நம்மிடையே அன்றாடம் புழக்கத்தில் உள்ளதொரு சொல் ‘பிரமாதம்’.

இது தமிழ்ச்சொல் அல்ல. ஆனாலும், இச்சொல் மெத்தப் படித்த அறிஞர்கள் முதல், அனைவரின் உள்ளத்திலும் குடிகொண்டுள்ளது.

அவர் பேச்சு எப்படி? என்றால் ரொம்ப ‘பிரமாதம்’ என்பர்.

அவர்கள் வீட்டு திருமணத்திற்குப் போனோம். ‘பிரமாதமாக’ கவனித்தார்கள் என்பார்கள்.

அதிலும் மெத்தப் படித்தவர்கள், அழுத்தம் திருத்தமாக, மகர ஒற்று கூடுதலாகச் சேர்த்து ‘பிரம்மாதம்’ எனக் கூறுவர். இப்படியாக, ஒவ்வொரு நிலையிலும், இச்சொல் வேரூன்றியுள்ளது வியப்பாக உள்ளது.

நாம், ‘நன்மறை’ என கருதக்கூடிய இச்சொல், ‘எதிர்மறையான’ பொருட்களை தரவல்லது.

இதற்கு, தமிழ் அகராதியில், ‘அசட்டை’, ‘உவாதித்தல்’, ‘கொல்லல்’, ‘தவறல்’, ‘மதியீனம்’, ‘மோகம்’, ‘வருத்தம்’, ‘வெறி’ என்ற பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன.

அத்தகைய, எதி்ர்மறையான பொருட்களைத் தரவல்ல இச்சொல், நன்மறையாக நம்மிடையே புகுந்துள்ளது எவ்வாறு? விடைகாண இயலவில்லை.

இனியேனும் நாம், ‘நன்று, நல்ல, சிறப்பு’, என்ற சொற்களை பயன்டுத்துவோம்.

"சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்" என்கிறது, ‘திருவாசகம்’. நாம் சொல்லுகின்ற ‘சொல்லின்’ பொருளுணர்ந்து சொல்லுவோம்.

- ப.தியாகராசன்

Pin It