ஒரே மாதிரி இருப்பதில் இருக்கும் சோர்வு அவ்வப்போது யாவருக்கும் வருவது தான்.

ஒரே வீடு ஒரே உடல் ஒரே முகம்... என இருப்பதன் சலிப்பை யாவரும் அறிவோம். ஆனாலும் அதை விடுத்து நகர முடியாத கட்டமைப்பு... தெரிந்தோ தெரியாமலோ நம்மைச் சுற்றி இருப்பதை ஒப்புக் கொள்ள தான் வேண்டும்.

அலுவலகம் வீடு என்று ஒரே வழியில் போய் வருவதில் நாம் போகிறோமோ அல்லது நம் வண்டி போய் வருகிறதா என்று கூடத் தெரிவதில்லை... இல்லையா.

இதுவரை சொன்ன எதன் அடிப்படையையும்... விதி விலக்குக்கு அப்பாற்பட்டு மாற்ற முடியாது என்பதுதான் நமது வாழ்க்கை முறை. அதில் பிழை இல்லை. ஆனால் சிறு சிறு மாற்றங்கள் மூலம் உற்சாகம் கிடைக்குமெனில் அதைச் செய்யலாம் இல்லையா?! உத்வேகம் வெளியே இருந்து கிடைக்காது. உள்ளிருந்து தான் கிளம்பும். அதற்கு நம் வெளித் தோற்றமும் மிக முக்கியம் என்பதை கணக்கில் கொள்க.

இப்போது உங்கள் அறையை எடுத்துக் கொள்ளுங்கள்.change the lifestyleஅந்த பக்கம் இருக்கும் மேஜையை இந்தப் பக்கம் போட்டு, இந்த பக்கம் இருக்கும் கட்டிலை அந்தப் பக்கம் போட்டு.. டிவியை சற்று மாற்றி இடம் மாற்றி வைத்து... ஜன்னல் திரைசீலைகளை வேறு வண்ணத்துக்கு மாற்றி... இப்போது பாருங்கள். உங்கள் அறை உங்களுக்கே புதிதாக இருக்கும். வெளியே எங்கு சுற்றினாலும்... அறையே அடுத்த நாளுக்கான போதனை என்பதை மனதில் கொள்ள வேண்டும். உள் நுழைகையிலேயே உள்ளூர ஓர் உற்சாகம். உணர்ந்தோர் இருப்பீர்.

அப்படி... உடலிலும் வெளி பூச்சுகள் சிலவற்றை தேவைக்கிணங்க.... யாருக்கு என்ன பொருந்துமோ அவர்கள் அதைச் செய்யலாம்.

வயசாயிடுச்சு.... இனி என்ன இருக்குன்னு ஒரு சலிப்பு வரும். அது சலிப்பு மட்டும் இல்லை. வாழ்க்கையை முடித்து விடும்... தனக்கு தானே வைத்து கொள்ளும் ஆப்பு. அந்த சலிப்பை தூக்கி தூர வீச... மனதில் தென்றல் வீச வழி விடுவோம். மூளையைத் துருப்பிடிக்காமல் இருக்க வகை செய்வோம்.

முகத்தை மாற்ற முடியாது. ஆனால் சிறு சிறு ஒப்பனைகள் மூலம் பொலிவாக்கி பளிச்சென மாற்றிக் கொள்ள இயலும். மூணு மாசம் மீசை இருந்தால்... ஒரு முறை மீசை எடுத்துப் பார்க்கலாம். ட்ரிம் பண்ணி பார்க்கலாம். முறுக்கிப் பார்க்கலாம். மடக்கிப் பார்க்கலாம். கொஞ்சமாக தாடி விட்டுப் பார்க்கலாம். நீண்ட தாடி கூட முகம் பொறுத்து. யாருக்கு எது பொருத்தமாக இருக்கிறதோ அதைச் செய்து முகத்தை சற்று மாற்றிக் கொண்டால்... நமக்கே நம்மை பார்க்க நன்றாக இருக்கும். ஒரு வித தெம்பு கூடும்.

பெண்களுக்கு சொல்லவே வேண்டாம். பல பார்லர்கள் காத்திருக்கின்றன.

முதலில் நம்மை நாம் ஆசைப் பட வேண்டும். நம்மை நாமே ரசிப்பவர்கள் ரட்சர்களாகி மற்றவர்களையும் ரசிக்கத் தொடங்குவார்கள்.

முழுக்கை சட்டையே போடுபவர்கள்.. அரைக்கை சட்டை போடலாம். கையை மடக்கி விடுதலில் இருக்கும் விதங்களை செய்து பார்த்தால் என்ன குறையப் போகிறது. சட்டைகளில் தான் விதங்கள் இப்போது குவிந்து விட்டனவே. பொருந்தியதை மாற்றி தன் மீதான நம்பிக்கையை இன்னும் கூட்டலாம். என்ன நிறம் யாருக்கு எவ்விதம் பொருந்துகிறதோ, அது தான் ட்ரெஸ் டிசைனிங். அதை கவனமாக தேர்ந்தெடுக்கப் பழகலாம்.

வழுக்கைத் தலைகள் வெட்கப்படாமல் விக் வைக்கலாம். பழங்காலத்து டோப்பா இல்லை. நவீன விக்...பல வகைகளில் இருக்கிறது. பொருத்திக் கொள்ளலாம். கேலி பேசுகிறவன் கிழக்கு மேற்கு தெற்கு வடக்கு என எப்பக்கமும் கொசுக்களாக மேய்ந்து கொண்டு தான் இருப்பார்கள். கண்டு கொள்ளாத இதயம் வார்ப்போம். என் வாழ்வு. என் பயணம். என் நிம்மதி. தாரக மந்திரத்தை தாள லயத்தோடு மனம் கொள்வோம்.

சீரான நிதானமான பல்லை கடித்துக் கொண்டு செய்யாத உடற்பயிற்சி மூலம் தொப்பையைக் குறைக்கலாம். மூச்சுப் பயிற்சி மூலம் மூச்சு வாங்குவதை தவிர்க்கலாம். முக்கியமாக சோற்றைக் குறைத்து காய்கறிகளை அதிகமாக்கலாம். வயிற்றைக் கவனிப்பது போல.. கலவி எனும் மாபெரும் மானுடப் பயிற்சியை வாரம் ஒரு முறையாவது செய்யலாம். பசங்க வளந்துட்டாங்க.. இனி என்னனு சொன்னா.. அது இன்னொரு ஆப்பு. அப்புறம் முகம் கொடுத்து பேச முடியாத அளவுக்கு புருஷன், பொண்டாட்டி ரோல்ஸ் மாறி விடும்.

அட கல்யாணமே சேர்ந்து ஃபன் பண்ணி எஞ்சாய் பண்ணத் தான. இதுல எதுக்கு ஒரு வயசுக்கு அப்புறம் வெங்காய யோக்கியதை எல்லாம் வருதுன்னு தெரியல. பூட்டுன மாடுக மாதிரி புள்ளைங்க.. பேர புள்ளைங்கன்னு அவுங்க வாழ்க்கையை வாழ்றது... விளங்க முடியா சோ கால்டு பேமிலி தொடர் ட்ரேஜடி. அவர்களுக்கு வாழ்வை கற்றுக் கொடுத்தல் தனி சேப்டர். குழம்பி சீரியல் பார்த்து... தண்ணி அடித்து மூஞ்சை மூணு கிலோ மீட்டருக்கு தொங்க விட்டுக் கொண்டே இருப்பது அக்மார்க் வாழ்நாள் காமெடி. என்னவோ இவர்கள் தான் பூமியை சுமப்பவர்கள் போல எப்போதும் ஒரு சலிப்பு. எத எடுத்தாலும் கஷ்டப்பட்டு கஷ்டபட்டுனு கதை விட்டுட்டு. இஸ்டபட்டுனு சொல்லி பார். இனிக்கும் கண்ணாடி முகம்.

ஒரே பஸ்ல போறத விட்டு வேற வேற பஸ்ல போகலாம். ஒரே வழியை விடுத்து வேறு வேறு வழியைத் தேர்ந்தெடுக்கலாம்.

அட பார்க் போனாலும் சரி பாருக்கு போனாலும் சரி. இந்த வாரம் இதுனா அடுத்த வாரம் அதுன்னு மாறலாம். மூணு செட் செருப்பு, மூணு செட் ஷூ, முதுகு பை ரெண்டு மூணு இருந்தால் ஒன்றும் தவறில்லை. எப்போதும் தன்னை புதுப்பித்துக் கொண்டே இருப்பவனுக்கு சலிப்பு இல்லை. மாறாக இளமை திரும்புதே தான். சோம்பேறிகள் கூட சேர்வதை விட்டொழித்து விட்டு... தான் ஒரு சுறுசுறுப்பு நம்பிக்கையாளன் என்ற பெயரோடு நண்பர்கள் மத்தியில் இருக்கலாம்.

ஒரு வாரம் வலது கையில் வாட்ச் கட்டிப் பாருங்களேன். ஜீன்ஸ் போடாதவர்கள் ஜீன்ஸ் போடுங்கள். ஜீன்ஸே போடுகிறவர்கள்.. காட்டன் பேண்ட்க்கு தாவுங்கள். இந்த வாரம் மருதமலை கோயிலுக்குப் போனால் அடுத்த வாரம் அனுவாவிக்கு போங்கள். இந்த வாரம் வெங்காய மால் என்றால் அடுத்த வாரம்... உருளைக்கிழங்கு மால். பொங்கல் சாப்பிட ஒரு நாள். பூரி சாப்பிட ஒரு நாள். இட்லிக்கு ஒரு நாள். தோசைக்கு ஒரு நாள். வயிற்றைக் காய போட ஒரு நேரம். பிறகு சுவாரஸ்யத்துக்குப் பஞ்சம் இல்லை.

எல்லாம் தாண்டி மனம் என்னும் மேடையை காலியாக வைத்திருப்பது அவசியம். அது சுமை தாங்கி இல்லை என்ற புரிதல் வந்து விட்டால் அதில் இருக்கும் வெற்றிடம் நம்மை நிரப்பும்.

- கவிஜி

Pin It