இதுவரை சூத்திரர்களின் தோற்றத்தைப் பற்றிய பிராமணியக் கருத்துகளைப் பார்த்தோம். சூத்திரர்களின் சமூக நிலைமைப் பற்றிய பிராமணியக் கொள்கையைப் பார்ப்போர்க்குத் தட்டுப்படுவது அந்த மக்களின் இயலாமைகள் பற்றிய நீண்ட பட்டியலும், அதனோடு இணைந்து பிராமணிய சட்டத்தை வகுத்தவர்கள், சூத்திரர்களுக்கென்று நியமித்துள்ள துயரங்களும், தண்டனைகளும் நிறைந்த மிகக் கொடிய முறைகளுமே ஆகும்.
சூத்திரர்கள் அனுபவித்துவரும் இயலாமைகளும், தண்டனைகளும் சம்ஹிதைகளிலும், பிராமணங்களிலும் சிறிதளவே குறிக்கப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் எடுத்துக்காட்டுகளால் அறியலாம்.
1) கதக சம்ஹிதை (xxxi.2) மற்றும் மைத்ராயணி சம்ஹிதை (iv.1.3, 1.8.3) ஆகிய தொகுப்புகளின் படி:
“அக்னி ஹோத்ரத்திற்காகப் பயன்படுத்தப்படும் பசுவின் பாலை, ஒரு சூத்திரன் கறக்க அனுமதிக்கக்கூடாது.”
2) சதபத பிராமணம் (iii 1.1.10) மைத்ராயணி சம்ஹிதை (vii.1.1.6) மற்றும் பஞ்சவிம்ச பிராமணம் (vi. I.II.):
“யாகம் செய்யும் பொழுது சூத்திரர்கள் அந்த இடத்தில் இருக்கவும் கூடாது, பேசவும் கூடாது.”
3) சதபத பிராமணம் (xiv.1.31) மற்றும் கதக சம்ஹிதை (xi.10) ஆகியவை மேலும் கூறுவதாவது:
“சூத்திரர்கள் சோம பானத்தைக் குடிக்க அனுமதிக்ககூடாது”.
4) ஐத்ரேய பிராமணம் (vii. 29.4) மற்றும் பஞ்சவிம்ச பிராமணம் (vi. I.II) இவ்வாறு சொல்வதில் உச்சநிலையை அடைந்துவிட்டது.
“சூத்திரர் மற்றவர்க்குப் பணியாளே தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது”
ஆரம்பகாலத்தில் மனிதரின் கையகல அளவு மேகமாக இருந்த இந்த இயலாமைகள் பின்னர் சூறாவளியாகப் பெருகிச் சூத்திரர்களை முழுமையாக மூழ்கடித்துவிட்டன. சூத்ரகாரர்களான ஆபஸ்தம்பர், போதாயனர் போன்றோரும், ஸ்மிருதிகாரர்களான மனு முதலியோரும் வகுத்துள்ள பிற்காலத்திய தண்டனை சட்ட விதிகளைப் பார்க்கும் போது, சூத்திரர்களின் இயலாமைகள் எத்தகைய மூர்க்கத் தனமான வேகத்துடன் வளர்ந்துள்ளளன என்பதும், நினைத்துப் பார்க்கக் கூட முடியாத அளவுக்கு விரிவடைந்துள்ளன என்பதும் புலப்படும்.
அச்சு வடிவில் இவற்றைக் கண்டால் தவிர, எவராலும் நம்ப முடியாத அளவுக்குக் கொடுமை வாய்ந்த இயலாமைகள் இவை. எனினும் இவை முழுவதும் எடுத்துக்காட்ட முடியாத அளவுக்குப் பரந்துகிடப்பவை. இவற்றை அறியாதவர்கள் ஓரளவாவது தெரிந்து கொள்ளவும், இயலாமைகள் எத்தகையவை என்பதை அறிந்து கொள்ளவும் சூத்திரர்களின் இயலாமை தொடர்பாக சூத்ரக்காரர்களும், ஸ்மிருதிகாரர்களும் தம் சட்ட நூல்களில் ஆங்காங்கு கூறியிருப்பதை இங்கு ஒருசேரத் திரட்டித் தந்துள்ளேன்.‘
II
(1) அ) ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் கூறுகிறது:
“இங்கே நான்கு சாதிகள் உள்ளன. பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள்.
அவர்களுள், ஒவ்வொருவரும் முன்னால் இருப்பவர் பின்னால் இருப்பவரை விட பிறப்பால் உயர்வானவர். (பிரஸ்னம், படலம் 1, காண்டம்1? சூத்.4-5)
அவர்களுள் சூத்திரர்கள், மற்றும் கெட்ட செயல்களைச் செய்தவர்களைத் தவிர ஏனையோர்க்கு
1) உபநயனம் செய்து கொள்ளவும் (பூணூல் அணிவது) (2) வேதங்களைப் படிக்கவும் மற்றும் (3) புனத நெருப்பை வளர்த்து யாகங்களை நடத்தவும் தனிப்பட்ட உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. (பிரஸ்னம்1, படலம் 1, காண்டம்1? சூத்.6)
ஆ) வாசிட்ட தர்ம சூத்திரம் கூறுவது:
நான்கு சாதிகள் (வருணங்கள்) பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள். பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்னும் மூன்று சாதியினர் இரு பிறப்பாளர்கள் எனப்படுவர்.
முதல் பிறப்பு தாயின் வயிற்றிலிருந்து; இரண்டாவது பிறப்பு பூணூல் அணிவதன் மூலம். அதன் இரண்டாவது பிறப்பில் சாவித்திரி தாய், ஆனால் ஆசிரியர் தந்தையாகச் சொல்லப்படுகிறார். எனவே ஆசிரியர் தந்தையாக அழைக்கப்டுகிறார். ஏனென்றால் ஆசிரியர் வேதத்தைச் சொல்லிக் கொடுப்பவர். (இயல் 2, பாடல்கள் 1-4)
இந்த நான்கு சாதியினரும் அவரவர்களின் பிறப்பாலும் அவரவர்களுக்குள்ள புனித சடங்காச்சாரங்களாலும் வேறுபடுத்தி அறியப்படுகின்றனர்.
வேதத்தில் கீழ்காணும் வாசகங்களையும் பார்க்கலாம்: பிராமணர்கள் அவரது வாய். சத்திரியர்கள் அவரது தோள்கள். வைசியர்கள் அவரது தொடைகள். சூத்திரர்கள் அவரது பாதங்களிலிருந்து பிறந்தவர்கள்.
இந்த வேதத்தின் கீழ்க்காணும் வாசகங்கள் சூத்திரர்கள் புனித சடங்குகளைப் பெற முடியாது என அறிவிக்கிறது. ‘பிராமணர்களை காயத்திரி மந்திரத்துடனும் சத்திரியர்கள் திரிஸ்டுப மந்திரத்துடனும், வைசியர் ஜகதி மந்திரத்துடனும், சூத்திரர்களோ எந்த மந்திரத்துடனுமின்றிப் படைக்கப்பட்டுள்ளார்கள்.” (இயல் 4, பாடல் 3)
(இ) மனு ஸ்மிருதி இதுபற்றி கீழ்க்காணும் கருத்தை வற்புறுத்துகிறது:
உலகத்தின் க்ஷேமத்திற்காக சிருஷ்டி கர்த்தாவான அவர் அவரது வாய், தோள்கள், தொடைகள் மற்றும் பாதங்கள் மூலமாக முறையே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் ஆகியவர்களைப் படைத்தார். (இயல் 1, பாடல் 31)
பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியர் ஆகிய மூன்று வகுப்பினரும் இரு பிறப்பு சாதியர். நாலாவதான சாதியினரான சூத்திரர்கள் ஒரே ஒரு பிறவி மட்டும் பெற்றவர்கள். (இயல் 10, பாடல் 4)
(2) அ) ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் சொல்லுகிறது:
“மூவருணத்தினர் இடுகாட்டில் என்றும் வேதம் படிக்கக் கூடாது அல்லது அதற்கருகில் கூப்பிடுதூரத்திலும் படிக்கக்கூடாது.
ஒரு கிராமம் இடுகாட்டின் நிலத்தில் மேல் கட்டப்பட்டிருந்தாலும், அல்லது அதன் மேல் பரப்பில் பயிர் செய்திருந்தாலும் வேதம் ஓதுதல் அந்த இடங்களில் தடை செய்யப்படவில்லை.
ஆனால், அந்த இடம் இடுகாடாக இருந்தது என்னும் விவரம் தெரிந்தால், அங்கே வேதம் ஓதக்கூடாது.
சூத்திரனும், சாதிக்கப்பாற்பட்டவனும் இடுகாட்டுக்கு ஒப்பானவராவர். (சூத்திரம் 6 இவர்களுக்குப் பொருந்தும்). அவருள் ஒருவர் எந்த வீட்டில் வசிக்கிறாரோ அந்த வீட்டில் படிப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் ஒரு வேத மாணவனும், ஒரு சூத்திரப் பெண்ணும் ஒருவருக்கொருவர் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டாலே வேதம் ஓதுவது நிறுத்தப்பட வேண்டும். (பிரஸ்னம் 1, படலம் 5, காண்டம் 16, சூத். 21-22)
தூய்மையற்ற பிராமணராலோ அல்லது மற்ற உயர் சாதிக்காரர்களாலோ உணவு தொடப்பட்டால், அது அசுத்தமானதாகும். ஆனால் அது சாப்பிடத் தகுதியற்றதாகாது. ஆனால் தூய்மையற்ற ஒரு சூத்திரர் தொட்டோ, தொடாமலோ கொண்டுவந்த உணவைச் சாப்பிடக்கூடாது.
சூத்திரன் தொட்டுவிட்டால், மேல் சாதிக்காரன் அதைச் சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும்.
ஆ) விஷ்ணு ஸ்மிருதி சொல்லுகிறது:
“இரு பிறப்பாளர் சாதிக்காரர்களின் பிணத்தை, இறந்தவனின் சொந்தக்காரனாக இருந்த போதிலும் தூக்கிக் கொண்டு போக, சூத்திரர்களை அனுமதிக்கக்கூடாது.
இரு பிறப்பாளர் சாதிக்காரர்கள் சூத்திரர் பிணத்தைத் தூக்கிச் செல்லக்கூடாது.
தந்தையையும், தாயையும் அவர்களது மகன்கள் எடுத்துச் செல்லலாம். அதுவும் அவர்களது பெற்றோர்களது சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால்.
சூத்திரனோ இருபிறப்பாளர் சாதிக்காரனை எக்காரணங் கொண்டும் (அதுவும் அவன் அவனது தந்தையாகவே இருந்த போதிலும்) தூக்கிச் செல்ல அனுமதிக்கக் கூடாது. (இயல், 19 , பா. 1-4)
இ) வாசிட்ட தர்ம சூத்திரம் குறிப்பிடுகிறது:
“ஆகவே, எதைச் சாப்பிடுவது எதைச் சாப்பிடக்கூடாது என்பதை நாம் இப்பொழுது அறிவிக்கின்றோம்.
மருத்துவன், வேடன், கெட்ட நடத்தையுள்ள பெண், பணித்துறை முத்திரைக்கோல் ஏந்திச் செல்லுபவன், திருடன், அபிசஸ்தன் மற்றும் அலி அல்லது சாதி நீக்கம் செய்யப்பட்டவன் இவர்கள் கொடுக்கும் உணவைச் சாப்பிடக்கூடாது.
அல்லது கருமி, ஸ்ரவுத யாகத்திற்கான ஆரம்பச் சடங்குகளை நடத்தியவன், கைதி, நோயாளி, சோமச் செடிகளை விற்பவன், மரவேலை செய்பவன், சலவையாளன், போதை தரும் பானத்தை விற்பவன், உளவாளி, கடு வட்டி வாங்குபவன், அல்லது செருப்பு தைப்பவன் ஆகிய இவர்கள் கொடுக்கும் உணவுகளையும் சாப்பிடக் கூடாது.
அல்லது சூத்திரர் கொடுத்த உணவையும் சாப்பிடக் கூடாது. (இயல் 14, பா. 1-4)
சூத்திர இனம் இடுகாட்டுக்கு ஒப்பானது என்பர். எனவே சூத்திரருக்கு முன் வேதம் ஓதக் கூடாது.
இப்பொழுது அவர்கள் யமன் அறிவித்த கீழே காணும் பாடல்களையும் மேற்கோள் காட்டுகிறார்கள்: இந்தத் தீயவர்களான சூத்திர இனத்தார் சுடுகாட்டுக்கு ஒப்பானவர்கள்.
எனவே சூத்திரர்களுக்கு முன் வேதம் ஓதக்கூடாது. (இயல் 18, பாடல் 11-15) சிலர் வேதங்களைப் படித்ததன் மூலம் வெகுமதியைப் பெறத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். சிலர் கடுமையான ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் தகுதி பெற்றவர்களாகிறார்கள். ஆனால் சூத்திரர்கள் தந்த உணவைக் கொண்டு தங்கள் வயிற்றை நிரப்பாத பிராமணர்கள், எல்லா வகை வெகுமதிகளும் பெற தகுதி உடையவர்களாவர். (இயல் 6, பா. 26)
ஒரு பிராமணன் வயிற்றில் சூத்திரன் கொடுத்த உணவுடன் இறப்பின், அவன் அடுத்த பிறவியில் நாட்டுப்புறப் பன்றியாகப் பிறப்பான்; அல்லது அந்தச் சூத்திரனது குடும்பத்தில் பிறப்பான்.
ஒரு பிராமணனது உடல் சூத்திரனது உணவால் ஆன சாற்றால் போஷிக்கப்பட்டிருந்தால் அவன் தினமும் வேதத்தை ஓதினாலும் அக்னி ஹோத்ரம் செய்தாலும் அல்லது பிரார்த்தனையைச் சொல்லிக் கொண்டே இருந்தாலும், அன்றி மேலே செல்லும் வழியை அவன் காணமுடியாது.
ஆனால், சூத்திரனது உணவைச் சாப்பிட்ட பிறகு அவன் புணர்ந்தால், அதனால் தனது சொந்த சாதியைச் சேர்ந்த தனது மனைவியின் மூலம் பிறந்த மகன்களும் அந்த உணவைக் கொடுத்த சூத்திரனைச் சார்ந்தவராவார்கள். அவன் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டான். (இயல் 6, பா. 27-29)
ஈ) மனுஸ்மிருதி சொல்லுகிறது:
“பிராமணன் சூத்திரர்களுடைய ராஜ்யத்தில் வாழக் கூடாது அல்லது நியாயமற்ற மக்கள் நிறைந்து வாழும் இடத்தில், அல்லது வைதீகத்தில் நம்பிக்கையில்லாதவர்கள் கைப்பற்றிய இடத்தில், அல்லது கீழ் மக்கள் வாழுகின்ற இடத்தில் வாழக் கூடாது. (இயல் 4, பா.61)
ஒரு பிராமணன் சூத்திரன் ஒருவனுக்கு யாகத்தை நடத்திக் கொடுத்தால் அவனை மற்ற பிராமணர்கள் தாங்கள் நடத்தும் சிரார்த்த சடங்குகளில் சாப்பிட அழைக்கக் கூடாது. அவனது வருகை (அந்த விருந்தில்) விருந்தை நடத்தியதால் ஏற்படும் நன்மைகள் யாவற்றையும் அழித்து விடும். (இயல் 3, பா. 178)
சூத்திரனது பிணத்தை நகர தெற்கு நுழைவு வாயில் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் இருபிறப்பெடுத்த வர்களது சவம் முறையே மேற்கு, வடக்கு மற்றும் கிழக்கு நுழைவு வாயில் வழியாக எடுத்துச் செல்ல வேண்டும்.
(3) அ) ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் சொல்லுகிறது:
ஒரு பிராமணன் வணக்கம் செய்யும் பொழுது தனது வலது கையைக் காதுக்கு நேராக நீட்ட வேண்டும். சத்திரியன் தனது மார்புக்கு சமமாகக் கையெடுக்க வேண்டும், வைசியன் இடுப்புக்கு நேராக கையை நீட்ட வேண்டும். சூத்திரன் கீழாக நீட்டி இரண்டு கைகளையும் கூப்பி வணங்க வேண்டும். (பிரஸ்னம் 1, படலம் 2, காண்டம் 5, சூத்.16)
ஒரு மனிதன் முதல் (மூன்று) வகுப்புக்காரர்கள் வணக்கத்திற்குத் திருப்பி வணக்கம் செய்யும் பொழுது, அவனது பெயரின் கடைசி அசையை மும்முறை கூற வேண்டும். (பிரஸ்னம் 1, படலம் 2, காண்டம் 5, சூத்.17)
ஒரு சூத்திரன், ஒரு பிராமணிடத்தில் விருந்தினனாக வந்துவிட்டால் அவனுக்குச் சில பணிகளைச் செய்யச் சொல்லி, செய்த பிறகுதான் அவனுக்கு உணவு வழங்க வேண்டும். முதலில் அவனுக்கு வேலை இடாமல் உணவளித்தால் அது அவனுக்குச் சிறப்பு தந்ததாக அர்த்தமாகும். அல்லது பிராமணனது வீட்டில் வேலை செய்யும் அடிமைகள் அரசின் கிடங்கிலிருந்து அரிசி கொண்டுவந்து ஒரு விருந்தினனாகக் கருதி சூத்திரனைப் போசிக்க வேண்டும். (பிரஸ்னம் 1, படலம் 2, காண்டம் 4, சூத்.19-20)
ஆ) விஷ்ணு ஸ்மிருதி நியமித்துள்ளதாவது:
“நூறு வெள்ளிக்காசுகளைக் கொடுக்கும்படி விதிக்கப்பட்டுள்ள அதே தண்டனை, விருந்தோம்பலுடன் சூத்திரனுக்கு மரியாதை கொடுப்பவர்களும், கடவுளர்களுக்கோ அல்லது மூதாதையர் ஆவிகளுக்கோ படைக்கும் சடங்குகளைச் சூத்திரனுக்குச் செய்விக்கும் மத குருமார்களுக்கும், அனுபவிக்கும்படி விதிக்கப்படும். (இயல் 5, பா.115)
இ) மனுஸ்மிருதி விதித்துள்ளதாவது:
ஒருவர் பிராமணனைப் பத்து வயது பெரியவராகக் கருத வேண்டும். ஒரு சத்திரியனை நூறு வயது பெரியவனாக அதாவது தகப்பன், மகன் நிலைகளில் காண வேண்டும். ஆனால் அதில் பிராமணன் தகப்பன் ஸ்தானத்தைப் பெறுவான்.
செல்வம், உறவு, வயது, வகுப்பு மற்றும் அறிவு இவை ஐந்தும் மரியாதைக்குரியன. அவற்றுள் மிகவும் முக்கியமானது கடைசியில் கூறப்பட்டிருப்பது. இந்த மேல் சாதி மூன்றனுள்ளும், அந்த ஐந்தில் மிகவும் சிறப்பானதும் உயர்ந்ததுமான ஒன்றை உடைய ஒருவன் மரியாதைக்குரியவனாவான்.
சூத்திரன் ஒருவன் அவனது செல்வம், அறிவு இவற்றில் எவ்வளவு தான் உயர்ந்து நின்றாலும் அதன் மூலமாக அவன் மதிக்கப்படுவதில்லை. அவனது வயதால் மட்டுமே அதுவும் நூறாண்டுகளை அடைந்திருப்பானாயின் அவன் மரியாதைக்குரியவன் ஆகிறான். ஆனால் அதற்கு முன்னல்ல. (இயல் 2, பாடல்கள் 135-137)
வயதாலோ, நரைமுடியாலோ, செல்வத்தாலோ, உறவாலோ உயர்வை அடைய முடியாது. வேதம் விதியை நிர்ணயிக்கிறது. வேதத்தை யாரொருவன் முழுமையாகத் தெரிந்திருக்கின்றானோ அவன்தான் அவர்கள் யாவருள்ளும் உயர்ந்தோனாவான்.
பிராமணர்களுக்கு உயர்வு அவர்களது அறிவால்; சத்திரியனுக்கு அவனது வீரத்தால்; வைசியருக்கு அவனது சொத்தாலும், செல்வத்தாலும் மற்றும் சூத்திரனுக்கு அவனது வயதால்.
ஒருவன் அவனது தலை நரைத்திருப்பதனாலேயே அவனை வயதானவனாகக் கருதிட முடியாது. இளைஞனாக இருந்த போதிலும் அவன் வேதங்களைப் படித்திருந்தால் அவனைக் கடவுளர் மூத்தவனாகக் கருதுவர். (இயல் 2, பாடல்கள், 154-156)
எப்படியும் ஒரு சத்திரியன் பிராமணனது வீட்டுக்கு விருந்தினனாக அழைக்கப்படுவதில்லை. வைசியர் மற்றும் சூத்திரர்களும் வீடுகளுக்கு அழைக்கப்படுவதில்லை. அவர்களை நண்பராகவோ, உறவுக்காரராகவோ, குருவாகவோ வீட்டுக்குரிய பிராமணன் கருதுவதில்லை. பிராமணனுக்கு மட்டும் தான் ஒரு பிராமணனுடைய வீட்டிற்கு விருந்தினனாக அழைக்கப்படுவதற்கு உரிமை உண்டு. ஒரு சத்திரியன் விருந்தாளியாக வந்தால் பிராமணர்கள் அனைவரும் உணவருந்திய பின் ஒருவர் அவருக்கு உணவளிக்கலாம், அதுவும் அவர் விரும்பினால், வைசியரோ அல்லது சூத்திரரோ விருந்தினராக வந்தால், பிராமணன் அவருக்கு உணவளிக்கலாம்; ஆனால் வேலைக்காரர்களைக் கொண்டே உணவு அளிக்க வேண்டும்.
(4) அ) ஆபஸ்தம்ப தர்ம சூத்திரப்படி:
யாதொருவன் சத்திரியனைக் கொன்றுவிடுகிறானோ அவன் ஆயிரம் பசுக்களைப் பிராமணர்களுக்குத் தானமாக கொடுக்க வேண்டும். அந்த செய்கையினின்றும் விடுபட பிராயச்சித்தமாக அவன் அதை செய்ய வேண்டும். அவன் நூறு பசுக்களை வைசியனைக் கொலை செய்ததற்கும், பத்து பசுக்களைச் சூத்திரனை கொலை செய்ததற்கும் கொடுக்க வேண்டும். (பிரஸ்னம் 1, படலம் 9, காண்டம் 24, சூத். 1-3)
ஆ) கௌதம தர்ம சூத்திரப்படி:
“ஒரு சத்திரியன் ஒரு பிராமணனைத் திட்டிப் பேசினால், நூறு (கர்ச பணம்) அபராதமாக அவன் கட்ட வேண்டும். ஒரு பிராமணனை அடித்துவிட்டால் இதைபோல் இருமடங்கு அபராதமாக கட்ட வேண்டும்.
ஒரு வைசியன் பிராமணனைத் திட்டிப் பேசி விட்டால் சத்திரியனுக்கு விதித்தது போல ஒன்றரை மடங்கு அபராதமாகக் கட்ட வேண்டும். ஆனால் பிராமணன் ஒரு சத்திரியனைத் திட்டிப் பேசிவிட்டால், ஐம்பது கர்ச பணம் அபராதம் கட்ட வேண்டும்.
பிராமணன் ஒரு வைசியனைத் திட்டினால் அதில் பாதியை (25 கர்ச பணம்) அபராதம் கட்ட வேண்டும். சூத்திரனைப் பிராமணன் திட்டி விட்டால் அவன் ஒன்றும் கட்டத் தேவையில்லை.” (இயல் 12, சூத். 8-13)
இ) பிரஹஸ்பதியினுடைய ஸ்மிருதியின்படி:
“ஒரு பிராமணன் சத்திரியனை வைதால், நூறு பணத்தில் பாதி (ஐம்பது) பணம் அபராதமாகக் கட்ட வேண்டும். வைசியனைத் திட்டி விட்டால், ஐம்பதில் பாதி (இருபத்தைந்து) பணம் கட்ட வேண்டும். ஒரு சூத்திரனைத் திட்டி விட்டால் பன்னிரண்டரை பணம் அபராதமாகக் கட்ட வேண்டும்.
இந்த தண்டனை ஒரு நற்குணமுள்ள சூத்திரனை அவன் எவ்வித குற்றமும் செய்யாதிருந்து அதாவது ஒரு சூத்திரன் தனது கீழ் நிலையை ஏற்றுக் கொண்டு அந்நிலைக்கேற்ப அவனுக்குப் பணிக்கப்பட்ட பணிகளை விரும்பி செய்பவனான நற்குணமுள்ள சூத்திரனாக உள்ளபோது திட்டினால் வழங்கப்படும். ஆனால் நற்குணமில்லா சூத்திரனை ஒரு பிராமனன் வைதால் எந்தவிதக் குற்றமும் சுமத்த முடியாது.
ஒரு சத்திரியனை நிந்தித்தற்கு ஒரு வைசியன் நூறு பணம் அபராதமாகக் கட்ட வேண்டும். ஒரு சத்திரியன் ஒரு வைசியனை நிந்தித்தால் அதில் பாதி (ஐம்பது) பணம் அபராதம் செலுத்த வேண்டும்.
ஒரு சத்திரியன் ஒரு சூத்திரனை நிந்திப்பானேயானால், அபராதம் இருபத்தைந்து பணமும் வைசியனாக இருந்தால், இதைப் போல இரு மடங்கு அபராதமும் கட்டுவதுதான் நியாயமானதெனச் சட்ட வல்லுநர் அறிவிப்பர்.
ஒரு சூத்திரன் வைசியனைத் திட்டியதற்கு அவனுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை முதலில் கட்ட நிர்பந்திக்கப்பட வேண்டும். அதோடு சேர்த்து மேலும் பாதி அபராதத் தொகையைச் சத்திரியனை நிந்தித்ததற்கும், உச்ச அபராதத் தொகையைப் பிராமணனை நிந்தித்தற்கும் கட்ட நிர்ப்பந்திக்கப்படுவான்.” (இயல் 20, பாடல்கள். 7-11)
ஈ) மனு ஸ்மிருதியின் பிரகாரம்:
“ஒரு சத்திரியன் ஒரு பிராமணனைத் தூஷித்தால் அவன் நூறு பணம் அபராதம் கட்ட விதிக்கப்படுவான். ஒரு வைசியன் நூற்றைம்பது அல்லது இருநூறு பணம் அபராதமாகவும் கட்ட வேண்டும். ஆனால் சூத்திரன் பிராமணனை வைத்தால் அவனது உடலில் சாட்டையால் அடி வாங்கிக்கொள்ள வேண்டும்.
ஒரு பிராமணன் சத்திரியனை நிந்தித்தால் ஐம்பது பணம் அபராதமும், ஒரு வைசியனை நிந்தித்தால் ஐம்பதில் பாதியும், சூத்திரனை நிந்தித்தால் பன்னிரண்டு பணமும் அபராதமாக விதிக்கப்படுவான்.
ஒரு சத்திரியன் கொலை செய்யப்பட்டிருந்தால், பிராமணனைக் கொலை செய்ததற்கு விதிக்கப்படும் அபராதத் தொகையில் நாலில் ஒரு பங்கு தான் சரியான பிராய்ச்சித்தமான அறிவிக்கப்பட்டுள்ளது. வைசியனாக இருந்தால் எட்டில் ஒரு பங்கும், ஒரு சூத்திரனை கொலை செய்துவிட்டால் அதுவும் அச்சூத்திரன் நற்குணவானாக வாழ்ந்திருப்பின் பதினாறில் ஒரு பங்கும்தான் சரியான பிராயச்சித்தமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இரு பிறப்பெடுத்தவர்களில் உயர்ந்தோன் (பிராமணன்) சத்திரியனைத் தன்னிச்சையில்லாது கொலை செய்துவிட்டால் அதிலிருந்து அவனை விடுவித்துக் கொள்வதற்கு நூறு பசுவும் ஒரு காளையும் அவன் கொடுக்க வேண்டும்.
அல்லது மூன்று ஆண்டுகள் தலைமுடியை முடிந்து கொண்டு புலனுணர்வுகளை அடக்கிக் கொண்டு பிராமணனைக் கொலை செய்த ஒருவன் கடைப்பிடிப்பதைப் போலவே அவனும் கடைப்பிடித்துக் கொண்டு நகருக்கு வெளியே வெகு தூரத்தில் வசித்துக் கொண்டிருக்க வேண்டும். மரத்தின் அடியில்தான் அவன் வசிக்கத் தக்க இடமாகும்.
இரு பிறப்பாளர்களில் மிக உயர்ந்தவன் (பிராமணன்) நற்குணத்தோடு வாழ்ந்த வைசியனைக் கொன்றிருப்பானாயின் மேலே சொல்லப்பட்ட பிராயசித்தத்தை ஓராண்டு அனுபவிப்பதோடு நூற்றியொரு கால் நடைகளையும் தர வேண்டும்.,
சூத்திரனைக் கொன்றிருப்பின் இந்தப் பிராயசித்தங்களை ஆறு மாதம் அனுபவிக்க வேண்டும். அல்லது அவன் பத்து வெள்ளைப் பசுக்களையும் ஒரு காளையையும் ஒரு புரோகிதருக்குக் கொடுக்க வேண்டும்.” (இயல் 1, பாடல்கள் 127-131)
உ) விஷ்ணு ஸ்மிருதியின் படி:
“ஒரு கீழானவன் மேலான சாதியைச் சேர்ந்த ஒருவனது எந்த ஒரு அவயவத்திற்குத் துன்பம் இழைக்கின்றானோ அல்லது எதைக் காயப்படுத்துகிறானோ, அவன் அதே போன்ற அவயவத்தை இழக்க அரசன் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
ஒருவன், அவனைவிட மேலானவன் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குச் சமமாக உட்காருவானேயானால் அவனுடைய புட்டத்தில் சூடு இழுத்து அடையாளம் இட்டு அவனை நாடு கடத்திட வேண்டும்.
ஒருவன் தன்னினும் மேலானவன் மீது துப்புவானேயாயின், அவனது இரண்டு உதடுகளையும் இழக்க வேண்டும்.
அவன் அவர்களுக்கு எதிராக வாயு பிரிய விட்டால், அது வந்த அவனது பின் பாகத்தை இழக்க வேண்டும்.
அவன் வசை மொழிகளை உபயோகப்படுத்தினால் அவனது நாவை இழக்க வேண்டும்.
ஒரு கீழ்ப் பிறப்பாளன் கர்வத்தால் உயர் சாதிக்காரனொருவனுக்கு அவனது கடமைகளைப் பற்றிப் போதிப்பானேயானால், அரசன் கொதிக்கும் எண்ணெய் அவனது வாயில் ஊற்ற ஆணை பிறப்பிக்க வேண்டும்.
ஒரு சூத்திரன் உயர்சாதிக்காரன் பெயரையோ, சாதியையோ கேவலமாகச் சொன்னால், பத்து அங்குல நீளமுள்ள பழுக்கக் காய்ச்சிய இரும்பு ஊசியை அவனது வாயில் செலுத்த வேண்டும். (இயல் 5, சூத். 19-25)
(5) அ) பிருஹஸ்பதி ஸ்மிருதியின்படி:
“ஒரு சூத்திரன் மத போதனையைப் போதித்தாலோ அல்லது வேத வார்த்தைகளை முணு முணுத்தாலோ அல்லது ஒரு பிராமணனைத் தூஷித்தாலோ அவனது நாக்கைத் துண்டித்திட வேண்டும். (இயல் 12, பாடல் 12)
ஆ) கௌதம தர்ம சூத்திரத்தின்படி:
ஒரு சூத்திரன் வேதம் ஓதுதலை வேண்டுமென்றே காது கொடுத்துக் கேட்பானேயானால், அவனது இரு காதுகளிலும் ஈயத்தையோ அல்லது அரக்கையோ உருக்கி ஊற்றி நிரப்ப வேண்டும்.
அவன் வேத பாடத்தை ஓதினால், அவனது நாக்கை அறுத்து விட வேண்டும். அவன் வேத பாடங்களை நினைவு வைத்திருந்தால், அவன் உடல் இரு துண்டங்களாகப் பிளந்து விட வேண்டும்.” (இயல் 20, பாடல் 4-6)
இ) மனு ஸ்மிருதியின் படி:
ஒருவர் கூலிக்காகச் சொல்லிக் கொடுத்தாலும், சூத்திர ஆசிரியனுக்கு ஒருவர் கூலி கொடுத்துக் கற்றுக் கொண்டாலும் அல்லது சூத்திர ஆசிரியரிடமிருந்து கற்றுக் கொண்டாலும் அன்னார் தேவருக்கோ பிதுர்களுக்கோ நடத்தும் பூசையில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்தவராகிறார். (இயல் 3, பாடல் 156)
ஒருவர் சூத்திரனுக்கு அறிவுரை வழங்கக் கூடாது; அவனுக்கு மீதமுள்ள உணவை வழங்கக் கூடாது; அவனுக்குத் தனக்குக் கிடைத்த வெண்ணெயைக் கொடுக்கக் கூடாது. மேலும் அவனுக்குச் சட்டத்தைக் கற்றுக் கொடுக்கக் கூடாது; மத ஆச்சாரங்களையும் கடைப்பிடிக்க அனுமதிக்கக் கூடாது. யாரொருவர் அவனுக்குச் சட்டத்தைச் சொல்லுகிறாரோ அல்லது மத வழிபாடுகளைக் கடைப்பிடிக்க அனுமதிக்கின்றாரோ அவரும் சூத்திரன் கூட உண்மையில் நரகத்தின் இருட்டில் (அசம்விருதா என அழைக்கப்படுவது) மூழ்குவார்.” (இயல் 4, பாடல் 78-81)
ஒருவர் வேதத்தைத் தெளிவில்லாமல் என்றும் ஓதக் கூடாது; அல்லது சூத்திரனின் முன்னிலையிலும் ஓதக் கூடாது. இரவின் முடிவிலும் வேதம் ஓதக் கூடாது; ஒரு வேளை களைப்படைந்து மீண்டும் தூங்கி விடுவார்.” (இயல் 4, பாடல் 99)
(6) இது மனு ஸ்மிருதி சொல்லுவது:
“ஒரு பிராமணன் ஒரு சூத்திரனுடைய பொருள்களை முழுமன அமைதியோடு எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் சூத்திரனுக்கென்று எதுவும் சொந்தமில்லை. அவனது சொத்துக்களை அவனது எஜமானன் எடுத்துக் கொள்ளலாம். (இயல் 8, பாடல் 417)
ஒரு சூத்திரனால் சம்பாதிக்க முடியுமானாலும் அவன் செல்வத்தைப் பெருக்க அனுமதிக்கக் கூடாது.
சூத்திரன் வைத்திருக்கும் செல்வத்தை வெறுமனே பார்ப்பது கூட பிராமணனைத் துன்புறுத்தும்.” (இயல் 9, பாடல் 129)
(7) இங்கே மனுஸ்மிருதியில் அரசனுக்கு வழங்கப்பட்ட அறிவுரைகளைக் காணலாம்:
“எவன் ஒருவன் பிறந்ததின் நிமித்தம் பிராமணன் என்று உரிமை கொண்டாடுகிறானோ அல்லது எவனொருவன் அவனையே பிராமணன் என்று சொல்லிக் கொள்கிறானோ அவன் விரும்பினால், அரசனுக்குச் சட்டத்தை அறிவிப்பவன் ஆவான். ஆனால் சூத்திரன் என்றுமே அப்படி இருக்க முடியாது.
அரசன் ஒருவன் ஒரு சூத்திரன் நீதித் தீர்ப்பு அளிப்பதைப் பார்ப்பானானால், அவனது ராஜ்யம் பசு புதைசேற்றில் அமிழ்வது போல் துரதிர்ஷ்டத்தில் அமிழ்ந்து விடும்.
ஒரு இராச்சியம் சூத்திரர்களை முக்கியமாகக் கொண்டிருப்பின் மற்றும் நம்பிக்கை அற்றவர்களாலும், இரு பிறப்பாளர் சாதியைச் சேர்ந்த அநாதரவற்ற ஆண்களாலும் நிறைந்த இருப்பின் அந்த இராச்சியம் பஞ்சத்தாலும், கொடிய வியாதிகளாலும் பீடிக்கப்பட்டு விரைந்து மொத்தமாக அழிந்தபடும்.” (இயல் 8, பாடல்கள் 20-22)
(8) அ) ஆபஸ்தம்ப தர்ம சூத்திரம் சொல்வதாவது:
“கடினமான மதச் சடங்குகளைச் செய்பவர்கள் புனித சட்டங்களை நிறைவேற்ற விருப்பங் கொண்டவர்களாவர்.
மேலும் ஓர் சூத்திரன் பிராமணனது பாதங்களைக் கழுவி வாழ்பவனாவான். அத்துடன் கண்ணற்றோர், ஊமை மற்றும் நோய் வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அக்குறைகள் நிவர்த்தி ஆகும் நாள் வரை வரிவிலக்கு அளிக்கப்படுகிறது. (பிரஸ்னம் 2, படலம் 10, காண்டம் 26, சூத் 14-16)
மற்ற மூன்று சாதியினருக்கும் சூத்திரன் சேவை செய்ய வேண்டுமென்பது விதிக்கப்பட்டதாகும்.
அவன் வேலை செய்யும் உயர்சாதிக்காரர்களுக்கேற்ப அவனது தகுதியும் உயரும்.” (பிரஸ்னம் 1, படலம் 1, காண்டம் 1, சூத். 7-8)
ஆ) மனுஸ்மிருதி கூறுவதாவது:
“இவ்வாறு படைக்கப்பட்ட அனைத்தையும் காப்பதற்காக மிக உன்னதமான கடவுள் அவரது வாயிலிருந்தும், தோள்களிலிருந்தும், தொடைகளிலிருந்து மற்றும் பாதங்களிலிருந்தும் பிறந்தவர்களுக்கு தனிப்பட்ட பணிகளை ஒதுக்கி ஆணையிட்டுள்ளார்.”
கற்பித்தல், கற்றல், யாகம் (சடங்குகள்) செய்தல் மற்றும் பிறருக்குப் புரோகிதர்களாக இருந்து சடங்குகள் செய்தல், வெகுமதிகள் கொடுப்பதும் பெறுவதும் ஆகிய பணிகளைச் செய்ய பிராமணர்களுக்கு ஆணையிட்டுள்ளார்.
மக்களைப் பாதுகாப்பதும், வெகுமதிகள் கொடுப்பதும், யாகம் (சடங்குகள்) செய்வதும், படிப்பதும், உணர்ச்சியுள்ள பொருள்கள் மீது பற்றற்று இருப்பதும் சத்திரியர்களுக்கு உரியன.
கால்நடைகளை வளர்ப்பதுவும், ஈவதுவும், சடங்குகள் நடத்துவதும், படிப்பதுவும், வாணிகம் செய்வதுவும், வட்டி வாங்குவதுவும் மற்றும் வேளாண்மை செய்வதுவும் வைசியர்களுக்கு உரியன.
கடவுள் ஒரு பணியை மட்டும் சூத்திரர்களுக்கு ஒதுக்கியுள்ளார். மூன்று வருணத்தவர்களுக்கும் அதாவது மேலே கூறியவர்களுக்கு முணுமுணுக்காமல் பணிவிடை செய்வதுதான் அது” (இயல் 1, பாடல்கள் 87-91)
ஆ)கௌதம தரும சூத்திரம் கூறுவதாவது:
“ஒரு சூத்திரன் ஒரு ஆரிய குலப் பெண்ணுடன் தகாத உடலுறவு கொண்டுவிட்டால், அவனது ஆண் குறியை அறுத்துவிட வேண்டும். அத்துடன் அவனது சொத்துக்களனைத்தையும் பறிமுதல் செய்திட வேண்டும்.
அந்தப் பெண்ணுக்கு ஒரு பாதுகாவலன் (அதாவது யாராவது ஒருவனது பராமரிப்பின் கீழ் அப்பெண் இருப்பின்), அந்தச் சூத்திரன் மேலே கொடுக்கப்பட்ட தண்டனையை அனுபவித்தபின் அவனைச் சிரச்சேதம் செய்துவிட வேண்டும்.” (இயல் 12, சூத். 2-3)
இ) மனுஸ்மிருதி கூறுகிறது:
சூத்திரசாதியைச் சேர்த்த ஒருவன் மிக உயர்ந்த சாதியை (பிராமண சாதி)ச் சேர்ந்த பெண்ணைக் காதல் செய்தால் அவனுக்குக் கசையடி தண்டனை தரப்பட வேண்டும். (இயல் 8, பாடல் 366)
ஒரு சூத்திரன் இரு பிறப்பாளர் சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், அவள் ஒருவனது பராமரிப்பில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவனுடைய மர்ம உறுப்பை இழக்கச் செய்ய வேண்டும். அவள் பாதுகாப்புடன் இருப்பவளாக இருந்தால் அவனது அனைத்து சொத்துக்களும் பாதுகாப்புடன் இல்லாதவளாக இருந்தால் அவனது அங்கங்களைச் சிதைத்து அவனது அனைத்துச் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். (இயல் 8, பாடல் 374)
இரு பிறப்பாளர் முதலில் அதே சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணம் முடிக்க அனுமதிக்கப்படுவர். ஆனால் அவன் காமத்தால் கீழ்சாதிப் பெண்களைச் சேர்த்துக் கொள்வானேயானால் வரிசைப்படி அவர்களும் மனைவிகளாகக் கருதப்படுவார்கள்.
ஒரு சூத்திரப் பெண் மட்டும்தான் ஒரு சூத்திரனுக்கு மனைவியாக வேண்டும். ஆனால் ஒரு வைசியனுக்கு சூத்திரப் பெண்ணும், அவனது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் சட்டப்படி மனைவிகளாக ஆக முடியும். சத்திரியனுக்கு இப்பெண்கள் இருவரும் மற்றும் அவனது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மனைவிகளாக இருக்க முடியும். ஒரு பிராமணனுக்கு அவர்களைப் போன்று பெண்களும், அவனது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மனைவிகளாக முடியும்.
ஒரு சூத்திரப் பெண் பிராமணனுக்கோ சத்திரியனுக்கோ, அவர்கள் மிகக் கஷ்ட நிலையிலிருந்த போதிலும் கூட மனைவியாக இருந்ததாக வரலாறே இல்லை.
இரு பிறப்பாளர் சாதியைச் சேர்ந்த ஒருவன் ஒரு சூத்திரப் பெண் மீது அடக்க முடியா காதலுணர்வால் மணம் செய்து கொள்வானேயானால் விரைந்து அவனது குடும்பங்களையும், அவனது பின் சந்ததியினையும் சூத்திரர்களின் நிலையை அடையச் செய்து விடுகிறான். (இயல் 3, பாடல்கள் 12-15)
ஒரு பிராமணன் ஒரு சூத்திரப் பெண்ணைத் தனது படுக்கையறைக்கு இட்டுச் செல்வானேயானால் அந்தக் கீழ்நிலைக்குச் சென்று விடுகிறான். அவள் மூலமாக ஒரு மகன் பிறப்பின் அவன் நிச்சயமாக பிராமணத்தன்மை இழக்கக்கூடுவன்.
ஒருவன் தாழ்குலத்துப் பெண்ணிடமிருந்து பெற்று அளிக்கும் படையல்கள் கடவுளுக்கோ, மூதாதையர்களுக்கோ மற்றும் விருந்தினர்களுக்கோ ஏற்புடையதாகாது. அன்றியும் அவன் மோட்சத்திற்கும் செல்ல மாட்டான்.
ஒரு சூத்திரப் பெண்ணின் அதரபானத்தைச் சுவைத்தும், அவளது சுவாசத்தால் கவரப்பட்டும் அவள் மூலம் ஒரு மகனைப் பெற்று மிருப்பனேயாகில் பிராயச்சித்தம் அவனுக்கு ஏதுமில்லை. (இயல் 3, பாடல்கள் 17-19)
(10) அ) வாசிட்ட தரும சூத்திரம் சொல்லுகிறது:
“ஒரு பிராமணன் மீது எரிச்சல்படுவது, பொறாமை கொள்வது, உண்மைக்குப் புறம்பாய்ப் பேசுவது, பிராமணனைப் பற்றித் தவறாகப் பேசுவது, புறங் கூறுவது மற்றும் கொடூரமாக நடந்து கொள்வதும்தான் சூத்திரர்களது குணாதிசயமாகும் என்பதை அறிவர்.” (இயல் 6, பாடல் 24)
ஆ) விஷ்ணு ஸ்மிருதி குறிப்பிட்டுள்ளது:
ஒரு பிராமணனுக்கு இடப்படும் பெயர் மங்களகரமாக இருக்க வேண்டும். சத்திரியனாயின் சக்திகயைக் குறிப்பதாக இருக்க வேண்டும். வைசியனாயின் செல்வத்தைக் குறிப்பதாக இருக்க வேண்டும். சூத்திரனாயின் அருவருப்பைத் தருவதாக இருக்க வேண்டும். (இயல் 27, சூத். 6-9)
இ) கௌதம தரும சூத்திரம் கூறுகிறது:
“சூத்திரர் நான்காவது சாதியைச் சேர்ந்தவர்கள்; ஒரே ஒரு பிறப்பைப் பெற்றவர்கள்.
அவர்கள், மேல் சாதிக்காரர்களுக்குச் சேவகம் செய்பவர்கள். அவர்கள் மூலம் அவன் வாழ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
அவன் அவர்கள் தூக்கியெறிந்து விட்ட செருப்புகளை பயன்படுத்த வேண்டும். அவர்கள் உண்டு எஞ்சிய சோற்றைச் சாப்பிட வேண்டும்.
ஒரு சூத்திரன் வேண்டுமென்றே மேல்சாதிக்காரனை திட்டுவானாயின் அல்லது அடிப்பானேயானால் எந்த அவயவத்தால் அக்குற்றத்தைச் செய்தானோ அந்த அவயவத்தை நீக்கி விட வேண்டும்.
ஒரு சூத்திரன் உட்காருவதிலோ, படித்திருப்பதிலோ, பேசுவதிலோ, பாதையில் செல்லும்போதோ மேல்சாதிக்காரர்களுக்குச் சமமாக நடந்து கொண்டால் அவனுக்குக் கசை அடிகள் கொடுக்க வேண்டும்.” (இயல் 10, சூத். 50, 56-59 மற்றும் இயல் 12, சூத். 1,7)
ஈ) மனுஸ்மிருதியும் அதையே பின்பற்றிச் சொல்லுகிறது:
ஒரு பிராமணன் பேராசையாலும் செல்வாக்காலும், சமஸ்காரம் பெற்றிருக்கும் இரு பிறப்பாளரை அவர்களின் விருப்பமில்லாதிருந்தும் ஒரு அடிமை செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திப்பானேயானால், அவன் அறுநூறு பணங்களை அபராதமாகக் கொடுக்க அரசன் விதிப்பானாக.
ஆனால் ஒரு சூத்திரன், பிராமணனால் விலைக்கு வாங்கப்பட்டவனோ இல்லையோ, அடிமைத் தொழில் செய்யக் கட்டாயப்படுத்தப்படலாம். ஏனென்றால் சூத்திரன், தான் வாழ்வதோடு பிராமணர்களுக்கு அடிமைத் தொழில் செய்யவே படைக்கப்பட்டவன்.
சூத்திரன் அவனது எஜமானனிடமிருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், அவன் அடிமைத் தொழில் செய்வதிலிருந்து விடுவிக்கப்படுவதில்லை. அடிமைத் தொழில் செய்வது அவனோடு பிறந்ததாகும். அப்படி இருக்கையில் யாரால் அவனை அதிலிருந்து விலக்க முடியும்? (இயல் 7, பாடல்கள் 412-414)
பிறரை நிந்திக்காமல், இருபிறப்பாளரைப் போன்றே நல்லாற்றில் ஒழுகுவோன் இம்மையில் புகழும் மறுமையில் நற்கதியும் பெறுவான். (இயல் 10, பாடல் 128) வேதத்தை நன்குணர்ந்த பெருமைக்குரிய புரோகிதருக்கு மிகப் பணிவாக நடந்து கொண்டு அவரது வீட்டு வேலைக்காரனாக வாழ்வதுதான் சூத்திரனது மிக உன்னதமான கடமையாகும். அது அவனுக்குப் பேரானந்தத்தைக் கொடுக்க வல்லது.
அவன் மனசுத்தியோடு மேல்சாதிக்காரர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடந்து கொண்டு, பேசுவதில் சாந்தமும் கடைப்பிடித்து ஏமாற்றாமலும் எப்பொழுதும் பிராமணரிடம் தாழ்மையாகவும் இருந்து வாழ்ந்து வந்தானாகில் அவன் அடுத்த பிறவியில் மேல்சாதியில் பிறப்பான். (இயல் 9, பாடல்கள் 334-335)
ஒரு சூத்திரன் போதுமான அளவு பிழைப்பு நடத்தி வாழ விரும்பு வானாயின், அவன் சத்திரியன் ஒருவனிடம் சேவகம் செய்யலாம். அதுதான் சட்டம். அல்லது அவன் ஏதோ ஆதாயமான வாழ்வு வாழ ஆசைப்படுவானானால் அவன் பணக்கார வைசியரிடம் சேவகம் செய்து வாழலாம்.
ஆனால் மோட்சத்தை அடையவேண்டுமானால் அவன் பிராமணனுக்குப் பணி செய்து வாழ வேண்டும். மோட்சத்திற்காகவும் பிழைப்பு நடத்துவதற்காகவும் கூட பிராமணருக்குச் சேவகம் செய்து வாழலாம். அன்றி, பிராமணர் என்ற சொல்லை எப்பொழுதும் வழிபட்டுக் கொண்டிருந்தாலே அவன் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ததற்குச் சமமாகும்.
பிராமணர்களுக்குப் பணி செய்து கிடப்பதே சூத்திரனது மிக உன்னத பணியாகக் கருதப்படும். அதைவிட வேறு எதையாவது செய்வானேயாகில் அவனுக்குக் கிடைக்கப் போவது ஒன்றுமில்லை.
சூத்திரனது வேலைத் தரத்தையும், புத்திசாலித்தனத்தையும், தனது வீட்டில் உள்ளவர்களிடம் எப்படி நடந்து கொள்வான் என்பதையெல்லாம் சோதித்தறிந்து அவனுக்கு எவ்வளவு கூலி தரலாம் என்பதை நிர்ணயித்தபின்தான் சூத்திரனைப் பிராமணர் அவரது வீட்டில் வேலைக்காரனாக அமர்த்துவர். அவனுக்கு மிச்சம், மீதி இருக்கும் உணவையும், பழைய துணிகளையும் கொடுப்பர். அதே போல் தானியத்தில் பதர்களையும் கொடுப்பார். அதேபோலப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையிலுள்ள தட்டுமுட்டுப் பொருள்களையும் கொடுப்பர். (இயல் 10, பாடல்கள் 121-125)
ஒரு பிராமணனுடைய பெயர் மங்களகரமானது. ஒரு சத்திரியனது பெயர் சக்தியைக் குறிக்கும். வைசியனது பெயர் செல்வத்தைக் குறிக்கும். ஆனால் சூத்திரனது பெயர் வெறுக்கத்தக்கதாகும்.
அதேபோல் பிராமணரது சாதிப் பெயர் நல்லதிர்ஷ்டத்தையும், சத்திரியனது பெயர் பாதுகாப்பையும், வைசியரது பெயர் செல்வத்தையும், சூத்திரர் பெயர் சேவகத்தையும் குறிப்பதாக இருக்க வேண்டும். (இயல் 2, பாடல்கள் 31-32) ஒரு பிறவி எடுத்தவன் கொடூரமான வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டு இரு பிறப்பாளரை அடிப்பானேயானால் அவனது நாவை அறுத்துவிட வேண்டும்.
காரணம் அவன் கீழ் மகளானதால் அவர்களது பெயரையோ, சாதியையோ கேவலமாகச் சொல்வானேயானால் பழுக்கக் காய்ச்சிய பத்து அங்குல இரும்புக் கம்பியை அவனது வாயிலே செலுத்த வேண்டும். அவன் துடுக்குத்தனத்தால் புரோகிதருக்கு அவரது பணியைப் பற்றி அறிவுரை புகன்றால், அரசன் கொதிக்கும் எண்ணெயை அவனது வாயிலும் காதுகளிலும் ஊற்றத்தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். (இயல் 8, பாடல்கள் 270-272)
ஒரு கீழ் சாதியில் பிறந்தவன் மேல்சாதிக்காரனுடைய அவயவத்தைக் காயப்படுத்தி விட்டால் அதே போன்ற அவனது அவயவத்தைத் துண்டித்திட வேண்டும். இதுதான் மனுவின் கட்டளையாகும்.
அவன் தனது கையை மேல் சாதிக்காரனுக்கு மேலே தூக்கினாலோ அல்லது கையிலுள்ள கொம்பைத் தூக்கினாலோ, அவனது கையை வெட்டிவிட வேண்டும். அவன் கோபத்தில் காலால் உதைத்துவிடுவானேயாகில், அவனது காலலைத் துண்டித்துவிட வேண்டும்.
ஒரு கீழ்ச் சாதிக்காரன் மேல் சாதிக்காரனுக்குப் பக்கத்தில் உட்காரப் பிரயத்தனப்பட்டால், அவனது இடுப்பில் சூடு வைத்து விட்டு அவனை தேசப்பிரஷ்டம் செய்திட வேண்டும். அல்லது அரசன் அவனது பின்பாகத்தைச் செதுக்கிவிட வேண்டும்.
அவன் துடுக்குத்தனமாக அவன் மீது துப்பிவிட்டால், அரசன் ஆணையின் பேரில் அவனது இரு உதடுகளையும் அறுத்துவிட வேண்டும். அவன் மீது மூத்திரத்தை பெய்துவிட்டால், அவனது ஆண் குறியை அறுத்துவிட வேண்டும். அவன், அவன்மீது வாயுவை பரவ விட்டால் அவனது குதத்தை அறுத்துவிட வேண்டும்.
தாழ்ந்த குடியில் பிறந்தவன், உயர்சாதியில் பிறந்தவனின் குடுமியைப் பிடித்து ஆட்டி விட்டால், அவனது இரு கைகளையும் அரசன் எவ்வித தயக்கமும் காட்டாமல் தக்க நடவடிக்கை எடுத்துத் துண்டித்திட வேண்டும். அவனது பாதங்கள், தாடி, கழுத்து அல்லது மூத்திரக் காய்களை வன்மையாகப் பிடித்து இழுத்து விட்டாலும் அவனது கைகளைத் துண்டிக்க ஆவன செய்திட வேண்டும். ஒருவன் தோலைக் கீறினாலோ, இரத்தம் வர அடித்து விட்டாலோ ஐநூறு பணங்களை அபராதமாக அவன் கட்ட வேண்டும். ஒருவன் சதையைப் பிய்த்து விட்டால், அவன் 6 நிஸ்காக்கள் (பணம்) அபராதமாகக் கட்டி விட வேண்டும். ஒரு எலும்பை ஒடித்து விட்டால் அவனை நாடு கடத்திட வேண்டும்.” (இயல் 8, பாடல்கள் 279-284)
உ) நாரத ஸ்மிருதி சொல்லுகிறது:
சூத்திர சாதியைச் சார்ந்தவர்கள் இரு பிறப்பாளரான ஆரிய சாதியைச் சேர்ந்த ஒருவருக்கு எதிராகப் பொய்க் குற்றம் சாட்டுவார்களேயானால் அரசன் தன்னுடைய அலுவலர்கள் மூலம் அவர்களது நாவைப் பிளந்து விட வேண்டும். மற்றும் அரசன் அவர்களை கழுமரத்தில் ஏற்றிட வேண்டும்.
ஒரு சூத்திரன் இருபிறப்பாளரை கேவலமான வார்த்தைகளால் திட்டி அவமானப்படுத்தி விட்டால், அவனது நாவை அறுத்து விட வேண்டும். காரணம் அவன் கீழ் சாதிக்காரன்.
அவன் அவர்களது பெயரையோ அல்லது சாதியையோ இழிவாகப் பேசிவிட்டால், பத்து அங்குல நீளமுள்ள இரும்புக் கம்பிகளைப் பழுக்கக் காய்ச்சி அவனது வாயில் செலுத்திவிட வேண்டும்.
அவன் துடுக்குத்தனமாக அவரது பணியைப்பற்றிப் பிராமணனுக்கு அறிவுரை சொல்வானேயாகில், அரசன் அவனது வாயிலும் காதுகளிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிட வேண்டும்.
எந்த ஒரு உறுப்பால் கீழ்சாதியைச் சார்ந்தவன் ஒரு பிராமணனைத் தாக்குகிறானோ அந்த உறுப்பைத் துண்டித்திட வேண்டும். அதுதான் அவன் செய்த குற்றத்திற்குத் தக்க பிராயச்சித்தமாகும்.
ஒரு கீழ் சாதியில் பிறந்தவன் ஒரு உயர்சாதிக்காரன் அமர்ந்திருக்கும் இடத்தில் சமமாக உட்கார முயற்சித்து விட்டாலும் அவனது இடுப்பில் சூடு போட்டு அடையாளமிட்டு அவனைத் தேசப் பிரஷ்டம் செய்திட வேண்டும். அல்லது அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது ஆசனப் பகுதியைச் சிதைத்திட வேண்டும்.
அவன் அகங்காரத்தால் மேல்சாதிக்காரன் மீது துப்பி விட்டால், அரசன் தக்க நடவடிக்கை எடுத்து அவனது இரு உதடுகளையும் அறுத்து விட வேண்டும். மூத்திரத்தை மேல் சாதிக்காரன் மீது பெய்துவிட்டால், அவனது ஆண்குறியை அறுத்துவிட வேண்டும். மேல் சாதிக்காரன் மீது வாயு படிய விட்டால், அவனது குதத்தை அறுத்துவிட வேண்டும்.” (இயல் 15, பாடல்கள் 22-27)
III
மேலே சொன்ன சட்ட விதிமுறைகள் சூத்திரர்களுக்கு எதிராகப் பிராமண சட்டத்தை வகுத்தவர்கள் செய்தவைகளாகும். அவற்றின் சுருக்கம் கீழே உள்ள தலைப்புகளில் தொகுத்தளிக்கப்படுகிறது:
- சூத்திரர்கள் சமுதாய வரிசையில் கடைசி வகுப்பைச் சேர்ந்தவர்கள்.
- சூத்திரர்கள் தூய்மையற்றவர்கள், அதனால் புனித செயல்களை அவர்கள் பார்க்கும்படியோ, கேட்கும்படியோ செய்யக் கூடாது.
- மற்ற வகுப்பினர்களுக்கு மதிப்பு கொடுப்பது போல் சூத்திரர்களுக்கு மதிப்பு கொடுக்கக் கூடாது.
- சூத்திரனுடைய உயிருக்கு எவ்வித மதிப்பும் கிடையாது. ஆதனால் அவனுக்க எந்த வித நஷ்ட ஈடும் கொடுக்காமல் யார் வேண்டுமானாலும் அவனைக் கொன்று விடலாம். அப்படி ஏதாவது நஷ்ட ஈடு கொடுப்பதாயின் பிராமணர், சத்திரியர் மற்றும் வைசியருக்காகக் கொடுப்பது போலல்லாது மிகச் சிறிதளவே ஒரு தொகையைக் கொடுத்தால் போதும்.
- சூத்திரன் அறிவைப் பெறக்கூடாது. அவனுக்குக் கல்வி போதிப்பது ஒரு பாவம்; ஒரு குற்றச் செயலுமாகும்.
- ஒரு சூத்திரன் சொத்துகளைச் சேர்க்கக் கூடாது. ஒரு பிராமணன் அவனது சொத்துகளை தன் விருப்பப்படி எடுத்துக் கொள்ளலாம்.
- சூத்திரன் அரசாங்க பதவியில் இருக்கக் கூடாது.
- சூத்திரனது கடமைகளும், மீட்சி பெறுவதும் மேல் சாதிக்காரர்களுக்குப் பணிவிடை செய்வதில்தானிருக்கிறது.
- மேல்சாதிக்காரர்கள் சூத்திரர்களுடன் கலப்பு மணம் செய்து கொள்ளக் கூடாது. மேல் சாதிக்காரர்கள் சூத்திரப் பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் ஒரு சூத்திரன் ஒரு உயர்சாதிப் பெண்ணைத் தொட்டு விட்டாலோ, அவன் கடுமையான தண்டனைக்கு உள்ளாக வேண்டும்.
- சூத்திரன் கொத்தடிமையாகவே பிறந்தவன்; எப்போதும் கொத்தடிமையாகவே வைக்கப்பட வேண்டியவன்.
இத்தொகுப்பைப் படிப்போருக்கு இருவித எண்ணங்கள் தோன்றும். ஒன்று, பிராமணிய சட்டங்களை இயற்றியவர்கள் சூத்திரர்களை ம்ட்டும்தான் அவர்களுக்குப் பலியாட்களாக ஆக்கியிருக்கிறார்கள். ஆரம்ப கால பிராமண இலக்கியங்களை நினைவுபடுத்திப் பார்க்கையில், பழங்கால இந்திய – ஆரிய சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினர் வைசியர்களே தவிர சூத்திரர்களல்லர் என்பது மிகவும் ஆச்சரியப்படக்கூடியதாகும். இந்த சந்தர்ப்பத்தில், ஐந்ரேய பிராமணத்தில் உள்ள ஒரு எடுத்துக்காட்டைச் சான்றாகக் காட்டுவது சாலப் பொருந்தும். ஐத்ரேய பிராமணம், அரசன் விஸ்வேந்தராவைப் பற்றிச் சொல்லும் பொழுதும், ஸ்யாபரன பிராமணங்கள் பானம் அருந்துவதைப் பற்றி குறிப்புகளிலும் இதற்குரிய பல்வேறு வகுப்பினர்களைப் பற்றிய சான்றுகள் தென்படுகின்றன. இந்தக் கதையில் வைசியர்களைப் பற்றி கூறுவதைக் கீழே காணலாம்:
“அடுத்தபடியாக, புரோகிதர் தயிரைக் கொண்டு வருவார், அதுதான் வைசியர்களை வசிய வைப்பது. இதை வைத்து வைசியர்களைத் திருப்தி படுத்த முடியும். வைசியரைப்போல ஒருவர் அந்த வழியில் பிறப்பார். அவர் மற்றவருக்குக் கிளை நதியைப் போன்றவர். அவர் மற்றவரால் உபயோகப்படுத்தப்படுபவர். (விழுங்கப்படுபவர்) விரும்பினால் அவர் ஒடுக்கப்படத்தக்கவர்.” (முயிர், தொகுதி 1, ப. 436-40)
இங்கே எழக்கூடிய கேள்வி என்னவெனில், ஏன் வைசியர்கள் விடுவிக்கப்பட்டார்கள், ஏன் கோபம் சூத்திரர்களின் மேல் பாய்ந்தது?
சூத்திரர்களுக்கு மீளமுடியாத தடைகளும் பிராமணர்களுக்கு மிகுந்த சலுகைகளும் இருப்பது அதிர்ச்சிதரத்தக்கது. சூத்திரர்கள் மூவருணத்தார்களுக்கும் கீழானவர்கள். அவர்களிலிருந்து மூவருணத்தவர் வேறானவர்கள். அப்படி இருக்கும்பொழுது மூவருணத்தவர்களுக்கு சூத்திரர்களுக்கு எதிரான அனைத்து உரிமைகளும் இருக்கும் என எதிர்பார்க்கலாமல்லவா? ஆனால் உண்மை என்ன? உண்மையென்னவென்றால் சூத்திரர்களுக்கெதிரான உரிமைகள் வைசியர்களுக்கும், சத்திரியர்களுக்கும் ஏதுமில்லை.
இம்முதல் மூன்று வருணத்தவர்களில் பிராமணர்களுக்குத்தான் அபரிமிதமான சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒரு சூத்திரன் ஒரு பிராமணுனுக்கு எதிரான குற்றம் செய்வானாயின் பிராமணன் அவனுக்கு மேலும பெரிய தண்டனை கொடுக்க நிர்ப்பந்திக்கும் உரிமையைப் பெற்றிருந்தான். ஆனால் சத்திரியனோ, வைசியனோ அப்படிக் கேட்க முடியாது.
ஒரு பிராமணன் சூத்திரனது சொத்துகளை வேள்வி செய்யத் தேவைப்பட்டால் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அது குற்றமாகக் கருதப்படமாட்டாது. ஒரு சூத்திரன் சொத்துக்களை நிறைய சேர்த்து வைக்கக் கூடாது, ஏனென்றால் அது பிராமணனது மனதைப் புண்படுத்தும். ஒரு பிராமணன் சூத்திரன் ஆளும் நாட்டில் வாழக் கூடாது. ஏன் இந்த நிலை? பிராமணர் அப்படி கொடிய எதிரியாகச் சூத்திரரைக் கருத எதாவது ஒரு காரணமிருக்க வேண்டுமல்லவா?
இவை எல்லாவற்றையும் விட முக்கியமான வேறு ஒரு காரணம் உள்ளது. இந்த கொடுமைகளைப்பற்றி ஒரு சாதாரண பிராமணர் எப்படி நினைப்பார்? இயல்பில் அவைகள் அசாதாரணமானவை, அதன் கொள்கையில் வெட்கக் கேடானவை என்பதை அனைவரும் ஒத்துக் கொள்வாரன்றோ? ஆனால் ஒரு பிராமணன் ஒத்துக்கொள்வானா? இயல்பானதாக இல்லாமலிருந்தாலும் எந்தவித ஒரு எண்ணத்தையும் இக்கொடுமைகளின் தொகுப்பு அவன் மனத்தில் ஏற்படுத்தாது. பழங்காலந் தொட்டு வழக்கத்தாலும், பழக்கத்தாலும் இக்கொடுமைகள் இருந்து வருவதால் அவனது நேர்மையான உணர்வுகள் துருப்பிடித்துப் போய் விட்டன. எனவே ஏன், எதற்காக இந்த சூத்திரர்கள் இவ்வளவு இயலாமைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது என்ற உணர்வுகளை இழந்து விட்டார்கள்.
இரண்டாவது, இந்த இயலாமைகளைப் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் கூட இது போன்ற இயலாமைகள் மற்ற நாடுகளிலும் இருக்கின்றன, எனவே இது ஒன்றும் அசாதாரணமானதோ அல்லது வெட்கப்படத்தக்கதோ ஆகாது என நினைக்கிறார்கள். இதுதான் இரண்டாவது மனப்பாங்கு. இதை உள்ளவாறு வெளிப்படுத்துவது இங்கு அவசியமாகிறது.
இவ்வெண்ணம் அவர்களது பெருமையைப் பாதுகாக்கவும், மனசாட்சியைத் திருப்திப்படுத்திக் கொள்ளவும் பயன்படுவதால் அதை மிகச் சர்வசாதாரணமானதாகக் கருதுகின்றனர். எப்படியாயினும் இதை அதன் வழியிலேயே செல்ல விடுவதில் பயன் எதுவுமில்லை. இவ்வுலகில் எங்கும் இது போன்ற இயலாமைகள் நிகழ்வதில்லை என்பதைத் தெற்றென வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.
இப்பிராமணிய சட்டங்களுக்கு இணையாக அதுவும் குறிப்பாக உரிமைகள் மற்றும் சக்தியற்ற இயலாமைகளை வேறெந்த சட்ட அமைப்பு முறைகளிலும் காணவியலாது. இதை நிரூபிக்க பிராமணிய சட்டத்துடன் ரோமானிய சட்டத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலே விளங்கும்.
IV
ரோமானியச் சட்டப்படி உரிமைகள் பெற்றவர்கள், இயலாமைகளுக்கு ஆளானவர்கள் ஆகியவர்களோடு இவர்களை ஒப்பிட்டுப்பார்ப்பதிலிருந்து இதைத் தொடங்கலாம். ரோமானிய சட்ட வல்லுநர்கள் மக்களை ஐந்து வகையாகப் பிரித்தனர் (1) பேட்ரிசியர்கள் எனப்படும் உயர்குடியினர் மற்றும் பிளெபியன்கள் எனப்படும் பொதுமக்கள் (2) சுதந்திர மனிதர்கள் மற்றும் அடிமைகள் (3) குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர் (4) சட்டப்படி தன்னுரிமையுடையவர்கள் மற்றும் அவ்வாறில்லாத அயலார் (5) கிறித்தவர்கள் மற்றும் புறச்சமயத்தார்.
ரோமானியச் சட்டப்படி (1) உயர்குடியினர் (2) சுதந்திர மனிதர்கள் (3) குடிமக்கள் (4) சட்டப்படி தன்னுரிமையுடையவர்கள் (5) கிறித்தவர்கள் ஆகியோர் தனித்த சலுகைகள் பெற்றவர்களாவர். இவர்களோடு ஒப்பிடும்போது (1) பொதுமக்கள் (2) அடிமைகள் (3) வெளிநாட்டார் (4) தன்னுரிமையற்ற அயலார் (5) புறச் சமயிகள் ஆகியோர் தகுதிக் குறைவால் வந்த இயலாமைகளால் துன்புறுவோராவர்.
ரோமானிய சட்டப்படி ஒரு குடிமகன் எனப்படுவோன் சுதந்திரமனிதன் என்னும் பெயரில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளைப் பெற்றிருந்தான். சிவில் உரிமைகளின்படி குடிமகனுக்குக் ‘கன்னுபியம்’ என்னும் மணஉறவு உரிமை ‘கமர்சியம்’ என்னும் சொத்துக்களை விற்பதற்கும் வாங்குவதற்குமான உரிமை ஆகியவை கிடைத்தன. இந்தக் கன்னுபியம் உரிமையினால் குடிமகன் ரோமானியச் சட்டப்படி திருமன ஒப்பந்தங்கள் செய்து கொள்ளவும், அதன் மூலம் கிடைக்கும் உரிமைகளைப் பெறவும் முடியும்.
குறிப்பாக இதனால் அக்நேசன் எனப்படும் வாரிசு முறையிலான சொந்தத்தையும், தந்தைக்குபின் உயில் எழுதாது இறந்துபோனால் அவருடைய வாரிசுகள் சொத்தையும் பெறமுடியும். ‘கமர்சியம்’ உரிமையின்படி எல்லாவிதமான சொத்துக்களையும் வாங்கவோ விற்கவோ ரோமானிய சட்டப்படியான உரிமைகளைப் பெற முடியும். ரோமானிய குடிமகனின் அரசியல் உரிமைகளின்படிப் பொது தேர்தல்களில் வாக்களிக்கவும், பதவிகள் வகிக்கவும் முடியும்.
அடிமை எனப்படுவோன் சுதந்திர மனிதனிலிருந்து வேறுபட்டவன். அவன் எஜமானனுக்குச் சொந்தமாக்கப்பட்டு உரிமைகளைப் பெறுவதற்கு இயலாதவன்.
‘பெரிக்ரீன்’ என்றழைக்கப்பட்ட வெளிநாட்டவர்கள், அந்த நாட்டுக் குடிமக்கள் அல்லாதவர்கள். அவர்கள் குடிமக்களுக்குரிய சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் எதையும் பெற முடியாது. ஒரு குடிமகனின் பாதுகாப்பில் இருப்பது தவிர, அயல் நாட்டானுக்கு வேறு எவ்வித பாதுகாப்பும் கிடையாது.
சட்டப்படி தன்னுரிமையுள்ள சூயி ஜூரிகள் எனப்படுவோர் அத்தகைய உரிமையற்றவர்களான அலீன் ஜூரிகள் எனப்படும் அயலாரிடமிருந்து வேறுபட்டவர்கள். இந்த அலீன் ஜூரிகள் வேறொருவர் அதிகாரத்திற்கு உட்பட்டு இருப்பவர்கள்; சூயி ஜூரிகள் இவ்வாறு இல்லாதவர்கள். இந்த அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள் (1) பொடெஸ்டாக்கள் (2) மனூக்கள் (3) மான்சிபியம் என்று மூவகையினராவர்.
இவர்கள் மூவகையினராயினும் ஒரே வகையான விளைவுகளுக்கு உட்பட்டவர்களே. பொடெஸ்டாக்கள் ரோமானிய சட்டப்படி இரு பிரிவினராகக் கருதப்பட்டனர். பொடெஸ்டாக்களுக்கு ஆட்பட்ட (1)அடிமைகள் (2) குழந்தைகள் (3) மானுக்களின் மனைவியர் (4) நீதிமன்றத் தீர்ப்பின்படி கடன் கொடுத்தவர்களுக்குக் குறிக்கப்பட்ட கடனாளி (5) வாடகைக்கு அமர்த்தப்பட்ட போர்வீரர். பொடெஸ்டாக்கள் எல்லோரையும் உட்படுத்தி இவர்களைக் கண்காணிக்கும் உரிமைகளை ஒருவரிடம் ஒப்படைப்பார்கள். இவர்கள் யாராவது ஒருவர் ஏதாவது தீங்கு செய்வார்களானால், அதைப் பொட்டெஸ்டாக்களுக்குத் தெரிவிக்க வேண்டும். இவர்கள் அவர்களுக்குள்ளேயே இரண்டாவது பிரிவினர்.
பொடெஸ்டாக்களால் அலீன்ஜூரிகள் எனப்படும் உரிமையற்ற மக்களுக்கு ஏற்பட்ட இயலாமைகளாவன (1) அவர்கள் சுதந்திரமற்றவர்கள் (2) அவர்கள் சொத்துகளைப் பெற முடியாதவர்கள் (3) அவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் தீங்குகள் அல்லது துன்பங்களை நேரடியாக எடுத்துரைக்க முடியாது.
பேகன்கள் எனப்பட்ட புறச் சமயத்தாருக்குக் கொடுமைகள் இழைக்கப்படுவது கிறித்துவ சமயம் பரவத் தொடங்கியபோதே ஏற்பட்டது. ஆரம்பகாலத்தில் ரோமானியர்களும் பேகன்போன்றே வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியதால், சிவில் உரிமைகளை அனுபவிப்பதில் இவர்களிடையே வேறுபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு இல்லாமல் இருந்தது.
கிறித்துவ ஆட்சியாளர் வந்தபின்பு, சமய மாறுபாடு உள்ளவர்கள், சமய நம்பிக்கைகளைக் கைவிட்டவர்கள், பேகன்கள், யூதர்கள் ஆகியோர் பலவகையான கட்டுப்பாடுகளுக்கும், குறிப்பாக சொத்துக்கள் அடையும் உரிமை, சாட்சிகளாக செயல்படுவதற்குரிய உரிமை ஆகியவை குறைக்கப்படுதலுக்கும் ஆளானர்கள். நான்கு கிறிஸ்தவப் பேராயங்களின் சபைகள் அளித்த தீர்ப்புகளை ஏற்ற வைதிக கிறித்தவர்கள் மட்டுமே சிவில் உரிமைகளை முழுமையாக அனுபவிக்க முடியும்.
ரோமானியச் சட்டங்கள் விதித்த இந்த உரிமைகளையும், இயலாமைகளையும் விரிவாக அறிந்து இந்துக்கள், சில வகை வகுப்பார் மீது இயலாமைகளைப் புகுத்திய குற்றச்சாட்டுக்குப் பிராமணியச் சட்டம் மட்டுமே தனியான சட்டமாக இருக்கவில்லை என்பதில் ஆறுதல் அடைகின்றனர். பிராமணிய சட்டம் விதித்திருக்கும் இயலாமைகள் ரோமானியச் சட்டம் விதித்துள்ள இயலாமைகளோடு ஒப்பிடும் போது முன்னதில் உள்ளது போன்ற கொடூரமானவை அல்ல என்பதை மறந்து விடுகின்றனர். பிராமணிய சட்டத்தை, ரோமானிய சட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் எவரும், பிராமணிய சட்டம் விதித்துள்ள இயலாமைகள் எத்தகைய கேவலமானவை என்பதை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக ஒன்றைக் கேட்போம்: ரோமானியச் சட்டப்படியான இயலாமைக்களுக்கும், உரிமைகளுக்கும் ஆதாராமாக இருப்பது எது? ரோமானிய சட்டத்தை மேம்போக்காக அறிந்த மாணவர்கூட அவை (1) கேபுட் மற்றும் (2) எக்சிஸ்டிமேட்டியோ என்பவற்றின் மூலம் கிடைத்தது என்பதை அறிவார்.
கேபுட் என்பது ஒருவருடைய சமூக அந்தஸ்து என்பதாகும். சமூக அந்தஸ்து குறிப்பாக ரோமானியர்களிடையே மூன்று விஷயங்களைச் சார்ந்து ஏற்பட்டது. அவை: சுதந்திரம், குடியுரிமை, குடும்பம் என்பவை. சமூகத்தில் சுதந்திர அந்தஸ்து என்பது சுதந்திரமானவனாகவும், எவருக்கும் அடிமையாக இல்லாதவனாகவும் இருப்பதைக் குறிக்கிறது. இத்தகைய ஒரு சுதந்திரமனிதன், ரோமானிய குடிமகனாகவும் இருப்பானாகில், அவன் சமூக அந்தஸ்தைப் பெற்றவனானான். இந்தத் தகுதியின் அடிப்படையில் அரசியல் உரிமைகளை அனுபவிக்கும் வாய்ப்புகளோடு, சமூக நீதிவழங்கும் தீர்ப்பாயங்களிலும் பங்குபெறும் தகுதியும் பெற்றான். இறுதியாக, குடும்ப அந்தஸ்து என்பது, ஒரு குடிமகன் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சார்ந்த குடிமகனாக இருப்பதோடு, அந்தக் குடும்பத்தாருக்குரிய உரிமைகளை அனுபவிக்கும் தகுதியைப் பெற்று அக்னேட்டு எனப்படும் தந்தைவழி வம்சத்தைச் சார்ந்த பங்காளிகளோடு பங்குகொள்ள முடியும்.
அனுபவித்து வரும் குடும்ப அந்தஸ்து இழப்புக்குள்ளானால் அல்லது மாற்றமடைந்தால் அத்தகைய இழப்புக்கு உள்ளானவன் ‘கேபிடிஸ் டிமினுடியோ’ எனப்படும் முன்பு இருந்த சட்டத்தகுதிகளை முழுமையாகவோ, ஓரளவோ இழந்த நிலைக்கு ஆளாவான். இந்த இழப்புகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களுக்கும் நிலைகளுக்கும் ஏற்றவாறு உச்சம், மத்திமம், குறைந்த அளவு என்று மூவகையாக வேறுபடும்.
உச்சமான பேரிழப்பு சுதந்திரத்தையும், குடியுரிமையையும், குடும்ப உரிமைகளையும் இழத்தலாகும். ஒரு ரோமானியக் குடிமகன் போர்க்கைதியாகப் பிடிபடும்போதும், அவன் ஒரு குற்றத்தைச் செய்து அதற்காக அடிமையாக வேண்டும் என்று தண்டிக்கப் படும்போதும் இது நிகழ்வதாகும். ஆனால் ஒரு குடிமகன் பகைவர்களால் சிறை பிடிக்கப்பட்டுப் பின் விடுவிக்கப்பட்டு வந்தால், அவனுக்கு முன்பு இருந்த அனைத்து சிவில் உரிமைகளும் சட்டப்படி உரியதாகிவிடும்.
சமூக அந்தஸ்து இழப்பினால் ஏற்படக்கூடிய அடுத்த வகையான மாற்றம் குடியுரிமையையும் குடும்ப உரிமைகளையும் இழத்தலாகும். இதில் அவனது சுதந்திரத்தனி உரிமை இழப்பு இருக்காது. இது ஒரு குடிமகன் அடுத்த நாட்டின் குடிமகனாக ஆவதால் நிகழ்வதாகும். இத்தகையவன் நெருப்பையும், நீரையும் பயன்படுத்துவதிலிருந்து தடுக்கப்பட்டு அதனால் ரோம நாட்டிலிருந்து வெறியேறக்கூடிய நிலைக்கு ஆளாவான். அல்லது ரோம சாம்ராஜ்யத்திலிருந்து நாடு கடத்தப்படுவான்.
இறுதியாக, ஒருவன் ஒரு குறிப்பிட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதிலிருந்து விலக்கப்பட்டு, ஆனால் குடியுரிமையையும் சுதந்திரத்தையும் இழக்காத நிலையில் வைக்கப்பட்டு இழிவுக்கு உள்ளாவான். எடுத்துக்காட்டாக, சட்டப்படி தன்னுரிமை உள்ளவன் சூய் ஜூரி, தனக்கு உரியதல்லாததை ஏற்று மற்றவனுக்கு ஆட்பட்டும் அல்லது பேட்ரியா பொடெஸ்டாவின் கீழ் உள்ள மகனை அவன் தந்தை சட்டத்தின் மூலம் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டு உள்ள போதும் இந்த நிலை இழப்புக்கு உள்ளாவான்.
முதலாவதாக குடியுரிமை பிறப்பால் அடைவதாகும். சட்டப்படியான திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தை, அதன் தந்தையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடைமுறையில் அந்த தந்தைக்கே பிறந்திருந்தால் அந்தக் குழந்தை பிறப்பால் குடிமகன் என்ற உரிமை பெறுவான். இவ்வாறு சட்டப்படியான வழிகளில் அல்லாமல் அந்த தந்தைக்குப் பிறவாத குழந்தை அது பிறக்கும்போது அதன் தாயின் நிலைமைகளைப் பொறுத்துக் குடியுரிமை பெறும். இரண்டாவதாக, சட்டத்தில் விதித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றி, அதாவது மனு மிசன் என்னும் முறையின்படி, அடிமையும் கூட ஒரு ரோமானியக் குடிமகனாக முடியும். இந்த விதிகள் சட்டத்தினால் திருத்தம் செய்யப்பட்டவை. ‘ஏலியா சென்டியா’ . ஜூனியா நொர்பானா’ என்னும் சட்டத்திருத்தங்களால் குறிப்பிட்ட வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டவன், வெளிநாட்டவர் அந்தஸ்தைப் பெற்றான். இவர்கள் பெரிகிரியஸ் பெடிடிடியஸ் அல்லது லத்தீன் மொழியில் லெடினஸ் ஜூனியனூஸ் எனப்பட்டனர். ஜஸ்டினியன் பழைமையான கோட்பாடுகளைப் புதுப்பித்தவர். அதன்படி, அடிமைகளுக்கும் முறைப்படி வாக்குரிமை அளிக்கப்பட்டு ரோமநாட்டுக் குடிமகளாக அனைத்து உரிமைகளையும் பெற முடிந்தது. மூன்றாவதாக, ஒட்டுமொத்தமாக ஒரு வகுப்பாருக்கோ அல்லது தனிமனிதருக்கோ, நாட்டு மக்களாலோ அல்லது குடியரசின் செனட் சபையினாலோ அவ்வப்போது ஒரு சலுகையாகக் குடிமகனாகும் உரிமை வழங்கப்பட்டது. இந்த வழக்கத்தைத் தற்காலத்தவர் குடியுரிமை உடையவராக்குதல் என்பர்.
குடியுரிமையை இழப்பது – முதலாவதாக, தனி மனித சுதந்திரத்தை இழத்தலாகும். அதாவது, ஒரு ரோமானியன் போர்க் கைதியாக ஆவாதனாலோ, இரண்டாவது ரோமானிய குடிமகன் தன் குணப் பண்புகளைத் துறப்பதனாலோ – இது எவராவது வேறொரு நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ளப்படும்போது ஏற்படுவது – மூன்றாவதாக, செய்த குற்றத்திற்குத் தண்டனையாக நாடு கடத்தப்படுவது, நாட்டை விட்டுத் துரத்தப்படுவது ஆகியவற்றால் ஏற்படுவதாகும்.
ரோமானியரது சட்டத்தின்கீழ் ஒருவருடைய சமூக அந்தஸ்து என்பது ‘சிவில் ஆப்டிமோ ஜூர்’ என்பதற்கு உட்பட்டோ அல்லது அது இல்லாமலோ அமைவதாகும். ‘சிவில் ஆப்டிமோ ஜூர்’ என்பது சிவில் உரிமைகளைப் பெறக்கூடியது மட்டுமல்லாமல் வாக்களிக்கும் உரிமை மற்றும் அரசு பதவிகளை வகிக்கும் உரிமை என்பதைக் குறிக்கும் ‘ஜஸ் சப்ரே’ஜி எட் ஹானோரனும்’ என்னும் அரசியல் உரிமைகளைப் பெறுதலுமாகும். இந்த அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதி பெறுதல் ‘எக்சிஸ்டிமோடியோ’ என்பதைப் பொறுத்து ஏற்படுவதாகும்.
‘எக்சிஸ்டிமோடியோ’ என்னும் சொல் சட்டத்தின் கண்களில் மதிப்பைப் பெறுவது என்னும் பொருளுடையது. ஒரு ரோமானிய குடிமகன் ‘கேபுட்’ உரிமையும் ‘எக்சிஸ்டிமோடியோ’ தகுதியும் பெற்றவராக இருக்கலாம். அல்லது ஒரு ரோமானிய குடிமகன் ‘கேபுட்‘பெற்று, ‘எக்சிஸ்டிமோடியோ’ பெறாதவராக இருக்கலாம். ‘கேபுட்’ எக்சிஸ்டிமோடியோ இரண்டையும் பெற்றவர் அரசியல் உரிமைகளையும் சிவில் உரிமைகளையும் பெற்றவராவார். ‘கேபுட்’ மட்டும் பெற்று ‘எக்சிஸ்டிமோடியோ’ பெறாதவர் சிவில் உரிமைகளை மட்டுமே கோர முடியும். அரசியல் உரிமைகளைக் கோரிப் பெற முடியாது.
ஒருவரது ‘எக்சிஸ்டமோடியோ’ இருவகைகளில் இழக்க நேரிடும். சுதந்திரத் தன்மையை இழப்பதன் மூலமோ, அல்லது ஏதாவது குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றிருப்பதாலேயோ இந்த இழப்பு நேரிடும். சுதந்திரத்தை இழந்தவர் தனது ‘எக்சிஸ்டிமோடியோ’ முழுதுமாக இழப்பவராவார். குற்றத்திற்காக சிறை தண்டனை பெற்றதனால் எக்சிஸ்டிமோடியோ இழப்பு, செய்த குற்றத்தின் தன்மைக்கேற்ப மாறுபடும். (அதாவது கொள்ளை, களவு, பொய்ச்சான்று கூறுதல், ஏமாற்றுதல், மேடையேறி நடிகனாகவோ வாட்போர் வீரனாகவோ தோன்றுதல், படையிலிருந்து இழிவான நிலையில் வெளியேற்றப்படுதல், விபசாரத்திற்குத்துணையாக இருந்து பிழைப்பு நடத்துதல், ஏனைய இழிவான தொழில்கள் மற்றும் இழிந்த ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபடுதல் ஆகியவை.) அவன் செய்த குற்றம் கடுமையானதாக இருப்பின் அதனால் ஏற்படும் ‘எக்சிஸ்டிமோடியோ’ இழப்பு ‘இன்பேமியா’ அதாவது ‘கேவலமானதாக’ கருதப்படும்.
குற்றத்தின் தன்மை குறைந்த அளவினதாயின், அது ‘டர்பீடுடோ’ அதாவது இழிகுணமானது எனப்படும். ‘இன்பேமிவர்’ வின் விளைவு ‘எக்சிஸ்டிமோ’ இழப்புக்கு வழியேற்படுத்திவிடும். ரோமானியச் சட்டப்படி வழக்காடுபவர் சாதாரண சேதத்தோடு ‘இன்பேமியா’ வுக்கும் ஆட்பட நேரிடும்.
திருட்டு, கொள்ளையிடுதல், காயம் பண்ணுதல், ஏய்த்தல், ஆகிய குற்றங்கள் ‘அகுன்பேமி’ அதாவது அவப்பெயருக்கு இடமாகும். கூட்டாளி, கடனாளி, முதலீடு செய்தவன், துணைபோகின்றவன், அடமானம் பிடிப்பவன் ஆகியோர் வேண்டுமென்றே தமது கடமையிலிருந்து தவறியதற்காக கண்டனம் செய்யப்பட்டவர் இழிந்தவரெனப் பேரெடுத்தவராகக் கருதப்படுவர்.
‘இன்பேமியா’வின் விளைவு அரசியல் உரிமைகளை இழத்தலாகும். (‘இன்பேமியா’ வினால், சாட்சியமளிக்கவோ, வழக்குகளில் இன்னொருவருக்காக வாதாடவோ முடியாதவர் ஆகுதல், வழக்குரைஞர் பதவி வகிப்பதிலிருந்து நீக்கப்படுதல் ஆகிய விளைவுகளும் ஏற்படும். ‘இன்பேமியா’ இருவகைகளில் நிறைவேற்றப்பட்டது.
தணிக்கையாளர்கள் மூலமோ அல்லது நீதிமன்றத்தீர்ப்பு மூலமோ இது நிறைவேற்றப்படும். பொது ஒழுக்க நெறிகளைக் கண்காணித்து குடியரசின் ஆட்சிமன்ற உறுப்பினர் கௌரவத்தைப் பறித்தல், பிரபுக்களின் குதிரைசவாரி செய்யும் உரிமையை நீக்குதல், குடிமகனின் அரசியல் உரிமைகள் அனைத்தையும் பறித்துப் போக்கிரிகள் கூட்டத்தோடு சேர்த்துக் குறிப்பிடுதல் ஆகிய அதிகாரங்கள் தணிக்கையாளர்களுக்கு இருந்தன. குடிமக்களின் பட்டியலில் இன்பேமியா’வுக்கு உட்பட்டவர்களின் பெயருக்கு எதிராகத் தணிக்கைக்கு ஆளானவர் எனக் குறிக்கப்பட்டது.
இதற்கான பொறுப்பைத் தணிக்கையாளர் ஏற்றார். தனி விசாராணை ஏதுமின்றி பொதுமக்களின் கருத்திற்கு இசைவாகவே முடிவெடுத்தனர்; ‘தணிக்கைக்கு உட்பட்டவர்’ என்ற குறிப்பு தணிக்கை செய்தவர் நீதிபதியாகச் செயல்பட்ட நேரங்களில் மட்டுமே அவருடைய பார்வைக்கு வந்தது தவிர இதனால் வேறு விளைவுகள் ஏற்படவில்லை. இந்த வகையில் இது ‘தீய நடத்தை உள்ளவர்’ – ‘இன்பேமி’ என்பதிலிருந்து வேறுபட்டது. ‘இன்பேமி’ என்னும் களங்கம் மக்கள் அல்லது மன்னர் தமக்கிருந்த தனியுரிமையைப் பயன்படுத்தி நீக்காதவரை அதற்குரியவரோடு நீடித்தது.) அதாவது பதவிகள் வகிப்பதிலிருந்து விலக்கப்படுவதோடு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையையும் இழக்க நேரிடும்.
ரோம நாட்டு உரிமைகள், இயலாமைகள் பற்றிய இந்தச் சுருக்கமான ஆய்வின் மூலம், அவை அனைவருக்கும் பொதுவான சட்டமாக இருந்தது தெளிவாகிறது. ஒரு வகுப்பாருக்கும் இன்னொரு வகுப்பாருக்குமிடையே அவை வேறுபடவில்லை. ரோமானிய சட்டப்படி, ‘கேபுட்’ மற்றும் ‘எக்சிஸ்டிமேடியோ’ ஆகியவற்றின் மூலம் உரிமைகளும், இயலாமைகளும் பொதுவான நோக்கத்தோடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. கேபுட், ‘எக்சிஸ்டிமேடியோ’ பெற்றிருந்தவர்கள் அனைவரும் உரிமைகளைப் பெற்றிருந்தனர்.
இவற்றை இழந்தவர் இயலாமைகளுக்கு ஆளானவர்கள். பிராமணிய சட்டப்படி நிகழ்ந்ததென்ன? அனைவருக்கும் பொதுவான கண்ணோட்டத்தில் உரிமைகளும் இயலாமைகளும் அமைந்திருக்கவில்லை என்பதை மீண்டும் கூற வேண்டியதாகின்றது. அவை சாதியின் அடிப்படையில் வகுக்கப்பட்டவை. முதல் மூன்று வருணத்தாருக்கே அனைத்து உரிமைகளும், அனைத்து இயலாமைகளும் சூத்திரர்களுக்கே என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் பிராமணிய சட்டங்கள் அமைந்தவை.
பிராமணிய சட்டங்களுக்குப் பரிந்துபேசுபவர்கள், இந்த ஒப்பீடு ரோமானிய சட்டத்திற்குச் சாதகமாக உள்ளது என்றும், ரோமானிய சட்டம் வகுப்பு அடிப்படையில் உரிமைகளையும் இயலாமைகளையும் அளிக்கவில்லை என்பது உண்மையல்ல என்றும் வாதிடலாம். அதை அப்படியே ஏற்றுக் கொள்வதாகவும் வைத்துக் கொள்ளலாம். பேட்ரிஸியன்கள், பிளெபியன்கள் சம்பந்தப்பட்ட வரையில் அளிக்கப்பட்டிருந்த உரிமைகளும் இயலாமைகளும் வகுப்புவாரியானதே. ஆயினும் இது சம்பந்தமாகப் பின்வரும் உண்மைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
முதலாவதாக, பிளெபியன்கள் எனப்படுவோர் அடிமைகள் அல்லர் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் சொத்துக்களை வாங்கவும், வைத்திருக்கவும், விற்கவும் உரிமைகளைப் பெற்றிருந்த சுதந்திரமானவர்கள். அரசியல் மற்றும் சமூக உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தது மட்டுமே அவர்களுக்கிருந்த இயலாமைகளாகும். இரண்டாவதாக, அவர்களுடைய இயலாமைகள் நிரந்தரமானவை அல்ல என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவர்கள் இருவகையான சமூக இயலாமைகளால் துன்புற்றனர். அவர்களும் பேட்ரிஸியன்களும் கலப்பு மணம் செய்து கொள்வது பன்னிரண்டு கட்டளைகளால் (பன்னிரண்டு கட்டளைக்கு முந்திய வழக்கம் இது. பன்னிரண்டு கட்டளைகள் இதனை ஏற்றுக்கொண்டது.) தடுக்கப்பட்டிருந்தனர். இந்த இயலாமை கி.மு.445-ல் இயற்றப்பட்ட ‘கனுலேனியன்’ சட்டத்தால் நீக்கப்பட்டு, பேட்ரிசியன்கள், பிளெபியன்களுக்கு இடையே நடந்த கலப்புமணங்கள் சட்டப்பூர்வமாக்கப்பட்டன.
இன்னொரு இயலாமை இவர்கள் ரோம்நகரப் பொதுக் கோவில்களில் பிரதான மதகுருக்களாகவும், குறி சொல்பவர்களாகவும் பதவி வகிக்கத்தகுதியற்றவர்கள் என்றிருந்த தடையாகும். இந்த இயலாமை கி.மு.300இல் நிறைவேற்றப்பட்ட ‘ஓகுல்னியன்’ சட்டத்தால் நீக்கப்பட்டது.
பிளெபியன்களில் அரசியல் இயலாமைகளைப் பொறுத்த வரை, ஆறாவது ரோமநாட்டு அரசரான ‘சர்வியஸ் டூலியஸ்’ கொண்டுவந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மூலம் அவர்கள் பொதுச் சபைகளுக்கு நடந்த தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை பெற்றனர். அரசியல் இயலாமைகளினால் பதவிகளைப் பெறமுடியாதிருந்த இயலாமையே தீர்க்கப்படாமல் இருந்தது.
கி.மு.509ல் குடியரசு ஏற்பட்டதற்குபின் காலப்போக்கில் இதுவும் நீக்கப்பட்டது. இதற்கு முதற்படியாக அமைந்தது கி.மு.421 பிளெபியன் நீதிமன்றம் அமைவதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கையாகும். விசாரணையாளர் பதவிகள் கி.மு.409இல் அவர்களுக்கு வழங்கும் வழக்கம் ஏற்பட்டு கி.மு.421 முறைப்படி அளிக்கப்படுவதாயிற்று. கி.மு.367இல் ஆட்சி யுரிமையுடைய தண்டலாளர் பதவியான ‘கான்சல்சிப்’பும், கி.பி.366-இல் ‘குரூல ஆடெலிசிப்’ என்ற பதவியும், கி.மு.356இல் சர்வாதிகாரி பதவியும் கி.பி.351இல் தணிக்கையாளர் பதவியும் கி.பி.336-இல் ‘பிரேட்டர்’ என்னும் குற்றவியல் நடுவர் பொறுப்பிற்கான நியமனமும் அளிக்கப்பட்டன.
கி.மு.287-இல் நிறைவேற்றப்பட்ட ‘ஹார்டேன்சியன்’ சட்டம் பிளெபியன்களுக்கு கிடைத்த முழுவெற்றியைக் குறிப்பதாக அமைந்தது. இந்தச் சட்டங்களினால், குலமரபு குழுக்களின் சபைகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் நேரடியாகவும், மாற்றமோ, தாமதமோ இல்லாமல் ரோம நாட்டு மக்கள் அனைவரையும் கட்டுப்படுத்தக்கூடியதாகவும் அமைந்தன.
இந்த வளர்ச்சி பேட்ரிசியன்கள், பிளெபியன்கள் ஆகியோருக்கிடையே முழுமையான அரசியல் ஒருங்கிணைப்பு ஏற்பட்டதைக் குறிப்பதாக அமைந்தது.
பிளெபியன்களுக்குப் பேட்ரிசியன்களைப் போலவே அரசியல் மற்றும் சமூக நிலைகளில் சம உரிமை அளிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அவர்கள் பிரபுத்துவம் பெறவும் வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டன. ரோமானிய சமுதாயத்தில், பிறப்பும், செல்வமும் இருபெரும் அந்தஸ்து தரமாக விளங்கின. இவற்றோடு, கௌரவமிக்க நீதிபதி அலுவலகப் பதவி மிக உயர்ந்த அந்தஸ்தின் அடையாளமாகக் கருதப்பட்டது.
பெட்ரிசியன், பிளெபியன் ஆகிய இருதரத்துக் குடிமக்களில் எவராயினும் இந்த கௌரவ நீதிபதி பதவியைப் பிடித்து அதிலிருந்து மேற்பார்வை அலுவலராகி சமுதாயத்தில் உயரிய அந்தஸ்தைப் பெற்றனர். இவர்களுக்குப் பின் இந்த அந்தஸ்து அவர்களின் சந்ததியாருக்கும் தொடர்ந்து வந்து இவர்களே ‘நோபில்கள்’ எனப்படும் பிரபுக்கள் வகுப்பினராயினர்.
மேலும் இவர்கள் பிரபலமானவர்கள் என்றும் பிறருக்கு அறிமுகமாகாதிருந்த மக்கள் ‘இழிநிலையினர்’ என்றும் வேறுபடுத்திக்கூறக்கூடிய நிலை ஏற்பட்டது. இந்தப் பதவி பிளெபியன்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புக்கு வழி ஏற்பட்டதும் பிளெபியன்களில் பலர் பிரபுக்களாகி (இவ்வாறு முதன்முதலாக நீதிபதி ஆசனத்தில் அமரக்கூடிய வாய்பினைப் பெற்ற பிளெபியன் ஒருவர், பிரபுக்கள் குடும்பத்தைத் தோற்றுவித்து ரோமானியர்களால் புதிய மனிதர் என அழைக்கப்பட்டார்.), பிரபுத்துவத்தில் பேட்ரிசியன்களை விஞ்சக்கூடிய அளவுக்கு உயர்ந்தனர்.
ரோமானியர்களின் சட்டம், உரிமைகளையும் இயலாமைகளையும் பகிர்ந்தளிப்பதில் வகுப்பு வேற்றுமையை அங்கீகரித்தாக இருக்கலாம். ஆனால் பிளெபியர்களுக்கு இருந்த இயலாமைகள் நிரந்தரமானவையாகக் கருதப்படவில்லை. அவை ஒரு காலத்தில் நிலவியிருந்த போதிலும் காலப்போக்கில் நீக்கப்பட்டுவிட்டன.
எனவே, பிராமணிய சட்டத்திற்காகப் பரிந்துவந்து வாதாடுபவர்கள் அதற்கு இணையான ஒரு சட்டம் இருந்ததைக் காட்டி ஆறுதல் அடைந்துவிட முடியாது. பிளெபியன்களுக்கும், பேட்ரிசியன்களுக்கும் இடையே சமமான நிலையை ரோமானிய சட்டம் ஏற்படுத்தியது போல, பிராமணிய சட்டம் மூவருணத்தாருக்கும் சூத்திரர்களுக்கும் இடையே இருந்த வேற்றுமைகளை ஒழிக்காமல் விட்டதேன் என்பதற்குப் பதில் சொல்ல வேண்டியவர்களாக உள்ளனர்.
எனவே, உரிமைகள் மற்றும் இயலாமைகள் பற்றிய ரோமானிய சட்டம் வகுப்பு வேறுபாட்டுத்தன்மையுடையது அல்ல என்பதையும், பிராமணிய சட்டம் இதற்கு மாறானது என்பதையும் அறியலாம்.
ரோமானிய சட்டத்திற்கும், பிராமணிய சட்டத்திற்கும் இடையே இது ஒன்றே வேற்றுமை என்பதல்லாமல் வேறு இரு வேறுபாடுகளும் உள்ளன. குற்றவியல் வழக்குகளில் சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பது முதலாவது ரோமானியச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தப்பட்ட மட்டில் சமத்துவத்தை ஏற்றுக் கொள்ளாததாக இருக்கலாம். ஆனால் குற்றவியல் சட்டத்தைப் பொறுத்தவரையில் ஒரு குடிமகனுக்கும் இன்னொரு குடிமகனுக்கும் இடையில், பேட்ரிசியன், பிளெபியன்களுக்கு இடையேயும் கூட அது வேறுபாடு காட்டவில்லை.
குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் யார், வழக்குத் தொடுத்திருப்பவர் யார் என்று பார்க்காமல், ஒரே மாதிரியான குற்றத்திற்கு ஒரே மாதிரியான தண்டனைதான். வழக்கில் குற்றச்சாட்டு நீருபிக்கப்பட்டுவிட்டால், ஒரே மாதிரியான தண்டனைதான். ஆனால் தர்மசூத்திரங்களும், ஸ்மிருதிகளும் செய்வதென்ன? அவை முற்றிலும் வேறுபட்ட கொள்கையைப் பின்பற்றுகின்றன.
ஒரே வகையான குற்றத்திற்கு, குற்றம் சாட்டப்பட்டவரது சாதிக்கேற்றவாறும், குற்றம் சாட்டுபவரது சாதிக்கேற்பவும் தண்டனை வேறுபடுகின்றது. வழக்கு தொடுத்தவர் சூத்திரனாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் முதல் மூன்று வருணத்தவருள் ஒருவராகவும் இருந்தால் தண்டனை அதற்கேற்ப குறைவுபடுகின்றது.
இதற்கு மாறாக, வழக்கு தொடுப்பவர் முதல் மூன்று வருணத்தவருள் ஒருவராகவும், குற்றம் சாட்டப்பட்டவர் சூத்திரராகவும் இருப்பின், முன்காட்டிய வழக்கில் கூறப்பட்டதைவிட தண்டனை மிகக் கொடியதாக இருக்கும். பிராமணிய சட்டத்தை, ரோமானிய சட்டத்திலிருந்து வேறுபடுத்திக் காட்டும் இன்னொரு காட்டுமிராண்டித்தனம் இதுவாகும்.
ரோமானிய சட்டத்திலிருந்து பிராமணிய சட்டத்தை வேறுபடுத்திக் காட்டும் இன்னொரு அம்சம் குறிப்பிடத்தக்கதாகும். இது இயலாமைத் தடைகளை அகற்றுவது பற்றியதாகும். இங்கு இரு கருத்துகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ரோமானிய சட்டத்தின் படியான இயலாமைகள் தற்செயலாக ஏற்படுபவை மட்டுமே. குறிப்பிட்ட சில சூழ்நிலைகள் இருக்கும் வரையிலேயே இந்த இயலாமைகளுக்கும் இடமிருக்கும்.
அந்தச் சூழ்நிலைகள் மாறுகின்ற தருணத்திலேயே இயலாமைகளும் மறைந்துவிடுவதோடு, சட்டத்தின் முன் சமத்துவ நிலைக்கு வழி ஏற்பட்டு விடும். இரண்டாவதாக ரோமானிய சட்டம் நிபந்தனைகளை நிரந்தரமாக்கி, இயலாமைகளை என்றைக்கமாக இருக்கும்படி செய்ததில்லை. அதற்கு மாறாக, பிளெபியன்கள், வெளிநாட்டவர்,அடிமைகள், பேகன்கள் ஆகியோர் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளைச் சான்றாகக் கொண்டு பார்த்தோமானால் ரோமானிய சட்டம் இயலாமைகளுக்குக் காரணமாக இருந்த நிபந்தனைகளை நீக்குவதற்கு எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்திருப்பது தெரியவரும்.
ரோமானிய சட்டத்தில் இயலாமைகள் பற்றிய இந்த இரு விஷயங்களையும் கருத்தில் கொண்டு பார்த்தால் தர்ம சூத்திரங்களும் ஸ்மிருதிகளும் சூத்திரர்கள் மீது திணித்திருக்கும் இயலாமைகள் எத்தகைய விஷமத்தனமானது என்பதை அறியலாம். சூத்திரர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தச் சமூக இயலாமைகள் நிபந்தனைக்கு உட்படுத்தப்படாமல், இயலாமைகளுக்கு ஆட்டபட்டவர்கள் அவற்றிலிருந்து விடுதலை பெறத்தக்க வகையில் அமைந்திருக்குமானால் அவ்வளவாகக் கொடுமை நிறைந்ததாக இருந்திருக்க முடியாது.
ஆனால், பிராமணிய சட்டம் இந்தத்தடைகளைச் சுமத்தியதோடு நில்லாமல் அதைச் சூத்திரர்கள் மீது திணித்துச் சில நிபந்தனைகளையும் விதித்து அவற்றை மீறினால் குற்றமாக்கிக் கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தச் செய்துள்ளது.
இவ்வகையல் பிராமணிய சட்டம், சூத்திரர்கள் மீது தண்டனைகளை விதித்துள்ளது மட்டுமல்லாது, அதை நிரந்தரமாகவும் ஆக்கயுள்ளது. இதற்கு ஒரே எடுத்துக்காட்டு போதுமானது. சூத்திரனொருவன் வேதங்களை ஓதக்கூடாது என்பதற்காக அவன் வேத சடங்குகளை ஓதத் தகுதியற்றவனாக்கப்பட்டுள்ளான். இந்த இயலாமையை எவரும் எதிர்த்து நிற்கமுடியாது. தர்ம சூத்திரர்கள் இதோடு நிற்கவில்லை. இதற்கு ஒருபடி மேலே சென்று, சூத்திரன் வேதத்தைப் படிப்பதும் படிப்பதைக் கேட்பதும் தண்டனைக்குரிய குற்றமென அறிவித்து, இத்தகைய குற்றத்தை இழைப்பவரின் நாக்கை அறுத்துவிட வேண்டும், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று விதித்துள்ளன.
தனக்கு எதிரான இயலாமைகளிலிருந்து விடுபடுவரைத் தடுப்பதைவிட காட்டுமிராண்டித்தனம் வேறெதாவது இருக்க முடியுமா? இந்தத் தடைகள், இயலாமைகள் பற்றி என்ன விளக்கம் கூறமுடியும்? பிராமணிய சட்டங்களை வகுத்தவர்கள், சூத்திரர்களுக்கு எதிராக இத்தகைய கொடூரமான போக்கை மேற்கொண்டதேன்? பிராமணிய சட்ட நூல்கள் இந்த இயலாமைகளை மேம்போக்காகவே கூறுகின்றன. சூத்திரர்கள் உபநயனம் செய்துகொள்ளும் உரிமையற்றவர்கள் என்கின்றன. சூத்திரர்கள் எவ்வகையான பதவியும் வகிக்கக்கூடாது என்கின்றன.
சூத்திரர்கள் சொத்து எதுவும் வைத்துக்கொள்ளக்கூடாது என்கின்றன. ஆனால் இதற்கான காரணங்கள் அவை கூறவில்லை. ஒட்டுமொத்தமாக இவை அனைத்தும் மனம்போன போக்கிலுள்ளவை. சூத்திரனின் நடத்தைகளுக்கும் இந்த இயலாமைத் தடைகளுக்கும் எவ்வித தொடர்புமில்லை. இது ‘இன்பேமி’ என்னும் தீய நடத்தையால் ஏற்படுவதில்லை.
சூத்திரன், சூத்திரனாகப் பிறந்ததற்காகவே தண்டிக்கப்படுகிறான். இது விடுவிக்க முடியாத மர்மமாக உள்ளது. இந்த மர்மத்தை விடுவிப்பதற்குப் பிராமணிய சட்ட நூல்கள் உதவவில்லையாதலால், இதற்கான விளக்கத்தை வேறெங்காவது கண்டறிய வேண்டிய அவசியம் நேர்கிறது.
(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 3)