கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

shirakawa-village-1இதே தளத்தில் இடம் பெற்று உள்ள கொடிவழி என்ற எனது கட்டுரையை சிறு நூலாக அச்சிட்டு, நான்கு பதிப்புகளை வெளியிட்டு உள்ளேன். இதுவரையிலும், 8000 படிகள் விற்று உள்ளன. இந்தக் கட்டுரை ஏற்படுத்திய தாக்கத்தால், எனது அடுத்த பயணத் திட்டமாக ஜப்பான் நாட்டுக்குச் சென்று, கொடிவழியைத் தேடுவது எனத் தீர்மானித்தேன். 2013 ஜனவரி முதல் பயண ஏற்பாடுகளைச் செய்து வந்தேன். ஏப்ரல் 24 ஆம் நாள் அதிகாலை 3.00 மணி அளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு, ஹாங்காங் வழியாகப் பயணித்து, இரவு 9.00 மணி அளவில் டோக்யோ போய்ச் சேர்ந்தேன். அங்கே ஏழு நாள்கள் தங்கிச் சுற்றிப் பார்த்தேன். அடுத்து, மத்திய ஜப்பானில், நகோயா என்ற நகரத்துக்கு அருகில், கனி என்ற சிறிய நகரில் வசிக்கின்ற எனது பள்ளித் தோழன் பாலுவின் இல்லத்துக்குச் சென்று தங்கினேன்.

சென்னையில் இருந்து புறப்படுவதற்கு முன்பே, கொடிவழி கட்டுரையை அவருக்கு அனுப்பி இருந்தேன். எனது பயணத்தில், ஜப்பானியக் கொடிவழி தொடர்பான செய்திகளை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன் எனக் குறிப்பிட்டு இருந்தேன். அதற்காக, பாலு என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

கனி நகரில், காலை 5.30 மணிக்கெல்லாம் பொழுது நன்றாகப் புலர்ந்து தொடங்கி விடுகிறது.   ஆயத்தமாகி நாங்கள் புறப்படுகையில் 6.30 மணி. பாலு, அவரது துணைவியார், ஜப்பானிலேயே பிறந்து வளர்கின்ற அவர்களது மகள், நான், எனது உறவினர் கல்யாணசுந்தரம் ஆகியோர் காரில் சென்றோம். காரை பாலு ஓட்டினார். ஜப்பானில் கார்ப்பயணம் குறித்து, விரிவாக தனிக் கட்டுரை எழுதுகிறேன்.

shirawaka-go_360இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி, பயண வழி உணவகத்தில் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டோம். சுமார் இரண்டரை மணி நேர அதிவிரைவுப் பயணத்துக்குப் பிறகு, சிரகவா-கோ என்ற ஜப்பானியக் கிராமத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.  இது, ஜப்பானின் கிஃபு என்ற மாவட்டத்துக்கு உள்ளே இருக்கின்றது. இந்த ஊரைப் பற்றி, அங்கே போய்ச் சேருகின்ற வரையிலும் எனக்கு எதுவும் தெரியாது.

இந்த கிராமம், ஐ.நா.வின் யுனெஸ்கோ பண்பாட்டு நிறுவனத்தால், உலகின் பழமையான நினைவுச் சின்னங்களுள் ஒன்றாக அறிவிக்கப்பட்டு உள்ளது. (Unesco Heritage Sites). நாலாபுறமும் உயர்ந்து ஓங்கிய மலைகளுக்கு நடுவே, ஒரு பள்ளத்தாக்குக்கு உள்ளே இந்த கிராமம் அமைந்து இருக்கின்றது. இயற்கை எழிலை வருணிக்கவே முடியாது. ஊர் மட்டும் அல்ல, அந்த ஊருக்குச் செல்லுகின்ற வழிநெடுகிலும் அத்தனை அழகு.  பரபரப்பாகப் பாய்ந்து ஓடிக்கொண்டு இருக்கின்ற ஜப்பானிய நகரங்களுக்கு இடையே, இந்த கிராமத்தில் அமைதித் தென்றல் தவழ்கின்றது. எந்த ஆரவாரமும் இல்லை.

shirakawa---go_360சிறப்பு என்னவென்றால், இந்த கிராமம் தோன்றி 300 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது, இங்கே இருக்கின்ற வீடுகள் கட்டப்பட்டு 300 ஆண்டுகளாக, 20 தலைமுறையினர் தொடர்ந்து வசித்து வருகின்றார்கள். ஒவ்வொரு குடும்பமும், அதற்கான ஆவணங்களைப் பராமரித்து வருகின்றார்கள். ஒவ்வொரு வீட்டுக்கு உள்ளேயும் சென்று பார்ப்பதற்குக் கட்டணம் உண்டு. வதா குடும்பத்தினருடைய வீடு சற்றே பெரியது. அவர்களது வழித்தோன்றல்கள்தாம் ஊர்த்தலைவர்களாக இருந்து வருகின்றார்கள். அந்த வீட்டைப் பார்ப்பதற்குக் கட்டணம் 300 யென்கள்; இந்திய ரூபாய் 150.

ஒரு மலைமுகட்டில் இருந்து, ஓராண்டின் பல்வேறு பருவகால நிலைகளில் எடுக்கப்பட்ட இந்த ஊரின் வண்ணப்படங்கள், கடைகளில் விற்கப்படுகின்றன. வீடுகளின் சிறிய மாதிரிகளும் கிடைக்கின்றன. நான் வாங்கிக் கொண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு இணையத்தில் பார்த்தேன். சிரகவா-கோ குறித்து ஏராளமான படங்களும், விரிவான தகவல்களும் உள்ளன. படித்துப் பாருங்கள்.

எனது கொடிவழி என்ற கட்டுரையைப் புதுப்பித்து, நான்காம் பதிப்பை அச்சிட்டு, அதன் 100 படிகளை எடுத்துக் கொண்டு போய், ஜப்பான், ஹாங்காங், குவாங்சௌ, சென்சென், மகாவ் ஆகிய இடங்களில் நான் சந்தித்த, ஜப்பானியர்கள், சீனர்கள், மாணவ, மாணவியரிடம் கொடுத்து விட்டு வந்தேன்.

- அருணகிரி