சல்மாட்டா வட்டாரா (Salmata Ouattara) 2023ம் ஆண்டை தன் நெல் வயல்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த ஆண்டு என்று நினைவுகூர்கிறார். ஐவரி கோஸ்ட்டில் ஜூன் மாதம் மழைக்காலத்தின் உச்சம். ஆனால் அந்நாட்டின் இரண்டாவது மிகப் பெரிய நகரமான க்வாக்கே (Bouaké) நகரின் வெளிப்புறத்தில் இருக்கும் எம்’பிஇ (M’Be) யில் அதற்கு அடுத்து வந்த ஆண்டுகளில் அவரும் மற்ற விவசாயிகளும் மழைக்காக பல வாரங்கள் காத்திருந்தனர்.
செப்டம்பரில் எதுவும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் வெள்ளத்தால் சூழப்பட்ட தங்கள் வயல்களைப் பார்த்து வேதனையுடன் நின்றனர். நிலையில்லாமல் ஊசலாடும் காலநிலையால் விரக்தி ஏற்பட்டு சிலர் தங்கள் வயல்களை கை விட்டனர். ஆனால் வாட்டாராவிற்கு அது ஒரு தீர்வாகத் தோன்றவில்லை. வயல்களில் இருந்து கிடைக்கும் உணவை சமைத்து குடும்பத்திற்கு உணவூட்டினார்.
தன் மூன்று குழந்தைகள் மற்றும் உறவினர்களின் வேண்டுகோளின்படி மற்றொரு விவசாயி தெரிவித்த கருத்தை ஏற்று இது போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க உதவும், அதிக விளைச்சல் தரும் ஸ்மார்ட் பள்ளத்தாக்குகள் (Smart Valleys) என்ற புதிய முயற்சியைப் பின்பற்றி மீண்டும் விவசாயம் செய்ய ஆரம்பித்தார்.
“அதற்கு முன்புவரை ஆண்டிற்கு 2 டன் உற்பத்தி செய்தேன். இதன் மூலம் கிடைத்த வருமானம் 400,000 சிஎஃப்ஏ (CFA) எனப்படும் மேற்காப்பிரிக்க ஃப்ராங்குகள் அல்லது 528.60 பவுண்டுகள். அவர் சோளம், உருளைக்கிழங்கு மற்றும் பூசணியை புதிதாகப் பயிரிடத் தொடங்கினார். ஸ்மார்ட் பள்ளத்தாக்குகள் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பிறகு விளைச்சல் 4.5 டன்களாக அதிகரித்தது. வருமானம் 900,000 சிஎஃபே அல்லது 1189.34 பவுண்டுகளாக உயர்ந்தது” என்று வட்டாரா கூறுகிறார்.
ஸ்மார்ட் பள்ளத்தாக்குகள் என்பது குறைந்த செலவு விவசாயத்திற்கான ஒரு முன் முயற்சி. இது லாப நோக்கமற்ற ஆப்பிரிக்கா அரிசி (Africa Rice) என்ற அமைப்பால் நடத்தப்படுகிறது. அதிகப்படியான மழை நீர் செல்வதற்குரிய வழிகளை உருவாக்குதல் போன்ற மிதமிஞ்சிய நீரை விவசாயிகள் கட்டுப்படுத்த உதவும் வழிமுறைகளை நோக்கமாகக் கொண்டது. இதனால் வெள்ள ஆபத்து குறையும். விளைச்சல் அதிகமாகும். பயிர் பன்முகத் தன்மையின் மூலம் விளைச்சலை அதிகரிக்கவும் இது உதவும்.
இத்திட்டம் ஜப்பானின் விவசாய அமைச்சரகத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது. உட்பகுதி பள்ளத்தாக்குகள், குன்றுகளுக்கு இடையில் இருக்கும் செழுமையான நிலங்களை மையமாகக் கொண்டு திட்டம் செயல்படுகிறது. இந்த இடங்கள் விவசாயத்திற்கு சிறந்தவை என்றாலும் மோசமான நீர்க் கட்டுப்பாட்டால் இங்கு பயிர்கள் பயிர் செய்யப்படுவதில்லை.
“துணை ஆப்பிரிக்காவில் (sub-Saharan Africa) அமைந்துள்ள இப்பகுதி 190 மில்லியன் ஏக்கர் பரப்பளவு உடையது. இதில் வெறும் 10% பகுதியில் மட்டுமே வேளாண்மை நடைபெறுகிறது. முன்பு விவசாயிகள் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அரிசியை உற்பத்தி செய்தனர். வறண்ட காலங்களில் கைவிடப்பட்ட நிலங்கள் இத்திட்டத்தின் உதவியால் இப்போது மாற்றுப் பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. இதன் மூலம் வருமானம் அதிகரிக்கிறது” என்று திட்டத்தின் தலைவர் எலியட் டாசு-யோவோ (Elliott Dossou-Yovo) கூறுகிறார். ஆப்பிரிக்கா அரிசி என்று அழைக்கப்படும் இத்திட்டம் 1971ல் தொடங்கப்பட்டது. அடுத்த பத்தாண்டிற்குள் விலைச்சலை இரு மடங்காக உயர்த்துவதே இதன் நோக்கமாக இருந்தது. இந்த இலட்சியம் அடையப்பட்ட பின் 2009ல் மேற்காப்பிரிக்க அரிசி வளர்ச்சி சங்கம் என்ற பெயரில் இருந்து ஆப்பிரிக்கா அரிசி என்று திட்டத்தின் பெயர் மாற்றப்பட்டது.
2030ம் ஆண்டிற்குள் உறுப்பு நாடுகளில் அரிசி உற்பத்தியில் சுயசார்பு அடைவது இதன் குறிக்கோள். திட்டத்தின் மையப்பகுதியாக பரிசோதனைக் கூடங்கள், விதை ஆய்வு நிலையம் மற்றும் மேம்பட்ட இனங்களை விஞ்ஞானிகள் உருவாக்கப் பயன்படும் 22,000 ரகங்களுடைய மரபணு வங்கி ஆகிய வசதிகளுடன் உள்ள ஆப்ப்ரிக்கா அரிசி ஆராய்ச்சி வளாகம் வட்டாராவின் நிலத்தில் இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் அமைந்துள்ளது.
கேட்ஸ் அறக்கட்டளை (Gates Foundation), உலக வங்கி, இஸ்லாமிக் வளர்ச்சி வங்கி மற்றும் ஆப்பிரிக்க வளர்ச்சி வங்கி போன்ற அமைப்புகள் இத்திட்டத்திற்கு நிதியுதவி செய்கின்றன. “மேற்காப்பிரிக்காவில் 1960 மற்றும் 1970களில் மக்கள்தொகைப் பெருக்கம் அரிசி உற்பத்தியில் பற்றாக்குறையை ஏற்படுத்தியது” என்று கேம்பியா நாட்டில் பிறந்த திட்ட இயக்குனர் ஜெனரல் பாபாகார் மேனே (Baboucarr Manneh) கூறுகிறார்.
விருந்துகளின் போது மட்டுமே முன்பு பயன்படுத்தப்பட்ட அரிசி இப்போது ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற உணவுப் பயிராக மாறியுள்ளது. அது சமைப்பதற்கு எளிதானது. சோளம் மற்றும் சிறு தானியங்களுடன் ஒப்பிடும்போது பலர் அரிசியை ஒரு விலையுயர்ந்த உணவாகக் கருதுகின்றனர். சியாரோ லியோனில் மக்கள் அதிகமாக வேர்கள், கிழங்குகளைப் பயன்படுத்துகின்றனர்.
என்றாலும் அவர்கள் இவற்றை வறுமையுடன் தொடர்புபடுத்திக் காண்கின்றனர். அரிசியை அதிகமாக விரும்புகின்றனர். “இத்திட்டம் சந்தை நிலவரங்களை ஆராய்ந்து, உறுப்பு நாடுகள் பகுப்பாய்வு செய்து அனுப்பும் மாதிரி முடிவுகளின் அடிப்படையில் புதிய ரகங்களை உருவாக்குகிறது. இது ரகங்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ஆற்றல் செறிவுள்ள உணவாக இல்லாமல் சத்துகள் நிறைந்த உணவாக அரிசியை உருவாக்குவதே இதன் நோக்கம். அதே நேரம் அரிசியை எடுத்துக் கொள்வதால் குளுக்கோசின் அளவு அதிகமாகாமல் இருக்க உதவும் ரகங்களை உருவாக்க ஆய்வுகள் நடைபெறுகின்றன. பாமாயில் அரிசியின் நுகர்வை அதிகரிப்பது இதற்கு ஒரு தீர்வு. இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவுகிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. வரலாற்றுரீதியாக ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் இது புகழ்பெற்றதாக இல்லை. ஆனால் நைஜீரியாவில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் மூலம் குழந்தைகள் உடனடியாக எடுத்து பயன்படுத்தக்கூடிய பாப் அரிசி மாவை உருவாக்கியுள்ளது. விவசாயிகள் அரிசியுடன் சேர்த்து இப்போது இஞ்சி, சோயா, மஞ்சள் மற்றும் செம்பருத்தி போன்ற உள்ளூர் ரகங்களையும் பயிரிடுகின்றனர். இவை நுண்ணூட்ட சத்துப் பற்றாக்குறையை போக்க உதவுகின்றன. விலை மலிவான அரிசி இறக்குமதி ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமிக்கிறது. இந்நிலையை மாற்றவே இத்திட்டம் பாடுபடுகிறது.
ஆப்பிரிக்காவின் 5% விளை நிலங்களில் மட்டுமே நீர்ப் பாசன வசதியுள்ளது. மற்ற நிலங்கள் பருவ மழையை நம்பியே உள்ளன. இந்நிலையை மாற்ற உறுப்பு நாடுகள் திட்டத்தின் உதவியுடன் காலநிலை மாற்றத்தை தாக்குப் பிடித்து வளரும் புதிய ரகங்களை உருவாக்க திட்டம் ஊக்குவிக்கிறது” என்று மேனே கூறுகிறார். இப்போது கிழக்காப்பிரிக்காவில் டான்ஜானியா உற்பத்தியில் தற்சார்பு அடைந்து திட்டத்தின் செயல்பாடுகளால் அதை ஏற்றுமதி செய்கிறது.
விரைவில் நைஜீரியா இந்நிலையை அடையும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல புதிய வெற்றிக் கதைகள் ஆப்பிரிக்கா அரிசித் திட்டத்தின் மூலம் வெளிவரும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது போன்ற திட்டங்கள் உலக மக்களின் பசியைப் போக்கி மனித குலம் நலமாக வாழ உதவும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்