வயதாகும் போது கோமாளிகள் ஆகாமல் இருக்க கவனத்தோடு இருக்க வேண்டும். பல கெத்துகள் வெத்துகளானதை பார்த்து விட்டோம். பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்க்க பார்க்க வயதாகி விடுவது இயல்பு. அது ஒரு ப்ரோஸஸ். வயது ஏற ஏற மனதின் வடிவம் மாற வேண்டும். தன்மையின் தகவமைப்பில் பழம் போல பழுத்து... சுவை கூடும் இனிப்பில் புன்னகைக்க வேண்டும்.
மொட்டு விடும் அனிச்சையின் மொழி கொள்ளலே வயதாவதின் வடிவம். இயல்பினும் இயல்பாக பனி உருளும் நுனிப் புல் ஆகி எட்டு திசைக்கும் இசை பட அசைதல் அது. முந்திக் கொண்டு நிற்பது கூடாது. முன்ன விட்டு வழி நடத்துதலே அழகு. பின்னிருந்து பேசுதல் ஆகாது. உண்மையில் இருந்து பேசுதல் பேரழகு. உரக்க பேச வேண்டிய தேவை இல்லை. உள்ளத்தின் கதவுகள் திறந்திருந்தாலே போதும். மௌனமும் மொழி ஆகும். மனமெல்லாம் பூ வாகும். கருணை கொப்பளிக்க காலம் கூடும். கடவுள் ஆகி விட்டால் கவலை தீரும்.
ஒன்று புத்தகம் போல இருக்க வேண்டும். எந்தப் பக்கம் திருப்பினாலும்... செய்தி கிடைக்கும். அல்லது ட்ரங்கு பெட்டியாக இருக்க வேண்டும். திறக்க திறக்க நினைவுகளில் நீந்தும் சிறுபிள்ளை வாசம். இரண்டும் இல்லாமல் டிவி பொட்டியாக இருந்துவிடல் ஆகாது. சலிப்பு ஏற்படும். பக்கத்து வீட்டை எட்டிப் பார்க்க கற்றுத்தரும் சீரியல் மொழி மனிதன் சின்னவனாகும் வழி. குறுக்கு புத்தியில் இருந்து வெளியேறும் வயதுக்கு பலம் அதிகம். குதர்க்க சித்துவில் இருந்து வெளியேறும் மனதுக்கு பவள வண்ணம்.
வளைந்து கொடுக்காத மரம் புயலுக்கு தாங்காது போல.. வாழ்க்கை பொழியாத மனம் வயதாவதற்கு ஆகாது. வாரி அணைக்க தெரிந்த கைகளில் ஒரு மொத்த வாழ்வின் முத்தங்கள் ரேகையாய் படிந்திருக்கும். எல்லாருக்கும் கொடுத்து விட்டு எல்லையில் நிற்கும் சாமியாகும் வரம் வயதாவதற்கே கிடைக்கிறது. எனக்கு எனக்கு என்று ஆளாய் பறக்கும் மனதில் அனுபவமற்ற அரைவேக்காடு தானே மூடி உதைத்துக் கொண்டிருக்கும். முழு மனிதர் ஆக வயதாவதை ஏற்றுக் கொள்ளல் முக்கியம். பிறகு அதற்கு தகுந்தாற் போல காரியங்களை ஆற்றுவது அதன் பக்குவத்திற்கு கிடைக்கும் பரிசு.
வெளித் தோற்றத்திற்கான பூச்சு காலத்துக்கு தக்க இயல்பாகி விட்டாலும்.... உள்ளே பூச்சற்ற வெண்மை தாலாட்ட வேண்டும். முகத்துக்கும் தலைக்கும் பூசும் பூச்சு நிம்மதி தரும் என்றால்... மனதுக்கு பூசும் பூச்சு நிம்மதி எடுக்கும்.
பொறுமைக்கு அருஞ்சொற்பொருள் மூத்த மனிதனின் முகக்கனிவென்றே இருக்கட்டும். குற்றம் கண்டு கொண்டே இருக்க சுற்றம் இருப்பது இருக்கட்டும்... உற்றதே விலகத் தொடங்கும். மரணத்துக்கு பயந்தவர் மற்றவருக்கு இரங்குவதில்லை. தன்னைப் பற்றியே சிந்திக்கும் சீக்கு முதுமைக்கு அழகல்ல. தன்னியல்பின் நிழலாக அசையும் ஆறு போல இருந்தால்... வேறு என்ன வேண்டும். விதி விட்ட வழி என்றெல்லாம் ஒன்றுமில்லை. வீட்டுக்கே வெளிச்சமாகும் வல்லமை வயதாவதற்கு உண்டல்லவா.
கிடந்து தவித்தல் கடிந்து கொண்டே இருத்தல். எழுந்து பறக்க... கடினப்பட்ட கவசத்துக்கு ஆகாது. பழம் போல இருக்க வேண்டும்... வயதான மனது. விழுந்து சிதறினாலும்... பல உயிர்களுக்கு உணவாக வேண்டும். முடங்கிக் கொண்ட மூச்சில் விஷம் ஏறுவது இயல்பு. மூர்க்கம் கொண்ட மனதில் சர்ப்பம் ஊர்வது இயல்பினும் இயல்பு. உணர்வினில் இருக்க... சில இயல்புகளை தகர்ப்பது காலத் தேவை. பூக்களின் குதூகலத்திற்கு பழகிய மனதில் உடல் ஒரு சாது. வீதியில் இருக்கும் வேப்ப மர பூவையும் ரசிக்க பழகு. செய்தித்தாளில் சிக்கி சீரழியாமல் இருக்க மாற்று வழிகள் நிறைய உண்டு... மதகத ராசாக்களே.
வேடிக்கை பார்க்கும் கண்களில் வானம் பூமி யாவும் பேரழகு. வீடியோ பார்க்கும் கண்களில் தான் புரை விழுகிறது. மீசையை முறுக்கிக் கொண்டே கிடப்பது வெத்து. கொத்து சாவியை இடுப்பில் கொண்டே திரிவது வெத்திலும் வெத்து. வியாக்கியானத்தை விட்டொழிந்த கணத்தில் கவனிக்கலாம்... கனமற்ற கண்களில் சிறுபிள்ளை கோலி குண்டு சுழலும். நினைவுகளை அசை போடுதலில் இருக்கும் சுகம் கண்டு கொள்ளுங்கள். எதிர் வீட்டு மனிதர்க்கும் இரங்கும் குணம் வாழ்வின் அடிப்படை. பிடிவாதங்களில் இருந்து விடுபடும் போது ஒரு வாதமும் உடன் இருப்பதில்லை. முடக்கு வாதம் கால்களில் வருவதை விட மனதில் வருவது பேராபத்து.
வயதாவதைப் போல துக்கம் இல்லை தான். ஆனால் வாழ்வின் போக்கில் அதை அப்படியே ஏற்க பழகுதலே அதைக் கொண்டு வெளிப்படும் தீவிரத்தை அடக்கும் வழி. இனம் புரியாத கோபங்களை தவிர்க்க... முளைத்த கொம்புகளை மடக்க முயற்சியுங்கள். தேவையில்லாத பதட்டங்களை அழகாய் அழிக்க மூத்தவனாகுதலே முறை. வழியை அடைத்துக் கொண்டு நிற்கையில் தான் கூட்டம். வழி விட்டு விட்டால்... ஆட்டம் பாட்டம் தான். அமைதிக்குள் செல்வது தான்... வயதாவது. மரணத்துக்குப் பழகுவது தான்... வயதாவது. மனிதர்களிடையே தெய்வமாகுதல் தான் வயதாவது. இப்படி நோக்கினால்... எப்படி வரும் மன நோவு. உடல் நோவுக்கும்கூட உடன் இருக்கும் அழுத்தம் தானே முதற் காரணம். மூடி இருக்கும் கைகளில் வியர்வை இருக்கும். திறந்து சிலுவையாகி விடுங்கள்.. சிள் காற்றில் சிலிர்க்கலாம்.
பேரன்பில் திளைக்கும் மனதுக்கு வயது ஆவதே இல்லை. பெரு வனமாய் ஆகும் சிந்தைக்கு சீக்கு எப்படி வரும். உடல் கடந்த உன்னதத்திற்கு பழக... வயதாவதைப் போல சிறந்த வண்ணம் ஏது. பிள்ளைகளிடம் இருக்கும் கண்டிப்பு அவர்கள் பிள்ளைகளிடம் ஏன் இல்லை தெரியுமா. அது தான் முதிர்ச்சி. தளர்ச்சி என்று எடுத்துக் கொள்வது பின்னடைவு. மலர்ச்சி என்று எடுத்துக் கொண்டால்... மரணமும் நிறைவு. மனம் விட்டு சிரியுங்கள். மற்றவர் சிரிக்க ரசியுங்கள். மாதுளை என இருக்கட்டும் உங்கள் மௌனம். தலை வாழையென கிடக்கட்டும் உங்கள் வாழ்வு.
பூமியை முதுகில் சுமப்பதை விட்டு விட்டு... இதயத்தில் வானத்தை ஏற்போம்.
- கவிஜி