தமிழீழ மக்களுக்கு தற்போது நேர்ந்துள்ள அவலங்களையும் கொடு மைகளையும் பயன்படுத்தி, காலம் காலமாக சைவ மதத்தவர்களாக இருந்த இவர்களை, கிறித்துவ, பௌத்த, இசுலாமிய நிறுவனங்கள் மத மாற்றம் செய்ய முயல்வதாகவும், இங்குள்ள இந்து மக்கள் முன்னணி மற்றும் சைவ மடங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து “தமிழீழ மக்களை” - அதாவது சைவர் களைக் காக்க முயல்வதாகவும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது தமிழ்நாட்டில் இருவித விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மத அமைப்புகளோ, எதுவோ, தமிழக மக்களைத் தற்போதைய கொடுமை களிலிருந்தும் மதமாற்ற பேராபத்திருந் தாலும் காப்பாற்றினால் சரி என்று ஒரு சாராரும், இவ்வளவு காலம் தமிழக மக்களை சிங்கள இனவெறி அரசு கொன்று குவித்தபோது இந்த மதவாத அமைப்புகள் எங்கே போயின, இப்போது மதத்துக்கு ஆபத்து என்னும் போது மட்டும் வரிந்து கட்டிக் கொண்டு வருகின்றனவே என்று மற்றொரு சாராரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விரண்டு கருத்தோட்டங்களுக்கும் அப்பாலோ, அல்லது இந்த இரு கருத்தோட்டங் களின் சாரத்தையும் உள் வாங்கியோ, இது சார்ந்த சில செய்திகளைப் புரிந்து கொண்டு இவற்றுக்குத் தீர்வு காண முயல்வது நல்லது என்று தோன்று கிறது.

1. ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் மதங்களின் பங்கு இயல்பானது. தவிர்க்க இயலாதது. இதில் மதங்கள் மத அமைப்புகளின் கை மேலோங்கி அவை அவ்வுரிமைப் போராட்டத்தைத் தங்களது ஆதிக்க வளையத்துக்குள் கொண்டு செல்லா மல் எச்சரிக்கையோடு பார்த்துக் கொள்ள வேண்டுவது தான் முக்கியமே - அதுதான் சனநாயக சக்திகளின் பணியே அல்லாது, மத அமைப்பே வேண்டாம் என்று சொல்ல முடி யாது. அவற்றை முற்றாகத் தவிர்க்க வும் முடியாது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இந்து மதம், பஞ்சாப் போராட்டத்தில் சீக்கிய மதம், மலேசியத் தமிழர்கள் போராட்டத்தில் ஹிண்ட்ராப் என்னும் இந்து மத அமைப்பு என இதற்குக் காட்டாகக் கொள்ளலாம்.

2. மத அமைப்புகள் மக்களை மத மாற்றம் செய்யவும், மக்கள் விரும்பிய மதத்துக்கு மாறவும், சட்டப் பூர்வமாக எந்த தடையும் இல்லை என்றாலும், மக்களின் பலவீனங்களை, இயலாமைகளை வாய்ப்பாகப் பயன் படுத்தி அவர்களை மத மாற்றம் செய்வது, ஒரு பெண்ணின் ஏலாமை யைப் பயன்படுத்தி அவளைத் துய்ப் பதற்கு நிகரானது. ஆனால் பெண் கள் நிகழ்வுகளில் இதைக் குற்றச் செயலாக்கும் சட்டம், மத மாற்றத்தை மட்டும் அனுமதிக்கிறது. ஆனால் இதுவும் ஒரு வகையில் வன்முறையே. எனவே, இந்த வன்முறையை அனு மதிக்க முடியாது. இதைக் கட்டாயம் தடுத்து நிறுத்தவேண்டும்.

3. இப்போது இந்த மத மாற்றத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இதற்காகக் குரல் கொடுக்கும் இந்து மதவாத அமைப்பு கள், தமிழின விரோத காஞ்சி சங்கரமடம் ஆகியன ஈழத்தில் இனப் படுகொலை உச்சம் பெற்ற தருணங் களில் கூட இதை எதிர்த்து கண்டித்துக் குரல் எழுப்பவில்லையே ஏன் என்கிற கேள்வி நியாயமானது.

தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தமிழகத்திலுள்ள கிறித்துவ அமைப்பு கள், தன்னார்வக் குழுக்கள் அனைத் தும் அவரவர் வாய்ப்பிற்கேற்ப குரல் கொடுத்த, போராடிய நிலையில் இங்குள்ள சைவ மடங்கள் மட்டும் வாய் மூடி மௌனியாய், மௌன சாட்சியாய் நின்றது கண்டிக்கத் தக்கது. என்றாலும், இதற்காக இவற்றைத் தீண்டத் தகாத அமைப்புகளாகக் கருதாமல், இப்போதாவது இவை ஈழ மக்களின் மத உரிமையைக் காக்க முன் வந்துள்ளதே என்பது வரவேற்கத் தக்கது. அதேவேளை, இச்சிக்கலில்

இந்த மதவாத அமைப்புகளின் கை மேலோங்காமலும், அவற்றின் ஆதிக்க நோக்கம் குறித்த எச்சரிக்கையோடும் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுவது முக்கியமானது.

4. ஒரு தேசிய இனத்தின் உரிமை என்பது அதன் மொழி, இன அரசியல், பொருளியல் உரிமைகளுடன் பண் பாட்டு உரிமைகளையும் உள்ளடக்கி யதே. பண்பாட்டு உரிமை என்பது மத உரிமைகளையும் உள்ளடக்கி யதுதான். தற்போது தமிழீழ மக்களின் மத உரிமை ஒடுக்கப்பட்டு நசுக்கப் பட்டு வருகிறது. மலேசியாவில் இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டது போல் தமிழீழத்திலும் சைவக் கோயில்கள் இடிக்கப்படுகின்றன. ஏற்கெனவே வீடிழந்து நிலம் இழந்து வாடும் மக்கள் தங்கள் உயிருக்குப் பயந்து இதைச் சகித்துக் கொண்டிருப்பதோ உயிரைக் காப்பாற்றிக் கொள்ள மதம் மாறுவதோ உண்மையான மத சுதந்திரமோ மதமாற்றமோ ஆகாது. இது மிகப் பயங்கரமான வன்முறையாகும். எனவே இப்படிப்பட்ட வன்முறையைத் தமிழக மக்கள் எதிர்க்க வேண்டும்.

இதில் மதவாத அமைப்புகள் தலையிட்டுள்ளன என்பதால் இதைப் பாராமுகமாக விட்டு இதில் அலட்சி யம் காட்டக் கூடாது. அல்லது மதவாத அமைப்புகள் இப்பிரச் சினையைத் தங்கள் வயப்படுத்தி சவாரி செய்யவும் அனுமதிக்கக் கூடாது.

எனவே, இந்தப் புரிதலின் அடிப்படையில் தமிழீழ மக்களின் பண்பாட்டு உரிமை காக்க இங்குள்ள சனநாயக சக்திகள் சமத்துவ நோக்குடையவர்கள் குரல் கொடுக்க வேண்டும். இதற்கு ஆதரவான சக்திகளை யெல்லாம் ஒருங்கிணைத்து ஒன்று திரட்டி அதற்குத் தலைமை யேற்று போராட வேண்டும்.

- கணியன்

Pin It