ஆசியாக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் தென்கொரியா அமைந்துள்ளது. 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை வட கொரியாவும், தென் கொரியாவும் சேர்ந்தே இருந்தன. இரண்டும் இணைந்த கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் சைனாவும், ரஷ்யாவும், கிழக்கில் கடலும், அதைத் தாண்டி ஜப்பானும், மேற்கில் மஞ்சள் கடலும், அதைத் தாண்டி சைனாவும், தெற்கில் கடலும் அமைந்துள்ளன.

south korea

தற்பொழுது கொரியா என்றாலே "ரிபப்ளிக் ஆப் கொரியா" எனப்படும் தென்கொரியாவைத் தான் குறிக்கின்றது. சுமார் 3000 தீவுகள் சேர்ந்து பரப்பளவு சுமார் 99117 ச கி.மீ. தென் வடலாக சுமார் 965 கி.மீ. உள்ள சிறிய நாடு.

கொரியா மலைப்பாங்கான நாடு. கிழக்குப் பகுதியில் மலைகளும், மேற்குப் பகுதியில் நதிகள் பாய்கின்ற பசுமையான பகுதிகளும் உள்ளன. கோடைக் காலம் அதிக வெப்பத்துடனும், மழைக் காலம் நல்ல மழையுடனும், அடுத்து இலையுதிர் காலம், கடுங்குளிருடன் பனிக் காலம் என்று தனித்தனியான பருவநிலை காணப்படுகிறது. பச்சைப் பசேர் என்றிருக்கும் இலைகள் கோடையில் மஞ்சளாகவும், ஆரஞ்சு வண்ணமாக வும் மாறி வண்ணமயமாக இருப்பது காணக் கிடைக்காத காட்சி. பனிக்காலத்தில் இலைகளெல்லாம் உதிர்ந்து, வெண்மையாகப் பனியுடன் வர்ணக் களஞ்சியமாக உள்ளது.

கொரியா, பலம் மிகுந்த சைனா, ஜப்பான் போன்ற நாடுகளின் மத்தியில் இருந்தாலும், தனக்கென்று தனித்துவத்துடன் தான் இருந்து வந்திருக்கறது. அதற்கென்று தனியாக கொரிய மொழியும், எழுத்துக்களும் உண்டு.

கொரிய மக்கள் கிறித்துவுக்கு முன், 24 நூற்றாண்டுகளுக்கு முன், ஆசியாவின் மத்தியப் பகுதியிலிருந்து கொரியத் தீபகற்பத்திற்கு வந்த மங்கோல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களது கதைப்படி 2333 BCE யில் "டான்கன் "(tangun)என்ற மனிதனும் கடவுளும் இணைந்த மனிதக் கடவுள் (man god). "சோஸன்" என்ற "காலை அமைதியின் நாட்டைப்" (land of morning calm) படைத்ததாகவும், அவரது வழிவந்தவர்களாகவும் தங்களைக் கூறிக் கொள்கின்றனர்.

சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலும் அங்கு மனிதர்கள இருந்திருப்பதை அங்கு கிடைத்த சரித்திர காலத்திற்கு முற்பட்ட கல்லினால் ஆன வேட்டைக் கருவிகளால் அறியலாம்.

60BCE யில் ஷில்லா, கொரியோ, பெக்சே (shilla ,koguryo, packche) என்ற மூன்று அரசுகள் தளைத்து இருந்திருக்கின்றன. 668 CE யில் மூன்று அரசுகளும் ஷில்லாவின் கீழ் இணைந்திருக்கின்றன. 918ல் கொரியோ என்ற பெயரில் புது அரசு வந்திருக்கிறது.

பல நாடுகளுக்கு மத்தியில் இருந்ததால், அந்தக் காலத்தில் வாணிக வழியில் ஒரு முக்கிய இடமாக இருந்திருக்கிறது. அச்சுத்துறையில், கூட்டன்பர்க்குக்கு இரண்டு நூற்றாண்டுகள் முன்பாகவே, அசையும் எழுத்து வகை இருந்திருக்கின்றது.

south korea

பெரிய நாடுகளுக்கு இடையில் கொரியா இருந்ததால் பல தாக்குதல்களிலும் அகப்பட்டிருக்கிறது. 1392இல் மங்கோலியப் படையெடுப்பினால் பாதிக்கப்பட்ட கொரியாவில் அதன் பின் சோஸன் அரசு ஏற்பட்டிருக்கிறது. சோஸன் அரசின் கீழ் இருந்த ஐநூறு ஆண்டுகளிலும் வர்த்தகம் குறைக்கப்பட்டு மற்ற நாடுகளுடன் தொடர்பு குறைந்திருக்கிறது. அப்பொழுது "முனிவர் அரசு "(hermit kingdom)என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின் அந்தப் பகுதியில் வல்லரசாக இருந்த ஜப்பானுடன் 1910ல் இணைக்கப்பட்டிருக்கிறது.

35 வருடங்கள் ஜப்பானிடம் அடிமைப்பட்டு இருந்திருக்கிறது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் தோல்வி அடைந்தது. 1945ம் ஆண்டில் 38*அட்சரேகைக்கு தெற்கிலிருந்த ஜப்பானியப் படைகள் அமெரிக்காவிடமும், அதன் வடக்கில் இருந்த ப‌டைகள் ரஷ்யாவிடமும் சரணடைந்தன‌. அதன் பின் ஐ.நா. இரண்டு இடங்களிலும் தேர்தல் நடத்துவதாக அறிவித்து, தென் பகுதியில் அமெரிக்காவின் துணையுடன் தேர்தல் நடந்து "ரிபப்ளிக் ஆப் கொரியா" என்ற தென் கொரியா 1948இல் உதயமானது. ரஷ்யா வடபகுதியில் "டெமக்ரடிக் பீப்புள் ரிபப்ளிக் ஆப் கொரியா" என்ற கம்யூனிஸ்ட் அரசை ஏற்படுத்தியது.

இரண்டாம் உலகப் போரினால் கொரியாவில் அமெரிக்கா, ரஷ்யாவினால் இரு வேறு அமைப்புள்ள நாடுகள் தோன்றின. அதன்பின் இரண்டு வருடங்களுக்குப் பின் ஜுன் 25, 1950ஆம் ஆண்டு வட கொரியா, தென் கொரியா மீது திடீர்த் தாக்குதல் நடத்தியது. ஐ.நா. தலையிட்டு அமெரிக்கா முதலிய பதினாறு நாட்டுப் படைகள் சென்று, வட கொரியாவின்_ ரஷ்யாவின்_ பிடியிலிருந்து விடுவித்திருக்கிறது. அந்த நேரத்தில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்த இந்தியாவும் மருத்துவ உதவி அனுப்பி இருக்கிறது.

மூன்று ஆண்டுகள் போர், பலத்த சேதங்கள், ஒரு இனமாக, மொழியாக ஒன்றுபட்டிருந்த மக்கள் இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்ட கொடுமை எல்லாவற்றையும் கொரியா தாண்டி வந்திருக்கிறது. பின் அமெரிக்காவின் உதவி பெறும் நாடாக இருந்து படிப்படியாக முன்னேறியிருக்கிறது. இன்றும் அமெரிக்காவின் படைத்தளம் அங்கு உண்டு.

1953ம் ஆண்டில் மிகத் தாழ்ந்த நிலையில் இருந்த கொரியா இன்று உலகப் பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருக்கிறது. ஒலிம்பிக்ஸ், ஆசிய விளையாட்டுப் போட்டிகளை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது. உதவி பெறும் நாடாக இருந்து இன்று உதவும் நாடாக வளர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் என்ன? உழைப்பு, உழைப்பு, உழைப்பையே குறிக்கோளாகக் கொண்ட அதன் மக்கள்!!

(தொடரும்)

Pin It