VI

ambedkar 267மூன்றாவது ஆட்சேபமே அல்ல. உபநயனம் சம்பந்தப்பட்ட எல்லா நிகழ்ச்சிகளையும் முழு அளவுக்கு அறியாதவர்கள்தான் இத்தகைய ஆட்சேபத்தை உடும்புப் பிடியாக வலியுறுத்த முடியும்.

ஆரிய சமுதாயம் சில சடங்குகளை சமஸ்காரங்களாகக் கருதி வந்தது. இத்தகைய சமஸ்காரங்கள் நாற்பது என்று கௌதம தர்ம சூத்திரம் (VII. 14-24) கூறுகிறது. அவை வருமாறு:

கர்ப்பதான பும்சவனம், சீமத்தோனயணம், ஜதகர்மம், நாமகரணம், அன்னபிரசனம், சௌலம், உபநயனம், நான்கு வேத விரதங்கள், ஸ்நானம் (சமாவர்த்தனம்), விவாஹம், ஐந்து அன்றாட மகாயக்ஞங்கள் (தேவ, பிதிர்,மனுஷ்ய, பூத, பிரம); ஏழு பாகயக்ஞங்கள் (அஷ்டகம், பரவண ஸ்தாலிபாகம், சிரார்த்தம், ஸ்ராவணி, ஆக்கிரஹாயணி, சைத்ரி, அஸ்வயூஜீ); ஏழு ஹவிர்யக்ஞங்கள் (அக்னியா, தேயம், அக்னிஹோத்ரம், தர்ஸபூர்ணமாசம், ஆக்ரயானம், சாதுர்மாசியம், நிரூடபசுபந்தம், சௌத்ராமணி); ஏழு சோம சமஸ்தங்கள் (அக்னிஸ்தோமம், அத்யக்னிஷ்தோமம், உத்தியம், ஹோட்சி, அதிராத்ரம், அப்தோர்யாமம், வாஜபேயம்).

பிந்தைய காலகட்டத்தில் குறுகிய அர்த்தத்தில் சமஸ்காரங்களுக்கும் பரந்த அர்த்தத்தில் சமஸ்காரங்களுக்கும் இடையே வேறுபாடு தோன்றியதாகத் தெரிகிறது. பரந்த அர்த்தத்தில் சமஸ்காரங்கள் என்பவை உண்மையில் யாகங்களாகும், அவை சமஸ்காரங்களில் சேர்க்கப்படாததால் அவை பதினாறாகக் குறைந்தன.

சமஸ்காரங்கள் புதுமையானவை ஒன்றுமல்ல. ஒவ்வொரு சமுதாயம் அவற்றை அங்கீகரிக்கின்றன. எடுத்துக்காட்டாக ஞான ஸ்னானம், தீக்கை, திருமணம், அபிசேகம், ஏசுநாதரின் இறுதியிலிருந்து முதலியவற்றைக் கிறித்தவர்கள் புனிதச் சடங்குகளாகக் கருதுகின்றனர்.

எனினும் சமஸ்காரங்களை பொறுத்தவரையில் இந்தோ-ஆரியரின் கண்ணோட்டங்களுக்கும் கிறித்தவர்களின் கண்ணோட்டங்களுக்கும் இடையே வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. கிறித்தவர்களின் கண்ணோட்டத்தின்படி சம்ஸ்காரம் அல்லது புனிதச் சடங்கு என்பது முற்றிலும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயம்; அதாவது குறிப்பிட்ட சடங்குகளைச் செய்வதன் மூலம் ஆண்டவனின் கருணையைப் பெறுவது சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கு சமூக முக்கியத்துவம் ஏதும் கிடையாது. இந்தோ-ஆரியர்களிடையே சமஸ்காரங்கள் ஆரம்பத்தில் முற்றிலும் ஆன்மீக முக்கியத்துவத்தையே பெற்றிருந்தன. பூர்வ மீமாம்சையை இயற்றிய ஜைமினி சமஸ்காரங்களைப் பற்றி கூறியிருப்பதிலிருந்து இது தெளிவாகிறது.

ஜைமினியின் கருத்துப்படி சமஸ்காரங்கள் ஒருவரிடம் சிறந்த தகுதியைத் தோற்றுவிக்கின்றன. அவை இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. அவை கறைகளை, அழுக்குகளை, இழுக்குகளை அகற்றி புனிதமான தூய பண்புகளை வளர்க்கின்றன. இத்தகைய சமஸ்காரங்கள் இல்லாமல் ஒருவன் தனது வேள்விக்குரிய பலனை ஈட்டமுடியாது; ஏனென்றால் அந்த வேள்வியைச் செய்வதற்கு அவன் தகுதியற்றவனாக இருக்கிறான். உபநயனம் என்பது இத்தகைய சமஸ்காரங்களில் ஒன்று; இதர சமஸ்காரங்களைப் போன்றே இதுவும் அறவே ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாகவே இருந்து வந்தது. அதன் முக்கியத்துவத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. ஆன்மீக முக்கியத்துவத்துடன் கூட இதன்முன்னர் பெற்றிராத சமூக முக்கியத்துவத்தையும் அது பெற்றது.

ஆரியர்களோ, ஆரியர்களல்லாதவர்களோ எல்லோருக்கும் உபநயனம் அனுமதிக்கப்பட்டு வந்த காலத்தில் அது சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக இருக்கவில்லை. அது அனைவருக்கும் பொதுவான உரிமையாக இருந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே உரிய தனிச் சலுகையாக அது இருக்கவில்லை. ஆனால் உபநயனம் செய்யும் உரிமை சூத்திரர்களுக்கு எப்போது மறுக்கப்பட்டதோ அப்போது முதல் அந்த உரிமையைப் பெற்றிருப்பது நன்மதிப்புக்கு அடையாளமாகவும், அந்த உரிமை மறுக்கப்படுவது அடிமைதனத்தின் சின்னமாக ஆயிற்று.

சூத்திரர்களுக்கு உபநயன உரிமை மறுக்கப்பட்டதானது இந்தோ-ஆரிய சமுதாயத்தில் ஒரு புதிய அம்சத்தைப் புகுத்திற்று. மேல் சாதியினரைத் தங்களுக்கு மேம்பட்டவர்களாகக் கருதவேண்டும் என்று அது சூத்திரர்களை நிர்ப்பந்தித்தது; அதே சமயம் மேல் சாதியினர் சூத்திரங்களைத் தங்களுக்குக் கீழ்ப்பட்டவர்களாக நடத்துவதற்கும் அது வகை செய்தது. சூத்திரர்களை இழிந்த நிலைக்குத் தள்ளுவதற்கு அவர்களுக்கிருந்த உபநயன உரிமை பறிக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருந்தது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

உபநயனம் சம்பந்தமாக வேறு சில தகவல்களைத் தருவதும் இங்கு உசிதமாகும். இது குறித்து பூர்வ மீமாம்சையில் (பூர்வ மீமாம்சை பற்றி கன்காநாத் ஜா எழுதிய நூலைப் பார்க்க. பக்கங்கள் 368-369 மற்றும் 171-172) சில விதிகள் வகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. ஒருவர் வேள்வி செய்வதைச் சாத்தியமாக்குவதற்கே பிரதானமாக எல்லாச் சொத்துக்களும் படைக்கப்பட்டுள்ளன என்று இந்த விதிகளில் ஒன்று கூறுகிறது. (சொத்துகள் வைத்துக் கொள்வதற்கும் வேதங்களைக் கற்பதற்குமான உரிமையை மனுஸ்மிருதியும் ஏனைய ஸ்மிருதிகளும் பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் ஏன் மறுக்கின்றன என்பதை மிகப் பலர் புரிந்துகொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர்.

ஆனால் இந்த தகுதியின்மைகள் யாவும் பூர்வ மீமாம்சை வகுத்துத் தந்திருக்கும் விதியின் விளைவே என்பதனையும், பெண்களும் சூத்திரர்களும் சொத்துகள் வைத்துக்கொள்ள முடியாததற்கு அவர்கள் பெண்களாகவும் சூத்திரர்களாகவும் இருப்பது காரணமல்ல என்பதனையும், மாறாக வேள்விகள் நடத்தக்கூடாது என்று அவர்கள் தடுக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம் என்பதனையும் ஒருவர் மனதில் கொள்ளும்போது இந்த சிக்கல் யாவும் மறைந்துவிடும்.) வேள்வி செய்வதற்குரிய ஆற்றலைப் பொறுத்தே சொத்துரிமை அமைந்துள்ளது. வேறு விதமாகச் சொன்னால், வேள்வி நடத்துவதற்கு ஆற்றல் இல்லாதவர்களுக்குச் சொத்துரிமை கிடையாது. வேள்வி நடத்தும் ஆற்றல் உபநயனத்தைச் சார்ந்துள்ளது; அதாவது உபநயனம் செய்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களுக்குத்தான் சொத்துரிமை உண்டு என்று இதற்குப் பொருளாகும்.

ஒரு வேள்வி வேதமந்திரங்களுடன் நடத்தப்படவேண்டும் என்று பூர்வ மீமாம்சையின் இரண்டாவது விதி பகர்கிறது. வேள்வி நடத்துபவர் வேதங்களைக் கற்றறிந்தவராக இருக்கவேண்டும் என்பதையே இது குறிக்கிறது. வேதங்களை கற்காத ஒருவருக்கு வேள்விகள் நடத்துவதற்கான தகுதி இல்லை. உபநயனச் சடங்கு செய்து கொண்டவர்களுக்குத்தான் வேதங்கள் கற்கும் உரிமை உண்டு. வேறு விதமாகச் சொன்னால், கல்வி அறிவு பெறுவதற்கான தகுதி – வேதங்களைக் கற்பது என்பது இதனைத்தான் குறிக்கிறது – உபநயனத்தைப் பொறுத்தே உள்ளது.

உபநயனம் இல்லை என்றால் கல்வி அறிவு பெறுவதற்கு இட்டுச் செல்லும் பாதை மூடப்பட்டுவிடும். உபநயனம் என்பது ஏதோ பொருளற்ற சடங்கு அல்ல என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். சொத்துரிமையும் கல்வி அறிவு பெரும் உரிமையும் உபநயனம் சம்பந்தப்பட்ட இரண்டு மிக முக்கியான நிகழ்வுப் போக்குகளாகும்.

உபநயனம் செய்து கொள்ளும் உரிமை நிகழ்வு சூத்திரர்களை எவ்வாறு தாழ்ந்த நிலைக்குத் தள்ளமுடியும் என்பதை உணர்ந்துகொள்ள முடியாதவர்கள் மேலே நாம் குறிப்பிட்ட பூர்வ மீமாம்சை விதிகளைக் கருத்தில் கொண்டால் இந்த விஷயத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் ஏதும் இருக்காது. உபநயனத்துக்கும் கல்வ அறிவு பெறுவதற்குமுள்ள தொடர்பைக் கிரகித்துக்கொள்ளும்போது, உபநயன உரிமை இழப்பே சூத்திரர்களின் தாழ்வுக்கு முழுமுதல் காரணம் என்ற கோட்பாட்டை ஏற்றுக்கொள்வதற்குக் குறுக்கே நிற்கும் இடையூறுகள் யாவும் ஆதவனைக் கண்ட பனித் திவலைகளைப் போல் மறைந்து விடும்.

உபநயனம் செய்யும் சடங்கு பண்டைய ஆரிய சமுதாயத்தில் எவ்விதம் அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது என்பதனையும், தனி மனிதர்களின் அந்தஸ்தும் சொத்துரிமைகளும் எவ்வாறு அதனைச் சார்ந்திருந்தன என்பதையும் மேலே கூறியவற்றிலிருந்து தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம். உபநயன உரிமை இல்லை என்றால் ஒருவனது கத்தி அதோகதிதான்; அவன் சமூக இழிநிலை, அறியாமை, இல்லாமை என்னும் அதலபாதாளத்தில் தள்ளப்படுவான். உபநயன உரிமை சூத்திரர்கள் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்குப் பிராமணர்கள் கண்டுபிடித்த மிகவும் பயங்கரமான ஆயுதமாகும். ஓர் அனுகுண்டுக்குரிய நாசசக்தி அதற்கு இருந்தது. பிராமணர்களது மொழியிலேயே கூறுவது என்றால் அது சூத்திரர்களின் சவக்குழியாக அமைந்தது எனலாம்.

VII

உபநயனம் நடத்திவைப்பதற்கு மறுக்கும் அதிகாரத்தை பிராமணர்கள் பெற்றிருந்தனர் என்பதில் ஐயமில்லை. எனினும் இத்தகைய அதிகாரம் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பதைக் கொண்டுபார்க்கும்போது அனேகமாக இது விஷயத்தில் ஐயம் எழக்கூடும். இது எப்படியிருப்பினும், இந்தோ-ஆரியர்களது சமய அமைப்பு முறை செயல்படும் விதத்தைப் பற்றித் தெரிந்திராதவர்கள் மனதில் எழக்கூடிய இத்தகைய எப்படிப்பட்ட ஐயமும் பின்கண்ட இரண்டு விஷயங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டால் மறைந்துவிடும்: 1.உபநயனத்தை நடத்தித் தருவதற்குப் பிராமணர்கள் பெற்றிருந்த பிரத்தியேக உரிமை, 2.அதிகாரபூர்வமற்ற உபநயனங்களை நடத்தித்தரும் பிராமணர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்லது அபராதம்.

மிகத் தொன்மையான காலத்தில் அனேகமாக தந்தைதான் தனையனுக்கு காயத்ரி மந்திரத்தைக் கற்றுத் தந்திருக்கவேண்டும். இதனுடன்தான் வேதங்களைக் கற்பது ஆரம்பமாகிறது; இதன் பொருட்டு பிற்காலத்தில் உபநயனச் சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும். எனினும் ஒரு விஷயம் ஐயத்துக்கு அப்பாற்பட்டது; அது இதுதான்: உபநயனத்தை நடத்தி வைக்கும் பொறுப்பு மிக ஆதிகாலத்திலிருந்தே ஒரு குருவிடம் அல்லது ஆச்சாரியர் என அழைக்கப்படும் ஆசிரியரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது என்பதில் ஐயமில்லை. உபநயனம் செய்யப்படவேண்டிய சிறுவன் இந்த ஆச்சாரியரிடம் சென்று அவரது இல்லத்தில் தங்கிவந்தான் என்பதிலும் சந்தேகமில்லை.

இத்தகைய ஆச்சாரியராக யார் இருக்கவேண்டும், இதற்கு அவர் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்கவேண்டும் என்னும் கேள்விகள் பண்டைக்காலம் முதலே விவாதத்துக்குரிய விஷயமாக இருந்து வந்திருக்கின்றன.

ஆச்சாரியர் என்பவர் வேதங்களை நன்கு கசடறக் கற்றவராக இருக்கவேண்டும். ‘கல்வி அறிவில்லாத ஓர் ஆசிரியரிடம் தீக்கை பெறுபவன் இருளிலிருந்து இருளுக்குச் செல்கிறான்; அதேபோன்று கல்வி அறிவற்ற ஆச்சாரியனும் இருளுக்குள் பிரவேசிக்கிறான்” என்று ஒரு பிராமணம் கூறுகிறது.

இது சம்பந்தமாக ஆபஸ்தம்ப சூத்திரம் (1.1.1.12-13) (ஆபஸ்தம்ப சூத்திரம் I.1.1.II லிருந்து மேற்கோள், கானே (1) பக்.324.) பின்கண்ட விதிகளை வகுத்தளிக்கிறது: உபநயனம் நடத்தித் தருவதற்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஆச்சாரியர் நன்கு கல்வி கற்றவராக இருக்கவேண்டும்; அவரது குடும்பமும் தொன்றுதொட்டு, வழிவழியாக கல்வி அறிவு பெற்ற குடும்பமாக இருக்கவேண்டும். அவரது மனம் வீறமைதி வாய்ந்ததாக, களங்கமற்றதாக இருக்கவேண்டும்; தர்மத்தின் பாதையிலிருந்து ஆச்சாரியர் விலகிச் செல்லாதவரை மாணாக்கர் பிரமசரியத்தின் இறுதிப் பரியந்தம் அவரிடம் வேதங்களைக் கற்றுக் கொள்ளவேண்டும். (வியாசரின் கருத்துப்படி ஆச்சாரியன் என்பவன் வேதங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாக, தர்மத்தை நன்கு அறிந்தவனாக, நற்குடும்பதில் பிறந்தவனாக, தூய்மையானவனாக,, சோம்பலற்றவனாக,சிரோத்ரியனாக இருக்க வேண்டும். வேதத்தின் வேதத்தின் ஒரு சாகையைக் கற்றறிந்தவனே சிரோத்ரியன் எனப்படுகிறான்.)

ஆனால் ஓர் ஆச்சாரியார் பிராமணனாக இருப்பது முதலாவதும் மிகவும் முக்கியமானதுமான தகுதியாகும். ஒரு பிராமண ஆச்சாரியர் கிடைக்காத சந்தர்ப்பத்தில் மட்டும்தான் ஒரு மாணவன் சத்ரிய அல்லது வைசிய ஆசிரியரை வரித்துக் கொள்ள அனுமதிக்கப்படுவான். (இத்தகைய சந்தர்ப்பங்களில் ஒரு பிராமண மாணவன் தன்னுடைய சத்ரிய அல்லது வைசிய குருவுக்கு செய்யவேண்டிய சேவை அவரைப் பின்தொடர்ந்து செல்லுவதுதான்; மற்றபடி ஆசிரியரின் உடம்பைப் பிசைந்துவிடுவது, பாதங்களைக் கழுவுவது போன்ற சரீர பிரயாசை தேவைப்படும் பணிகளை அவன் செய்ய வேண்டியதில்லை, காண்க: ஆபஸ்தம்ப சூத்திரம் II, 2-4, 25-28, கௌதம சூத்திரம் 7, 1-3, போதாயன சூத்திரம் 1, 2, 40-42, மனுதர்மம் II, 241.

ஒரு பிராமண மாணவன் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாலன்றி, தன்னிச்சையாக ஒரு சத்ரியன் அல்லது வைசியன் அவனுக்கு கல்வி கற்பிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.) வேதங்களைக் கற்றுக்கொள்ளும் உரிமைக்கும் கற்பிக்கும் உரிமைக்கும் இடையே வேறுபாடு இல்லாத காலகட்டத்தில்தான் இந்த விதிவிலக்கு அனுமதிக்கப்பட்டது. ஆனால் விரைவிலேயே இந்த வேறுபாடு நடைமுறைக்கு வந்தபோது, ஆச்சாரியனாக இருந்து உபநயனத்தை நடத்தும் உரிமை பிராமணனுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையேயான மோதல் இந்தப் பிரச்சினையின் அடிப்படையில்தான் எழுந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே, பிராமணன் மட்டுமே உபநயனச் சடங்கை நடத்த முடியும் என்பது இதிலிருந்து தெளிவு. மற்றவர்கள் நடத்தும் உபநயனச் சடங்கு முறைப்படி நடத்தப்பட்ட சடங்காக இருக்க முடியாது.

இந்தோ-ஆரிய சமய அமைப்பு முறையின் மற்றொரு முக்கியமான அம்சம் முறையற்ற எத்தகைய ஒரு சமயச்சடங்கையும் செய்யக்கூடாது என்று பிராமணனுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையாகும். இந்தத் தடையை மீறும் குற்றத்தைச் செய்யும் பிராமணன் தண்டனைக்கோ அல்லது பிராயசித்தத்துக்கோ உள்ளாவான். பண்டைய சட்டநூல்களில் இத்தகைய பல தண்டனைகள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். இவ்வகை நூல்களில் மனுதர்மமும், பராசரமும் முக்கியமானவையாகும்.

தெய்வங்களுக்கும் மூதாதையின் ஆவிகளுக்கும் திருப்படையல் செய்யும் சடங்கை நடத்தி வைப்பதற்குத் தகுதியற்ற, அருகதையற்ற பிராமணர்கள் யார் யார் என்பதை மனு (III. 156) பட்டியலிட்டுக் கூறியிருக்கிறார். அந்தப் பட்டியல் வருமாறு:

III. 156. “நிர்ணயமான கட்டணத்துக்காக கல்வி கற்றுத் தருபவன், அத்தகைய நிபந்தனைக்கு உட்பட்டு கல்வி கற்பவன், ஒரு சூத்திரனை ஆசிரியராக கொண்டவன், பண்பாடற்று முரட்டுத்தனமாகப் பேசுபவன், ஒழுக்கங்கெட்டவளுக்குப் பிறந்தவன், விதவையின் மகன்.

இதுகுறித்து பராசரம் பின்வருமாறு கூறுகிறது: (வியவஹார மயூகத்திலிருந்து மேற்கோள் (பதிப்பாசிரியர் கானே, பக். 115))

“தட்சிணை வாங்கிக் கொண்டு ஒரு சூத்திரன் சார்பில் அக்னியில் ஆகுதி செய்யும் பிராமணன் ஒரு சூத்திரன் ஆவான்; அதே சமயம் திருப்படையலை அளித்த சூத்திரன் பிராமணனாவான்;” மாதவ முனிவரின் கருத்துப்படி இந்தச் சடங்கின் பலன் “சூத்திரனுக்கு செல்கிறது, பிராமணனை பாவம் சூழ்கிறது.”

உபநயனம் செய்துகொள்வதற்கு சூத்திரர்களுக்குள்ள உரிமையைப் பறிக்க பிராமணர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்று சிலர் வினவக்கூடும். இவ்வாறு வினவுபவர்கள் பின்கண்ட இரண்டு அம்சங்களின் ஒட்டுமொத்த விளைவைக் கருத்திற் கொள்ளவேண்டும்: 1.உபநயனத்தை முன்னின்று நடத்தித் தருவதற்கு பிராமணனுக்குள்ள பிரத்தியேக உரிமை. 2.அதிகாரபூர்வமற்ற முறைமையில் உபநயனத்தை நடத்தித் தரும்போது அவன் ஏற்க வேண்டியுள்ள தண்டனை. இவற்றை இவர்கள் மனதில் கொண்டால், இந்த இரண்டு அம்சங்களின் கூட்டுப்பலன் உபநயனத்தை நடத்தும் அதிகாரத்தையும் அதனை மறுக்கும் அதிகாரத்தையும் பிராமணனுக்கு அளித்துள்ளது என்பதைப் புரிந்துகொள்வர் என்பதில் ஐயமில்லை.

இத்தகைய அதிகாரம் பிராமணனுக்குத் திட்டவட்டமான முறையில் வழங்கப்படவில்லை என்பது உண்மையே. இந்த அதிகாரத்தை பிராமணன் மறைமுகமாக, ஆனால் மிகவும் உறுதியான முறையில் செயல்படுத்தவரும்போது, அது குறித்து திட்டவட்டமாக கூறவேண்டிய அவசியமில்லாததே இதற்குக் காரணம். உபநயனத்தை மறுக்கும் அதிகாரம் தங்களுக்குள்ளது என்பதை பிராமணர்கள் உணர்ந்திருந்தனர் என்பது ஐயத்துக்கப்பாற்பட்டதாகும். பிராமணர்கள் இந்த உபநயன அதிகாரத்தை பல்வேறு சாதியினருக்கு எதிராகப் பயன்படுத்தி அவர்களை அச்சுறுத்திய 16 சம்பவங்கள் வரலாற்றில் பதிவாகியுள்ளன. ஒன்பது சந்தர்ப்பங்களில் அவர்கள் காயஸ்தர்களுக்கு எதிராக கச்சை கட்டினர்; நான்கு சந்தர்ப்பங்களில் பாஞ்சலர்களை வம்புக்கு இழுத்தனர்;

ஒரு சந்தர்ப்பத்தில் பல்சேசர்களுக்கு எதிராகக் கிளம்பினர். இவற்றை எல்லாம் விட முக்கியமானது என்னவென்றால் அவர்கள் இரண்டு மராத்திய மன்னர்களுக்குக் கூட அறைகூவல் விடுத்தனர். கி.பி.556க்கும் 1904க்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற நிகழ்சிகள் அல்ல என்பது உண்மைதான். எனினும் உபநயன உரிமையை மறுக்கும் அதிகாரத்தை பிராமணர்கள் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதற்கு இவை கண்கண்ட சான்றாக உள்ளன. இந்த அதிகாரத்தை பண்டைக் காலத்திலிருந்தே அவர்கள் பெற்றிருக்கவேண்டும் என்பது தெளிவு.

இந்த அதிகாரத்தை முன்காலத்திலேயே பெற்றிருந்தனர் என்பது ஆதாரமற்ற வெறும் கூற்றல்ல. ஒரு மனிதனது வருணம் அவனது குணத்தால் நிர்ணயிக்கப்படுகிறதேயன்றி, அவனது பிறப்பால் அல்ல என்பதை நிலைநாட்டுவதற்கு மிகத் தொன்மையான காலத்தைச் சார்ந்த சத்தியகாம ஜாபாலியின் உதாரணம் பொதுவாக எப்போதுமே மேற்கோள் காட்டப்படுவது உண்டு. இது உண்மையே. ஆனால் அதே சமயம் உபநயனம் செய்துவைப்பதற்கு மறுக்கும் உரிமையை பண்டைக் காலத்திலும் பிராமணர்கள் பெற்றிருந்தனர் என்பதை ஜாபாலியின் உதாரணம் காட்டுகிறது என்பதும் கண்கூடு.

இந்த நிகழ்ச்சிகளிலிருந்து நாம் என்ன முடிவுகளைப் பெறுகிறோம் என்பதை நாம் தெரிந்து கொண்டாலொழிய இவற்றைக் கணக்கிடுவது நாம் மேற்கொண்ட நோக்கத்துக்கு எத்தகைய உருப்படியான பலனும் கிட்டாது. இதனைச் செய்வதற்கு ஒவ்வொரு நிகழ்ச்சியைப் பற்றிய முழு விவரங்களையும் நாம் அறிந்திருப்பது அவசியம். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒரு முடிவினைப் பெறுகிறோமே தவிர, அதற்கு அப்பால் சென்று முழு விவரங்களையும் பெறமுடியவில்லை.

எனினும் முழு விவரங்களையும் நமக்குத் தரக்கூடிய ஒரு நிகழ்ச்சி நம் கவனத்திற்கு வந்துள்ளது; அதுதான் பிராமணர்களுக்கும் சிவாஜிக்கும் இடையே நடைபெற்ற மோதலாகும். இது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். எனவே இதனை இங்கு சவிஸ்தாரமாக ஆராய்வது உசிதமானதாக இருக்கும். இந்நிகழ்ச்சியிலிருந்து நாம் பேரு முடிவுகள் நமது ஆர்வத்தைப் பெரிதும் தூண்டக்கூடியவையாகவும் போதனையூட்டுபவையாகவும் இருப்பது மட்டுமின்றி, நாம் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டுள்ள பிரச்சினைக்கு மிகுந்த தெளிவூட்டுபவையாகவும் அமைந்துள்ளன.

           VIII

மகாராஷ்திரத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுதந்திரமான இந்து ராஜ்யத்தை நிறுவியபிறகு அந்த ராஜ்யத்தின் மன்னனாக முடிசூட்டிக் கொள்ள சிவாஜி விரும்பினார். அந்த முடிசூட்டு வைபவம் சீரும் சிறப்பும் பெருமதிப்பும் மிக்கதாக இருக்கவேண்டுமானால் அது வேத சடங்குகளின்படி நடைபெறவேண்டுமென்று சிவாஜியும் அவருடைய நண்பர்களும் விரும்பினார். ஆனால் தனனுடைய விருப்பம் நிறைவேறுவதற்குக் குறுக்கே பல இடையூறுகள் இருப்பதை சிவாஜி கண்டார்.

முடிசூட்டுவிழாவை வேதசடங்குகளுடன் நடத்துவது முற்றிலும் பிராமணர்களைப் பொருத்திருப்பதை அவர் உணர்ந்தார். சமயக் கண்ணோட்டத்திலிருந்து நோக்கும் போது ஒரு பிராமணனைத் தவிர வேறு எவரும் எந்தச் சமயச் சடங்கையும் செய்ய அருகதை உடையவரல்ல. இரண்டாவதாக தாம் ஒரு சத்ரியர் என்று நிருபித்தாலொழிய இத்தகைய சடங்கைச் செய்ய முடியாது என்பதையும் அவர் கண்டார். இதுதவிர மூன்றாவதொரு சிக்கலும் குறுக்கிட்டது. அதாவது சிவாஜி ஒரு சத்ரியர் என்று நிரூபணமானாலும் கூட அவர் உபநயன வயதைக் கடந்தவர், உபநயனமின்றி முடிசூட்டுவிழா நடைபெறமுடியாது.

எனினும் இந்த மூன்றாவது சிக்கல் அத்தனை கடுமையானதல்ல; ஏனென்றால் விரதிதய ஸ்தோமச் சடங்கை செய்து இந்த இக்கட்டைச் சமாளித்து விடமுடியும். ஆனால் முதலாவது சிக்கல் அப்படிப்பட்டதல்ல; அதுதான் மிகப்பெரிய முட்டுக்கட்டையாகும். அது சிவாஜியின் சமுதாயப் படிநிலை சம்பந்தப்பட்டது. அவர் ஒரு சத்திரியரா என்பதே இங்கு பிரச்சினை. இந்தத் தடையைக் கடந்துவிட்டால் மற்றவற்றை எல்லாம் எளிதாக சமாளித்துவிடலாம். ஆனால் தாம் ஒரு சத்திரியர் தான் என்று சிவாஜி உரிமை கொண்டாடியதைப் பலர் எதிர்த்தனர். இதில் பிராமணர்கள்தான் அவருடைய பிரதான எதிரிகள். அவருடைய சொந்த பிரதம அமைச்சரான மோரே பந்த் பிங்களேயே இந்த கும்பலுக்குத் தலைமை தாங்கினார்.

அவருடைய மராத்திய சர்தார்கள்கூட அவருக்கு சமூக முக்கியத்துவம் அளிக்கமறுத்தனர்; (இந்த முடிசூட்டுவிழா யோசனை எவ்வாறு தோன்றிற்று என்பது குறித்த சில சுவையான விவரங்களை கின்கைடு தமது நூலில் தந்துள்ளார். அவர் கூறுகிறார்:

“தக்காண உயர்குடியினர் போர்க்களத்தில் சிவாஜியின் தலைமையை ஏற்க சித்தமாக இருப்பினும் தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு எத்தகைய முன்னிடமும் அளிக்கத் தயாராக இல்லை. அரசு விருந்துகளில் மோஹித்தேக்களும், நிம்பல்கார்களுக்கும், சாவந்துகளுக்கும், கோர்பதேக்களுக்கும் ஒதுக்கப்படும் ஆசனத்தில் ஒரு போஸ்லே அமர்வதைக் குற்றமாகக் கொண்டு சீற்றம் காட்டினார்.

இந்த விஷயம் குறித்து சிவாஜி தமது செயலாளரான பாலாஜி அவஜி சிட்னிசுடன் பேசினார். அரச மகுடத்தை முகலாய சக்கரவர்த்தியின் கரங்களிலிருந்து அல்லாமல் காசியைச் சேர்ந்த ஒரு புரோகிதரின் கரங்களிலிருந்து வாங்கும்படி அந்தச் செயலாளர் சிவாஜிக்கு ஆலோசனை கூறினார். இதன்பேரில் மன்னர் இந்த விஷயம் பற்றி தம்முடைய அன்னை ஜீஜாபாயையும், ஞானி ராமதாசரையும், தம்முடைய குலதெய்வமான பவானியையும் கலந்தாலோசித்தார்; தம்முடைய செயலாளர் தெரிவித்த யோசனையை அனைவரும் ஆதரிப்பதைத் தெரிந்து கொண்டார்.” –மகாராஷ்டிரத்தின் வரலாறு, பக்கம். 244.

வேத சடங்குகளுடன் முடிசூட்டிக் கொள்வதன் நோக்கம் சமூக முக்கியத்துவத்தைப் பெறுவதேயன்றி சட்ட மற்றும் அரசியல் பிரதானத்தை ஈட்டுவதல்ல என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.) அவருக்கெதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்தனர்; இது சிவாஜிக்கு ஏற்பட்ட துரதிருஷ்டமாகும். அவர்களது அபிப்பிராயத்தில் அவர் ஒரு சூத்திரர். மேலும், கலியுகத்தில் சத்திரியர்கள் என்று எவரும் இல்லை என்று பிராமணர்கள் நீண்ட காலமாக உடும்புப்பிடிவாதமாக வலியுறுத்திவரும் கோட்பாட்டுக்கு சிவாஜியின் உரிமைக் கோரிக்கை முரணானதாகவும் இருந்தது. சிவாஜி கலியுகத்தில் வாழ்ந்து வருகிறார். எனவே அவர் சத்திரியராக இருக்கமுடியாது என்ற குதர்க்கவாதம் முன்வைக்கப்பட்டது. இதுவன்றி, அவர்கள் மேலும் ஒரு விதண்டாவாதத்தையும் முன்வைத்தனர்.

அதாவது சாஸ்திரங்களின்படி சத்திரியர்கள் பதினோராவது வயதில் உபநயனம் செய்துகொண்டு பூணூல் அணிய வேண்டும்; ஆனால் சிவாஜி இவ்வாறு உரியகாலத்தில் செய்யவில்லை. ஆதலால் சிவாஜி ஒரு சூத்திரரேயன்றி சத்திரியர் அல்ல என்பதற்குப் பிராமணர்கள் இதனையும் ஒரு சான்றாக காட்டினர்.

எனினும் நல்வாய்ப்பாக காசியைச் சேர்ந்த காகபட் என்ற புகழ்பெற்ற பிராமணர் சிவாஜிக்கு உதவிக்கு வந்தார். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் மிக்க புலமை வாய்ந்த அவர் அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு கண்டார்; விரத்ய ஸ்தோமத்தையும் பின் உபநயனத்தையும் முதலில் செய்துமுடித்துவிட்டு ரைகாட்டில் 1674 ஜூன் 6 ஆம் நாளன்று சிவாஜியின் முடிசூட்டு வைபவத்தை மிக வெற்றிகரமாக நடத்தினார்.

(வேத முறையிலன்றி சூத்திரர்கள் விஷயத்தில் நடைபெறுவது போன்று பௌராணிக முறையில் சிவாஜியின் முடிசூட்டு விழாவை நடத்தித் தர சில பிராமணர்கள் தயாராக இருந்ததாகத் தெரிகிறது. இவ்வாறல்லாமல் வேத சடங்குகளுடன் சிவாஜியின் முடிசூட்டு வைபவம் நடத்தப்படுமாயின் பல்வேறு கொடிய விளைவுகள் ஏற்படும் என்று இவர்கள் ஆரூடம் கூறினர். துரதிருஷ்டவசமாக இந்தத் தீய விளைவுகள் ஏற்படவே செய்தன. ஆரூடங்கள் போன்றவற்றில் மிகுந்த நம்பிக்கை கொண்ட சிவாஜி வேத சடங்குகளில்லாத வேறொரு முடிசூட்டு விழாவை நடத்த வேண்டியதாயிற்று. இந்த இரண்டாவது முடிசூட்டு வைபவம் பற்றி திரு.சி.வி.வைத்யாவின் நூலில் பின்கண்ட சுவையான விவரங்கள் காணப்படுகின்றன:

“எப்போதும் போலவே அப்போதும் முட்டுக்கட்டைபோடும், அதிருப்தியடைந்த பிராமணர்கள் இருக்கவே செய்தனர். முடிசூட்டு விழாவை மகாராஷ்டிரம் முழுவதுமே பெரிதும் பாராட்டிய போதிலும் இவர்கள் மனநிறைவு தெரிவிக்கவில்லை. அச்சமயம் இயற்றப்பட்ட ராஜ்யாபிஷேக கல்பதரு என்னும் கவிதையின் நகல் வங்க ராயல் ஆசியக் கழகத்தின் நூலகத்தில் இருக்கிறது. இக்கவிதை புனாவைச் சேர்ந்த இதிகாஸ் எஸ்.மண்டலால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (காலாண்டின் சஞ்சிகை, தொகுதி x-1) சிவாஜியின் முடிசூட்டு வைபவத்துக்கு எதிராக எழுப்பப்பட்ட சில ஆட்சேபங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன.

இந்தக் கவிதை ராஜாராம் காலத்தியது என்றாலும் அதனை சமகாலத்தியது என்று கூறுவதற்கில்லை; ஏனென்றால் முந்தைய சிவபாரதம் சிவாஜியை விஷ்ணுவின் அவதாரம் என்று வருணித்திருப்பதற்கு மாறாக அவர் சிவனின் அவதாரம் என்ற பிற்காலக் கருத்து அதில் காணப்படுகிறது. காகபட்டின் எதிராளியான காசியைச் சேர்ந்த நிஷ்சால்புரி என்ற பிராமணத் துறவிக்கும் கோவிந்த பட் பார்வேக்கும் இடையே கொங்கணத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஓர் உரையாடலை அது தருகிறது.

முடிசூட்டு விழாவுக்கு முன்னரும் பின்னரும் நடைபெற்ற எல்லா அபசகுனங்களையும் அது நினைவூட்டுகிறது; பிரதாபராவ் குஜார், சிவாஜியின் மனைவியான காசிபாய் முதலியோரின் மரணம், உத்தரம் விழுந்து காகபட்டின் மூக்கில் ஏற்பட்ட காயம் முதலியவை இவற்றில் அடங்கும். காகபட் தம்முடைய சீடர்களான பிராமணர்களை மட்டுமே இந்த விழாவில் பயன்படுத்திக் கொண்டார் என்றும், நிஷ்சல்புரி சிபாரிசு செய்தவர்களை இப்பணியில் ஈடுபடுத்த மறுத்துவிட்டார் என்றும் இக்கவிதை திட்டவட்டமாகக் கூறுகிறது.

விழாவின் பலக் குறைபாடுகள் அடுத்தபடியாக சுட்டிக்காட்டப்படுகின்றன. உதாரணமாக சிம்மாசனத்தில் ஏறி அமரும் நிகழ்ச்சி முடிந்ததும் சிவாஜி இரதத்தில் ஏறி அமரப் போகும்போது காகபட் முதலில் ஏறி அமர்ந்து கொண்டார். பின்னர்தான் சிவாஜி அமர்ந்தார். முடிசூட்டுவிழா முழுவதையும் பார்த்துவிட்டு நிஷ்சால்புரி கோட்டையிலிருந்து புறபட்டுச்சென்றார். ஆனால் அவ்வாறு புறப்படுவதற்கு முன்னர் 13ஆவது 22ஆவது 55ஆவது நாட்களில் தீய நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று சிவாஜியிடம் எச்சரித்துவிட்டுச் சென்றார்.

அவ்வாறே 13ஆவது நாள் சிவாஜியின் அன்னை காலமானார். அடுத்து பிரதாப்கட்டில் ஒரு குதிரை லாயம் தீப்பற்றி எரிந்து அநேக மிகச் சிறந்த குதிரைகள் மாண்டன. இவ்வாறே சிங்கட்டில் ஒரு யானை இறந்தது. இந்த நிகழ்ச்சிகள் நிஷ்சால்புரியையும் அவரைச் சார்ந்த பிராமணர்களையும் திரும்பவும் அழைக்கும்படி சிவாஜியை நிர்பந்தித்தது; அவர் மூலம் அரசு பீடம் ஏறும் வைபவத்தை சிவாஜி மீண்டும் நடத்தினார்.

ஆனால் இப்போது வேத சடங்குகளுக்கு பதிலாக தந்திர சாஸ்திர அல்லது மாயவித்தை சடங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த சடங்கு பற்றிய விவரங்களும் இக்கவிதையில் இடம்பெற்றிருந்தன. சாம வேதத்திலிருந்து சில மந்திரங்கள் ஓதப்பட்ட போதிலும் இந்த சடங்கு வேத ஆகமப்படி நடைபெறவில்லை. அசுவினி சுத்தம் 5ல் (லலித பஞ்சமி நாள் 5, 1596) இவ்வைபவம் நடைபெற்றதாக கவிதையின் இறுதியில் கூறப்பட்டிருக்கிறது. இந்த சமயச் சடங்கு பற்றி ஜேயும் குறிப்பிட்டிருக்கிறார்; ஒரு முகமதிய ஆவணத்திலும் நிஷ்சல்புரியைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது – சிவாஜி, மராத்திய சுயராஜ்யத்தின் நிறுவகர், பக்கங்கள் 252-253)

சிவாஜி விஷயம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. அது முக்கியமானது. ஏனென்றால், உபநயனத்தை நடத்தித் தருவதற்கு பிராமணனுக்கு தவிர வேறு எவருக்கும் உரிமையில்லை என்பதையும், இச்சடங்கைச் செய்ய அவன் தயாராக இல்லை என்றால் அவனை எவரும் நிர்பந்திக்க முடியாது என்பதையும் அது காட்டுகிறது; சிவாஜி ஒரு சுதந்திரமான ராஜ்யத்தின் மன்னர், ஏற்கெனவே தம்மை மகாராஜா என்றும், சத்ரபதி என்றும் பிரகடனம் செய்துக் கொண்டவர். அவருடைய பிரஜைகளாக ஏராளமான பிராமணர்கள் இருந்தனர். அவ்வாறிருந்தும், தமது முடிசூட்டு விழாவை நடத்தித் தரும்படி அவர்களில் எவரையும் அவரால் நிர்பந்திக்க முடியவில்லை.

சிவாஜி விஷயம் மற்றொரு வகையிலும் முக்கியமானது; ஏனென்றால் எந்த ஒரு சடங்கும் முறைப்படியானதாக இருக்க வேண்டுமென்றால் அது ஒரு பிராமணனால் நடத்தப்படுவதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டிற்று. பிராமணரல்லாதாரால் நடத்தப்படும் ஒரு சடங்கு பயனற்றதாகவே இருக்கும். சிவாஜி நினைத்திருந்தால் தமது முடிசூட்டு வைபவத்தை ஒரு பிராமணரல்லாதாரைக் கொண்டே நடத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்ய அவர் துணியவில்லை. ஏனென்றால் இதற்கு எத்தகைய சமூக, ஆன்மீக பலனும் கிட்டாது என்பதை அவர் நன்கு அறிவார்.

சிவாஜி விஷயம் மூன்றாவதொரு வகையிலும் முக்கியமானது; ஏனென்றால் ஒரு இந்துவின் சமூக படிநிலையை நிரணயிக்கும் அதிகாரம் முற்றிலும் பிராமணர்களின் விருப்பத்தையே பொறுத்திருக்கிறது என்பதை அது புலப்படுத்துகிறது. சிவாஜிக்கு ஆதரவாக முடிவெடுக்கும் பொருட்டு அவருடைய நண்பரான பாலாஜி அவாஜி ஒரு காரியம் செய்தார். அதாவது மேவாரிலிருந்து மூதாதை மரபுவழிப் பட்டியல் ஒன்றை அவர் கொண்டுவந்தார்; அந்த பட்டியல் சிவாஜியை சத்திரியர்கள் எனக் கருதப்படும் மேவாரின் சிசோதியர்களுடன் பிணைத்தது. இந்தக் குலமரபுப் பட்டியல் அப்போதைய சூழ்நிலையை மனத்தில் வைத்து புனைந்து தயாரிக்கப்பட்ட ஒரு போலி ஆவணம் என்று சிலர் குற்றம் சாட்டினர். இதுஒரு போலி ஆவணம் அல்ல என்று வைத்துக்கொண்டாலும்கூட (மேவார் சிசோதியர் குளம் இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது: (1) ராமாயணத்தின் இதிகாச நாயகர் ராமரின் மூத்த புதல்வர் லவனின் வழிதோன்றல்கள் என உரிமை கொண்டாடும் உதய்பூர் சிசோதியர்களின் ஒரு பிரிவினர் இவர்கள், (2) மேவார் சிசோதியர்கள் இனக் கலப்பற்றவர்கள், ஏனென்றால் அவர்கள் தங்கள் பெண்களை முகலாய பேரரசர்களுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டனர்; மேலும் ஜெய்ப்பூர், ஜோத்பூர் இராசபுத்திரர்கள் செய்தது போன்று இவர்கள் இதர இராசபுத்திர குடும்பங்களுடன் மண உறவு வைத்துக் கொள்ளவும் இணங்கவில்லை.

இந்தக் காரணங்களுக்காகத்தான் சிவாஜி மேவார் சிசோதியர்களின் வழிவந்தவர் என்று கூறப்பட்டது போலும்.) தாம் சத்திரியர்தாம் என்ற சிவாஜியின் கோரிக்கையை அங்கீகரிப்பதை இது எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? இந்தக் குலமரபுப் பிரச்சினை சிசோதியர்கள் இராசபுத்திரர்களா, இவர்கள் பண்டைய இந்தோ-ஆரிய சமுதாயத்தில் வழித்தோன்றல்களா என்பது குறித்துப் பெருமளவுக்கு ஐயப்பாடு நிலவுகிறது. ஒரு கருத்துப்படி அவர்கள் அந்நியர்கள்; இந்தியாவின்மீது படையெடுத்த ஹூணர்களின் எஞ்சிய பிரிவினர்; ராஜபுதனத்தில் அவர்கள் நிலைகொண்டுவிட்டவர்கள்; அச்சமயம் மத்திய இந்தியாவில் வளர்ந்துவந்த பௌத்த சமயத்தை நசுக்கி ஒடுக்குவதற்கு இவர்களை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொள்ள பிராமணர்கள் விரும்பினர்; இதன் பொருட்டு பிராமணர்கள் அக்னியின் முன்னர் ஒரு விசேட சடங்கு நடத்தி, இவர்களை சத்திரியர் நிலைக்கு உயர்த்தினர்; இதன் காரணமாக இவர்கள் அக்னி குல சத்திரியர்கள் எனப்படுகின்றனர். இந்தவிஷயம் குறித்துப் பேசுவதற்குப் பெரிதும் தகுதிவாய்ந்த துறைபோல, அறிவாழமிக்க, அறிஞர்கள் பலர் இக்கருத்தை ஆதரித்துள்ளனர். இவ்வகையில் வின்சென்ட் ஸ்மித் கூறுவதாவது: (சி.வி.வைத்தியா தமது மத்தியகால இந்தியாவின் வரலாறு என்ற நூலில் கையாண்டுள்ள மேற்கோள், தொகுதி II, பக்கம் 8.)

“இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராஜபுதினத்திலும் மேல் கங்கைப் பள்ளத்தாக்கிலும் வந்து குடியமர்ந்த அந்நிய குடியேற்றக்காரர்கள் ஸ்தல மன்னர்களுடன் நடைபெற்ற போர்களில் முற்றிலும் அழிந்துவிடவில்லை என்று ஒரு கருத்து நீண்டகாலமாகவே நிலவி வருகிறது; இந்தக் கருத்து இப்போது வலுமிக்க சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

இந்தப் போர்களில் பல அயல்நாட்டினர் மாண்டு மடிந்தனர் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் ஏராளமானோர் தப்பிப் பிழைத்து, உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர். இந்த அந்நியர்கள் தங்களுக்கு முன்னர் இந்தியாவின் மீது படையெடுத்த சாகசர்களையும், யூச்சிகளையும் போன்றே இந்து சமயத்தின் அற்புதமான தன்வயப்படுத்தும் சக்தியால் ஈர்க்கப்பட்டு துரிதகதியில் இந்து மதத்தைத் தழுவினர்.

இவர்களில் தலைமைப் பதவிகளைப் பெறுவதில் வெற்றிபெற்ற குலமரபுக் குழுக்களும் குடும்பங்களும் இங்கு சமயக்கட்டுக்கோப்புக்குள் சத்திரியர்களாகவும் இராசபுத்திரர்களாகவும் தங்குதடையின்றி அனுமதிக்கப்பட்டனர்; ஐந்தாவது, ஆறாவது நூற்றாண்டுகளில் இந்தியாவிற்குள் அலைஅலையாகப் படையெடுத்து வந்த முரட்டுத்தனமான நாடோடி இனத்தவர்களிடமிருந்து வட இந்தியாவைச் சேர்ந்த பரிஹார்களும் மற்றும் ஏனைய பல புகழ்பெற்ற இராசபுத்திர குலங்களும் தோன்றின என்பதில் ஐயமில்லை.

இந்த அந்நியர்களில் கீழ் மட்டத்தில் இருந்தவர்கள் குஜார்களாயினர்; சமூக படிநிலையில் இவர்கள் இராஜபுத்திரர்களுக்குக் கீழ்நிலையில் இருப்பவர்கள். இன்னும் தெற்கே பல்வேறு பூர்வகுடி மக்களும் இனத்தினரும் இதே போன்று இந்துசமய அரவணைப்பிற்குள் வந்தனர். இதன் விளைவாக கோண்டுகளும், பார்களும், கார்வால்களும் ஏனைய பலரும் சாண்டல்களாகவும், ரதோர்களாகவும், இதர பல புகழ்பெற்ற இராசபுத்திர குலங்களாகவும் பரிணமித்தனர்; இவர்கள் தங்களை சூரிய வம்சத்தினர் என்றும் சந்திர வம்சத்தினர் என்றும் பெருமிதத்தோடு கூறிக்கொண்டனர்.”

வில்லியம் குரூக் பின்வருமாறு கூறுகிறார்: (மேற்படி நூலில் வைத்தியாவின் மேற்கோள், பக்கம். 9)

இராசபுத்திரர்களின் பூர்வீகம் குறித்து அண்மைய ஆராய்ச்சிகளில் புதிய விஷயங்கள் தெரிய வந்துள்ளன. வேதகால சத்திரியர்களுக்கும் மத்தியகால இராசபுத்திரர்களுக்கும் இடையே ஓர் அகன்ற இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியை நிரப்புவது இப்போது சாத்தியமல்ல. பல குலங்களின் தோற்றம் சாகர்கள் அல்லது குஷானர்கள் படையெடுப்புக்களுக்கும், கி.பி.480ல் குப்த பேரரசை அழித்தொழித்த வெள்ளை ஹூணர்களின் படையெடுப்புக்கும் முற்பட்டது என்பது தற்போது நிலைநாட்டப்பட்டுள்ளது.

பின்னர் குறிப்பிட்ட மக்களுடன் பிணைப்புகொண்ட குஜார்கள் இந்து மதத்தைத் தழுவினர்; இதனைத் தொடர்ந்து அவர்களிடமிருந்து பல உயர்ந்த இராசபுத்திரக் குடும்பங்கள் உதித்தெழுந்தன. அரசு கௌரவத்துக்கு உரிமை கொண்டாட முற்பட்ட இந்தப் புதியவர்கள் பிராமணீய சமயத்தையும் அமைப்புமுறையையும் ஏற்றுக் கொண்டதும் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் நாயகர்களுடன் இவர்களை இணைக்க முயற்சி எடுத்துக் கொள்வது முற்றிலும் இயல்பே. இவ்வாறுதான் இந்த இராசபுத்திரக் குடும்பங்கள் சூரிய, சந்திர வம்சத்தில் வந்தவை என்று போற்றிப் புகழும் பல புராணக்கதைகள் உருவாயின.

இந்தக் குழுவினர் மரபுவழி அடிப்படையில்விட சமுதாய படிநிலை அடிப்படையில் சத்திரியர்கள் அல்லது இராசபுத்திரர்கள் என்று குறிப்பிடப்பட்டனர். இதன் காரணமாக சாதி உணர்வுகளுக்குப் பங்கம் ஏற்படாதவகையில் அந்நியர்களை இந்தக் குலங்களில் அனுமதிப்பது சாத்தியமாக இருந்தது; அதிலும் அச்சமயம் சாதிஉணர்வுகள் ஓரளவே வளர்ந்திருந்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எனினும் அந்நியர்களை இவ்வாறு அனுமதிப்பதை மூடிமறைப்பதற்கு ஏதேனும் போலியான காரணம் கூறுவது அவசியமாக இருந்தது. இவ்வகையில்தான் பௌத்த மதத்தையும் இந்து மதத்துக்கு முரணான ஏனைய மதங்களையும் ஒடுக்குவதற்குப் பிராமணர்களுக்கு உதவும் பொருட்டு வேதரிஷிகளின் மேற்பார்வையில் சுத்திகரிப்பு சடங்கின்மூலம் கிளை இனங்கள் தோற்றுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இந்தக் கிளை இனங்கள் அக்னியிலிருந்து பிறந்தவை என்றும் சொல்லப்பட்டது. அக்னி குலங்கள் எனப்படும் பார்மர், பரிஹார், சாளுக்கியர், சௌகான் ஆகிய நான்கு இனங்களுக்கு இந்தச் சிறப்புரிமை வழங்கப்பட்டது.

டாக்டர் பண்டர்கரும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளார். அவரது கருத்துப்படி இராசபுத்திரர்கள் குஜார்கள் வழிவந்தவர்கள், குஜார்கள் அந்நியர்கள், எனவே இராசபுத்திரர்களும் அந்நியர்களின் வழித்தோன்றல்களே ஆவர்.

சிவாஜியின் முடிசூட்டு வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிராமணர்கள் இராசபுத்திரர்களின் மரபுமூலத்தையும், தாங்கள் சத்திரியர்களின் வழிதோன்றல்கள்தான் என்ற அவர்களது வாதத்தையும் அறியாமல் இருந்திருக்க முடியாது. இந்த உண்மையை அவர்கள் அறியமாட்டார்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால்கூட கலியுகத்தில் சத்திரியர்கள் என்று எவருமே இல்லை என்று பிராமணர்கள் எடுத்த முடிவை அவர்கள் அறியாமல் இருந்திருக்க முடியாது. இது நெடுங்காலமாக நடப்பிலுள்ள ஒரு பழைய முடிவாகும்.

இந்த முந்தைய முடிவை பிராமணர்கள் மதிப்பவர்களாக இருந்தால், தாங்கள் சத்திரியர்கள் என்று சிசோதியர்களும் சிவாஜியும் கொண்டாடும் உரிமையை அவர்கள் நிராகரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதற்காக அவர்களை எவரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் முந்தைய முடிவுகள் தம்மைக் கட்டுப்படுத்தும் என்பதை பிராமணர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. பிராமணர்களைப் பொறுத்தவரையில் நிலையான, நிரந்தரமான முடிவு என்று ஏதுமில்லை.

இதுபோக, சிவாஜி விஷயம் நான்காவதொரு வகையிலும் முக்கியமானது. ஏனென்றால் கத்தோலிக்க குருமார்கள் சலுகைகள் காட்டுவது போன்று பிராமணர்களின் முடிவுகளும் விற்பனைக்குரியவை என்பதை இது காட்டுகிறது. காகபட்டின் முடிவு நியாயமான முடிவு என்று கூறமுடியாது; புரோகிதர்கள் பணியைச் செய்வதற்கு காகபட்டும் ஏனைய பிராமணர்களும் பெற்றுக்கொண்ட பணத்தின் அளவிலிருந்து இது தெள்ளத் தெளிவாகும்.

சிவாஜி தம்முடைய முடிசூட்டு விழாவுக்காக எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதையும்,அதில் காகபட்டும் ஏனைய பிராமணர்களுக்கும் எவ்வளவு தொகை கிடைத்தது என்பதையும் குறித்து திரு.வைத்தியா பின்கண்ட விவரங்களைத் தருகிறார். (வைத்தியா தந்துள்ள மேற்கோள், மேற்படிநூல், பக்கம்.10. திரு.வைத்தியா இந்தக் கருத்தை ஆட்சேபிக்கிறார்; இராசபுத்திரர்கள் அன்னியர்களல்ல என்றும், மாறாக அவர்கள் ஆதி ஆரிய-சத்திரிய வம்சத்தில் வந்தவர்கள் என்றும் நிலைநாட்ட முயன்றிருக்கிறார். ஆனால் திரு.வைத்தியாவின் கூற்று அத்தனை நம்பத்தக்கதாக இல்லை.)

டாக்டர் பண்டகரும் இதே கருத்தையே வெளியிட்டுள்ளார். அவரது கருத்துப்படி இராசபுத்திரர்கள் குஜார்கள் வழிவந்தவர்கள், குஜார்கள் அந்நியர்கள், எனவே இராசபுத்திரர்களும் அந்நியர்களின் வழித்தோன்றல்களே ஆவர்.

சிவாஜியின் முடிசூட்டு வைபவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிராமணர்கள் இராசபுத்திரர்களின் மரபு மூலத்தையும், தாங்கள் சத்திரியர்களின் வழிதோன்றல்கள்தான் என்ற அவர்களது வாதத்தையும் அறியாமல் இருந்திருக்க முடியாது. இந்த உண்மையை அவர்கள் அறியமாட்டார்கள் என்று ஒரு வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட கலியுகத்தில் சத்திரியர்கள் என்று எவருமே இல்லை என்று பிராமணர்கள் ஏற்கெனவே எடுத்த முடிவை அவர்கள் அறியாமல் இருக்க முடியாது. இது நெடுங்காலமாக நடப்பிலுள்ள ஒஎஉ பழைய முடிவாகும்.

இந்த முந்தைய முடிவை பிராமணர்கள் மதிப்பவர்களாக இருந்தால், தாங்கள் சத்திரியர்கள் தான் என்று சிசோதியர்களும் சிவாஜியும் கொண்டாடும் உரிமையை அவர்கள் நிராகரிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் செய்திருந்தால் அதற்காக அவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள். ஆனால் முந்தைய முடிவுகள் தம்மைக் கட்டுப்படுத்தும் என்பதை பிராமணர்கள் என்றுமே ஏற்றுக்கொண்டதில்லை. பிராமணர்களைப் பொறுத்தவரையில் நிலையான, நிரந்தரமான முடிவு என்று ஏதுமில்லை.

இதுபோக, சிவாஜி விஷயம் நான்காவதொரு வகையிலும் முக்கியமானது. ஏனென்றால் கத்தோலிக்க குருமார்கள் சலுகைகள் காட்டுவது போன்று பிராமணர்களின் முடிவுகளும் விற்பனைக்குரியவை என்பதை இது காட்டுகிறது. காகபட்டின் முடிவு நியாயமான முடிவு என்று கூறமுடியாது; புரோகிதர்கள் பணியைச் செய்வதற்கு காகபட்டும் ஏனைய பிராமணர்களும் பெற்றுக்கொண்ட பணத்தின் அளவிலிருந்து இது தெள்ளத் தெளிவாகும். சிவாஜி தம்முடைய முடிசூட்டு விழாவுக்காக எவ்வளவு பணம் செலவழித்தார் என்பதையும்,அதில் காகபட்டும் ஏனைய பிராமணர்களுக்கும் எவ்வளவு தொகை கிடைத்தது என்பதையும் குறித்து திரு.வைத்தியா பின்கண்ட விவரங்களைத் தருகிறார். (மராட்டிய சுயராஜ்யத்தின் நிறுவகர், பக்கங்கள் 248 மற்றும் 252)

“இந்த அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்சம் ஹோனும், ஒரு யானையும், ஒரு குதிரையும், ஆடைகளும் அணிமணிகளும் பெற்றனர். முடிசூட்டு வைபவத்தை நடத்தியமைக்காக காகபட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் அளிக்கப்பட்டது. முடிசூட்டு விழாவின்போது பல சிவாஜி நிலைமைக்கேற்ப மிகப் பெருந்தொகை செலவிட்டார். அவர் செலவிட்ட மொத்த தொகை ஒரு கோடி நாற்பத்திரண்டு லட்சம் ஹோன்கள் அல்லது 426 லட்சம் ரூபாய் என்று சபாசத் கூறுகிறார்.

சிவாஜியின் முடிசூட்டு விழாவின்போது அங்கு 50,000 வைதீக பிராமணர்கள் குழுமியிருந்தனர் என்றும் சபாசத் விவரிக்கிறார். (5,000 என்பதுதான் 50,000 என்பதாக தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று வைத்தியா கூறுகிறார். ஆனால் இதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.) இவர்களையன்றி ஆயிரக்கணக்கான யோகிகளும் சந்நியாசிகளும் வந்திருந்தனர். இவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது, அல்லது தானியம் வழங்கப்பட்டது.

முடிசூட்டுவதற்கு முன்னர் சிவாஜி தங்கம் மற்றும் இதர பல்வேறு அறிய உலோகங்களைக் கொண்டு எடைக்கு எடை நிறுத்தப்பட்டார் என்று அன்றைய ஆவணங்கள் கூறுகின்றன. 1684 அக்டோபர் 3 ஆம் தேதியிட்ட டச்சு ஆவணம் முடிசூட்டு வைபவத்தை விவரிக்கும்போது, சிவாஜி 17,000 ஹோன்ஸ் அல்லது 160 பவுண்டு எடையிருந்தார் என்றும், அவரது இந்த எடைக்கு நிகராக வெள்ளி, தாமிரம், இரும்பு, சூடம், உப்பு, சர்க்கரை, வெண்ணெய், பல்வேறு பழவகைகள், வெற்றிலை முதலிய பொருள்களைக் கொண்டு நிறுத்தப்பட்டார் என்றும், இவற்றின் மொத்த மதிப்புக்குரிய பணம் பிராமணர்களிடையே விநியோகிக்கப்பட்டது என்றும் கூறுகிறது.

ஜூன் 7 ஆம் தேதி அதாவது முடிசூட்டு விழாவிற்கு அடுத்த நாள் பொதுவாக எல்லோருக்கும் தட்சிணை வழங்கப்பட்டது. ஒவ்வொரு பிராமணரும் மூன்று முதல் ஐந்து ரூபாயும், ஏனைய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குழந்தையும் முறையே தலா இரண்டு ரூபாயும், ஒரு ரூபாயும் பெற்றனர். மொத்தத்தில் இந்தத் தட்சினையின் மதிப்பு ஒன்றரை லட்சம் ஹோனாக (ஒரு ஹோன் என்பது 3 ரூபாய்க்குச் சமம்.) இருந்தது.

மே 18 முதல் ஜூன் 13 வரை சிவாஜி அவரது எடைக்கு நிகராக தங்கமும் 16,000 ஹோன்களும்வைத்து நிறுத்தப்பட்டார் என்றும், இவற்றுடன் ஒரு லட்சம் ஹோன்கள் சேர்த்து பிராமணர்களுக்கு தட்சிணையாக விநியோகிக்கப்பட்டது என்றும் ஆக்ஸ்ண்டனும் தம்முடைய நாட்குறிப்பில் கூறியிருக்கிறார்.

விரத்தியா சடங்குக்கு காகபட்டுக்கு 7,000 ஹோன்களும் அளிக்கப்பட்டதாக மேலே குறிப்பிடப்பட்ட டச்சு ஆவணம் மேலும் கூறுகிறது. ஜூன் 5 ஆம் தேதி சிவாஜி புனித கங்கை நீரில் குளித்தார்; அப்போது அங்கு வந்திருந்த ஒவ்வொரு பிராமணனுக்கும் 100 ஹோன்கள் தரப்பட்டன.”

காகபட்டுக்கு அளிக்கப்பட்ட தொகை ஒரு புரோகிதருக்கு நியாயமாக வழங்கப்பட வேண்டிய கட்டணத்துக்கு அதிகமான தொன்றுமில்லையா? காகபட்டுக்குப் போதிய அளவு பணம் தரப்படவில்லை என்பதைக் காட்டக்கூடிய ஒரு தகவல் இருக்கிறது. சிவாஜியின் அமைச்சர்கள் பெற்ற தொகையுடன் ஒப்பிடும்போது காகபட் பெற்ற தொகை மிகக் குறைவு என்பதுதான் அது.

ஆனால் இதுகுறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னர் மறுதரப்பு சம்பந்தப்பட்ட இரண்டு விஷயங்களை இங்கு குறிப்பிட்டாக வேண்டும். அவ்வாறு செய்தால் அவை இந்த வாதத்தை முற்றிலும் செல்லாக் காசாக்கிவிடும். முதலாவதாக சிவாஜிக்கு அவரது முடிசூட்டு விழாவின்போது அமைச்சர்கள் பெருந்தொகையை அன்பளிப்பாகத் தந்துள்ளனர். சிவாஜியின் பேஷ்வா அல்லது பிரதமர் மோரபந்த் பிங்ளே 7,000 ஹோன்களும், இதர இரு அமைச்சர்கள் தலா 5,000 ஹோன்களும் அன்பளிப்பாகத் தந்துள்ளனர். இவற்றைக் கழித்துவிட்டுப் பார்க்கும் போது அவர்களுக்கு சிவாஜி அளித்த பரிசுகள் வெளிக்குத் தெரிவதை விட மிகக் குறைவானவையே என்பது தெரியவரும்.

இரண்டாவதாக, சிவாஜியின் இந்த அமைச்சர்கள் அவரது முடிசூட்டு விழா விஷயத்தில் அவருடைய மிகப் பெரிய எதிராளிகளாக இருந்தனர் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். சிவாஜி ஒரு சூத்திரர் என்றும், முடிசூட்டு வைபவம் நடத்த அவருக்கு உரிமை இல்லை என்றும், அந்த உரிமை சத்திரியருக்கு மட்டுமே உண்டு என்றும் அவர்கள் உறுதியாக நம்பினர். எனவே அவர்களது வாயை அடைப்பதற்கும், நிரந்தரமாக அவர்களை தம் பக்கம் ஈர்ப்பதற்கும் சிவாஜி அவர்களுக்குப் பரிசாக பெறும் தொகை அளித்ததில் வியப்பேதும் இல்லை.

ஆதலால் சிவாஜி தம்முடைய அமைச்சர்களுக்கு அன்பளிப்பாக அளித்த தொகையை முடிசூட்டு விழாவை நடத்தித் தருவதற்கு காகபட்டுக்கு அளிக்கப்பட்ட தொகை நியாயமானதா என்பதை நிர்ணயிப்பதற்கு ஓர் அளவுகோலாகக் கொள்ள முடியாது. உண்மையில் காகபட் எத்தனையோ திருக்கு மறுக்குகளையும் புரட்டுகளையும் செய்திருக்கிறார். இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு பார்க்கும்போது அவருக்கு அளிக்கப்பட்ட தொகை நியாயமான கட்டணத்தை விட அதிகமானதே என்ற முடிவுக்கே யாரும் வரமுடியும். அவரை வசப்படுத்துவதற்கு அளிக்கப்பட்ட கைக்கூலியும் இதிலடங்கும்.

இந்த முடிசூட்டு விழா வெற்றிகரமாக நடைபெறுவதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் ஒரு காயஸ்தர்; அவர் பெயர் பாலாஜி அவாஜி; சிவாஜியின் அந்தரங்க செயலாளர். இவ்வகையில் பாலாஜி மேற்கொண்ட முதல் நடவடிக்கை காசியிலிருந்து காகபட்டை அழைத்து வருவதற்கு சிவாஜியின் அந்தஸ்து முதலிய விவரங்களுடன் மூன்று பிராமணர்களைத் தூதுவர்களாக அனுப்பியதாகும். (அவர்கள் (1)கேசவ் பட், (2)பாலச்சந்திர பட், (3)சோமநாத பட்.) இந்தச் சந்தர்ப்பத்தில் காகபட் என்ன செய்தார்? தம்முடைய அபிப்பிராயத்தில் சிவாஜி ஒரு சூத்திரர் என்றும், ஆதலால் முடிசூட்டிகொள்ள அவர் தகுதியற்றவர் என்றும், எனவே இந்த அழைப்பை தாம் ஏற்கமுடியாது என்றும் ஒரு கடிதம் எழுதி மூன்று தூதுவர்களையும் அவர் திருப்பி அனுப்பிவிட்டார்.

இந்நிலையில் பாலாஜி மேற்கொண்ட அடுத்த நடவடிக்கை சிவாஜி ஒரு சத்திரியர்தான் என்பதை நிலைநாட்டுவதற்கான ஆதாரங்களையும் சான்றுகளையும் திரட்டுவதில் ஈடுபட்டதாகும். இராசபுத்திரர்களும் மேவாரின் மன்னர்களுமான சிசோதியர்களின் வழித்தோன்றல்தான் சிவாஜி என்றுக் காட்டும் ஒரு குலவழிப்பட்டியலைப் பெறுவதில் அவ்வாற வெற்றியும் கண்டார். இந்த ஆதாரத்தை மற்றொரு தூதுவர் மூலம் (இந்தத் தூதுவர் பெயர் நீலோ யேசாஜி. இவர் ஒரு காயஸ்தர்.

காகபட்டை அழைத்து வருவதற்கு முதலில் அனுப்பி வைக்கப்பட்ட மூன்று பிராமணர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்ட கட்டணத்தை மீறி நயவஞ்சகமாக செயல்பட்டு, சிவாஜிக்கு துரோகம் செய்துவிட்டதாகவே தோன்றுகிறது; பிராமணர்கள் என்ற முறையில் சிவாஜி மீது அவர்களுக்கு இருந்த வெறுப்பே இதற்குக் காரணம். அவர்கள் கொண்டுவந்த கடிதத்தில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்பதை பாலாஜி புரிந்துக் கொண்டார்.

எனவேதான் இம்முறை தமது சொந்த சாதியைச் சேர்ந்த ஒரு காயஸ்தரை தூதுவராக பாலாஜி அனுப்பினார்) காகபட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்தச் சான்றைக் கண்டு காகபட் திருப்தியடைந்ததாகத் தோன்றிற்று. எனவே முடிசூட்டு விழாவை நடத்தித் தருவதற்கு ரைகாட் வருவதற்கு அவர் ஒப்புக்கொண்டார். அவ்வாறு ரைகாட் வந்ததும் காகபட் என்ன செய்தார்? பாலாஜி அனுப்பிய சான்றை தாம் மறுபரிசீலனை செய்ததாகவும், சிவாஜி ஒரு சூத்திரர்தான் என்ற முடிவுக்கு தாம் வந்திருப்பதாகவும், எனவே முடிசூட்டிக் கொள்ள சிவாஜிக்கு அருகதை இல்லை என்றும் ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

இந்த விவகாரத்தில் காகபட் அடித்த குட்டிக்கரணம் இது மட்டுமல்ல. அவர் மற்றொரு குட்டிக்கரணத்தையும் அடித்தார். அது விந்தையிலும் விந்தையானதாகும். பாலாஜி அவாஜிக்கு வேண்டுமானால் மகுடாபிஷேகம் செய்யத் தாம் தயாராக இருப்பதாகக் கூறினார். ஏனென்றால் அவர் ஒரு காயஸ்தர். ஆதலால் சத்திரியர். ஆனால் சிவாஜி அப்படியல்ல. அவர் ஒரு சூத்திரர் என்று விதண்டாவாதம் செய்தார். காகபட் இத்துடன் நிற்கவில்லை.

அவர் மீண்டும் ஒரு குட்டிக்கரணம் அடித்தார்; தில்லுமுல்லுகள் திருகுஜாலங்கள் செய்தார்; சிவாஜி ஒரு சத்திரியர்தான் என்று அபிப்பிராயம் தெரிவித்தார்; அவருடைய முடிசூட்டு வைபவத்தை நடத்தித் தருவதாகவும் கூறினார். அது மட்டுமல்ல, இன்னும் ஒருபடி மேலே சென்று, காகபட்டி என்ற பெயரில் ஓர் ஆய்வுரையையும் எழுதினார்; அதில் காயஸ்தர்களை சோரப்பிள்ளைகள் என்று திட்டித்தீர்த்தார்.

இந்த தகிடுதத்தங்கள் எல்லாம் எதைக் காட்டுகின்றன? சிவாஜியின் முடிசூட்டு விழாவை நடத்த காகபட் சம்மதமில்லாதவராகவே இருந்தார் என்பதையும், அவரது சம்மதத்தை பணம் கொடுத்து வாங்க வேண்டியிருந்தது என்பதையும் இது காட்டவில்லையா? இந்த வாதம் சரியானதென்றால் சிவாஜி ஒரு சத்திரியர் தான் என்று காகபட் செய்த முடிவு கைக்கூலி பெற்றுக்கொண்டு செய்த முடிவே என்பதில் ஐயமில்லை. (காகபட்டின் முன்னுக்குப்பின் முரணான செயல்பாடுகள் குறித்து நான் மேலே தந்துள்ள விவரங்கள் கே..எஸ்.தாக்கரேயின் கிராமணியாச்ச இதிகாசம் எனும் மராத்தி நூலை ஆதாரமாகக் கொண்டவையாகும். தாக்கரே தம் பங்குக்கு இவற்றை பகார்கள் அல்லது வரலாற்றுப் பதிவேடுகளிலிருந்து எடுத்தாண்டுள்ளார். இந்தத் தகவல்கள் எந்த அளவுக்கு நம்பகமானவை என்று கூறுவது கடினம். எனினும் காகபட்டின் பித்தலாட்டங்கள் உண்மை என்றே தோன்றுகிறது; ஏனென்றால் சில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளுக்கு சரியான விளக்கம் இல்லை. உதாரணமாக பின்கண்ட கேள்வியை எடுத்துக் கொள்ளுங்கள்: காகபட் ரைகாட் வந்து சேர்ந்ததும் மனம் மாறிவிட்டாரா, அவ்வாறு மாறிவிட்டார் என்றால் அது ஏன்? சிவாஜி தாம் ஒரு சத்திரியர் என்று உரிமை கொண்டாடுவதை மற்றொரு பிராமணரான சிவாஜியின் பிரதம அமைச்சர் மோரபந்த் பிங்ளேயே எதிர்ப்பது கண்டு காகபட் மனம் மாறியிருக்கக் கூடும். சிவாஜி முடிசூட்டிக் கொள்வதை ஆரம்பத்தில் கடுமையாக எதிர்த்த மோரபந்த் பின்னர் அவரது உறுதியான ஆதரவாளரானது ஏன்? பாலாஜிதான் மன்னராக வேண்டும் என காகபட் யோசனை கூறியதே மோரபந்தின் மனமாற்றத்துக்குக் காரணமாக இருக்கலாம். ஏனென்றால் பாலாஜி ஒரு காயஸ்தர், காயஸ்தர்களோ பிராமணர்களின் பரம விரோதிகள். எனவே சிவாஜியின் முடிசூட்டு இரண்டு தீமைகளில் குறைந்த தீமை என்று கருதி அதற்கு மோரபந்த் தமது சம்மதத்தை அளித்தார்.)

இறுதியாக இன்னொரு வகையிலும் சிவாஜி விஷயம் முக்கியமானதாகும். ஏனென்றால் சமுதாயப் படிநிலை சம்பந்தப்பட்டவரையில், முன்பே தீர்க்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மீண்டும் விவாதிக்கத் தேவையில்லை என்ற கோட்பாட்டுக்குத் தாங்கள் கட்டுப்பட்டிருப்பதை பிராமணர்கள் ஏற்பதில்லை என்பதை இது புலப்படுத்துகிறது. தங்களால் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட விஷயத்தை மீண்டும் கிளப்புவதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று அவர்கள் கருதுகிறார்கள். சரி போகட்டும், சிவாஜி ஒரு சத்திரியர் என்ற தங்களது முடிவை பிராமணர்கள் எவ்வளவு காலம் மதித்து நடந்து வந்தார்கள்?

சிவாஜி தாம் முடிசூட்டிக் கொண்ட நாளிலிருந்து அதாவது 1674 ஜூன் 6 ஆம் தேதியிலிருந்து ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார்; ராஜ்யாபிஷேக சகாப்தம் என அதனைக் குறிப்பிட்டார். இந்த சகாப்தம் எவ்வளவு காலம் நடப்பில் இருந்தது? சிவாஜியும் அவரது வழித்தோன்றல்களும் வலிமைமிக்க மன்னர்களாக இருந்தவரைதான் அது நீடித்தது. அதிகாரம் பிராமண பேஷ்வாக்களுக்கு மாறிய உடனேயே நிலைமை மாறிற்று. இந்த சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வரும்படி இந்தப் பேஷ்வாக்கள் கட்டளை பிறப்பித்தனர்.

(சர்தேசாய், மராத்தி ரியாசத், II, பக். 363 மற்றும் வைத்தியா, சிவாஜி, பக்.251) இந்த சகாப்தத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தியதோடு அவர்கள் நிற்கவில்லை; முஸ்லீம் பேரரசர்களின் பாணியை அதாவது பஸ்லி ஆண்டைப் பின்பற்றத் தொடங்கினர். அது மட்டுமல்ல, சிவாஜியின் வழித்தோன்றல்கள் சத்திரியர்கள்தானா என்ற பிரச்சினையைப் பிராமணர்கள் எழுப்பினர். (இந்த விவரங்கள் ராவ் பகதூர் டோங்ரே பதிப்பித்து வெளியிட்டுள்ள சித்தாந்த விஜயத்திலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.) சிவாஜியின் இரு புதல்வர்களான சாம்பாஜி, ராஜாராம் ஆகியவர்களுக்கு எதிராக அவர்கள் எதுவும் செய்ய முடியவில்லை; ஏனென்றால் சிவாஜி தனது ஆயுட்காலத்திலேயே பிராமணர்களைக் கொண்டு வேதசடங்குகளுடன் அவர்களது உபநயனத்தைச் செய்து முடித்துவிட்டார். சிவாஜியின் பேரன் சாஹூவுக்கு எதிராகவும் பிராமணர்களால் எதுவும் செய்ய இயலவில்லை;

ஏனென்றால் அப்போது அவர்கள் கையில் அதிகாரம் இல்லை. ஆனால் பின்னர் சாஹூ தனது அரசு அதிகாரங்களை பிராமண பேஷ்வாவுக்கு மாற்றிய உடனேயே அவர்களது எதிர்ப்பு மீண்டும் ஆரம்பமாகிவிட்டது. சாஹூவுக்கு பின்னர் அவனுடைய சுவீகாரபுத்திரனாக ராம்ஜி ராஜே ஆட்சிக்கு வந்தான்; ஆனால் அப்போது அவன் வயதுவராதவனாக இருந்ததால் பேஷ்வாக்கள் அவனுடைய பாதுகாவலர்களாக இருந்தனர். அவனுக்கு உபநயனம் செய்யப்பட்டதா, அவ்வாறு செய்யப்பட்டது என்றால் அது வேத சடங்குகளுடன் நடத்தப்பட்டதா என்பதற்குச் சான்று ஏதும் இல்லை. எனினும் அவனது வாரிசாக 1777ல் சுவீகாரம் செய்துகொள்ளப்பட்ட இரண்டாம் சாஹூவுக்கு பேஷ்வாக்களின் ஆணையின்பேரில் (டோங்ரே சித்தாந்த விஜயம், முன்னுரை பக்கம்.6) பௌராணிக சடங்குகளுடன் உபநயனம் செய்யப்பட்டது என்பதற்குச் சான்று உள்ளது.

இவ்வாறு இரண்டாம் சாஹூவுக்கு பௌராணிக சடங்குகளுடன் உபநயனம் செய்யப்பட்டதானது பேஷ்வாக்கள் அவனை ஒரு சூத்திரனாகக் கருதியதையே காட்டுகிறது. ஏனென்றால் சூத்திரன் விஷயத்தில்தான் பௌராணிக சடங்குகளுடன் சமயவினைமுறைகள் செய்யப்படுவது வழக்கம். இரண்டாம் சாஹூவுக்குப் பிறகு 1808ல் ஆட்சிக்கு வந்த மகாராஜா பிரதாபசின்ஹா விஷயத்தில் என்ன நடந்தது, அவருக்கு உபநயனம் செய்யப்பட்டதா, இல்லையா, அவ்வாறு உபநயனம் செய்யப்பட்டது என்றால் அது வேத சடங்குகளுடன் நடைபெற்றதா என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியவில்லை.

எனினும் ஒரு விஷயம் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது: அதாவது சுமார் 1827ல் கார்விர் சங்கராச்சாரியர் சங்கிலியைச் சேர்ந்த காயஸ்தர்களின் சமுதாயப் படிநிலை பற்றிய தமது தீர்ப்பில் (டோங்ரே, மேற்படி நூல், முன்னுரை, பக்கம். 9)கலியுகத்தில் சத்திரியர்கள் எவருமில்லை, தம்முடைய தப்தாரிலுள்ள ஆவணங்கள் சிவாஜியோ, சாம்பாஜியோ அல்லது சாஹூவோ சத்திரியர்கள் என்று காட்டவில்லை என்று குறிப்பிட்டார். இந்த வாசகம் மூலத் தீர்ப்பில் இல்லை என்றும், சங்லியின் பிராமண ராஜா அதனை இடைச்செறுகலாக சேர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இது எவ்வாறிருந்தபோதிலும் இது சிவாஜியின் வயித்தொன்றலான பிரதாபசின்ஹாவின் அந்தஸ்துக்கு விடப்பட்ட நேரடிச் சவாலாகும்.பிரதாபசின்ஹா 1830ல் சத்தாராவில் பிராமணர்களின் மாநாடு ஒன்றைக் கூட்டி இந்தப் பிரச்சினையை அதன் முன்வைத்தார். பெரும்பாலோர் அவனுக்குச் சாதகமான தீர்ப்பினை அளித்தனர்; பிரதாபசின்ஹா சூத்திரனின் நிலைக்குத் தள்ளப்படுவதிலிருந்து இத்தீர்ப்பு அவரைக் காப்பாற்றிற்று.

சிவாஜியின் ஒரு குடும்பக் கால்வழியை சூத்திரர்களின் நிலைக்குத் தள்ளுவதில் தோல்வியடைந்த பிராமணர்கள் கோலாப்பூரில் தன்னை நிலைநாட்டிக் கொண்ட சிவாஜியின் இரண்டாவது குடும்பக் கால்வழிக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர். கோலாப்பூரின் மன்னர்களில் ஒருவரான பாபாசாகேப் மகராஜ் என்பவரின் ஆட்சிக் காலத்தில் ரகுநாத் சாஸ்திரி பார்வதே என்ற அரண்மனை சமயகுரு அரண்மனையில் எல்லாச் சடங்குகளையும் பௌராணிக முறைப்படி செய்ய முற்பட்டார். இந்த நடைமுறையை மேற்கொண்டு தொடராதபடி அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாபாசாகேப் 1886ல் காலமானார்.

1886 மற்றும் 1894 வரை எல்லா மன்னர்களும் வயது வராதவர்களாக இருந்தனர்; இதனால் நிர்வாகம் பிரிட்டிஷார் கைகளில் இருந்தது. இந்த ஆண்டுகளில் அரண்மனை புரோகிதர் எத்தகைய சடங்குமுறைகளைக் கையாண்டார் என்பதற்கு நேரடியான சான்று ஏதும் இல்லை. காலங்சென்ற சாஹூ மகராஜ் எல்லாச் சமயச் சடங்குகளையும் வேத முறையில் நடத்தும்படி 1902ல் அரண்மனை புரோகிதருக்குக் கட்டளையிட்டார். ஆனால் புரோகிதர் அவ்வாறு செய்ய மறுத்தார்; பௌராணிக முறையில்தான் சகல சடங்குகளும் செய்யப்பட வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்; இதன் மூலம் கோலாப்பூர் மன்னர்கள் சூத்திரர்களேயன்றி சத்திரியர்கள் அல்ல என்பதை நிலைநாட்ட முயன்றனர்.

இந்த விவகாரத்தில் கார்வார் மடத்தின் சங்கராச்சாரியர் ஆற்றிய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இந்த சர்ச்சை நடைபெற்று வந்த சமயத்தில் குரு என்றழைக்கப்பட்ட மடத்தின் தலைவர் பிராமணல்கர் என்ற பெயர் கொண்ட ஒரு சீடரை சுவீகாரம் எடுத்துக்கொண்டார். ஆரம்பத்தில் குரு, சீடர் ஆகிய இருவருமே அரண்மனை புரோகிதருக்கு ஆதரவாகவும் மகாராஜாவுக்கு எதிராகவும் இருந்தனர். பின்னர் சீடர் மகாராஜாவின் பக்கம் மாறிச் சென்று, அவரது சத்திரிய அந்தஸ்தை ஏற்றுக்கொண்டார். புரோகிதருக்கு ஆதரவாக இருந்த குருவோ சீடரை சமயப்பிரஷ்டம் செய்துவிட்டார். பிற்காலத்தில் மகாராஜா தம்முடைய சொந்த சங்கராச்சாரியரை (அவருடைய பெயர் டாக்டர் குர்தகோட்டி) உருவாக்கிக் கொள்ள முயன்றார். ஆனால் அந்த நபரும் மகாராஜாவுக்குத் துரோகம் செய்துவிட்டார்.

சிவாஜி ஒரு சத்திரியர் என்று அங்கீகரிக்கப்பட்டார். இந்த அந்தஸ்தை அவருக்குத் தனிப்பட்ட முறையில் அளிக்கப்பட்ட ஒரு கௌரவமல்ல. அது அவரது குடும்பத்தினருக்கும் வழித்தோன்றல்களுக்கும் பொருந்தும். யாரும் அதனை ஆட்சேபிக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட வழித்தோன்றல் இதற்கு முரண்பட்ட முறையில் நடந்து கொண்டால்தான் அந்த அந்தஸ்து பறிபோகும். பொதுவாக இந்த அந்தஸ்து பறிபோகாது. சத்திரியரின் அந்தஸ்துக்கு முரணான எதையும் சிவாஜியின் வழித்தோன்றல்களில் எவரும் செய்யவில்லை. அப்படியிருந்தும் அவர்களது அந்தஸ்து குறித்த முடிவை மறுதலிப்பதில் பிராமணர்கள் மிகுந்த தீவிரம் காட்டினர்.

எந்த ஓர் இந்துவின் அந்தஸ்தையும் எச்சமயத்திலும் நிலை நாட்டவும் அல்லது ரத்துச் செய்யவும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என பிராமணர்கள் உரிமை கொண்டாடியதாலேயே இது சாத்தியமாயிற்று. அவர்கள் ஒரு சூத்திரனை சத்திரியனின் நிலைக்கு உயர்த்த முடியும், அதேபோன்று ஒரு சத்திரியனை சூத்திரனின் நிலைக்கு இறக்கவும் முடியும். இந்த விஷயத்தில் அவர்களுக்குள்ள அதிகாரம் எல்லையற்றது என்பதையும், அதனை எவரும் எதிர்க்க முடியாது என்பதையும் சிவாஜியின் விஷயம் மெய்ப்பிக்கிறது.

இவையாவும் பம்பாய் ராஜதானியில் மட்டுமே நடைபெற்ற நிகழ்ச்சிகள் என்பதில் ஐயமில்லை. (இவற்றில் ஒவ்வொரு நிகழ்ச்சி பற்றிய விவரங்களையும் 1919ல் வெளியான கே.எஸ்.தாக்கரேயின் கிராமணியச்ச இதிகாசம் என்னும் மராத்திப் பிரசுரத்தில் காண்க.) எனினும் இந்த நிகழ்சிகளுக்கு அடிப்படையாக அமைந்த கோட்பாடுகள் தெளிவாகவும் பொதுவான முறையிலும் செயல்படுத்தப்பட்டன.

அவை வருமாறு:

  • உபநயனம் செய்வதற்குப் பிராமணர்கள் பிரத்தியேக உரிமை பெற்றிருக்கிறார்கள். சிவாஜியோ, பிரதாப் சின்ஹாவோ, காயஸ்தர்களோ, பாஞ்சாலர்களோ, பாலஷேக்களோ பிராமணரல்லாத்தோரால் உபநயனம் நடத்தப்படுவதை விரும்பவில்லை. தங்கள் சமய சடங்குகள் அனைத்தையும் காயஸ்தர்களே செய்யவேண்டும் என்று ஒரு சமயம் காயஸ்தர்கள் தீர்மானித்தனர். ஆனால் இந்தத் தீர்மானம் வெறும் காகித அளவிலான தீர்மானமாக, எட்டுச் சுரைக்காயாகவே இருந்தது.
  • எவருடைய உபநயனத்தைத் தான் செய்ய முடியும், எவருடைய உபநயனத்தை தன்னால் செய்ய முடியாது என்று கூறும் உரிமை பிராமணனுக்கு இருந்தது. வேறுவிதமாகச் சொன்னால், ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் உபநயனம் செய்து கொள்ளும் உரிமை பெற்றிருக்கிறார்களா என்பதைத் தீர்மானிக்கும் ஏக நீதிபதியாக பிராமணன் இருந்து வந்தான் என்று கூறவேண்டும்.
  • உபநயனம் செய்வதற்கான பிராமணர்களின் ஆதரவு நியாயமான, நேர்மையான அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும் என்பதில்லை. பணம் கொடுத்து இந்த ஆதரவைப் பெற முடியும். இவ்வாறு பணம் தந்துதான் காகபட்டின் ஆதரவை சிவாஜி பெற்றார்.
  • பிராமணர்கள் உபநயனம் செய்ய மறுப்பதற்கு சட்ட அல்லது சமய ஆதாரங்கள் தேவையில்லை. முற்றிலும் அரசியல் காரணங்களின் அடிப்படையில் இவ்வாறு மறுப்பது சாத்தியமே. காயஸ்தர்களுக்கு உபநயனம் செய்துவைக்க பிராமணர்கள் மறுப்பதற்கு இந்த இரு தரப்பினரிடையே நிலவும் அரசியல் போட்டியே முற்றிலும் காரணமாகும்.
  • உபநயனம் செய்துவைக்க ஒரு பிராமணன் மறுத்தால் அதை எதிர்த்து வித்வத் – பரிஷத்துக்குத்தான் மேல் முறையீடு செய்ய முடியும்; இந்த வித்வத் – பரிஷத் என்பது பிராமணர்கள் மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அவையாகும்.

உபநயனம் செய்து வைப்பதற்கு மறுக்கும் அதிகாரம் பிராமணர்களுக்கு இருக்கிறது என்பது மேலே கண்ட விவரங்களிலிருந்து தெள்ளத் தெளிவாகும். அவர்களுக்குள்ள இந்த அதிகாரத்தையும் அவர்களது நோக்கங்களையும் கொண்டு பார்க்கும்போது, அந்த அதிகாரத்தை அவர்கள் சூத்திரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தினால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

 (பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 10)

Pin It