கொடைக்கானலில் உள்ள மலைக்கிராமத்தில் தனது பேத்தி செம்பியுடன் வாழ்ந்து வரும் பாட்டிக்கு செம்பி தான் உலகம் உள்ளம் எல்லாம். பெற்றோர் இல்லாத பச்சிளம் குழந்தையான செம்பி... பாட்டியின் மடியில் வளர்கிறாள். பாட்டியின் மனதில் உலவுகிறாள்.
பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர்களுக்கு அந்த காடு தான் வீடு. அந்த வீட்டில் சிறு கூடு தான் அவர்கள் வீடு.
மரத்தில் ஏறி தேனெடுக்கும் காட்சியிலேயே காடு நமக்கு நெருக்கம் ஆக ஆரம்பிக்கிறது. தேனெடுக்க சொல்லி தரும் லாவகத்தில் சுவை கூடிய இனிப்பு... காணுகின்ற கண்களில்.பாட்டியாக கோவை சரளா. நாம் இதுவரை பார்த்த காமெடி சரளா இல்லை. மனம் உடைய செய்யும் நடிப்பில் கதாபாத்திரமாகவே வந்து நிற்பது... இப்படி ஒரு நடிகையை சினிமா காமெடிக்குள்ளேயே வைத்திருக்கிறதே என்று கூட யோசிக்க வைத்தது. ஒப்பனையில் பொருந்திய நிஜ பரிதவிப்பை அவரின் முக மொழியும் உடல் மொழியும் வெளிப்படுத்துவது... சரி நல்லதொரு படத்திற்கு வந்திருக்கிறோம் என்று நம்ப வைத்தது.
இயக்குனர் பிரபு சாலமோனின் முந்தைய படங்களின் சாயல் இருந்தாலும்.. காடும் காடு சார்ந்த...மலையும் மலை சார்ந்த ஆரம்பம் வசீகரம் தான்.
ஒரு பாட்டி ஒரு பேத்தி அவர்களை சுற்றி காடு. அங்கு நடக்கும் ஒரு வன்முறை. அவர்களை மட்டுமல்ல... பார்த்துக் கொண்டிருக்கும் நம்மையும் உறைய வைக்கிறது. அரசியல் பின்புலம் கொண்ட மூன்று எச்ச பசங்க சேர்ந்து அந்த பத்து வயது குழந்தையை வன்புணர்வு செய்து விடுகிறான்கள். காடு சாட்சி. சத்தமில்லாமல் அங்கே நிற்கும் ஒற்றைக் குதிரை சாட்சி. இந்த சாட்சிகள் எப்படி நீதி வாங்கி தரும். பிறகென்ன கடவுளா வந்து நீதி வாங்கி தருவார். கேள்வி எழாமல் இல்லை தானே.
அந்த சம்பவத்தின் தொடர்ச்சியில் பாட்டி ஒரு சிக்கலில் சிக்க.. அதற்கு பிறகு அந்த மலையில் அவர்கள் இருக்க இயலாத சூழல். அங்கிருந்து நகரத்துக்கு ஓடி வருகிறார்கள். மறைந்தும் ஒளிந்தும் ஓடியும் என அவர்கள் ஏறிய பேருந்தில் அதன் பிறகு நடப்பது தான் கதையின் பிற்பகுதி. அந்த பேருந்து எங்கு போனது. என்னானது.... பேருந்துக்குள் யாரெல்லாம் இருந்தார்கள். அந்த நீதி வாங்கி தரும் கடவுள் காட்சி தந்தாரா. இவர்களுக்கு நீதி கிடைத்ததா. யார் உதவினார்கள்.. என்பது தான் மிச்ச கதை.
இன்னும் எத்தனை சினிமாவில் தான் சின்ன பிள்ளைகள் உள்பட பெண்களை வன்புணர்வுக்கு உள்ளாக்குவதையே கதைக்களம் ஆக்குவார்கள் என்று தோன்றினாலும்... நிஜத்தில் நடப்பதை தானே திரையில் காட்டுகிறார்கள் என்ற விழிப்புணர்வும் கண்களை பிராண்டியது. படம் முழுக்க நம்மை சூழும் உணர்ச்சிகள்.. நம்மை ஒரு வகை நடுக்கத்திலேயே வைத்திருக்கிறது. பாட்டியின் பதற்றமும்.. பேத்தியின் நடுக்கமும்... இந்த சுதந்திர நாட்டில் போக்கிடம் தேடி அலையும் பரிதவிப்பு என... ஒன்றும் இல்லாதவன் விரட்டப்பட்டால் விரட்டப்பட்டது தானா.
படிப்பறிவில்லாத பாட்டி தனது பேத்திக்கு நீதி கிடைக்க வேண்டுமென உள்ளே புழுங்குவதும்.. சக மனிதர்களிடம் நியாயம் வைப்பதும்... அடிபட்டவர்களுக்கு தான் காயத்தின் வலி தெரியும் என்பதற்கு சான்றுகள் அவை. காவலுக்கும் காசுக்கு மாரடிக்கும் கூலிகளுக்கும் பயந்த பேருந்து ஜன்னலோர தவிப்புகள் சொற்களில் அடங்காதவை. அவன் இவன் அவர்கள் இவர்கள் நீ நான் என்ற எல்லாரும் சேர்ந்த சமூகமாக அந்த பேருந்து மாறுகையில்... கேள்வியும் பதிலும்.... குற்றச்சாட்டும் கொந்தளிப்பும்.... வாதமும் விவாதமும்... நீதியும் தர்மமும்... என மாறி மாறி பேசி அங்கே ஒரு குட்டி நீதிமன்றமே நிகழ்கிறது.
செம்பியாக நடித்த சிறுமி நிலாவின் நடிப்பு மிக நேர்த்தி.
கண்களாலே பயத்தையும் மிரட்சியையும் கொண்டு வந்து படத்தின் பேசுபொருளுக்கு பதம் கூட்டி இருக்கிறாள். நடந்த கொடுமையை பார்வையின் வழியே கடத்தி விட்டு மலங்க விழிக்கையில்... நம் கண்களில் நீர் பொங்குகிறது. நீதிமன்ற இறுதிக் காட்சியில் குற்றவாளிகளை பார்த்ததும்... மிரள்வது நிஜ நடிப்பின் நாடி பிடிப்பு. பத்து வயது இதயம்... பத்து வயது மூளை... பத்து வயது உடல்... தாங்கொணா துயரத்தில் இந்த சமூகத்தை கண்டு விலகுவது... நிஜத்தில் மானுட தோல்வி. மருத்துவமனையில் பேத்திக்கு நேர்ந்த நீசத்தனம் அறிந்தவுடன்... அந்த பாட்டி செய்வதறியாமல்... அங்கும் இங்கும் ஓடி.. பிறகு எங்கு தான் ஓடுவது என்ற உடல்மொழியில்... நடுங்கி பதறி கதறும் காட்சியில்... நாமும் திரைக்குள் விசும்புகிறோம்.
கோவை சரளா என்ற நடிகை... முழுதாக வெளி வந்த தருணம் இது.
மலையும் அதன் கலையும் .... கண்களில் ஒத்திக் கொள்ளலாம். ஒளிப்பதிவாளர் ஜீவன். மலையின் ஜீவனை திரையில் கடத்தி இருக்கிறார். மலையின் குளுமையைக் கூடவே கொளுத்தி இருக்கிறார். முதல் அரை மணி நேரம் உலகத் திரை விரியும் உணர்வு.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசை... மலைக்கு மேகம். நகரத்துக்கு சாலை. பேருந்துக்கு ஒலிப்பான். அந்த பிள்ளைக்கு பதற்றம். பாட்டிக்கு நீதி. எங்கிருந்தோ வந்து எங்கேயோ செல்லும் அந்த உண்மைக்கு நேர்மை. மொத்தத்தில் படத்துக்கு பலம். ஒளிப்பதிவும் இசை நுட்பமும் இணைகின்ற இடத்தில் எல்லாம் படத்தின் விறுவிறுப்பு கூடுகிறது.
அஸ்வினின் கதாபாத்திரம்... ஒரு வித ஒட்டுதல் இல்லாததது போல இருந்தாலும்... பிற்பாதி படத்தை ஓட்டி செல்வது அவர் தான். இன்னும் நடிப்பில் பயிற்சி தேவை என்பதை அவரே ஒப்புக்கொண்டது போல தான் சில காட்சிகளில் நடித்திருந்தார். ஆனாலும்... அந்த சின்னஞ்சிறு பிள்ளைக்கு பெரும் நம்பிக்கை... அந்த அண்ணன் கைகள்.
பேருந்து நடத்துனராக தம்பி ராமையா. வழக்கமான ஓவர் நடிப்பு தான். நாம் அவரை கண்டு கொள்ளவில்லை.
சமூக பொறுப்புள்ள கதை தான். ஆனால் அப்படி தான் கதையின் ஓட்டம் இருந்ததா என்றால்... இயக்குனர் மீது வருத்தம் வருவதை தவிர்க்க முடியவில்லை. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து விட்டு இடைவேளை வரை வந்துவிட்டாலே.... பிற்பகுதி தானாக நகர்ந்து விடும் என்று நினைத்து விடுகிறாரோ என்னவோ. இந்த முறையும் படத்தை நழுவ விட்டிருக்கிறார்.
பேசிக்கொண்டே இருப்பது... திரைமொழிக்கு எதிரானது.
அதிகார வர்க்க அரசியல்வாதிகளாக பழ. கருப்பையா மற்றும் நாஞ்சில் சம்பத். கச்சிதமான பாத்திர தேர்வு. அதுவும் பழ. கருப்பையா பேசுகையில் எல்லாம் பதற்றம் நம்மை தொற்றிக் கொள்வதை தொடர்ந்து உணர்ந்தோம். நீதிபதியாக பேராசிரியர். கு. ஞானசம்பந்தம். குரல் வழியே வரும் ஆளுமையும்... முகம் வழியே வரும் நம்பிக்கையும் கண்டிப்பாக சமூக தேவை.
"உண்மையை புரிய வைக்க... மொழி தேவை இல்லை. வலி போதும். இந்த பூமியை ஆட்சி செய்து கொண்டிருப்பது கடவுள் இல்லை. பணம்... போன்ற வசனங்கள் இன்றைய நிலையை அப்படியே எடுத்து காட்டின. படைப்பாளி உடன் பயணிக்கும் சமூகத்தின் கண்ணாடி... என்று நிரூபித்தது.
நல்ல கதை. நல்ல தயாரிப்பு.. நல்ல திரைக்கதை என்றாலும்... படத்தில் சில குளறுபடிகளும் இருக்கத்தான் செய்கின்றன.
பேருந்துள் நடக்கும் உரையாடல்கள் கொஞ்சம் அதிகப்படியாக போய் விட்டது. வன்புணர்வு புகாரில் பாதிக்கப்பட்ட நபரின் பெயரையோ... புகைப்படத்தையோ வெளியிட கூடாது என சட்டம் இருந்தும் சிறுமியின் புகைப்படம் எப்படி வெளியாக முடியும் போன்ற கேள்விகள்... அதாவது தர்க்க ரீதியில் சில கேள்விகளுக்கு பதில் இல்லை. லாஜிக் மீறல்கள் திரைக்கதையில் ஓட்டைகள் செய்கின்றன.
இறுதிக் காட்சியில் அஸ்வின் பாத்திரம்... பெயரின்றி காணாமல் போகையில்... ஒளியின் சூட்சுமத்தில் நாம் நம்புவது... அப்போது கூட மனிதனை இல்லை... இல்லையா என்ற பரிதவிப்பு எழவே செய்கிறது. இல்லாதவனை காக்க இங்கே சட்டமும் திட்டமும்... மனிதன் வடிவில் எப்போது வரும் என்ற கேள்வி பலமாக எழுந்தது.
"செம்பி" கொஞ்சம் சிரத்தை எடுத்திருந்தால்... பாடமாக ஆகி இருக்கும். ஏன் என்றால்... சட்ட நுணுக்கத்தோடு இந்த சமூகம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம் இந்த படத்தில் இருக்கிறது.
பொறுமை உள்ளவர்களுக்கு பாடமாய் விளங்கும் செம்பி.... பொழுது போக்க போகிறவர்களுக்கு கொஞ்சம் சிரமம் தான்.
- கவிஜி