தமிழை கல்வி, ஆட்சி, தொடர்பு மொழியாக நடைமுறைப்படுத்த பாவேந்தர் பிறந்த நாளில் (29.4.2010) தமிழ்மான உண்ணாநோன்பு அறிவிக்கை

தாய்மொழி தமிழ் விடுதலையே தமிழருக்கு முதன்மையானது; உரிமையானது. ஆனால் தமிழ்நாட்டில் குடிசை வீடு முதல் வசதியாளர் வீடு வரையில் உள்ள மழலையர் முதல் வளர்ந்தோர் வரை ‘மம்மி, டாடி’ என்று சொல்லும் அவல நிலை வந்தது - அது வளர்கிறது - அது நீடித்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.

“தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை” என்பது உளவியல் உண்மை. ஆகவே மழலையர் பள்ளி முதற்கொண்டே அவர்கள் உள்ளத்தில் தமிழ் “விதைக்கப்பட” வேண்டும். தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வியே தமிழகத்துக்குரியது.

தமிழ்நாட்டு அரசியல் இயக்கங்கள் அனைத்தும் தாய்த்தமிழ் வழிக் கல்வி பயிற்றுவதில் போதிய முனைப்பு காட்டவில்லை. தேர்தலில் வாக்கு வங்கியை நிலைபெறச் செய்யவும், விரிவு படுத்தவுமே முயல்கிறார்கள். அதனால் அவர்களை நம்பியும் பயனில்லை என்ற நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளோம்.

இந்நிலையில் சில ஆயிரம் தமிழர்கள் தமிழ் உணர்வோடு உள்ளம் குமுறிக் கொண்டுள்ளனர். ஆனாலும் பெரும்பாலான தமிழர்கள் அறிவு செத்தும் உணர்வு செத்தும் உருக்குலைந்து கிடக்கின்றனர். தமிழ் விடுதலைக்கு ஏங்கிக் கிடக்கிறார்கள்.

தாய்த் தமிழ்மொழி விடுதலை பெறாமல் எந்த விடுதலையும் (குமுகாய விடுதலை, பொருளியல் விடுதலை) பெற்றுள்ளதாகக் கொள்ள முடியாது. மொழிப் பற்று இல்லாமல் இனப்பற்று, குமுகாயப் பற்று எப்படி வரமுடியும்? இவற்றிற்குத் தடையாகத்தான் தாய்த் தமிழ் பயிற்று மொழியாக இல்லையே!

பள்ளிகளிலும் தமிழ் இல்லை - கடைப் பலகைகளிலும் தமிழ் இல்லை - படிக்கும் ஏடுகளிலும் தமிழ் இல்லை; இது தமிழ்நாடுதானா, நாமெல்லாரும் தமிழர்கள்தாமா என்ற கேள்விகள் நெஞ்சைக் குடைகின்றன. இதே நிலை நீடிக்கு மானால் தமிழும், தமிழகமும் மீட்சியடைய முடியாது என்பது திண்ணம்.

அன்னைத் தமிழே ஆட்சி மொழி; அதுவே கல்வி, தொடர்பு மொழியாக இருக்க வேண்டும். அனைத்துத் துறைக் கல்வியும் எல்லாருக்கும் தமிழிலேயே கொடுக்கப்பட வேண்டும். ஒரு மொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை என்பவை நடைமுறைக்கு வரவேண்டும்.

இதற்கெனத் தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் அமைப்புகள் அவ்வப்போது ஆங்காங்கு முயன்றும், அரசு வேறு வகைகளில் நம் பார்வையை (கவனத்தை) திருப்பித் தட்டிக் கழித்து வருகிறது. இனியும் பொறுத்துப் பயனில்லை.

ஆகவே கல்வி பயிற்றுமொழிக் கொள்கையை உடனே நடைமுறைப் படுத்தக் கோரித் தமிழ்நாட்டுத் தலைநகர் சென்னை மாநகரில் “தமிழியக்கம்” புரட்சிப் பாவேந்தர் பிறந்த நாளாம் மேழம் மாதம் 16ஆம் வரும் 29-4-2010) நாளில்

தமிழ்நாடு அரசு மழலையர் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் தமிழ் வழியாகவே பயிற்றுவிப்பதை நடைமுறைப் படுத்தி, உடனே ஆணை பிறப்பிக்க வற்புறுத்தி, காலவரையற்ற உண்ணாநோன்பு மேற்கொள்ள முடிவெடுத்து, அதில் பங்கேற்க உணர்வுள்ள தமிழர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

பங்கேற்போர் தங்கள் விருப்பத்தையும் பெயரையும் முகவரியுடன் பதிவு செய்து கொள்ள வேண்டுகிறேன். உண்ணா நோன்பு நடைபெறவுள்ள இடமும் பொழுதும் அடுத்த அறிவிக்கையில் தெரிவிக்கப் படும்.

அழைப்பு, தோழமையுள்ள

நா.ப.செந்தமிழ்க்கோ

இயக்குநர், தமிழியக்கம்,

“புரட்சிப் பாவலர் இல்லம்”

அஞ்சற்பெட்டி எண். 115,

27/12, மாசிலாமணி இரண்டாம் தெரு, குயப்பேட்டை,

வேலூர்-632 001. தொ.பே. : 0416-2222511

செல்பேசி : 9486051228