எல்லாருமே மேடையில் இருந்தால் யார் தான் நாடகம் பார்ப்பது. அசல்கள் போலவே நகல்கள்... நாங்களும் நாங்களும் என்றால் என்ன தான் செய்யும் மேடை.

திரும்பும் பக்கமெல்லாம் கேமராக்கள்.

முன்பொரு காலத்தில் நுட்பன் கையில் கேமரா இருந்தது. இப்போது நுனிப்புல் மேய்கின்ற கைகளில் எல்லாம் கேமரா. கண்டுபிடிப்புகள் மக்கள் பயன்பாட்டுக்கு தான். மறுக்கவில்லை. ஆனால்... மக்களில் மாக்களும் உண்டே.

வெறிபிடித்த ஒற்றைக் கண்ணோடு வீதி வீதியாய்... ரோடு ரோடாய்... பார்க் பார்க்காய்.. பேருந்து பேருந்தாய்... பஸ் ஸ்டேண்ட் பஸ் ஸ்டேண்டாய்... காற்றோடு காற்றாய் கலந்திருக்கும் அவர்கள் கையில் இருப்பது வெறும் திறன்பேசி இல்லை. ஒற்றைக்கண் பூதம். கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் கிளிக்கி தள்ளிக் கொண்டே இருக்கிறார்கள். அடுத்த கணம் இணையத்தில் ஏற்றி இதயம் நிரம்பி சிரிக்கிறார்கள்.

யார் இவர்கள். இவர்கள் தனியாக எங்கும் இல்லை. இங்கு நம்மோடு நாமாக இருக்கிறார்கள்.man with mobileசதை பெருத்தவள் கொஞ்சம் குனிந்தால் கிளிக் தான். வண்டி ஓட்டுகிறவள் டாப்ஸ் காற்றில் தூக்கினால் கிளிக் தான். பேருந்தில் அமர்ந்திருப்பவளுக்கு மேலே நிற்கையில் துளி நெஞ்சு பிளவு தெரிந்தால் கிளிக் தான். நடக்கையில் பின் பக்கம் சற்று ஆடி விட்டால் உடனே கிளிக். ஓடி வர நேரிட்டால் அடி வயிறு நிரம்ப கிளிக். முன் பின் நடை என்று தலைகீழ் கிளிக் கூட வீடியோவாக வெறி ஏற்றிக் கொள்கிறது. வெறும் கண்களால் தான் பார்த்து தொலைக்கிறார்கள் என்றால் இப்போது வீடியோ... பிக்சர் என்று காலத்தில் நிறுத்தி விடவும் அவர்கள் வரம் பெற்றிருக்கிறார்கள். அதோடு விட்டு தொலைகிறார்களா.. இணையத்தில் ஏற்றி நிஜமாகவே காலத்தை கழுத்தை நெரித்து நிறுத்தி விடுகிறார்கள். ஒருமுறை இணையம் தொட்ட போட்டோ.... வீடியோ என்னாகும் என்று நாம் அறிவோம்.

பார்க்கில் இருவர் பேசிக் கொண்டிருக்கிறார்களா...யார் என்ன என்று எந்த விசாரணையும் இல்லாமல் போட்டோ எடுத்து மிரட்டுவது என்ன வகை கிறுக்கு. காதலில் இருக்கிறார்களா... உடனே கிளிக்கி பொது வெளியில் பரவ விடுவது என்ன நியாயம். நிஜமாகவே கலாச்சார காவலர்கள் என்றால்... இது பொது இடம்....என்று புத்தி சொல்லியோ மிரட்டியோ அனுப்ப வேண்டும். அல்லது போலீசில் புகார் அளிக்க வேண்டும். அதை விடுத்து கையில் கேமரா இருக்கிறது என்பதற்காக கிளிக்கி பரவ விடுவது எப்படி நியாயம்.

இதே கேமரா... பல குற்றங்களை வெளிப்படுத்த உதவுகிறது. பாராட்டலாம். எல்லார் கையிலும் கண்ணை குத்தும் சாமி... சரி தான். ஆனாலும்... தனி மனித சுதந்திரம் காணாமல் போவதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் தானே. பல விபத்துகள்... குற்றங்களுக்கு சாட்சியாக கேமராக்கள் இருக்கின்றன. அதே நேரம் பல விபத்துகள்... குற்றங்கள் நடக்கவும் கேமராக்களே காரணமாகவும் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது.

அவசரத்துக்கு சாலையோரத்தில் உச்சா போகிறவனை போட்டோ எடுத்து பொதுவெளியில் போட வேண்டுமா. பார்க்கில் மூச்சிரைக்க நடைப்பயிற்சி செய்யும் பெண்ணை வியர்வையோடு கிளிக்கி விடுகிறான். எந்த கோணம் கிடைத்தாலும்.. கும்பகோணம் டிகிரி காப்பி குடிச்ச திருப்தி தான் அவனுக்கு.

முதலில் அவன் அனுமதி இல்லாமல் ஒருவரை போட்டோ எடுக்க இன்னொரு மனிதனுக்கு யார் அதிகாரம் தந்தது. செய்தியாளர்கள் எடுக்கிறார்கள் என்றால் அது தனி. செய்தியாளர்களிலும் இப்போது போலிகள் நிறைந்து குவிந்து விட்டது தனி பயத்தை உருவாக்குகிறது. எல்லாமே செய்தி தான். ஒரே செய்தி மாறி மாறி... சேனல் வளர்ச்சி என்று மனித கண்களை கொன்று குவிக்கிறார்கள். அதுவும் கண்ணு மூக்கு காது முளைத்து... வேறொரு செய்தியாக அது தீ மூட்டுகிறது. நம்பகத்தன்மையை காணாமல் போக செய்யும் பல செய்தி சேனல்கள் ஜஸ்ட் பணம் சம்பாதிக்கும் யு டியூபர்ஸ். அவ்வளோ தான். மனசாட்சி அற்ற பிராங்க்... தேவையற்ற செய்திகள்... சுற்றுலா விபரம் என்று சேனல்கள் காசு பார்க்க.. அதை வெறுமனே பார்த்து ஒரு நாளில் 6 லிருந்து 10 மணி நேரங்களை சும்மா செலவிடும் பித்துக்குளி பிரஜைகளை யார் தான் காப்பாற்றுவது.

ஒரு பொண்ணு லாரி ஓட்டினா உடனே பேட்டி... ஒரு பொண்ணு பையன் மாதிரி இருந்தா உடனே பேட்டி... ஒரு பையன் குள்ளமா இருந்தா உடனே பேட்டி.. ஒரு பையன் பொண்ணு வேஷம் போட்டு ஆடினா உடனே பேட்டி... பேட்டிக்கென்ற லட்சணத்தை இப்படியா போட்டு நொறுக்குவது. நாமும் வாயை திறந்து கொண்டு பார்த்து கொண்டிருக்கிறோம். கால கொடுமை இப்படி செல்போன் வழியில் வந்து வெச்சு செய்வதை எப்போது தான் உணர்வது.

இயல்பாக கடந்து போவதெல்லாம் வெற்றி என்றாகி விட்டால்...நிஜ வெற்றி எது என்ற சந்தேகம் வந்து விடாதா. செல்போன் வளர்ச்சி நல்ல திறமையை வெளிக்கொண்டு வருகிறது. சந்தேகமில்லை. கூடவே சாத்தான்களையும் தூக்கி பிடிக்கறதே. அங்கு தான் கவலை.

வீட்டு பக்கத்தில் இருக்கும் பார்க்கில் நானும் நண்பரும் ஒரு டாபிக்கில் விவாதம் செய்து கொண்டிருக்கிறோம். யாரோ பக்கவாட்டில் நம்மை பார்ப்பது போலவே உணர என்ன என்று கேட்டால்... அங்கொரு இடியட் நாங்கள் பேசுவதை வீடியோ எடுத்துக் கொண்டிருக்கிறான். கேட்டால் சூப்பரா பேசறீங்க.. அதான் எடுத்தேன் என்கிறான். துளி குற்ற உணர்வு இல்லை. தவறென்ற துளி உணர்வில்லை.

நான் நியாயம் தர்மம் பேச.. என் நண்பன் எகிறி ஒன்னு விட்டான். பிறகு தான் அழித்தான்.

அப்படி என்றால் நவீன தொழில் நுட்பம் வேண்டாமா. இல்லை அப்படி இல்லை. வரைமுறைப் படுத்த வேண்டும். நடைமுறை சிக்கல் இருக்க தான் செய்யும். அதற்காக எல்லார் கையிலும் தற்காப்பு என்பதற்காக துப்பாக்கியைக் கொடுத்து விட முடியுமா. அதை விட பெரிய ஆயுதம் இந்த செல்போன். இந்திய சந்தை மனித சந்தை. வியாபாரத்துக்கு பொருட்கள் வந்து வந்து குவிகிறது. பொழுது போக்கும் மோகம் அதிகமுள்ள இந்திய இளைஞர்கள் திறன்பேசிகளாய் வாங்கி குவிக்கிறார்கள். என்னவோ போனை வெச்சு லட்சம் ரூபாய் சம்பாதிப்பது போல. வெட்டிப்பயலுங்க. சாலையை கடக்கும் போது கூட பாட்டு கேப்பானுங்க. பஸ்ல மற்றவங்க பத்தி எந்த கவலையும் இல்லாம சத்தமா படம் பாப்பானுங்க. மிச்ச நேரங்களில் இருக்கவே இருக்கு கேமரா. எங்க எத பார்த்தாலும் போட்டோ எடுப்பானுங்க. அவ்வளோ தான். நேரம் கேட்டு... கண்கள் கெட்டு.. உடல் நலம் கேட்டு... உழைக்கும் திறன் கெட்டு... வீணா போனா... அப்புறம் எப்படி இந்தியா வல்லரசு ஆகும்.. வெங்காய அரசு ஆகும்.

எந்த செய்தி வந்தாலும் அதன் உண்மைத் தன்மை தெரியாமல்.. தெரியவும் தெரியாமல்... உடனே பார்வார்டு பண்ணினால் தான் அன்றைக்கு உயிரே வாழ முடியும். வதந்திகளை உருவாக்கி பரப்பி அதில் சந்தோசம் அனுபவிக்கும் சில்லறைகள் ஒவ்வொருவன் கையிலும் திறன்பேசி அம்மணமாக இருக்கிறது.

திறன்பேசிகளை சரியாக பயன்படுத்தி உபயோகமாக மாற்றும் மனிதர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் ரேசியோவில் குறைவு.

எல்லாமே மீம்ஸ் என்ற பெயரில் நகைச்சுவையாக்கி சீரியஸ்னெஸ் இல்லாமல் போனதுக்கு இந்த செல்போன் காரணம் என்றால் ஒப்புக்கொள்ள தான் வேண்டும். எது சொன்னாலும் உருட்டு என்பது... பூமர் அங்கிள் என்பது... இன்றைய இளைய சமூகம் உறவுக்காக கண்ணீர் விட்டு யாராவது பார்த்திருக்கிறோமா. இளமை கண்கள் மூடி திறப்பதற்குள் ஓடி விடும் என்ற படு பயங்கர நிஜம் ஏன் இவர்களுக்கு தெரிவதில்லை. பூனை கண்ணை மூடினால் உலகம் இருட்டாகி விடும் என்று நம்புவது போல கையில் மொபைல் இருந்தால்... உலகம் உள்ளங்கையில் என்று இவர்கள் நம்புகிறார்கள் போல. இல்லை. நிஜம் இவர்களிடம் இருந்து வெகு தூரத்தில் இருக்கிறது. மட்டு மரியாதை அற்ற.... பெரியவர்களை மதிக்காக இளைய சமூகம்... கண்டிப்பாக உருப்படாது. கையில் பிடித்துக் கொண்டே அலைய வேண்டியது தான். அதுவும் ஒரு கட்டத்தில் சார்ஜ் போயி விடும். கையில் மொபைல் இருந்தால்.. என்னவோ தமிழ்நாட்டை விலைக்கு வாங்கி விட்டது போல தான் நினைப்பு. நடையும்.. பார்வையும்... மயிறு. அந்த போனை வாங்குறதுக்கு வீட்டுல எவ்ளோ கஷ்ட பட்டாங்களோ. பிச்சை எடுக்கற மாதிரி கெஞ்சி வாங்கின காசுல வாங்கின மொபைலா கூட இருக்கும். எதற்கு வாங்கினார்களோ அதை விடுத்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருக்கும்....அந்த ஆதங்கம் தான்... இங்கே வெடிக்கிறது.

பிறந்த நாள் கொண்டாட்டம்.. கல்யாண காது குத்துக்கு... ஏன் சாவுக்கு கூட புகைப்பட களஞ்சியம் தான். மனதால் உணர்வதும் கிடையாது. கண்களால் காண்பதும் கிடையாது. வானவில் வந்தால் கண்களால் பார்த்து மனதை நிறையுங்கள். அது ஓர் அனுபவம். மூளை நிரம்பும் சுவாசம் போல. பார்த்து உள் வாங்குவதற்கு முன்பே அதை போட்டோ எடுத்து பொதுவில் உடைத்து போட நினைக்காதீர்கள். ஒரு சாதாரண மொக்க காட்சி கிடைத்தால் கூட அதை உடனே போட்டோ எடுக்க தான் தேடுகிறது அரிப்பெடுத்த கை. புகழ் போதையின் உடைந்த பல்பின் வெளிச்சம் அது.

நல்ல போட்டோகிராபர்கள் போட்டோ எடுக்கும் அந்த வேலையை செய்வார்கள். ரசிகர்கள் சும்மா பார்த்து ரசிக்கலாமே. புகைப்படங்கள் நினைவுகள் என்பது போயி... குப்பைகள் ஆகி விட்டனவோ என்று தோன்றுகிறது.

கல்யாண வீட்டில் கேமராமேன் ப்ரபஸ்னலா எடுத்துக் கொண்டிருக்கையில்... முந்திரிக்கொட்டை மொக்கை பெருசுங்க... குறுக்க மறுக்க நின்னு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கும். அப்படியே காலத்துல பதிகின்ற காட்சியை எடுத்து தள்ளுகிற மாதிரி போஸ் வேற. ஆட்டு ஆட்டென்று ஆட்டி... பிக்சல் கெடுத்து.. போகஸ் போயி... அதுக்கு அந்த ஆட்டம்....கிறுக்கு முண்டங்க. பெரும்பாலும் ஒரு சராசரி நபரின் திறன்பேசி முழுக்க குப்பை போட்டோக்கள் தான் நிறைந்து இருக்கும். இதனால் யாருக்கு என்ன பிரயோஜனம். ஏன் எல்லாவற்றையும் போட்டோவாக்கி மாட்டவே நினைக்கிறது இன்றைய நவீன மனம். கண்டுபிடிப்புகள் தேவைக்கு தான். தானே வைத்துக் கொள்ளும் ஆப்புக்கு அல்ல.

சுலபம் என்பதற்காக எழுத வேண்டிய ஒன்றை கூட கிளிக்கிக் கொண்டு போவது... சோம்பேறித்தனம் தான். போனில் நம்பர் இருக்கிறது என்று எந்த எண்ணையும் நினைவில் கொள்ளாமல் போனது போல எழுதும் பயிற்சிம் அடிபட தொடங்கி விட்டது.

அதுவும் வீடியோ கலாச்சாரம்... மனித குப்பைகளை வெளிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது. ஆட்டம் என்ற பெயரால் செய்யும் கிறுக்குத்தனங்கள்... வீட்டில் நடக்கும் எல்லாவற்றையும் காட்சியாக்கி திரையில் உலவ விடுதல்... (இன்னும் புணர்வதை மட்டும் தான் காட்டவில்லை) அதற்கு கீழே மோசமான வார்த்தைகளால் கொட்டி ஆதங்கம் தீர்ப்பதாக அவரவர் கீழ்மையை ஒப்புக்கொள்தல்... என்று மானுட சமூகம்... சமூக கழிவுகளாக மாறிக்கொண்டிருப்பதை காண பதபதைக்கிறது. என்ன செய்தும் வியூஸ் அதிகம் பண்ணி பணம் சம்பாதிப்பது ஒரு திட்டமாக கூட இருக்கலாம். ஆனால் அதில் சமூக அக்கறை கொஞ்சம் கூட இல்லாமல் போகலாமா...

வெளிப்படையாக பேசுவதாக சொல்லிக் கொண்டு செக்ஸ் சம்பந்தமான கேள்வி பதில் சேனல்கள்... பிட்டு படங்களுக்கு பதிலாக பிட்டு ஒலிச்சித்திரம் காட்டுவதெல்லாம் சமூக கேடு. அந்த வீடியோவை 12 வயசுக்காரனும் பார்க்கிறான். 15 வயசுக்காரியும் பார்க்கிறாள். விளங்குமா.

பொதுவாக எல்லா குழந்தைகளுமே அந்த வயதுக்கான குறும்பும் மழலை மொழியாக ரசிக்கும்படியான சேட்டைகளில் தான் இருப்பார்கள். என்னவோ தன் குழந்தை மட்டும் தான் அப்படி என்று நினைப்பது ஒவ்வொரு அப்பா அம்மாவின் சொந்த கற்பனை. எப்போதாவது வித்தியாசமான நிகழ்வுகள் நடக்கையில்... அதை ஏதேச்சையாக படம் பிடிப்பது வேறு. அப்படி ஒரு நிகழ்வுக்காக காத்திருப்பது வேறு. இப்போது நடப்பது காத்திருப்பது தான். இன்னும் சொல்ல போனால் சொல்லிக் கொடுத்து பேச வைத்து அதை ட்ரெட்ண்டிங் ஆக்கி.. என்ன கருமம் இது. சிறு வயதிலேயே புகழ் வெளிச்சம் படர விட்டு பிறகு அதற்கு ஏங்க செய்யும் வேலை...தன் பிள்ளைக்கு தானே சூனியம் வைத்துக் கொள்வது தான். நிஜமான திறமைகள் வரவேற்கப்படுகின்றன. அதில் வேஷம் கலந்ததால் தான்... சுட்ட வேண்டி இருக்கிறது.

அடுத்து தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்று சொல்வது போல கையில் கேமரா இருப்பதாலே எல்லாரும் ஆசான்கள் ஆகி விடுவது. எல்லாவற்றுக்கும் அறிவுரை. எப்போதும் அறிவுரை. இதை தின்னு அதை தின்னு... உடற்பயிற்சியா... இதை செய்... இப்படி செய். உள்ளூர் ட்ரிப்பா இங்க போ. வெளியூர் ட்ரிப்பா... அங்க போ. இந்த துணி வாங்கு. அந்த பைக் வாங்கு. இந்த படம் சரி இல்ல.. அந்த படம் மொக்க. மருத்துவமா... மற்ற விஷயமா... ஆளாளுக்கு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் நிஜமாகவே ஒரு நிபுணரின் கருத்துகள்... அறிவுரைகள்... பாடங்கள்... தேவையான மனிதர்களிடம் போய் சேருவதில் சிக்கல்.. அல்லது தாமதம்.. அல்லது சேரவே முடியாத நிலை. நகல்கள் நிறைந்தது விட்டதால் அசல்கள் அமைதியாக இருக்க வேண்டிய சூழல். நிபுணத்துவம் இல்லாத... சும்மா அடித்து விடுவதை பார்த்து நம்பும் கூட்டம் இங்கு அதிகம். கிராஸ் செக் என்ற பதத்துக்கு அர்த்தம் அறியாத கூட்டம் இங்கு நிறைய. போலிகள்... வீடியோ வீடியோவாக போட்டு நமக்கென்று இருக்கும் சமூக வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருப்பதை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்

சோத்தை சோறா பார்த்த வரை எல்லாமே நல்லதா இருந்துச்சு. எப்ப கலோரியா பார்த்தாமோ அப்ப ஆரம்பிச்சது...இந்த கிறுக்குத்தனங்கள் எல்லாம். உயிரோட இருக்கும் போதே இந்த உடம்ப மருத்துவ ஆராய்ச்சிக்கு ஒப்புக்கொடுத்தது. மனநிலை சரிவு தான் நவீனம் என்றாக விட்டது. இப்படி கூடிக்கொண்டே போகும் பைத்தியக்காரத்தனங்களை களைதல் காலத்தின் கட்டாயம். 3500 வருஷ மூத்த மொழிக்காரன் செய்யற வேலை இது அல்ல.

என்னவோ சினிமா சேவை மனப்பான்மையில் செயல்படுவது போல தலைதெறிக்க கருத்து சொல்லிக்கிட்டு. அது பணத்தை போட்டு பணத்தை எடுக்கற பிசினெஸ் என்று கூட தெரியாதா. ரசனைக்கு எல்லை இல்லையா. செல்பிக்கு சாகர கூட்டத்தை விஷம் வெச்சு கொல்ல சட்டம் வந்தால் நலம்.

மோட்டிவேஷன் என்ற பெயரில்.. 24 மணி நேரமும் பேசிக்கொண்டே இருந்தால்... எப்படி சகிப்பது. கொஞ்சம் கூட அமைதி இல்லாத வாழ்வை இந்த உள்ளங்கை குட்டி சாத்தான் செய்து கொண்டிருக்கிறது. மாபெரும் அடிமைத்தனம் அதன் வழியாக கட்டமைக்கப்படுகிறது. இறுதியில் எல்லாமே வியாபாரம் என்ற சொல்லில் வந்து நிற்கிறது. வாங்கவும் விற்கவும் என்ற செயல்பாட்டுக்கு இடையே மனிதன் வாழ்வது எப்போது. 24 மணி நேரத்தில் பொழுது போக்கு என்ற சிறு நேர புத்துணர்வு...24 மணி நேரத்தையும் எடுத்து சோம்பேறி ஆக்கிக் கொண்டிருப்பதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது. எப்போதும் வீடியோக்களை பார்த்துக் கொண்டே பொழுதை போக்கி ஒண்ணுக்கும் உதவாத மூளையாக மாறிக் கொண்டிருக்கிறதே... அதற்கு என்ன செய்ய. வீடும் கண்டு கொள்வதில்லை. நாடும் கண்டு கொள்வதில்லை என்றால் அவர்கள் வெறும் இயந்திர அடிமையாக ஆகி விட மாட்டார்களா.

பிறகு நாட்டின் வளர்ச்சி எப்படி உருவாகும்.

இதையெல்லாம் யார் தான் வரைமுறை செய்வது.

சொல் பேச்சு கேட்காத செல் பேச்சு மட்டுமே கேட்பேன் என்று சொல்லும் பிள்ளைகளை தூக்கி போட்டு மிதிக்க வீட்டில் இருக்கும் அப்பா அம்மா தான்...முன் வர வேண்டும். மாறாக அவர்களும் கையில் தூக்கி புடித்துக் கொண்டு செல்லே கதி... சீரியலே கதி... கிரிக்கெட்டே கதி என்று கிடந்தால் பொழப்பு கிழிவது உறுதி.

செல்போன் வாங்கி தரலன்னு எந்த இடியாட்டாவது செத்தா சாகட்டும். அதெல்லாம் இருந்து ஒன்றுக்கும் ஆக போறது இல்லை.

இளைஞர்கள் நான்கு பேர் அமர்ந்திருந்தாலும்.. நான்கு தலைகளும் குனிந்தே இருக்கின்றது. யாரும் யாரிடமும் பேசுவதில்லை. என்ன கருமம் இது. வயதுக்குண்டான சில்மிஷங்களை பேசவாவது வேண்டும் தானே. அதை கூட வேறு எவனோ பேசியதை... காட்டியதை தனியாக பார்த்து... எதுக்கு தான் ஆகும் அந்த மனமும் உடலும். மொத்தத்தில் சோம்பேறி கூட்டத்தை... கிறுக்கு கூட்டத்தை... குடிகார கூட்டத்தை... காசிப் உருவாக்கும் கூட்டத்தை... பெரியவர்களை மதிக்காத... எல்லாவற்றுக்கும் சிரிக்கும் லூசு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

யு டியூபர்க்ளுக்கு தகுதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் சேனல் ஆரம்பித்து விட முடியும் என்ற சுலபத்தை கொஞ்சம் இறுக்கி பிடிக்க வேண்டும். தகுதியின் அடிப்படையில் தான் அனுமதி வழங்க வேண்டும். சிறு குழந்தைகள் சேனல் ஆரம்பிப்பதை கட்டாயம் தடை செய்ய வேண்டும்.

மொத்தத்தில் வரைமுறை வேண்டும். இல்லையெனில்.. வாய் கிழிந்த முகத்தோடு சிரித்துக் கொண்டே திரியும்.... காதற்ற இச்சமூகம்.

- கவிஜி

Pin It