சர்க்கார் கதை திருட்டு தொடர்பான பிரச்சினைகளில் இயக்குனர் பாக்யராஜை கடுமையாக விமர்சித்து அவர் நடிகர் விஜய்க்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்து செயல்படுவது போல கற்பனையான பரப்புரைகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
சர்க்கார் படக் கதை திருட்டு விவகாரத்தை விஜய்க்கு எதிரான பிரச்சினையாக விஜய் ரசிகர்கள் ஏன் பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை..விஜய் பின்தங்கிய வகுப்பில் இருந்து வந்தவர் என்பதால் அவரை முடக்க முயற்சிகள் நடப்பதாக ஒரு பொதுக்கருத்து சில விஜய் ரசிகர்கள் மனதில் இருக்கிறது. திரைத்துறையில் ஆதிக்க வர்க்கத்தைத் தாண்டி சிறுபான்மை, பிற்படுத்தப்பட்டவர்கள் வளர முடியாது என்பது உண்மைதான். ஆனால் விஜயைப் பொறுத்தமட்டில் அதிர்ஷ்டவசமாக அவரது பின்புலம் தெரிவதற்கு முன்பாகவே ஒரு அசைக்கமுடியாத இடத்தை அவர் பெற்றுவிட்டார். இப்போது அவரை முடக்கும் முயற்சிகள் நிச்சயமாக வெற்றி பெற முடியாது என்பதுதான் நிதர்சனம்.
இப்போது விஜய் ரசிகர்கள் மனதில் சாதியை வைத்து விஜய் முடக்கப்படுவதாக தோன்றக் காரணம், கடந்த சில வருடங்களில் அவரது ஒரு சில படங்களுக்கு ஏற்பட்ட தடைகள். ஆனால் விஜய்க்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் எப்போதில் இருந்து வர ஆரம்பித்தது என்று சற்று நிதானித்து சிந்தித்தால், அதற்கான காரணங்கள் என்ன என்பதெல்லாம் வெளிப்படை. ஒரு படம் வெளியாக ஒரு நாள் தள்ளிப்போனதால் அந்த நட்டத்தை ஈடு செய்யாமல் அடுத்த படத்தை திரையிட மாட்டோம் என்று விநியோகிஸ்தர்கள் பிரச்சினை செய்தார்கள். அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டமாக சில படங்களை, காட்சிகளை, தலைப்புகளை வைக்க முயற்சித்தபோது இரண்டு பிரதானக் கட்சிகளுமே காழ்ப்புணர்வு கொண்டு எதிர்த்தன. இதிலெல்லாம் ஜாதி எங்கிருந்து வந்தது? அதிகாரத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை எதிர்ப்பவர்கள் அந்த அதிகாரத்தின் மூலம் சந்திக்கும் இயல்பான இன்னல்களை விஜய்யும் சந்தித்தார். பிறகு அதில் இருந்து ஒதுங்கி அவர் நடித்த பல படங்கள் எந்த எதிர்ப்பும் இன்றி வெளியாகி வெற்றி பெறத்தானே செய்தன! அப்போதெல்லாம் ஜாதியை வைத்து அவரை முடக்க முயற்சி நடந்ததாக அவரது ரசிகர்கள் யாரும் சொன்னதாக நினைவில்லை.
கதை திருட்டுப் பிரச்சினை கத்திக்கு வந்தது, இப்போது சர்க்காருக்கு வந்திருக்கிறது. இடையில் தெறி எந்தப் பிரச்சினையும் இன்றி வந்தது. மெர்சலுக்கு படத்தின் காட்சியை வைத்து எதிர்ப்பு உருவாகி, கிறுக்கன் ராஜா வாய் பட்டு அது விளம்பரமாக மாறிப்போனது. அதனால் அவர் பலனடைந்தாரேயன்றி அவருக்கு பாதிப்பு எதுவுமில்லை.
கதை திருட்டுப் பிரச்சினை வந்த இரண்டு படங்களுமே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய படங்கள். முருகதாஸ் இதற்கு முன்னர் எடுத்த படங்களுமே கதை உரிமைப் புகாருக்கு உள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக கத்தி படத்திற்கு கதை உரிமையாளர் கோபி நயினார் தான் என்று வலுவான ஆதாரங்கள் முன் வைக்கப்பட்டன. விஜய் பின்தங்கிய வகுப்பு என்பதால் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று சொல்பவர்கள், கோபி நயினாரும் ஒடுக்கப்பட்ட வகுப்பில் இருந்து வாய்ப்பிற்காக சிரமப்பட்டு மேலே வர முயன்று கொண்டிருந்தவர் என்பதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
பொதுவாக எல்லா நடிகர்களின் ரசிகர்களுமே தனது அபிமான நடிகரை விமர்சித்தால் தனிப்பட்ட தாக்குதலை முன்னெடுப்பார்கள் என்பது அறிந்ததுதான். அதில் சமீபத்தில் விஜய் ரசிகர்களிடம் கருணாகரனுக்கு அடுத்து பாக்யராஜ் மாட்டிக் கொண்டார். அவர் செய்த குற்றம் சர்க்கார் பிரச்சினையில் வருண் ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டது. அதை என்னவோ அவர் விஜய்யை முடக்க நினைப்பவர்களுக்கு கைப்பாவையாக செயல்பட்டுவிட்டதாகக் கூறி அவரை நிந்திக்க ஆரம்பித்து விட்டனர். இத்தனைக்கும் இந்த விசயத்தில் விஜய் எந்தக் கருத்தும் சொல்லாமல் பெருந்தன்மையாக நடந்து கொண்டதை பாக்யராஜ் புகழ்ந்து சொல்லியிருந்தார். பாக்யராஜ் எழுத்தாளர் சங்கத் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து விசு போன்றவர்களின் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் எதிர்கொண்டு பல மாற்றங்களை செய்யத் துணிந்து செயல்பட்டு வருவதை செய்திகள் மூலம் அறிய முடிகிறது. அப்படியிருக்கையில் அவர் விஜய்க்கு எதிராக ஜாதி வன்மத்தை வைத்து செயல்படுவார் என்று சொல்வதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்.
நியாயத்தின் பக்கம் இருந்து செயல்பட்டு ஒரு குரலற்ற, முகமற்ற உதவி இயக்குனரின் போராட்டத்திற்கு துணை நின்ற பாக்யராஜைப் பாராட்டாமல் இருந்தாலும், நிந்தனை செய்யாமல் இருப்பது சிறந்தது. விஜய் மீதான அளவுகடந்த அபிமானத்தினால், அநீதி இழைக்கப்பட்ட ஒருவரின் தார்மிக வெற்றியை கொச்சைப்படுத்த வேண்டாம்.
மதத்தை வைத்து தன் மீது எறியப்பட்ட மலம் கலந்த சேற்றை தன் மீது படாமல், அலேக்காக எறிந்தவன் மூஞ்சி மேலேயே பூசி அட்டாக் முறையில் பதிலளித்து தனது மனத்திண்மையை வெளிப்படுத்தியவர் விஜய். ஆனால் அவரது பின்புலத்தை வைத்து அனுதாபங்களைத் தேடுவதும், வேறு காரணங்களுக்காக ஏற்படும் பிரச்சினைகளை, வேறு நபர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சாதியைக் காரணம் காட்டி வலுக்கட்டாயமாக விஜய் பக்கம் மடைமாற்றும் மடத்தனமான வேலையை விஜய் ரசிகர்கள் செய்து வருகிறார்கள் என்பதே நிதர்சனம்.
- அபுல் ஹசன்