அண்ணா செய்த சவப்பெட்டி:
1963ஆம் ஆண்டு ஜுன் மாதம் 8,9,10 - ஆகிய நாள்களில் சென்னையில் நடைபெற்ற பொதுக் குழுவில் அறிஞர் அண்ணா ஆற்றிய உரை, திமுக,வின் மூலாதாரக் கொள்கையாகக் கருதப்பட்ட திராவிட நாடு பிரிவினைக் கோரிக்கைக்கு இறுதிச் சடங்காக அமைந்தது. அண்ணாவின் உரையின் அடிப்படையில், தி.மு.கவின் சட்டதிட்டக் குழு கட்சியின் குறிக்கோள் விதி 2 ஐத் திருத்தியது. அத்திருத்தம் திராவிட நாடு விடுதலைக் கோரிக்கைக்கான சவப்பெட்டியின் இறுதி ஆணியை இறுக்கியது.
திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுவது என்ற முடிவை எடுத்துவிட்ட அண்ணா, அம்முடிவை வழக்கம்போல ஏனையோர் மீது சாமர்த்தியமாகத் திணிக்கும் திறனை இவ்வுரையில் காணலாம். அண்ணாவின் இந்த நீண்ட உரை சலிப்பையும், திகைப்பையும், குழப்பத்தையும், ஒரு கையறு நிலை உணர்வையும், மனத் தளர்ச்சியையும், ஊட்டி அண்ணா தீர்வு என்ற பெயரில் எதைச் சொன்னாலும் ஏற்கும் நிலைக்குப் பொதுக்குழு உறுப்பினர்களைக் கொண்டு சென்றிருக்கும் என்பதில் ஐயமில்லை.
அண்ணா, உரையின் சாரம் இதுதான்: “மூலாதாரக் கொள்கையைக் கைவிட்டால் கட்சி நிலைக்கும்; கட்சி நிலைத்தால் ஆட்சியைக் கைப்பற்றலாம்; ஆட்சியைக் கைப்பற்றினால் திராவிட நாடு விடுதலை பெற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமோ அவற்றையெல்லாம் திராவிட நாடு பிரிவினை இல்லாமலே பெற்று விடலாம்; பிரிவினைத் தடைச் சட்டத்தை மீறிப் போராட நினைப்பது தற்கொலைக்கு இணையானது. திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடக் கூடாது என்று கூறுகிறவர்கள் திமுகவை அழிக்க நினைப்பவர்கள்; அவர்கள் எதிரிகளின் கையாட்கள்.”
அண்ணாவின் பொதுக்குழு உரை இப்படிப் பேசுகிறது:
“திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இப்போது ஒரு புதிய முற்றிலும் தனித்தன்மை வாய்ந்த நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்டம்,
1) திராவிட நாடு பிரிவினைக்கான பிரச்சாரத்தைத் தடுக்கிறது.
2) திராவிட நாடு பிரிவினைக்கான ஓர் அமைப்பு கட்சி இயங்குவதைத் தடுக்கிறது.
3) திராவிட நாடு பிரிவினைப் பிரச்சினையை வைத்து தேர்தலில் நிற்க முடியாதபடியும் செய்து விடுகிறது... திமுக சட்டமன்றம், பாராளுமன்றம் சென்று இடம் பெறவும் வழி அடைக்கப்பட்டு விடுகிறது.”
(அறிஞர் அண்ணா, விடுதலை வேட்கை, (தொகுப்பு: திருச்சி கே. சௌந்தரராசன்), புரட்சிப்பாதை, சென்னை, 2003, பக்.17)
'எண்ணித் துணிக கருமம்’ எனத் தலைப்பிடப்பட்ட இவ்வுரையின் தொடக்கம் முதலே தேர்தல் முறையே தம்முறை என்றும், தேர்தல் வாய்ப்புகளை இழந்துவிடக் கூடாதென்றும் அண்ணா வலியுறுத்தி இருக்கிறார். மூலாதாரக் கொள்கை யைக் கைவிடுவதில் உள்ள வலியை விட, திராவிட நாடு பிரிவினைக் கொள்கையை இதற்கு மேலும் வைத்துக் கொண்டிருப்பதால் தேர்தலில் போட்டியிட முடியாமல் போகும் நிலை குறித்து அவர் அடையும் வலி அதிகமாகவே வெளிப்படுகிறது.
தேர்தலில் மிகப் பெரிய பலன் காத்திருக்கிறது:
அண்ணா இப்படிப் பேசினார்:
“திராவிட நாடு பெறும் வழி என்ன என்பது பற்றி நாம் யோசித்த போது ‘வேட்டு’ முறையா? ‘ஓட்டு’ முறையா? - என்று பார்த்ததில், எல்லாக் காரணங்களையும் சீர்தூக்கிப் பார்த்து, திராவிட நாடு பெற ஒட்டுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்படியே வேலை செய்து வந்ததில் கடந்த பொதுத் தேர்தலில் 34 லட்சம் வாக்காளர்களின் ஆதரவு பெற்றோம். 1967 தேர்தலில் நமக்குக் கிடைக்கக் கூடிய ஓட்டுகள் இரட்டிப்பு ஆகக் கூடும்”
“...பிற கட்சிகளும் நிலைமைகளைக் கவனித்து, அடுத்து வரும் பொதுத் தேர்தலில் தி.மு. கழகம் மிகப்பெரிய அளவு வெற்றி பெறும் என்று கூறுகின்றன. திமுக ஆளுங்கட்சி ஆகிவிடக் கூடும் என்று கூறுவாரும் உளர். புதிய சட்டத்தின் விளைவாக இந்த எண்ணங்கள் யாவும் மண்ணுக்குப் போகின்றன.” (மேலது, பக்.18)
“ஓட்டுமுறை மேற்கொண்டோம் - அதிலே படிப்படியான முன்னேற்றம் கண்டோம் - அடுத்துவரும் தேர்தலில் மிகப் பெரிய பலன் கிடைக்கும் என்று நம்புகிறோம்.” (மேலது, பக்.19)
அண்ணா உருவாக்கும் அச்ச உணர்வு:
நம்பிக்கையும், உற்சாகமும் ஊட்டித் தொண்டர்களை உசுப்பி விட்டு வேலை வாங்கும் உரைகள் அண்ணாவின் உரைகள். அண்ணாவின் பொதுக்குழு உரை இதற்கு நேர் மாறானது. அண்ணாவின் உரை கூடியிருப்போரின் மண்டைக்குள் புகுந்து உளவியல் ரீதியாக வேலை செய்கிறது; அவர்களது நம்பிக்கையைத் தகர்க்கிறது; அச்சுறுத்துகிறது; தடையை மீறினால் வரும் விளைவுகள் குறித்து மிரட்டுகிறது. அண்ணா கூறுகிறார்:
“வந்திருக்கும் நிலைமை தி.மு.கழகம், தடைச் சட்டத்தை மீறுவதன் மூலம், பிரிவினையைப் பேசலாம்; ஒருமுறை - கடைசிமுறை என்ற அளவில். பிரிவினைக்காகத்தான் இந்த அமைப்பு என்று கூறி, அதன் காரணமாக அதில் உள்ளவர்கள் பேரில் நடவடிக்கை எடுத்தும் கழக இதழ்கள், இடங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தும் சர்க்காராகக் கழகத்தை உடைந்தெறிய இடம் ஏற்படச் செய்யலாம். ஆனால், மீண்டும் ஒர் அமைப்பு எழாது. எழ வழிகோலியதும், இந்த நிலை அதற்கும்...” (மேலது, பக்.21)
“சட்டத்தை எதிர்த்துத் திராவிட நாடு பிரிவினைக்காகப் பேசியவர்கள், அமைப்பு நடத்துபவர்கள் சிறையிலிருந்து வெளிவரும் வரையில் வெளியே பிரிவினைப் பிரச்சாரம் இருக்காது. பிரிவினைக் கொள்கைக்காக அமைப்பு இயங்காது. சிறையினின்று வெளிவந்ததும், அவர்கள் மீண்டும் பிரிவினைப் பிரச்சாரம் செய்ய, பிரிவினைக் கொள்கைக்காக, அமைப்பு ஏற்படுத்த முனையலாம் - முனைந்ததும் மீண்டும் சட்டம் குறுக்கிடும். மீண்டும் சிறை; மீண்டும் வெளியே. பிரிவினைப் பிரச்சாரம் இருக்காது. பிரிவினைக்கான அமைப்பு இருக்காது.
தண்டனை, ஐந்து ஆண்டுகள் என்று கணக்குக்காக வைத்துக் கொண்டு பார்த்தால், பிரிவினைப் பிரச்சாரம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருநாள் நடத்தப்பட வழி ஏற்படும்” (மேலது, பக்.21)
“கிளர்ச்சிகள் வலிவு பெற்று சர்க்காருக்குச் சங்கடம் ஏற்பட்டு, அவர்களே தடைச் சட்டத்தை ரத்து செய்யலாம் என்று பல கூறத் தோன்றும்… இவை நடைபெறும் என்று நம்பிக் கொண்டு தெம்பாகச் சிறை சென்றவர்கள் மனம் உடைந்து வெளியே வருகிற நிலைமை ஏற்பட்டுவிடுமானால், தாங்க முடியாத வேதனையாகி விடும்.
இவைகள் நடைபெற வேண்டுமானால் முதலில் பொது மக்கள் மனதில் கொந்தளிப்பும், நம்மைப் பற்றிய உருக்கமும் ஏற்படத்தக்க அளவுக்குத் தடைச் சட்டத்தை எதிர்த்து நீண்டகாலம் சிறைவாசத்துக்குத் தம்மை உட்படுத்திக் கொள்ளக் கூடியவர்களின் தொகை ஒரு லட்சம் அல்லது மிகக் குறைவான கணக்கே போதும் என்று எடுத்துக் கொண்டாலும் 50,000 வேண்டும்.” (மேலது, பக்.22)
“இவ்வளவு பேராகிலும் கடுஞ்சிறை வாசத்தைப் பல ஆண்டுகள் மேற் கொள்ள முன்வருகின்றனர் என்றால்தான், தடைச்சட்டத்தை மீறுவதற்கு ஒரு மதிப்பு கிடைக்கும். மக்களிடம் நம்மைப் பற்றிய உருக்கமும், சர்க்கார் பற்றிக் கசப்பும் கொந்தளிப்பும். இந்த எண்ணிக்கை கிடைக்க வழி இருக்கிறதா? … இதற்கான முயற்சியில் முக்கியமானவர் ஈடுபட முனையும்போது சர்க்கார் அவர்களை சும்மா விட்டு வைக்குமா?
தடையை மீறுவது எப்படி தண்டிக் கப்படத்தக்கக் குற்றமாகிறதோ அதேபோலத் தடையை மீறச் சொல்லி ஆர்வம் காட்டுவது, பிரச்சாரம் செய்வது, தோழர்களைத் திரட்டுவது ஆகியவைகளும் குற்றமேயாகும்” (மேலது, பக்.23)
குறிப்பிட்ட எண்ணிக்கையில் தொண்டர்கள் சிறைபுக முன்வர மாட்டார்கள் என்று கூறிய அண்ணா, மலைப்பை ஏற்படுத்தும்படி குறைந்தது 50,000 பேராவது நீண்டகாலச் சிறை புக முன்வர வேண்டும் என்றார். தி.மு.கழகத்தில் உள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் ஏழைகள் என்றும் அவர்கள் சில ஆண்டுகள் சிறையில் கிடந்தாலும் கூட, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் நிலைமையில் அந்தக் குடும்பங்கள் இல்லை என்றும் அண்ணா கூறினார். நீண்டகாலச் சிறைவாசம் மேற்கொள்ளும் துணிவுடனும் குடும்பநிலை பற்றிக் கலங்காத போக்குடனும் ஐந்தாயிரம் பேராகிலும் கிடைப்பார்களா? என்று கேட்டார் அண்ணா.
ஆட்சியாளர்களின் கொடுமைக்கு ஆளாகும் போது, பொதுமக்கள் கொதிப்படைந்து அதைத் தேர்தலில் காட்ட முற்படும் போது, தேர்தலில் போட்டியிட திமுக அங்கே இருக்காது; அந்த வாய்ப்பு வேறு ஏதாவது கட்சிக்குப் போய் விடும் என்றார் அண்ணா.
“நாம் தியா கத்தின் பெயரால், வீரத்தின் பெயரால் தடையை மீறினால் நடக்கக் கூடியது எதுவாக இருக்கும் என்றால் எல்லையில்லாத, முடிவு இல்லாத, கால வரையறையில்லாத, பரிகாரம் காண முடியாத கஷ்ட நஷ்டத்தை ஏற்றுக் கொண்டு சிலரோ, பலரோ, தங்கள் வாழ்நாளை இதற்கே தந்துவிட்டு, பின்பற்றுவோர் அற்று மடிந்து போவர். அவர்களுடன் அந்தக் கொள்கைக்கான முயற்சியும் மடிந்து போகும்.” (மேலது, பக்.37)
அண்ணாவின் உரை விடுதலை கோரும் உணர்வாளர்களை அச்சுறுத்தும் போக்கில் அமைந்திருக்கிறது. அண்ணா கூறுவதுதான் உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும் கூட, இந்த உண்மை 1963க்கு முன் அண்ணாவுக்குத் தெரியாதா? தொண்டர்களுக்குத் துணிவூட்டி, திராவிடத் தனியரசுக் கனவுகளில் அவர்களை மிதக்கவிட்ட அண்ணா 1963-க்கு முன் இவற்றைப் பற்றி அறிய மாட்டாரா?
1962 இலேயும் கூட தம்பிகளுக்கு அண்ணா இப்படிக் கடிதம் எழுதினார்:
“தியாகத்துக்குத் தயாராக இருக்கிறோம். இருக்கிறோம் என்று எத்தனை முறை முழக்கமிட்டு என்ன பலன்? நம்மிலே பலர் அடக்குமுறையின் கோரப்பற்களுக்கு இடையிலே சிக்கிப் பிய்த்தெறியப்படுவதை, நம்மை நம்ப மறுக்கும் நல்லவர்கள் கண் குளிரக் காண வேண்டுமே.
நாடு கடத்தினார்கள், நையப்புடைத்தார்கள், பத்தாண்டு சிறைத்தண்டனை, சுட்டுக் கொல்ல உத்தரவு என்பன போன்றவைகள், நம்மை அடக்க, அச்சத்தால் பீடிக்கப்பட்ட ஆட்சி மேற்கொண்டு தீர வேண்டிய முறைகளாகும்.”
“மரணவாயிலில் போய்ப்போய் வந்த பிறகே, தாய், பிள்ளைப் பேறு காண்கிறாள்…
கடைந்தால்தான் மோரிலிருந்து வெண்ணெய் கிடைக்கிறது.
விடுதலை மட்டும் என்ன, வாய்ப்பந்தலிட்டு, வார்த்தைக் கொடி படரச் செய்து, பறித்தெடுக்கும் காயோ? இல்லை, தம்பி, இல்லை. நாடு விடுபட நானிலமதனில் கொட்டப்பட்ட இரத்த வெள்ளம் எனலாம்”
(தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் - 6, கடிதம்: 166, (10.6.1962), தமிழ் அரசி பதிப்பகம், சென்னை, 2005, பக்.312)
இராஜ்ய சபையிலும் கூட தன்னை ஒரு திராவிடன் என்றும் தங்களுக்குத் தன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் பேசியவர்தாம் அண்ணா. ஆனால், நாடாளுமன்றத்தில் பேசத் தயாராக இருந்த அவர், நாடாளுமன்ற தேர்தல் அரசியலைப் புறக்கணித்துப் போராட்ட அரசியல் மூலமாகத் திராவிட நாடு கோரிக்கையை மக்கள்மயமாக்க முற்படவே இல்லை. ஒரு விடுதலைப் போராளிக்கு அவனது விடுதலை இலக்கே முதன்மையானது; வழிமுறைகள் சூழலுக்கு ஏற்ப மாறும். ஆனால் அண்ணா தேர்தல் பாதை என்ற ஒற்றை வழியை மட்டுமே கொண்டிருந்தார். அந்த வழியில் என்ன பெற முடியுமோ அதுவே அவரது இலக்காக இருந்தது. 1963இல் அண்ணா இதை வெளிப்படையாக ஒத்துக் கொண்டார்.
பதவிகள் என்னும் பலன்கள்:
பொதுக்குழு உரையில், தேர்தல் கட்சியாகத் திமுக தொடர்வதால் கிடைக்கக் கூடிய பலன்களைப் பேச்சுவாக்கில் சொல்லிக் காட்டுகிறார். இதன் நோக்கம், 'தேர்தல் அரசியலைக் கைவிடாமல் திராவிட நாடு பிரிவினைக் குறிக்கோளைக் கைவிடுவது’ என்ற தமது முடிவை நோக்கி பொதுக்குழு உறுப்பினர்களைக் கவர்ந்திழுப்பதன்றி வேறாக இருக்க முடியாது. அண்ணா இப்படிப் பேசினார்:
“என்னைப் பொறுத்தவரையில் கழகத்தை வளர்த்து வருவதிலே நான் கண்ட, கொண்ட மகிழ்ச்சி, பெருமையை விட வேறு எதிலும் கண்டதுமில்லை, கொண்டதுமில்லை…
கழகத் தோழர்கள் பஞ்சாயத்திலிருந்து பாராளுமன்றம் வரையில் இடம் பெற்றது காணும் போது ஒரு பெருமிதம்.
கழகத்தவர் மேயரானார், நாசருடன் கைகுலுக்கினார், மாஸ்கோ சென்றார், வரவேற்கப்பட்டார் என்று படிக்கும் போது பரவசம். இவைகளெல்லாம் இன்பக் கனவுகளா இன்றைய நிகழ்ச்சிகளா என்று எண்ணி மலைக்கும்படியான நிலை ஏற்படுகிறது.
இத்தனை வலிவும் பொலிவும் உள்ள கழக அமைப்பு அழிந்து விட என் மனம் ஒப்பவில்லை. எனவே, கழகம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற முடிவு மேற்கொண்டேன்.”
“கழகம் இப்போது மேற்கொள்ளும் முறைமாற்றத்தின் காரணமாக கெட்டுவிடாது என்பது மட்டுமல்ல, ஒளி நிரம்பிய எதிர்காலம் நம்மை அழைக்கிறது என்று உணர்ந்து கூறுகிறேன்.”
(அறிஞர் அண்ணா, விடுதலை வேட்கை, பக்.123-124)
அடுத்து வரும் தேர்தலில் தி.மு.க.வுக்குப் பெருவாய்ப்பு காத்திருக்கிறது என்பதையே ‘ஒளி நிரம்பிய எதிர்காலம்’ என்று அண்ணா குறிப்பிட்டார். பெற இருக்கும் பதவி வாய்ப்புகள் பற்றிய ஆசையைப் பொதுக் குழு உறுப்பினர்களிடையே கிளறி விடும் வேலை இது என்று கருதலாம்.
இது காறும் டெல்லி ஏகாதிபத்தியத் தைச் சாடிவந்த அண்ணா, இப்போது பிரிவினை பேசி னால் தேர்தல் அரசியலில் ஈடுபட முடியாது என்ற நிலை வரும்போது தனது குரலை மாற்றி இப்படிப் பேச ஆரம்பித்தார்:
“திருத்தப்பட்ட கழகச் சட்ட திட்டத்தின் படி நமது அமைப்பு இயங்கி வருவதன் மூலம், திராவிட நாடு தனியாக ஆனால் என்னென்ன பலன்கள், நலன்கள் கிடைக்கும் என்று நாம் எதிர்பார்த்து வந்திருக்கிறோமோ, அவைகளில் மிகப் பெரிய அளவு பலன்களையும் நலன்களையும் நாம் பெற்றளித்து மக்கள் நல்வாழ்வு பெற்றிடச் செய்ய முடியும் என்று உறுதியாக நம்புகிறேன். அந்தத் தூய பணியாற்றவே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.” (மேலது, பக்.127)
அண்ணா என்ன சொல்கிறார்? திராவிட நாடு என்ற சுதந்திர நாடு பெற்றால் என்ன நலன்களைப் பெற முடியுமோ அவற்றில் மிகப் பெரிய அளவுக்கு, இந்தியாவுக்குள்ளேயே, டெல்லி ஏகாதிபத்தியம் என்று அவராலேயே விவரிக்கப்பட்டப் பார்ப்பன - பனியா அரசின் கீழேயே பெற்றுவிட முடியும் என்று கட்டியங் கூறுகிறார் அண்ணா. இதுகாறும் அண்ணா போற்றி வந்த விடுதலைக் கோரிக்கையின் கழுத்தை அண்ணாவே நெரித்தார். அண்ணாவின் பொதுக் குழு உரை என்பது திராவிட நாடு விடுதலைக் கோரிக்கைக்கு அண்ணாவே செய்த சவப்பெட்டி.
கொள்கையின் ஒட்டுமொத்த உருமாற்றம்:
அண்ணாவின் 1963 - பொதுக் குழு உரைக்கும், அவருடைய முந்தைய உரைகளின் கோட்பாட்டு உள்ளீட் டிற்கும் உள்ள வேறு பாட்டை ஆய்வா ளர்கள் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இக்கட்டு ரைத் தொடரின் முந்தையப் பகுதிகளில் பேசப் பட்ட அண்ணாவின் கருத்துக்களை நினைவூட்டிக்........ கொண்டு அவற்றை அவருடைய 1963 உரையுடன் பொருத்திப் பார்க்க வேண்டும்.
‘நம்நாடு’ இதழில் 1-2 சனவரி 1962இல் அண்ணா இப்படி எழுதினார்:
“திராவிட முன்னேற்றக் கழகம் நாட்டு விடுதலைக்காக அமைக்கப்பட்ட கட்சியே தவிர, திராவிட நாட்டை விடுவிப்பதற்காக ஏற்பட்ட கழகமே தவிர, அது சட்டசபையைக் கைப்பற்றி மந்திரிசபை அமைப்பதற்கு ஏற்படுத்தப்பட்ட வெறும் அரசியல் கட்சி அல்ல.”
ஆனால், 1963இல் அண்ணா நேர்மாறாக இப்படிக் கூறுகிறார்:
“தேர்தலின் போது தி.மு.கழகம் வெளியிட்ட அறிக்கை இருக்கிறதல்லவா? எடுத்துப் பாரேன், ஒருமுறை. பிரிவினைக்காக மட்டுமா ஓட்டு கேட்டோம் - சட்ட சபைக்குச் செல்வது பிரிவினைக்காக மட்டுமேதான் என்றா நமது தேர்தல் அறிக்கை சொல்லுகிறது? படித்துக் காட்டட்டுமா தேர்தல் அறிக்கையை?” (மேலது, பக்.97).
பிரிவினை என்பது மட்டுமே மூலாதாரக் கொள்கை இல்லையா?
திமுக தொடங்கியதிலிருந்து திராவிடநாடு பிரிவினையைத் தனது முதன்மைக் கொள்கையாக முன்னிலைப்படுத்தி வந்த திமுகவுக்கு அது மட்டுமே மூலாதாரக் கொள்கை இல்லை என்று புதிய விளக்கத்தை 1963 இல் அண்ணா அளித்தார்.
திராவிடர் கழகம் கூட காங்கிரஸ் ஆட்சியை மாற்றி, நல்லாட்சி ஏற்படுத்த வேண்டும் என்பதற்கான அரசியல் கட்சியாகத்தான் அமைப்பு துவங்கப்பட்டது என்றும், நாளடைவில் கொள்கைகள் விரிவடைந்தன என்றும், திராவிடர் கழகம் விடுதலை இயக்கமாகி நாட்டுப் பிரிவினையைக் கோட்பாடு ஆக்கிக் கொண்டது என்றும், அதிலிருந்து வெளியேறியவர்கள் அதே விடுதலைக் கோட்பாட்டை வைத்துக் கொண்டு அமைந்ததுதான் திமுக என்றும், அது ஒரு தீவிரமான அரசியல் கட்சியாக, பாராளுமன்ற முறை கொண்ட கட்சியாக வளர்ந்து நிற்கிறது என்றும் அண்ணா கூறினார். மேலும், விடுதலை உணர்வுமுனை ஒன்று என்றால், இரண்டாவது முனை பாராளுமன்ற முனை என்றும் அண்ணா கருத்துரைத்தார்.
அண்ணா கூறினார்:
“இந்தப் பாராளுமன்ற முனை விடுதலை உணர்வு முனைக்குத் துணை நின்று, இருமுனைகளும் ஒருசேர வளர்ந்து வந்தன. எனவே பிரிவினையின் அடிப்படையிலேதான் திமுக அமைக்கப்பட்டது என்று கூறுவது முழு உண்மை ஆகாது.
இப்போது விடுதலை முனையில் கழகம் இயங்க முடியாதபடி சட்டம் - அரசியல் அமைப்புச் சட்டம் வடிவமெடுத்து விட்டது. எனவே இனி விடுதலை முனையில் பணியாற்ற எந்த ஒரு அமைப்பினாலும் முடியாது. கழகம் இனி பாராளுமன்ற முனையிலே பணியாற்றும் நிலை பெற்றிருக்கிறது.” (மேலது, பக்.77)
கொள்கையைக் கைவிடுவதில் தயக்கம் தேவையில்லை என்ற கோணத்தில் அண்ணா பேசினார். ஆனால் எதை எதனுடன் ஒப்பிடுவது என்ற வரையரையற்றுப் பேசினார். அண்ணா இப்படிக் கூறினார்:
“என் பிணத்தின் மீது நின்று கொண்டுதான் பாகிஸ்தான் பிரிக்கப்பட முடியும் என்று பேசியவர்களையும் நான் அறிவேன்.
பெரியாரின் பொதுவுடைமைப் பிரச்சாரம் என்ன ஆயிற்று என்பதும், அக்ரகாரத்தைக் கொளுத்த தீவட்டியைத் தயாராகப் பெட்ரோல் டின்னுடன் வைத்துக் கொண்டிருக்கச் சொன்னது என்ன ஆயிற்று என்பதும் எனக்கும் தெரியும் - உங்களுக்கும் தெரியும். எனவேதான், தி.மு.கழகம் கொள்கையை மாற்றிக் கொண்டது என்று தூற்றக் கூடியவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை என்று சொன்னேன்.” (மேலது, பக்.54)
அண்ணா - பெரியாரை நினைத்து அச்சம் கொண்டிருந்தார் என்பதுதான் உண்மையாக இருக்க முடியும். மூலாதாரக் கொள்கைக்கு முழுக்குப் போடும் அண்ணாவைப் பெரியார் எள்ளி நகையாடுவார் என்ற பதற்றம் அண்ணாவுக்குள் இருந்திருக்க வேண்டும். காந்தியும், பெரியாரும் தங்கள் கொள்கையை மாற்றிக் கொண்டிருக்கும் போது தான் மட்டும் ஏன் மாற்றிக் கொள்ளக் கூடாது என்பது அண்ணாவின் வாதம். ‘நீ சொன்னபடி அக்ரகாரத்தைக் கொளுத்தாதபோது, நான் மட்டும் ஏன் திராவிடநாடு விடுதலைக் கோரிக்கையை நான் சொல்லி வந்தபடி தொடர்ந்து உயர்த்திப் பிடிக்க வேண்டும’ என்ற கோணத்தில் வாதம் செய்த அண்ணா கொஞ்சம் அம்பலப்பட்டுத்தான் போகிறார். அண்ணாவின் தர்க்கம் நகைப்புக்கிடமானதாகவும் ஆகி விடுகிறது. அண்ணா இப்படிக் கேட்கிறார்:
“கொள்கை போன பிறகு கழகம் ஏன் என்று அவர்கள் கேட்கிறார்கள்! கேட்பவர்களிடம் திராவிட நாடு கொள்கை இல்லை. ஆனால், அந்தக் கொள்கை இல்லாமல் அவர்கள் ஒரு கட்சியாக இருக்கலாமாம்! நாம் இருக்கக் கூடாதாம்! இதற்குப் பெயர் அறிவுள்ள வாதமா?” (மேலது, பக்.75)
கட்சிக்காரர்களைத் தன்னுடைய போக்குக்கு இழுக்கும் வகையில், கழகம் பாசறை என்றும் படைவரிசை என்றும் அமைந்து செயல்படும் என்றும், 'பாசறை பல படை வரிசைகளைக் கொண்டதும், புதிய படை வரிசைகளை உண்டாக்கக் கூடியது' என்றும் ‘களம் நோக்கி படை வரிசை செல்லும் - அது அழிக்கப்பட்டாலோ அல்லது அது போதுமானதாகத் தோன்றாவிட்டாலோ, மேலும் படை வரிசையைப் பாசறை அமைக்கும்' என்றும் (மேலது, பக்.63) அண்ணா கூறினார். இப்படிப் பாசறை, படைவரிசை என்று போர் தொடர்பான சொற்களையெல்லாம் பயன்படுத்தி ஏனையோரை தன் முடிவை ஏற்கச் செய்தார். ஆனால், அண்ணா கூறியபடி தி.மு.கழகம் பாசறையாகவும் மாறவில்லை, படைவரிசையாகவும் மாறவில்லை. தேர்தலில் போட்டியிட்டுப் பலன்களைப் பகிர்ந்து கொள்ளும் சாதாரண அரசியல் கட்சியாக வளர்ந்து நிலைத்தது.
அண்ணா வீசிய கொடூரப் போர்க் கருவி:
அண்ணாவின் உரைக்குப் பின்னரும் மூலாதாரக் கொள்கையைக் கைவிடக் கூடாதெனப் பேசும் உணர்வாளர்களைத் தன் இறுதிப் போர் கருவியால் அண்ணா அடித்து வீழ்த்தினார். அண்ணாவின் இந்த வீச்சு உண்மையான விடுதலை உணர்வாளர்களின் தன்மானத்தையும், நேர்மையையும் சந்தேகப்பட்டியலுக்குக் கொண்டு சென்றது; எதிரிகளின் கையாட்கள் என்று குற்றம் சுமத்தியது.
“காங்கிரசாட்சியை எதிர்த்துப் பணி புரிவது ஜனநாயகவாதிகளின் கடமையாகும்! அந்தக் கடமையைத் திறம்படச் செய்யத் தமிழகத்தில் இன்று திமுக போல அளவிலும், அமைப்பிலும், பிரச்சாரச் சாதனத்திலும, ஆட்சிமன்ற முனையிலும் வேறு எந்தக் கட்சியாவது இருக்கிறதா? இல்லை! என்பதை நாடு ஒப்புக் கொள்கிறது. அந்நிலையில், தடைச்சட்டம் மீறிக் கழகத்தை அழித்துக் கொள்ளச் சொல்கிறவர்கள் காங்கிரசுக்குக் கங்காணிகள் என்பது தவிர வேறு என்ன பொருள் கொள்ள முடியும்?” (மேலது, பக்.89-90)
பெரியாரும் - அண்ணாவும்: மாறுபட்ட இலக்குகள்:
அண்ணாவை ஆழந்து படிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். அண்ணாவின் உதடுகள் விடுதலை அரசியல் பேசிய காலத்திலிருந்தே அவருடைய உள்ளத்தில் குடிகொண்டிருந்தது தேர்தல் அரசியல்தான். அவருடைய உள்ளமும், உணர்வுகளும் தேர்தல் அரசியலுக்குகென்றே வடிவங் கொண்டவை. தந்தை பெரியாரும் அண்ணாவும் ஒரே இயக்கத்தின் தலைவராகவும், செயலாளராகவும் இருந் திருந்தாலும், அவர்களால் நீண்ட காலம் இணைந்து செயல்பட முடியாமற் போனதற்குக் காரணம் இருவருடைய உள்ளீடும் வெவ்வேறானவை என்பதுதான்.
பெரியார் - அண்ணா இருவருமே திராவிட நாடு விடுதலை அல்லது தமிழ்நாடு விடுதலை பற்றி பேசியிருந்தாலும் இணைந்து செயலாற்றியிருந்தாலும் இருவருக்குமிடையே வேறுபாடு உண்டு. பெரியாரிடம் கோட்பாட்டுக் குறைபாடுகளும் உத்திகளில் போதாமைகளும் இருந்தன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் அவர் ஒரு போராட்ட வழிமுறையில் நம்பிக்கை கொண்ட விடுதலைச் சிந்தனையாளர். அண்ணா நாவண்மை மிக்க கைதேர்ந்த தேர்தல் - அரசியல்வாதி. (வரும்)