2024 ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களில் பராரியும் ஒன்று. பெரிய நடிகர்கள் யாருமில்லாத மிக எளிமையான முறையில், வலுவான கதைக் களத்தை தேர்வு செய்து அதை மிக வீரியமாக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க முடியும் என்பதற்கு பராரி திரைப்படம் சாட்சியாக அமைந்திருக்கிறது. இப்படத்தில் நடித்திருந்த பெரும்பாலான நடிகர்கள் நாடக சபாவில் இடம் பெற்றவர்கள். அவர்களைக் கொண்டு பராரி திரைப்படத்தை இயக்குநர் எழில் பெரிய வேடி எடுத்திருக்கிறார் எனும் போதே, இப்படம் கதைக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

paraariகதைக்களம் – 01

ஒரே ஊரில் வசிக்கும் இருசமூக மக்களிடையே நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகள். அவற்றின் வழியாக ஒருசாரார் மற்றொரு சாராரை நடத்தும் விதம். அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், இன்றைய சாதிய சிக்கல்கள் என எல்லாமே கதையின் போக்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரணமாக உழைக்கும் அன்றாடக் காய்ச்சிகள், அனைத்து சமூகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களிடம் சாதிய உணர்வைத் தூண்டி குளிர்காயும் பணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை சுட்டிக் காட்டியதோடு, அத்தகைய அதிகாரப் பலம் படைத்தவர்கள் அடையக் கூடிய ஆதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், தன்னுடைய சாதிய பெருமையை நிலைநிறுத்துவதாக நினைத்து முறுக்கிக் கொண்டுத் திரியும் இளைஞர் பட்டாளம், நாம் இன்னும் எத்தனை காலம்தான் மற்றவர்களுக்கு அடிமையாக இருப்பது என்று ஆதிக்க உணர்வோடு நடந்து கொள்பவர்களை இயல்பாகவே எதிர்க்கும் சமத்துவத்திற்காக ஏங்கும் இளைஞர் பட்டாளம். சாதிய சிக்கல்களை எதிர்கொள்ளும் போது உருவாகும் இக்கட்டான சூழலில் எக்காரணம் கொண்டும் சாதிய சண்டையாக மாறிவிடக் கூடாது எனவும், அதனால் ஏற்படும் பாதிப்பு என்பது ஆதிக்க உணர்வோடு நடந்து கொள்பவர்களைவிட தங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும் என்பதை நன்றாக உணர்ந்து நிதானமாக செயல்படும் கதாநாயன் என நிதானித்தும் உணர்ந்தும் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

கதைக்களம் – 02

கர்நாடக மாநிலத்திலுள்ள ஜுஸ் பேக்டரி இரண்டாம் கதைக்களமாக உள்ளது. அங்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த மக்கள் வருடத்தில் மூன்று மாதங்கள் கொத்தடிமைகளாக வேலைக்குச் செல்கிறார்கள். கிட்டத்தட்ட இவ்வேலையை கொத்தடிமைத்தனம் என்று சொல்வதில் வெறுமனே மூன்று மாதங்கள் மட்டும் அங்கு வேலை செய்ய வேண்டும். அதற்காக பலரும் முன்பணம் வாங்கிக் கொள்கிறார்கள். இதற்கிடையில் தேவை நிமித்தமாக ஊருக்குக்கூட அவர்கள் திரும்ப முடியாது என்பதால்தான் அதை கொத்தடிமை முறை எனப் புரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது.

மொழி தெரியாத ஊராக இருந்தாலும் அன்றாடம் உழைத்து சாப்பிடும் ஏழைகள் சக மனிதர்கள் மீதான பிடிப்புடன்தான் இருக்கிறார்கள் என்பதை படத்தில் பல காட்சிகளில் சுட்டிக் காட்டப்படுகிறது. அதேநேரத்தில் கீழ்மட்டத்திலிருக்கும் இளைஞர்களை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மூளைச் சலவை செய்து அவர்களின் மொழியுணர்வை தூண்டுகிறார்கள் என்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

காவிரி ஆணையத்தின் உத்தரவு தமிழ்நாட்டு மக்களுக்கு தண்ணிர் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதும், திட்டமிட்டு கலவரத்தை தூண்டி அதில் அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளின் மறைமுகச் செயல்பாடுகள் பலவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்த் திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகள் எனக்குத் தெரிந்து இடம் பெற்றது இல்லை என்றே நினைக்கிறேன். இனம், மொழியை வைத்து அரசியல் செய்வதில் ஆதாயம் யாருக்கு என்பதையும், அவற்றில் அதிகம் பாதிக்கப்படுவது அன்றாடக் காய்ச்சிகளாக இருக்கும் ஏழை, எளிய மக்கள்தான் என்பதையும் சரியாக பராரியில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

நீண்ட காலமாக காவிரி நதிநீர் பிரச்சனை நமக்கும் கர்நாடக மாநிலத்திற்கும் நீடித்து வருவதை இப்படக்காட்சியில் பதிவு செய்வதற்கு அதுசார்ந்த சரியான புரிதலும் இருக்க வேண்டும். இன்னொன்று திரைப்படம் என்று வரும் போது வியபாரம் ரீதியாக படம் வசூலை அடைய வேண்டும் என்பதற்காக பெரும்பாலும் பக்கத்து மாநிலம் தொடர்பாக கருத்துச் சொல்ல பெரிய நடிகர்களே தயக்கம் காட்டும் போக்கு உள்ளது.

குறிப்பாக பாகுபலி பாகம் இரண்டு வெளிவந்த போது, அப்படத்தில் கட்டப்பா வேடத்தில் நடித்த நடிகர் சத்தியராஜ் அவர்கள் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினார் என்பதற்காக அப்படத்தை கர்நாடக மாநிலத்தில் வெளியிடுவதில் பெரும் சிக்கல் நீடிக்கக்கூடும். அப்படத்தை கர்நாடக தியோட்டர்களில் வெளியிட அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அதனா்ல தயாரிப்பாளருக்கு பெரும் இழப்பு ஏற்படும் என நடிகர் சத்தியராஜ் அவர்களை காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பான கருத்தை திரும்பப் பெற வேண்டிய சூழல் நேர்ந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதையெல்லாம் எதிர்கொள்ளும் அரசியல் தெளிவுடன்தான் பராரி திரைப்படத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

நிர்வாணப்படுத்துதல் எனும் மனித தன்மையற்ற செயலை எப்படிப் புரிந்து கொள்வது?

சாதி, மொழி, இனம், நிறம், பாலினம், வர்க்கம் எனப் பல்வேறு காரணங்களுக்காக அன்றாடம் நம் நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சிலர் அவமரியாதைக்கு உள்ளாக்கப்படுவதும், நிர்வாணமாக்கப்பட்டு அவர்களை பொது வெளியில் காட்சிப்படுத்தப்படுவதும் இன்றையச் சூழுலில் மிகச் சாதாரணமாக நிகழக் கூடிய ஒன்றாகவே இருக்கிறது என்பதை இறுதிக் காட்சியில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அக்காட்சி கடந்த காலங்களில் குறிப்பாக, வடமாநிலங்களில் நடைபெற்ற எத்தனையோ சம்பவங்களை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. குறிப்பாக மணிப்பூரில் இருபிரிவினருக்கு இடையே இடஒதுக்கீடு தொடர்பாக எழுந்த பிரச்சனையில், ஒரு பிரிவைச் சார்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு அவர்களை தெருவில் நடக்க வைத்து, அடித்து இழுத்துச் சென்ற காட்சியை நினைவுபடுத்தியது எனலாம்.

பராரி திரைப்படத்தின் இறுதிக் காட்சிகளில் கதாநாயகனையும் கதாநாயகியையும் மொழியுணர்வு ஊறிப் போன கர்நாடக இளைஞர் பட்டாளம் ஒன்று, அவர்களை அரை நிர்வாணமாக்கி அடித்து சித்திரவதை செய்யும் காட்சியில்கூட, அதே மாநிலத்தைச் சார்ந்த சக உழைக்கும் மக்கள் அத்தகைய செயலை விரும்பவில்லை. அவர்கள் அச்செய்தி கேள்விப்பட்டு திரண்டு வந்து அந்த இளைஞர் பட்டாளத்தை அடித்து விரட்டியடிக்கும் காட்சி மனித நேயத்தை வலுயுறுத்துகின்றன.

அதோடு கர்நாடகக்கார்கள் என்றால் குடிக்கத் தண்ணீர் கூடத் தரமாட்டார்கள் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் சாதாரண மக்கள் அப்படிப்பட்ட உணர்வாளர்கள் அல்ல. ஆபத்தான சூழலில் இருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கு செம்பில் தண்ணீர் கொடுத்த காட்சி, அண்டை மாநிலத்தவர்களான கர்நாடகக்காரர்களை எதிரிகளாகப் பார்க்கத் தோன்றவில்லை. அவர்களுக்கும் சக மனிதர்கள் மீதான கரிசனை இருக்கிறது என்பதை நிரூபணம் செய்கிறது. அதுவும் ஏதுமற்ற கூலித் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள் என்பது நிதர்சன உண்மை.

பராரி சொல்ல வரும் செய்தி என்ன?

இப்படம் சொல்லும் மறைமுகச் செய்தியாக நாம் எதை எடுத்துக் கொள்ளலாம் என்றால் சக மனிதர்கள் மீது, சாதி, மதம், மொழி, வர்க்க உணர்வை திணித்து அவர்களுக்குள் வேற்றுமை பார்ப்பது மனித சமூகத்திற்கு அழகல்ல. அனைவரும் பிறப்பால் சமம். அதையே எதார்த்த வாழ்விலும் அன்றாட நடைமுறையிலும் நாம் கடைபிடிக்க பழக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த மதிப்பீடுகளை நம்முடைய மனங்களில் விதைத்திருக்கின்றன.

எந்தவொரு இடத்திலும் வேற்றுமைப் பாராட்டி சக மனிதனின் அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியமாக இருக்கக்கூடிய தண்ணீரை தடை செய்யக்கூடாது என்பதை ஒரு குறியீடாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஏனென்றால் கதைக்களம் ஒன்றில் ஒரு மாநிலத்திற்குள்ளே, ஒரே ஊருக்குள் வாழும் சக மனிதர்களுக்கு சாதியின் பெயரில் வேற்றுமைப் பாராட்டி, அவர்களுக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள் என்பதையும், அதைக் கேட்டு அவர்கள் எதிர்தரப்பினரோடு போராடும் காட்சியும், அந்நேரத்தில் அரசுத் தரப்பில் வரும் அதிகாரிகள் ஆதிக்க வர்க்கத்திற்கு துணை போகும் போக்கானது, இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காவிரி நதிநீர்ப் பிரச்சனையோடு அப்படியே பொருத்திப் பார்க்க முடியும்.

இரண்டாம் கதைக்களத்தில் நடப்பது போலவே காவிரி ஆணையம் சார்பில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தரவேண்டும் என்று சொன்னதும், அதை எதிர்த்து கர்நாடகாவில் கலவரம் செய்து தண்ணீர் தரவிடாமல் செய்யும் அரசியல் போக்கும், அப்படிப்பட்ட நேரங்களில் மத்திய அரசு தொடர்ந்து கள்ள மௌனம் காப்பதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

உள்ளுரில் சாதியின் பெயரில் தண்ணீர் தர மறுக்கிறார்கள். உள்நாட்டிற்குள் மொழியின் பெயரைச் சொல்லி தண்ணீர் தர மறுக்கிறார்கள். இந்த இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? என்பதை நம்மிடையே கேள்வியாக முன் வைத்திருக்கிறார்கள் பராரி படக்குழுவினர். இவற்றையெல்லாம் மனித மாண்புடன் நாம் நடந்து கொள்ளப் பழகினால் இதுபோன்ற பிரச்சனை என்ற ஒன்றே இருக்காது என்பதையும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இரண்டு நிகழ்வையும் ஒரே நேர்க்கோட்டில் இணைத்து பராரி திரைப்படத்தின் கதையைப் பின்னியிருக்கிறார்கள். ஒரே திரைப்படத்தில் உள்ளுர் சாதிய அரசியலையும், தேசிய அளவிலான பங்கீட்டுப் பிரச்சனையும் ஒருசேர நேர்த்தியாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

நுணுக்கமான பதிவுகள்

திருவண்ணாமலை உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழிபடும் குலதெய்வ வழிபாடு முறைகள், ஒரே தெய்வத்தை இருவேறு சமூக மக்கள் வழிபட்டாலும் அவர்களின் மனங்களில் குடிகொண்டிருக்கும் மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடுகள், அப்பகுதி மக்கள் பெரிதும் விரும்பிப் பார்க்கின்ற கிராமிய கூத்து, அவற்றைக் காண இன்றும் மக்கள் விரும்புகிறார்கள் என்பது அவர்களின் வாழ்வியலோடு ஒன்றிப் போன ஒன்றாகவே கூத்துக் கலைகள் அங்கு பிரபலமாக இருக்கிறது.

தலீத் மக்களின் வாழ்வியல், அவர்களின் குடியிருப்புகள் உள்ளிட்ட உணவு முறைகள், ஊருக்கு ஒதுங்குப் புறமாக இருக்கும் பாறையில் மாட்டுக்கறி பங்கிடுவதை காட்சிப்படுத்திய விதம், அதை வெறுக்கும் ஆதிக்க சாதியினர் அவ்விடத்தை பறிக்க திட்டமிடும் சூழ்ச்சிகள், சூழுச்சி பலிக்க மாட்டுக்கறி எலும்புகளை ஆதிக்க சாதியினரே, அவர்களின் தெருக்களில் வீசியெறிந்துவிட்டு பிரச்சனையை திட்டமிட்டு உருவாக்கும் தந்திரம், அதன் வழியாக தலீத் மக்களை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த தீட்டும் திட்டம், அதன் ஒரு பகுதியாக தலீத் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மறுத்து அவர்களை வழிக்குக் கொண்டுவர முயலுவது, கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் ஒருவர் தலீத் மக்களுக்கு ஆதரவாக இருப்பது எனப் பல்வேறு பதிவுகளை குறிப்பிட்டுச் சொல்லலாம். இத்தனை விதமான காட்சிப் படிமங்களும் படம் பார்ப்பவர்களின் மனதில் நிலைத்து நிற்க மிக முக்கியக் காரணம் அப்படத்தில் நடித்த அசலான கிராமத்து முகங்கள் எனப் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.

மாட்டுக்கறி மீதான பார்வை

இயக்குநர் ப.ரஞ்சித் அவர்கள் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படத்தில் மாட்டுக்கறி குழம்பு என்றொரு வார்த்தையை பதிவு செய்த பின்னர், இப்போது வரும் படங்களில் பரவலாக மாட்டுக்கறி குறித்த பதிவுகளை பார்க்க முடிகிறது. குறிப்பாக ரப்பர் பந்து திரைப்படத்தில் கதாநாயகி ஒரு காட்சியில் மாட்டுக்கறியை வெட்டி விற்பனை செய்வது போல காட்சிப்படுத்தியது மட்டுமல்லாமல், காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் கதாநாயகனும் கதாநாயகி விரும்பிச் சாப்பிடும் மாட்டுக்கறியை விரும்பிச் சாப்பிடுவதும் சில காட்சிகளில் பதிவாகியிருக்கிறன்றன. இவையெல்லாம் மாட்டுக்கறி குறித்த ஒவ்வாமையை களைவதற்கும், அதுகுறித்து பொதுச் சமூகத்தில் ஒரு விவாதத்தை எழுப்புவதோடு, அன்றாடங்காய்ச்சிகள் மற்றும் ஏழைகள், தலீத் மக்களின் விருப்ப உணவு என்பதை அவர்களின் உணவுப் பண்பாடு, கலாச்சாரம் ஆகியற்றோடு இணைத்துப் பார்க்க வேண்டிய தேவை இருப்பதையும் காட்சிகளின் வழியாக பொதுச் சமூகத்திற்கு கடத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை உணர்ந்தே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

கதாநாயகன் பிம்பம்

பொதுவாக தமிழ்த் திரைப்படங்களில் அறிமுக நாயகனாக இருந்தாலும், திரைப்படத்தில் தனக்கோ அல்லது தன்னை சார்ந்தவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலோ, அதற்குக் காரணமானவர்களை பந்தாடும் காட்சிகளை பரவலாகப் பார்க்கலாம். இதற்கு விதிவிலக்காக சில படங்கள் இருக்கத்தான் செய்கின்றன. அது இயக்குநரின் கதைத் தேர்வைப் பொறுத்து அமையும். அப்படிப்பட்ட கதாநாயன்தான் இப்படத்திலும் இருக்கிறான். அவன் இன்றைய சமூக எதார்த்தத்தை மீறாத தன்மையுடன் கதையை நகர்த்தும் இயல்பான பாத்திரமாக வடிவமைத்துள்ளார் இயக்குநர்.

நமக்கெல்லாம் சில இடங்களில் கதாநாயன் ஒரு பிரச்சனை என்றால் பொங்கி எழ வேண்டாமா? இவன் என்ன மற்றவர்களையும் தங்களுடைய எதிர்ப்பை காட்டவிடாமல் அடக்கி இழுத்துக் கொண்டுப் போகிறானே? என்று சில காட்சிகளில் எண்ணத்தான் தோன்றுகிறது. அதுதான் கதைக்கு வலுச் சேர்க்கும் இடமாக இருக்கிறது. ஏனென்றால் கதாநாயகன் எல்லா சமூகத்தாரும் ஓரினமாக வாழ வேண்டும். மனிதர்களுக்குள் வேற்றுமைப் பாராட்டாமல் சமத்துவச் சிந்தனை மலரச் செய்ய வேண்டும் என்பதையும், அது மனித மனங்களில் மாற்றம் வராமல் நிகழாது. அதற்கான தீர்வாக எந்தவொரு இடத்திலும் பதிலுக்குப் பதில் முட்டிக் கொள்வதும் மோதிக் கொள்வதாலும் வராது. உரையாடல் வழியாகத்தான் அது சாத்தியப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டவனாக இருக்கிறான். இது இப்படத்தின் கடைசி காட்சிகள் வரை, இந்த இயல்பு மாறாமல் கதாநாயகப் பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதுவே இப்படத்திற்கு மிகப் பெரிய பலமாக இருக்கிறது.

கதாநாயகனின் எண்ணம்தான் என்ன? என்ற எதிர்ப்பார்ப்புடனே படத்தை பார்க்கத் தோன்றுகிறது. இதில் மிக முக்கியமான கட்டம் என்று சொன்னால், ஒரே ஊரைச் சார்ந்த ஆதிக்க சாதி பெண் தன்னை காதலிக்கிறாள் என்று கதாநாயகனுக்குத் தெரிகிறது. ஆனால் இருவரும் கடைசி வரை சொல்லிக் கொள்ளாமலே இருந்தாலும், அவர்கள் ஒருவரையொருவர் நேசிக்கிறார்கள் என்பதை சில காட்சிகள் பதிவு செய்திருக்கின்றன. அதனால் அவர்களின் காதல் கைகூடுமா? கடைசியில் என்னவாகும்? என்ற எதிர்ப்பார்ப்பு இடைவேளைக்கு முன்னரே வந்து விடுகிறது. ஆனாலும் கதையின் முடிவை யூகிக்க கடினமாகத்தான் இருந்தது.

கதையின் முடிவு

பெரும்பாலும் அறிமுக நாயகன் எனும் போது, அவற்றிலும் சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் படங்கள் எனில் அவற்றில் கண்டிப்பாக காதல் கைக்கூடாது. தோற்றுப் போகும். அப்படித்தான் பெரும்பாலான தமிழ்த் திரைப்படங்கள் முடிந்திருக்கின்றன. அவைகள் மனுதர்ம போதனையை நிலைநிறுத்தவே முயற்சி செய்தன. விதிவிலக்காக விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களே இதற்கு மாற்றாக உள்ளன.

குறிப்பாக இயக்குநர் மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கிய பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் கடைசி வரைக்கும் கதாநாயகனும் கதாநாயகியும் அவர்களின் காதலை வெளிப்படையாக சொல்லாமல், இறுதியாக அதை வெளிப்படுத்தும் விதம் போலவே பராரி திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

வழக்கமாக தமிழ்ச் சினிமாவில் பெரும்பாலான படங்களில் கிளைமேக்ஸ் என்னவாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தீர்மானித்துவிடலாம். அது உச்சப்பட்ட கதாநாயகர்களைக் கொண்ட படங்களாக இருப்பின், படத்தின் இறுதி இப்படித்தான் இருக்கும் என்பதை படம் பார்க்கப் போவதற்கு முன்கூட்டியே கூட, இவ்வளவு ஏன் கண்ணை மூடிக் கொண்டுகூடச் சொல்லிவிடலாம். ஆனால் தமிழ்ச் சினிமாவில் வழக்கமான தன்மையை சமீபகாலப் படங்கள் சில கட்டுடைப்பு செய்து கொண்டு வருகின்றன என்பதும் நிதர்சனம்.

பராரி திரைப்படம் சாதிய முரண்களை பேசும் கதைக்களம் என்பதால், இதில் கதாநாயகன் இறுதியில் கதாநாயகியுடன் இணைந்து விடுவானா? அல்லது சாதிய முரண் அவனை கொன்று விடுமா? அல்லது தன்னை சார்ந்த மக்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் என்பதற்காக தன் காதலை விட்டுக் கொடுத்துவிடுவானா? என்ற கேள்விகள் எனக்கு இருக்கவே செய்தன.

இப்போதும் இப்படத்தில் கதாநாயகனும் கதாநாயகியும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் சாதிய மனோபாவத்தில் காட்சிப்படுத்திய பாத்திரங்களின் மனதில் மாற்றம் வந்திருக்கிறது என்பதை காட்சிகளில் காணும் போது, சாதிய ஆணவம், மொழிப் பிரச்சனையில் உடைத்தெறியப்பட்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது. தமிழர்கள் என்ற பார்வையில் அவர்களை சூழல் ஒன்றிணைக்கிறது. மொழிப் பிரச்சனை சாதிகளாக வேறுபட்டு இருந்தவர்களின் மனங்களை ஒன்றுபடுத்தியதோடு, காதலித்த இருவரையும் ஒன்றாக்கியதோடு அவர்களின் காதலையும் வெளிப்படுத்தியது.

ஆனால் அதன் பின்னர் அவர்கள் ஊர் திரும்பியதும் அவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? அல்லது மறுபடியும் சாதிய முரணால் அவர்கள் பிரிந்தார்களா? என்பதை ரசிகர்களின் முடிவிற்கே விட்டிருக்கிறார் இயக்குநர்.

இது சாதிய கண்ணோட்டத்தில் தங்களின் ஆதிக்க உணர்வை நிலைநிறுத்த துடிக்கும் பலரின் முடிவிற்கே விட்டுள்ளார் இயக்குநர். அவர்களின் காதல் ஒன்றுசேர வேண்டுமா? என்பது அவர்களின் முன் வைக்கப்பட்டுள்ள கேள்வி. அவர்களின் காதல் ஒன்று கூட வேண்டுமா? வேண்டாமா? என்பதற்கு அவர்களின் மனசாட்சி பதில் சொல்லட்டும் என இடமளித்து சற்று விலகி நிற்கிறார் இயக்குநர். அந்த வகையில் இப்படத்தின் முடிவை நாம் அறிந்து கொள்ள முனைப்பு காட்டினால், சமூகத்தில் நிலவுகிற சாதிய முரண்களை நீண்ட உரையாடல் வழியாக களைந்தெடுக்க வேண்டிய தேவை என்பது அழுத்தமாக இன்றைய சூழலில் எழுந்துள்ளது என்பதை ஒரு குறியீடாகவே, தனது படத்தின் காட்சிகள் வழியாக பொது சமூகத்திற்கு கடத்தியுள்ளார் இயக்குநர்.

உண்மையில் இன்றைய எதார்த்த சமூகம் குறித்த அழுத்தமான புரிதலை தமிழ்ச் சினிமா ரசிகர்கள் மனதில் பதிய செய்வதற்காக பல்வேறு மதிப்பீடுகளை ஜுஸ் போன்று பிழிந்து நம் கைகளில் கொடுத்திருக்கிறார் பராரியின் இயக்குநர். அதை ரசித்துக் குடிப்பதும், குடிக்காததும் நம் மனங்களை பொறுத்ததே!

மு.தமிழ்ச்செல்வன்