ரிசல்ட் வரும் நாள் எப்போதுமே ஒரு வகை பதற்றத்தையும் சேர்த்தே இழுத்துக் கொண்டு வருகிறது. அது ராசாத்தி வரும் நாள் போல. அப்படி ஒரு திகிலடித்த நாள். புலி வருது புலி வருது என்பது போல அந்த நாள் வந்தே விட்டது.

அப்படித்தான் இருந்தது. நாள் முழுவதும் மதிப்பெண்களின் குதியாட்டம். தாங்க முடியவில்லை. அதீத ஒப்பனையில் அரியணையில் ஆடிய மதிப்பெண்களும் இருந்தது. ஒப்பனையே இல்லாமல் தெருவில் ஆடிய மதிப்பெண்களும் இருந்தது. பல்லு போன மதிப்பெண்களின் சோக ஆட்டமும் இருந்தது. ஆளாளுக்கு நான் இவ்ளோ.. நீ.. நீ நீ.. என்று நடுக்கத்தின் நயத்தில் தான் யாரென்றே சற்று நேரம் மறந்து போய் வெறும் மார்க் ஷீட்டாக நடந்து கொண்டிருந்த பிள்ளைகளைக் காண பயமாக இருந்தது.

திருவிழாவில் காணாமல் போவதற்கே வந்திருக்கும் ஆடுகள் போல தான் அத்தனை பேரும் பள்ளியில் கூடி இருந்தது. அமர்ந்திருந்தால் வேடிக்கை. உடன் நடந்தால் தவிப்பு. தனித்திருக்க வாய்ப்பே இல்லாத காம்பவுண்ட் கரகரப்பு... பார்க்க பார்க்க பதற்றத்தில் தடுமாற செய்தது. அதே நேரம் படபடப்பில் கடிகாரம் செய்தது. பிள்ளைகள் தான் பித்து பிடித்தாற்போல சுழல்கிறார்கள் என்றால் பெற்றதுகள் அதற்கு மேல். திக்கு தெரியாத காட்டில் திசைக்கு அலைவது போல. அப்படி ஒரு பலவீனத்தை மெல்ல மெல்ல காலப்போக்கில் நாகரீக சமூகம் கண்டடைந்து விட்டிருக்கிறது. போட்டி என்று பெயர் வைத்து மாய சுமையை சுமக்க பழகி விட்டிருக்கிறது. நிதாமனற்ற நிர்பந்த அலைச்சல்... நேரம் ஓட ஓடி தறிகெட்டு ஓடியது.exam resultsதான் முன்னே நடந்து பெற்றோர் பின்னால் வர வந்தவர்களும் இருந்தார்கள். பெற்றோர்கள் முன்னால் நடந்து ஸ்டூடெண்ட்ஸ் பின்னால் வந்த காட்சியும் இருந்தது. முகம் முழுக்க பூரித்த மதிப்பெண்களும் உண்டு. கழுத்து வரைக்கும் பிதுங்கி நின்ற கவலைகளில் கரகரத்த மதிப்பெண்களும் உண்டு. தலையே இல்லாமல் வந்த மார்க்குகளும் உண்டு. எது பற்றியும் கவலைப்படாமல் சுவற்றில் அமர்ந்து சிரிப்பாட்டும் வெற்று செதில்களும் இருந்தன. குட்டிச்சுவர் எல்லா காலத்திலும் காலத்துக்கு தகுந்த கோமாளி வேஷத்தில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கு கழுதை உதைத்தாலும் கவலை இல்லை. காலம் வெளுத்தாலும் கவலை இல்லை. வீணா போன தண்டங்களை கடந்து வந்த போது கண்கள் நடுங்க எதிர்காலத்தை சிமிட்டிக் கொண்டிருந்த சிலரையும் பார்க்க முடிந்தது.

மினுக்கிகளை காண முடிந்தது. கண்ணும் கருத்துமாய் நினைத்த குரூப் வேண்டுமே என்று கண்ணீர் விட்டவர்களையும் கவனிக்க முடிந்தது. நிக்க நேரம் இருக்காது.. செய்ய வேலை இருக்காது என சொல்வது போல சிலதுகள் கிழக்கும் மேற்கும் சும்மா நடந்து கொண்டே இருந்ததையும் பார்க்க முடிந்தது.

பறவைகள் பலவிதம் என்பதை நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் அருகே உணர்ந்தேன்.

இந்த அறையில் இது.. அந்த அறையில் அது என்று பேருக்கு எழுதி வைத்திருக்கிறார்களே தவிர அங்கும் வரிசை மீறப்பட்டது. தெரிந்தவருக்கு முன்னுரிமை தரப்பட்டது. பணக்காரனுக்கு பல் இளிக்கப் பட்டது. விவர குடோன்களாக சில பெற்றோரையும் கண்டோம். விவரமா அப்பிடின்னா என்றும் சில பெற்றோரைக் கண்டோம். போகிறவர்கள் எல்லாம் வரைந்த பிசிறு தட்டிய ஓவியமாய் வராண்டா பெஞ்சில் அமர்ந்திருந்தேன். அசையவும் சங்கோஜம். ஏனோ மனிதர்களை விட்டு விலகி சமீபத்துக்கு வெகு தூரத்திலேயே நின்றேன். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு வாழ்வை சிமிட்டிக் கொண்டிருந்ததை உணர உணர எதற்கு இந்த ஓட்டம் என்று ஒரு பக்கம் ஓடினாலும்... ஓடாத வண்டி ஊர் போய் சேராதே என்ற வாழ்வின் நிஜமும் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

ஆள் பூச்சி மாதிரி. மீசை தாடியில் புதருக்குள் இருந்து வந்தவன் போலயே ஒருவன். அவன் நடையே ஒரு கோடு போட்டது போல. எந்த அலட்டலும் இல்லை. அவன் நடையைக் கொண்டு அவன் பாஸ் பெயில் என்று சொல்லவே முடியாது. யாரையோ தேடிக் கொண்டே இருந்தான். சக நண்பர்களுக்கு கை கொடுத்து வாழ்த்தினான். பெரிய மனுஷ தோரணை. ஆனால் மடக்கி பேக்- குள் வைத்து விடலாம். அவ்வளோ தான் உருவம். அந்த நேரத்துக்கு மனதுக்குள் ஒரு தெளிந்த சிரிப்பை அள்ளி வீசி சென்று விட்டான்.

ஆள் பூதம் மாதிரி இருக்கான்... மூஞ்சியில் பேருக்கு கூட ஒரு முடி இல்ல. செகண்ட் குரூப்புக்கும் தேர்ட் குரூப்புக்கும் இடையே தள்ளாடும் காளை அது. சுய நொந்தல் அவன் நெற்றியில் ஓடிக் கொண்டிருந்தது. சோலி முடிஞ்சுசு போன்ற பாவனையும் அவ்வப்போது. அவனும் சிரிக்க செய்து விட்டான்.

வெண்ணெய்களா ஒழுங்கா படிச்சிருக்கணும்ல. உள்ளே தோன்றியது.

கவன ஈர்ப்பு கண்றாவிகள்... இடம் பொருளற்ற சத்தங்களை குவித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வாத்தியாரை தூரத்தில் அப்படி திட்டி விட்டு... இப்ப பாரு எப்பிடி பேசறேன்னு... அவரை பார்த்ததும் அப்படியே சாந்தமாய் சரிந்த கொடூரனையும் பார்க்க முடிந்தது. கல்லூரி முடிந்து வேலைக்கு போகும் பெண் மாதிரி தன்னை காட்டிக்கொண்டு... சுற்றி நான்கு பசங்களை நிற்க வைத்தபடியே நின்ற இடத்திலேயே நாட்டியம் செய்தபடி இருந்தவளை பார்க்க நேர்ந்தது. குடம் குடமாய் கொட்டிய கொடுமையை என்னத்த சொல்ல. திரும்பிக் கொண்டேன்.

ஒவ்வொரு குடும்பமும் தன் அளவு சுமையை சுமந்து வருவதை பார்க்க பார்க்க வினோதமாக இருந்தது. சர்வைவல் தாகம் ஒவ்வொரு முகத்திலும் தாண்டவமாடியது. தொன்று தொட்ட தற்காப்பு ஒவ்வொரு பிள்ளையைச் சுற்றிலும் பலவந்தமாக சூழ்ந்து இருந்ததை காண காண அள்ளு விட்டது.

பக்கத்தில் ஒரு பையன் பரிதாபமாக அமர்ந்திருந்தான். அவனுக்கு அந்தப் பக்கம் அவன் அப்பா பேச ஒன்றுமில்லாமல் சூனியம் வெறித்திருந்தார். அந்த அம்மா என்னென்னவோ சொல்கிறது. அவன் செகண்ட் குருப் தான் வேண்டும் என்கிறான். கூட வந்த முதலாளியும் என்னென்னவோ சொல்லி பார்க்கிறார். தேர்ட் குரூப்பில் என்ன பிரச்சனை. மார்க் கம்மியா இருக்கறதுனால தான் இவ்ளோ பேச வேண்டி இருக்கு. ஆனா உனக்கு மனசுக்கு புடிக்கணும். நாம் வேற ஸ்கூல்ல ட்ரை பண்ணலாம். அங்கயும் கிடைக்கலனா தேர்ட் குரூப் தான். இப்போதைக்கு படி. காலேஜ் போகும் போது.. கம்பியூட்டர் சைன்ஸ் டிப்ளமோ பண்ணி... என என்னென்னனவோ சொல்கிறார். அவன் கண்களில் நீரோடு செய்வதறியாமல் அமர்ந்திருந்தான். எனக்கு கூட கண்கள் கலங்கி விட்டன. எந்தப் பக்கம் போவது என தெரியாமல் கையிலிருக்கும் மார்க் போதாமை அவனை அமர்ந்தபடியே அல்லாட செய்தது. சுற்றிலும் முள் வேலிக்குள் மாட்டிக்கொண்ட மூச்சுத் திணறல் அது. அவன் முகத்தில் அப்பப்பா காலத்தின் சுமை.15 வயதுப் பையனின் மூளைக்குள் கண்ணீர் கசிவதை நான் கண்டேன்.

கொஞ்சம் அழுத்தி படிச்சிருக்கலாம்லடா என்று மனம் விசும்பிக் கொண்டே கேட்டது.

எத்தனை விதமான வினைகளை இந்த ரிசல்ட் தருகிறது. நல்ல மார்க்கில் பாஸ் ஆனவன். மிதமான மார்க்கில் பாஸ் ஆனவன். பார்டரில் பாஸ் ஆனவன்.. அடுத்து பெயிலானவன். பெயிலானவனுக்கு பிரச்சனை வேறு மாதிரி என்றால்.. கொஞ்சம் மார்க் வாங்கி பாசானவனுக்கு பிரச்சனை வேற. சட்டென சிறகுகள் வேலை செய்யாமல் போனால்.. அந்த சின்னஞ்சிறு பறவை வானத்தில் என்ன செய்யும்.

அறிவில்லாமல் எல்லாம் இங்கே யாரும் இல்லை. அறிவில்லாதவன் பிறக்கவே முடியாதே. இங்க பிரச்சனையே வேற. கவனம் இல்லங்கறது தான். அதுல தான் கவனம் செலுத்தனும் பெத்ததுங்க.

சோகமானவனை அவன் சோர்ந்திருக்கிறான் என்று கூட புரியாத சக நண்பர்கள் ஹாய் டா பாய் டா என்று தோளை தட்டி கேசுவல் வாக் செய்ததும் கண்டேன். போங்கடா கோமாளிங்களா அவனே நொந்து உக்காந்துருக்கான் என்று திட்ட தோன்றியது.

நிறைய தோன்றிக் கொண்டே இருந்தது. இன்னொன்றும் தோன்றுகிறது.

பத்தாவது தான் வாழ்வின் திருப்பு முனை. அதில் சரியாக இருந்து விட வேண்டும் என்று சூப்பர் டூப்பர் மார்க்கில் பாஸ் ஆனவன் அதற்கு நேர் எதிரான வேலையை எதிர்காலத்தில் செய்ய நேர்ந்திருக்கிறது. பிடிக்காத குரூப்பில் சேர்ந்தவன்.. பிறகு அதையே பிடித்து அதில் உச்சம் தொட்டவனும் இருக்கிறான். இதோடு முடிந்து விட்டது என்று தான்... கட்டி வைத்திருந்த கனவு நொறுங்கும் போது தோன்றும். சரியான வழிகாட்டுதலின்படி நடை போட்டால்.. இலக்கை மாற்றிக் கொள்ள முடியும். மனம் இளசு தானே. அதை விடுத்து இல்லை.. இது தான் வேண்டும் என்றால் அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். சரி தானே.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை ஒருபோதும் நிகழாது. லட்சியம் பெரிதென்றால் உழைப்பும் பெரிதாக இருந்திருக்க வேண்டும். இல்லை இவ்வளோ தான் நாம் என்றால் அதற்கான ரூட்டை பற்றிக் கொள்ள வேண்டும். வெறும் ஆசை வேலைக்காகாது. வியர்வை சிந்திய உழைப்பே வெற்றிக்கு வழி வகுக்கும்.

இதோ என் பக்கத்தில் அமர்ந்து என்ன செய்வதென்று புரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தவன் ஒரு துளி. பல முகங்களில்.. தடுமாற்றம் தான். தவிப்பின் உச்சத்தில் சில கண்களில் நீர் கூட துளிர்த்தது. உடனே இது தான் சாக்கு என்று இனி கொஞ்சம் விளையாட்டை குறைச்சுக்கோ. சொல் பேச்சு கேளு... என்று அந்த அம்மா அறிவுரையை அள்ளித் தெளிக்கத் தொடங்கி விட்டது. ஒரு பக்கம் மார்க் குறைந்த வருத்தம். ஒரு பக்கம் இப்படி பொதுவில் மானம் போகுதே என்ற வருத்தம். நான் கண்டுகொள்ளாத மாதிரி திரும்பிக் கொண்டேன்.

சிறுவர்களுக்கு வருத்தப்படவும் வழி விட வேண்டும்.

சிஸ்டம் சரி இல்லை சிஸ்டம் சரி இல்லை என்று சொல்லிக் கொண்டே அதே சிஸ்டத்தின் பின்னால் ஓடிக் கொண்டிருப்பவர்கள் நாம்.

என்ன செய்ய. முதலில் ரூல்ஸ் தெரிந்து கொண்டு பிறகு பிரேக் தி ரூல்ஸ் செய்வது பற்றி யோசிக்கலாம். என்ன வெங்காய சிஸ்டம் இருக்கிறதோ அதற்கு தக்க தன்னைத் தயார் செய்து கொண்டு முன்னகர்வது... சேஃபர் சைடு. சேஃபர் சைடு என்பது சிம்பிள்... நல்ல மார்க்கில் பாஸ் ஆகி விடுவது. அதன் பிறகு... மார்க் தான் வாழ்வை தீர்மானிக்கும் திசைகாட்டியா. மார்க் தான் அறிவை எடை போடும் தராசா. முதல் மார்க் வாங்கிய முட்டாளும் இருக்கிறான். பெயில் ஆன அறிவாளியும் இருக்கிறான். இடையே மார்க் என்பதன் வடிவம் தான் என்ன... என்று போராடலாம். புரட்சி செய்யலாம்.

படிக்காத மேதைகளை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக... நாம் படித்து விட்டே மேதையாவோம்... கண்மணிகளே. சேஃபர் சைடு. சேஃபர் சைடு.

- கவிஜி

Pin It