ஜாதியை மையமாக வைத்து அண்மைக் காலமாகத் திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளிவந்தாலும், நடைமுறை சார்ந்த பார்வையுடன் ஜாதி என்னும் சமூகச் சிக்கலை அணுகும் படங்கள் வெகு சிலவே. அந்த வரிசையில் ‘கழுவேத்தி மூர்க்கன்’ சரியான முறையில் இச்சிக்கலைப் பேசியுள்ளது.

இருவேறு ஜாதிகளைச் சேர்ந்த, ஆனால் ஜாதி கடந்த ஆழமான நட்பினை விவரிப்பதோடு தொடங்கும் படம், அந்நட்பு ஜாதியின் காரணமாக எவ்வாறு சிதைகிறது என்பதைக் காட்சிப்படுத்தியுள்ளதுதான் கழுவேத்தி மூர்க்கன். அரசியல் பேசும் படத்தில், சொல்ல வந்த கருத்தைச் சுவாரஸ்யம் குறையாமல் எடுத்துள்ள இயக்குநரின் திறன் பாராட்டத்தக்கது.

”கல்வி ஒன்றே உன்னை உயர்த்தும்” என்ற அண்ணல் அம்பேத்கரின் வரிகளைக் காட்டும் காட்சியிலேயே நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறார் இயக்குநர். மீசை என்பது வெறும் மயிர்தான் என்பது போன்ற வசனங்கள் ஜாதி ஆணவத்திற்கு மட்டும் அன்று, ஆணாதிக்கத்திற்கும் நெத்தியடி.arulnidhi kazhuvethi 500ஜாதியின் பெயரால் கட்சி வளர்க்கிறார் படத்தின் வில்லன். கட்சி வளர்ப்பதற்கு ஜாதியைப் பயன்படுத்துவதில் எந்த ஜாதியும் விதிவிலக்கு இல்லை என்று காட்டியிருப்பது நேர்மையான முயற்சி. நமது சமூகத்தில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு ஜாதிய அடையாளம் பூசப்படுகிறது. ஆனால் ஜாதிய மோதல்களுக்குப் பின்னே தனிப்பட்ட பிரச்சினைகள் தொடக்கமாக இருக்கும் என்ற உண்மை நமது சிந்தனைக்கு உரியது.

ஒடுக்கப்பட்ட மக்களும் தங்களுக்குக் கீழ் அடுக்கில் உள்ளவர்களிடம் வேற்றுமை பாராட்டுவதை இயக்குநர் தொட்டுக் காட்டியிருப்பது முக்கியமான புள்ளி. தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களும், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் புத்தகங்களும் நாயகனின் நண்பன் பூமியின் வீட்டின் இடம் பெற்றிருப்பதைக் காண்பிக்கும் காட்சி நாம் யாரைக் கொண்டாட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.

 நீதிமன்றங்களில் உண்மை பேசாததால் நீதிமன்றங்களையே புறக்கணிக்கும் கதாபாத்திரம், சாமானியர்களுக்கு நீதி இன்னும் எட்டாக்கனிதான் என்ற உண்மையை விளங்க வைக்கிறது. கடனைத் திருப்பித் தராதவர்களுக்குத்தான் வங்கிகள் கடன் தருகின்றன, எளிய மக்களுக்கான நிறுவனங்களாய் அவை இருப்பதில்லை என்பதை முகத்தில் அறைந்தாற் போல சொல்கிறது ஒரு காட்சி. Get out என்று சொல்லி விட்டு அவர் போயிட்டார் என்ற நகைச்சுவைக் காட்சி, அண்மையில் அரசியல் கோமாளி ஒருவர் செய்த செயலை நினைவூட்டிச் சிரிப்பை வரவழைக்கிறது.

அதே நேரம், ஊருக்கே வழிகாட்டிய பூமியின் மரணத்தில், அவனால் முன்னுக்கு வந்த மாணவர்கள் செய்யும் நினைவஞ்சலி கண்களில் நீரை வரவழைக்கிறது. கதாநாயகிக்கு வழக்கமான தமிழ்த் திரைப்பட நாயகியின் பாத்திரம். அவ்வப்போது முகம் காட்டுவது.

பெரியார் மண்ணில் ஜாதி ஒழிந்து விட்டதா என்பது சனாதனிகளின் வழக்கமான கேள்வி. ஜாதி ஒழியவில்லை; ஆனால் ஜாதி, ஜாதியால் நேரிடும் சிக்கல்கள் தமிழ்நாட்டில் மட்டுப்படுத்தப் பட்டுள்ளது; ஜாதியைத் தாண்டிய நட்பும், உறவும் அதிகரித்து வருகிறது. ஜாதி மறுப்புத் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. மற்ற மாநிலங்களில் ஜாதிக்கு ஒரு கட்சி இயங்கும்போது, தமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. என்னும் இருபெரும் கட்சிகள் அனைத்து ஜாதிகளையும் உள்ளடக்கியதாக வளர்ந்துள்ளன. இவை அனைத்திற்கும் காரணம் நூறாண்டுகளாக இங்கு இயங்கும் பார்ப்பனரல்லாதார் அரசியலே.

ஜாதிச் சிக்கல்களைப் பேசும் கழுவேத்தி மூர்க்கன் போன்ற திரைப்படங்களின் வருகை சமூகநீதியை முன்னிறுத்தும் தமிழ்ச் சூழலை வலிமையாக்குகிறது. இத்தகைய திரைப்படங்கள் அதிகம் வெளிவர வேண்டும்.

- வெற்றிச்செல்வன்

Pin It