இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்து கொண்டிருந்த கால கட்டம் அது, நம்முடைய அறிவியல் ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் அரசோ, தனியாரோ உதவி செய்ய முன்வராத சூழலில் ஜப்பானியர்களின் கையாளாக மாறி விடுகிறார் தமிழக இளைஞர் ஒருவர். குண்டு வீச்சுக்கு இலக்காக வேண்டிய அணைக் கட்டுகள், பாதுகாப்புப் பகுதிகள் ஆகியவற்றின் புகைப்படங்களை எதிரிக்கு வழங்க ஆயத்தமாகிறார்.

இது ஏறத்தாழ ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் வெளியான “அந்த நாள்” திரைப்படத்தில் வரும் காட்சியாகும். அணைகளை உடைத்து அழிவை ஏற்படுத்துவது அன்றைய சூழலில் மிகப் பெரும் நாசமாகக் கருதப்பட்டது. ஆனால் அதை விடவும் பல மடங்கு கொடிய நாசத்தை அணுகுண்டுகளால் ஏற் படுத்த முடியும் என்பதை ஹிரோசிமா, நாகசாகி ஆகிய நகரங்களின் மீது குண்டு வீசி அந்தப் போரை முடி வுக்குக் கொண்டு வந்த அமெரிக்கா நிரூபித்தது.

பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களுடன் மானுட மேன்மை, பரிவுணர்வு ஆகியவற்றுக்கும் சேர்த்தே சமாதி கட்டியது அமெரிக்கா. உடனடிச் சாவு, உறுப்புக்கள் இழப்பு என்பனவற்றோடன்றி எதிர்பாரா அதிர்ச்சியில் உறைந்து உணர்வு வந்தபின் சித்தங் கலங்கிப் பித்தர் களானோர் தொகை ஏராளம் என்பது எண்ணும்போதே நடுங்க வைக்கிறது. பிந்திய தலைமுறையில் உடல் ஊனம், மூளை வளர்ச்சிக் குறைவு போன்றவை அணுகுண்டு வீச்சின் தொடர் விளைவு களாகும்.

ஆக்கத்திற்கே என்ற முழக்கத்துடன் பல நாடுகள் அணுமின் நிலை யங்களை உருவாக்கத் தொடங்கிய காலம் பிறந்தது. அணுக்கதிர் வீச்சின் அபாயங்களை உணர்ந்தாலும் அழிவுக் கான நிகழ்வுகளுக்கு வழியில்லை என்ற நம்பிக்கையுடன் சில நாடுகளைப் போன்றே ஆறு இடங்களில் இந்தியாவும் அணுமின் நிலையங்களை உரு வாக்கிய நிறைவோடு நிற்காமல் அணுகுண்டு சோதனையையும் நிகழ்த்திப் பார்த்துவிட்டது.

அமெரிக்க மூன்றுமைல் தீவு விபத்து ஏற்படுத்திய அதிர்வுகள் ஒருபுறம் இருக்க, ருஷ்ய செர்னோபில் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து மூடி மறைக்கப்பட மேற் கொள்ளப்பட்ட முயற்சிகளின் தோல் விக்குப் பிறகு விஷயம் வெட்ட வெளிச்சமாகிவிட்டது. நிலம், நீர், காற்று என யாவும் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளான செய்தியின் தாக்கம் எங்கோ தொலைவிலிருப்பதாகக் கருதிய இடத்திலுள்ள புல்லை மேய்ந்த பசு தந்த பாலில் அணுக்கதிர் வீச்சு இருப்பதாக உறுதியானதும் பன் மடங்கு அதிகமாகி விட்டது.

குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் செயல்பட முடியாதவை அணு மின் நிலையங்கள். அவற்றின் மிக மோசமான கதிர்வீச்சைக் கொண்ட கழிவுகளைப் பத்திரமாகப் பாது காப்பது இன்றளவும் அறிவியலாளர் களுக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். எதிர்காலத்தில் பாதுகாப்பான வழி முறைகளை அறிவியலாளர்கள் கண்டு பிடித்து விடுவார்களென்று கிளி ஜோதிடம், எலி ஜோதிடப் பாணியில் ஆரூடம் கூறினார் ராஜீவ்காந்தி.

கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டம் கருத்தளவில் இருந்தபோதே அதற்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது. மேற்கில் திருவனந்தபுரம், வடக்கில் ராஜபாளையம், தெற்கிலும் கிழக் கிலும் கடல்கள் என்பன உத்தேசமான எல்லைகளாகக் கூடங்குளம் அணுக் கதிர் வீச்சுக்கு வரையறுக்கப்பட்டன. எல்லை விரிவடைதற்கான சாத்தியங் களும் உண்டு.

ரஷ்யா இத்திட்டத்திற்கு உதவி செய்கிறது என்றொரு காரணத்தைத் திட்ட ஆதரவாளர்கள் கூறினர். தங்க ஊசி என்பதற்காக வயிற்றில் குத்திக் கொள்ள முடியுமா? மூன்றுமைல் தீவு, செர்னோபில் விபத்துக்கள் வளர்ந்த நாடுகளின் வயிற்றிலேயே புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும்போது நாம் என்ன சுண்டைக்காய்!

மக்களுக்கு எதிரான எந்தத் திட்டத்தையும் முறையான கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தாமல் படிப்பு என்ற பெயரில் மண்ணை வாரிப் போடும் மனசாட்சி இல்லாத கூட்டத்தின் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு, நிகழ்ந்த விதைச் சமாச் சாரத்திலும் வேளாண் தகவல் ஒழுங் காற்றுச் சட்டத்திலும் ஆட்சியாளர் களின் அக்கறையின்மை தெரிய வில்லையா? கூடங்குளம் விவகாரம் கொஞ்சம் முந்திவிட்டது, அவ்வளவே!

ஆழிப் பேரலை ஏற்பட்டு ஏராளமான உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் உண்டான காலத்தில் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு எவ்வகையிலான பாதிப்பு ஏற்பட்ட தென்பது இன்றளவும் மூடு மந்திரமாக நீடித்து வருகிறது.

மிகச் சிறிய கசிவே அளவிட முடியாத பேரழிவை ஏற்படுத்தும் என்ற அணுக்கதிர் வீச்சின் உற்பத்தி நிலையங்கள் தகர்க்கப்பட்டால் எந்த உயிரினமும் தப்பிக்க முடியாது, கரப்பான் பூச்சியைத் தவிர என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிலுள்ள அணுமின் நிலையங்களின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கோல்மேன் ஹெட்லி, தஹவுர் ஹ§சைன் ரானா ஆகிய இருவரும் சதித்திட்டம் தீட்டியதாக தாக அமெரிக்கக் காவல் துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் என வந் திருக்கும் செய்தி தமிழ்நாட்டு மக்களைத் தூங்கவிடாது.

அன்றாடம் மீன் பிடிக்கச் செல்லும் தமிழர்களைச் சிங்களக் கடற்படையினர் அடித்து நொறுக்க முடியும் என்பது இயல்பானபின் இங்குள்ள மாநில அரசின் மீதோ, இந்தியக் கடற்படையின் மீதோ எவ்வாறு நாம் நம்பிக்கை கொள்ள முடியும்?

“வட கல்பாக்கம் தென் கூடங்குளம் ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்” எனக் கூறுவதற்கு, அயல் மண்ணில் வாழும் தமிழர்களையே கடந்த காலம் பற்றிக் கூற நாம் சார்ந்திருக்க வேண்டும்.

- தெ.சுந்தர மகாலிங்கம்

Pin It