பாம்புகளில் சில பாம்புகள் மட்டும் நச்சுத் தன்மை கொண்டவை. பெரும்பாலான பாம்புகள் நச்சுத்தன்மை அற்றவை. அவை கடித்தால் தடிப்பு, சொறி, உடல் வீக்கம் ஏற்படும், உயிருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. விரியன் பாம்புகள் மிகவும் கொடிய நச்சைக் கொண்டவை. கடித்த சில மணித்துளிகளிலே உயிரைக் குடிக்கும் தன்மை உடையவை.
பாம்புகள் பெரும்பாலும் இருட்டிய பிறகே இரை தேடப் புறப்படுகின்றன. எலி, தவளை, சிறுசிறு பூச்சிகள், மற்ற பறவைகளின் முட்டைகள் ஆகியவற்றை உணவாகக் கொள்கின்றன. சில பாம்புகள் மற்ற வகைப் பாம்புகளையே உண்ணக் கூடியவை. பாம்புகளில் மிகவும் எடையும், வலுவும், நீளமும், கொண்டவை மலைப்பாம்புகள்.
பாம்புகள் அந்த இனங்களிலேயே தங்களுக்கு இணைகளைத் தேடிக் கொள்கின்றன. பாம்புகள் முட்டையிட்டு அடைகாக்கும் தன்மை கொண்டன. பெரும்பாலும் ஆண் பாம்புகளே அடை காக்கின்றன. இடத்திற்கும், தட்ப வெப்ப நிலைக்கும் ஏற்ப பாம்புகள் வெண்மை, மஞ்சள், கருமை, நீலம், பச்சை, சிவப்பு, பழுப்பு மற்றும் பல வண்ணங்களில் மணமும் பல வகையாக உள்ளன.
பாம்புகளுக்கு காதுகள் கிடையாது பாம்பின் கால் பாம்பறியும், கட்செவி போன்றவை பாம்பைப் பற்றி ஆராய்ச்சி அறிவு இல்லாத காலத்தில் கூறப்பட்டவையாகும். பாம்பாட்டி மகுடியை அப்படியும் இப்படியும் அசைத்து ஆட்டும் போது பாம்பும் தன் பார்வையை மகுடி மீது செலுத்தி அதற்கேற்றவாறு அசைவதைத்தான் “மகுடியின் இசையில் தான் பாம்பு ஆடுகிறது” என்று தவறாகக் கூறுகிறார்கள்.
பாம்பு தன் அடி வயிற்றிலுள்ள செதில்கள் போன்ற அமைப்பு மூலம் தரையைப் பற்றி (மண்புழு போன்றே) முன்னுக்கு நகர்கிறது. மண்புழுவிற்கு முன் பக்கம் மட்டுமே அந்த அமைப்பு உள்ளது. ஆனால், பாம்புக்கோ கழுத்திலிருந்து வால் வரை செதில் அமைப்பு உண்டு. இதனால் தான் மிக வேகமாக நகர முடிகிறது.
பாம்புகளுக்கு அதிர்வுகளை உணரும் திறன் உண்டு. மனிதனோ, விலங்கோ, நெருங்கும் போது, நிலத்தில் ஏற்படும் அதிர்வலைகளைப் பாம்புகள் தங்கள் வயிற்றுப்புறச் செதில்கள் மூலம் உணர்ந்து அதற்கேற்றவாறு தன் திசையை மாற்றி எதிரிகளிடமிருந்து தப்பித்துக்கொள்ளும்.
பாம்புகளுக்கு நாக்கு பிளவுபட்டு கம்பிகள் போல் இருக்கும். எனவே, பாம்பு பாலையோ நீரையோ நக்கிக் குடித்திட முடியாது. கிண்ணத்தில் பாலை வைத்தால் பாம்பு உறிஞ்சிக் குடிக்கிறது என்று பக்தர்கள் கூறுகிறார்கள். இது மிகவும் அறியாமையாகும். பாம்புக்கு அதன் தலையின் நுனிப் பகுதியில் மூக்கு உள்ளது. அது நீர்மப் பொருளில் வாயை வைக்கும்போது முதலில் நுழைவது மூக்காகத்தான் இருக்கும். மூக்கை நீரிலோ, பாலிலோ நுழைத்தாலே பாம்பு மூச்சுத்திணறிச் செத்து விடும். இதை அறியாதோர்தான் பாம்பு பால் குடிக்கிறது என்று தவறாகச் சொல்லி வருகின்றனர்.
மேலும் முட்டையைக் கூட உடைத்து உறிஞ்சிக் குடிப்பதாகவும் பக்தர்கள் சரடு விடுகிறார்கள். பாம்பு இரையை (எலி, தவளை போன்றவற்றை) அப்படியே விழுங்குமேயன்றி மென்று சாப்பிடக் கூடிய அமைப்பு கிடையாது. எனவே முட்டையையும் பாம்பு விழுங்குகிறதேயன்றி உடைத்து உறிஞ்சிக் குடிக்காது.
பாம்புகள் அதன் இனத்திலேயே இணைந்து இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால், நல்ல பாம்பும், சாரைப்பாம்பும் தான் இணைகின்றன என்ற தவறான கருத்தினைக் கூறி வருகிறார்கள். பறக்கக் கூடிய பறவைகள் எல்லாம் ஒரே இனத்தைச் சேர்ந்திருப்பதால் கோழி, கொக்குடன் இணையுமா? கழுகு, வவ்வாலுடன் இணையுமா? காக்கை குயிலுடன் இணை யுமா? குருவி, கரிச்சானோடு இணையுமா? வாத்து வான்கோழியுடன் இணையுமா? இவை எப்படிச் சாத்தியமில்லையோ அப்படித் தான் பாம்பின் சேர்க்கையும் ஆகும்.
(நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பாம்பு பால் குடிக்குமா?
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: அறிவியல் துணுக்குகள்