cuban doctors coronavirusஉலக மக்களின் முதல் எதிரி அமெரிக்கா என நீண்ட காலமாக கத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளின் பலகீனமான குரலுக்கு குதிரை பலத்தை கொண்டு வந்து கொடுத்திருக்கிறது கொரோனா.

பாதிவழியில் மருத்துவ உபகரணங்களைக் களவாடுவதும், வளரும் நாடுகளை பகிரங்கமாக மிரட்டுவதும், குறுக்கு வழியில் தட்டிப் பறிப்பதுமாக டிரம்பின் அராஜகம் நீண்டு கொண்டிருக்கிறது.

மிரட்டியும், கொள்ளை அடித்தும், குறுக்கு வழியில் ஈட்டியும் கொண்டு போகப் படுகின்ற மருத்துவ உபகரணங்கள் யாவும் ஒட்டுமொத்த அமெரிக்க மக்களின் உயிரையும் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறதா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் கூற வேண்டும். கொரோனா வைரசால் மாண்டு போகும் அமெரிக்க கருப்பினத்தவர்களின் புள்ளிவிவரங்களைப் பார்த்தால் இதன் உண்மைக் கதை உங்களுக்கு விளங்கும்.

சுமார் ஒரு வாரங்களுக்கு முன்பாக அமெரிக்க ஊடகங்கள் முன்வைத்த புள்ளிவிவரம் இது. இப்போது இன்னும் கொஞ்சம் கூட கூடி இருக்கலாம். லூசியானா மாகாணத்தில் மொத்தமாக கருப்பின மக்கள் வாழ்வது 32 சதவீதம் தான். ஆனால் கொரோனாவால் இறந்தது 70%. சிகாகோவில் 32 சதவீத மக்கள் தொகை இருக்க, இறப்பு வீதம் 67%. ஓரிரு மாகாணங்களைத் தவிர அமெரிக்காவின் அத்தனை பகுதிகளிலும் இதுதான் நிலைமை.

அமெரிக்கவாழ் இந்தியர்கள் உள்ளிட்ட பலரும் தங்களுக்கு முறையான மருத்துவ வசதிகள் இல்லை என்று புலம்புவதும், செவிலியர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்கள் போதுமான பாதுகாப்பு இல்லை என்று கதறுவதுமாக பல்வேறு காணொளிகள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. அப்படியானால் கொண்டு போகப்படும் மருத்துவ உபகரணங்கள் யாவும் எங்குதான் இருக்கின்றன? அவை காசு உள்ளவர்களை மட்டுமே காப்பாற்ற காத்திருக்கின்றன என்பதுதான் உண்மையான பதிலாக இருக்க முடியும்.

அமெரிக்கா எனும் அசுர விருட்சத்தின் கிளைகள் மட்டுமல்ல அவற்றின் நிழலும் கூட நஞ்சுதான் என்பதற்கு, அதை நம்பி மோசம் போன நாடுகளே சரியான சாட்சி.

கொரோனா வைரஸின் கோரத் தாண்டவம் குறித்து கொஞ்சமேனும் வாசிப்பவராக இருந்தால், நீங்கள் நிச்சயமாக ஈகுவடார் நாட்டின் நகரான குவாகுவியின் வீதிகளில் பிணங்கள் வீசப்பட்டு அவை அழுகி துர்நாற்றம் அடிக்கும் செய்திகளையும் கண்டிருக்கக் கூடும்.

இறப்புகளை கணக்கெடுக்க, இறந்தவர்களை அடக்கம் செய்யக்கூட இயலாதிருக்கும் இந்த ஈகுவடார் ஒரு காலத்தில் கியூபாவுடன் நல்ல நட்புறவுடன் இருந்த நாடுதான். 2001ஆம் ஆண்டு டெங்கு தாக்குதல் தொடங்கி, 2016 ஆம் ஆண்டு பூகம்பம் என நெடுங்காலம் வரை கியூபாவுடன் இணக்கம் உண்டு. 13 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் முறையான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இருந்தது. அப்போதைய ஈக்வடார் ஜனாதிபதி ரஃபேல் கொரியா அமெரிக்க எதிர்ப்பு, கியூபா ஆதரவு நிலை எடுத்தார்.

2015 ஆம் ஆண்டில் சுமார் 1000 கியூப மருத்துவர்கள் ஈக்வடாரின் மூலைமுடுக்கெல்லாம் பணிபுரிந்தனர். 2017இல் அதிபரான வலதுசாரி லெனொன் மொரேனோ, டிரம்பின் zero-tolerance policy on Cuba கொள்கைக்கு ஆட்பட்டு அத்தனை மருத்துவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்றினார். கியூப மருத்துவர்கள் வெளியேறிய இடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கின்றன. இன்றைக்கு கொரோனாவின் கொடூர நிலைமைக்கு இது முக்கியமானதொரு காரணமென முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் காத்ரினா வான்ஸ் மாப்பளா எழுதுகிறார்‌.

இதே கதைதான் மற்றொரு லத்தீன் அமெரிக்க நாடான பொலிவியாவுக்கும். ஜனாதிபதி ஈவோ மொரலெஸ் கியூபாவுடன் நட்பு பாராட்டியவர். துணை ஜனாதிபதி ஜூனைன் அனெஸ் கடந்த நவம்பரில் அமெரிக்காவின் செல்வாக்குக்கு ஆட்பட்டு நூற்றுக்கணக்கான கியூப மருத்துவர்களை தேசத்தை விட்டு வெளியேற்றினார். "கியூபாவின் மருத்துவப் படை இன்னும் பொலிவியாவில் இருந்திருக்குமானால் அது சிறப்பாக நிர்வகித்து இருக்கும். ஏனென்றால் கியூப மருத்துவர்கள் எப்போதும் யாரும் விரும்பாத இடங்களுக்குச் செல்கிறார்கள்" என மொரலெஸின் கீழ் சுகாதார அதிகாரியாக பணியாற்றிய மரியா பொலிவியா ரோத்தே குறிப்பிடுகிறார்.

cuban doctorsபிற நாடுகளைவிட பிரேசிலின் கதை தான் ரொம்பவும் துயரமானது. முன்னாள் ஜனாதிபதி தில்மா ரூசெப்பின் காலத்தில் 8500 கியூப மருத்துவர்கள் பிரேசிலில் பணிபுரிந்தார்கள். அவருக்குப் பின்னால் ஆட்சிக்கு வந்த தீவிர வலதுசாரியும், வெப்ப மண்டல டிரம்ப் என்று அழைக்கப்படுபவருமான ஜெயிர் போல்செனாரோ 2018 இல் 8500 கியூப மருத்துவர்களையும் திருப்பி அனுப்பினார்.

வெப்ப மண்டல நாடுகளில் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகளைக் கொண்ட நாடு பிரேசில்தான். கியூப மருத்துவர்கள் விட்டுச் சென்ற இடங்களை இன்னும் நிரப்பாமலேதான் பிரேசில் இருக்கிறது. பிரேசிலின் சுகாதாரத் துறை அமைச்சர் அலெக்சாண்டரே "இந்த முக்கியமான நேரத்தில் நாம் முன்பு இருந்ததை போல இல்லாமல் மோசமான நிலையில் இருக்கிறோம்" என்கிறார்.

மேற்கண்ட நாடுகளில் தலைவர்கள் செய்த இந்த மக்கள் விரோத செயலை, எதிர்க்கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் வன்மையாகக் கண்டித்து கொண்டிருக்கிறார்கள்.

தென்னமெரிக்க நாடுகள் பலவற்றிலும் இதுபோன்று ஒரு கதை இருக்கிறது. சமீபத்தில் கரீபியன் தீவு கொரோனா வைரஸை சமாளிக்க கியூபா மருத்துவர்களை இறக்குமதி செய்திருக்கிறது. 31 கியூபா மருத்துவர்களும், செவிலியர்களும் ஆண்டிகுவாவிலும், டிரினிடாட்டிலும் சென்று இறங்கியிருக்கிறார்கள்.

கரீபியன் தீவுகளின் பிரதமர் கார்டன் பிரவுன் "எங்களின் உள்ளூர் செவிலியர்கள் கோவிட்-19க்கு பயப்படுகிறார்கள். கியூபாவினரோ அவ்வாறு இல்லை. மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவை எதிர்கொண்ட அனுபவம் அவர்களுக்கு இருக்கிறது" என்கிறார். மேலும் அவர் "கியூபாவின் சேவையை மகிழ்வோடு நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அதுவே அமெரிக்கா தானாக முன்வந்து உதவுவதாகக் கூறி இருப்பினும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ஒவ்வொருவரின் நோக்கமும் எங்களுக்குத் தெரியும்" என அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.

லத்தீன் அமெரிக்க நிலைமை மட்டுமல்ல, சர்வதேச நிலைமைகள் கூட அமெரிக்காவின் கைகளை மீறி போய்க் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் கட்டளைக்கு கீழ்படிவது என்பதை விடவும், நாடுகள் தத்தமது மக்களின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.

இத்தாலி முதல் அன்டோரா வரை மெக்சிகோ முதல் ஹைதி வரை ஏறத்தாழ 17 நாடுகள் கியூபாவிடம் மருத்துவர்கள் வேண்டி விண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளன. இதுவரை 60க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் சுமார் 28,000 கியூப மருத்துவர்கள் அடித்தட்டு மக்களுக்காக தங்களின் சேவையை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

உலகின் காவலன் என மார்தட்டிக் கொண்டிருந்த அமெரிக்கா, தனது சொந்த மக்களைக் கூட காப்பாற்ற வக்கற்று சவக்குழியில் தள்ளுவதும், கியூபா எனும் துளியூண்டு தேசம் உலக மக்களை காக்க மருத்துவர்களை அனுப்புவதும் உலக மக்களிடையே குறிப்பாக அமெரிக்கர்களிடையே பெரும் பேசுபொருளாக உருவெடுத்து இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து முதலாளியமா, சோஷலிசமா என்னும் முனையில் வந்து நிற்கிறது.

எங்கே தமது இருப்புக்கு பங்கம் நேர்ந்து விடுமோ என அச்சத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் முதலாளிய கூடாரம், இறுதி யுத்தமாக வழக்கம்போலவே கியூபா மீது சகதி அள்ளி பூசும் வேலையை முன்னிலும் பலமாகத் தொடங்கியிருக்கிறது.

கியூப மருத்துவர்கள் சர்வதேசத் தரம் இல்லாதவர்கள், முரட்டுத்தனமான வைத்தியத்துக்குப் பெயர் போனவர்கள், குறிப்பான நிபுணத்துவம் கொண்டவர்கள் அல்ல என மருத்துவர்கள் மீது குற்றம் தெரிவித்துவிட்டு, மறுபுறம் கியூபா அதன் மருத்துவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்றும், மருத்துவர்களுக்கான ஊதியத்தில் பெரும்பகுதியை அரசே எடுத்துக் கொண்டு மருத்துவர்களுக்கு துரோகம் இழைக்கிறது என்றும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

ஆனால் கியூப மருத்துவர்களை இறக்குமதி செய்துகொண்ட வளரும் நாடுகள் பலவும் மருத்துவக் குழுவின் செலவுகளைத் தாண்டி வேறு எந்தக் கட்டணமும் கியூபா பெற்றுக் கொள்ளவில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்திருக்கின்றன.

கியூபா மருத்துவக் குழுவின் செயல்பாடுகள் தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட அண்மைக் கட்டுரை ஒன்று இறுதியாக இப்படி முடிகிறது. "மெக்சிகோவின் தொழிற்சாலைகள் அமெரிக்க மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை வேகமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் உள்நாட்டில் கொரோனா வெடிப்பு மக்களை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது". ஆக முதலாளித்துவத்தின் பூரண விளைவு இதுதான்.

நேற்று ஒரு தோழர் என்னிடம் கியூபா சோஷலிசப் பாதையில் இருந்து தடம் புரண்டு விட்டது என்று வம்படியாக வாதித்துக் கொண்டிருந்தார். கூடவே ஈழத் தமிழர்களுக்கும் துரோகமிழைத்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு வேறு. நான் அவரிடம் இருந்து விடைபெறும் போது இறுதியாக இப்படிச் சொல்லி தொலைபேசியை வைத்தேன். "விடுங்க தோழர்.. திரவியம் தீர்ந்து போய் விட்ட வெறும் காலி டப்பாவாகவே அது இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அதன் வாசனைக்கே இத்தனை மகத்துவம் என்றால் பாத்துக்கோங்க"

- பாவெல் இன்பன்

Pin It