மலர்விழி: அப்பப்பா… என்ன விலை விற்கின்றன இந்தப்பழங்கள்! வாங்கவே முடியவில்லை.
விக்கிரமன்: பழங்களால் நமக்கு என்ன நன்மைகள்? சர்க்கரைதான் அதிகமாகும்.
வீரப்பிரதாபன்: நமது உடலில் எண்பது சதவீதம் நீர் உள்ளது. பழங்களிலும் எண்பது சதவீதம் நீர்ச்சத்து உள்ளது. பொதுவாக நாம் உண்ணும் உணவில் நீர்ச்சத்து அதிகம் இருப்பது நல்லது. மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய அதிகம் உதவுவது பழங்கள். அவை நமது மூளைக்கு நேர்மறை அதிர்வுகளைத் தருகின்றன. நல்ல பழங்களைத் தினமும் சாப்பிட்டால் நினைவாற்றல் நிலைக்கும். நார்ச்சத்து, நீர்ச்சத்து, வைட்டமின்கள் ஆகியன நிரம்பியவை பழங்கள். நமது திசுக்களை அழித்துவிடாமல் பாதுகாக்கும் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் (Phytochemicals) என்ற வேதிமங்கள் நிரம்பியவை. இதனால் பழங்களைச் சாப்பிடுவதால் நோய் வராமல் தடுக்க முடியும். புற்றுநோய், இருதயநோய், மாரடைப்பு, மறதி, கண்புரை மற்றும் முதுமையில் வரக்கூடிய பல பிரச்சினைகளைத் தடுக்க முடியும். மனஅழுத்த பாதிப்புகளைத் தடுக்கலாம்.
மலர்விழி: ஆனால் என்ன? திரும்பத் திரும்ப ஒரே விதமான பழங்கள்தானே? ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, கொய்யா, பப்பாளி…. யானை விலை, குதிரை விலை!
விக்கிரமன்: பழங்களில் என்ன பெரிய புதுமைகள் வேண்டும் என்கிறாய்?
வீரப்பிரதாபன்: தற்போது வித்தியாசமான சில பழங்களைக் காண முடிகிறது. அவை புதுமையானவை; அயல்நாட்டவை; சில நம் நாட்டவை; அதிகம் நமக்கு பழக்கமில்லாதவை.
மலர்விழி: அவற்றின் சுவை எப்படி? உண்டால் விளைவுகள் என்ன? தோற்றம் விசித்திரமாக உள்ளதே, விலையும் அதிகமாக உள்ளதே! அதனால் அவற்றை வாங்குவதில்லை.
வீரப்பிரதாபன்: நம் நாட்டுப் பழங்களில் வில்வம்பழத்தை அறியமாட்டீர்களா? வில்வ மரத்தில் கனிகளே மிக அதிக பயன் தருபவை. மருத்துவக் குணங்கள் மிகுந்தவை. நூறு கிராம் பழச்சதையில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தயாமின், ரிபோஃபிளேவின், நியாசின், ஆக்சாலிக் அமிலம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகியன உள்ளன. முதிர்ந்த வில்வம்பழம் நல்ல மலமிளக்கி. முதிராத கனிகள் செரிமானத்தைத் தூண்டும்; மலங்கட்டும். நல்ல மணமும் இனிப்புச்சுவையும் கொண்ட வில்வம்பழம் உடலுக்குக் குளிர்ச்சியூட்டும்; வலுவேற்றும்; வயிற்றுப் பிரச்சினையைத் தீர்க்கும். மார்மெலோசின் (Marmelosin) என்ற வேதிப்பொருள் அப்பழத்தில் உள்ளது.
விக்கிரமன்: பழங்களில் மூலிகைப் பழம் என்று ஏதும் உள்ளதா?
வீரப்பிரதாபன்: உள்ளது. பர்மாவில் 'நோனா', கேமன் தீவுகளில் 'பாக் ஆப்பிள்', ஆஸ்திரேலியாவில் 'சீஸ் ஃபுரூட்', ஹவாயில் 'நோனி', இந்திய மேற்குத் தொடர்ச்சி மலையில் 'நுணா' அல்லது 'இந்தியன் மல்பெரி' என அழைக்கப்படுகிறது. ஆம், நுணா அதாவது 'நோனி' ஒரு பழமர வகையைச் சேர்ந்தது. இந்தியாவிலும் சில வெளிநாட்டுத் தீவுகளிலும் நன்கு வளர்கிறது. வெளிர் மஞ்சள், கிளிப்பச்சை, அரக்கு நிறப் புள்ளிகள் உள்ள இப்பழம் விதைகள் மிகுந்தது. மிகப்பெரிய பச்சை இலை, மிகச்சிறிய அழகான வெள்ளைப் பூக்கள் உடையது. இம்மரம் இருபதடி உயரம் வரை வளரும். ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் இப்பழம் விவரிக்கப்பட்டுள்ளது. கோயில்களில் துளசி, வில்வம், அரசமரம் போன்றவை தலமரங்களாக இருப்பது போல, இந்த நுணாவும் சில கோயில்களில் தலமரமாக உள்ளது. இதன் தாவரவியல் பெயர் மொரிந்தா சிட்ரிஃபோலியா (Morinda citrifolia) அல்லது மொரஸ் இண்டிகஸ். பழைய ஆயுர்வேத இலக்கியங்களில் இது 'அஷீகா' என்றும் 'ஆச்' என்றும் அழைக்கப்படுகிறது. இலை, வேர், பட்டை, காய், பழம் அனைத்தும் மருத்துவக் குணங்கள் உடையவை. கார்ப்புச்சுவை, வெப்பத்தன்மை கொண்டது. எல்லா இடங்களிலும் தானாகவே முளைத்து வரும் நுணாச்செடியின் ஒரு வகைதான் வெண்நுணா எனப்படும் நோனிச் செடி. அந்தச் செடியின் பழங்களில் இருந்து கிடைக்கும் விதைகளில் இருந்து கன்றுகள் உற்பத்தி செய்து நட்டு வளர்க்க வேண்டும். நூறு விதைகள் நட்டால் பத்துதான் முளைக்கும். எழுபது நாட்கள் ஆகும்; முளைப்புத்திறன் குறைவு. ஆனால் அனைத்து வகை மண்ணிலும் வளரும்.
மலர்விழி: நுணா எப்படி மருத்துவக் குணம் கொண்டது?
வீரப்பிரதாபன்: நாம் உண்ணும் உணவில் புரதம் செரிக்கப்பட்டு உடலின் வடிவம், அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் உடல் ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகள் முறையாக நடைபெறும். இந்தப் புரதச் சத்துக்கள் வீணாகாமல் செரிக்க 'செரோனைன்' (Xeronine) என்ற ஆல்கலாய்டு குறிப்பிட்ட அளவு தேவை. இந்த நுணாப்பழத்தில் உள்ள 'ப்ரோசெரோனைனும்' நம் உடலில் உள்ள 'ப்ரோசெரோனேஸ்' நொதியும் இணைந்து, அந்தப் புரதச் செரிமானச் செரோனைன் என்ற ஆல்கலாய்டை உருவாக்குகின்றன. இதுதான் இயற்கையின் அறிவியல் அதிசயம்! இப்பழத்தில் உள்ள இயற்கையான வைட்டமின், தாது உப்புகள் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியைக் கூட்டி, 'ஃப்ரீ ரேடிகல்ஸ்' எனும் கட்டுப்பாடற்ற மூலக்கூறுகளைக் கட்டுப்படுத்தும். பலருக்கு உடல் எடை தொடர்ந்து அதிகரிக்கும் பிரச்சினை உள்ளது. அதிக நேரம் நின்றால், நடந்தால் கால்வலி, மூட்டுவலி, இடுப்புவலி, முதுகுவலி வருகின்றன. இவற்றுக்குத் தொடர்ந்து பல மாத்திரைகளை எடுப்பர். அவை பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். வீக்கங்கள் மற்றும் வலிகளின் தன்மைகளைக் குறைப்பது அல்லது அதிகரிப்பது காக்ஸ்-1 (COX-1) மற்றும் காக்ஸ்-2 (COX-2) எனும் என்சைம்கள். காக்ஸ்-1 உடலில் காயம், நோய், வீக்கம் ஆகியன இருக்கும்போது வயிறு மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றைக் காக்கும் புரோஸ்டாகிளாண்டின்களை உருவாக்கும்; வலியைக் குறைக்கும்.
காக்ஸ்-2 என்சைம் அதிகரித்தால் வலி அதிகரிக்கும். பெரும்பாலும் ஸ்டீராய்டு மருந்துகளை வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கப் பயன்படுத்தும்போது இரண்டு என்சைம்களையும் குறைத்துவிடும். ஆனால் நுணாப்பழம், காக்ஸ்-1 என்ற நல்ல என்சைமைக் குறைக்காமல் இயற்கை முறையில் காக்ஸ்-2 என்சைமை மட்டும் அடக்கிக் கட்டுப்படுத்தி, அதன் விளைவுகளைக் குறைத்து, வலையைக் குறைத்து இயற்கை நிவாரணம் தருகிறது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரின் கணையச் செயல்பாடு நலிவடைந்திருக்கும். நுணாப்பழம் பீட்டா செல்களைப் புதுப்பித்து, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துத் தூண்டிவிடும்.
தோல்திசுக்களில் ஏற்படும் சுருக்கம், சிதைவுகள், விரிசல்களைச் சீர்செய்ய உடலில் 'கொலாஜென்' அதிகரிக்க வேண்டும். இப்பழம் அதையும் சரிசெய்கிறது. இதில் 'ஸ்கோபோலெடின்' எனும் நொதி இருப்பதால் ரத்தநாளங்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் இயல்பாகிவிடும். அது செரடோனின் மற்றும் நைட்ரிக் ஆக்சைடை அதிகரித்து ரத்தநாளங்களைச் சீர்படுத்துகிறது. பழச்சாறு கலந்து புண், கட்டிகளைக் குணப்படுத்த தைலம் தயாரிக்கலாம். மூளைத்திசுக்களைச் சிறப்பாகச் செயல்பட வைக்கும் உற்சாகமூட்டும் பழம். HDL என்ற நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். புற்றுநோய் காரணிகளைக் கட்டுப்படுத்துவதில் பங்காற்றுகிறது. நைட்ரிக் ஆக்சைடு, இன்டர்லூகின்கள், இன்டர்ஃபெரான்கள், லிப்போபாலிசாக்கரைடுகள் ஆகிய இயற்கை மூலக்கூறுகள் புற்றுநோய்க் கட்டிகளை மட்டும் அழிக்கும். அனைத்து நோய்களுக்கும் 'நோ' என்று கூறும் அதிசய பழம் நோனி எனும் நுணாவைப் பற்றி ஒரு சித்தர் பாடல் உள்ளது:
"பட்டைகரப் பானொருபா ரச்சிலேச் சுமகரம்
ஒட்டிநின்ற புண்கிரந்தி ஓட்டுங்காண் - மட்டவரை
ஏந்து நுணாவின் இலைமந்தம் தீர்த்துநல்ல
காந்தி தருமே கமடுங்காண்."
மலர்விழி: சிறப்பு! பழ ஆராய்ச்சிகள் பற்றி குறிப்பிடும்படியாக ஏதும்...?
வீரப்பிரதாபன்: அமெரிக்க தாவரவியல் பேராசிரியர் சாம் வான் அகேன் (Sam Van Aken) தனது பண்ணைத் தோட்டத்தில் வளர்த்த பலவித மரங்களில், குறிப்பிட்ட ஒரு மரத்தில் மட்டும் பல்வேறு விதமான பழங்களைக் காய்க்கும்படி செய்ய, ஏழு ஆண்டுகள் தீவிரமாக மரபியல் ஆய்வுகள் செய்தார். வெவ்வேறு விதமான மரங்களின் தண்டுகளை இணைத்து வளர்த்து ஆராய்ந்தார். அந்த மரத்தில் செர்ரி, பீச், பிளம்ஸ், நெக்டரைன் என நாற்பது வகை பழங்கள் காய்த்துத் தொங்கின.
தென்மேற்கு சீனாவைத் தாயகமாகக் கொண்ட 'மோங்க்' (Monk fruit) பழங்களை நம் நாட்டு ஹிமாசலப் பிரதேச பாலம்பூர் மாவட்டத்தில் விளையவைத்து இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்தனர். மோங்க் பழக் கொடிகள் மலைக் காடுகளில் படர்ந்து வளரும் தன்மை உடையவை. விதைத்தபின் எட்டு மாதங்களில் கனிதரும். இந்தியாவின் தட்பவெப்பம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாறக்கூடியது. அதனால் அந்த மோங்க் பழங்களை இங்கு விளையவைப்பது பெரிய சவால். IHBT எனும் ஹிமாலய உயிர்வளத் தொழில்நுட்பத்திற்கான இந்திய நிறுவனம் (CSIR-IHBT - Institute of Himalayan Bioresource Technology) அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுவுடன் (CSIR) இணைந்து ஆய்வுக்கூடத்தில் ஆய்வுகள் செய்து அப்பழங்களை விளையவைக்கும் முயற்சிகளில் வெற்றிபெற்றது.
மோங்க் பழங்கள் சர்க்கரையைப்போல முப்பது மடங்கு இனிப்புச்சுவை உடையவை. இதிலிருந்து எடுக்கும் சாறும் இதன் பொடியும் 300 மடங்கு இனிப்புச் சுவை உடையவை. ஆனால் இவற்றில் கலோரிகள், மாவுச்சத்து, சோடியம், கொழுப்பு போன்றவை சிறிதும் இல்லை. இதைச் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுவதில்லை. இயற்கையான 'சுகர் ஃபிரீ' பழங்கள் இவை. உடல் பருமன் ஆகாமல் தடுக்கப்படுகிறது. ஒவ்வாமை எதிர்மருந்தாகவும் இது பயன்படுகிறது. பக்கவிளைவுகள் அற்றது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்கவும் புதிய நோயாளிகள் உருவாவதைத் தடுக்கவும் இந்த மோங்க் பழங்களை அதிகளவில் உற்பத்தி செய்வது அவசியம். உலகளவில் இவை தற்போது குறைவாக உற்பத்தியாவதால் அதிக விலை. 'உற்பத்தி குறைந்தால், தேவை அதிகமானால் விலை உயரும்' என்பது பொருளியல் விதி அல்லவா? ஆய்வு நிறுவனப் பண்ணையில் சோதனை முறையில் உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றதால், விரைவில் மோங்க் பழச்சாறு இந்திய சந்தையில் கிடைக்கும். இனிப்பான பழச்சாறு, ஆனால் சர்க்கரைப் பிரச்சினை இல்லை; யாருமே பருகலாம். உயர்ந்த தொழில்நுட்பங்களும், ஆர்வமுள்ள விவசாயிகளும், அறிவியல் நுணுக்கங்களும் போதிய அளவில் இல்லாததால் பிற நாடுகள் இதை வணிகரீதியாக இன்னும் கவனிக்கவில்லை. இப்போது கிடைக்கும் மோங்க் பழங்கள் இயற்கை இனிப்புக்கான தேவையை குறைவாகவே பூர்த்தி செய்கின்றன. உலகளவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் இவற்றின் தேவையும் அதிகரிக்கும்.
விக்கிரமன்: ஏதேது, 'தாட்பூட்' என்று தடபுடலாகப் புகழ்பெற்றுவிடும் போல இருக்கிறதே!
வீரப்பிரதாபன்: 'தாட்பூட்' என்ற பெயரில் அழைக்கப்படும் மருத்துவக் குணம்பாய்ந்த ஒரு வகை பழம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதோடு, சர்க்கரை நோய்க்கும் நிவாரணியாகச் செயல்படுகிறது. இது பொதுவான செல்லப்பெயர். பாசிப்ளோரேசியே (Passifloraceae) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த இந்த 'பேஷன் ஃபுரூட்'டைப் (Passion Fruit) பார்த்தவுடன் ஆசையுடன் சாப்பிடத் தோன்றுவதால், 'ஆசை' என்று ஆங்கிலத்தில் பொருள்தரும் 'பேஷன்' எனப்பட்டது. இந்தத் தாவரக் குடும்பத்தில் 400 வகைகள் உலகில் இருப்பினும், நீலகிரி மலைப்பகுதிகளில் 5 வகைகள் தாம் உள்ளன. இவற்றில் பழுக்கும் பழங்கள் வெளிர் நீல நிறத்திலும், தங்க மஞ்சள் நிறத்திலுமாக இரு நிறங்களில் காணப்படும். பெரும்பாலும் காட்டுப்பகுதிகளில்தான் இப்பழங்கள் கிடைக்கும். கருங்குரங்குகள் விரும்பி உண்ணும் பழம் இது. தற்போது அவற்றுக்குத் தேவைப்படும் உணவுப் பற்றாக்குறையால் அந்த இனம் அழிவின் விளிம்பில் உள்ளது.
அமெரிக்காவில் வெப்பமண்டலப் பகுதிகளிலும், பிரேசில் அமேசான் காடுகளிலும், பராகுவேயிலும் பேஷன் பழங்கள் விளைகின்றன. இலங்கை, ஆஸ்திரேலியா, கென்யா போன்ற நாடுகளிலும் கிடைக்கின்றன. வைட்டமின்கள் அனைத்தும் இப்பழங்களில் உள்ளன. அப்படியே சாப்பிடலாம்; சாறாகவும் பருகலாம். மலைக்காடுகளில் ஊறுகாய், ஜாம், துவையல் என உண்கின்றனர். நீர்ச்சத்தும் சிறிதளவு புரதமும் உள்ளன.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள் கொண்ட மற்றொரு நல்ல பழம் 'டிராகன் ஃபுரூட்' (Dragon Fruit). புற்றுநோய் வருவதைத் தடுக்கும் இப்பழம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் குறைக்கிறது. வைட்டமின் சி மற்றும் பி1, பி2 ஆகியன அதிகளவில் உள்ளன. வைட்டமின் பி3 கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது; கண்பார்வையை மேம்படுத்துகிறது. பாஸ்பரஸ், கால்சியம் அளவு கூடுதலாக உள்ளதால் எலும்புகளை வலிமையாக்குகிறது. உடலில் புதிய திசுக்கள் உருவாக்கம் ஏற்பட உதவுகிறது; ஆரோக்கியமான பற்களுக்கு உதவுகிறது. நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களின் ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதில் பயன்படுகிறது. ஆப்பிரிக்கக் காட்டுப்பகுதியில் வளரும் காட்டுமரப் பழம் எனினும், வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவை ஒருவித வேதிப்பொருளை சிவப்புப் பிசினாக வெளிப்படுத்துகின்றன. பார்ப்பதற்குச் சீனாவின் புராண விலங்கான டிராகனின் ரத்தம் போன்று இருப்பதாகக் கருதி, இம்மரத்தை டிராகன் மரம் என்றும் பழத்தை டிராகன் பழம் என்றும் அழைத்தனர். பல மருத்துவக் குணம் கொண்ட இம்மரம் வேறு பல தேவைகளுக்காக வெட்டப்படுகிறது. நிறப்பூச்சுகள் செய்யவும் இம்மரம் பயன்படுகிறது.
மலர்விழி: வாழ்நாளில் ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய வித்தியாசமான பழம், சிறந்த பழம், அதிகம் அறியாத பழம் என்று ஏதும் உள்ளதா?
வீரப்பிரதாபன்: அப்படிப்பட்ட பழங்களில் ஒன்று 'காகாப்பழம்' அல்லது 'காகிப்பழம்' எனப்படும் பெர்சிமன் (Persimmon). இதன் தமிழ்ப் பெயர் 'சீமைப் பனிச்சை'. அரபியில் 'காகா' என்றும் பிற மொழிகளில் 'காகி' என்றும் கூறப்படும் இதன் தாவரவியல் பெயர் டயோஸ்பைரோஸ் காகி (Diospyros kaki). ஜப்பானின் தேசியப் பழம் இது. நன்கு பழுத்த பழம் பார்ப்பதற்குத் தக்காளிப் பழம் போல்தான் இருக்கும்; ஆனால் விலை மிக அதிகம். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள், ஃபைட்டோ நியூட்ரியன்ட்டுகள் ஆகியன அதிகம் உள்ளன. எல்லா நாடுகளிலும் புகழ்பெற்றது. பெரும்பாலும் விதை இருக்காது. இதில் பல ரகங்கள் உள்ளன. பொதுவாகக் கடைகளில் இரண்டு வகைகளைக் காண முடிகிறது. 'ஹச்சியா' (Hachiya) என்ற ஒரு வகையில் கசப்பு உள்ளது. நன்கு பழுப்பதற்கு முன் சாப்பிட்டால் கசப்பாக இருப்பினும், பழுத்தவுடன் உண்டால் கசப்பு மறைந்து நல்ல சுவையாகிவிடும். வித்தியாசமான, அற்புதமான சுவை. தோல் மிக மென்மையாக இருக்கும். 'ஃபூயூ' (Fuyu) என்ற மற்ற ரகத்தில் கசப்பு இல்லை. முழுமையாகப் பழுக்கும் முன்பும் உண்ணலாம்; இனிமையாக இருக்கும். இதன் தோல் சற்று கடினமாக இருக்கும். இதுவும் தக்காளி போல் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். பூர்வீகம் சீனா எனினும் ஜப்பானில் அறிமுகமாகி, பின் அதன் தேசியப் பழமாகிவிட்டது. அங்கு புத்தாண்டு இப்பழத்துடன் கொண்டாடப்படுகிறது.
1800-களில் கலிபோர்னியாவில் பயிரிடப்பட்டு அமெரிக்காவின் முதல் வணிகரீதியான பழம் எனப்பட்டது. காகாப்பழம் இஸ்ரேலின் ஷேரோன் பள்ளத்தாக்கில் பயிரிடப்படுவதால் இதன் பெயர் அங்கு 'ஷேரோன் பழம்' எனப்படுகிறது. இந்தியாவில் காஷ்மீர், வங்காளம், தமிழகத்தில் குன்னூர் என சில இடங்களில் பயிரிடப்படுகிறது. அதிகம் விற்பனைக்கு வருவதில்லை. ஆரம்பத்தில் கசப்பான ஹச்சியா வகை பயிரிடப்பட்டது. தற்போது ஃபூயூ வகை அதிகம் விளைந்து விற்பனைக்கு வருகிறது. വൈட்டமின் ஏ, மாங்கனீசு, ஆன்டி-ஆக்சிடன்ட்கள், எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி தொகுப்பு, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை உள்ளன. ஃபீனால்கள், எபிகேட்டசின், கியூமாரிக் அமிலங்கள் ஆகியன உள்ளன. ஆப்பிளை விட அதிகமாக சில சத்துக்கள் இதில் உள்ளன. இதன் முழுமையான சிறப்புகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. கட்டிகள் உருவாவதைத் தடுக்கும் சக்தி உள்ளதாகச் சமீபத்திய ஆய்வு கூறுகிறது. இதில் உள்ள டானின் ரத்தம் உறைவதைத் தூண்டி, ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும், ரத்தக் கொழுப்பைக் குறைக்கவும் உதவும். தசைகளுக்கும் கல்லீரலின் நல்ல செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
மலர்விழி: வேறு ஏதும் விசித்திரமான, வினோதமான பழம்…?
வீரப்பிரதாபன்: ஐவிரலிப் பழம் (Star fruit) ஆக்ஸாலிடேசியே (Oxalidaceae) குடும்பத்தைச் சேர்ந்தது. குறுக்குவெட்டாகச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிப் பார்த்தால் நட்சத்திர வடிவம் போல் காணப்படுவதால், இதனை 'நட்சத்திரப் பழம்' என்பர். சமஸ்கிருதத்தில் இப்பழம் 'கேரம்போலா' - பசியைத் தூண்டுவது என்ற பொருளில் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு ஐந்து விரல்கள் போல் தோற்றம் தருவதால் 'ஐவிரலி' எனவும் கூறப்படுகிறது. பிறப்பிடம் ஆசியா என்று கூறப்பட்டாலும், இப்போது உலகம் முழுதும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது; விரும்பி உண்ணப்படுகிறது. சீனா, தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் ஐவிரலிப் பழத்தை அதிகமாக உற்பத்தி செய்து உண்கின்றனர். இந்தியாவில் கர்நாடகம், அஸ்ஸாம், வங்காளத்தில் பரவலாகப் பயிரிடுகின்றனர். இயற்கையிலேயே ஐவிரலிப் பழத்தில் நோய் எதிர்ப்புத் தன்மை கொண்ட சத்துக்களான வைட்டமின் சி, ஆந்தோசயனின், கேட்டசின், எபிகேட்டசின், கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகியன அதிகளவில் உள்ளன. சோடியம், பொட்டாசியம், தயாமின், வைட்டமின் பி தொகுப்புகள், அமினோ அமிலங்கள் உள்ளன.
பெரும்பாலும் அப்படியே சாப்பிடுவது குறைவு. பழக்கூழ், ஜாம், ஜெல்லி, பழரசம் என்று உண்பதே அதிகம். சவ்வூடேற்றம் மூலம் இனிப்பு மற்றும் கார உலர் பழத் துண்டுகளாகத் திராட்சை போல தயார் செய்து அதிகம் உண்ணப்படுகிறது. வங்காளியில் 'கம்ரங்கா', அஸ்ஸாமில் 'கொர்டோய்', மராத்தியில் 'கேரம்பால்', தெலுங்கில் 'அம்பனம்காய்', இந்தியில் 'கம்ராக்' என்றும், தமிழில் 'ஐவிரலி' மற்றும் 'தம்பரத்தம்' என்றும் அழைக்கப்படும் இப்பழம், மலாய் மொழியில் 'பிலிம்பிங்' என்றும் 'சரனேட்' என்றும், வியட்நாமில் 'கீ' என்று ஓரெழுத்திலும், தாய்லாந்தில் 'மடுன்' எனவும் கூறப்படுகிறது. இந்தியாவில் இப்பழத்தை முழுப் பழமாக அதிகம் உண்கின்றனர். சீனர்கள் இப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கிச் சமைத்த மீனுடன் சேர்த்து உண்பர். மலேசியாவில் இதை ஆப்பிள், ஏலக்காய், சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுகின்றனர். தைவானில் சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு அல்லது சர்க்கரைத் தண்ணீரில் சேர்த்துப் பாட்டில்களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். குயின்ஸ்லாந்து நாட்டில் குறுக்குவெட்டாக நறுக்கித் தேன் சேர்த்து ஊறவைத்து அடைத்து ஏற்றுமதி செய்வர். ஜாவாவில் பழங்களோடு இதன் பூக்களையும் உணவில் புளிப்புச் சுவைக்காகப் பயன்படுத்துகின்றனர்.
பழத்தின் தோலில் எழுபது சதவீதம் ஆன்டி-ஆக்சிடன்ட் உள்ளதால் தோலை வீணாக்குவதில்லை. உடலுக்குத் தேவையான வைட்டமின் சி-யில் பாதிக்கு மேல் இப்பழத்தில் கிடைக்கும். பல் ஈறுகளின் ரத்தக் கசிவைத் தடுக்கவும், வைரஸ் போன்றவற்றின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. கெட்ட கொழுப்புச்த்தைக் குறைத்து நல்ல கொழுப்பைச் சமன்படுத்துகிறது. உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலைச் சுத்தமாக வைக்கிறது. புற்றுநோய் உண்டாக்கும் நச்சுப்பொருள் உடலில் நுழைந்தால் அதை அழித்து மலத்தில் வெளியேற்றுகிறது. இதயத் துடிப்பைச் சீராக வைத்து, ரத்த சோகையிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. பி வைட்டமின் தொகுப்பு நிறைய உள்ளதால் உடலில் உயிர் ஊக்கிகளாகச் செயல்பட்டு, புரதம், மாவு, கொழுப்புச் சத்துகளை முழுதும் செரிக்க உதவுகிறது. இந்திய மருத்துவத்தில் இப்பழம் அதிக ரத்தப்போக்கை நிறுத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. உலர்ந்த ஐவிரலிப் பழம் காய்ச்சலைக் குறைக்க, அதன் பாதிப்பிலிருந்து விடுபடப் பயன்பட்டது. உடல் வெப்பத்தைக் குறைக்கும் மருந்தில் பயன்பட்டுள்ளது. மதுபானத்தால் வரும் தலைவலியை நீக்க, உணவு நன்கு செரிக்க, கண் எரிச்சல் குறைய இப்பழம் பயன்படுகிறது. இதன் பழரசம் வயிற்றுப்போக்கைத் தடுக்க, ரத்த அழுத்தத்தைச் சீராக வைக்க, சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைக்க பிரேசில் நாட்டில் பயன்படுகிறது.
சொரி, சிரங்கு போன்ற தோல் நோய்களைக் குறைக்கவும் இப்பழம் பயன்பட்டுள்ளது. சீன மருத்துவத்தில் காய்ச்சலைத் தடுக்க, உமிழ்நீர் சுரக்கும் தன்மையை அதிகப்படுத்திச் செரிமானத்தை வலுப்படுத்தப் பயன்பட்டது. அதிக தாகத்தைத் தணிக்க (Polydipsia) பயன்படுகிறது. பழுத்த ஐவிரலிப் பழம் வலையைக் குறைத்து நல்ல தூக்கத்தை உண்டுபண்ணும் இயற்கையான நார்கோடிக் (Narcotic). ஆஸ்துமா போன்ற நோய்களால் அவதிப்படுபவர்களுக்குப் பாதிப்பைக் குறைக்க, கட்டுப்படுத்த நிவாரணமாக உதவுகிறது. பழத்துடன் இலைகளைச் சேர்த்துத் தேநீர் திரவம் தயாரித்துப் பருகுவர்; வாந்தியைத் தடுக்கும். தொண்டை வலி, வாய்ப்புண், பல் பிரச்சினைக்கு நிவாரணம். மஞ்சள் காமாலை, மலேரியா மற்றும் பெருங்குடல் நோய்களைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது இப்பழம். இனிப்பு-புளிப்பு மருந்துப் பழம்.
விக்கிரமன்: பழம் என்றாலே இனிக்கும்தானே? எலுமிச்சையும் புளியும் மட்டும்தானே புளிக்கும்? வேறு ஏதும் புளிப்புப் பழம் உள்ளதா?
வீரப்பிரதாபன்: 'குரங்குரொட்டி' அல்லது 'புளிக்கும் பழம்' என்றொரு பழம் உள்ளதே! ஆரஞ்சுப் பழத்தை விடக் கூடுதலான அளவில் வைட்டமின் சி நிறைந்த பாவோபாப் (Baobab) பழம். கால்சியம் சத்து பசும்பாலை விட அதிகம். இப்பழத்தின் விதை நீக்கிய சதைப்பகுதியை அப்படியே சாப்பிடலாம். சிலர் அதை பாலிலோ கஞ்சியிலோ கலந்து உண்கின்றனர். மலாவி நாட்டில் பாவோபாப் பழச்சாறு தயாரிக்கின்றனர். ஜிம்பாப்வே நாட்டில் இப்பழம் 'மாவுயு' எனப்படுகிறது. பழத்திலிருந்து களிம்பு மருந்து தயாரித்தனர். பழத்தில் சர்க்கரை தூவி, வண்ணம் கொடுத்து, இனிப்பு அல்லது புளிப்பு மிட்டாயாக 'உபுயு' என்ற பெயரில் விற்கின்றனர். பழத்தின் விதைகளைச் சூப்பில் பயன்படுத்துகின்றனர்; ஊறவைத்து வறுத்து வேர்க்கடலை போலச் சாப்பிடுவதோடு, எண்ணெய் எடுத்துச் சமையலுக்குப் பயன்படுத்துகின்றனர். நாரை வண்ணம் பூசவும் எரிபொருளாகவும் பயன்படுத்துகின்றனர். பழக்கூழைக் காயவைத்துச் சத்துணவுக் கஞ்சியாக உண்கின்றனர்; வைட்டமின்கள் அழிவதில்லை. பொடி செய்து பழரசம் தயாரித்தும் உண்ணலாம். டான்சானியா நாட்டில் கரும்புச்சாறுடன் பாவோபாப் பழச்சாற்றைக் கலந்து மது தயாரித்தனர். காற்றுப்புகாத கலனில் வைத்து நீண்ட நாள் பழக்கூழைக் கெடாமல் காக்கலாம்; குளிர்பானம் செய்யலாம்.
கடந்த 2008 வரை பாவோபாப் பழ விற்பனை ஐரோப்பாவில் தடை செய்யப்பட்டிருந்தது; இப்போது அனுமதிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் பழங்குடி மக்கள் சுரைக்காய் போல் கெட்டியான தோல்கொண்ட பழத்தின் மீது சாயம் பூசி அலங்காரமாகப் பயன்படுத்தினர்; சிறிய துண்டுகளை அணிகலனாக அணிந்தனர்; உணவுக்கும் தண்ணீருக்கும் பயன்படுத்தினர். இந்தியாவில் கர்நாடக மாநிலம் சாவனூரில் 1400 மீட்டர் சுற்றளவுள்ள மூன்று பாவோபாப் மரங்கள் உள்ளன. ஐந்தாயிரம் ஆண்டு பழமை வாய்ந்தவை! இவற்றை யார் நட்டு வளர்த்தார்களோ? பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் ஒரு மரம் இருந்தது. இந்தியாவில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் ராஜபாளையத்தில் ஒன்றும், வைகை அணை அருகே இரண்டும், இராமநாதபுரம் தங்கச்சிமடத்தில் ஒன்றும், சென்னை அடையாறில் இரண்டும், சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஒன்றும், நந்தனத்தில் ஒன்றும் உள்ளன. வேறு எங்கும் இருப்பதாகத் தகவல் இல்லை. அடிமரத்தின் உட்பகுதி மூங்கில் போல் வெற்றிடம் கொண்டதாக நீர் நிறைந்து இருக்கும். கோடையில் நீர் ஆவியாகாதவாறு பாதுகாப்பாக இந்தச் சத்தான நீர் உள்ளது. மடகாஸ்கர் நாட்டில் முதன்முதலில் பிரான்ஸ் நாட்டின் ஆடன்சன் என்ற விஞ்ஞானி கண்டறிந்து அறிமுகப்படுத்தியதால், இவர் பெயரில் ஆடன்சானியா (Adansonia) என்ற தாவரவியல் பெயர் கொண்டது. ஏழு சிற்றினங்கள் உள்ளன. போஆப், போவாபோவா, தலைகீழ் மரம், குரங்குரொட்டி மரம் ஆகியன இதன் வேறு பெயர்கள். தேவலோக மரம்!
மலர்விழி: நமது நாட்டில் இதுபோல விசித்திரப் பழங்கள் இன்னும் ஏதும்...?
வீரப்பிரதாபன்: பிள்ளையார் சதுர்த்தியன்று மட்டும் நாம் பார்க்கும் வினோதப் பழம்தான் விளாம்பழம். இந்திய விசித்திரப் பழங்கள் விளாம், நாவல், கொடுக்காய்ப்புளி. அழிந்துவரும் தாவர வகைகளில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட விளாம்பழ மரமும் ஒன்று. சில மரபு சார்ந்த சடங்குகளில் விளாம்பழம் முக்கிய இடம் பெற்றிருந்தாலும், விளாம் மரம் குறித்த அறிவியல் பார்வை உணர்வு இல்லை. விளாம் மரங்கள் பயன்பட நீண்ட காலம் எடுத்துக்கொள்கின்றன. காய்ப்பதற்கு இருபது ஆண்டுகள் வரை ஆகும். பல ஆண்டுகள் முன்பு வரை நம் வாழ்க்கை முறையில், உணவுப் பழக்கங்களில் விளாம்பழங்கள் முக்கிய இடம் பெற்றிருந்தன. கிராமப் பகுதிகளில் குழந்தைகளுக்குச் சீர்தட்டுதல் (அதாவது வயிறு மந்தம்) ஏற்படுவதைத் தவிர்க்க, குழந்தை பிறந்த சில நாட்களில் விளாம் மர இலைகளைத் தாய்க்கும் சேய்க்கும் கட்டிவிடுவர். அதற்கு 'பிள்ளை வளர்த்தி மரம்' என்ற செல்லப்பெயர் உண்டு. சரித்திர காலத்தில் விளாம்பழத்தின் சதைப்பகுதியைப் பிரித்து எடுத்து, வெல்லம் அல்லது காரம் சேர்த்து உண்டனர். பிறகு தக்காளி அறிமுகமான பிறகு, தக்காளி, வெங்காயம் போட்டுத் தாளித்து உணவுக் கூட்டாக வைத்துச் சுவைத்தனர். சமையல் பொருளாக, சத்துணவுக் காய்கறியாகப் பயன்பட்டதால் விளாம் மரங்கள் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட்டன. பனை, தென்னை போல் விளாம் மரங்களும் நூற்றுக்கணக்கில் தோப்புகளாகப் பராமரிக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளின் மைதானங்களில் கண்டிப்பாக ஒன்றிரண்டு வளர்க்கப்படும். நாளடைவில் மறந்துவிட்டதால் முக்கால் பங்கு விளாம் மரங்கள் அழிந்துவிட்டன.
இன்று இளைஞர்களுக்கு விளாம்பழம், விளாம்மரம் என்றொரு மரம் நினைவுக்கு வருவதில்லை. அப்பழத்தை எப்படிச் சாப்பிட வேண்டும் என்றும் பலருக்குத் தெரியாது. தென்னிந்தியாவில் ஒரு காலத்தில் அதிகளவில் காணப்பட்ட இம்மரத்தின் இலைகளும் பழங்களும் சித்த மருத்துவத்தில் சில காலம் முன்பு வரை பயன்பட்டு வந்தன. இந்த யானைப் பழம், மணிப் பழம், மர ஆப்பிள் (Elephant fruit, Bell fruit, Wood apple) நன்கு பழுத்த பின் இனிப்பானவை; நார்ச்சத்து உடையவை; அதிகளவு இரும்புச்சத்து உடையவை; லேசான துவர்சுவை உடையவை. உடலுக்கு நோய் எதிர்ப்புச் சத்து தரும் வேதிமங்களும் ஆன்டி-ஆக்சிடன்ட்களும் சமைத்தாலும் அழியாது. வெல்லம் சேர்க்கும்போது அவை கூடும். நட்டுச் சில ஆண்டுகள் வரை பராமரிப்பர். பிறகு வேறு பயன்பாடுகளுக்கு அல்லது வேறு மரங்கள் வளர்க்க என்று வெட்டிவிடுவர். இருபது ஆண்டுகள் பொறுமை வேண்டுமே? அப்போதுதானே இவை காய்க்கும்!
ராஜபாளையம் ஜெகநாதன் என்பவர் நான்கு ஆண்டுகளில் பலன்தரும் புதிய வகை விளாம் மரத்தைத் தாவரவியல் ஆய்வு மூலம் உருவாக்கினார். நன்கு வளர்ந்த விளாம் மரத்தின் மென்தண்டு ஒட்டுவளர்ப்பு முறையில் ஒட்டுக்கட்டி, புதிய வகை மரக்கன்றை உருவாக்கினார். இது மூன்று ஆண்டுகளில் இருபதடி உயரம் வளரும் என்றும், நான்காண்டுகளில் காய்க்கும் என்றும் தெரிவித்தார். பொதுவாக விளாம் மரம் வளர்ப்பில் ஒரு முக்கிய சிறப்பு: செடி வேர்பிடிக்கும் காலம் வரை நீர் அளித்தால் போதும்; அதன் பிறகு எப்போதும் தண்ணீர் தரத் தேவையில்லை. நிலத்தடி நீரைச் சிறிதளவு தானே எடுத்துக்கொண்டு சமாளிக்கும். பத்தாண்டுகள் மழை இல்லாவிட்டாலும் தாக்குப்பிடிக்கும். மண்வளமும் அதிகம் தேவையில்லை. வேறு எந்த மரமும் வளராது என்று ஒதுக்கிய நிலத்திலும் விளாம் மரம் வளரும். பூச்சிகளே இம்மரத்தை அண்டாது; களைகள் ஏதும் வராது; உரங்கள் ஏதும் இட வேண்டியதில்லை. விளாம்பழங்களை யானைகள் விரும்பி உண்ணும்; யானைகள் மட்டுமே உண்ணும்; வேறு எந்த விலங்கும் பறவையும் உண்பதில்லை. அதனால் வேலி போன்று எந்தப் பாதுகாப்பும் அவசியமில்லை. இருபதடிக்கு வளர்வதால் இவற்றையே நிலங்களைச் சுற்றி வேலிக்குப் பதிலாக வளர்க்கலாம். காற்றின் வேகத்தைக் குறைத்துப் பயிர்கள் சேதமாவதைக் குறைக்கும். மரத்துக்கு மரமும் ஆச்சு, வேலிக்கு வேலியுமாச்சு!
விளாம் கன்று நட்டு மூன்று ஆண்டுகளில் பூ பூக்கும். அவற்றை வளரவிடாமல் கவனித்துக் கிள்ளிவிட வேண்டும் என்பதுதான் இதிலுள்ள சிக்கலான தாவரவியல் விந்தை! பூ வளர்ந்தால் காய் பிடிக்காது, செடி வளராது. விசித்திர மரம் விளாம் மரம். மரங்கள் குறைவாக இருப்பதால், பழங்களும் குறைவாகக் கிடைப்பதால் விலையும் அதிகம். கேரளாவில் இப்பழங்களுக்கு நல்ல பயன்பாடு உள்ளது. பழச்சாறு, ஊறுகாய் என்று உண்கின்றனர். 'நம்முடைய பாரம்பரிய மரம்' என்ற எண்ணம் இருந்தால் விளாம் அழியாமல் தடுக்க முடியும்; அடுத்த தலைமுறையும் விளாம்பழம் சுவைக்க முடியும்.
விக்கிரமன்: நாவல்பழம் என்றீர்களே, அது விசித்திரமில்லையே! புகழ்பெற்ற பழமாயிற்றே! நான் நிறைய பார்த்துள்ளேன், சுவைத்துள்ளேன் - நீலநாக்குப் பழமது!
வீரப்பிரதாபன்: சித்தர்கள் சர்க்கரை நோய்க்கான மருந்தாகப் பரிந்துரை செய்தது துவர்ப்புச் சுவை கொண்ட நாவல்பழத்தைத்தான். நவீன விஞ்ஞான ஆய்வுகளும் இந்தப் பயன்பாட்டைப் பல ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தின. நாவல்பழத்தின் விதையில் 'ஜம்போலைன்' (Jamboline) என்ற குளுக்கோசைடு உள்ளது. உடலுக்குள் சுரப்பிகள் ஸ்டார்ச்சைச் சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது. நாவல்பழத்தில் இரு வகைகள் உள்ளன. நீள ரகத்தை விட உருண்டை ரகமே மருத்துவக் குணம் கொண்டது. நீர்ச்சத்து, மாவுச்சத்து, புரதம், கொழுப்பு, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள் ஏ, இ மற்றும் ஃபோலிக் அமிலம் உள்ளது. ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்; ரத்தத்தின் கடினத்தன்மை மாறி லேசாகும். ரத்தத்தில் வேதிப்பொருட்கள் கலந்தால் இவற்றை நீக்கிச் சிறுநீர் மூலம் வெளியேற்றும்; மலச்சிக்கல் போக்கும். மலக்குடல் முறையாக விரிந்து சுருங்கிச் செயல்பட உதவும். உப்புடன் சேரும்போது சோடியத்துடன் சேர்ந்து புண்ணாற்றும். குடல் தசைகளை வலுவாக்கும்; வியர்வை பெருக்கும்; தோலில் வியர்வை தேங்கவிடாது. அதனால் தோல் நோய் வராமல் தடுக்கும்; இதயத்தசைகள் வலுவாகும். ஒரே சமயத்தில் அதிகம் உண்ணக்கூடாது, காய்ச்சல் வரக்கூடும்.
மிர்தாசியே (Myrtaceae) தாவரக் குடும்பத்தின் நாவல் கனியின் பிறப்பிடம் இந்தியா. ஆங்கிலத்தில் ஜாமூன், ஜாம்போலன், ஜமாலி, ஜாவா பிளம், கருப்பு பிளம், கருப்பு பெர்ரி என்றும், தமிழில் அருகதம், நவ்வல், நம்பு, சாட்டுவலம், சாம்பல் எனப் பல பெயர்களும் உண்டு. ஆசிய நாடுகளில்தான் அதிகம் வளர்கின்றன. நாவல் கொட்டையிலும் சத்துக்கள் உள்ளதால் அவற்றைத்தூளாக்கி உண்ணலாம். பழத்தை அப்படியே சாப்பிடும்போது அதில் உள்ள ஊதா வண்ண வேதிமம், உமிழ்நீருடன் சேர்ந்து நாக்கை, வாய்ப்பகுதியைச் சில நிமிடங்கள் ஊதா நிறத்தில் மாற்றும்; வாய் முழுதும் துவர்க்கும். திருவானைக்காவல் கோயிலின் தலமரம் இந்த கருநாவல் மரம். மருந்துப் பழம்!
விக்கிரமன்: கொடுக்காய்ப்புளி என்றீரே, அது பழமா என்ன? முள்மரம் அல்லவா?
மலர்விழி: சிறுவயதில் அந்தக் காய்களைச் சாப்பிட்டதாக நினைவு.
வீரப்பிரதாபன்: கோணப்புளியங்காய், மணிலா தமரிண்ட், மெட்ராஸ் தோரா, குமுசில் (Manila Tamarind, Madras Thorn, Guamuchil) என அழைக்கப்படும் இது, மைமோசா குடும்பத்தின் பித்தசெல்லோபியம் டல்சி (Pithecellobium dulce). இந்த கிரேக்கச் சொல்லுக்கு 'குரங்கு மற்றும் காதுவளையம்' என்று பொருள். பழத்தின் வடிவத்தைக் குறிக்கும். 'டல்சி' என்றால் இனிப்பு. தாயகம் மெக்சிகோ.
விக்கிரமன்: அதாவது கொடுக்காய்ப்புளியானது வளம் குறைந்த மண்ணுக்கும் வாழ்வளிக்கும் வரம்; உவர் பூமியிலும் உப்புநீரிலும் உயர்ந்த விளைச்சல் தரும்; வெயில் பகுதிக்கு இயற்கை தந்த சீதனம்; உழைப்பாளிகளை உயர்த்திடும் உன்னதம்!
வீரப்பிரதாபன்: கவிதையே பாடிவிட்டீர்! கொடுக்காய்ப்புளிக் கவிஞர் நீர்! அது வித்தியாசமான, வெற்றிகரமான பழமரம். மற்ற எல்லாப் பழமரங்களை விட வெயிலையும் வெப்பத்தையும் விரும்பும் விசித்திரப் பழமரம். சுண்ணாம்பு சேர்ந்த மண்ணில் பெரும்பாலான பழமரங்கள் நன்கு வளராது; அந்த மண்ணிலும் இது நன்கு வளர்ந்து பழம்தரும். சொளசொளப்பான ஈரநிலத்திலும் நன்கு காய்க்கும். மற்ற பழங்களை விடப் பறவைகள் அதிகம் தேடிவந்து உண்ணும் பழம். ஆனால் கொடுக்காய்ப்புளி பழம் பறிப்பதில் அதிகச் சிரத்தையும் தேவை; சிரமம் அதிகம். அதனால் அது வினோதம். வறண்ட வட அமெரிக்கப் பகுதிகளில் கொடுக்காய்ப்புளி பழம் மனிதருக்கு உணவு; தழைகள் கால்நடைகளுக்கு உணவு.
தமிழகத்தில் வெயில் அதிகமான விருதுநகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் பழமரம் பணமரம்! பங்குனிப் பொங்கல் காலத்தில் விரதம் இருப்பவர்கள் விரும்பி உண்பர். லேசான, இதமான துவர்ப்புச் சுவையும் உறுத்தாத, திகட்டாத இனிப்புச் சுவையும் கொண்டது. மென்று தின்னும்படியான நார்ச்சத்து உள்ளது. பார்க்கும்போதே சாப்பிடத் தூண்டும் அழகான இளஞ்சிவப்பு நிறம்! பழத்தை மட்டுமே உண்ண முடியும்; தோலையும் விதைகளையும் வெள்ளாடுகள் விரும்பிச் சாப்பிடுகின்றன. வறண்ட நிலத்திற்கும் மண் அரிமானம் உள்ள நிலத்திற்கும் கொடுக்காய்ப்புளி மரம் சிறந்த காற்றுத்தடுப்பு மரமாகும். வறட்சியைத் தாங்கி வேகமாக வளரும்; அறுபதடி உயரம் வரை நன்கு உயர்ந்து வளரும். கிளைகள் நீண்டு வளரும். இவை கோடையில் இலைகளை மொத்தமாக உதிர்ப்பதில்லை; ஆண்டு முழுதும் பசுமையாகவே காணப்படும். இந்தோனேசியாவில் நகரங்களில் சாலை யோரம், பூங்காக்களில், வீடுகளில் விரும்பி வளர்க்கப்படுகிறது. பொன்வண்டுகளும் அரக்குப் பூச்சிகளும் விரும்பி இலைகளைச் சாப்பிடுகின்றன. பெருங்காற்றை எதிர்த்து நிற்க முடியாமல் கிளைகள் ஒடிந்துவிடுகின்றன. மழைக்காலத்தில் மழை வேண்டும், காற்று வேண்டாம்!
காயின் சதை அதிகம் துவர்க்கும், இனிக்காது; பழுத்த பின் இனிக்கும். மரத்திலேயே தோல் பகுதி வெடித்து வாய்பிளக்கும் பழங்களை மட்டுமே பறித்து உண்ணலாம். அந்த சமயத்தில் மழை பெய்தால் தோல் வெடிப்பில் நீர் புகுந்து தேங்கிப் பழம் அழுகிவிடும்; பழம் பழுப்பு நிறமாகிவிடும், சாப்பிட முடியாது. முளைத்த செடிகள் மூன்றாம் ஆண்டிலேயே பூத்துக் காய்க்கும். பல மரங்கள் இனிப்பான பெரிய பழங்களைத் தருகின்றன. மெலிதான துவர்ப்புத் தன்மையுடைய காயுள்ள மரங்கள் வெட்டப்பட்டு விறகாகின்றன.
இப்பழங்கள் பற்றிய ஆய்வாளர்களான பழத்தோட்டத் தந்தை - விஞ்ஞான விவசாயி தனுஷ்கோடி, தோட்டக்கலைக் கல்லூரி முதல்வர் அன்பு, விவசாயப் பட்டதாரி அருண் நாகராஜ் ஆகியோரின் ஆய்வு முயற்சிகள் மூலம் சில ஒட்டுரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மரத்தின் மீது ஏறி பழம் பறிப்பது சிரமமான செயல்; நல்ல அனுபவம், முயற்சி, பயிற்சி, திறமை தேவை. மூன்று விதத் தொரட்டிக் கம்பிகளை எடுத்துக்கொண்டு மரமேறி, பாதுகாப்பான கிளையில் எச்சரிக்கையாக நின்றுகொண்டு பழம் பறிக்க வேண்டும். பந்து போன்று வடிவமைத்த மரங்களில் பழம் பறிப்பது எளிது; தரையில் நின்றுகொண்டே தொரட்டியால் பறிக்கலாம். இப்பழ மரங்களை ஓரளவுக்கு மேல் உயரமாக வளர அனுமதிப்பதில்லை. வெயில்படும் கிளைகளில் மட்டுமே காய்ப்பதால் உச்சிக்கிளையில் பழம் இருந்தால் பறிப்பது கடினம், பயனில்லை என்பதால் இந்த ஏற்பாடு.
கொடுக்காய்ப்புளி கனியும்போது நிறைய குருவிகள், காக்கை, தைலாஞ்சிட்டுகள் தேடிவரும். இரவில் வவ்வால்கள் வந்து பழத்தைச் சாப்பிடும். அவற்றை விரட்டுவதற்காக விவசாயிகள் சீனிவெடி வெடிக்கிறார்கள். பழத்தின் தோல் பகுதி தொலி மொத்த எடையில் கால்பங்கு; உள்ளே இருக்கும் சதைப்பகுதி உண்ணக் கூடியது பாதிப்பங்கு; அதன் நடுவே உள்ள கருப்பு நிற விதை கால்பங்கு எடை. பழ விதையிலிருந்து எண்ணெய் எடுத்துச் சமையலுக்கு, சோப்பு தயாரிக்கப் பயன்படுத்தலாம். கொடுக்காய்ப்புளி கனியில் சதைப்பற்றானது சில ரகங்களில் பழுத்த பிறகு சிவப்பு நிறம், சிலவற்றில் இளமஞ்சள் நிறம், சிலவற்றில் வெள்ளை நிறம். ஆனால் பழச்சதையின் நிறத்திற்கும் சுவைக்கும் தொடர்பில்லை என்பது இப்பழத்தின் வித்தியாசமான அறிவியல் பின்னணி! செக்கச்செவந்த பழமும் சில துவர்க்கும்; வெள்ளைச் சதையும் பல இனிக்கும். பழத்தின் தரத்தைச் சுவையும் நிறமும் கனமும் தீர்மானிக்கும். நல்ல அனுபவம் மிக்கவர்கள்தான் பழத்தின் சுவையை ஓரளவு கண்டுபிடித்துத் தரம் பிரிக்க முடியும்.
விக்கிரமன்: வினோதமான பழங்களைப் பற்றி ஒரு புராணமே பாடிவிட்டீர்! அவ்வளவுதானா விசித்திரப் பழங்கள்? இன்னும் உள்ளனவா?
வீரப்பிரதாபன்: இன்னும் கள்ளிப்பழம், ஆஸ்திரேலிய பிளம்ஸ் பழம், பிரம்புப் பழம் என்று பல புதுமைப் பழங்கள் உள்ளன. டிராகன், குரங்கு, விரலி என்று பெயர்களும் விசித்திரம்; பழங்களும் வினோதம்! ஆய்வாளர்கள் ஆராய்கின்றனர்; முடிவுகளுக்குக் காத்திருப்போம். அதுவரை சுவைப்போம், மகிழ்வோம்! வெல்க தாவரவியல் ஆய்வாளர்கள்!
- புழல் தி.பாலகுமார்