் மக்களை மீட்டு விடுவார்கள். இது உறுதி.
ஆனால் தமிழர் எழுவரை தமிழர்களே மறந்து நிற்கிறார்கள். அவ்வப்பொழுது அவர்களைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் பயன் தராது. பத்தொன்பது ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இனியும் காலம் கடத்தக் கூடாது. எழுவர் விடுதலைக்கான குரலைத் தமிழ் மக்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். உலகின் கவனத்தை ஈர்க்க வேண்டும். அறிஞர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரின் குரலும் எழுவரின் விடுதலைக்குத் தமிழர் குரலோடு இணைய வேண்டும். இந்திய - தமிழக அரசுகளின் செவிட்டு செவிப் பறைகள் கிழிய வேண்டும்.
இதோ தோழர் தியாகுவை ஒருங்கிணைப் பாளராய்க் கொண்டு “தமிழர் எழுவர் விடுதலைக் குரல்” ஒலிக்கத் தொடங்கிவிட்டது. தமிழர் எழுவர் குரலோடு தமிழர் அனைவர் குரலும் இணையட்டும். அத்துடன் உலக மக்கள் குரலும் கலக்கட்டும். கியூபர் அய்வரையும் விடுதலை செய்வோம். தமிழர் எழுவரையும் விடுதலை செய்வோம். உண்மை ஓங்கட்டும் நீதி வெற்றி பெறட்டும்.