மாரி, தங்கராசு, சீனியம்மாள் எல்லோரும் நமக்குக் கூடப் பிறந்தவர்கள் மாதிரி. ஒன்றாக விளையாடினவர்கள் மாதிரி. அசோகவனம், வெயிலோடுபோய் கதைகளைத் தூக்கத்தில் எழும்பிக்கேட்டாலும் நிறையப் பேருக்கு வரிவரியாய்ச் சொல்ல முடியும்.
இயக்குநர் சசி செல்லுலாயிடில் அப்படித்தான் சொல்லியிருக்கிறார். 'பூ' திரைப்படமும் தமிழ்ச்செல்வன் கதையும் இரட்டைப் பிள்ளைகள் போல இருக்கின்றன. ஒரு சிறுகதையை இங்கங்கு விலகாமல், இவ்வளவு நெருக்கமாகப் படமாக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
'பூ' என்று சசி சும்மா அழகுக்காகப் பெயர் வைக்கவில்லை. அசோகவனம் கதையை அவர் படித்துக் கொண்டே போயிருக்கிறார். மாரியின் மனதுக்குள் 'சினிமா கணக்கா' ஓடிக் கொண்டேயிருக்கிறது. 'இப்படி பூ விரியறமாதிரி மனசுக்குள் எத்தனை கனா' என்று ஒருவரி வருகிறது. உடனே சசிக்குப் படத்தின் பெயர் தோன்றிவிடுகிறது. நமக்கு முன் விரிகிறது 'பூ'. திரையில் முதலில் ஒரு நிப். பேனா எதுவும் இல்லாமல் நிப்புமட்டும் வந்து நிற்கிறது. அப்புறம் 'நேசகி சினிமாஸ்' என்று. நிஜமாகவே அப்புறம் எழுதப்படுவது நேசமிக்க ஒரு சினிமாதான்.
வெயிலோடு போய் முதல்வரி எப்படித் துவங்குகிறதோ அப்படியே 'பூ' துவங்குகிறது. "மாரியம்மாளின் ஆத்தாவுக்குத் திகைப்பாக இருந்தது. இந்த வேகாத வெயில்ல இந்தக் கழுத ஏன் இப்படித் தவிச்சுப்போயி ஓடியாந்திருக்கு என்று புரியவில்லை.
'ஒம் மாப்பிள்ளை வரலியாடி?'
ஜானகியம்மா இந்த வரிகளிலிருந்து கிளம்பிவந்து கேட்க, அந்தப் பிள்ளை பார்வதி 'விறு விறுண்ணு உள்ளே போயி ரெண்டு செம்புத் தண்ணியைக் கடக்குக் கடக்குண்ணு குடித்துவிட்டு 'யெஸ். ஆத்தாடி என்று மாரியாக உட்கார்கிறது மாரியாக உசிரோடு நடமாட இயக்குநர் சசி பார்வதியை அடையாளம் கண்டதில் இருந்தே 'பூ' திரைப்படத்தின் முழுமை தீர்மானிக்கப்பட்டுவிட்டது.
பார்வதியால் கண்ணாடியில் தன்னை மாரியாகப் பார்த்துக் கொள்ள முடிந்திருக்கிறது. படப்பிடிப்பு தினங்களில் பார்வதியின் வியர்வையில் நிச்சயம் வெடியாபீஸ் வீச்சம் இருந்திருக்கும். பார்வதியின் கைகள் சீனியம்மாவின் கைகளை, அதன் மூலம் தங்கராசுவின் கைகளைத் தேடிக் கொண்டிருக்கும். தங்கராசுவின் செல் நம்பரை அவருடைய விரல் அழுத்திக் கொண்டிருக்கவும் கூடும். கள்ளிப்பழச்சாறு பூசுவதற்கு சிநேகிதியின் கன்னங்களைத் தேடுகிற ஒரு பண்டிகை அவருக்குவரும். அந்தக் கடைசிக்காட்சி அழுகையை இப்போது கூட அவரால் நிறுத்தியிருக்க முடியாது. சில சமயம் சொல்லி வைத்தது மாதிரி எல்லாம் அமைந்து போகும்.
மாரியம்மாள் பாத்திரத்துக்கு மட்டுமில்லை. மாரியின் மாப்பிள்ளை, அம்மா, அண்ணன், சீனியம்மா, பேனாக்காரர், வெடியாபீஸ் ஃபோர்மேன், ஆயில்மில் முதலாளி, அலோ எல்லாம் அச்சு அசலாக நடமாடும்படி இனிகோ, ஜானகியம்மா, வீரசமர், இன்பநிலா, ராமு, லட்சுமணப்பெருமாள், கண்ணன், கந்தசாமி எல்லோரும் செய்திருக்கிறார்கள். இதைத்தவிர பள்ளிக்கூட வாத்தியார், பலசரக்குக் கடையில் சாமான் வாங்குகிற அந்தப் பெண், "இப்பதான் வர்ரியா மாரி" என்று வீட்டுவாசலில் விளக்கு விளக்கிக் கொண்டு இருக்கிறவர் மாரி நாண்டுக்கிட்டு நிற்கிற காட்சியில் வந்து போகிற ஐந்தாறு பேர், டீக்கடை அலோவின் மனைவி, எஸ்.ட்டி.டி பூத்தில் மோட்டார் சைக்கிளிலிருந்து இறங்காமல் மாரியை ஏசிவிட்டுப் போகிறவரும் பின்சீட்காரரும்... இப்படி எல்லோர் விடுகிற மூச்சினாலும் காட்சிகள் வெதுவெதுப்பாகியுள்ளன.
மாரி வீடு, தங்கராசு வீட்டுப் புறவாசல், டீக்கடை, வெடியாபீஸ், பிள்ளைகளின் தூக்கத்தை விழுங்கி ஏப்பம்விடுகிறமாதிரி ஹாரன் அடித்துக் கொண்டு வருகிற பஸ், உலையில் இருக்கிற திருநீறு குங்குமம் பூசின பித்தளைத் தவலை, திரையின் இடது கீழ்மூலையில் அசைகிற எருக்கலஞ்செடி இலையும் பூவும், ஒட்டாங்காளைகளுக்குத் தவிடும் புண்ணாக்கும் கலக்குகிற சிமென்ட் தொட்டி, கோடாங்கி அடித்துக் கொண்டு வருகிற இரவுத் தெரு என நிறைய நிறைவுகள்.
வசனமும் அப்படித்தான். ஏற்கெனவே தமிழ்ச்செல்வன் எழுதினது போக, மீதி உள்ளவை எல்லாம் அந்தந்த ஆட்கள், அந்தந்தக் கட்டத்தில் என்ன பேசுவார்களோ அப்படி மட்டும் இருக்கிறது. மாரியின் அம்மா, மாரியின் அண்ணா பேசுகிறது எல்லாம் சினிமா பேச்சு இல்லை. காலம் காலமாகக் கரிசல்காட்டில் புழங்கித் தேய்ந்த சொற்களும் சாணைபிடித்த உணர்ச்சிகளும் நிரம்பியவை. எச்சலில் நனைந்தவை.
இந்த பி.ஜி. முத்தையாவையும் எஸ்.எஸ்.குமரனையும், வீரசமரையும் எங்கேயிருந்து சசி பிடித்தார். சில பேர் உட்கார்ந்திருக்கும்போது தெற்குவாசல்படிகூட அழகாகிவிடுகிறது. பாறைமேல் சாய்ந்துகொண்டு நிற்கிற உல்லாசப் பயணப்புகைப்படச் சிநேகிதர்கள் எவ்வளவு நேர்த்தியாகச் சிரிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் ஒளிப்பதிவும் இசையமைப்பும் கலை இயக்கமும் அப்படித்தான் இருக்கிறது. நிறையக் காட்சிகளின் ஓவியத்தை இந்த மூன்றுபேரும் சேர்ந்து வரைந்திருக்கிறார்கள். பி.ஜி.முத்தையாவின் படப்பிடிப்பில் ஒரு இசையமைப்பு இருக்கிறது. எஸ்.எஸ்.குமரனின் இசையில் ஒரு படப்பிடிப்பு இருக்கிறது. வீர சமருக்கு எதன்எதன்மேல் காமரா நகரும், யார் யார் மேல் வெயில் உருமிமேளம் வாசிக்கும் என்று தெரிந்திருக்கிறது.
இந்த அரைப்பரீட்சை லீவில் எல்லாப் பிள்ளைகளும் 'சூ. சூ. மாரி' பாடிக் கொண்டிருக்கிறார்கள். நா.முத்துக்குமாரின் வரிகளில் பாலிய காலம் விளையாடுகிறது (கொல்லைப்பக்கம் போகாதே கொட்டிக்கிடக்குது ஜாங்கிரி). கதையின் மையத்திலிருந்து விளம்புவரை தொட முத்துக்குமாருக்கு முடிகிறது. கயத்தாற்றுக் காத்தாடி, சங்கரன்கோவில் சுந்தரி, ஆலைச் சங்குச் சத்தம், உள்ளே வெடிக்கும் ஊசிவெடி, வெயில், மயில், ஆக்காட்டி, ஆவாரம் பூ எல்லாம் அதனதன் இடங்களில்.
சிறு பிள்ளைகள் உலகத்தின் விடுதலையும், குதூகலமும், மாயமும், கலகலப்பும் சூ சூ மாரியில் பதிவாகியுள்ளன. நார்ப்பெட்டி முகமூடிகள், பனை ஓலை ஆடை, அலையலையாய்ப் புரண்டு பின்வாங்கும் மக்காச்சோளத் தோகைகள் என்று முருகபூபதியின் அற்புத உலகம் விரிகிறது. அடிக்கடி காமராவுக்கு மிக அருகில் வந்து போகிற ஐஸ்குச்சி வேண்டுமா என்று கேட்டு விலகுகிற பையனில் நம் ஒவ்வொருவரின் சிறுவயதும் இருக்கிறது. சிறுவயதுதான் நம் கையைப் பிடித்துப் பெரிய வயதுக்குள் கூட்டிப் போகிறது. நம்முடன் காடுமேடெல்லாம் பால்ய காலம் ஒரு நிழல்மாதிரி இழுபடுகிறது.. தங்கராசுவைப் பார்க்க, வேனா வெயிலில் மாரியை ஓடி வரச் சொல்கிறது. பிரியம் பொங்குகிற குரலில், ரகசியமாக அந்த அக்காவிடம் 'மாசமா இருக்கீகளா' என்று கேட்கச் சொல்கிறது. வேலை செய்யாமல் ஏதோ யோசனையாக உட்கார்ந்திருக்கிற மாரியை, ரொம்ப ஆதரவாக, இருக்கட்டும் இருக்கட்டும் என்று சைகையில் சீனியம்மாவிடம் காட்டிவிட்டு வெடியாபீஸ் ஃபோர்மேனை நகரச் சொல்கிறது. ஏக்கமும் வெடிப்பும் நடுக்கமுமாய் அழுகிற மாரியைப் பதற்றத்துடன் தேற்றச் சொல்கிறது.
ஒரு வேளை, தமிழ்ச்செல்வன் வெயிலோடு போய் கதையை எழுதியதற்கும் சசி 'பூ' படத்தை இயக்கியதற்கும், நாம் இப்படி அந்தப் படத்தைப் பற்றித் திரும்பத் திரும்ப பேசிக் கொண்டு இருப்பதற்கும் காரணம் அவரவரின் கள்ளம் கபடமற்ற பால்யமாக இருக்கும்.
நாம் மாரி அல்லது தங்கராசு. மாரியின் கணவனாகவும் தங்கராசுவின் மனைவியாகவும் நாம் இருப்பதைக் கூடத் தவிர்க்க முடியாது. நாம் யாராக இருந்தாலும், இது நம்முடைய வெயில். இது நம்முடைய பூ. நம்முடைய சினிமா. சசியையும் சசியின் பூவையும் கொண்டாடுவோம். அது நம் வாழ்வைக் கொண்டாடுவது போல.
(செம்மலர்)
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
‘பூ’ திரைப்படம்
- விவரங்கள்
- வண்ணதாசன்
- பிரிவு: திரை விமர்சனம்