கவிதை, சிறுகதை, நாவல்கள், மொழி பெயர்ப்புப்படைப்புகள் என தேடித் தேடிப் படிக்கத் தொடங்குகிற புதிய வாசகர்கள் ஏதேனும் ஒரு கட்டத்தில் படித்து முடித்து, தனக்குக் கிடைத்த வாசிப்பு அனுபவத்தை மீண்டும் மீண்டும் அசைபோட்டு, மகிழ்கிற ஒரு மாபெரும் படைப்பு வங்க மொழியில் அதீன் பந்தோபாத்யாய எழுதிய நாவலான ‘‘நீலகண்டப் பறவையைத் தேடி’’. சாலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லைப் போன்றது. ஒருவருடைய வாசிப்புப் பயணத்தில் அந்த நாவல் அப்புள்ளியை சிலர்  வெகுவிரைவில்  அடைவதுண்டு. சிலர் சற்றே தாமதமாக வந்து சேர்வதுண்டு. ஆனால் அந்தப் புள்ளியைக் கடக்காத இலக்கிய வாசகர்களே கிடையாது.

அந்த மாபெரும் படைப்பை நேரிடையாகவே வங்கமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் சு. கிருஷ்ணமூர்த்தி. ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கொல்கத்தாவை தம் வாழிடமாகக் கொண்டவர். அறுபதுக்கும் மேற்பட்ட நூல்களை மொழி பெயர்த்தவர். நீலகண்டப் பறவையைத் தேடி நாவலைப் போலவே இவருடைய இன்னொரு மொழிபெயர்ப்பு நூல். ‘‘ நஜ்ரூல் என்றொரு மானுடன் ’’. தாகூர் கவிதைமரபுக்கு முற்றிலும் மாறுபட்ட வேறொரு கவிதை மரபை உருவாக்கிய கவிஞர் நஜ்ரூல்.

வங்கதேசத்தின் புரட்சிக்கவி என்று அழைக்கப்படுகிற அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் ஒரு சில படைப்புகளையும் தொகுத்து தமிழ் வாசகர்களுக்கு வழங்கிய பெருமையும் சு. கிருஷ்ணமூர்த்தி அவர்களையே சாரும். அதீன் பந்தோபாத்யாய, நஜ்ரூல் ஆகியோரின் வரிசையில் சரத்சந்திரர், சீர்ஷேந்து முகோபாத்தியாய, மகாஸ்வேதாதேவி, அஷாபூர்ணதேவி, சுனில் கங்கோபாத்யாய, மைத்ரேயி, சுபேந்திரநாத் பந்தி யோபாத்யாய, விபூதிபூஷண் பந்தியோபாத்யாய, அன்னதா சங்கர் ராய், மைக்கேல் மதுசூதன் தத்தா ஆகியோரையும் அவர்களுடைய முக்கிய மான படைப்புகள் வழியாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் சு.கிருஷ்ணமூர்த்தி.

வங்கமொழிப் படைப்புகளைக் தமிழில் மொழிபெயர்த்த தைப்போலவே, தமிழ்ப்படைப்புகளையும் வங்க மொழியில் மொழிபெயர்த்தளித்து, இரண்டு மொழிகளுக்கிடையே ஒரு நட்புறவுப்பாலமாகத் திகழ்கிறார் சு. கிருஷ்ணமூர்த்தி. இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல், ஆதவனுடைய சிறுகதைகள், சின்னப் பாரதியின் தாகம் ஆகியவை குறிப்பிட்டுச் சொல்லத்தக்க முயற்சிகள். திருக்குறளை வங்க மொழியிலும் சிலப்பதிகாரத்தை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்திருக்கிறார். மிக நீண்ட இவருடைய தன்விவரப்பட்டியல் அயராத உழைப்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது.

அவருடைய கையில் சிறிது உடற்குறை உண்டு. அவருடைய இடத்தில் யாராக இருந்தாலும் அந்தக் குறையால் உருவாகும் தன்னிரக்கத்தில் மூழ்கி, புலம்பிச் சோர்வதற்கான வாய்ப்புகளே அதிகமுண்டு. ஆனால் அந்தக்குறை தன் வாழ்வில் ஒரு தடையாக அமைந்து விடாதபடி, ஒருபோதும் குன்றாத தன் மன ஆற்றலாலும் கடுமையான உழைப்பாலும் அதைக் கடந்து சென்ற அவருடைய முயற்சியும் வாழ்க்கைமுறையும் முன்னுதாரணங்களாகச் சொல்லத்தக்கவை. தன் வாழ்வனுபவங்களையெல்லாம் தொகுத்து அவர் எழுதியுள்ள  நூல் நான் கடந்து வந்த பாதை. இடர்நிறைந்த சூழல்களுக்கிடையே ஓர் இளைஞன் படித்துப் பட்டம் பெறுவதும், நிரந்தரமான வேலை கிடைக்கும்வரை கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிவதும், போட்டித் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு தணிக்கைத் துறையில் வேலைக்குச் சேர்வதும், வேலையின் பொருட்டு வங்கமாநிலத்துக்குச் செல்வதும், இயல்பான இலக்கிய ஆர்வத்தால் மொழிபெயர்ப்பாளராக மலர்வதுமாக விரிவடைகிற இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவையாக எழுதப்பட்டுள்ளது.

26 பகுதிகளால் இந்த நூல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் வாசிப்பின் அடிப்படையில் இரண்டு பிரிவாகப் பிரித்துக்கொள்ளலாம். பலவிதமான குடும்பச் சிரமங்களுக்கிடையே பள்ளிப்படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் படித்து முடித்து தற்காலிகமாக சில தனியார் கல்லூரிகளில் ஆசிரியராகப் பணிபுரிந்து கிடைக்கும் சம்பளத்தைக் கொண்டு குடும்பத்தைத் தாங்கும் துணையாக விளங்குவது ஒரு பகுதி. அரசுப்பணியை ஏற்று வாழ்வதற்குச் சென்ற கொல்கத்தாவில், வங்கமொழியைக் கற்றுத் தேர்ந்து, தமிழ்வாசகர்களுக்காக வங்கமொழிப் படைப்புகளை மொழிபெயர்த்த அனுபவங்களையும் அவற்றை வெளிக்கொணர்வதில் கிட்டிய அனுபவங்களையும் தொகுத்து வழங்குவது மற்றொரு பகுதி.

முதல் பகுதியை வாசிக்கும்போது, நம் மனத்தில் திரண்டுவரும் முக்கியமான உருவங்களில்  ஒன்று, கிருஷ்ணமூர்த்தியின் தந்தையாருடையது. புதுக்கோட்டை சமஸ்தானத்துப் பள்ளியாசிரியர் அவர்.  குறைந்த சம்பளப்பணத்தை வைத்துக்கொண்டு குடும்பச் செலவுகளைச் சமாளித்து, பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார். பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட தன் பிள்ளையின் கல்லூரிப் படிப்புக்கு செலவு செய்ய பணமில்லாத நெருக்கடியான சூழலில் ஒரு தந்தை உணரக்கூடிய மன அவஸ்தைகளை மிகக்குறைவான சொற்கள் வழியாக உணர்த்திவிட்டு கடந்து செல்கிறது கட்டுரை. தங்குமிடமும்  படிப்பும் இலவசமாக தரப்படும் இடங்களை நோக்கியே அந்த தந்தைமனம் நாடிச் செல்கிறது. இரண்டு கல்லூரிகளிலிருந்து அழைப்புகள் வருகின்றன. ஒரு கல்லூரியில் எல்லாம் இலவசமாகக் கிடைக்கிறது. ஆனால்  தங்குமிடத்தின் சுகாதாரமற்ற கோரச்சூழல் அவரைப் பின்வாங்க வைத்து விடுகிறது. மற்றொரு கல்லூரியில் எப்படியாவது முதல் ஆண்டை முடித்து விடுங்கள், பிறகு அடுத்தடுத்த ஆண்டுகளை இலவசமாகப் படிக்க  ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. இயலாமை அவரைப் பின்வாங்க வைத்து விடுகிறது. மகன் ஆசைப்படியும் படிக்க வைக்க முடியவில்லை. தன்னுடைய ஆசைப்படியும் படிக்க வைக்க முடியவில்லை. கடைசியில் தன் கல்லூரியிலேயே கிடைத்த பிரிவில் சேர்த்துவிடுகிறார். கனவுக்கும்    எதார்த்தத்துக்கும் இடையே தவிக்கிற ஒரு தந்தை மனம் இப்பகுதியில் வெளிப்படுவதை வாசிக்கும்போது நெகிழ்ச்சியாக உள்ளது. தன் பள்ளித் தோழர்கள், பள்ளியாசிரியர்கள், படித்த நூல்கள், எழுத்துத்துறையில் கன்னி முயற்சிகள், கல்லூரிவேலை அனுபவங்களை என பல தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் சு.கிருஷ்ணமூர்த்தி. கல்லூரிப் பேராசிரியராக மலரவேண்டும் என்கிற கனவைக் கலைத்து வாழ்க்கை அவரை தணிக்கைத்துறையில் உட்கார வைத்து விட்டது. இலக்கியம் மட்டுமே அவரைத் தொடர்ந்துவரும்  துணையாக அமைந்திருக்கிறது.

திருச்சிப் பேருந்துநிலையத்தைக் கடந்துபோகும் ஒவ்வொரு தருணத்திலும் சத்திரம் என்னும் பெயர்கொண்ட  நிறுத்தத்தைப் பார்த்து வியப்பாக இருக்கும். வாகனநெருக்கடி மிகுந்த அந்த இடத்துக்கு அந்தப் பெயர் எப்படி  வந்திருக்ககூடும் என்று யோசித்துக் குழம்பியிருக்கிறேன். அங்கே வசிக்கும் பலரிடமும் அதைப்பற்றி விசாரித்தும் என் மனம் ஏற்கத்தக்க விடையை யாரும் சொல்லவில்லை. எதிர்பாராத விதமாக அந்த ஐயத்துக்கான விடை இந்த நூலில் உள்ளது. திருச்சியில் சின்னையா பிள்ளை ஒரு சத்திரம் கட்டி, ஏழை எளியவர்களுக்கு தங்கிச்செல்லும் வகையில் ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். வெளியூரி லிருந்து வந்து படிக்கிற பிள்ளைகளும் அங்கே இலவசமாக தங்கியிருக்கிறார்கள். பலருக்கும் உதவும் வகையில் நிர்வகிக்கப்பட்டு வந்த அந்தச் சத்திரத்துக்கு அவர் பெயராலேயே சின்னையாபிள்ளை சத்திரம் என்று பெயர் வந்து, பிறகு காலவேகத்தில் அதுவும் மருவிச் சுருங்கி, இப்போது வெறும் சத்திரமாக நிற்கிறது.

‘‘நஜ்ரூல் என்றொரு மானுடன்’’ நூலை எழுத நேர்ந்த பின்னணியையும் நூல் வெளியான பின்னணியையும் தனியாகவே ஓர் அத்தியாயத்தில் விரிவாகவே பகிர்ந்துகொள்கிறார் சு. கிருஷ்ணமூர்த்தி. தொடக்கத்தில் அவர்பால் உருவான ஈர்ப்பின் காரணமாக அவரைப்பற்றிய அறிமுகக்கட்டுரையன்றை தீபம் இதழில் எழுதியதிலிருந்து, நஜ்ரூலுக்காகவே உருவாக்கப்பட்ட நினைவகத்தில் தமிழில் எழுதப்பட்ட நஜ்ரூலைப்பற்றிய புத்தகம் இடம்பெற வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் வரைக்குமான பல தகவல்கள் இப்பகுதியில் உள்ளன. 1969ஆம் ஆண்டில் நஜ்ரூலுடைய எழுபதாம்  ஆண்டு நிறைவு விழா மாநில மெங்கும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. கவிதைகளில் அவர் உருவாக்கிய எழுச்சி அலை முக்கியமானது.

அதன்மூலம் வங்காளியர்களின் மனத்தில் அழுத்தமான இடத்தைப் பெற்றவர். அவருக்காகக் கொண்டாடப்படுகிற விழாவில்  நடுநாயமாக இருக்கையில் அமர்ந்திருந்தாலும் பேச்சுத்திறனையும் கேட்கும் திறனையும் முற்றிலும் இழந்து எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தார். 1942 ஆம் ஆண்டில் தாக்கிய பெயர் தெரியாத ஒரு மர்மநோய் அவருக்கு அப்படி ஒரு கோலத்தை வழங்கிவிட்டுச் சென்றுவிட்டது.  போகிறபோக்கில் நஜ்ரூல் தன் வாழ்வில் வகுத்துக்கொண்ட வழியைப்பற்றி ஒரு சில வரிகளை எழுதிச் செல்கிறார்

சு. கிருஷ்ணமூர்த்தி. மனிதனைச் சந்தேகிப்பது பாவம். சகமனிதனை நம்பாமல் லாபமடைவதைவிட அவனை நம்பி மோசம்போவது மேல் என்பதுதான் அந்த வரிகள். உத்வேகமூட்டும் இத்தகு பார்வையை தனக்குள் வகுத்துக் கொண்ட ஒரு கவிஞன் அனுபவித்த அவஸ்தைகள் மனத்தைக் கலங்க வைக்கின்றன.

சரத்சந்திரர் பற்றி எழுதப்பட்டுள்ள பகுதியில் நம் கவனத்தைக் கவரக்கூடிய ஒரு விஷயம் உள்ளது.  சரத்சந்திரர் பர்மாவில் வாழ்ந்து, பிறகு வங்கத்துக்குக் குடிபெயர்ந்துவந்தவர். பர்மாவில் அவருடைய முதல் மனைவி காலமானதைத் தொடர்ந்து ஹிரண்மயதேவி என்னும் பெண்ணை மணந்துகொண்டார். பிறகுதான் சூழல்நெருக்கடிகள் காரணமாக பர்மாவைவிட்டு வெளியேறி, வங்கத்துக்கு வந்தார்.

தனக்குப் பிறகு தன் சொத்துக்கள் தன் மனைவியான ஹிரமண்மயதேவிக்கே சேரவேண்டும் என்று உயில் எழுதிவைத்தார். அவருடைய மரணத்துக்குப்  பிறகுதான் அச்செய்தி அனைவருக்கும் தெரியவந்தது. சொத்தின்மீதான ஆசை எல்லாருடைய கண்களையும் மறைத்துவிட்டது.  சரத்சந்திரரின் தம்பியே அதை முதலில் எதிர்த்தார். ஹிரண்மயதேவியின் திருமணம் பதிவு செய்யப்பட்ட  ஒன்றல்ல என்பதால் அவர் மனைவி என்பதை ஏற்க முடியாதென வழக்காடினார்.

சரத்சந்திரரை நன்றாக அறிந்த ராதாராணி என்கிற கவிஞரும் அதை ஆதரித்தார். பணத்தின் மீது உள்ள பற்று, சொந்த அண்ணியையே அண்ணியல்ல என்று சொல்லத் தூண்டும் அளவுக்குத் தூண்டிவிட்டது என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. உலக அளவில் பல குடும்பங்களில் இப்படிப்பட்ட குரல் ஒலிப்பதை நாம் கேட்டிருக்கிறோம். ஒரு மாபெரும் படைப்பாளியின் பண்பட்ட குடும்பம்கூட இதற்கு விதிவிலக்கல்ல  என்பது வருத்தமான உண்மை.

சு. கிருஷ்ணமூர்த்தியின் சுயசரிதை இத்தகு பல உள்ளிழைகளைக் கொண்டிருக்கிறது. தொடக்கக் காலத் திலிருந்தே அவர் ஆங்கிலத்தில் எழுதும் பழக்கத்தை மேற்கொண்டு வந்திருக்கிறார். இந்தப் பயிற்சி சிலப்பதி காரத்தைச் சிறப்பான முறையில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் ஆற்றலை அவருக்கு வழங்கியிருக்கிறது. கலைமகள், தீபம், கணையாழி போன்ற இதழ்களில் பல சிறுகதைகளையும் இவர் எழுதியிருக்கிறார். வங்க மொழியை நன்கறிந்த இவர், புதுப்புது மொழிகளை அறிந்துகொள்வதற்காக ஜெர்மன் மொழியை வகுப்புக்குச் சென்று ஆவலுடன் கற்றிருக்கிறார். மலையாளத்தைத் தெரிந்துகொள்வதிலும் ஈடுபாடு காட்டியிருக்கிறார். இந்தியில் நல்ல புலமையோடு விளங்கியிருக்கிறார். ‘சோரட, உனது பெருகும் வெள்ளம்’ என்னும் நாவலை இந்தியிருந்து நேரிடையாக மொழிபெயர்த்திருக்கிறார்.

இவரைப்போன்ற ஆளுமைகளை மிக அபூர்வ மானவர்கள். வாழும் வாழ்வை பொருள்பொதிந்ததாக அமைத்துக்கொள்ளும் ஈடுபாடு கொண்டவர்களுக்கு மட்டுமே இப்படிபட்ட வளர்ச்சி சாத்தியம். தன் சொந்த வாழ்வில் பல இழப்புகளைச் சந்தித்தபோதும், அதைப்பற்றிய எவ்விதமான புலம்பலும் இன்றி, இலக்கிய முயற்சிகள் வழியாக அவற்றையெல்லாம் கடந்து தன் ஆளுமையை நிறுவிக் கொண்டிருக்கிறார் சு. கிருஷ்ணமூர்த்தி. இதுவே அவர் வாழ்க்கையின் செய்தி.

- பாவண்ணன்

Pin It