“நீயா நானா” கோபிநாத் ஒரு கூட்டத்தில் சொன்ன கதை இது! தெருவில் ஒரு நோஞ்சான் அப்பாவும் 3 வயது மகனும் போய்க் கொண்டிருக்கிறார்கள். திடீரென அவர்கள் எதிரே பெரிய பயில்வான் ஒருவன் நடந்து வேகமாக நடந்து வருகிறான். அவனுடைய நடையைப் பார்த்து “ஐயையோ, இவன் நம்மை அடிக்கத் தான் வருகிறான்”என்று நினைத்துக் குழந்தை அப்பாவின் பின்னால் போய் ஒழிந்து கொள்கிறது. பயில்வான் நினைத்தால் குழந்தையை மட்டுமல்ல, நோஞ்சான் அப்பாவையும் பதம் பார்த்து விட முடியும் என்று கதையைப் படிக்கின்ற நமக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் குழந்தைக்கு அது தெரியாது. எல்லாக் குழந்தைகளுக்குமே தன்னுடைய அப்பா தான் நம்பிக்கை! அம்மா தான் அன்பு! அந்த நம்பிக்கையில் தான் பயில்வானிடம் இருந்து எப்படியும் அப்பா நம்மைக் காப்பாற்றி விடுவார் என்று குழந்தை நினைக்கிறது.
அவர் சொன்ன இந்தக் கதை உருவகம் தான்! பெரிய பயில்வானாகச் சமூகம் எப்படிப்பட்ட தொந்தரவுகளைக் கொடுக்க முன்வந்தாலும் பொறுப்பான பெற்றோராக நாம் நம்முடைய குழந்தைகளுக்கு இருந்தோம் என்றால் போதும்! குழந்தை எத்தகைய பயில்வான் பிரச்சினைகளையும் ‘நீ என்ன பெரிய அப்பாடக்கரா” என்று பந்தாடத் தொடங்கி விடும். உங்கள் மகனோ மகளோ +2இல் பெயில் ஆகி இருக்கலாம்; சில நாட்களுக்கு முன் வந்த பத்தாம் வகுப்பு முடிவுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்திருக்கலாம்.
“என் மானத்தை வாங்கிட்டே! மத்தவங்க முன்னாடி நான் எப்படித் தலை காட்டுறது! என் கண் முன்னாடி நிற்காதே! எங்கேயாவது போயிடு! அவனும் உன் கூட படிச்ச பையன் தான்! எப்படி மார்க் வாங்கியிருக்கான், நீயும் இருக்கியே!” என்றெல்லாம் கரித்துக் கொட்டுவதற்குப் பதிலாக நீங்கள் காலாற ஒரு வாக்கிங் போவது ரொம்ப நல்லது. இந்த வாக்கிங், உடம்புக்கு அல்ல, மனத்துக்கு! வீட்டிலேயே இருந்து நீங்களும் டென்சனாகி, மகன்/மகளின் நம்பிக்கையையும் சீர் குலைப்பதற்கு முன்பு, ஒரு பெற்றோராக நாம் யோசிப்பது சரி தானா என்று முடிவெடுப்பதற்குத் தான் இந்த வாக்கிங்!
மெல்லக் கிளம்பி அப்படியே கடைத் தெருவிற்கு வாருங்கள். வந்து விட்டீர்களா? இப்போது அங்குள்ள பெரிய பெரிய கடைகளைப் பட்டியலிடுங்கள். உங்கள் பட்டியலில், ஒரு ஹோட்டல், ஒரு பர்னிச்சர் கடை, ஒரு செல்போன் கடை, தியேட்டர், பலசரக்குக் கடை என்று எதை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளுங்கள். நடந்து கொண்டே, மனத்துக்குள் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களைப் பட்டியலிடுங்கள். இந்தப் பட்டியலையும் எடுத்து விட்டீர்களா? இதே போல் உங்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்கள், தெரிந்த தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர் நடிகைகள் ஆகிய பட்டியலையும் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் பட்டியல் எப்படிப் பட்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்கு உள்ள பொதுவான குணாதிசயம் என்ன தெரியுமா?
அவர்கள் அனைவருமே (அல்லது பெரும்பாலானோர்) படிப்பில் தோற்றுப் போனவர்களாக இருப்பார்கள். “அட! ஆமா” என்று உங்கள் மனம் இப்போது சொல்லும். படிப்பில் தோற்றுப் போன இவர்கள் எல்லோருமே எங்காவது கூலி வேலைக்குத் தானே போய் இருக்க வேண்டும். பெரிய பெரிய படிப்பு படித்தவர்கள் தானே – பெரிய முதலாளிகளாக, தலைவர்களாக வந்திருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லையே! ஏன் தெரியுமா? இவர்கள் படிப்பைத் தான் விட்டிருந்தார்களே தவிர, நம்பிக்கையை அல்ல!
இப்போது அதே பட்டியலைத் திரும்பவும் எடுங்கள். அதே ஓட்டல்கள், அதே தியேட்டர்கள், அதே பர்னிச்சர் கடைகள், பலசரக்குக் கடைகள்! அங்கு வேலை செய்பவர்களைக் கணக்கில் எடுங்கள். அவர்களுடைய சராசரி படிப்பு என்ன என்று நினைத்துப் பாருங்கள். ஏறத்தாழ அவர்கள் முதலாளிகள் என்ன படித்திருக்கிறார்களோ அதே அளவு தான் இவர்களும் படித்திருப்பார்கள் (சிலர் சற்றுக் கூடுதலாகக் கூடப் படித்திருப்பார்கள்). அதே படிப்பு படித்த இவர்கள் ஏன் குறைந்த சம்பளத்தில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? ஏனென்றால் இவர்களில் பெரும்பாலானோர் படிப்பை விட்டது மட்டுமின்றி, ‘நாம் பெரிய ஆளாக வருவோம்’ என்ற நம்பிக்கையையும் சின்ன வயதில் இழந்து விட்டிருப்பார்கள். ஆக, ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தைப் படிப்பு முடிவு செய்யவில்லை – நம்பிக்கை தான் முடிவு செய்கிறது.
இப்போது சொல்லுங்கள்! உங்கள் மகனுக்குப் படிப்பு முக்கியமா? அல்லது நீங்கள் கொடுக்கப் போகும் நம்பிக்கை முக்கியமா? “சரியாகத் தான் தெரிகிறது - ஆனால் சொந்தக்காரர்களுக்கு நான் என்ன பதில் சொல்வது? அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களிடம் என் மகன் பெயில் ஆகிட்டான்’ என்று எப்படிச் சொல்வது” என்று கேட்கிறீர்களா? சொந்தக் காரர்களுக்கும் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் உங்கள் மகன் பெயிலானது ஒன்றும் தலை போகும் பிரச்சினை அல்ல. அவர்களைப் பொறுத்த வரை, தேர்தல் முடிவுகளைப் போல – அது ஒரு நிமிடச் செய்தி! அவ்வளவு தான்! அவர்கள் ஒரு நிமிடம் கவலைப்படுவார்களே என்று நினைத்து உங்கள் மகனை/மகளைக் காலம் முழுக்க வருத்தப்பட வைத்து விடாதீர்கள். பிறர் என்ன நினைப்பார்கள் என்று மெனக் கெட்டு, உங்கள் மகன்/மகளின் எதிர்காலத்தை வீணடித்து விடாதீர்கள். பக்கத்து வீட்டுக்காரரின் ஒரு நிமிடக் கவலை உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா அல்லது உங்கள் மகன்/மகள் மீது நீங்கள் வைக்கப் போகும் நம்பிக்கை அவர்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்க வேண்டுமா? இந்த இரண்டில் எதை உங்கள் மகன்/மகள் மீது ஏற்றப் போகிறீர்கள்? யோசித்துப் பாருங்கள்.
கதையில் பார்த்தது போல, நீங்கள் உடன் இருந்தால் போதும் - உங்கள் குழந்தை எப்படிப்பட்ட பிரச்சினைகளையும் அலேக்காகத் தூசி வீசுவார்கள். மெல்லத் திரும்பி நம்பிக்கையுடன் வீட்டுக்குப் போங்கள்! உங்கள் குழந்தையைத் திட்டாமல் அரவணையுங்கள். “அப்பாவும் அம்மாவும் இருக்கோம்டா உனக்கு, நடந்ததை விடு, இனி என்ன பண்ணலாம்னு யோசிப்போம்” என்று பாசக்கரம் நீட்டுங்கள். எந்தக் குழந்தைக்கும் பெற்றோர் தான் நம்பிக்கையின் ஊற்று! அந்த ஊற்று வற்றிப் போனால் வாழ்க்கை முழுவதும் பாலைவனம் தான்! நீங்கள் ஊட்டும் நம்பிக்கை தான் உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை!
- முத்துக்குட்டி