கடந்த 2020 ஏப்ரலில், கணித மேதை இராமானுஜன் மறைந்து ஒரு நூற்றாண்டு முடிந்தது. அவரை நினைவுகூரும் விதமாக, இந்நூலாசிரியர் உட்பட பதினான்கு அறிவியல் எழுத்தாளர்கள் 'அறிவியல் ஒளி' என்ற அறிவியல் மாத இதழில் ஒவ்வொரு மாதமும் எழுதிய பதினான்கு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையச் செயல் இயக்குநர் சௌந்தரராஜ பெருமாள் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலின் இறுதியில் கட்டுரை ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் ஜி. ஜானகிபாய் முதல் கட்டுரை எழுதியுள்ளார்.
கணித மேதை இராமானுஜனின் பிறந்த தினம் டிசம்பர் 22. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாளை, தேசிய கணித தினமாகக் கடைப்பிடிக்கலாம் என்று 2012-இல் பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார் என்றும், இராமானுஜனின் இறுதிக்கடிதம் 'மாக் தீட்டா சார்பு' பற்றியது என்றும், கப்பல் ஒன்றுக்கு சீனிவாச இராமானுஜன் என்று பெயர் இடப்பட்டதாகவும் புதிய தகவல்களை அறிய முடிகிறது.
பை கணித மன்ற நிறுவனர் முனைவர் இரா. சிவராமன் இரண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார். இதுவரை அறியாத சில புதிய செய்திகளைக் கூறுகிறார். 1916-இல், பி.ஏ. ஆய்வுப் பட்டம் இன்றைய முனைவர் பட்டத்திற்குச் சமம் என்பதால், அப்பட்டம் பெற்ற இராமானுஜன் முனைவர்தான் என்றும், அம்மேதை நான்காயிரம் முனைவர் பட்டங்கள் பெறத் தகுதியானவர் என்றும், மேதைகள் பட்டங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும் புகழ்கிறார். இராமானுஜன் கணிதம், அணுத்துகள் இயற்பியலில் பயன்படுகிறது என்றும், பைரோமெட்ரி, நைலான் துணிவகை பண்புகள் அறியவும், தொலைபேசி கம்பிவடம் பொருத்தவும் அவரது கணிதப் பங்களிப்பு உதவுகிறது என்றும் அறியும்போது வியப்படைகிறோம். பையின் மதிப்பை பதினேழு மில்லியன் தசம இலக்கங்களுக்கு மேல் கண்ட அம்மேதைக்கு, உதவிய இந்தியர்கள் பற்றியும், இராயபுரம் இராமானுஜம் அருங்காட்சியகம் பற்றியும் குறிப்பிடுகிறார்.
மற்றொரு கட்டுரையில், இராமானுஜன் சார்ந்த தவறான செய்திகள் பொதுவெளியில் பரவுவதைக் குறிப்பிட்டு விளக்குகிறார். 220 மற்றும் 284 ஆகிய எண்களின் வகுத்திகளின் தன்மையைக் கூறியவர் இராமானுஜன் அல்ல. எண்கோபுரங்களும் மாயச்சதுரங்களும் அவர் உருவாக்கவில்லை. சீனிவாச வரதன் என்ற கணித அறிஞரின் படத்தை தவறுதலாக இராமானுஜன் படம் என்பர். ஏடிஎம் எந்திரச் செயல்பாட்டிற்கு இராமானுஜன் எந்தக் கோட்பாடும் வழங்கவில்லை.
ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஏ. வெங்கடேசன், 'இராமானுஜனும் ஹார்டியும்' என்ற தலைப்பில் அவர்களுக்கிடையேயான நட்பை விளக்குகிறார். புதுதில்லி விக்யான் பிரசார் த. வி. வெங்கடேஸ்வரன், கார் எண்கள் பற்றிக் குறிப்பிட்டு இராமானுஜனின் கைமுட்டி கற்பிக்கும் பாடம் 'கடின உழைப்பு' என்கிறார். நியூட்டன் அறிவியல் மன்ற இயக்குநர், பி. இளங்கோ சுப்பிரமணியன், இராமானுஜன் யுகத்தின் மீது சுவடு பதித்தார் என்று புகழ்ந்து, இயற்பியலின் சங்கடம் வரம்பிலி என்றும் அதை இல்லாமல் ஆக்கினார் இராமானுஜன் என்றும் விளக்குகிறார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் அலுவலர் ஐ. கே. லெனின் தமிழ்க்கோவன், இராமானுஜனின் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்டு பலவிதமான மாயச்சதுரங்களை உருவாக்கிய அறிஞர் பி. கே. சீனிவாசன் பற்றி எழுதித் தானும் சில மாயச்சதுரங்களை அமைத்துக் காட்டுகிறார். மீனா சுரேஷ் என்ற புதிய எழுத்தாளர் 'இராமானுஜன் வரலாற்றில் விஸ்வநாதனின் பங்கு' என்ற தலைப்பில் 'முடிவிலி பற்றி அறிந்த மனிதன்' என்ற நூலை எழுதிய 'ராபர்ட் கனிகல்' எவ்வாறு இராமானுஜனின் வரலாற்றை, அவருக்கு ஆதரவு தந்த நாராயணர் மகள்வழிப் பேரனாகிய விஸ்வநாதன் என்பவர் மூலம் அறிந்தார் என்பதை விளக்குகிறார்.
ஆசிரியர் புழல் தி. பாலகுமார், 'எண் மனிதர் எண் அன்பர்' என்ற தலைப்பில் வித்தியாசமான உரையாடல் வடிவில் கால எந்திரம் என்ற கற்பனை உத்தியுடன் வடிவமைத்துள்ள புதுமையான கட்டுரையில் இராமானுஜன் எண், பை மதிப்பு, எண் பகுப்பு, தொடர் பின்னங்கள், மகலனோபிஸ் வழங்கிய புதிர் பற்றி விளக்கி, இளைஞர்கள் கணித மேதையாகச் சிறப்பதற்கு வழிகாட்டுகிறார்.
கோவை அறிவியல் மைய அறிவியல் அலுவலர் முனைவர் ஜெ. இரா. பழனிசுவாமி விந்தைக் கணிதங்கள் பற்றி விளக்குகிறார். புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளர், ஆயிஷா இரா. நடராசன் 'தொலைந்த ராமானுஜன் கிடைத்த கதை'யில் உலகம் அறியவைத்த அவரது பொக்கிஷமான இறுதி ஆண்டுத் தொகுப்பு நோட்டுப் புத்தகம் தொலைந்தது பற்றியும், பிறகு புரூஸ் பிரண்ட் மற்றும் ஆண்ட்ரூஸ் ஆகியோர் கண்டுபிடித்தது பற்றியும் சுவைபட விளக்குகிறார்.
கணிதத் திறன் கழக இயக்குநர், முனைவர் சீனிவாச ராவ் 'தான்தோன்றி' என்ற தலைப்பில் இராமானுஜனின் நோட்டுப் புத்தகங்களின் இன்றைய நிலை பற்றி வேதனையுடன் பதிவு செய்கிறார். ஓய்வுபெற்ற பொது மேலாளர் எஸ். தியாகராஜன், இராமானுஜன் பற்றிய மற்ற அறிஞர்களின் கருத்துரைகள் சிலவற்றைப் பகிர்ந்துள்ளார்.
இறுதியாக, நூலின் தொகுப்பாசிரியர், அறிவியல் ஒளி மாத இதழ் ஆசிரியர், நா. சு. சிதம்பரம், 'ஹார்டி கண்டுபிடித்த கணித மேதை' என்ற தலைப்பில் நான்கு நோட்டுப் புத்தகங்கள் குறித்து, கணிதப் பேராசிரியர் ஆர்தர் பெர்ரியின் கருத்தோடு விளக்குகிறார்.
கணிதம் மற்றும் அறிவியல் ஆர்வலர்கள் அனைவரின் இல்லங்களிலும் கண்டிப்பாக இருக்க வேண்டிய அரியதொரு ஆவணத் தொகுப்பாக, அரிய புகைப்படங்களுடன், புதிய செய்திகளுடன், எளிய தமிழில், புதிய நடையில் எழுதப்பட்ட கட்டுரைகளுடன், நல்ல தாளில், தெளிவான அச்சில் வந்துள்ள இந்நூல் உண்மையில் சிறந்த நூல் என்பதில் மிகையில்லை.
- நூலின் பெயர்: கணித மேதை இராமானுஜன்
- தொகுப்பாசிரியர்: நா. சு. சிதம்பரம், ஆசிரியர், அறிவியல் ஒளி மாத இதழ்
- பதிப்பு: நெல்லி பதிப்பகம், அசோக் நகர், சென்னை - 83
- விலை: 150 ரூபாய், பக்கங்கள்: 124
- புழல் தி.பாலகுமார்