அழுத்தம் என்ற சொல்லைக் கேட்டவுடன் நம்மில் பலருக்கும் மன அழுத்தம் என்ற உளவியல் பிரச்சனையே நினைவிற்கு வரும். ஆனால் இயற்பியலின் கோட்பாட்டின்படி நாம் காணும் எல்லாப் பொருட்களும் உள்ள திட, திரவ அல்லது வாயு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் நிலைத்திருக்கின்றன. ஒன்றிலிருந்து மற்றொரு நிலைக்குப் பொருட்கள் மாற அழுத்தம் அவசியம். எடுத்துக்காட்டு: பனிக்கட்டி அழுத்தத்தால் திரவநிலைக்கு மாறுவது.

air pumpஒரு விசைக்கும் அது செயல்படும் பரப்பிற்கும் உள்ள விகிதமே அழுத்தம். ஒரே அளவு பாதங்களை உடைய பருமனான மற்றும் சாதாரண எடையுள்ள மனிதர்களை எடுத்துக் கொண்டால் பருமனானவரின் பாதங்களுக்கு அடியில் அதிக அழுத்தம் ஏற்படும். செயல்படும் பரப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும் எடை வேறுபடுவதால் இவ்வாறு நிகழ்கிறது.

அழுத்தத்தின் சில அலகுகள்: பவுண்ட் சதுர அங்குலம், கிலோகிராம் சதுர சென்டிமீட்டர், வளிமண்டல அழுத்தம், நியூட்டன் பர் சதுர மீட்டர், பாதரச அமைப்பின் உயரம். ஒரு கிலோ எடையுள்ள ஒரு பொருள் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பில் வைக்கப்பட்டால் அது உருவாக்கும் அழுத்தம் கிலோகிராம் சதுர சென்டிமீட்டர். வளிமண்டலத்தில் இருக்கும் வாயுக்கள் அழுத்தத்தை உருவாக்குகின்றன.

கடல் மட்டத்திலிருந்து மேலே செல்லும்போது வாயுக்களின் அழுத்தம் குறைகிறது. அடர்த்தி அதிகமான வாயுக்கள் பூமியின் வளிமண்டலத்தின் கீழ்ப்பகுதியிலும், அடர்த்தி குறைந்த வாயுக்கள் மேல் வளிமண்டலத்திலும் நிலைகொண்டிருக்கின்றன. நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனின் அடர்த்தியைக் காற்றில் இருக்கும் மற்ற வாயுக்களின் அடர்த்தியுடன் ஒப்பிட்டால் அதன் மதிப்பு அதிகம். இதனால் மலைப்பகுதிகளுக்குச் செல்லும்போது சுவாசிக்க முடியாமல் நாம் சிரமப்படுகிறோம்.

கடல் மட்டத்திற்கு மேலிருக்கும் வாயுக்கள் ஒரு சதுர சென்டிமீட்டர் பரப்பில் 1033 கிராம் விசையை உருவாக்குகின்றன. இது ஒரு வளிமண்டல அழுத்தம் எனப்படுகிறது. மனிதர்கள் சாதாரணமாக நிற்கும்போது எடைக்குத் தகுந்தாற்போல பாதங்களில் அழுத்தம் உருவாகிறது. இது வளிமண்டல அழுத்தத்தை விடச் சற்று அதிகம். இது நடக்கும், ஓடும் மனிதருக்கு இன்னும் அதிகம். இதனால் அழுத்தம் செயல்படும் நேரம் மிகக் குறைவாக இருக்கும்.

உடலமைப்பைப் பொறுத்து விலங்குகளின் பாதங்களிலிருந்து உருவாகும் அழுத்தம் வேறுபடுகிறது. ஒரு காண்டாமிருகத்தின் பாதங்களிலிருந்து மனிதனை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அழுத்தம் அதிகமாக இருக்கும். ஒரு யானையின் கால்தடம் உருவாக்கும் அழுத்தம் மனிதரை விட ஐந்து மடங்கு அதிகம். கால்தடங்களின் அழுத்த வேறுபாட்டைக் கொண்டு விலங்கின் வகை, அதன் எடை மற்றும் வயது போன்றவை கணிக்கப்படுகின்றன.

இருசக்கர வாகனம் அல்லது மகிழுந்தின் சக்கரங்களில் காற்றை நிரப்பும்போது 'பி எஸ் ஐ' (PSI) என்ற அலகால் அளக்கப்படுகிறது. 14 பி எஸ் ஐ என்பது ஒரு வளிமண்டல அழுத்தம் எனக் கருதப்படுகிறது. மகிழுந்தின் சக்கரத்தில் 2 வளிமண்டல அழுத்தத்தில் காற்று நிரப்பப்படுகிறது. 50 நபர்களைச் சுமந்து செல்லும் பேருந்திற்கு இது 5 முதல் 6 வளிமண்டல அழுத்தமாக இருக்கும்.

மிதிவண்டி சிறியதாக இருந்தாலும் அதில் இருக்கும் காற்றின் அளவு குறைவாக இருப்பதால், சக்கரத்தில் இருக்கும் அழுத்தம் மிதிவண்டியை நாம் மிதிக்கும் திறனிற்கு எதிர்விகிதத்தில் இருக்கிறது. இதனால் இதில் உள்ள அழுத்தம் மகிழுந்தில் இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகம். இதனால்தான் கை பம்ப்பைக் கொண்டு மிதிவண்டிக்குக் காற்று அடிப்பது மகிழுந்தை விடக் கடினம்.

ஒரு பொருளை அதிக அழுத்தத்தில் சமைக்கும்போது சமைக்கும் வேகம் அதிகமாகிறது. அன்றாடம் பயன்படுத்தப்படும் பிரஷர் குக்கரில் இருக்கும் அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தை விட 80 முதல் 100% அதிகம் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சமைக்கப்படும்போது உணவுப்பொருட்கள் வேகமாக வெந்துவிடுவதால் ஆற்றல் செலவு பாதியாகக் குறைகிறது.

வீட்டில் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்படுகின்றன. அதில் நீர் நிரப்பப்படுகிறது. தொட்டி இருக்கும் உயரத்தைப் பொறுத்து நீரைக் கொண்டு போகும் அழுத்தம் வேறுபடுகிறது. இதே அமைப்பில்தான் நம் உடலில் இருக்கும் இதயம் செயல்படுகிறது. இதயத்திலிருந்து இரத்தக் குழாய்கள் வழியாக இரத்தம் உடலின் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட வேண்டும். இதற்கு அழுத்தம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

மனித இதயம் அதிகபட்சமாக 120 மில்லிமீட்டர் பாதரசம் என்ற அழுத்தத்தில் இயங்குகிறது. ஒரு வளிமண்டல அழுத்தம் என்பது 760 மில்லிமீட்டர் பாதரசம். 120 மில்லிமீட்டர் என்பதை வளிமண்டல அழுத்தத்தில் 15% என்று கூறலாம். இதயத்திலிருந்து அரை மீட்டர் தூரம் உள்ள இடத்திற்குக்கூட மனித இதயத்தால் இரத்தத்தைச் செலுத்த முடியும்.

இதயத்திற்கும் அதன் உடற்பகுதிகளுக்கும் இடையில் தூரம் அதிகமாக உள்ள விலங்குகளுக்கு அவற்றின் இதயம் உருவாக்கும் அழுத்தம் அதிகமாக இருக்கும். ஒட்டகச்சிவிங்கியின் இரத்த அழுத்தம் வளிமண்டல அழுத்தத்தில் 40%. இதனால் இதயத்திலிருந்து 3 மீட்டர் தூரத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் அதன் உடலமைப்பு உள்ளது.

பொருட்கள் திரவநிலையில் இருப்பதை விட வாயுநிலையில் வைக்க அதிக கொள்ளளவு தேவை. இதனாலேயே வாயுக்களின் அழுத்தத்தை அதிகரிக்கும்போது பொருட்கள் வாயு நிலையிலிருந்து திரவநிலைக்கு மாறுகின்றன. நம் வீட்டில் பயன்படுத்தும் சமையல் எரிவாயுவில் இது நிகழ்கிறது. இதற்காக 5 முதல் 6 வளிமண்டல அழுத்தத்தில் வாயு நிரப்பப்படுகிறது. இதனால் முழுவதும் நிரம்பிய சமையல் எரிவாயு உருளையில் எரிவாயு திரவநிலையில் இருப்பதை நாம் உணர்கிறோம்.

தொடர்வண்டியில் பயணம் செய்யும்போது வண்டி சுரங்கத்திற்குள் செல்ல நேரிட்டால் அதன் வேகம் குறைவதைக் கவனிக்கலாம். ஒரு மூடிய சுரங்கத்திற்குள் வண்டி செல்லும்போது அதன் வேகத்திற்கு ஏற்ப அதைச் சுற்றியிருக்கும் காற்றின் அழுத்தம் அதிகரிக்கும். இது தொடர்வண்டியின் பாகங்களை அழுத்த முயற்சி செய்கிறது. வேகம் அதிகரிக்கும்போது தொடர்வண்டியின் பாகங்கள் மீது ஏற்படும் அழுத்தமும் அதிகரிக்கிறது. இது விபத்திற்கும் காரணமாக அமையலாம். இதனால் இதைக் கட்டுக்குள் வைக்க வேகம் குறைக்கப்படுகிறது.

சமையலறையில் சமையலின்போது உண்டாகும் வாயுக்களை வெளியில் கொண்டு செல்ல அழுத்த வேறுபாடு பயன்படுகிறது. சுழலும் வெளியேற்றக் காற்றாடி அறையின் உள்ளேயும் வெளியிலும் ஒரு அழுத்த வேறுபாட்டை உருவாக்குகிறது. இது வளிமண்டல அழுத்தத்தில் ஒரு சதவீதத்திற்கும் குறைவு. இதனால் சமையலின்போது உருவாகும் வாயுக்கள் சுலபமாக வெளியேற்றப்படுகின்றன. இதற்குப் பதிலாகக் கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் இருக்கும் வளிமண்டலக் காற்று சமையலறைக்குள் நுழைகிறது.

அன்றாட வாழ்வில் பல தொழில்நுட்பங்கள் அழுத்தத்தின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.