துருக்கியில் உள்ள அக்பெலென் (Akbelen) காடுகள் முதல் வட இந்தியா, பிரேசில் வரையுள்ள காடுகளில் கிராமப்புறப் பெண்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக காடுகளைக் காக்க போராடி வருகின்றனர். 

பூமியின் எதிர் கரையில் துருக்கி மக்ளா (Muğla) மாகாணத்தில் அக்பெலென் பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் தாவர மற்றும் விலங்கு பன்முகத் தன்மைக்கு அடிப்படையாக இருந்த சுமார் 700 ஹெக்டேர் பரப்பு காடுகளை லிக்னைட் நிலக்கரியை சுரங்க விரிவாக்கம் செய்து அதிக அளவு தோண்டி எடுத்து அணல் மின்நிலையத்திற்கு அனுப்ப YK Energy என்ற நிறுவனம் பெரும்படையுடன் வந்தபோது அப்பகுதி கிராமப்புற பெண்கள் எதிர்த்து நின்றனர்.

அக்பெலென்

ஆரோக்கியத்திற்கு கேடு தரும் லிக்னைட் என்ற பழுப்பு நிலக்கரி உள்ளெரி என்ஜின்களில் பயன்படுத்தப்படும்போது கடினமான கறுப்பு நிலக்கரியை எரிப்பதை விட அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு உமிழப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனத்தின் பிடியில் இருந்து காடுகளைக் காக்க கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கிராமப்புற மக்களும் சூழல் போராளிகளும் கண்காணிப்புக் குழுக்களை அமைத்து செயல்படுகின்றனர். ஆனால் நாச வேலை தொடர்கிறது.

2023 கோடையில் ஆயுதம் ஏந்திய குழுக்கள் மரங்களை வெட்ட வந்தபோது பிரச்சனை தீவிரமானது. தடுத்து நின்றவர்கள் ஆயுதம் தாங்கிய படையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். பசுமை போர்த்தியிருந்த காடுகள் மரம் வெட்ட வந்தவர்களின் ஆவேச செயல்களால் ஒரு சில மணி நேரங்களுக்குள் அழிவின் களமாகியது.turkey womenஒரு கெட்ட கனவு போல காடுகள் அழிந்தன. கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டன. நீர் பீச்சியடிக்கப்பட்டது. நாற்பது போராளிகள் கைது செய்யப்பட்டனர்.

உண்மையான தகவல்கள் வெளிவராமல் மறைக்கப்பட்டது. இதுவரை அழிந்த மரங்கள் எவ்வளவு என்று தெரியவில்லை. அக்பெலென் காட்டின் 60% அதாவது 65,000 மரங்கள் அழிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த அழிவை ஈடு செய்ய 130,,000 மரக்கன்றுகள் புதிதாக நடப்படும் என்று மக்ளா மாகாண அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் நன்கு வளர்ந்த ஒரு காட்டை முழுமையாக அழித்துவிட்டு அதற்கு ஈடாக இளம் கன்றுகள் அவசரகதியில் நடுவது எதிர்பார்க்கும் பலனைத் தருவதில்லை.

இது வெறும் ஒரு அரசியல் கண் துடைப்பு மட்டுமே. 2020ல் துருக்கி அரசாங்கம் பதினோரு மில்லியன் மரக்கன்றுகளை அவசரகதியில் நட்டது. இதில் 90% அழிந்து போயின. வன அழிவுக்கு எதிரான போராட்டத்தை உள்ளூர் பெண்களே முன்னின்று நடத்துகின்றனர். போராட்டத்தை துருக்கி சமூகம் ஆதரித்தது. அரசியல் பின்புலம் எதுவும் இல்லாத இப்பெண்கள் தாய்வழிச் சமூகமாக வந்தவர்கள் (Matriarchs) என்று அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் தங்கள் இளம் தலைமுறையை, வருங்காலத் தலைமுறையை காக்க பொது வெளி போராட்டத்திற்கு இழுக்கப்பட்டனர். சமூக ஊடகங்களில் இந்த நிகழ்ச்சிகள் காணொளிகள் மூலம் பரவின. அதில் ஒன்றில் ஒரு பெண் போராளி “காட்டில் என்னுடைய மரங்களைக் கட்டிப்பிடித்து அவற்றுக்கு நான் முத்தமிட்டேன். ஒவ்வொரு முறை ஒரு மரம் வெட்டப்படும்போதும் என்னுடைய கை காலை இழப்பது போல உணர்ந்தேன்” என்று கூறினார்.

“இந்த பெண்களின் அர்பணிப்பு உணர்வும் கிராம மற்றும் நகர்ப்புற பெண்களுக்கு இடையில் இருக்கும் சகோதரத்துவமும் ஆழமான உள்ளுணர்வு உடையது. எங்களால் முடியும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது” என்று சூழல் கொள்கைகள் மற்றும் காலநிலை மாற்றம் பற்றிய மூத்த ஆலோசகர் டென்னிஸ் கூமுஷல் (Deniz Gümüşel) கூறுகிறார்.

உலகிற்கு முன்மாதிரியான ராஜஸ்தான் சம்பவம்

உலகின் எல்லா இடங்களிலும் இப்போது நிகழ்வதையே அக்பெலன் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது. காலநிலை மாற்றம் தீவிரமடைகிறது. பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகள் சர்வாதிகார ஆட்சியாளர்களின் துணையுடன் இயற்கையை, வளங்களைத் தாக்கி அழிக்கின்றனர். இந்தப் போராட்டங்களை பெரும்பாலும் பெண்களே முன்னின்று நடத்துகின்றனர். பாரம்பரியத்தில் நம்பிக்கையுடைய பெண்கள் மரங்களைக் காப்பது புதியது இல்லை.

இந்தியாவில் 1730களில் ராஜஸ்தானின் பிஷ்னோய்(Bishnoi) சமூகத்தைச் சேர்ந்த அம்ரிடா தேவி (Amrita Devi) என்ற வீரப் பெண்மணியின் தலைமையில் வன்னி மரங்களை அழிப்பதற்கு எதிராகப் போராடினார். இதில் 365 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். அம்ரிடாவின் வீரச்செயல் கதைகள் மூலம் பரவியது. இது இந்தியாவிற்குள்ளும் வெளியிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

1970களில் இமாலயத்தின் உத்ராகண்ட் மாநிலத்தில் உள்ளூர் மொழியில் “மரங்களைக் கட்டிப்பிடியுங்கள்” என்று பொருட்படும் சிப்கோ இயக்கத்தைச் சேர்ந்த கிராமப்புற பெண்கள் மரம் வெட்டுவதற்கு எதிராக அகிம்சை வழியில் போராடினாலும் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர். அக்பெலென் காடுகளில் இன்று நடப்பது போல அன்று 2021ல் அங்கு நூற்றுக்கணக்கான பெண்கள் தங்கள் உடலை கவசமாகப் பயன்படுத்தி மரங்களைக் காப்பாற்றினர்.

உகாண்டாவில் மரங்களை எரித்து மரக்கரி எடுக்கவும், மரங்களை வெட்டி இலாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடனும் வனங்களை அழிக்கும் வணிக குழுக்களுக்கு எதிராக பெண்கள் பல்வேறு இயக்கங்களை தலைமையேற்று நடத்துகின்றனர். ஈகுவெடோரில் அலையாத்தி காடுகளைக் காக்க பெண்கள் ஒன்றுசேர்ந்து போராடுகின்றனர். ஆதிவாசிப் பெண்களே இந்தோனேஷியா வடக்கு சுமத்ரா பகுதியில் காகிதம் மற்றும் காகிதக்கூழ் தயாரிக்க, மற்ற தேவைகளுக்காக சுரங்கம் மற்றும் தோட்டப்பயிர் விரிவாக்க நிறுவனங்களை எதிர்த்து குரல் கொடுக்கின்றனர்.

இந்தோனேஷியாவ்யில் மாலோ (Mollo) என்ற ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த மாமா அலெட்டா (Mama Aleta) என்று செல்லமாக அழைக்கப்படும் அலெட்டா பான் (Aleta Baun) என்ற இயக்கவாதி 150 பெண்களுடன் சேர்ந்து பலம் பொருந்திய நிறுவனங்களுக்கு எதிராகப் போராடுகிறார். சமீபத்தில் தங்க மனிதன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட இவர் “தாவரங்களுக்கு ஆத்மா உண்டு” என்று நம்புகிறார்.

மரங்களைத் திருமணம் செய்துகொண்ட ப்ரிஸ்ட்டல் பெண்கள்

பிரேசிலில் முந்தைய சர்வாதிகார ஆட்சியில் அழிக்கப்பட்ட வனச்செல்வத்தை மீட்கும் பணியில், மகளிர் சமூக மேம்பாட்டிற்கும் பாப ஷூ நட் ப்ரேக்கர்ஸ் (babassu nut breakers) என்ற இயக்கத்தைச் சேர்ந்த பெண்கள் பாடுபடுகின்றனர். “கென்யாவில் மரங்களைக் காப்பது நாட்டின் ஜனநாயகத்தைக் காப்பதன் அடையாளம். மரங்களை காக்கப் போரிடுவது போல வறுமையையும் நாட்டின் முறைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் சமத்துவமின்மையையும் எதிர்த்து மக்கள் கை கோர்த்து ஒன்றுசேர்ந்து போராட வேண்டும்” என்று பசுமை வளையம் அமைப்பை நிறுவிய வங்காரி மாதாய் (Wangari Maathai) கூறியுள்ளார்.

இவர் காருரா (Karura) காடுகளைக் காக்க வலிமை வாய்ந்த படைகளை எதிர்த்து நின்றார்.

இன்று யுகாண்டாவின் லீன் அம்புஜாவா (Leah Namugerwa), கேம்பியாவின் ஃபேட்டு ஜெங் (Fatou Jeng) போன்ற இளம் போராளிகள் காடு காக்க தீச்சுடர் ஏந்தி போராடுகின்றனர். *செனகல் நாட்டில் புதிதாகப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரம்” என்ற பொருள்படும் எண்டலூம் வெர்ட் (Ndoloum Vert) என்ற இயக்கம் காடு வளர்ப்புக்கு உதவுவதுடன் ஒவ்வொரு மரத்தையும் ஒரு மனிதருடன் இணைத்துப் பேசுகிறது.

“நாம் இயற்கைக்கு அப்பாற்பட்டவர்கள். இயற்கையை விட மேலானவர்கள் என்ற நம் எண்ணத்தை இது அழிக்கிறது” என்று காணாமல் போன மரங்களின் தீவு (Island of Missing Trees) என்ற நாவலை எழுதிய நாவலாசிரியர், அரசியல் அறிவியல் துறை நிபுணர், சூழலியலாளர் ஆசிரியர் எலிப் ஷாஃபாக் (Elif Shafak) கூறுகிறார்.

சிப்கோ இயக்கப் பெண்களிடம் இருந்து உள்ளுணர்வு பெற்ற யு கே ப்ரிஸ்ட்டலில் (Bristol) 70 பெண்கள் குடியிருப்பு பணிகளுக்காக நன்கு வளர்ந்த மரங்களை அழிக்கும் நிறுவனங்களின் திட்டத்தை நூதன வழி ஒன்றின் மூலம் தடுத்து நிறுத்தி மரங்களைத் திருமணம் செய்து கொண்டனர். ஹாண்டுரஸ் நாட்டில் பழம்பெரும் சூழல் போராளியும் ஆதிவாசி சமூகத் தலைவியுமான பெர்டா கசீர்ஸ் (Berta Cáceres) அவரது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டார்.

தன் கடைசி நேர்முகத்தின் போது “ஆற்றல் வெறும் ஒரு தொழில்நுட்ப விஷயம் மட்டுமில்லை. வாழ்வுடன் பின்னிப் பிணைந்தது. அரசியல், இறையாண்மை, எல்லை மற்றும் சமூக சுய தீர்மானம் எடுத்தலுடன் தொடர்புடையது” என்று கூறினார். வன அழிவை எதிர்க்கும் பெண்களின் போராட்டம் தற்செயலாக நிகழ்ந்ததில்லை. நீர்ப்பற்றாக்குறை, உணவு பாதுகாப்பின்மை போன்ற காலநிலை சீரழிவின் தாக்கத்தால் பெரும்பாலும் ஆதிவாசிப் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

நாளைய உலக நம்பிக்கையின் திறவுகோல்கள்

இது போன்ற சம்பவங்களில் பெண்களே இடம்பெயர்வோரில் 80%. கலவரங்கள், அகதிகளாக ஆக்கப்படுதல் போன்ற சந்தர்ப்பங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகமாகின்றன. நிலத்தையும் நீரையும் பாதுகாப்பதை தாய்மை உணர்வோடு போற்றும் பெண்கள் துரதிர்ஷ்டவசமாக கொடூரமான முறையில் ஒடுக்கப்படுகின்றனர். மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிக்கோவில் மட்டும் 2016-2019 காலத்தில் 1070 வன்முறைச் செயல்கள் மனித உரிமைக்காக குரல் கொடுத்த பெண்களுக்கு எதிராக நடந்தன.

சமூகரீதியில் இவர்கள் பலவீனமான நிலையில் இருந்தாலும், இவர்களின் குரல் புற உலகம் அறியாமல் அழுத்தப்படுகிறது என்றாலும் இவர்கள் தளராமல் தொடர்ந்து போராடுகின்றனர். சூழல் பேரழிவுகளின்போது பெண்கள் பெரும் சுமையை சுமக்கின்றனர். அவர்களே சமூகத்தை கட்டியெழுப்புபவர்கள். நீரை சுமந்து வருபவர்கள். நினைவாற்றலின் தூதுவர்கள். கதை சொல்லிகள்.

மாநகரங்களில் இருக்கும் மாணவ பருவ இயக்கவாதிகள் முதல் கிராமப்புறங்களில் வாழும் தாய்வழிச் சமூகத்தை சேர்ந்த பெண்கள் வரை அவர்களே சூழல் அவசரநிலை, நிலம் மற்றும் நீர் பாதுகாப்பின்மைக்கு எதிரான போராட்டத்திற்கான அடுத்த அத்தியாயத்தின் இதயத்துடிப்பாக செயல்படப் போகிறவர்கள். சமத்துவமின்மை, அநீதி மற்றும் வன்முறையை எதிர்கொள்ளும் அவர்களே நாளைய உலக ஒற்றுமைக்கான ஒளி. சூழல் அழிவை எதிர்க்கும் போராட்ட குணத்தின் நம்பிக்கை திறவுகோல்கள்.

** ** **

மேற்கோள்: https://www.theguardian.com/commentisfree/2023/aug/26/world-forests-women-akbelen-turkey-india-brazil-developers?

சிதம்பரம் இரவிச்சந்திரன்