‘சேர்ந்ததன் வண்ணமாதல்’

இத்தொடரை பலரும் அறிவர். நன்னெறி ஒன்றை நாம் பற்றிக் கொண்டோமெனில், அதன் வழி சிந்தித்தலும் செயல்படுதலும் ‘சேர்ந்ததன் வண்ணமாகும்’.

குன்றடிக்குடி மடத்தின் தற்போதையத் தலைவர், ‘தவத்திரு பொன்னம்பல அடிகளார்’, தான் சேர்ந்ததன் வண்ணம், கருத்து ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார்.

இவர், தன் முன்னோடியான மறைந்த ‘தெய்வசிகாமணி தம்பிரானடிகள்’ போன்றே சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர். இலக்கியத்திறன் மிக்கவர்.

இவர் மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள, தன் அனுவங்களின் பிழிவாக, ‘பாலச்சந்திரன் சுள்ளிக்காடு’ என்னும் மலையாள தேசத்துப் புரட்சிக் கவிஞர் "சிதம்பர நினைவுகள்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள 21கட்டுரைகள் அடங்கிய நூலைப் படித்தார்.

அவைகளில் ஒரு கட்டுரையின் தலைப்பு "ரத்தத்தின் விலை" என்பதாகும். அக்கட்டுரையின் கருப்பொருள் அடிகளாரின் மனத்தை மிகவும் வருடியுள்ளது.

அதை பாராட்டும்பொருட்டு "முன்பின் அறியாத, இரத்தம் விற்கவந்த இடத்தில் பழக்கப்பட்ட கிருஷ்ணன் குட்டியின் தங்கை பிழைப்பதற்காக, தன் வறுமையின், பசியின் பிடியில் இரத்தினை விற்று தொகையைக் கொடுத்த நிகழ்வு, விழிகளில் நீரை வரவழைக்கவில்லை, இதயத்தில் இரத்தத்தை வரவழைக்கின்றது! 'ஓ' மனித இரத்தமே! உன்விலை என்ன? என்று பாலச்சந்திரன் கேட்டுள்ளார்.

பாலச்சந்திரனின் இரத்ததானம், ‘கோபுரக் கலசத்தின் புனித நீரைவிட’ மகத்துவம் வாய்ந்தது. அதற்கு விலை இல்லை" என தன் கருத்தைப் பதிந்துள்ளார்.

அடிகளார் ஒரு சமயத்தின் ஆன்மிகத் துறவி. அவரின் சிந்தனை, கருத்து செயல், யாவும் அதனைச் சார்ந்து வெளிப்படுதல் சார்ந்ததன் வண்ணமாதலாகும்.

பாலச்சந்திரன் சுள்ளிக்காடு ஒரு சமயம் வறுமையின் பிடியிலிருந்தார். திருவனந்தபுரத்திலிருந்து தன் சொந்த ஊருக்கு செல்லப் பணமில்லை.

அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு இரத்தம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்பதையறிந்து, அங்குச் சென்று தன் இரத்தம் கொடுத்து, அதற்கு ஈடாக ரூபாய் 16/= பெற்றார்.

அங்கு தன் தங்கைக்கு மருந்து வாங்குவதற்காக பணமில்லாமல் தன் இரத்தத்தை விற்று பணம் பெற்று மருந்து வாங்கலாம் என பாலச்சந்திரன் சுள்ளிகாடுக்கு முன்பின் அறிமுகமில்லாத கிருஷ்ணன் குட்டி என்பவன் தன் இரத்தத்தைக் கொடுத்து பெற்ற பணம் ரூபாய் 16/ = ஐ எடுத்துக் கொண்டு மருந்து சீட்டு ஆங்கிலத்தில் இருந்ததால் துணைக்கு பாலச்சந்திரன் சுள்ளிக்காடுவை துணைக்கு அழைத்து சென்று, மருந்து கேட்டுள்ளான்.

மருந்தின் விலை ரூபாய் 27/=. இவனிடம் இருந்தத் தொகையோ இரத்தம் கொடுத்துப்பெற்ற 16/ = ரூபாய் மட்டுமே.

சற்றும் தயக்கமின்றி பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, தான் இரத்தம் விற்று பெற்ற பணம் ரூபாய் 16/ = யும் அவனிடம் கொடுத்து மருந்து வாங்கச் சொன்னான்.

இச்செயல்தான் உலகில் உன்னதமான செயல். இதற்கு இணை எதுவுமேயில்லை. இந்தச் செயல் உயர்ந்த உள்ளம் படைத்தோர் அனைவரையும் நெகிழச் செய்யும்.

அதன் காரணமாகவே "கோபுரக் கலசத்தின் புனித நீரைவிட மகத்துவம் வாய்ந்தது" என்கிறார் அடிகளார். இத்தகைய உயர் ஒப்புமைகள், ‘குன்றக்குடி மடத்தில்’ உள்ளவர்களின் உள்ளத்திலிருந்து மட்டுமே வெளிப்படும்.

-ப.தியாகராசன்

Pin It