புஷ்பராஜ் என்ற ராஜ்கௌதமனும் நானும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்புக்கு அருகிலுள்ள புதுப்பட்டியில் பிறந்த கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள். ஒன்றாகப் படித்தவர்கள். நண்பர்கள். அவரது இலக்கிய ஆளுமை பற்றி நான் எழுதவில்லை. மாறாக அவரைப் பற்றிய சில நினைவுகளை நண்பனாகப் பதிவு செய்கிறேன். கௌதமனின் தந்தை ராணுவத்தில் லெப்டினட் கர்னலாகப் பணியாற்றியவர். ஓய்வு பெற்றபின் தனது வரலாற்றை எழுதியுள்ளார். அதன் கையெழுத்துப் பிரதியை அவரது மகள் பாஸ்டினா என்ற பாமா சில ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் காட்டினார். வாசித்த நான் வியந்தேன். சிதைந்த நிலையிலிருந்த பிரதியை கணினியில் பதிவு செய்ய உதவினேன். இவ்வாண்டு ஏப்ரலில் பாமாவுக்கு இயக்குநர் ப.ரஞ்சித்தின் நீலம் அமைப்பு ‘வேர்ச்சொல் விருது' வழங்கியது. 'பாமா: தமிழ் இலக்கியத்தின் திசைவழி' என்ற நூலையும் நீலம் வெளியிட்டது. அதில் ‘சுபேதார் சூசைராஜ் சரித்திரம்' என்ற தலைப்பில் அவரது தந்தையின் சரித்திரமும் இடம்பெற்றது.மூத்த மகன் கௌதமன் பிறந்தபோது அவரது தந்தை ராணுவத்தில் இருந்தார். மூன்று மாதங்களுக்குப் பின்பே மகனைப் பார்த்தார். மகனைப் பார்த்த மகிழ்வை அவரது சரித்திரத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 'தன் பிள்ளையைப் பார்த்து எவ்வளவு சந்தோஷப்பட்டான் தெரியுமா? தன்னைப்போல் இருந்தான் பிள்ளை. பார்க்க அழகாயிருந்தான். தூக்கித் தூக்கி முத்தம் கணக்கில்லாமல் கொடுத்தான்.’ இது ஒரு தந்தையின் மனநிலை என்று எளிதாகக் கூறலாம். ஆனால் தற்போது கௌதமனின் நிழல்படத்தையும் தந்தை சூசைராஜின் நிழல்படத்தையும் பார்த்தால் வித்தியாசம் பெரிதாகத் தெரியாமல் இருவரும் ஒன்றுபோல் இருப்பதாகத் தோன்றும்.
இன்னொரு ஒற்றுமையும் உண்டு. தந்தை தனது சுயசரிதையை எழுதியதுபோல மகன் கௌதமன் ‘சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை, லண்டனில் சிலுவைராஜ்' என மூன்று சுயசரிதை நூல்களையும், மகள் பாமா 'கருக்கு, மனுஷி, விருட்சங்களாகும் விதைகள்' என மூன்று சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளனர். தந்தை, மகன், மகள் என மூவரும் சுயசரிதைகள் எழுதியுள்ளது சரித்திரச் சாதனை.
கௌதமனும் நானும் புதுப்பட்டியில் திரிங்கால் ஆரம்பித்த திரிங்கால் நடுநிலைப் பள்ளியில் படித்தோம். இருவரும் மதுரையில் திரிங்கால் ஆரம்பித்த புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தோம். ஆங்கிலம், தமிழ் பாடங்களைச் சிறப்பாகப் படிப்பார். கணிதம் கற்கச் சற்றுக் கஷ்டப்படுவார். பகடி செய்வது, பகடியாகப் பேசுவது அவரது தனிச் சிறப்பு. சில குறும்புகள் செய்வார். அதற்காக விடுதிக் கண்காணிப்பாளரிடம் உள்ளங்கையில் பிரம்படி வாங்குவார். அடி வலிக்கவில்லை என்று மற்றவர்களிடம் காட்ட ‘ப்பூ...' என்று கையில் ஊதி பகடி செய்வார். அனைவரும் சிரிப்போம். அதற்காக மறுபடியும் அடி வாங்குவார். விடுதி மாணவர்கள் பெரும்பாலோர் அவரைச் சூழ்ந்துகொண்டு அவரது பகடியை ரசிப்பர்.
பள்ளிப் படிப்பிற்குப் பின் அவர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் பி.யூ.சி.யும் அதன்பின் விலங்கியல் பட்டப் படிப்பும் முடித்தார். நான் சாத்தூரிலுள்ள தூய தனிஸ்லாஸ் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தேன். இருவரும் கடிதங்கள் வழியாக நட்பை வளர்த்தோம். அவரது கடிதங்கள் வித்தியாசமானவை. முழுவதும் எண்களால் நிறைந்திருக்கும். ஆங்கில எழுத்துக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு எண். அவற்றை ஆங்கில எழுத்துக்களாக மாற்றி எழுதிய பின்தான் வாசிக்க முடியும். எதையும் படைப்பாற்றலுடன் செய்யும் பண்பு அப்பொழுதே அவரிடம் நிறைந்திருந்தது.
கல்லூரியிலேயே டியூட்டராகப் பணிபுரிந்தார். ஆங்கிலப் புத்தகங்கள்மூலம் ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார். அதனால் பிற்காலத்தில் சில ஆங்கில நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். அப்போது கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புத் தொடங்கியது. அதில் சேர்ந்து தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். தமிழைச் சிறப்பாகக் கற்றார். தமிழில் மாற்றுச் சிந்தனையுடன் பேச, எழுத ஆரம்பித்தார்.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் சில ஆண்டுகள் புதுப்பட்டியில் வாழ்ந்தார். அதிகம் வாசித்தார். மார்க்சிய சிந்தாந்தத்தைக் கற்றார். வாசிக்கும் வழக்கம் எங்களது நட்பை ஆழப்படுத்தியது. வாசிப்பு வழக்கமுள்ள வெவ்வேறு சித்தாந்தங்களுடைய நண்பர்கள் சாதியைக் கடந்து இணைந்தோம். படித்தவற்றை விவாதித்தோம். அதனால் நட்பு வட்டம் பெரிதானது. நட்பை உயர்வாக மதித்தார். தலித் பார்வையை முன்னெடுத்தாலும் அதற்குள் முடங்காமல் பரந்த பார்வையை வளர்த்துக் கொண்டார். அதனால் அவரது நட்பு வட்டம் இன்னும் விரிந்து பல தரப்பினரையும் அரவணைத்தது.
இயேசு சபையினரின் கல்வி நிறுவனங்களில் முதுகலைப்பட்டம் வரை படித்த அவர் முடிவில் கடவுள் மறுப்பாளராகவும், மார்க்சிய சிந்தனையாளராகவும் மாறினார். சாதி மறுப்பு, சாதி ஒழிப்பை இயேசு சபையினர் வலியுறுத்தாதது காரணமாக இருக்கலாம். தலித் கிறிஸ்தவர் என்பதால்தான் தனக்கு இடஒதுக்கீட்டில் அரசு வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார். நிறுவனத் திருஅவையில் ஈடுபாடு இல்லாத அவர் நேர்மையுடன் புஷ்பராஜ் என்ற பெயரை ராஜ்கௌதமன் என்று மாற்றி கெஜட்டில் பதிவு செய்தார். இந்த மாற்றம்தான் அவருக்கு புதிய வாழ்வு அளித்தது. சிலுவைராஜ் சரித்திரம் அவரது பெயர் மாற்றத்தோடு முடிவடையும். இருப்பினும் அவர் கிறிஸ்தவத்தை அதிகம் விமர்சிக்கவில்லை. தனது இறுதிப் படைப்பாக ‘இயேசுவும் நானும்’ என்ற தலைப்பில் ஒரு நூலை எழுத விரும்புவதாக நண்பர்களிடம் கூறினார். அதை நிறைவேற்றாமல் சென்றது மிகப் பெரிய இழப்பு.
சமூகத்தில் பல்வேறுவிதமான கட்டமைப்புகள் நம்மை அடிமைப்படுத்துகின்றன. அவற்றில் மிகச் சிறிய கட்டமைப்பு குடும்பம். ஆனால் மிகவும் வலுவான கட்டமைப்பு. இதுதான் சரியானது, நீதியானது, நேர்மையானது, உண்மையானது, மாற்றத்தகாதது, அனைவரும் ஏற்றத்தக்கது என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதை உடைக்காமல் சமூக மாற்றம் ஏற்படுவது சாத்தியமில்லை என்பது இவரது கருத்து. இதைப் பற்றி அவரோடு நான் பலமுறை விவாதித்தேன். மாற்றாக எதை முன் வைக்கிறீர்கள் என்றேன். குடும்ப அமைப்பை உடைக்கும்போது இயல்பாகவே புதிய கட்டமைப்பு மலரும். எப்படி இருக்கும் என்று இப்போது கணிக்க இயலாது என்பார்.
குடும்ப அமைப்பை உடைக்க முடியாத சூழலில் அந்த அமைப்பிலேயே அடைபட்டார். உடன் பிறந்தவர்கள், நண்பர்கள், ஒத்த கருத்துடையவர்கள் தொடர்பில்லாமல் வீட்டிலேயே ஒரு கைதிபோல முடங்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டார். ஒரே ஆறுதல் இக்காலத்தில் பல படைப்புகள் வெளிவந்ததே. இருப்பினும் சுதந்திரமாக வாழ்ந்திருந்தால் இன்னும் சிறப்பான, ஆழமான பல படைப்புகள் வெளிவந்திருக்கும்.
- மாற்கு