கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

students electionதமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் வாக்காளர்களாக உள்ள தமிழ்நாட்டில் உயர்கல்வி பயிலும் மாணவர்கட்குத் தமிழ்நாடு உயர்கல்விப் பாதுகாப்பு இயக்கம் கீழ்க்கண்ட வழி காட்டுதல்களை முன் வைக்கின்றது.

மாணவர்களின் வாக்கு வங்கி கணிசமாக இருக்கும் வேளையில் அவர்களுக்கான உயர்கல்வி வழங்குவது பற்றி பெரிய அளவில் எந்த கட்சியும் பேசாத நிலை உள்ளது. தமிழகத்தில் போட்டியிடும் கட்சிகளும் வேட்பாளர்களும் பல வாக்குறுதிகளைக் கொடுத்துள்ள போதிலும், உயர்கல்விக் குறித்த முக்கியமான அம்சங்களை அவர்கள் அதிகமாகப் பொருட்படுத்தவில்லை.

அறம் சார்ந்த உயர்கல்வியின் தரத்தை உறுதி செய்தால்தான், நாட்டில் இலஞ்சம், ஊழல், பலாத்காரங்கள் போன்றவை இல்லாமலாகும். வரும் சந்ததியினரின் தரமான வாழ்க்கைக்கு அரசு முதன்மையாக அக்கறை செலுத்த வேண்டியது கல்வி திட்டங்களிலாகும். ஆனால் இன்று கல்வி வளாகங்கள் தங்கள் பண்புகளை முழுவதுமாக மாற்றிக் கொண்டு வருகின்றன.

அறம் என்பது புறம் தள்ளப்பட்டு, வணிகம் மட்டுமே முதன்மைப் படுத்தப் படுகின்றது. கல்வி என்பது ஒரு சரக்காகவே அதிகார பூர்வமாக ஆக்கப்பட்டுவிட்டது. மாணவர்கள் நலன் குறித்த அக்கறை கல்வியகங்களில் மிகவும் குறைவாகவேக் காணப்படுகின்றன.

இந்நிலையை மாற்ற மாணவ வாக்களர்களால் இயலும். உயர்கல்வியைப் பொறுத்தமட்டில் எத்தகைய நிலைப்பாடுகளை வேட்பாளரும், கட்சிகளும் கொள்ள வேண்டும் என வலியுறுத்தவேண்டியதும், கவனிக்க வேண்டியதும் மாணவ வாக்களரின் கடமையாகும்.

எனவே மாணவ வாக்காளர்கள் கீழ்கண்ட அம்சங்களை வாக்களிக்கும் முன் கவனிக்க வேண்டுகிறோம்

1. மாணவர்களுக்கான பல இலவச பொருட்களை வழங்குவதாக கட்சிகள் அறிவிகின்றன. மேலும் தேர்வுகளில் அனைவரையும் தேர்ச்சி எனவும் பிரகடனப்படுத்தப்படுகின்றது. இந்தப் போக்கு எதிர்காலத்தில் கல்வித் தளத்தில் பலத்த பாதிப்பை உண்டாக்கும். மாணவர்களுக்கு இலவசங்களை எப்போது எதிர் நோக்கும் மனோபாவம் வளரும் ஆபத்து உள்ளது. இம்மாதிரி இலவசங்களின் மற்றும் சலுகைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு வாக்களிப்பது என்று மாணவர்கள் முடிவு செய்துவிடக்கூடாது என்று வேண்டப்படுகின்றனர்.

2. மாணவர்களுக்கானக் கல்வி குறித்த பல்வகைக் கட்டணங்கள் நிர்வாகத்தினர் விருப்பப்படி உயர்த்தபடும்போது அதை கட்டுப்படுத்த வேட்பாளரின் கட்சி செயல்படக்கூடியதாக இருக்க வேண்டும்.

3. மாணவர்களுக்கான பல்வகை உதவித் தொகைகள் பெறுவதில் பல சிக்கல்களுடன் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். அவற்றைப் பெற வேட்பாளர் உதவக் கூடியவராக இருத்தல் நலம்.

4. கல்விக் கட்டணங்களும் மாநிலம் முழுவதும் ஒரே சீராக அமைக்க கட்சிகள் உத்திரவாதம் அளிக்குமா என்பதையும் மாணவர்கள் கவனிக்கவேண்டும்.

5. மாணவர் சேர்க்கைக்கான விதிகள் எல்லா கல்வி நிறுவனங்களில் ஒன்றானதாக இருக்க எந்தக் கட்சி நடவடிக்கை மேற்கொள்ளுமோ அக்கட்சியை அடையாளம் காணவேண்டும்.

6. மாணவர்கள் குறை தீர்க்கும் தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேட்பாளரின் கட்சி உதவ வேண்டும்.

7. தமிழகத்தில் கல்வி வளாகங்களில் ஜனநாயக ரீதியிலான அரசியல் மற்றும் பண்பாட்டு உரையாடல்கள் நிகழ வாய்ப்புக்களே இல்லாமல் ஆகிவிட்டது. அரசியல் மற்றும் பண்பாடு குறித்த சரியான புரிதல்களை உருவாக்கும் வகையில் கல்வி நிலையங்கள் தங்கள் கல்வி சூழலை ஜனநாயகப்படுத்த வேண்டும்.

மாணவத் தலைவர்கள் உருவாகும் வகையில் மாணவர் சங்கத் தேர்தல்களை நடத்த வேண்டும்.மேலும் பல்கலைக் கழக, மற்றும் கல்லூரிகளின் முடிவு எடுக்கும் அமைப்புகளில் மாணவர்களின் பிரதிநிதிகள் இடம் பெற வகைசெய்யவேண்டும். இதை எந்த ஒரு கட்சி புரிந்து ஆவன செய்ய முயலும் என்பதைக் காணவேண்டும்..

8. ஆராய்ச்சி நிறுவனங்களிலும், மாணவர்களின் ஆரய்ச்சிகளிலும், கல்வி திட்டங்களிலும் அரசியல் தலையீடு அறவே இல்லாமலிருக்கச் சட்டமன்ற உறுப்பினர் செயல்படவேண்டும். 

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் நிர்வாகங்களில் வெளிப்படைத்தன்மை தேவை

9. கல்வியிலும், நிர்வாகத்திலும் மற்றும் நிதி குறித்த விஷயங்களிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கல்வி நிறுவனங்களில் தேவையாகும். இந்த வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யாததால்தான், லஞ்சம் மற்றும் ஊழல்கள் கல்வி நிலையங்களில் தலை விரித்து ஆடுகின்றன.

ஒவ்வொரு கல்வி நிறுவனமும் கண்டிப்பாகத் தாங்கள் பெறும் கல்வி கட்டணங்களையும், இதர நிதி வகைகளையும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதேபோன்று விதிமீறிய நிதி வசூல் என்பதை அரசு தொடர் கண்காணிப்பு மூலம் கண்டுபிடித்து அதைத் தண்டிக்க வேண்டும். இந்த நிலைப்பாட்டைச் செயல்படுத்த பணி புரியும் கட்சிதான் நாட்டிற்குத் தேவை.

10. தேர்வு செய்யப்பட்டு வரும் வேட்பாளரும் அவர் சார்ந்த கட்சியும் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் உயர் கல்விக் கூடங்களில் நிகழ்ந்து வரும் விதிமீறல்களையும், இலஞ்சம் மற்றும் ஊழல் செயல்பாடுகளையும் விசாரிக்க உயர்மட்ட குழுக்கள் அமைக்க முனைப்பு காட்டுவது மிக அவசியம்.

கல்வி நிலையங்களில் சமூகத் தணிக்கை

11. ஒரு காலத்தில் தமிழகத்தில் தோன்றிய சமூக இயக்கங்கள் கல்வியாளர்களைச் சமூகத்தின்பால் கடமைப்பட்டவர்களாக வைத்திருந்தன. காலப்போக்கில் அது வலுவிழந்து தற்போது ஆய்வாளர்களும் கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் சமூகப் பிரச்சனைகள் குறித்து எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் ஒதுங்கி இருப்பது என்பது சமூக அவலம் ஆகும்.அதே போன்று கல்வி வளாகங்களில் அவ்வப்போது சமூக நீதி மறுக்கப்பட்டு, வளமுடையவர்கள் மட்டும் வாய்ப்பு பெறுவது என்பதைத் தடுப்பது மிக அவசியமாகும்.

மேலும் மாணவர்கள் தற்கொலை என்பதும் சமூகநீதி மறுப்பின் வெளிப்பாடே. எனவே கற்பித்தல் மற்றும் பாடத்திட்டங்கள் குறித்த சமூகத் தணிக்கை என்பதும் மிக அவசியமாகும். ஆகவே கல்வி நிலையங்கள் எவ்வாறாக சமூகநீதியைப் பாதுகாக்கின்றன. எவ்வாறாகக் கற்பித்தல் முறைகளை மேற்கொள்ளுகின்றன, எவ்வாறாகக் கல்விக்கு வழங்கப்படும் மக்கள் நிதியை முறையாகச் செலவழிக்கின்றன போன்றவை குறித்து எல்லாம் தணிக்கை செய்ய மக்கள் மன்றத்திலிருந்து குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் தணிக்கை முறை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதை நடைமுறைப்படுத்த எந்த கட்சி முற்படுமோ அதற்கு மாணவர்கள் அதரவு நல்கலாம். மாணவ வாக்காளரின் முக்கியக் கடமை.

12. எந்த வேட்பாளர் உயர்கல்வியின் தரம் குறித்து அக்கறை காட்டுகிறாரோ, எந்த வேட்பாளர் மாணவர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் ஜனநாயக பண்புள்ள, ஆழமான, தரமான கல்வியை வழங்குவதற்காகத் திட்டங்களை யோசிக்கின்றாரோ, அம்மாதிரியே ஆரோக்கியமான கல்விச் சூழலை உருவாக்குவதற்கு கல்வியாளர்கள் உடன் இணைந்து பணிபுரிய விரும்புகிறாரோ அந்த வேட்பாளரை மாணவர்கள் அடையாளம் காண்பதே அவர்கள் கற்கும் கல்விக்கு அர்த்தமுள்ளதாகும்.

13. மாணவர்கள் சார்பாக இதுவரை எந்த கோரிக்கைகளும் போட்டியிடும் கட்சிகளுக்கு வைக்கப்படவில்லை. ஆனால் அவர்கள் வாட்ஸ் அப்பிலும், முகநூலிலும் இது பற்றி விவாதிப்பது என்பது அவசியம். மாணவர்களுக்கான கோரிக்கைகளை அவர்களே தயாரிக்க வேண்டும்.

14. அதேபோன்று எந்த வேட்பாளர் பணம் கொடுத்து அல்லது வேறு வகையில் மாணவர்களை வசப்படுத்தி வாக்குகளைப் பெற விரும்புகிறார்களோ அவர்களை வெற்றி பெற முடியாமல் செய்வது என்பதும் மாணவர்களின் ஜனநாயகக் கடமை ஆகும்.

இரா.முரளி
மாநில ஒருங்கிணைப்பாளர் 
தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம்.